Thursday, July 6, 2017

மொழித்திறனால் குறையும் நுண்ணுணர்வு (நீர்க்கோலம் 22)




மனிதன் அடைந்துள்ள ஆன்மீக அறிவியல் வளர்ச்சிக்கெல்லாம் காரணம் அவன் மொழியை உருவாக்கி வளர்த்து அதில் திறனடைந்ததால்தான் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. நாம் ஆய்ந்தறிந்த உண்மைகளை மொழியால் எழுதி சேமித்து வைக்கிறோம். மொழியின் மூலம் மற்றவர்களுக்கு நம் அறிவை பகிர்ந்துகொள்கிறோம். மொழி நம் சிந்தனையை எளிதாக்குகிறது. மொழி நாம் சிந்திப்பதற்கான கருவியாக அமைகிறது. நம்முடைய உணர்வுகள் எதுவாக இருந்தாலும் நாம் மற்றவருக்கு பெரும்பாலும் மொழியின் வழியே உணர்த்துகிறோம். அதே நேரத்தில் இப்படி அதிகம் நாம் மொழியைச் சார்ந்திருப்பதால் நம் கூருணர்வுகள் சிலவற்றை இழந்துவிட்டோமோ என்ற ஐயமுண்டு.

விலங்குகள் மொழியின்றியே தன் உணர்வுகளை சிறிய பாவனைகள், உடலசைவுகள், மெல்லிய ஒலிகளையெழுப்பி காட்டிகொள்கின்றன. குழுவாக வேட்டையாடும் விலங்குகள் எவ்வித மொழியையும் பயன்படுத்தாமல் வேட்டையாடும் விலங்கை தேர்வு செய்கின்றன, அதை தாக்க வியூகம் அமைக்கின்றன. பறவைகள் எவ்வித மொழியையும் பயன்படுத்தாமல் வானில் அணிவகுத்து வலசை போகின்றன. மீன் கூட்டங்கள் வினாடியில் தன் ஒட்டத்தை திசை மாற்றி பெரிய மீன்களிடம் அகப்படாமல் தப்பிக்கின்ற்ன. சிறு ச்று பூச்சிகள் ஒன்றினணைந்து தன் உருவுக்கு பல்லாயிரம் மடங்கு பெரிய கோட்டைகளை அமைத்துக்கொள்கின்றன மற்றும் சமூகமாக வாழ்கின்றன. தன் திறன்களை தன் சந்ததிக்கு எவ்வித மொழியுமின்றி காலம் காலமாக கடத்தி வருகின்றன.
ஆனால் மனிதனுக்கு எல்லாவற்றூக்கும் மொழி தேவையாக இருக்கிறது. அடிப்படை உணர்வுகளை தெரியப்படுத்தக்கூட மொழியலங்காரங்கள் தேவைப்படுகின்றன. எடுத்துக்காட்டுக்கு ஒரு காதலர் பக்கம் பக்கமாக கவிதை எழுதி மணிக்கணாகாக உரையாற்றி தான் நேசிப்பவருக்கு காதலை தெரிவிக்க வேண்டியிருக்கிறது. அப்படிச் சொல்லியும் அந்தக் காதல்மேல் முழுதுமாக ஐயம் அகல்வதில்லை. ஒரு தலைவன் சொல்வதை தொண்டன் புரிந்துகொள்வதில் தவறு ஏற்படுகிறது. எழுதிவைத்த புத்தகங்களைக்கூட ஒவ்வொருவர் ஒவ்வொரு வகையாக புரிந்துகொள்கின்றனர். மொழியில் பல்லாயிரம் வார்த்தைகள் இருந்தாலும் இருவருக்கிடையே ஒழுங்காக தகவல்கள் பரிமாறிக்கொள்ள முடியாமல் புரிதலின்மைகள் உண்டாகின்றன. ஒரு மீன் கூட்டத்தில், அல்லது பறவைக் கும்பலில், அல்லது பூச்சித் தொகையில் இப்படியான புரிதலின்மைகளை நாம் காண்பதில்லை. அவற்றுக்கிடையில் நாம் சச்சரவுகளை காண்பதில்லை.

ஒரு உயிரியின்செய்தியை, உணர்வை மற்றொரு உயிரி அறியும் அந்த நுண்ணுணர்வை நாம் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவிட்டோம் என்றே தோன்றுகிறது. ஆனாலும் சிலர் கூருணர்வை மேம்படுத்திக்கொண்டு மற்ற உயிர்களிடம் உரையாட முடியக்கூடும் என்று தோன்றுகிறது. சிலரிடம் விலங்குகள் நெருக்கமாக உணர்கின்றன, மிகுந்த நேசம் காட்டுகின்றன. இரமணர் போன்ற மகான்களிடம் விலங்குகள் நெருக்கமான தொடர்பை வைத்திருந்ததை கேள்விப்பட்டிருக்கிறோம். சில உயிரியல் ஆய்வாளர்கள் காட்டில் விலங்குகளோடு வாழ்ந்து அதன் உணர்வுகளை கண்டு வெளிப்படுத்துகிறார்கள். கூர்ந்துநோக்கி காலத்தை செலவு செய்து அவர்கள் அதனுடன் மொழியின்றி உரையாடும் திறனை அடைகிறார்கள். இப்படி மொழியின்றி உரையாடுவது ஒன்றும் புதிதல்ல. நாம் குழந்தைகளுடன் சிறு தொடுதல்கள் மூலம், முக அசைவுகள் மூலம், பொருளற்ற ஓசைகளாலும் நாம் உரையாடுகிறோம். குழந்தைகள் அதை எளிதில் புரிந்துகொண்டு நம்முடன் அதே முறையில் உரையாடுகின்றன. ஒரு நீண்ட வரிசையில் முன்னால் நிற்கும் யாரோ பெண்மணி வைத்திருக்கும் குழந்தையிடம் நான் எளிதில் இப்படி உரையாட ஆரம்பித்துவிடுவேன். கண்சிமிட்டல், முகம் திருப்பி மறைத்துக்கொள்ளல், புன்னகைத்தல் என வளர்ந்து சற்று நேரத்தில் ஒளிந்து தோன்றி விளையாட தொடங்கிவிடுவோம். காதலர்கள் பின்னர் ஆயிரம் பேச்சு பேசினாலும் முதலில் அவர்கள் பேசிக்கொள்வது தன் கண்களால்தான் அல்லவா?
வெண்முரசில் விலங்குகள் உணர்வுகளை வெளிப்படுத்தும் தகவல்களைப் பல முறை படித்திருக்கிறோம். யானைகள், குரங்குகள் போன்றவற்றுக்கு அடுத்தபடியாக குதிரைகளின் உணர்வுகள் இப்போது மொழிபெயர்க்கப்படுகின்றன. அக்கறையுடன் கூர்ந்து நோக்கும் ஒருவரால் அந்த விலங்குகள் மொழியில்லாமல் பேசுவதை அறிந்துகொள்ள முடியும். பீமன் குரங்குகளுடன் பேசத் தெரிந்தவனாக இருக்கிறான். கிருஷ்ணன் இப்படி பசுக்களுடன் பேசுபவனாக இருந்தான். நகுலன் குதிரைகளுடன் நெருங்கிப்பழகி நேசம் கொண்டிருப்பதால் அவனுக்கு குதிரைகளின் மொழி புலானாகிறது. அவற்றின் சிறு அசைவுகளை அவை எழுப்பும் சிற்றொலிகளை, அது மேற்கொள்ளும் பாவனைகளை அவனால் எளிதாக ஆய்ந்தறிந்து அவற்றின் பொருளை புரிந்துகொள்ள முடிகிறது. சுதமர் அவன் குதிரைகளோடு உரையாடக் கற்றவன் எனபதை அறிந்து அவனின் திறனை தானும் அறிந்து கொள்ள விழைகிறார்.
நீர் அறியாத ஒன்று புரவியிலிருக்கும் என தோன்றவில்லை. அப்படி ஒன்றுண்டு என்றால் புரவிகளே வந்து உம்மிடம் அவற்றை சொல்லிவிடக்கூடும். உம்மை அகற்றுவதைவிட அணுக்கமாக வைத்திருப்பதும் நீர் அறிந்தவற்றை கற்று எம்மை மேம்படுத்திக்கொள்வதுமே நன்றென்று தோன்றுகிறது.
நகுலன் அதை மீண்டும் அவருக்கு உறுதிபடுத்துகிறான்.
புரவியிடம் சொல்லியிருக்கிறேன். அது அவரை காத்து அழைத்துச்சென்று மீளும்என்றான் நகுலன். “அதனிடமே சொல்லமுடியுமா?” என்றார் சுதமர். “ஏன் உங்களிடம் சொல்லமுடிகிறதே?” என்றான் நகுலன்.

நாம் ஓர் உயிரிடம் நமக்கு இணையாக கருதி மதிப்பளித்து அதை அணுகுகையில் அதன் உணர்வுகளை, அது நமக்கு தெளிவாக அறிந்து கொள்ள முடியும். ஆனால் மனிதராக இருந்தால் கூட அலட்சியமாக அணுகினால் போதிய கவனத்தை செலுத்தாவிடாமல் விட்டால், அவர் சொல்ல வருவதை புரிந்துகொள்ள முடியாமல் போகக்கூடும்.
தண்டபாணி துரைவேல்