Friday, June 21, 2019

கர்ணன்



அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

கண்ணீரைத் தவிர்க்க முடியாமல் இருட்கனியின் இறுதி அத்தியாயத்தைக் கடந்தேன்.  என்றுமுள்ள கர்ணனை நோக்கி முகம் மலர்ந்து நிற்கும் துரியோதனன், இறந்துவிட்ட கர்ணன் என்று தானும் இறந்துவிட்டவளாக சிதையேரும் விருஷாலி.  அவள் உயிர் காக்கப்பட வேண்டும் என்று இரக்கம் கொண்டு பின் அதனினும் மிக்க ஒன்று கண்டு நிலை மாற்றிக்கொள்ளும் சுப்ரதர்.  உடன்கட்டை ஏறும் அரசநாகம்.  வழியும் குருதி.

அர்ஜுனனுக்கு கண்ணன் போல, அந்த அளவிற்கு இல்லாவிட்டலும், கர்ணனுக்கு யாருமில்லையே என்ற எண்ணமிருந்தது.  அஸ்வத்தாமன் கர்ணணின் உடலில் ஊழ்க அமைவு அமைக்க முடியாது போவது, பெருவள்ளல் கர்ணன் என்றபோதும் அவனுக்கு அது தேவையில்லை, அவன் கொடுப்பவன் அப்படித்தான் என்று சமாதானம் கொண்டாலும் அது ஒரு குறை என்றே உறுத்திக்கொண்டிருந்தது.  அருள் பெருங்கருணை என்று பரசுராமரை கொண்டுவந்துவிட்டீர்கள்.

இன்னொன்று - தெய்வங்களுக்கு உத்தரவிடும் வாள் என்னும் அதர்வம் அல்ல.  மெய்யாசிரியரின் பெருங்கருணை செவிமடுத்தாக வேண்டும் தெய்வங்கள்.

அன்புடன்,
விக்ரம்,
கோவை.