உண்மையில் உண்டாட்டு அறையில் நடக்கும் இன்றைய நிகழ்வுகள் மயனீர் மாளிகையில் ஒவ்வொருவரும் கண்ட, அடைந்த அனுபவத்தின் வெளிப்பாடுகளே. உண்மையில் ஒவ்வொருவரும் தம் மனதின் அடியாழத்தில் தாம் விரும்பிய ஒன்றையே அங்கே கண்டிருக்கிறார்கள். அழிவு... பேரழிவு. அது அவர்களின் உளக்கிடக்கை அல்ல. அப்படி ஒன்று இருப்பதையே அவர்களால் எண்ணிப்பார்க்கக் கூட இயலாது. ஆனால் அவ்வெண்ணம் கொண்டிருப்பது அவர்களின் ஆழம், அவர்களின் நிழல்.
இதில் முக்கியமான மற்றொன்று, துரியன் தருமனை எண்ணிக்கொள்வது தான். அவனுக்கு தருமனைக் கண்ட முதல் நாளில் இருந்தே பிடிக்காது. ஆயினும் இன்று அவன் ஒருவன் மட்டுமே துரியனை ஏற்றுக் கொண்டவனாக இந்திரபிரஸ்தத்தில் இருக்கிறான். அவன் உண்மையிலேயே துரியனை மன்னித்து விட்டிருக்கிறான். அவனிடம் எந்த பகைமையோ வஞ்சமோ இல்லை. எனவே தான் மாய மாளிகையில் அவன் ஒருவர் கண்ணிற்கும் தென்படவில்லை. ஒரு வகையில் துரியனை வாரணவதம் வரை கொண்டு சென்றதில் தருமனுக்கும் கொஞ்சம் பங்கு இருப்பதால் கூட இருக்கலாம். எப்படியாயினும் அந்த மாய மாளிகையில் அனைத்து கௌரவர்களும் கண்டது ஒன்றே. பீமன் குலாந்தகன் என்ற உண்மையை. தாம் ஒவ்வொருவரும் அவன் கையால் மடிவதையே அவர்கள் அங்கே கண்டிருக்கிறார்கள். அதைத்தான் துரியன் எப்படியாயினும் கடந்து விட வேண்டும் என்று கர்ணனிடம் மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டிருக்கிறான். உண்மை யில் பிரச்சனையைத் தீர்க்க வேண்டும் என்று விரும்பியிருந்தால் அவன் சென்றிருக்க வேண்டியது தருமனிடம். மாறாக அவன் திரௌபதியைத் தேர்ந்தெடுக்கிறான். அங்கே தான் அவன் உண்மையில் சறுக்கி விட்டிருக்கிறான். அதன் வெளிப்பாடு தான் நீரில் விழுந்த நிகழ்வு.
பீமன் மற்றும் அர்ச்சுனன் விழிகளில் தெரிந்த பகை என்பது மாய மாளிகையின் உள்ளே அவர்கள் கண்டதன் வெளிப்பாடே. பீமனும் அர்ச்சுனனும் துரியன் அவர்களுக்கு எதிராக, வந்திருந்த அனைத்து அரசர்களுடனும் அணி சேர்ந்து நிற்பது தெரிந்திருக்கும். அதன் வெளிப்பாடே அந்த பகை கொந்தளிக்கும் கண்கள். மிக மிக நுட்பமாக இது சொல்லப்பட்டிருக்கிறது. பீமனிடமும், அர்ச்சுனனிடமும் இருக்கும் பகைமை ஜராசந்தனால் வந்ததன்று. ஜராசந்தன் வேள்வியில் ஊற்றப்பட்ட நெய் மட்டுமே. ஏற்கனவே வாரணவதத்தால் வந்த வஞ்சம், அதனால் துரியன் மீது ஏற்பட்ட சந்தேகம் அதை மேலும் மேலும் பெருக்கும் வகையில் துரியன் ஜராசந்தன், சிசுபாலன், ருக்மி போன்றவர்களிடம் கொள்ளும் உறவு போன்றவற்றால் குழம்பிய அவர்கள் கண்களில் துரியன் அவர்களைக் கொல்ல வேண்டும் என்று பகையிலும், வஞ்சத்திலும், பொறாமையிலும் துடிக்கும் ஒருவனாகத் தெரிவதில் எந்த தவறும் இல்லை.
பெண்களில் அந்த மாயமாளிகையில் பங்கு கொண்ட ஒரே ஒருத்தி திரௌபதி தான். அவளும் அப்பெரும்போரில் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறாள். ஒவ்வொருவரின் அனுபவமும் அவரவரின் தோல்வியைப் பற்றியதாக மட்டுமே இருக்கிறது. அப்படியிருக்கையில் திரௌபதியின் அனுபவத்தில் துரியன் பெரும்பலவானாக அவர்கள் அனைவரையும் வென்றிருக்கலாம். அப்படிப்பட்டவன் நேரில் நீருக்கும், தரைக்கும் வித்தியாசம் தெரியாமல் விழுந்து எழுந்த போது இயல்பாக வரும் நகையும், ஏளனமுமே அவளுக்கும் வந்திருக்கிறது. அவளின் இயல்பால் நகையைக் கண்களிலும், ஏளனத்தை உதடுகளிலும் தேக்கி வைத்து விடுகிறாள்.
உண்டாட்டு மாளிகைக்கு வரும் அனைவருமே தாம் அறியா தமது ஆழங்களில், தத்தமது நிழல்களின் எண்ணங்களை அறிந்தவராக, தம்மைப் பற்றியே புதிதாய் அறிந்தவராக வருகின்றனர். ஒரு வகையில் அவர்களும் அவர்களது நிழல்களும் ஒன்றாக ஆகிவிட்டிருக்கின்றனர். எனவே தான் உண்டாடும் இடத்தில் யாருக்குமே நிழல் இல்லை. நிழல்கள் இல்லாமல் இருப்பதே அவர்களை மேலும் மேலும் சஞ்சலத்திற்கு உள்ளாக்குகிறது.
இந்த மாயங்களில் பங்கு கொள்ளாத, நிழலும் நிஜமும் ஒன்றான இருவர் தருமனும், கிருஷ்ணனுமே. வேதாந்தத்தையும், அறத்தையும் ஒரே தட்டில் வைத்து விளையாடியிருக்கிறார் ஜெ. இரு அபாரமான அத்தியாயங்கள். நிழல்கள் புரிந்த இந்த யுத்தம் நிஜமாவதே இனி பாரதம் இல்லையா?
அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்