காண்டவம் நாவல் வடிவம் பெறுகையில் கர்ணன் அதில் முதன்மையாக வருவான் என்று ஜெ சொல்லியிருந்தார். காண்டவம் பா தியில் நின்றதில் பெரு வருத்தமே ஆசான் கூட கர்ணனைக் கைவிட்டு விட்டாரே என்பதாகத் தான் இருந்தது. ஒரு முறை சென்னை விவாதக் கூட்டத்திலும் இதை நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். அந்த குறையை வெய்யோன் முழுமையாக நீக்கி விட்டது.
வெய்யோனின் முக்கியமான பகுதி அந்த நாக அன்னை கர்ணனிடம் அவனில் உறைந்திருந்த வஞ்சத்தை அவனுக்கு உணர வைக்கும் இடம். அதன் முதல் வெளிப்பாடு தான் குந்தி அவனுக்காக ஒருக்கிய பீடத்தை அவன் மறுப்பது. அவனிடம் குந்தியைப் பற்றி பேசும் பொழுதெல்லாம் அவனிடம் கூடும் அந்த படபடப்பிற்கும் இந்த வஞ்சமே காரணம். ஒவ்வொருமுறையும் அவளை எதிர்த்துப் பேசி, அவள் அவனுக்கு அளிக்கும் கருணையை, பாசத்தை, அவளால் அவனுக்கு அளிக்கப்படும் இடத்தை மறுக்க வேண்டும் என்று உள்ளூர விரும்பியும், அதைச் சொல்ல வாய் வரை வார்த்தை வந்தும் அதை வெளிப்படுத்தக் கூடிய மன தைரியம் இல்லாமையே அந்த படபடப்பாக வெளிப்படுகிறது.
மிக இயல்பாக அந்த வஞ்சம் அவனில் ஊறி நிறைகிறது. அதை மறைக்கவே அவன் என்றுமில்லாதவாறு குடிக்கிறான். தன்னில் அவ்வஞ்சம் எழவில்லை எழவில்லை எனத் தனக்குத் தானே சொல்லிக்கொண்டிருக்கிறான். ஆனால் மறுபுறம் அந்த வஞ்சத்தை விருட்சமாக்க அவன் காண்டவ வன எரியூட்டல் நிகழ்வை பயன்படுத்திக் கொள்கிறான். தன் மனதில் உருவமில்லாமல், உணர்வில்லாமல் வெறும் கல்லாகக் குளிர்ந்து கிடக்கும் வஞ்சத்திற்கு உயிரூட்டவே அவன் காண்டவ வனத்தில் எரிந்தழிந்த நாகர்கள் பால் இரக்கம் கொள்கிறான். தன்னையும் அவர்களில் ஒருவனாக எண்ணியே, அவர்களின் துயரை உணர்வதாக நடித்தே தன்னுள் உள்ள வஞ்சத்திற்கு உருக் கொடுக்கிறான். அவன் மாறிவிடுகிறான். மிக மிக நுட்பமாக அம்மாற்றம் நிகழ்கிறது. இனி கருணையே உருவான கதிரவன் மைந்தன் மட்டுமன்று அவன், அனலோன் மீது வஞ்சம் கொண்ட வெய்யோன் மைந்தனும் கூட. வெய்யோன் மீதான அனலோனின் அழுக்காறு தானே சியமந்தக மணியானது. அம்மணியைக் கொண்டவனும், அந்த அனலோனைத் துணைக் கொண்டவனும் இணைந்து அழித்த காண்டவம் வெய்யோன் மைந்தனிடம் அதற்கிணையான வஞ்சத்தைக் கிளர்த்தியத்துவதும் இயல்பு தானே. ஒரு வகையில் அது வெய்யோனின் வஞ்சமும் கூட.
அவன் மாறி விடுகிறான். அந்த மாற்றத்தை மிக அருகில் என உணர்கிறார் சிவதர். அவரால் அவனின் இம்மாற்றத்தை ஏற்க இயலவில்லை. என்ன இருந்தாலும் தந்தையின் இடத்திலும் அல்லவா அவர் இருக்கிறார். மைந்தனின் விரும்பத்தாகத மாற்றம் எந்தத் தந்தையிடமும் ஒரு விலக்கத்தைத் தானே ஏற்படுத்தும். வெய்யோன் 70ல் உண்டாட்டில் நன்றாகக் குடித்து விட்டு அறைக்கு வருகையில் தடுமாறிக் கீழே விழ இருக்கும் கர்ணனை நோக்கி அவர் பதறி ஓடி வரவில்லை. சிற்றடிகள் வைத்தே வருகிறார். அவராக பிடிக்க முயலவில்லை. அவனைப் பிடிக்கவும் இல்லை. கர்ணன் தான் அவரைப் பிடித்துக் கொள்கிறான். அவனாகத் தான் அவரிடம் பேசத்துவங்குகிறான். அதற்கு அவர் ஒற்றை வரிப் பதில்களை மட்டுமே தருகிறார்.
பாற்கடலே ஆனாலும் துளித்துளியாக ஆலகாலமும் சேர்ந்தால் தானே பள்ளி கொள்ள இயலும்!!!
அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்