Tuesday, March 10, 2020

வெண்முரசு வடிவமும் வாசிப்பும்- ஆர்.ராமச்சந்திரன்


வெண்முரசை வாசிக்கும்போது தொடர்ச்சியாக ஒருசில சிக்கல்கள் உருவாகிக்கொண்டெ இருந்தன. நான் தொடக்கம் முதலே என்னுடைய சிக்கல்களை எல்லாம் எழுதிவைக்கும் பழக்கம் கொண்டிருந்தேன். அதையெல்லாம் எடுத்துப்பார்த்து என்னென்ன சிக்கல்கள் வந்தன என்று தொகுத்து ஒரு புரிதலை உருவாக்கிக்கொள்ள முயற்சி செய்தேன். வெண்முரசு இப்படி ஒரு பெரிய கூட்டான வாசிப்பின் வழியாகவே புரிந்துகொள்ளப்பட முடியும்

வெண்முரசைப் புரிந்துகொள்வதிலுள்ள சிக்கல் என்னவென்றால் நமக்கு நம்முடைய பண்பாட்டை ஆராய்வதற்கோ புரிந்துகொள்வதற்கோ நவீனமான கருவிகள் இல்லை என்பதுதான். நமக்கு இரண்டு வகையான பார்வைகளே கிடைக்கின்றன. ஒன்று colonial பார்வை. அதுதான் பிரபலமகா உள்ளது. அது நம்மை மரபை ஒரு objective materialistic பார்வையில் பார்ப்பதற்கு பயிற்சி அளிக்கிறது. நாம் நம்முடைய மரபின்மேல் வைக்கும் Historicism சார்ந்த பார்வைகளெல்லாம் இப்படித்தான் வருகின்றன. அதுதான் இன்றைக்கு இடதுசாரிப்பார்வையாகவோ திராவிடப்பார்வையாகவோ எல்லாம் கிளைபிரிந்திருக்கிறது.

அது மரபுக்கு ஒரு சரித்திரப்பின்னணியையும் பொருளாதாரப் பின்புலத்தையும் உருவாக்குகிறது. தர்க்கபூர்வமாக அதையெல்லாம் முன்வைக்கிறது. பல நாவல்கள் அந்தப்பார்வையைத்தான் கொண்டிருக்கின்றன. உதாரணமாக, எஸ்.எல்.பைரப்பாவின் பர்வா அந்தமாதிரியான நாவல். நவீனப்பார்வையில் அந்த நாவல் அப்படி ஏற்புக்குரியதாக இருப்பது அதனாலேதான். அந்தப்பார்வையை நாம் மானசீகமாக ஏற்றுக்கொள்ளும் நிலையிலிருந்துகொண்டிருக்கிறோம்

இன்னொரு பார்வையை இங்கெ உள்ள சம்ப்ரதாயமான பார்வை என்று நினைக்கிறேன். பக்திப்பார்வை அது. இதெல்லாம் நம்மோட சொத்து என்றும் இதையெல்லாம் நாம் போற்றிப்பாதுகாக்க வேண்டும் என்றும் நினைப்பது. பொதுவாகவே இந்தமாதிரியான அணுகுமுறை உடையவர்கள் பெருமிதம் மட்டும்தான் கொண்டிருப்பார்கள். துண்டுதுண்டாக அறிந்திருப்பார்கள். முழுக்க வாசிக்கமாட்டார்கள். ஆனால் எதையுமே மாற்றக்கூடாது என்று நினைப்பார்கள்.

இந்த இரண்டு அணுகுமுறையுமே வெண்முரசை வாசிக்கும்போது பிரச்சினையாக இருக்கின்றது. வெண்முரசிலே ஒரு objectivity யும் ரியலிசமும் உண்டு. அது விரிவான ஒரு Historicism முன்வைக்கிறது. அது அரசாங்கம் உருவாவது சாதிப்பிரச்சினை அரசியல்பிரச்சினை பொருளாதாரம் எல்லாம் பேசுகிறது. ஆனால் அங்கே நிற்காமல் சட்டென்று புராணமாகவும் ஆகிவிடுகிறது. புராணத்துக்கு உரிய உருவகக்கதைகளும் மாயக்கதைகளும் வந்துகொண்டே இருக்கின்றன. பலகதாபாத்திரங்கள் புராணத்திலே இருக்கின்றன. பல கதாபாத்திரங்கள் கூடவே ரியலிசத்திலும் இருக்கின்றன.

ஒரே கதாபாத்திரம் புராணத்திலும் ரியலிசத்திலும் இருந்துகொண்டிருக்கிறது. இந்த மர்மம்தான் வெண்முரசை வாசிப்பவர்களுக்கு பிரச்சினையாக இருக்கிறது. எங்கே இந்தநாவல் நவீனநாவலின் வடிவத்தைக் கடந்துபோய் புராணமாக ஆகிவிடுகிறது என்பதை முன்கூட்டியே சொல்லவே முடியவில்லை. உதாரணமாக துரியொதனனின் உடலில் காகங்கள் குடியேறுவதும் அவன் உருவம் மாறுவதுமெல்லாம் மாஜிக்கல் ரியலிசம் போல இருக்கிறது. ஆனால் அந்தக்கதாபாத்திரம் ரியலிச வார்ப்புடனும் இருக்கிறது.

இப்படி அடிப்படையிலேயே இரண்டு பார்வைக்கு நடுவே ஊசலாடிக்கொண்டே இருக்கிறது வெண்முரசு. திட்டம்போட்டு இரண்டையும் பின்னிக்கொண்டே இருக்கிறது. ரியலிசத்தை நம்பி வாசிப்பவர்கள் புராண அம்சங்களை வாசிக்கும்போது நம்பமுடியாமல் இருக்கிறது என்று சொல்லிவிடுவார்கள். புராண அம்சங்களை மட்டுமே பார்ப்பவர்களுக்கு நீண்ட அரசியல் விவரிப்புகளெல்லாம் புராணத்திலே இல்லாதவை, சும்மா சொல்லிவிடுபவை என்று தோன்ரிவிடுகிறது.

இது எல்லா நாவல்களிலும் உள்ளது. ஆனால் சிலநாவல்களில் இது குறைவு. போர் நெருங்கும்போது நாவல் பெரும்பாலும் ரியலிஸ்ட் நாவலாகவே உள்ளது. டால்ஸ்டாயின் நாவல்களைப்போல உள்ளது. ஆனால் அங்கும் அவ்வப்போது ஃபேண்டஸியின் கலர்கள் ஊடுருவிவிடுகின்றன. இந்த டெக்ஸ்சரைப் புரிந்துகொண்டு இதில் சரளமாக ஓடிச்செல்ல முடியாவிட்டால் வெண்முரசை வாசிக்கமுடியாது. இது ஒரு உலகம் இது இப்படித்தான் என்று நம்பிவிட்டால் பிரசிச்னையே இல்லை. கதையில் அர்ஜுனன் பாதாளலோகம் செல்வதையெல்லாம் ரசிக்கமுடியும்

இந்தவகையான சிக்கல்கள் இல்லாமல் இயல்பாக வெண்முரசை வாசிப்பவர்கள் உள்ளே சென்றுவிட்டார்கள். ஆனால் இப்படி இருக்கவேண்டும் இப்படி இருக்கிறதே என்றெல்லாம் யோசித்தவர்கள் குழம்பிவிட்டார்கள். எந்த புதிய இலக்கியப்படைப்பும் அதுக்கான ஒரு புதிய Aesthetic mode ஐ உருவாக்கிக்கொண்டுதான் வரும். முக்கியமான எல்லா படைப்புகளும் வெளிவரும்போது பழைய Aesthetics வைத்து அவற்றை மதிப்பிட்டு நிராகரிக்கமுயன்றிருக்கிறார்கள். வார் ஆண்ட் பீஸ் கூட ஆபாசநூல் என்று வசைபாடப்பட்டிருக்கிறது. அந்த Aestheticsஸின் உள்ளேபோக கொஞ்சம் மனப்பயிற்சி வேண்டும். என்னுடைய சிக்கல் அதுதான் என்று நான் புரிந்துகொண்டேன்

இன்னொருசிக்கல் என்னவென்றால் இதிலுள்ள blend. எனக்கு அந்தச்சிக்கல் எங்கே வந்தது என்றால் குரங்குகள் பேசும் இடம் வந்தபோது. என்னது இது, குழந்தைக்கதை மாதிரிப்போகிறதே என நினைத்தேன். அதன்பிறகு சில தனிப்பட்ட சாகசக்கதைப் பகுதிகள் ஒரு காமிக் நாவல்போல இருந்தன ஆனால் இந்நாவல் எல்லாவற்றையும் கலந்துதான் எழுதிக்கொண்டிருக்கிறது என்ற புரிதல் பிறகு வந்தது. இவ்வளவுபெரிய பக்கங்களில் எழுத்துமுறையின் எல்லா வகைகளும் வந்துகொண்டிருக்கும். இதில் குழந்தைக்கதைகளும் அடக்கம்தான். ’

எந்த வகையான எப்பிக்கில் இப்படி ஒரு blend  உள்ளது என்று பார்த்தால் பிரிமிட்டிவ் எப்பிக்குகளில் உள்ளது. ராமாயணம் மகாபாரதம் இலியட் ஒடிசி எல்லாவற்றிலும் இந்த blend  உள்ளது. ஆனால் பிற்கால எப்பிக்குகளான டிவைன்காமெடி போன்றவற்றில் இல்லை. அவற்றில் யூனிட்டிதான் உள்ளது. இந்த நூல் ஒரு அறிவுத்தொகுப்பாக அல்லது ஒரு நூல்தொகுப்பாக தன்னை நினைத்துக்கொள்வதனால் இந்த blend அதுக்கு தேவையாகிறது என்று நினைக்கிறேன். நேரடியான தத்துவமும் இந்த வடிவத்திற்குள் இயல்பாக அமைந்துகொள்கிறது

இதில் ஒரு சுவாரசியமான விஷயத்தைக் கவனித்தேன். இதிலுள்ள காமிக் அம்சம் எப்படி வருகிறது? உண்மையிலே இந்த காமிக் அம்சம் பழைய எப்பிக்குகளில் உள்ள வீரசாகச அம்சம்தான். அதை எடுத்து காமிக் என்ற வடிவத்தை இப்போது உருவாக்கியிருக்கிறார்கள். வெஸ்டர்ன் காமிக் ஹீரோக்கள் எல்லாமே வெஸ்டர்ன் கிளாஸிக்குகளில் இருந்து நிழலாக வந்தவர்கள்தான். ஹெர்குலிஸ், யுலிஸஸ், அக்கிலிஸ் என்று எல்லா காமிக் ஹீரோக்களுக்கும் ஒரு ஆர்க்கிடைப்பல் பேட்டர்ன் உண்டு. ஆனால் நாம் காமிக் வழியாக சாகசத்தை பார்த்துவிட்டு ஒரு எப்பிக் கதையை வாசிக்கும்போது காமிக்தன்மை என்று நினைக்கிறோம். ஹெர்குலிசே இன்றைக்கு அப்படித்தான் தோன்றுவார் என நினைக்கிறேன்.

இந்நாவல்களில் ஒவ்வொன்றுக்கும் ஒருவடிவம் உள்ளது. அதை ஒன்றிலிருந்து ஒன்றுக்குத் தாவி வாசிக்கவேண்டியிருக்கிறது. அந்த தனிவடிவம் தனிமொழி ஆகியவற்றை நாம் புரிந்துகொண்டுதான் ஒட்டுமொத்தமாக ஒரே படைப்பு என்றும் புரிந்துகொள்ளவேண்டும். உதாரணமாக முதற்கனல் சுருக்கமான வேகமான கதைகளால் ஆனது. ஆனால் மழைப்பாடல் அப்படி அல்ல. விரிவான நிலம், நிறைய மனிதர்கள், ரியலிஸ்டிக்கான அரசியல்சூழ்ச்சிகள் எல்லாம் உண்டு. அதன் அமைப்பே வேறு. அடுத்த நாவலான வண்ணக்கடல் ஒரு travel playயும் இணைந்தது. அதற்கு அடுத்த நாவலான நீலம் ஒரு உணர்ச்சிகரமான ரொமாண்டிக் மைனர் எப்பிக் போல உள்ளது. இந்திரநீலமும் அதே அமைப்பு கொண்டது.

இப்படி ஒவ்வொரு நாவலும் ஒரு வடிவில் இருக்கும்போது ஒருநாவலில் இருந்து நாம் இயல்பாக இன்னொன்றுக்குப் போகமுடியவில்லை. பிரயாகையும் வெண்முகில்நகரமும் ஒரே நாவல்போல உள்ளன. இந்தவகையான வேறுபாடு புரியாதவர்கள் ஒருநாவலின் அதே மனநிலையையும் பார்வையையும் எல்லா நாவலிலும் எதிர்பார்க்கலாம். ஒரே நாவலை மட்டும் வைத்து வெண்முரசை மதிப்பிட்டால் வரும் எண்ணம் இன்னொரு நாவலைப் படிக்கும்போது மாறிவிடலாம்

இந்த மாறுதல்கள்தான் வெண்முரசின் சிக்கலை உருவாக்குகின்றன. அதாவது ஆவேசமான உக்கிரமான பல பகுதிகள் உள்ளன. அவை உச்சம் என்று நினைத்து வாசித்தோமென்றால் அதைப்போலவே எதிர்பார்ப்போம். மென்மையான சூச்சுமமான இடங்களை தவறவிட்டுவிடுவோம். துரியோதனனின் பிறப்பு அதேபோல ஒரு உக்கிரமான இடம். அப்படியே வாசித்துப்போனால் அவனுடைய உடல் மாறும்போது மனசும் மாறுவதும் அப்பாவின் கையால் அடிவாங்கும்போது அவனில் வரும் மாற்றங்களும் நமக்குத்தெரியாமலேயேபோகும். கர்ணன் துரோணரால் அவமானப்படுத்தப்படுவது நமக்கு முக்கியமாகத் தெரியும். கர்ணன் ராதை தன் அம்மா என்பதைவிட அதிரதனின் மனைவிதான் என்று உனரும் இடம் நமக்கு அவ்வளவு கூர்மையாக தெரியாமல்போய்விடும்.

வெண்முரசை இப்படி ஒரு compound text ஆகத்தான் வாசிக்கவேண்டும். அதுதான் அதை வாசிப்பதற்கான வழிமுறை. நாம் ஒரு சிறிய நாவலை வாசிக்கும்போது அதன் textuality யை எப்படி உருவாக்கிக்கொள்கிறோம்? நமக்கு ஏற்கனவே ஒரு இலக்கணம் மனசிலே இருக்கிறது. அது அதுக்கு முன்பாக நாம் வாசித்துள்ள படைப்புக்களிலிருந்து நமக்கு வருவது. அதைத்தான் நாம் பார்க்கிறோம். அது இருந்தால் சரியான வடிவம் என நினைக்கிறோம். ஆனால் எல்லா காலத்திலும் பெரிய படைப்புகளும் முக்கியமான படைப்புகளும் நம்முடைய form consciousக்கு சவால்விட்டுக்கொண்டேதான் இருக்கும். நாம் அந்த முன்முடிவுகளை அவிழ்த்தாகவேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறோம்

ஆனால் அதெல்லாம் இயல்பாக நடைபெறாது. மெல்லமெல்ல அது நிகழ்கிறது. கொஞ்சம் கொஞ்சமாகப்பேசி பேசித்தான் நாம் நம்முடைய வழக்கமான form consciousல் இருந்து வெளியேவந்து ஒரு புதியபடைப்பை மனசிலே உருவாக்கிக்கொள்ளமுடிகிறது. வெண்முரசிலே எனக்குப்பிடித்த வரி இதுவர்கள் நின்றாடுவதற்கும் வென்றாடுவதற்கும் தோற்றமைவதற்கும் தோற்றலேவெற்றியென அறிந்து நகைப்பதற்கும் முடிவற்ற மேடைகளைச் சமைத்தது அவர்களின் கனவு.அந்த வரியைத்தான் வெண்முரசுக்கும் சொல்லவேண்டும்.