இப்படி ஒருவன் இருக்கிறான் என வைத்துக்கொள்வோம்: எந்த சமூக அறத்தையும் பின்பற்றாதவன். அவன் சமூகத்தில் வெளியிலிருப்பவன். உண்மையில் அவன் சமூக மனிதர்களைச் சார்ந்தவன் இல்லை என நினைக்கிறான். மேலும் அவனைப்பொறுத்தவரை சமூக மனிதர்களை வேற்று உயிரினமாக கருதுகிறான் என்றே கொள்ளலாம். அந்த மனிதர்கள் மேல் எவ்வித அக்கறையோ இரக்கமோ காட்டத் தகுதியில்லாதவர்களாக கருதுபவன் அவன். ஏதோ ஒரு காரணத்தின் காரணமாக அச்சமூகத்தின் மீடு கடும் சீற்றத்தோடு இருப்பவன். ஒவ்வொருநாளும் சமூகத்திலிருப்பவரை துன்புறுத்துவதை தன் கடமைபோல் அவன் நடந்துகொள்கிறான். ஒட்டுமொத்தமாக ஒரு சமூகம் அவனைக் கண்டு அஞ்கிறது. அவன் அழிவடைவதை சமூகத்திற்கு கிடைக்கப்போகும் தெய்வத்தின் அருட்கொடை என சமூகம் நினைக்கிறது. இப்படிப்பட்டவனை நாம் அந்த சமூகத்தின் அரக்கன் என்று சொல்லலாம்.
அதே நேரத்தில் விதையூன்றி தினமூம் நீர் வார்த்து ஒரு முள்மரத்தை வளர்ப்பது போல அந்த அரக்கனை பிறப்பித்து அவனை அரக்கனாக வளர்த்தது அதே சமூகம்தான். அவன் ஆதியில் சமூகத்தால் எவ்வித இரக்கமுமின்றி கைவிடப்பட்டவன். அதுவே அவன் அரக்கனாவதற்கு விதையென ஆகிறது. பின்னாளிலும் அச்சமூகம் அவனை வேண்டாதவனாக, அவன் இரந்து எதிர்வரும்போதும் கண்கொண்டு பாராமல், இரக்கமின்றி எட்டிவுதைத்து புறக்கணிக்கிறது. சமூகத்திற்கு வெளியே எங்கோ யாரோ சிலரால் அவன் வளர்க்கப்படுகிறான். பெரும்பாலும் அவர்களும் சமூகத்தால் கைவிடப்பட்டவர்களாக இருப்பார்கள் அல்லது சமூக வெறுப்பிற்கு ஆளானவர்களாக, சமூகத்தின்மீது கடும் கோபத்தில் வஞ்சம்கொண்டிருப்பவர்களாக, சமூகம் இவர்களை தினமும் தன் காலடியில் வைத்து நசுக்குபவர்களாக இருப்பார்கள். அவர்களின் வஞ்சத்தை தினம் உண்டு வளர்கிறான். தனக்கு உணவு நினைந்தூட்ட இல்லாத அவன் கிடைக்கும் உணவையெல்லாம் உண்டுகொண்டே போதாது போதாது இன்னும் இன்னும் என அலைகிறான். கிடைக்கும் எதுவும் அவனுக்கு உணவென ஆகிறது. சமூக அரவணைப்பு வழிகாட்டல் எதுவும் இல்லாமல் ஓங்கி வளர்கிறான். அவன் சமூகத்திற்கு வெளியில் இருப்பதால். அவனுக்கு சமூக வீழ்ச்சி என்பது இல்லை. அதன் காரணமாக சமூகத்தின் அங்கீகாரமோ மதிப்போ அவனுக்கு ஒரு பொருட்டென ஆவதில்லை. மாறாக சமூகம் அவன் மேல் காட்டும் அச்சமும் வெறுப்பும் அவனை ஊக்கமூட்டுபவையாக மாறுகிறது. இதன் காரணமாக அவன் எவ்வித காரணமும் தேவையுமின்றி சமூகத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுகிறான். அதில் அவன் இன்பம் காண்கிறான். ஒரு கட்டத்தில் அந்த சமூகத்திற்கு தீங்கிழைப்பதை தன் கடமையெனக் கொள்கிறான். அப்படிப்பட்ட மனநிலைகொண்ட மற்றவர்களை தன் தலைமையில் ஒன்றிணைத்து ஒரு படையாக உருவெடுத்து சமூகத்தை தாக்குகிறான்.
இவனைத் தான் நாம் இன்றைய மொழியில் ஒரு ரௌடி என்கிறோம், தீவிரவாதி என்கிறோம், கொடூரன் என்கிறோம், சமூக விரோதி என்கிறோம். அவனை நாம் பிறக்குமோதே ஆதரவற்றவன் என ஆக்கினோம், அவனை மொத்தமாக புறக்கணித்தோம், அவன் சிறியவனாக இருக்கையில் அவனைக் காணும்தோறும் அருவருத்தோம். ஆதரவு தேடி வருகையில் எவ்வித உதவியும் செய்யாமல் நம் கைகளை பின்னிழுத்துக்கொண்டோம். நம்மைச் சார்ந்தவகள் அவனை கரணமின்றி துன்புறுத்தும்போது அதைக் காணாததாய் நடித்தோம். அப்படி துன்புறுத்தியவர்களை ஒருபோதும் கண்டித்ததில்லை. அவன் நாம் இருக்கும் இடத்தில் வாழ்வதையே ஒரு தீங்கென அவனை தண்டித்தோம். அன்பும் ஆதரவும் வேண்டி நின்ற ஒரு அறியா பாலகனை நாம் அறிந்தும் அறீயாமலும் நம் செயல்களால் அரக்கனாக்கினோம். இப்போது அவனை தீயவன் என சுட்டுகிறோம். அவன் தரும் துன்பத்தை மட்டுமே கவனத்தில் கொள்கிறோம். இப்போது அவனை யாராவது கொன்றுவிட்டால் பரவாயில்லை என நினைக்கிறோம்.
ஜரையன்னையின் மைந்தன் ஒரு குறையுடலோடு பிறந்த இரட்டையரில் ஒருவன். அவனுக்கு கூடுதலாக அன்பையும் ஆதரவையும் அளிக்க வேண்டிய சமூகம் அவனை முழுக்க கைவிட்டது. தூக்கி காட்டில் போட்டது. அவன் அடையவேண்டிய எல்லாமும் அவனிடமிருந்து பிடுங்கப்பட்டன. அவன் சமூகத்தின் விளிம்பில் இப்படி புறக்கணிக்கப்பட்ட மக்களில் ஒருவனாக வளர்கிறான். அந்த எளிய மக்களையும் தேடிவந்து கொல்லும் சமூகத்தினர ஏன் அவன் மதிக்க வேண்டும்? ஏன் அவர்களின் சமூக அறத்தை ஏற்கவேண்டும்? அவன் அரக்கன் என ஆவதற்கு மகத மக்களின் சமூகம் அல்லவா ழுமுதல் காரணம். மொத்த இராமாயணத்தில் ஒரு அரக்கன் பாத்திரமே முழுமையாக உருவாக்கப்படுகிறது. வெண்முரசில் ஒவ்வொரு அரக்கனும் இரத்தமும் சதையுமாக உருவாக்கப்பட்டு நம்முடன் நடமாடவிடப்படுகிறான். வெண்முரசில் ஒரு கதையின் நாயகனுக்கு கிடைக்கும் முக்கியத்துவத்திற்கு சற்றும் குறைவில்லாமல் ஒவ்வொரு எதிர் நாயககனுக்கும் கிடைக்கிறது. ஜராசந்தன் உருவாகி வளர்வதே ஒரு நாவல் அளவு கனம் கொண்டு விரிகிறது.
தண்டபாணிதுரைவேல்