அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு ,
தங்களின்
வெண்முரசு நாவலை படிக்க வேண்டும் என்று தாங்கள் அந்நாவலை இணையத்தில்
வெளியிட்ட நாளில் இருந்து எண்ணிக்கொண்டிருந்தேன் . ஒரு வழியாக இரு நாட்கள்
முன்பு வாசிக்கத் தொடங்கிவிட்டேன். அதிலும் என் கணவர் நீலம் பகுதி வேறு
நடையில் இருப்பதாகவும் ஒவ்வொரு பகுதியும் தனித்தும் வாசிக்கலாம் என்றும்
கூறியதும், எனக்கு மிகவும் பிடித்த கண்ணனை பற்றி முதலில் படிக்கவேண்டும்
என்ற ஆர்வம் மேலெழ நீலம் முதல் பகுதியைப் படிக்கத் தொடங்கினேன்.
ஊட்டி
சந்திப்பில் தங்களிடம் நான் ஒரு படைப்பில் வர்ணனை என்பது அதிகமாக
இருக்கலாமா எவ்வளவு இருக்க வேண்டும் என்று கேட்டேன்.அதற்கு காரணம் சில
படைப்புகளின் வர்ணனைகள் அதன் சுவாரஸ்யத்தை குலைத்து விடுவதாக எனக்கு
தோன்றியதுண்டு .(இத எதுக்கு இப்ப சொல்றேனு கேட்காதீங்க ---நிச்சயமாக
ஞாபகம் வந்ததால சொல்லலே )...நீலம் படிக்கும்பொழுது அதன் நடையும்
வர்ணனையும் நான் வாசிக்கிறேனா அமுதை பருகுகிறேனா என்ற சந்தேகத்தையும்
அமுதுண்ட பேரின்பத்தையும் எனக்கு அளித்தது...அளிக்கிறது....வர் ணனைகள்
எத்தகைய பேரின்பத்தை வாசகனுக்கு அளிக்கும் என்பதை இப்பொழுது
உணர்கிறேன்.இப்பொழுது ராதை கண்ணனை காணும் மூன்றாம் பகுதியை
வாசித்துக்கொண்டிருந்தேன். அந்த எழுத்துக்களில் எந்த ஒரு மெனக்கெடலும்
இல்லை....வார்த்தைகள் கோர்வையாக தானே வந்து அமர்ந்துக்கொண்டனவோ என்று
தோன்றுகிறது. படிக்கும்பொழுதே தங்களை மானசீகமாக வணங்கினேன்...உங்களுக்கு
உடனே கடிதம் எழுதினால் தான் மேலும் வாசிக்க இயலும் என்று
தோன்றியது....எழுதிவிட்டேன்... தமிழமுதில் நனைய விடைபெறுகிறேன்...
எழுத வேண்டும் என்று தோன்றி அந்த கணத்தில் எழுதிய கடிதம்...பிழை இருந்தால் மன்னிக்கவும்...
தங்களை மீண்டும் ஒரு நல்ல சந்தர்ப்பத்தில் சந்திக்க காத்திருக்கும்