Monday, March 14, 2016

வாசிப்பு






ஜெ

ஒருவாசகர் பாண்டவர்கள் துரியோதனனுக்கு நட்பாக இருக்க மறுத்துவிட்டதற்குக் காரணம் தெளிவாக இல்லை என எழுதியிருந்தார். இத்தகைய வாசகர்கள்தான் இங்கே ஒரு இலக்கியத்திற்கு ஒருவகையில் பெரிய தடை. இவர்கள் கதைகேட்கும் மனநிலையிலேயே இருக்கிறார்கள். இவர்களின் குரலைக் கேட்டு கன்வின்ஸ் பண்ணுவதற்காக எழுதினால் இலக்கியம் மிகமிக வெளிப்படையானதாக ஆகிவிடும். வாசகனுக்கான ஸ்பேஸ் என்பதே இல்லாமலாகிவிடும். நல்லவேளை நீங்கள் எளிதாகக் கடந்துசெல்கிறீர்கள்

நூற்றுக்கணக்கான பக்கங்களில் பாண்டவர்களின் மனம் எப்படியெல்லாம் திரண்டு வருகிறது என்பதை நாவல்தொடர் சொல்லிக்கொண்டே வருகிறது. வாரனவதம் நிகழ்ச்சி அவர்களின் மனதிலிருந்து விலகவே இல்லை என்பதை பத்துப்பதினைந்துமுறை பதிவுசெய்திருக்கிறது. அது அவர்களுக்கு ஒரு மறுபிறப்பு. அதில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவகையில் எதிர்வினை ஆற்றுகிறார்கள். பீமன் கடுமையான வன்மம் கொள்கிறான். அதன்பின் அவன் மனம் கொஞ்சம்கூட இளகவில்லை. அர்ஜுனன் கொஞ்சம் இளகினாலும் கவனமாகவே இருக்கிறான். தருமன் மட்டுமே அதை மறக்கக்கூடியவனாக இருக்கிறான்

பீமனின் வன்மமும் சந்தேகமும் நாவல் முழுக்க அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது. நஞ்சை அருந்தியதுமே அவன் கசப்பு நிறைந்தவனாக ஆகிவிடுகிறான். சந்தேகம் கொண்டே எல்லாவற்றையும் பார்க்கிறான். அவன் இயல்பாக இருப்பது இடும்பவனத்தில்மட்டும்தான். அங்கே ஆதிமனிதன்போல இருக்கிறான். இங்கே ஜராசந்தனைக் கண்டதும் பீமன் சந்தேகம் கொள்வதும் எல்லாவற்றையும் அவனே முடிவுசெய்வதும் இயலபாகவே உள்ளது

இத்தகைய சந்தர்ப்பங்களில் நாவல் அளிக்கும் குறிப்புகளைக்கொண்டு கதாபாத்திரங்களின் மனநிலையை ஊகிப்பதற்குத்தான் வாசிப்பு என்று பெயர்

சண்முகம்