மாமலர் அன்னையின் ஆயிரம் முகங்களாக விரிந்து கொண்டிருக்கிறது. மெல்ல
அது தன் வடிவைத் திரட்டி முன்வந்து கொண்டிருக்கிறது. இது வரையிலும் வந்த
அன்னையர்களைக் கொண்டே இதை ஒரு வாசிப்பு செய்யலாம். தன்னை இழிவு செய்தவனையும் ஒரு
அன்னையின் மகனாகக் காணும் திரௌபதி, தனக்கு அறம் வழுவா மைந்தன் வேண்டுமென்று அறம்
அறியாத உலகாண்மையைப் பின்பற்றி புதனைப் பெற்ற தாரை, அதையே கொழுநன் சீராகக் கொண்டு
புரூவரசைப் பெற்ற இளை, புரூவரசை ஏழு வண்ண வானவில்லாக விரித்து, பெற்று நிறைந்த
ஊர்வசி, புரூவரசின் குருதித்தாயான அந்த வேட்டுவ அன்னை என அன்னையரை இதழ்களாகக்
கொண்டு மலர்ந்து வருகிறது மாமலர்.
இந்த அத்தனை அன்னையர்களிலும் இருக்கும் ஒரு பொதுவான அம்சம் அவர்கள்
கொள்ளும் விடுதலை. உதறிச் செல்லும் நிலை. ஆண்களால் அது இயல்வதில்லை, தந்தையரால்
அது முடிவதில்லை. தாரை உதறுகிறாள், தன் கணவனின் உடலாலும், அவர் கொண்ட
தத்துவத்தாலும் அமைந்த எல்லையை அறிந்து. ஊர்வசி உதறுகிறாள், தன் கணவனின் மானுடன்
என்னும் உயிர்வடிவம் கொள்ளும் எல்லைகளை அறிந்து. தான் பெற்ற மகனின் மரணத்தையே
அமைதியுடன் ஏற்கிறாள், புரூவரசின் குருதித்தாயான அந்த மூதரசி. இவர்கள் அனைவருமே
தன்னறம் பேசுகின்றனர்.
இன்பத்திற்காகவும், அதைக் கொண்டு வரும் பொருளுக்காகவும் உதறிய தாரையின்
உதிர வழியில் தான் இவ்விரண்டின் விளைவான அறம் வருகிறது, அதுவும் ஆணாகவும்,
பெண்ணாகவும் இருக்கும் இருகருவில் இருந்து. ஆம், அறம் என்பது ஆணும், பெண்ணும்,
பொருளும், இன்பமும் கூடிப் பெற வேண்டிய ஒன்று அல்லவா. அந்த இன்பத்தையும், பொருளையும்
உதாசீனப் படுத்தியதால் தான் அந்த அறமே மரணம் வரை சென்று மீள்கிறது. மூன்று தலைமுறை
கதைகள். தத்துவமாகவும், மானுட மன வெளிப்பாடுகளகாவும் மாறி மாறி தோற்றம் காட்டும்
கதைகள். பாரிஜாதாமோ, செண்பகமோ என மயங்க வைக்கும் மாமலர்கள் கொண்ட மணங்கள்!!!
