Tuesday, March 26, 2019

அந்த இறுதி அம்பு



அன்புள்ள ஜெயமோகன் சார்,

கார்கடலின் 85ம் அத்தியாயம்  ஒரு மகனிடம் தந்தையின் இறப்பை கூறுவது. அஸ்வத்தாமனுக்கு தந்தை இறந்தது  கிருபர் வந்த உடனே புரிகிறது. திருஷ்டத்யும்னன்  தனது தந்தையை தலையை அறுத்து எடுத்தான் என கேட்டு அவன் உடலில் மெல்லிய அசைவொன்று நிகழ்கிறது. தர்மர் தான் இறந்துவிட்டதாய் துரோணரிடம் கூறினாரா? என அவனே கேட்கிறான். அனைவரும் தர்மரா? தர்மரா? என திகைக்கும்போது அவனுக்கு எப்படி தர்மர் கூறுவார் என தெரியும்?  தனது தந்தையை வீழ்த்திய அம்பின் பெயர் என்ன ? என்று கிருபரிடம் அஸ்வத்தாமன் கேட்க "ஸ்வம் 'என்று அழைக்கப்படுகிறது. மிகச் சிறிய அம்பாக ஒரு வீரனுக்கு கிடைக்கும் என்கிறார்கள். ஒரு சிறு புழு வடிவில், அல்லது ஒரு துரும்பு அளவிற்கு. அதை முதலில் பார்க்கையில் பேரழகு கொண்டிருக்கும். காலையொளியில் வைரம்போல் சுடர்விடும். சுட்டுவிரலால் அதை தொட்டெடுத்தால் நறுமணம் கொண்டிருக்கும். அதை தன் ஆவநாழிக்குள் அவன் வைத்துக்கொள்ள வேண்டும். அது எப்போதும் அங்கிருக்கும்...என கிருபர் கூற எனது ஸ்வம் [இயற்கையானது, தன்னுடையது , மாயை கலப்பிலாத தான், சொத்து என்றெல்லாம் அர்த்தம் இருக்கிறது. ஒருவேளை சொத்தை மட்டும் தானாக கொண்டிருக்கும் துரோணரின் இயற்கையா?  என்ன ? என மனது ஏங்கியது. அது நமக்கு தெரிந்தால் போராட ஈஸியாக இருக்கும் இல்லையா? ..ஆனால் அது எதிரிக்குத்தான் அல்லது நம்மோடு இடைவிடாது புழக்கத்தில் இருப்பவர்களுக்குதான் தெரியுமா?  நமக்கு தெரிந்தால் பிரச்சனையே இல்லை ...இல்லை தெரிந்தும் அதை மூடி வைத்து இருக்கிறோமா?  

கிருபர் "அம்பறாத்தூணிக்குள் அறியாது வளர்கிறது. ஆவநாழியிலிருந்து எழும் ஒவ்வொரு அம்பையும் அது நோக்கிக்கொண்டிருக்கிறது. வெல்லும் அம்புகளில் துள்ளுகிறது. வீழும் அம்புகளில் துவள்கிறது. ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னரும் இருமடங்கு வளர்கிறது. ஒவ்வொரு தோல்விக்குப் பின்னரும் மும்மடங்கு வளர்கிறது. தொடும்போது நூறு மடங்காகிறது. எடுக்கையில் ஆயிரம் மடங்கு. ஏவுகையில் பல்லாயிரம் மடங்கு. அது வெற்புகளை உடைத்தழிக்கும் ஆற்றல் கொண்டது. பெருங்கடல்களை அனலாக்கும் நஞ்சு கொண்டது. அத்தனை தெய்வங்களும் அஞ்சும் பேராற்றல் கொண்டது.” என விரித்துகூற.. என்னது ? என்னது என்றே மனம் தேடுகிறது. ஒவ்வொரு தகப்பனும் தனது மகனுக்கு அவன் இயல்புக்கு தக்கபடியோ இல்லை தனது இயல்புக்கு தக்கபடியோ ஒரு ரகசிய அஸ்திரத்தை கொடுப்பார்கள் என்றே நினைக்கிறேன். இல்லை என்றால் இந்த சிறிய பூமியில் புழு போல் நாம் முட்டி மோதுவது ஏன்?

பழிவாங்க துடிக்கும் அஸ்வத்தாமனிடம் "பெரும்பழி ஈட்டி அதற்கு ஈடுசெய்ய ஒண்ணாமல் புவியில் நீடுவாழியாவது… வேண்டாம், மைந்தா என தனது மருமகனை பார்த்து கிருபர் கூற "எந்தைக்கு நான் ஆற்றும் கடன் அதுவென்றால் அது எனக்கு உகந்ததே… மாதுலரே, இங்கு வாழ்ந்த மைந்தர்களில் தந்தைக்கு எண்ணித்தொடமுடியா பெருங்கொடை அளித்தவன் நான் என்றே ஆகுக!”   என்கிறான். திகைக்க வைக்கும் தருணம். இந்த பூமியில் கோடிக்கணக்கான உயிர்கள் எப்படி ? ஏன்? பிறந்து உதிர்கின்றது என்பதற்கு தத்துவமான ஒரு விடை. 

ஸ்டீபன் ராஜ் குலசேகரன்