Tuesday, February 14, 2017

புடவியின் பூ

 
ஆணிற்கு சுதந்திரதம் வேண்டுமா? பாதுகாப்பு வேண்டுமா? என்று வினா எழுப்பினால் சுதந்திரம் என்று எளிதாக பதில் சொல்லிவிடமுடியும். இதே வினாவை பெண்ணிற்கு எழுப்பினால் சுதந்திரம் மட்டும் என்று எளிதாக சொல்லிவிடமுடியவில்லை. 

சுதந்திரம் உடல்  சார்ந்த உலகாதாயம் சார்ந்த ஒரு சுயமதிப்பு மிகுந்த விசயம். சுதந்திரம் உள்ளத்தை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை.  சுதந்திரம் இருந்தால் பாது காப்புக்கிடைத்ததுபோல்தான் என்று நினைக்கத்தோன்றுகின்றது. சுதந்திரமே பாதுகாப்பானதாக இல்லை என்பது வாழ்க்கையில் கிடைக்கும் பாடம். 

பாதுகாப்பு என்பது உடல்சார்ந்தும் உலகாதயம் சார்ந்தும் இருப்பதுபோல் தோன்றினாலும் அது அடிப்படையில் உள்ளம் சார்ந்த தன்னாந்த விசயம். அனைத்து உயிர்கள்மீதும் பயம் என்னும் மெல்லிய திரை விரிக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பாக இருக்கும் உயிரே பயத்தை தாண்டி சுதந்திரத்தை அனுபவிக்கிறது. பாதுகாப்பு எங்கு இருக்கிறதோ அங்கு சுதந்திரம் இயல்பாகவே இருக்கிறது. சிறையில் இருப்பதுகூட பாதுகாப்பாக இருக்கும் விசயம்தான் அது உள்ளத்தை பாதுகாப்பில் வைக்காததால் பாதுகாப்பு என்பது இடத்தைப்பொருத்தது இல்லை எனவே உள்ளமும் உடலும் எங்கு பாதுகாப்பாக இருக்கிறதுதோ அதுதான் பாதுகாப்பு என்பது.  

பாது காப்பு எங்கு இல்லையோ அங்குதான் சுதந்திரம என்னும் சொல்லே எழுகின்றது. ஆண் பெண் என்று எல்லைப்பிரித்துக்கொள்ளாமல் உயிர்க்கூட்டம் முழுவதற்குமான பாதுகாப்பு எங்கு திகழ்கின்றதோ அங்கு சுதந்திரம் இருக்கும் எனவே பாதுகாப்பே உயிர்களின் தேடலில் முன் பங்கு வகிக்கிறது.

பாஞ்சாலி பிறந்ததில் இருந்து இதோ வனவாசம் அனுபவித்துக்கொண்டு அடுமனையாட்டியாக இருக்கும்போதும் சுதந்திரம் உடையவள்தான் ஆனால் அந்த சுதந்திரம் அவளுக்கு விடுதலை வழங்கிவிடவில்லை. விடுதலை வழங்காத சுதந்திரம்கூட பாஞ்சாலி விசயத்தில் ஒரு தளைதான். 

திரௌபதி பீமன் இடம் பெரிதாக பேசியது இல்லை அவனை ஒரு பொருட்டாக நினைத்தது இல்லை மனதில் அவனுக்கு முதல் இடம் தந்தது இல்லை ஆனால் பீமன் இடத்தில் அவள் தனது பெண்மையின் பாதுகாப்பை உணர்கின்றாள். அந்த பாதுகாப்பு அவளை அனைத்துதளைகளில் இருந்தும் விடுதலை அடையசெய்கிறது அதனால் அவள் தன் கன்னித்தன்மையின் மணத்தை அறிகின்றாள் அதுவே அவளுக்கு கல்யாண சௌகந்திகம் மணமாக மலர்கிறது.

பெண் சுதந்திரமாக இருந்தாலும் விடுதலை அடையமுடியாத தளையில் அழுத்தி வைக்கப்பட்டு உள்ளாள். அது உடல்சார்ந்த தளையாகவும் உள்ளம் சார்ந்த தளையாகவும் இருக்கிறது. மெய்யான ஒரு பாதுகாப்பில் அந்த தளையை நீங்கி விடுதலை கிடைக்கும்வரை அவள் தன்பெண்மையின் மலர்தல் மணத்தை உணர்ந்தும் அனுபவிக்கமுடியாத சிறையில் கண்ணீருடன் இருக்கிறாள் என்பதை மாமலர் திரௌபதிக்காட்டுகின்றாள்.

துருபதன் தன் மகள் திரௌபதியை தன் அன்னையாக குலதெய்வமாக  உலகின் அரசியாகப்பார்க்கிறான் அது அவளுக்கு பெரும் சுதந்திரம் ஆனாலும் அவள் துருபதனின் கனவுகளாலானத்தளையில் கட்டப்பட்டு  நிற்கிறாள். அவள் அன்று உணரும் கல்யாண சௌகந்திகம் மணம் துருபதன் இடம் சொல்லும் விடுதலை உடையதாக இல்லை அதனால் அழுகின்றாள். அங்கு அவள் பெண்மை அழுத்தப்பட்டு தன் உடல்மட்டும்தான் சுதந்திரத்தில் இருக்கிறது.

உலகின் பேரரசியாக பெரும் பேரரசின் பீடத்தில் அமரும் தன்னிகர் அற்றவளாக தன்னைத்தான் கட்டி எழுப்பும் திரௌபதி தருமனின் இயலாமையால் அறத்தடுமாற்றத்தால் விடுதலை அடையமுடியாமல் தடைப்படுகின்றாள். இங்கும் அவளுக்கு சுதந்திரம் உள்ளது ஆனால் அவள் விடுதலை அடையமுடியவில்லை. திரௌபதின் லோகாதயம் வளர்ந்து சுதந்திரம் அடைந்து உள்ளது ஆனால் அவள் உள்ளம் அவள் பெண்மை அங்கும் அழுத்தப்பட்டே உள்ளது எனவே அங்கும் விடுதலை இன்றி தவிக்கிறாள். இந்திரபிரதஸ்தம் என்னும் பெரும் பேரரசின் பேரரசியாக இருந்தும் கணவனால் கல்யாண சௌகந்திகம் மணத்தும்   பெறமுடியாதவளாகவே கண்ணீருடன் இருக்கிறாள்.

அவளுள் ஆண்மையை நோக்கவைத்த  கர்ணனின் கர்வம் ஒரு தடை, அவளுள் காதலை  எழுப்பிய அர்ஜுனன் காமம் மற்றும் புறக்கணிப்பு ஒரு தடை. நகுலன் சகாதேவனின் மைந்தர் குணம் ஒரு தடை. ஆக்கத்தின் இருப்பிடமாக இருக்கும் கண்ணன் ஆண்களில் ஒருவனாகவே இருக்கும் தடை  என்று திரௌபதிக்கு கல்யாண சௌகந்திகம் மணமாகமட்டும் உணரப்படும் பொருள் கொள்ளமுடியாத கண்ணீர் விடுவைக்கும் தளையாக மட்டும் இருக்கிறது.

மாமல்லனாகிய பீமன் திரௌபதியின் தடைகளை உடைக்கிறான். அவன் அவள்மீது எந்த தடையையும் உண்டாக்கவில்லை. அவள் சுதந்திரத்தின்மீது பெண்மையின்மீது உடலின்மீது உள்ளத்தின்மீது பாதுகாப்பாகவும் இருக்கிறான். பீமன் மூலம் பாதுகாப்பும் பாதுகாப்பின் வழியாக சுதந்திரமும் சுதந்திரத்தின்மூலம் விடுதளையும் பெருகின்றாள். அதனால் அவள் இதுவரை அறிந்த கல்யாணசௌகந்திக மணத்தை தனது கன்னிமை மணம் என்று கண்டுக்கொள்கிறாள். சொல்லாக அதை சொல்லாக விளக்கிக்காட்டி மகிழ்கின்றாள். அதன் வழியாக அனைத்து ஆடவர்போலவும் பெண்களின் உலகத்தை தள்ளியே வைக்கநினைக்கும் பீமனை அந்த உலகத்திற்குள் கொஞ்சம் கொஞ்சமாக இழுத்து அழுத்திவிடுகின்றாள். 

பெண்ணின் உளஉலகில் நுழைய ஆணுக்கு பயம். அது பொருள் அற்றதாகவே இருந்துவிட்டுப்போகட்டும் என்று அனைத்து ஆண்களையும்போல் அஞ்சும் பீமன் திரௌபதியின் திறக்கும் மனக்கதவுவழியாக உள்நுழைந்து அந்த உலகைக்கண்டுக்கொள்கின்றான். அவனுக்கும் அந்த மணம் கிடைக்கிறது. 

திரௌபதிக்குள் இருந்த அந்த மணத்தை அவளுக்கு காட்டியதன் வழியாக பீமனே அவளுக்கு உள்ளம்  நிறைந்த கணவனாக ஆகின்றான். காதலனாக ஆகின்றன். திரௌபதி அவன் முன் இரண்டு அற்றுப்போகின்றாள். 

துருபதன் மகளாக, பாண்டவர் மனைவியாக இந்திரபிரதஸ்தத்தின் பேரரசியாக தன்னை அவமானம் செய்தவருக்கும் அன்னையாக என்று திரௌபதி அனைத்திலும் நின்று மலர்ந்துப்பார்க்கிறாள், எதனாலும் நிறைவேறாத வெற்று மனத்தில் அவள் பெண்மை  கண்ணீர் சிந்திக்கிடக்கிறது. கல்யாணசௌகந்திகம். கனவில் உயரத்தில் இருந்து மலர்ந்துவிழும் கந்தர்வ மலராக இருக்கிறது ஆனால் பீமனால் அவள் மனம் நிறைந்து கல்யாண சௌகந்திகம் மணம் அறியும்போதும் தன் கன்னிமையின் மணம் என்று அறிந்து கண்ணீர்விடுகின்றாள். அது துன்ப கண்ணீர் இது ஆனந்த கண்ணீர். 

மனிதர்கள் மாமலர்த்தோட்டம் நட்டு பெண்ணை அதன் நடுவில் அடுமனையாட்டியாக இருக்கவைக்கிறார்கள். எத்தனை மலர்கள் நடுவில் இருந்தாலும் பெண் மலராதபோது பெரும்மலர்த்தோட்டம்   வெரும் சறுகாகிப்போகும் தாவரம் மட்டும்தானா? பெண்மலரும்போது அவளுள் கல்யாணம் சௌகந்திகம் மணக்கும்போது மொத்த மலர்த்தோட்டமும் மறைந்து அவள் மட்டுமே புடவியின் மலராக ஆகிவிடுகின்றாள். 

புடவியின் பூவாக திரௌபதியை பூக்கவைக்கும்  பீமன் பேராண்மைக்கொண்டவன்தான். அதனாலேயே அவளுக்குள் அத்தனை காதல் அலையடிக்கிறது. 

ஜெ மாமலர்த்தோட்டத்தில் நடுவில் திரௌபதியை உட்காரவைத்து அவளை பெரும் மலராக ஆக்கிய வித்தையைக்கண்டு வியக்கிறேன்.

ராமராஜன் மாணிக்கவேல்.