Monday, March 14, 2016

நெஞ்சத்தில் புற்றுகொள்ளூம் வஞ்சம் (வெய்யோன் 78)


     ஒருவர் மேல் நாம் வஞ்சம் கொண்டிருக்கிறோம் என்றால் என்றாவது அதை பேசித்தீர்த்துக்கொள்ள விழைந்திருக்கிறோமா?  அதை புதையல் போல பத்திரமாக பாதுகாத்து வருகிறோம். நாம் வஞ்சம் கொண்ட நபர் நமக்கு அறிந்தும் அறியாமலும் செய்த அனைத்து தவறுகளையும் சேகரித்து பத்திரமாக நெஞ்சகத்தில் வைத்துப்பூட்டி அவ்வப்போது ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்து நினைவுபடுத்தி வஞ்சத்தை தீட்டிக்கொள்கிறோம்.   வஞ்சம் கொண்டவர் மேற்கொண்டு நமக்கு ஏதாவது தவறு செய்வதை ஒருவித ஆவலுடன்  எதிர்பார்க்கிறோம். அதன் மூலம் நம் வஞ்சத்தை உறுதிபடுத்திக்கொள்ள விழைகிறோம்.  எதிர் தப்பினர் முன்னாளில் செய்த உதவிகள் மறந்துபோகின்றன. அப்படி ஞாபகம் வந்தாலும் அதற்கு வேறு காரணங்கள் கற்பித்து கொச்சைப்படுத்துகிறோம்.   அவர் ஏதாவது நமக்கு நன்மை செய்ய நேர்ந்தால் நாம் உள்ளூர அதை வெறுக்கிறோம். அதை முடிந்தவரை தவிர்க்கப்பார்க்கிறோம். யாரேனும் அவ்வஞ்சத்தைப்  பேசித்தீர்க்க அழைத்தால், வர மறுக்கிறோம். அல்லது எதிர் தரப்பினர் ஏற்றுக்கொள்ளமுடியாத விதிகளை தேடிப்பிடித்து போடுகிறோம்.   ஒருவகையில் வஞ்சம் என்பது  அதிலிருந்து மீள விடாத ஒரு போதைப்பழக்கம் என ஆகிறது. பலரின் பெருமுயற்சிக்கு பிறகு வஞ்சம் கொண்ட இருவர் சமாதானம் ஆனாலும் கூட வஞ்சம் ஏற்படுத்திய ஊனம் அந்த உறவில் இருந்துகொண்டுதானிருக்கும்.  எந்த ஒரு சிறு மனக்கசப்பிலும் துளிர்த்து வளர்ந்துவிடும் அபாயம் அதில் இருந்துகொண்டே இருக்கிறது.
    

மேலும் வஞ்சம் ஒரு தீவிர தொற்று நோய். நம் மேல் ஒருவருக்கு வஞ்சம் இருக்கிறது எனத் தெரிய வந்த  அடுத்த நொடி அவர்மேல் நமக்கு வஞ்சம் தோன்றிவிடுகிறது. இன்னும் கேட்டால், நம்மேல் அவருக்கு வஞ்சம் இருக்குமோ என்ற சந்தேகத்தில்கூட அவர்மேல் வஞ்சம் தோன்றிவிடுகிறது.  நாம் கொண்டிருக்கும் வஞ்சம், நம் வாழ்வை சிந்தனையை நடத்தையை வெகுவாக பாதிக்கிறது. நம் அற உணர்வை, அன்புணர்வை, தாக்கி சிதைக்கிறது. நம் இயல்பை மாற்றிவிடுகிறது. நாம் பார்த்திருக்கையிலேயே நாம் வேறு ஒருவராக மாறி விடுகிறோம். 


  அதனால் வஞ்சம் நம் மனதில் எந்தக்காரணத்தை முன்னிட்டும் தோன்றாமல் பார்த்துக்கொள்வது ஒன்றே நல்லது எனத் தோன்றுகிறது. மற்றவர் நமக்கு தவறு இழைக்காமல் பார்த்துக்கொள்வது நம் கையில் இல்லை.  மற்றவர் தவறுகளை மன்னித்துவிடுவது  நம்மால் முடியக்கூடியது.  ஒருவர் செய்த தவறுகளை, செய்யும் தவறுகளை இனி செய்யப்போகும் தவறுகளை எல்லாம் மன்னித்துவிடும் மனம்கொண்ட ஒருவனால் மட்டுமே தன் நெஞ்சத்தில் வஞ்சம் புகாமல் பார்த்துக்கொள்ள முடியும். மன்னித்தல் என்பது ஒருவன் அளிக்கும் துன்பங்களை, இழப்புகளை ஏற்றுகொள்வது என்பதல்ல.  நமக்கு அவன் குற்றமிழைக்கிறான் என்பதை முதலில் அவனுக்கு தெளிவாக தெரியப்படுத்தவேண்டும். பாதித்தவறுகள் அது தவெறென தெரியாமலேயே நடத்தப்படுகின்றன.  அதையும் மீறி அவன் செய்யும் தவறை  நம் முழு வல்லமையுடன் தடுத்துக்கொள்ளுதல் வேண்டும். அது நம் கடமையும்கூட.   சமூக சட்டவிதிகளை,  நம் வல்லமையை என எதை வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். அது நமக்கு நிகழப்போகும் இழப்புகளை தடுத்துக்கொள்வதற்காக இருக்க வேண்டும்.  அவையெல்லாம் அவன் அறியும் வண்ணம்வெளிப்படையாகவும்,  அந்த தவறுக்கு ஏற்ற அளவில் மிகாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டும்.  அனைத்துவித சமாதான முயற்சிகளையும் செய்து பார்த்துவிடவேண்டும். நாம் எதிர்ப்பது அவன் தவறான செய்கையையே தவிர அவனை நாம் எதிர்க்கவில்லை என்பது அவனுக்கு புலப்படும்படி இருக்கவேண்டும். 
  

 இப்படி வஞ்சத்தை மறுக்க ஒருவன் செய்யும் முயற்சிகள் அவனை கோழை என வெளியே தோன்றவைக்கும். வெளியிலிருந்து வேடிக்கை பார்க்கும் நபர்களுக்கு சுவாரஸ்யமற்ற மனிதனாக அவன் தென்பட்டு ஏளனத்திற்கு உள்ளாவான்.  அவனின் சமாதான முயற்சிகள் அசட்டுத்தனம் என்று கருதி முட்டாள் என்று இழித்துரைக்கப்படுவான்.  ஆனால் உண்மையில்  அவனே பெரு வீரன். அவனே ஆக்கப் பாதையில் பூமியை செலுத்திக்கொண்டிருப்பவன். உலகம் அழிந்துவிடாமல் தன் தோள் மேல் சுமந்திருப்பவன் அவனே. அறத் தேவதையின் தவப் புதல்வன். அவன் தருமன். அவன் அருகன். அவன் புத்தன். வஞ்சம் கொள்ளுவதை விட தன்னை சிலுவையில் அறைந்துகொள்வேன் என முட்கிரீடம் சுமந்தவன். அவன் எதிரி என எவரும் எனக்கில்லை என வாழ்ந்த மகாத்மா. அவன் நடந்து செல்லும் பதையில்  கால் தடங்களே அறநூல்களாக, தத்துவநூல்களாக ஆகின்றன.


   வெண்முரசு  வஞ்சம் பெருகி மிகப் பெரிய அளவில் அழிவை, உயிர் சேதத்தை ஏற்படுத்தப்போவதை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது.   வெண்முரசின் கதாப்பாத்திரங்களின் உள்ளே வஞ்சம் மெல்ல மெல்ல குடியேறுவதை கண்டுவந்துகொண்டிருக்கிறோம். மலையளவு உயர்ந்திருந்த நாயகர்களில் வஞ்சம் என்ற தொற்று பரவி அவர்களின் ஆளுமையை சிதைப்பதை காண இருக்கிறோம். பின்னர் ஏற்படப்போகும் போரல்ல பேரழிவு. இந்த நாயகர்களின் சரிவே உண்மையில் பேரழிவு. இது தீர்க்கப்படமுடியாத புற்றுநோய் என உள்ளதில் வேரூன்றியுள்ளது. த்  ஆம், உள்ளத்தில் வஞ்சமென்ற நாகம் குடியிருக்கும் புற்று.

 தண்டபாணி துரைவேல்