Thursday, June 13, 2019

அனலில்



அன்புள்ள ஜெயமோகன் சார்,                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        சென்னையே அனலில் எரிந்து கொண்டிருக்கும்போது குருஷேத்ரமும் எரிகிறது.இறந்து போன ஒருவரை  பிஸ்லெரி வாட்டரில் குளிப்பாட்டி என்னை அதிர்ச்சி அடைய வைப்பதும் நடந்து கொண்டிருக்கிறது.குருஷேத்ரத்தில் எரியும் நெருப்பில் இருந்து ஜாதவேதன், வஹ்னி, க்ரவ்யாதன், ருத்ரன்,திரிகாலன் [ இந்த பருவத்தில் இந்த பெயர்களை படிக்கும்போது பீதி கிளம்புகிறது] என்று ஐந்து அனலோன்கள் தோன்றி குருஷேத்ரத்தை அழித்து தூய்மை செய்கிறார்கள்.கர்ணனின் பொன்னால் செய்யப்பட்ட தேர் உருகி, அதன் பொன் பிலத்துக்குள் சென்றுவிட்டது. ஆனால் கிருதவர்மன் சிவ நடனம் போல் ஆடி ஆர்ப்பரிக்கிறான்.  முதலில் குருஷேத்திரத்தை எரிக்க மங்கலம் ஓத வேதம் அறிந்தவர்களை தேட  ஒரு வேளாப்பார்ப்பன் [ வேளாப்பார்ப்பன் என்றால் யார் ? என்று இனிதான் தேட வேண்டும் ] அமிர்தன் வந்து நிற்க, அவனை கூர்ந்து நோக்கி “தாங்கள் என்ன வேதம், உத்தமரே?” என சாத்யக கேட்க , . “அதர்வம்” என்று  கூறி,ஆனால் நால்வேதங்களும் எங்களுக்குரியவையே " என்கிறான் அமிர்தன்.                       " அதர்வவேதம் " என்று அமிர்தன் கூறியவுடன் படக்கென திறந்து கொண்டது . அர்ஜுனன் துருபதனை அவமானபடுத்த, துருபதன் அவமானத்தின் வெம்மை தாளாமல்   குரு வம்சத்தை அழிக்க அதர்வ வேதம் அறிந்தவர்களை கொண்டு நடத்திய யாகத்தில் தோன்றியவள் பாஞ்சாலி . இங்கு குருஷேத்ரத்தை எரிக்க அதர்வவேதம் தான் கடைசியாக ஒலிக்கிறது.      
 [ ஆக்கமும் அழிவும் ,முதலும் கடைசியும் அதர்வம் தான் என்றால் மிஞ்சுவது என்ன ?  அதுதான் அடுத்த கட்ட மனித குல மனம் என்று நினைக்கிறேன் ]                                                                                                                                                                                                                                                                                                                                 
பிரயாகை 92ம் அத்தியாத்தில்  பாஞ்சாலி திருமணம் முடிந்து கன்னியாய் உக்கிரசண்டிகை பூஜைக்கு  செல்லும் போது அவளிடம் அமைச்சர்  “தேவி, இப்பூசனைப்பொருட்களை உக்ரசண்டிகைக்குப் படைத்து வழிபடுங்கள். ஐந்து பருக்களும் அன்னையின் அடிப்பொடியே ஆகுக. கொல்வேல் தொல்பாவை வாழ்த்துடன் மீளுங்கள். ஒன்று நினைவுகூர்க. இச்சுடர் இங்கிருந்து அன்னையின் ஆலயம் செல்வது வரை அணையலாகாது. மீண்டும் இதை கொளுத்திக்கொள்ளும் எப்பொருளும் தங்களுக்கோ தோழிக்கோ அளிக்கப்படாது. இச்சுடரைக் கொண்டு அன்னையின் ஆலயவிளக்குகளை ஏற்றுங்கள். அவ்விளக்கிலிருந்து மீண்டும் ஒரு சுடர்பொருத்திக்கொண்டு மீளுங்கள்” என்கிறார். 

ஆனால் பாஞ்சாலி தனது ஆடைகளை கழட்டிவிட்டு அந்த விளக்கின் நெருப்பு மூலம் காட்டுக்கே தீ வைக்கிறாள். காடே பற்றியெரிய,  "நெருப்பு நாய்க்குட்டிகளென வந்து பாஞ்சாலியின் தோழி மாயையின் காலை முத்தமிடுகிறது. மாயை துள்ளி விலகி ஓடி பாறைமேல் ஏறிக்கொள்ள உவகைகொண்ட நாய்க்குட்டிகள்   [ காலபைரவர்கள் தானா? ]துள்ளிக்குதித்து துரத்திவருகின்றன. அவள் ஓடிச்சென்று பாறைப்பரப்பில் ஏறிக்கொள்கிறாள்".  குருஷேத்திரத்தில் கிருதவர்மன் அதர்வ வேதம் முழங்க வைக்கும் தீக்கு முளை அதர்வ வேதம் முழங்க நடந்த யாகத்தில் தோன்றிய பாஞ்சாலி வைத்த தீதான்.                                

பாஞ்சாலி உக்கிரசண்டிகையை வழிபட்டுவிட்டு அந்த ஆலயத்தின் விளக்கில் இருந்து சுடர் பொருத்திக்கொண்டு வந்தாளா ? அந்த சுடர் என்ன ?                            

 ஸ்டீபன் ராஜ் குலசேகரன் .