Sunday, June 2, 2019

சல்யர் கர்ணனை கைவிட்டாரா?


 

நேற்று கடலூர் சீனு அவர்கள் விருஷசேனன் குறித்த பதிவில் "கர்ணனின் வாழ்நாளில் அவன் அனுபவித்த கைவிடப்படல்களிலேயே ஆகச் சிறந்த ஒன்றை தந்தை வசமிருத்து பெற்றிருக்கிறான்." என்கிறார். நாவல் அப்படிச் சொல்லவில்லை.

 

கர்ணன் இதுவரையிலும் யாரிடமும் எதையுமே கோரியதில்லை. தன் மரணத்துக்குப் பிறகு தன்னை மைந்தன் என அறிவிக்க வேண்டும் என்பதை குந்தியிடம் அர்ஜுனனுக்கு எதிராக நாக வாளியை ஒரு முறைக்கு மேல் எய்வதில்லை என வாக்களித்ததற்கு பதிலாக கோரியதாக நாம் பொதுவாக அறிந்த கதையைக் கூட வெண்முரசு தவிர்த்தே சென்றிருக்கிறது. ஏனெனில் ஒன்றுக்கு பதிலாக இன்னொன்றைக் கோருவது அவன் இயல்பு அன்று. இருப்பினும் அவன் சல்யரிடம் தன்னை வாழ்த்திச் செல்லும்படி கோருகிறான். ஏன்? இவ்வுலகில் ஒரு மைந்தனாக ஒருவன் எதிர்பார்ப்பது தந்தையின் வாழ்த்துக்கள் ஒன்றை மட்டும் தான். வாழ்நாளில் தன் குருதித் தந்தையை இதுவரையிலும், இனிமேலும் காணப் போவதில்லை என்ற நிலையில் அவன் வேறு என்ன விளைந்திருக்க இயலும், வாழ்த்துக்களைத் தவிர. அத்தருணத்தில் சல்யர் வாழ்த்தாமல் செல்வதை அவனை அவர் கைவிட்டார் எனக் கூறலாமா? அப்படியென்றால் இதுவரையிலும் அவன் உயிருடன் இருக்க ஒவ்வொரு வாசலாக தேடித் தேடி முட்டி அலைந்ததெல்லாம் வீண் என்றும், வெற்று ஆணவம் என்றும் ஆகி விடாதா? அவ்வளவு சிறுமையாளரா அவர். அவரது சிறுமை என்பது அவராகச் சூடிக் கொண்ட தோற்றம். இதை மிகத் தெளிவாகவே சகுனியின் கூற்றாக நாவல் காட்டிவிடுகிறது.

 

அப்படி எனில் அவர் என் வாழ்த்தாமல் திரும்பிச் சென்றார்? மீண்டும் அத்தருணத்தை நாவல் எவ்வாறு காட்டுகிறது எனக் காண்போம். 'கர்ணன் "வாழ்த்திச் செல்க மத்ரரே!" என்றான். சல்யர் நின்று திரும்பி அவனை பார்த்தார். உள்ளிருந்து எழும் ஒரு சொல் அவர் முகத்தை உருகச் செய்தது. உடலெங்கும் அது தவிப்பென வெளிப்பட்டது. ஆயினும் அதைக் கூறாமல் நடந்து படையின் பின்புறம் நோக்கிச் சென்றார்' என்கிறது நாவல்.

 

அது என்ன சொல்? "நீள்புகழ் கொள்க!!" என்பதாகத் தான் இருக்கும். தன் மைந்தன் வாழவேண்டும் எனத் தவிக்கும் ஒரு தந்தையின் மனதில் இயல்பாக வந்த வாழ்த்து "நீடூழி வாழ்க" என்பதாக அல்லாமல் "நீள்புகழ் கொள்க" என்பதாக இருப்பதால் மட்டுமே, தன் ஆழம் அவனை எவ்வாறு வனைந்து வைத்துள்ளது என்பதை உணர்ந்ததால் மட்டுமே அவர் முகம் உருகுகிறது. முதன் முதல் கேட்கும் வாழ்த்தில் கூட அவனை வாழும் படி வாழ்த்த இயலவில்லையே என்பதே அவர் உடலில் தவிப்பென வெளிப்படுகிறது. எனவே தான் அவரால் வாழ்த்த இயலவில்லை. எந்த தந்தையும் தன் மைந்தனை எப்போதுமே கைவிட மாட்டான். சல்யரும் கைவிடவில்லை. சல்ய பருவம் அதற்கு பதிலிறுக்கும்.

 

அன்புடன்,

அருணாச்சலம் மகராஜன்