Friday, March 15, 2019

சிம்புகள்



அன்புள்ள ஜெமோ,

"தேர்கள் சிம்புகளாகத்தெறித்தன".
முதன்முறையாக இந்தச்சொல்லை நான் கேள்விப்படுகிறேன்.
சிறு துகள்கள் எனும் பொருளில் பயன்படுத்தியிருக்கிறீர்கள்.
எலும்புச்சிம்புகள் என்னும் பொருளில் இந்தக்கட்டுரையிலிருக்கிறது --> https://www.cochranelibrary.com/cdsr/doi/10.1002/14651858.CD004020.pub3/full/ta
நீங்கள் இந்தச்சொல்லுக்கு வந்தடைந்த முறை என்ன என்று அறிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன்.

அன்புடன்,
வா.ப.ஜெய்கணேஷ்.

அன்புள்ள ஜெய்கணேஷ்

இதெல்லாம் பார்த்து எழுதுவதில்லை. சொல்நினைவு என்பது ஓர் அகக்களஞ்சியம். நீங்கள் கேட்டபின் பார்த்தேன். வையாபுரிப்பிள்ளை பேரகராதியில் சிம்பு என்ற சொல்லுக்கு ஒரு பெரிய மரக்கட்டை அல்லது உலோகப்பரப்பிலிருந்து உடைந்த கீற்றுத்துண்டுகள் என்ற பொருள் அளிக்கப்பட்டுள்ளது. 

சிம்பு- சிதம்பு. small splinter of fibre rising on a  smooth surface of wood or metal. சிராய் செதும்பு என்ற மாற்றுச் சொற்களும் அளிக்கப்பட்டுள்ளன. ‘சிம்பறத் திரண்ட காம்பு’ என சீவக சிந்தாமணி சொல்கிறது. ஆகவே மிகப்பழைமையான சொல்தான்

ஜெ