Tuesday, March 26, 2019

கார்கடல் முடிவு



அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

கார்க்கடல் வேகமாக சென்றது, ஆனால் என்னால் வேகமாக வாசித்துச் செல்ல முடியவில்லை.  அவ்வளவு இருக்கிறது நின்று நோக்கி பல கோணங்கள் கண்டு ரசித்து உய்த்து உணர்ந்து செல்ல.  ஒரு கலைவடிவில் மற்றொரு கலையின் விளைவைக்  கொண்டு வர முடியுமா? இங்கு எழுத்தில் நடனம் இருந்தது இசை விளைந்தது இருட்குகைகளின் அற்புத ஓவியங்கள் விண்ணில் எழுந்தன.  விழி நோக்காது விலகுக என்று தோன்றச் செய்யும் மதுரை அக்கினி வீரபத்திரன் போல் விழிகொண்ட சிற்பங்கள் எழுந்தன.  கொலை வெறி, பேரன்பு, ஒருவர் மற்றவர் ஆதல், பெருவிசையுடன் ஊழிமுதல்வன் நடனம் ஒட்டுமொத்த பொருளின்மையை பேரருள் என்று காட்டிய கூத்து.  இரவு பைட் சீன் தொடங்கியவுடன் என் வாசிப்பு வேகத்தைக் குறைத்துக் கொண்டேன்.  சாப்பிடுவதை ரசித்து ருசித்து சாப்பிட வேண்டும்.  அவசரமாக தின்று செல்ல விருப்பம் இல்லை. 

போர் என்றால் எல்லோருக்குமே தோல்விதான் என்ற பொதுக்கருத்து இங்கு இல்லை.  இந்த போரில் ஒருவகையில் எல்லோருக்குமே வெற்றிதான்.  நம் பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை என்பதில்...இல்லை என் இறப்பு என் கையில்தான் இருக்கிறது என்றே இங்கு இறந்த ஒவ்வொருவனும் எடுத்துக் கொண்டவன்.  வேற்றுகிரகவாசி போல நடுவே இளையயாதவன்.  இங்குதான் இருக்கிறான் ஆனால் அவன் வேறு.  அகங்காரம் எங்கே செல்லவே செல்லாதோ அங்கு முழுவீச்சுடன் அதையே கொண்டு அதன் உச்சத்தில் ...வீசித்தான் எறிந்து கொள்வோமே? இந்த புத்தன்கள் ஊழ்க சாமிகள் ஏதேனும் சொல்வார்கள் ..எவ்வாறோ தவிக்கும் உள்ளங்கள் அறிந்துதானே இந்த மாடு மேய்க்கும் பையன் அவர்களை இங்கு ஒட்டி வந்தான்?  "உன்னிடம் இருப்பதைக் கொண்டே வா.  மற்றவை நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று ரகசியத் தகவல் ஒவ்வொருவருக்கும் தந்திருப்பான் இல்லயா திருடன் ! 

துச்சாதனன் மகனின் சாவில் புத்திர சோகத்தில் அழ .....மற்றவர்கள் கடோதத்கஜன் சாவில் கொஞ்சம் சந்தோஷம் கொண்டு ரிலாக்ஸ் செய்கிறோம்.  உங்கள் துக்கம் உங்களுக்கே என்று தந்துவிடுகிறார்கள்.  பொது உணர்வில் தனிப்பட்ட ஒன்றின் மதிப்பின்மை.   அந்த முரண்.  ரொம்ப  ஆர்ப்பாட்டம் செய்தால்... நீ மட்டுமா இழந்தாய் நாங்களும்தான் ..சுயநலவாதி ...அப்பாடா உனக்கும் ஆகிவிட்டதா மகிழ்ச்சி ...ஆ அது நியாயம் என்று ஆகும் ....எத்தனை மடிப்புகள்?

எல்லோரும் உறக்கத்தில் விழுகிறார்கள்.  பிணங்களுக்கு இடையே படுத்துக் கொள்கிறார்கள்.  "சரி சரி .....எந்திரிச்சப்புறம் பாத்துக்கலாம்" ஆணவத்தின் ப்ளக்கைப் பிடுங்கி உறங்கப் போடும் உடல்.  

.....எதிரில் இளைய யாதவனைக் காண்பது பின் தன்னை இளைய யாதவனாக உணர்வது.  பேருருக் கொண்ட இளைய யாதவன் அவனே அவனுடன் போரிடுவது.

இழை பின்னல் ...நீலம் ...குழல் இசை.  அசுரர், நாகர், ஷத்ரியர் கொண்ட வேதங்களை இணைத்து ஒன்றாக்கி நெய்தல் ..........இந்த இசை அரிது ....இங்கு அவன் காட்டப்படுவது ....இங்கு அவன் இசை என உருக்கொள்வது...என் உணர்வை சொல்லாக்க முடியாதுதான்........விலங்குகளின், இயற்கையின் சப்தங்களை.....சப்தங்களை அவன் இசை ஆக்குகிறானே? மானுடப் பொதுமை என்று ...உயிர்ப் பொதுமை என்று  இழுக்கிறானே !    கீதை! ....வேதங்களை, வழிமுறைகளை, சடங்குகளை, பயிற்சிகளை, தத்துவங்களை .பாடலாக்குவது ஒரு கடைஞ்செடுத்த உத்தமனால் மட்டுமே இயல்வது.       

வெண்முரசு தமிழ் மொழிக்கு அருளப்பட்ட வரம்.   இனிவரும் நூறாண்டுகள் தமிழ் பண்பாட்டை, அதன் திசையை தீர்மானிக்கும் விதைகள் இதில் உள்ளது.  அவை பெரும் விருட்சங்களை உருவாக்கப் போகின்றன.  அதன் பொருட்டே வெண்முரசு தொழுவோரால் தொழப்படவும் அஞ்சுவோரால் அஞ்சப்படவும் செய்படுகிறது.
   
வெண்முரசு எழுதும் கலைமகளின் முன் சொல்லடுப்பது  கடிதங்கள் எழுதுவது என்பதெல்லாம் ஏற்கனவே மழலையாக குழறலாக உளறலாக தெளிவாக நேர்த்தியாக எவ்வகையிலும் வெளிப்படும் உரிமை கொண்ட குழந்தைகள் என்று கொண்ட துணிவினால் மட்டுமே.      

அன்புடன்,
விக்ரம்,
கோவை.