Friday, March 11, 2016

வெண்முரசு நாவல்களின் வடிவம்






ஜெ

வெய்யோன் உட்பட வெண்முரசின் நாவல்கள் ஒன்பதையும் ஒட்டுமொத்தமாகத் தொகுத்துப்பார்த்தால் தோன்றுவது இதுதான். ஒவ்வொரு நாவலுக்கும் ஒருவகையான கட்டமைப்பும் அழகியலும் உள்ளது. ஒன்றின் தொடர்ச்சியாக இன்னொன்று இருக்கும்போதே அவை மாறுபட்டும் இருக்கின்றன. சொல்லப்போனால் மூன்று வடிவங்களைக் கண்டுபிடித்து பின்னாடி மூன்றையும் கலந்து புதுப்புது வடிவங்கள்.

முதற்கனல்

சுருக்கமான கதைகளைக்கொண்டு பின்னிய ஒரு நவீனத்துவபாணி நாவல். ஒரு parable texture போல அதன் அமைப்பு. உள்ள ஓட்டங்கள், புறத்தகவல்கள் எல்லாமே குறைவு. உச்சங்கள் எல்லாம் புராணக்கதையின் உச்சங்கள். அல்லது நாட்டுப்புறக்கதையின் உச்சங்கள். உதாரணமாக அம்பை தீயில் ஏறும் இடம்

மழைப்பாடல்

Tolstoyen என்று சொல்லத்தக்க நாவல். அதன் மாயக்காட்சிகள் கூட யதார்த்தமானவை. உணர்ச்சிகள் நிகழ்ச்சிகள் எல்லாமே யதார்த்த உச்சம் கொண்டவை. உதாரணம் காந்தாரி அஸ்தினபுரிக்கு வரும்போது பெய்யும் மழை.

வண்ணக்கடல்
Hyperlink text போன்ற வடிவம் கொண்டது. ஒருகதை நேரடியானது. இன்னொரு கதை அதைக்குறுக்காக வெட்டுகிறது. மகாக்குரோதன் என்று சிவன் சொல்லப்பட்டதுமே துரியோதனனின் கதை வருகிறது

நீலம்

முழுக்க முழுக்க ரொமாண்டிக் கவித்துவ உச்சம் மட்டுமே கொண்டது

பிரயாகை, வெண்முகில்நகரம்

இவ்விரு நாவல்களுமே ஒரே வடிவம் கொண்டவைதான். மழைப்பாடலின் யதார்த்தபாணி. கூடவே சாகசக்கதைகளின் அம்சங்களும் காமிக்குகளின் அம்சமும் பேரபிள் அம்சமும் கலந்து நெய்யப்பட்டுள்ளன

இந்திரநீலம், காண்டீபம்

இவ்விருநாவல்களும் நீலத்தின் ரொமாண்டிசிசத்தை சாகசம் மற்றும் பேரபிள்தன்மையுடன் கலந்து உருவாக்கப்பட்டவை

வெய்யோன்

வெய்யோன் மழைப்பாடலின் யதார்த்தவாத பாணிக்குள் நின்றிருக்கும் நாவல்.

இந்தவடிவங்களை நீங்கள் ஏன் தேர்வுசெய்திருக்கிறீர்கள் என யோசித்தேன். ஒரு பகுதியில் நிறைய நிகழ்ச்சிகள் உள்ளன என்றால் அது யதார்த்தமாகவும் உள்மனம் மட்டும் வெளிப்பட்டால் போதும் என்றால் பிறவடிவங்களையும் தேர்வுசெய்கிறீர்கள். அந்தந்த பகுதிகள் அற்புதமாக இணைகின்றன

சிவராமன்