சில குழந்தைகள் ஏதாவது வேண்டி அழும். வீட்டில் அப்பொருள் குழந்தைக்கு தேவையில்லை என முடிவு செய்து தராமல் இருப்பார்கள். சில குழந்தைகள் சிறிது நேரம் அழுதுபார்த்துவிட்டு அப்புறம் மனம் வேறு ஒன்றில் நாட்டம்கொள்ள அந்தப் பொருளை மறந்து அழுகையை நிறுத்திவிடும். ஆனல் சில குழந்தைகள் அப்படி தன் பிடிவாதத்தை விட்டுவிடுவதில்லை. அவை அழுகின்றன ஆர்ப்பாட்டம் பண்ணுகின்றன. எதைச் சொன்னாலும் சமாதானம் ஆவதில்லை. ஒரு கட்டத்தில் வீட்டிலுள்ளவர்கள் அந்த குழந்தை வேண்டுவதை தந்துவிடுகிறார்கள். அப்படி இல்லையென்றால் சில மணி நேரம் போராடி களைத்து பின்னர் அந்தக் குழந்தையே அதைக் கேட்பதை விட்டுவிடுகிறது. இதைப்போல் சிறுவர்கள் ஏதாவது வேண்டி முரண்டு பிடித்து பிடிவாதம் பிடிக்கிறார்கள். பெரியவர்கள்கூட இப்படி ஏதாவது வேண்டி பிடிவாதம் பிடிப்பதைப்பார்த்திருக்கிறோம்.
ஆனால் அனைத்து பிடிவாதத்திற்கும் ஒரு எல்லை இருக்கிறது. இது முற்றிலும் முடியாது என ஒரு கட்டத்தில் மனதில் தோன்றி பிடிவாதத்தை விட்டு விடுகிறார்கள்.
ஆனால் ஜரை தன் பிள்ளை இறந்துவிட்டதை ஒத்துக்கொள்ளளாமல்செய்யும் பிடிவாதத்தை நிறுத்திக்கொள்ளுவதே இல்லை. ஆதி அன்னை வரமாதாவும் தன் குழந்தை இறந்ததை ஏற்றுக்கொள்ளமல் பிடிவாதம் கொண்டு, அந்த அதிதீவிர பிடிவாதத்தாலேயே இறை என எழுந்தாள். அதே கதை மீண்டும் நடக்கிறது. அவள் தன் இரண்டாய் பிளந்த குழவியை காடெங்கும் கற்களாக, முட்டைகளாக, சுள்ளிகளாக கண்டு அவற்றையெல்லாம் இணைத்து வைத்து அவள் உயிர்கொடுக்க முயற்சிக்கிறாள். அவளின் அந்த பிடிவாதத்தால் இறப்புகூட அவளை நெருங்க முடியவில்லை. ஏனென்றால அவளின் காலம் அவள் பிள்ளை இறந்த கணத்தில் உறைந்துபோய் நின்றுவிட்டது. தேவர்கள் அவளின் பிடிவாதத்திற்கு அஞ்சி அவளை விட்டு விலகி நிற்கின்றனர். இறுதியில் இறைவன் அவள் பிடிவாதத்திற்காக இறங்கிவர வேண்டியதாக இருக்கிறது. அவளுடைய கைகளில் பிருகத்ரத்னின் இரண்டாய் பிறந்திருக்கும் மகனாக அவள் குழவியை திரும்பச் சேர்ப்பித்து பெருமூச்சுவிட்டுக்கொள்கிறான். வரமாதாவினால் கூட முடியாததை தன் வாழ்நாளில் நிகழ்த்திக்காட்டுகிறாள் ஜரை அன்னை.
புராணத்தில் மட்டுமல்ல நாம் வாழும் உலகிலும் மிகச்சிலர் இதைப்போல் தன் பிடிவாதத்தை விட்டுவிடுவதில்லை. தன் பிடிவாதத்திற்கு தன் வாழ்வையே அர்ப்பணிக்கிறார்கள். வாழ்வின் அனைத்து சுகங்களையும் ஒன்றை அடைய வேண்டும் என்ற தன் பிடிவாதத்திற்காக துறக்க சித்தமாக இருக்கிறார்கள். அவர்களின் இந்த பிடிவாதம் அவர்களை பித்து என பிடித்திருக்கிறது. உலகத்தினரின் தர்க்கத்தையெல்லாம் புறக்கணிக்கும் இவர்கள் மற்றவர் பார்வையில் பித்தர்கள் எனத் தெரிவது ஒன்றும் வியப்பில்லை. அவர்கள் மற்றவர் அனைவரும் முடியாது என நம்பும் ஒன்றை முடிப்பேன் என பிடிவாதம் செய்து முயன்றபடி இருக்கிறார்கள். இப்படிப் பித்தென கொள்ளும் பிடிவாதம்காரணமாக ஒரு சாதாரண மனிதனால், பிரபஞ்ச இயக்கங்களின் பின்னிருந்து இயக்கும் அறிவியல் உண்மைகளை கணித சமன்பாடுகளை வெளிக்கொணர வைக்கிறது, அடர்ந்த வனப்பகுதியில் பொங்கிப் பெருகியோடும் ஆற்றில் பெரிய அணைக்கட்டை கட்ட வைக்கிறது, கொடுங்கோல் அரசுக்கு எதிராக மக்களை விழிப்புறவைத்து, ஒன்று சேர்த்து, போராடவைத்து விடுதலை வாங்கித்தரச்செய்கிறது, சமூகம் தான் காலம் காலமாக பின்பற்றும் ஒரு தவறை உணர்த்தி திருந்த வைக்கிறது. இப்படி ஒன்றில் தன் ஆவி பொருள் இன்பம் என அனைத்தும் துறக்கும் பிடிவாத பித்தர்கள்தான் இந்த உலகை முன்நடத்தி செல்றார்கள். புது ஆக்கங்களை உருவாக்குகிறார்கள். புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்துகிறார்கள். மனித சமூகத்தின் போக்கை மாற்றுகிறார்கள். அவர்களை நாம் வாழும் காலத்தில் தூற்றுகிறோம். பித்தன் என்றும் ஏமாற்றுக்காரன் என்றும் இகழ்கிறோம். இவற்றையெல்லாம் அவன் சிறுதூசென அலட்சியப்படுத்தி தன் எண்ணத்தை நிறைவேற்றும் ஒற்றை நோக்கில் அவன் வாழ்ந்துகொண்டிருக்கிறான். தேவர்கள் அருள்தர விண்ணிலிருந்து மண்ணுக்கு வகிறார்கள். அவனோ இவ்வுலகுக்கு அருள்செய்து மண்ணிலிருந்து விண்ணுக்கு தேவனாகச் செல்கிறான்.