ஜெ
எதற்காக இந்த்ப்புராண உருவக முறையிலே கதை சொல்லவேண்டும் என நேற்றெல்லாம் நினைத்துக்கொண்டே இருந்தேன். ஏனென்றால் நீங்கள் இதில் சொல்லியிருப்பவை எல்லாமே என்னுடைய சொந்த அனுபவங்கள். இந்த மானசீகக்கொந்தளிப்புகள் எல்லாவற்றிலும் உக்கிரமாக நான் கடந்துசென்றிருக்கிறேன்
[மாத்திரைகள் கெடுதல் என்பார்கள். ஆனால் மாத்திரைகள் இல்லாமல் இந்த உக்கிரநிலைகளை நம்மால் கடது செல்லவே முடியாது என்பதுதான் உண்மை. கடந்தகாலத்தில் இதெல்லாம் இருந்தவர்கள் பைத்தியமாகிச் செத்தார்கள். என் தாய்மாம கிறுக்கனாகச் செத்தார். நான் உயிருடன் இருக்கிறேன் காரணம் மாத்திரைகள்தான்]
இந்த வரிகளைப்படிக்கையில் இதுதான் புராண நெரேஷனின் தேவை என தெரிந்துகொண்டேன். தவம் என்றால் என்ன என்பதை இப்படி ஒற்றை வரியிலே சொல்ல தேவையாக இருப்பது உருவகபாஷைதான்
விந்தியமலையின் உச்சிமுனையில் ஒற்றைக்காலில் நின்று தவம்செய்தான். மண்ணிலிருந்து பெற்றவை அனைத்தையும் மலையில் குவித்தான். மலையுச்சியில் சேர்த்து தன் காலில் ஏற்றினான். உடலில் கூர்த்து கைகளில் சேர்த்து விரல்முனையில் செறித்தான். விண்ணுக்கு அதை ஏவினான். ஏதுமற்ற வெறுங்கலமாக அங்கே நின்றான். விண்ணிலிருந்த மூவிழிமூத்தோன் அந்த அழைப்பை அறிந்தான்
நாராயண மூர்த்தி