Sunday, November 4, 2018

அயலார் பார்வையில்



பேரன்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு

    வெண்முரசு வாசகர்களாகிய எங்களுக்கு வெண்முரசை பல கோணங்களில் அணுகுவதில் ஆர்வமும் சந்தோஷமும் உள்ளது. 

சுசித்ராவின் "காட்சி தன்மை" குறித்த பார்வையாக இருக்கட்டும், 
நாகராஜனின் "Fatal" குறித்த பார்வையாக இருக்கட்டும், அருணாச்சல மகாராஜனின் "தன்வயத் தத்துவம்" சார்ந்த பார்வையாக இருக்கட்டும் அனைத்துமே "அட ஆமால" என்று சொல்ல வைக்கிறது. வெண்முரசை வைத்து உருவாகும் இத்தகைய கட்டுரைகள் எங்கள் உள்ளத்தை உழுது பல திறப்புகளை உருவாக்குகிறது என்றால் மிகையல்ல. அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். 

  வெண்முரசின் கட்டமைப்பே, அதுவே அதை பல கோணங்களை பலர் பார்வையில் அணுகுவதாகவே உள்ளது. தத்துவ வாதிகள், அனுபவம் மிக்க முதியவர்கள், ஆற்றல் கொண்ட இளையவர்கள், உலகை விளையாட்டாக காணும் சிறுவர்கள், தங்கள் கற்பனையிலேயே உலகத்தை படைக்கும் குழந்தைகள், அன்பாலேயே ஆக்கத்தையும் அழிவையும் உருவாகும் பெண்கள் என்று பலர் வெண்முரசில் உள்ளேயே இருந்து வாழ்ந்து எங்களுக்கும் அவர்கள் அனுபவத்தை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். 

  வெண்முரசு முடிய இருக்கும் தருவாயில், அனைத்து ஆக்கங்களும் அழிந்து கொண்டிருக்கும் வேளையில் இன்னும் யாருடைய பார்வையில் எல்லாம் வெண்முரசு காட்சி படுத்த படவில்லை, இன்னும் என்னல்லாம் காட்சி படுத்தலாம் என்று ஆசிரியராகவே நடித்து வாசகர்களாகிய நாங்கள் விளையாடிக்கொண்டிருக்கிறோம் . அப்படி உருவானது தான் "பிறந்தநாள் கொண்டாட்டம்" பற்றிய என் கேள்வியும், கடலூர் சீனுவின் "போர்க்களத்தில் இறந்த யானையை அப்புறப்படுத்துதல்" போன்ற கேள்விகளும். 

 இன்றும் அப்படி ஒரு கேள்வியே! 
இன்றைய திசை தேர் வெள்ளத்தின் - 55 இல்  "ஆடிகளைக் கழற்றி பேழைக்குள் வைக்கும் பீதனைப் பார்த்தபடி சஞ்சயன் அசையாமல் நின்றான்"  என்ற வரியை பார்த்ததும் தோன்றியது.

பீதர்கள், யவனர்கள், காப்பிரிக்கர்கள் போன்ற பாரத தேசத்தில் வராத வெளி தேசத்தை சேர்ந்தவர்களின் பார்வையில் இந்த போர்கள் என்ன அர்த்தத்தில் பதிவாகி இருக்கும். மஹாபாரதம் சார்ந்த பதிவுகள் வேறு தேசத்தில் உள்ளதா?  தொழிநுட்பம் சார்ந்த பொருளை விற்பதர்கோ, இயக்குவதற்கோ வந்த இந்த "பீதரின்" பார்வையில் வெண்முரசு காட்சி படுத்த படுமா?. 

உலகமயமாக்கப்பட்ட சூழலில் நவீன எழுத்தில் ஒருதேசத்தை பற்றிய இன்னொரு தேசத்தரின் பார்வையை பதிவு செய்வது  மிக முக்கியமாகவே எனக்கு படுகிறது. மூல மஹாபாரதத்தை நவீன நடையில் எழுதுவதற்கு தாங்களே உருவாக்கி கடைப்பிடித்து கொண்டிருக்கும் வரையறைக்குள்ளும், ஒழுங்குக்குள்ளும் "பிற தேசத்தவரின் பார்வை" யும் கொண்டு வர முடியுமென்றால் உங்கள் எழுத்தில் வெண்முரசில் அதை காணவேண்டும் என்பது என் ஆசை.



பாண்டியன் சதீஷ்குமார் 
கொரியா