Friday, July 28, 2017

உலகென்னும் பெரும் கரவுக்காடு



அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

உலகென்னும் பெரும் கரவுக்காடு.  கனவின் மயக்கும் இடையிடையே உண்மைகளின் ஒளிக்கீற்றுகளும்.  கரவுக்காட்டின் புகைமூட்டத்தில் அல்லது தண்ணீருக்கு அடியில் ஆழத்தில் காட்சி போல், ஆசையால், காமத்தால், அன்பினால், பக்தியால், கனவும் நனவும் கலந்து - உண்மையில் வாழ்க்கையே இப்படித்தானே.     

அவர் போலவே நடப்பது.  அவர் போலவே பார்ப்பது.  அவர் குரலிலேயே பேசுவது.  அவர் போல் மீசை முறுக்குவது.  அவருடையதைப் போன்றே கைக்கடிகாரம் கட்டுவது.  பிறகு ரசிகன் பக்தன் என மாற, தன் செய்கை அவருக்கு செய்யும் அவமதிப்பு என்று தன் அறிவினால் உணர்ந்தோ அல்லது தகுந்த அவமானங்கள் பெற்று உணர்ந்து
"ஒழுங்கா பேசுடா.  ஏன் இப்படி குரல் மாத்தி பேசுற?"
ஒல்லியான உடல் கொண்டு மீசை மழித்து Sir.  Observer is the observed எனப் பேச, "தோ பார்டா" -அல்லது "அவரு மாதிரியே பார்த்தா ? அவரு மாதிரி கோவணம் கட்டுடா பார்க்கலாம்" - ஒவ்வொருவரும் ஒருவிதம். புறத்தை அப்படியே நடிப்பதில் என்ன ஆகும்?.  உண்மை அன்பில் திருவடி பற்ற - போதுமே - புற வேடம் ஒன்றும் தேவையில்லையே.  சம்பவன் குருவின் கால்களைப் பற்றுகிறான், அவனை அக்கலை ஆட்கொள்கிறது.

தமயந்தி தேவயானி அல்ல, அவள் தேவயானியைக் காட்டிலும் மேம்பட்டவள்.  நளனின் சூதினால் ஏற்பட்ட இழப்பை அவள் எதிர்கொள்ளும் விதம் அவ்வாறு எண்ணச் செய்கிறது.

பீமன் நல்லவன், உண்மையானவன் - உள்ளும் புறமும் ஒன்று திகழ்பவன்.  சரி.  ஆனால் அவன் மெய்ப்பொருள் உணர்ந்தவனா? - குரு என்னும் நிலைக்கு உரியவனா என்றால், அவனை அந்நிலையில் நிறுத்த - அவன் குறைகளை நீக்க எப்போதும் அனுமனை அருகே வைக்கிறீர்.  மூலவராக அனுமனை நிறுத்தி உற்சவராக பீமனை கொண்டு வருகிறீர்.  "இவன் எப்படி ஒளி ஏற்ற வலவன்?" என்றால் "இவனின் மூத்த அருட்குரங்கொன்றுளது அது நிறைவுடைத்து இவன் பால் அமைந்தார்க்கு அது ஒளி ஏற்றுகிறது" என்று அமைக்கிறீர் - என்னவொரு சாமர்த்தியம்?


விக்ரம்,
கோவை