Friday, March 22, 2019

இமைக்கணத்தில்...



அன்புள்ள ஜெயமோகன் சார்,

இமைக்கணம் 4ம் அத்தியாயத்தில் போர்தான் என முடிவானவு'டன் இளையயாதவர் நான் தனியாய் இருக்கவேண்டும், படை எல்லாம் ரெடி ஆனபின் வருகிறேன் என கூற,சௌனகர் ஏன் செல்கிறீர்கள்? என கேட்க "அறிந்தவை எண்ணியவை உணர்ந்தவை அனைத்தையும் ஒற்றைப்புள்ளியில் திரட்டிக்கொள்ளவேண்டிய நிலையில் உள்ளேன். நானன்றி பிறிதெவரும் இன்றி அமையும் ஓர் இடம் தேவை”  என கூறுகிறார். பிறகு இளைய யாதவர். “நான் உடனின்றி நீங்கள் செல்வதை எண்ணி துயருறுகிறேன்” என்றான் சாத்யகி. “எவரும் உடனிருக்காத தருணங்கள் மானுடருக்குத் தேவை” என்று அவன் தோளில் கைவைத்து இளைய யாதவர் புன்னகைத்தார் .பிறகு நைமிஷாரண்யத்துக்குள் சென்றுவிடுகிறார். ஜெயமோகன் சார் இதை வாசித்துக்கொண்டு இருக்கும்போது நான் பைபிளை வாசித்து கொண்டிருக்கேன் என்றே நினைத்தேன். திருவிவிலியத்தில் மத்தேயு நற்செய்தியில் " இயேசு சீடர்களுடன் கெத்சமனி என்னும் இடத்திற்கு வந்தார். அவர், “நான் அங்கே போய் இறைவனிடம் வேண்டும்வரை இங்கே அமர்ந்திருங்கள்” என்று அவர்களிடம் கூறி,பேதுருவையும் செபதேயுவின் மக்கள் இருவரையும் தம்முடன் கூட்டிச் சென்றார். அப்போது அவர் துயரமும் மனக்கலக்கமும் அடையத் தொடங்கினார்.அவர், “எனது உள்ளம் சாவு வருமளவுக்கு ஆழ்துயரம் கொண்டுள்ளது. நீங்கள் என்னோடு இங்கேயே தங்கி விழித்திருங்கள்” என்று அவர்களிடம் கூறினார் என்றும் " பிறகு அவர் சற்று அப்பால் சென்று முகங்குப்புற விழுந்து, “என் தந்தையே, முடிந்தால் இத்துன்பக் கிண்ணம் என்னை விட்டு அகலட்டும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல, உம் விருப்பப் படியே நிகழட்டும் “என்று கூறி இறைவனிடம் வேண்டினார் என்றும் எழுதபட்டிருக்கிறது. 


நைமிஷாரண்யத்தில் வைத்து தான் இரண்டு வழிகளில் எது? என தடுமாறி கொண்டு இருக்கும் கர்ணன், பீஷ்மர், முதலியோர் அவரிடம் வந்து தங்களின் வழிகளை கண்டடைந்து செல்கின்றனர். அவர்களை நினைத்து கொள்வதன் மூலம் தன்னை தொகுத்துகொள்கிறார் இளைய யாதவர் என நினைக்கிறேன். குருஷேத்ரத்தில் மலை, அரக்க , நாக முதலிய எல்லா வேதங்களும் இருக்கவேண்டும் என அங்குதான் முடிவெடுத்து இருப்பார் என நினைக்கிறேன். இதேபோல்தான் கிறிஸ்துவும் அவரின் குணத்திற்கு ஏற்ப கதறுகிறார்.ஆனால் இமைக்கணத்தில் ஒரு ஞானி தன்னை ஒற்றை சொல்லில் தொகுத்துகொள்வதை விலாவாரியாக விளக்கி இருக்கிறது. ஏன் பைபிளில் இது எல்லாம் இல்லை? இந்த கேள்வி வெறியோடுதான் ஐரோப்பிய அறிஞர்கள் இந்திய மெய்யியலை வாசித்து தங்களை தொகுத்துகொண்டிருப்பர்கள் போலும். 

ஸ்டீபன் ராஜ் குலசேகரன்