Friday, November 2, 2018

குருதிமணம்



இனிய ஜெயம் 

நேற்றிரவு இலக்கே இன்றி சும்மா பின்னோட்டி வெண் முரசின் சிற்சில வாக்கியங்களை தேடி வாசித்தேன் . மேலிருந்து கீழாக வாசிப்பதை விடுத்து பின்னிருந்து முன்னாக ,ஒரு அத்தியாயத்தின் இறுதி பத்தி ,அதன் பிறகு அதற்க்கு முந்திய பத்தி என வாசித்தபடியே முதல் பத்திக்கு வருவது  எனது விளையாட்டுகளில் ஒன்று .கதை ஓட்டம் அறுபட்டு ,  அழுத்தமான,தொடர்பே அற்ற காட்சிப்படிமங்கள் அளிக்கும் குழம்பிய நிலையின் உவகை எனக்கு பிடிக்கும் .

1.  தேர்ச்சக்கரங்கள் அரைத்தழிக்கும் மழைக்கால நத்தைகள் போல அழிந்து கொண்டிருக்கிறார்கள் நமது மைந்தர்கள் . 

முதுகுத்தண்டை சொடுக்கும் உணர்வு கொண்ட சித்தரிப்பு . அப்படி சில சமயம் போதமின்றி  என் காலின் கீழ் நத்தை அரைபட்டிருக்கிறது. மெல்ல பாதம் உயர்த்த ,நிலத்திலும் பாதத்திலுமாக இழையும் அதன் கூழாகிப்போன உடல் கண்டு ,முதல் கணம்... அது நத்தை என உணரும் கணம் , நொறிச் எனும் ஒலியுடன் அதன் பாதுகாப்பு ஓட்டுக்குள் அது முறிந்து கூழாகும் காட்சி உள்ளே எழுந்து முதுகு தண்டை சொடுக்கி , அடி வயிற்றய் கூச வைக்கும் .  அதை பெறுக்கிப் பெருக்கி பற்களை கூச வைத்தது இந்த வர்ணனை . சினியின் கவசத்தை உயர்த்திக்காட்டும் ஜயத்ரதன் .  ஓட்டினை இழந்த நத்தை சினி .

2. முதல் நாள் போர் முடிந்த இரவு. குருஷேத்ரத்தில் உலவும் காற்றில் கலந்து வீசும் நெடியின் துர்வாசம் ,  சில சமயம் புதுக் குருதி யினுடையது ,பல சமயம் அழுகிய சீழ்ன்  வாடை . 
துரியன் பிறந்து இருக்கும் அறைக்குள் காந்தாரி துரியனுக்கு முலைப்பால் அளித்துக்கொண்டிருக்கிறாள் .இரு சேடிகளில் ஒருவள் அறைக்குள் நிறைந்து சுழலும் முலைப்பாலின் வாசம் பிடித்தபடி சொல்கிறாள் .பால் வாசனை , கிட்டத்தட்ட குருதி வாசனை .

மற்றவள் சொல்கிறாள் ஆம் குருதி வாசனைதான் அது காயின் வாசனை .இது கனியின் வாசனை .

நான் நண்பர்கள் வசம் அடிக்கடி சொல்வேன் .ஒவ்வொரு வைரமாக இணைக்கப்பட்ட ஒரு வைரங்களின் மலை .இந்த வெண்முரசு . ஒரு வைரத்தை எத்தனை துண்டுகளாக உடைத்தாலும் அத்தனை துண்டும் வைரமாகவே இருக்கும் . அதைப்போலவே இந்த வெண்முரசின் எந்த சித்திரத்தையும் எதற்கும் தொடர்பே இன்றி   முற்றிலும் தனியாக வாசித்தால் கூட அது  ஒரு துண்டு வைரம் . அந்த வைரம் வெண் முரசு எனும் வைர மலையின் ஒரு துண்டு .


கடலூர் சீனு