Tuesday, March 10, 2015

திரௌபதியின் முழுவடிவம்



வெண்முரசில் திரௌபதியும் அவள் ஐவரைக் கொண்டதும் மிக விரிவாகவே வந்து விட்டன. திரௌபதியை அன்னையாக, கொற்றவையாக, உக்ர சண்டியாக எல்லாம் நாமும் கண்டாகி விட்டது. அவளைப் பற்றி மேலதிகமான புரிதல்களையும் உண்டாக்கியாகிவிட்டது. பெரும்பாலும் அவளை தேவியின் அம்சமாகவே வாசகர்கள் கண்டுள்ளனர். மிகச் சிலர் அவளை அதிகார வெறியள் என்று கூட எழுதியிருக்கின்றனர். அவள் அவ்வாறு முடிவெடுப்பதற்கு காரணமான அவளின் குல வழக்கங்கள் எல்லாம் பல முறை எழுதப் பட்டு விவாதிக்கப் பட்டு விட்டன. இவையெல்லாம் ஒருவகையில் அவளைப் போன்ற ஆளுமையை கடந்து செல்ல ஆண் மனம் தேடும் காரணங்கள் என்று ஓர் எல்லையில் கூறிவிட முடியும். 

ஆனால் திரௌபதியைப் பற்றி நம் வாசகியர் கருத்துக்கள் எதுவும் வந்ததாக நினைவு இல்லை. திரௌபதி திருமணத்திற்கு பிறகு வந்த அனைத்து அத்தியாயங்களிலும் வரும் பெண்கள் முதலில் கேட்பது திரௌபதியைப் பற்றித் தான். எந்த ஓர் பெண் பாத்திரமும் அவளைப் பற்றிய சொந்தக் கருத்தை வெளிப்படுத்தவில்லை. அவளைச் சந்தித்த ஆணின் கருத்தை அறியவே விளைகிறார்கள். நேற்று துச்சலை கூட பூரிசிரவசிடம் அவளைப் பற்றித் தான் கேட்கிறாள். இக்கேள்விகளுக்கெல்லாம் முதல் கேள்வி, சுருதையால் கேட்கப்பட்டது தான். "அவள் எப்படி இதை ஏற்றுக்கொண்டாள் என்றுதான் என் நெஞ்சு வினவிக்கொள்கிறது." ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களைத் திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் இருந்த, இருக்கும் யாதவ குலத்தில் வந்த சுருதை தான் இதைக் கேட்கிறாள். அவள் கேள்வியில் உள்ள "இதை" என்பது எதைக் குறிக்கிறது? ஐவரைத் திருமணம் செய்ததையா? ஏன் அனைத்துப் பெண்களும் திரௌபதியை வித்தியாசமாக பார்க்கிறார்கள். பூரிசிரவஸ் சொல்வது போல் அனைவரும் அவளை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள், வழிபாட்டுணர்வுடன், பொறாமையுடன், கசப்புடன். அனைவருக்குள்ளும் அப்படி ஓர் ஆளுமையின் மீதான விருப்பம் ஒளிந்துள்ளதா? நம் வாசகியர் அவளைப் பற்றி, ஓர் மானிடப் பெண் என்ற அளவில் என்ன நினைக்கிறார்கள். 

அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்.