தெரியாத கதை மிகவும் சாதாரணமான மொழி நடையில் இருந்தால்கூட அது எப்படி முடியப்போகிறது என்ற மர்மத்தின் காரணமாக அதில்ஒரு விறுவிறுப்பு இருக்கும். நான் பழைய படங்களை பார்க்கும்போது எவ்வித கலை நுணுக்கமும் இல்லதபோதும் இதை எப்படித்தான் முடிக்கப்போகிறார்கள் என்ற ஆர்வத்தில் கடைசி வரை பார்ப்பதுண்டு. இப்படியே பல குப்பை நாவல்களையும் இந்த ஒரு எதிர்பார்ப்புக்காக படித்து இருக்கிறேன். ஆனால் அவற்றை திரும்ப எடுத்து மற்றொரு முறை படிக்கவே முடியாது. வார இதழ் கதைகள் பெரும்பாலும் எப்படி முடியப்போகிறது என்ற சுவாரஸ்யத்திற்காகவே படிக்கப்படுகின்றன். அதன் எந்த கதையும் மீள் வாசிப்பு செய்யப்படுவதில்லை. ஆனால் சிறந்த எழுத்தாளர்களின் எழுத்தென்றால், ஒவ்வொருமுறை படிக்கும்போதும் புதிய புதிய சிந்தனைகள் தோன்றிக் கொண்டே இருக்கும். முன்னர் தவறவிடப்பட்ட சமூக அவதானிப்புகள் தென்படக்கூடும். இருப்பினும் மீண்டும் படிக்கையில் அது கலை நுணுக்கத்திற்காகவே படிக்கப் படுகிறது. கதை முன்னரே அறிந்திருப்பதால் கதைக்கான சுவாரஸ்யம் அப்போது தோன்றுவதில்லை.
ஆகவே தெரிந்த கதையை மீண்டும் ஒரு எழுத்தாளன் எழுதுவது என்பது மிகச் சவாலான விஷயம். அதில் விறுவிறுப்பை சேர்ப்பது என்பது மிகக் கடினமான பணி. வெண்முரசில் சொல்லப்படும் மகாபரதக்கதை, நாம் சிறுவயதிலிருந்தே கேட்டுவரும் மிகத் தொன்மையான கதை. அதை திராவிட கழகத்தினரைப்போல நல்லவனை கெட்டவனாக்கி கெட்டவனை நல்லவனாக்கி மொத்த கதையையும் தலைகீழாக்கி எழுதுவதன் மூலம் விறுவிறுப்பை உருவாக்கலாம். ஆனால் அது அந்தக் கதையை, முன்னர் அதை எழுதிய எழுத்தாளனை அவமதிப்பதாகும். அதை என்னால் ஒப்புக்கொள்ளவே முடியாது. ஆனால் தெரிந்த ஆதிநாள்தொட்டு சொல்லப்பட்டு வரும் கதையை எப்படித்தான் விறுவிறுப்பூட்டி எழுதுவது?
அதை வெண்முரசு நமக்கு கற்றுத் தருகிறது. ஆதி எழுத்தாளன் வியாசனின் வரிகளை கரைகளாகக் கொண்டு அவற்றை மீறாத பெரு வெள்ளமாக வெண்முரசு ஓடிக்கொண்டிருக்கிறது. வியாசனை எவ்வகையிலும் அவமதிக்காமல், சிறுமை செய்யாமல் அவன் பயன்படுத்திய வரைபடத்துக்குள் சொல்லப்பட்ட கதையாக இது பரந்து விரிகிறது. குருவின் ஆப்த வாக்கியத்தை விளக்கி சீடன் பேருரையாற்றுதல் போல் இது நிகழ்கிறது. படிப்பவருக்கு இது ஏற்கெனவே தெரிந்த கதையாக இருந்தாலும் ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாக முதன் முறை படிக்கும் அனுபவத்தை அளிக்கிறது. இது எப்படி சாத்தியமாகிறது என எண்ணிப்பார்க்கிறேன். மகாபாரத கதை சம்பவங்களை நாம் காலத்தின் வெகு தூரத்தில் இருந்துகொண்டு கண்டுவந்தோம். ஆனால் வெண்முரசு கதை சம்பவங்களை நம் கண் முன்னேவெகு அருகாமையில், நம் கையை நீட்டினால் தொட்டுவிடும் தூரத்தில் நடத்துகிறது. திரைச்சீலை ஓவியங்களாக தூரப் பார்வையில் தெரிந்த கதைப்பாத்திரங்கள், உடலும் உயிரும் உணர்வும் கொண்டு நம் எதிரே நடமாடுகிறார்கள். நாம் அந்தப் பாத்திரங்களின் உள்ளும் புறமும் காண்கிறோம். அதனால் எந்தப் பாத்திரத்தையும் வெறுக்க முடியாமல் போகிறது. அனைத்து பாத்திரங்களின் மேலும் அன்பும் வாஞ்சையும் கொள்கிறோம்.
துரியோதனன் பொறாமை கொண்டு பாண்டவரை அழிக்க முற்படுகிறான் என்பது ஒரு வரியில் சொன்னால் அது தெரிந்த கதை. ஆனால் துரியோதனன் அவன் அனைத்து பலங்களுடனும் பலவீனங்களுடனும் நம் கண்ணெதிரே வளர்ந்து வருகிறான். வாரணாவத எரிப்பு, காம்பில்யப்போர் போன்ற நிகழ்வுகளில் அவன் வேறு எல்லையில், குரோதத்தின் பிடியில் இருக்கிறான். ஆனால் வெண்முரசில் அதற்கப்புரம் அவன் முற்றிலுமாக மாறி தந்தையின் பேருள்ளத்தை தனதாக்கி ஓங்கி உயர்ந்து வளர்ந்திருக்கிறான். அவன் நலம் நாடும், அவன் நன்னெறியில் செல்ல விரும்பும் கர்ணன் துணையிருக்கிறான். ஆனாலும் நமக்கு தெரியும் அவன் இந்த நிலையிலிருந்து வெகுவாக மாறப்போகிறான் என்று. இதை எளிதாக பொறாமைகொண்டான் என ஒருவரியில் முடித்து போய்விடமுடியாத பெருஞ்சிக்கலை கதாசிரியர் தனக்கு தானே ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார். இந்தச் சிக்கலை எப்படி தீர்க்கப்போகிறார் என்ற கேள்வி கதையில் விறுவிறுப்பை கூட்டுகிறது. துரியோதனன் எப்படி தலைகீழாக மாறப்போகிறான். அந்த அளவுக்கு அவன் உள்ளம் பாதிக்கும் நிகழ்வு என்னவாக இருந்தாலும் அதை வெண்முரசு எவ்வாறு நிகழ்த்திக்காட்டப்போகிறது என்று வாசகர் உள்ளங்களில் பரபரப்பை ஏற்படுத்துகிறது. இது எந்த ஒரு நாவலின் 'மர்ம முடிச்சவிழும்' விறுவிறுப்புக்கு குறையாததாக வாசகர்களை இருக்கை நுனியில் உட்காரவைத்திருக்கிறது. ஆனால் இந்த விறுவிறுப்பு வலிந்து திணிக்கப்பட்டதாக இல்லாமல் கதையின் போக்கில் மிக இயல்பாக நிகழ்வது கதாசிரியரின் பெருந்திறனைக் காட்டுகிறது.
தண்டபாணி துரைவேல்