இனிய சகோதரனுக்கு 
டெய்சி எழுதுவது     
 இன்றைய மாமலர் என் வாழ்க்கையை 25 வருடங்களுக்கு முன்பதாக திரும்பிப் 
பார்க்க வைத்தது. இளைய தாரத்தின் மகள்கள் நாங்கள்  மூவரும் மூத்த தாரத்தின்
 2 அண்ணன்களும் அண்ணிகளும் எங்கள் அம்மாவும் அப்பாவுமான பெரிய குடும்பம். 
சின்ன அண்ணி வரும்வரையில் எந்த வேறுபாடும் இல்லாத மிக மகிழ்ச்சியான 
குடும்பமாய் பெரிய அண்ணனின் ஆதரவில் இருந்தோம். அப்பா தாத்தாவைப் போல் 
முதிர்ந்தவர். ஆகவே அண்ணனே அப்பாவாய்  இருந்த நாட்கள். சின்ன அண்ணியை மிக 
ஏழ்மையான குடும்பத்தில் இருந்து கொண்டு வந்தார்கள். 
 
           இப்பொழுது நினைத்தால் அவர்களின் அழகும் சுறுசுறுப்பும் 
நேர்த்தியும் ஒரு அணங்கைப் போல்தான் இருந்திருக்கிறது. மிக நிறைவான 
நாட்கள். யாரோடும் கலகலப்பாய் பேசி சிரித்து இருக்கும் இடத்தை ஒளியால் 
நிரப்பி துறுதுறுவென்று எங்கள் வீட்டையே நிறைத்தார்கள். நான் பெரியவளாய் 
ஆகும் நேரத்தில் எனக்கு ஒரு தோழியாய் இருந்து தாங்கினார்கள் . அந்த 
கலகலப்பே அவங்களுக்கு எதிரியாய் மாறியது. பெரிய அண்ணன் சந்தேகப்பட்டு ஒரு 
முறை அவமானப்படுத்த தாங்க முடியாமல் சுயமாய் இறந்து போனார்கள். 
அதன்
 பின் எங்கள் வாழ்க்கை  "முற்றக் கனிந்த அமுது எப்படியோ இறுகி 
நஞ்சென்றாகிறது. சியாமை சென்றபின் அவனில் வாழ்ந்த தெய்வங்கள் அனைத்தும் 
ஒழியலாயின. ஆலயத்தின் கருங்கற்களின் பூட்டுகள் நடுவே நுழைந்து பருத்து 
புடைத்தன நச்சுவேர் நரம்புகள். நிலையிளகிச் சரிந்தவற்றின்மேல் படர்ந்து 
பரவியது வழுக்கும் பசும்பாசி. நாகமென விழிஒளி கொண்டு சொடுக்கிக் கொத்தின 
நினைவுத்துளிகள். நொடியென்றாகி நீண்டது அவன் காலம். சிறு ஓசைக்கும் 
சிலிர்த்தெழும் தேள்கொடுக்கென எழுந்தன சென்றவை. அனல்பட்டுப் பழுத்த கலமென 
காத்திருந்தன அவள் விட்டுச்சென்ற பொருட்களனைத்தும்."  இப்படியானது.
பெரிய
 அண்ணனின் குற்ற மனசாட்சி எங்கள் ஒவ்வாருவரையும் குதறுவதில் இன்பம் கண்டது.
 "நோயுற்ற ஒருவர் பிறருடைய உவகைகளை தடுப்பவர். உவகைவிரும்பும் உலகத்தாரால் 
அவர் வெறுக்கப்படுகிறார். வெறுப்பை குற்றவுணர்வாலும் கடமையுணர்வாலும் 
அறவுணர்வாலும் கடந்து செல்கின்றனர் மானுடர். ஆனால் நாள் செல்லச்செல்ல 
அவ்வுறைகள் அகல்கின்றன. கடந்துசெல்லும் விழைவு மட்டுமே எஞ்சியிருக்கிறது. 
அவர்களைவிட்டு நெடுந்தொலைவுக்கு அகன்றுசென்றுவிட்ட பிறரின் முதுகில் ஒரு 
புலன் அவர்களின் இறப்புச்செய்திக்காக காத்திருக்கிறது"  இதைப்போலவே 
நாங்களும் நினைத்தோம். சின்ன அண்ணன் அழுது புலம்பி குடித்து வெறித்து பின் 
மீண்டு மறுபடியும் திருமணம் முடித்து 2 பிள்ளைகளை பெற்றது. 
பெரிய
 அண்ணன் இளைத்து பழுத்து இருதயத்தின் நோய் முற்றி இறந்து போனது. அண்ணன் 
இறக்கும் வரையில் நாங்கள் அனுபவித்த வாதைகள் சொல்ல முடியாது. இனி இன்று 
முழுவதும் இதே நினைவோடுதான்.
டி 


