Tuesday, March 10, 2015

பேருவகையும் ஹோலியும்



அன்புள்ள ஜெ,

எனக்குத் தெரிந்து நம் தமிழகத்தில் ஹோலி போன்ற ஓர் பண்டிகை இல்லை. அத்தகைய ஓர் விழாவில் நம் தனித்தன்மைகள் அனைத்தும் கரைந்து ஒரே மக்கள் திரளின் பகுதியாக இருந்து ஓர் உச்சத்தில் முழுமையை அனுபவிக்கும் அளவு நமக்கு பயிற்சியும், மன அமைப்பும் இல்லை என்றே கருதுகிறேன். கல்லூரியில் முதன் முதலாக என் மீது நிறப் பொடி விழுந்த போது எனக்குள் எழுந்த சினத்தை இப்போது எண்ணிப் பார்த்தால் சிரிப்பாக இருக்கிறது. ஆனால் நம் விழவுகளும், மக்கள் கூடும் நிகழ்வுகளும் ஒரு வித முறைமை சார்ந்ததாகவே இருக்கின்றன. மிகச் சிறந்த உதாரணம் நமது திருமணங்கள். வட இந்திய திருமணங்கள் ஓர் பெரிய கொண்டாட்டம் தான். வயது விதிதியாசம் பாராமல் ஆடுவார்கள். 

இன்றைய வெண்முரசில் பூரிசிரவஸ் "பெருந்திரளில் அன்றி தன்னை மறந்த பேருவகையை மானுடன் அடைய முடியாது. ஆகவேதான் திருவிழாக்கள். ஊர்வலங்கள். அத்தனை திருவிழாக்களும் இறப்பு நிகழாத போர்களே. பழங்குடிகளுக்கு போரும் திருவிழாவும் ஒன்றே. இக்கணம் நான் இருக்கிறேன். ஒரு துள்ளல். ஒரு எழல். அதன்பின் நான் இல்லை. அது மட்டுமே இருக்கும். ஒற்றை விழைவு. ஒற்றைச் சினம். ஒற்றைப்பெருங்களிப்பு." என்று உணர்கிறான்.

உண்மையில் திருவிழா என்பதன் பின்னால் இப்படி ஓர் பெருவிழைவு இருக்கும் என்பதற்கு ஹோலியை விட ஓர் சிறந்த எடுத்துக்காட்டு இருக்க இயலாது. மிகத் தற்செயல் தான் என்றாலும், இன்று(06/05/2015) ஹோலி. இவ்வரிகளோடு இப்பாடல் மிகச்சரியாக இயைகிறது, குறிப்பாக "இக்கணம் நான் இருக்கிறேன். ஒரு துள்ளல். ஒரு எழல். அதன்பின் நான் இல்லை. அது மட்டுமே இருக்கும். ஒற்றை விழைவு. ஒற்றைச் சினம். ஒற்றைப்பெருங்களிப்பு." என்ற வரிகள். துள்ளியும், எழுந்தும், வண்ணங்களைத் தூவியும், தனித்தனியாக அடையாள படுத்த முடிந்த அனைவரும் வண்ணங்களில் மூழ்கும் போது அங்கே ஆணோ, பெண்ணோ, கருப்போ, வெள்ளையோ, இந்தியமோ, மங்கோலியமோ, ஐரோப்பியமோ எல்லாமும் ஒன்றாக வண்ணங்களால் தோய்ந்த மானுடம் மட்டுமாக, அந்த ஒற்றை விழைவாக மட்டுமே எஞ்சுகிறது. இறுதியில் வரும் "வசுதேவ குடும்பகம்" இந்நிகழ்வை ஒட்டுமொத்த உலகத்துக்கும் உரியதாக்குகிறது. இவ்வரிகளும், பாடலும் இந்நாளை அழகாக்கின என்றால் மிகையில்லை. 


அன்புடன்,