Thursday, March 14, 2019

அம்புகள் சொன்னவை



இனிய ஜெயம் 

என்னை முற்றிலும் தோற்கடித்து முன் சென்றுகொண்டிருக்கிறது கார்கடல். பொதுவாக இலக்கியம் அளிக்கும் நிலைகுலைவை மீட்டுக்கொள்ள நாம் பிரயத்தனப் படும் காலம் இருக்கறதே,அது ஒரு வகையில் நரக வேதனை. அமுதம் அருந்தி சாக வரம் பெற்று, நரகத்தில் உழல்வதைப் போன்றது. 

கர்ணனின் அம்பு பட்டு அர்ஜுனன் விழுந்த பிறகு,அர்ஜுனனை குறி வைக்கும் அடுத்த அம்பின் முன்,நீலன் கைகளை விரித்து தன்னை ஒப்புக் கொடுத்து நிற்கும் கணம் முன்பு  உள்ளே உடைந்தவன்தான் இன்னும் மீளவே இல்லை. அடுத்தடுத்த நாட்கள், அடுத்தடுத்த சித்ரிரங்கள், எதுவுமே உணர்வாக மாறும் முன் கணம், கைகளை விரித்து நிற்கும் நீலன் சித்திரம் அகத்தில் எழுந்து, இப்போதைய ஒன்றை சிதறடித்து விடும். 

ஏண்டா டேய் என்று மனம் இக்கணமும் உள்ளுக்குள் அரற்றுகிறது. இதற்க்கு மேல் இந்த அந்தரங்க உணர்வை பகுத்து நோக்கும் சொற்களுக்குள் செல்வது ஆபாசம். சொந்த ஊரிலிருந்து திரும்ப வந்து கொண்டிருக்கிறேன். இன்றைய அத்யாயத்தை சொகுசுப் பேருந்தின் படுக்கையில்,இருளுக்குள் வாசித்தேன்.

//துரோணரின் அம்புகள் அவனிடம் நீ நீ நீ என்று சொல்லிச் சென்றன. நீ என் மைந்தன். நீ என் மாணவன். நீ என் இனியன். நீ எனக்கு அணுக்கன். அவன் அந்த அம்புகளுக்கு நிகர் நின்றான். அணுவிடையும் குன்றாதிருந்தான். ஆனால் அவற்றின்முன் அவன் தோற்றுக்கொண்டும் இருந்தான்.//

இந்த வரிகளை வாசித்த கணம் உடைந்து அழுது விட்டேன்.கண்ணீர் என் கட்டுப்பாட்டை விடுத்து அதன் போக்கில் வழிந்து கொண்டிருந்தது.

நெருப்பின் நிழலில் நிர்ப்பவனுக்கு மா  மழைதானே ஒரே கனவாக இருக்க இயலும். 

மீளவேண்டி, ஊர் வந்து சேரும் வரை மீள மீள பீம் சென் ஜோஷியில் நனைந்தேன். இசைக்கொரு தேவனின் குரலில் மழைக்கொரு ராகம்.