Sunday, July 9, 2017

நீர்க்கோலம் 44 – சோதனைகளின் நாயகன்






வெண்முரசில் கனவுகள் வருவது ஒன்றும் புதிதல்ல. அதுவும் எதிர்காலத்தைக் குறித்த கனவுகள் கதாபாத்திரங்களின் ஊடாக ஓடிச்செல்வதை நாம் கண்டிருக்கிறோம். சிறந்த உதாரணம் வெண்முகில் நகரத்தில் வரும் பூரிசிரவஸ் மற்றும் சாத்யகியின் அவரவர் இறப்புகளைப் பற்றிய கனவுகள். அதே போன்றொதொரு கனவு இன்று திரௌபதிக்கு வருகிறது. “துயிலுக்குள் அவள் கரு உந்தி குருதி ஒழுகிக்கொண்டிருந்த ஒரு பெண்ணுக்கு மருத்துவம் பார்த்தாள். குழந்தை வெளிவந்து குருதியில் நனைந்த துணி எனக் கிடந்தது. அதை எடுத்துப்பார்த்தாள். அதன் விழிகள் இறந்து திறந்திருந்தன. ஓர் அசைவை உணர்ந்து அவள் திடுக்கிட்டாள். அதன் தொப்புள்கொடி நாகமென நெளிந்தது. நாகமேதான். குருதி நனைந்த நாகம் அந்தத் தொப்புளை கவ்வியிருந்தது.

இது உத்தரையின் மைந்தன் பரீட்சித்தின் பிறப்பல்லவா? அன்னையின் அரவுக் குறை (சர்ப்ப தோஷம் – மீண்டுமொரு அழகான தமிழாக்கம்) அவனுக்கும் தொப்புள் கொடி உறவாக வந்து சேர்ந்துவிட்டிருக்கிறது. முதற்கனலில் இதே அரவுக் குறை அவனது தந்தை வழியாக வந்ததாக கொடுக்கப்பட்டிருக்கும். தன் பெற்றோர்கள் இருவரிடம் இருந்தும் அவன் அதைப் பெற்றதால் தான், சோதனைகளைக் கடந்திருந்தவனாக இருத்தும் அவனை அரவே அழித்தது.  “ஆனால் குருகுலத்து மன்னர்களின் வாழ்க்கை என்பது அவர்களை நிழலெனத்தொடரும் நாகங்களுடன் அவர்கள் ஆடும் ஒரு பகடையாட்டம் மட்டுமே” என்று முதற்கனல் சொல்கிறது. உண்மையில் இவ்வரி பாரதத்தையே ஒரு வரியில் கொண்டு வந்து நிறுத்துகிறது. பகடையின் இப்புறம் தருமன் இருந்தால் அதன் மறுபுறம் கார்க்கோடகன் அல்லவா இருக்கிறான்!!

அன்புடன் அருணாச்சலம் மகராஜன்