ஒரு பொருளை பார்க்க ஒளிமட்டும் உதவுகிறத் என நினக்கிறோம். ஆனால் நிழல் இல்லையென்றால் எதையும் நாம் பார்க்க முடியாது. இதை இப்படி விளங்கிக்கொள்ளலாம் . ஒருபொருள் ஒளி செல்லும் பாதையை தடுப்பதால் ஏற்படும் ஒளிக்குறைவை நம் நிழல் என சொல்கிறோம். ஒளி ஒரு பொருளில் பட்டு எஎதிரொளிக்கிறது அப்படி திரும்ப வரும் ஒளியைக்கொண்டே அந்த பொருளை அறிகிறோம். அதே நேரத்தில் அந்தப் பொருள் அனைத்து ஒளியையும் அப்படியே பிரதிபலித்துவிடுகிறது என்றால் நாம் அப்பொருளை காணவே முடியாது. ஒரு தூய முகம் பார்க்கும் ஆடியை நம்மால் காணவே முடியாது. ஒரு பொருளை, அதன்மேல் பட்ட ஒளியினை அது பிரதிபலிப்பதில் உள்ள முழுமையின்மையால்தான் நாம் காண்கிறோம். அப்படி பிரதிபலிக்காததால் ஏற்படும் ஒளியின் குறையையும் நாம் நிழல் எனக்கொண்டு நிழலின் வரையறையை நீட்டித்துக்கொள்ளலாம். ஆக இப்படி ஒளியும் நிழலும் சேராமால் ஒரு பொருளை நம்மால் காண முடியாது. ஒரு பொருள் நீல வண்ணத்தில் இருக்கிறது என்றால் அது தன் மேல் படும் வெள்ளொளியை மொத்தமாக பிரதிபலிக்காமல் அதில் நீல வண்ணத்தைமட்டும் பிரதிபலிக்கிறது. மற்ற வண்ணங்கள் பிரதிபலிக்கப்படாமல் அந்த பொருளின் இயல்பால் தடுக்கப்படுகின்றன. இப்படியே அனைத்து வண்ணங்களும் பிரதிபலிப்பின் முழுமையின்மையினால் உருவாவதே. ஆக வண்ணங்கள் என்பது ஒளி மற்றும் நிழலின் வெவ்வேறு விகிதங்களிலான கலவை எனச் சொல்லாம் அல்லவா?
ஆக ஒரு பொருளுக்கு உருவை, பரிணாமத்தை, வண்ணத்தை ஒளியும் நிழலும் சேர்ந்தே அமைக்கின்றன. இந்த அறிவியல் கூற்றை மிக அழகாக கவித்துவமாக சொல்லிச் செல்கிறது வெண்முரசு. சமிக்ஞை என்ற பெண் நாம் ஒரு பொருள் பிரதிபலிக்கும் ஒளிபகுதியையும், மற்றும் சாயை என்ற பெண், பிரதிபலிக்காமல் தடுத்துக்கொள்ளும் ஒளிப்பகுதியால் ஏற்படும் ஒளிக்குறைபாட்டையும் என ஒப்புநோக்கலாம்.
இருவரும் பொலிந்த பேரழகின் பொருளென்ன என்று அவன் அறிந்தான். “எத்தனை எளியது! தெய்வங்களே, எத்தனை வெளிப்படையானது! எங்ஙனம் என் உள்ளம் இதை மறந்தது?” என்று அவன் கூவினான். தன் தூரிகையையும் வண்ணங்களையும் தேடி பரிதவித்தான். அவற்றை எடுத்துக்கொண்டு வெளியே ஓடி தான் படைத்த அனைத்துக்கும் நிழலை படைக்கலானான்.அன்றுவரை இப்புடவி திரைச்சீலைப்படம் போல தட்டையாக இருந்தது. தூரிகை வரைந்த நிழல்வந்து வடிவங்களுடனும் வண்ணங்களுடனும் முயங்கியதும் ஒவ்வொன்றும் முழுப்பு கொண்டு எழுந்தது. உருள்வுகள் ஒளி கொண்டன. பரப்புகள் அகல்வு கொண்டன. எழுகைகள் ஆழம் கொண்டன. வண்ணங்கள் பீடம் கொண்டன. சேய்மைகளும் அண்மைகளும் உருவாகி வந்தன. ஒவ்வொரு பொருளிலும் அதற்குரிய தெய்வம் வந்து அமர்ந்து புன்னகைத்தது. நெஞ்சைப்பற்றியபடி நின்று கண்ணீருடன் புன்னகைத்தான் விஸ்வகர்மன்.
அப்படியே ஒருவரின் குணங்களும் இப்படி ஒளிபோன்ற நற்பண்புகளாலும் இருளான தீயபண்புகளாலும் இணைந்து உருவாக்கப்படுகின்றன. இந்த வெவ்வேறு விகிதங்களில் குண, ஒளிகளும் இருள்களும் சேர்ந்த கலவையே ஒரு மனிதனுக்கு அவனுக்கென்று ஒரு குணத்தை, இயல்பை அளிக்கிறது. அதனால் வெறும் நற்குணங்களை மட்டும் அறிந்து அதைப் படித்து ஒருவன் வல்லுநன் ஆக முடியாது. அவன் முழுமையான அறிவைப்பெற அவன் இருட் குணங்களையும் அறிந்துகொள்ளவேண்டும். தீய நடத்தை என அறிந்து அதை தவிர்த்து நடப்பவன் அல்லவா சிறந்தவன். தீமை என்றால் என்னவன்றே அறியாமல் மூடிய கோட்டைக்குள் அனைத்து தேவைகளுடன் இருந்து தன் நன்னெறியை காப்பாற்றிக்கொன்டவனை எப்படி அறத்தில் சிறந்தவன் என்று சொல்ல முடியும். அதர்வ தேவதை தீமைகளின் ஆழத்தை அறியாதவன், தீமைகளின் கடலில் நீந்தி கடக்காதவன் எப்படி சிறந்த வீரனாவன் என காக்ஷீவானிடம் வினவுகிறாள்.
“நான் இருளின் வேதம். தீமையின் ஒலிவடிவம். ஆழங்களின் மொழி” என்றாள் அதர்வதேவி. முதல்மூவரை ஒளியால் நன்மையால் உயர்வுகளால் ஆக்கிய தெய்வங்கள் அவர்களுக்கு நிகர் எடைகொண்டவளாக என் ஒருத்தியையே ஆக்கின. அதை உணராதவர் வேதமெய்மையை அறியாதவர்.” காக்ஷீவான் கண்ணீருடன் “ஆம், இப்போதறிகிறேன் அதை. என்னை முற்றிலும் ஓளிநோக்கி திருப்பிக்கொண்டேன். நன்மையை மட்டுமே நாடினேன். உயர்வையே உன்னினேன்” என்றார்.
தன் மைந்தன் கௌசிகன் வாயிலாக அந்த ஞானமின்மையை காஷூவான் ஈடு கட்டுகிறார். இப்படி பல்வேறு குணங்களின் இருப்பும் இல்லாமையும் சேர்ந்துதான், இரு எதிர்மறைக்கூறுகள் இணைந்துதான், ஒவ்வொரு உயிர்க்கும் ஒரு இயல்பு உருவாகிறது. இந்த எதிர்மறைக்கூறுகளை ஒருவன் பயிலாமல் உலகின் பல்வேறு இயல்புகளை ஒருவர் அறிந்துகொள்ள முடியாது. இயற்கையை, மனிதர்களை, வரலாறை, படிப்பவர்கள் அதில் நிபுணராக விழிபவர்கள் இருட்குணங்களிப்பற்றிய அறிவும் இருப்பவர்களாக விளங்க வேண்டும்.
தண்டபாணி துரைவேல்