Saturday, April 2, 2016

புதுக்களம்



இனிய ஜெயம்,

மீண்டும் முதல் அத்தியாயம் தொட்டு இன்றைய ரக்த பீஜ சம்ஹாரம் வரை வாசித்தேன்.
ஒரு இலக்கிய வாசகனுக்கு மாபெரும் உவகை எப்போது வாய்க்கும் என்றால் உருவத்தால் உள்ளுறையால் முற்றிலும் புத்தம் புதிய புனைவு வெளி முன் தோற்றுப் போகும் போதே வாய்க்கும்.

இந்த பன்னிரு படைக்களம் முன் (தற்காலிகமாக) அதன் உருவத்தை எதிர்கொள்வதில்,  உள்ளுறையை ஏந்திக் கொள்வதில் என் தோல்வியை உவகையுடன் முன் வைக்கிறேன்.
உருவத்தால் இந்த நாவல் தமிழ் புனைவுலக்கின் அடுத்த கட்ட பாய்ச்சல். சங்க இலக்கியத்தை அடிப்படையாக கொண்டால் நமது புனைவு மரபு, அகம் புறம் எனும் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு துவங்குகிறது. ஒரு எளிய முன் வரைவாக புறம் இயல்புவாதமாக பரிணமிக்க, அகம் அதன் முடிவிலியை பிரதிபலிக்கும்  இயல்பால் பற்பல வடிவம் பூண்டு வாசக அக ஆழத்தை தீண்டின. லா சா ரா , துவங்கி பல உதாரணங்கள்.

இந்த அக இலக்கிய வகைமையில் கொற்றவைத்தான் இது வரை முன்னணியில் இருந்தது. தமிழின் தனித்துவமான பத்தினி தெய்வம் எனும் தொன்மம் அதன் உறுவாக்கத்தில் உள் இலங்கும் பல் வேறு அன்னை வழிபாடுகள் ஆகிவற்றை மீள் உருவாக்கம் செய்த வகையில் தமிழின் மிக முக்கிய பண்பாட்டு ஆசி அப் புனைவு. இதில் கூட கால் ஊன்றி நிற்க ஐவகை நிலம் பாடகர் சொல்லில் விரிகிறது.

ஆனால் பன்னிரு படைக் களம் முற்றிலும் புதிய வெளி. மகிஷாசுர மர்தினி, ரக்த பீஜன் என நமது தொன்மங்கள் நமது பண்பாட்டு தொகுப்பு மனதில் எந்த ஆழத்து வெளியில் உரைகிறதோ அந்த வெளியையே களமாக கொள்கிறது. நமது அக அடுக்கை போதம் அபோதம் துரியம் சித்தம் என வகுத்தால். இந்த நாவல் துரியத்தில் துவங்கி சித்தத்தின் ஆழத்துக்கு செல்கிறது.  ஆக உண்மையில் இந்த நாவல் எனக்கு இன்னும் ஐந்து வருடத்துக்கு பிறகான நாவல்.

உள்ளுறையால் இது பின் தொடர சிரமம் அளிக்கும் வண்ணம் மிக மிகச் செறிவானது. காரணம் இந்த பாரத நாவலின் கேம் பிளேயர் அத்தனை பேரின் அக ஆழமும் இந்த நாவலில் தெய்வங்களின் ஆடல் வழியே சொல்ல முயல்கிறீர்கள். உதாரணமாக அர்ஜூனன். இந்த நாவலில் இந்திரன் குழந்தையாக ஆடாக இன்னும் பலவாக மாறுகிறான் இதை எல்லாம் தொட்டுத்தான் அர்ஜூனன் பின் புலம் உருவாகிறது.  அது போக உங்கள் அகம் சப் கான்ஷியஸ் இல் உருவாக்கும் தொடர்பு வேறு. உதாரணமாக. நேமிநாதரை அர்ஜூனன் சந்திப்பது. உண்மையில் பாரத போர் முடிந்த உடன் அர்ஜுனனை வழி நடத்த போவது நேமி நாதர் தானே. அந்த நேமி நாதர் அத்தியாயம் போல இந்த பன்னிரு படைக் களம் மொத்தமும் பின் வரும் ஒன்றுக்கான பீடிகை.


அனைத்துக்கும் மேல் கொற்றவயின் சாரம் பெருகிப் பெருகி அன்னைப் பெருந் தெய்வமாக உன்னதம் கொள்ளும் வெளி இந்த நாவல்.

அதனால் தான் இந்த நாவல் குறித்த வாசகர் கடிதம் யாவும் அந்தகர்கள் கைக்கு சிக்கிய வேழத்தை மட்டுமே முன் வைக்கிறது. அது அப்படிதான் ஆகும் வேறு வழி இல்லை. ஏன் எனில் இது இன்னும் ஐந்து வருடத்துக்கு பின்பான நாவல். தொடர்ந்து வாசித்து தொடர்ந்து விவாதித்தே இந்த நாவலை நமது அகத்தா ல் செறிக்க இயலும்.






கடலூர் சீனு