ஜெ
பன்னிருபடைக்களத்தின் சித்தரிப்பில் உளவியல் இருப்பது உண்மை. ஆனால் அதைமட்டுமே நண்பர்கள் சிலர் வாசிப்பதாகத் தோன்றியது. இதன் மையம் அன்னை. அவளை மூலப்பிரகிருதி என்றுதான் நாவல் சொல்கிறது. இது அவளுக்கும் அவள் மைந்தர்களுக்கும் இடையே நிகழும் பூசல் என்றுதான் சொல்லவேண்டும்
முதற்பேரியற்கையின் முகத்திலிருந்து முளைத்தவள் நீ. அன்னமென மாயம் காட்டி இங்கு அமைந்திருக்கும் அலகிலிகள் அனைத்தையும் ஈன்றமையால் அன்னையென்றானவள். அதுவல்ல என்று உணர்ந்து அன்னம் தானென்று தருக்கியபோது அது நீயே என்று வந்தமைந்தவள்.
என்று அன்னையைப்பற்றிய கச்சிதமான வர்ணனை ஆரம்பத்திலேயே சொல்லப்பட்டுவிட்டது. இது அசுரர்களாகிய நமக்கும் இயற்கைக்கும் உள்ள போராட்டம். இயற்கை வெளியேயும் நமக்குள்ளேயும் இருக்கிறாள். யாதேவி சர்வபூதேஷு சக்திரூபேண சம்ஸ்திதா என்று இதைச் சொல்கிறார்கள்
தொல்பழங்காலத்தில் இப்புவியென்றிருந்த ஏழுபெருந்தீவுகளை ஒன்றென ஆண்ட கசன் என்னும் மங்கலமைந்தன் கனவிலெழுந்த உருவம் நீ. அவனால் மழைநீர் விழுந்த இளங்களிமண்ணில் மும்முறை அள்ளி உருட்டி உருவளிக்கப்பட்டவள்
சுவாமி