Tuesday, June 11, 2019

சல்யர்





ஜெ,

சல்யர் கர்ணனின் குருதித்தந்தையாக இருக்கலாமென்ற ஊகம் முன்னரே வந்துவிட்டது. பூடகமாகவே வந்து கொஞ்சம் கொஞ்சமாகத் தெளிவடைந்தது. அப்போது எனக்கு கொஞ்சம் ஒவ்வாமை இருந்தது. ஆனால் இப்போது இதுவே சரியான விளக்கம் என்ற எண்ணம் ஏற்படுகிறது. இல்லாவிட்டால் பல கேள்விகள். சகாதேவனுக்கும் நகுலனுக்கும் மாமனான அவர் ஏன் துரியோதனன் பக்கம் சேர்ந்தார்? மகாபாரதக்கதையின்படி வெறும் விருந்து கொடுத்ததற்காக இந்தப்பக்கம் வந்தார்.

சரி, ஏன் அவர் கர்ணனை நிந்தித்தார்? மகாபாரதக்கதையின்படி அவரிடம் அப்படி நிந்திக்கும்படி யுதிஷ்டிரர் கோரினார். இவ்விரண்டும் அப்படியே எடுத்துக்கொண்டால் அவர் ஓர் அற்பர். சொன்ன சொல்லுக்கு துரோகம் செய்பவர். இரண்டகம்செய்யும் ஆள். அவரை ஏன் அத்தனைபெரிய தளபதியாக ஆக்கினார்கள்? அவர் கர்ணனை போர்க்களத்தில் கைவிட்டார். அப்படிப்பட்டவரை அடுத்தநாள் முழுப்படைக்கும் தலைவராக ஏன் ஆக்கினார்கள்? எந்த விளக்கமும் இல்லை.

இந்தமாதிரி ஒரு உட்கதை மட்டுமே சல்யரை தெளிவாகக் காட்டும். இதைப்போல ஏதோ இருந்து காலத்தில் விட்டுப்போனதாகவே இருக்கும் என நினைக்கிறேன். இப்போது சல்யரின் குணச்சித்திரம் ஓங்கி தெரிகிறது. அவர் அடுத்தநாள் படைத்தலைமை ஏற்று தன் மருமகன்கள் உட்பட அனைவரையும் கொல்வதாகச் சபதம் ஏற்பதும் பொருத்தமாக அமைகிறது

இத்தகைய உறவுகளெல்லாம் சாத்தியமா என்றால் நியோகம், களவொழுக்கம் போன்றவை சாதாரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு சமூகத்தில் இது இயல்பானதுதான் என தோன்றுகிறது. அங்கே அன்னையின் கருப்பை தூய்மையானதாகவே கருதப்பட்டது. அது வெண்முரசிலேயே மிகமிக விரிவாக வந்துவிட்டது..

சாரங்கன்