Monday, September 9, 2019

அதிரதனும் கர்ணனும்அன்புள்ள ஜெ,

கர்ணனின் பெண்களுடனான விலக்கத்தைப் பற்றிய கடிதங்களைக் கண்டேன். அவ்விலங்கங்களில் தலையாயது ராதை உடனான அவனது விலக்கம். அது கர்ணன் கிட்டத்தட்ட உடைவது தான். அவன் முற்றிலும் எதிர்பார்க்கவே செய்யாத ஒன்று.

மாறாக அதிரதர் கர்ணனை கைவிட்டாரா எனக் கேட்டால் வெண்முரசு இல்லை என்றே சொல்கிறது. ஆம், அவர் உறுதியாக இருந்ததால் தான் ராதை விருஷாலியை அவன் மனைவியாக்குகிறாள். ஆனால் அதற்கு காரணம் உண்மையிலேயே அதிரதர் தானா? இல்லை. அதிரதர் எப்போதுமே கர்ணனை தன் மைந்தனாக மட்டுமே எண்ணுபவர். எனவே இயல்பாகவே மைந்தன் தன் நீட்சியாக இருக்க வேண்டுமென விரும்பியவர். கர்ணனின் இளம்பருவத்தில் இருந்தே அவர் அவன் சிறந்த குதிரை சூதனாக வரத் தேவையானவற்றை வலியுறுத்துபவராகவே வருகிறார். ஆனால் அத்தகைய சமயங்களில் எல்லாம் அவனை அவன் விரும்பிய திசையில் செல்ல உதவுவது ராதை. அவளால் அவரை எளிதாக கடந்து செல்ல இயலும். எனவே தான் விருஷாலி விஷயத்திலும் அவன் அவள் உதவியை நாடுகிறான். ஆனால் இம்முறை ராதை வேறு முடிவை எடுக்கிறாள். அதற்கு காரணமாக கர்ணன் மீதான ஆள்கையில் தன் இடத்தை உறுதிப் படுத்திக் கொள்வது என்பது போன்ற சமையலறை அதிகாரப் போட்டியாகக் கூட இருந்திருக்கலாம்.அதை அதிரதன் மீது சுமத்தி தன்னை மறைத்துக் கொள்கிறாள் அவள். எனவே தான் கர்ணன் உள்ளூர விலகுகிறான். அதை முதன்முதலில் அறிபவளும் ராதை தான். எனவே தான் அவள் கசப்பு நிறைந்தவளாக வாழ்ந்து மடிகிறாள்.

அப்படியெனில் அதிரதன் கர்ணன் உறவு? எல்லா தந்தை மைந்தர் உறவு போலவே மைந்தன் தன்னைக் கடந்து விட்டதை, அவன் வாழ்வைப் பற்றி இனி தான் அச்சம் கொள்ளத் தேவையில்லை அல்லது தன்னால் செய்யக் கூடுவது ஒன்றுமில்லை என்பதை உணர்ந்து விடுதலை கொள்கிறார். அவர் அளவு கர்ணனைப் புரிந்து கொண்டவர் இன்னும் ஒருவரே. அதை அவர் ராதையுடனான கர்ணனின் இறுதிச் சந்திப்பில் அவர் பேசுவதைக் கொண்டு அறியலாம். ஆம், அதிரதர் அவனைக் கைவிடவில்லை. அவனை விலக்கவில்லை.

அதன் பிறகே அவன் போருக்கெழுகிறான், நிறைவுடன். அவனளவில் ஒரு பெருங்கடன் முடிந்துவிட்டது. அவனைக் கைவிடாத மற்றொருவர் சிவதர். துரியனுடனான அவன் உறவின் தளம் வேறு. வெண்முரசில் எந்த தந்தையுமே மைந்தனைக் கைவிட்டதில்லை, துணைக் கதைகளில் வரும் ஓரிருவரைத் தவிர.

அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்

கவிஞன் 4
அன்புள்ள ஜெ

கவிஞன் பற்றிய கடிதங்களில் ஒரு வரி. நீடுவாழிகளால் இயங்குகிறது இவ்வுலகம். வியாசர் சிரஞ்சீவி. அவர் சொல்வழியாக அமரத்துவம் அடைந்தார். ஆனால் வஞ்சத்தால் அமரத்துவம் அடைந்தவன் அஸ்வத்தாமன். அவனும் இந்த புவியின் இயக்கத்திற்கு இன்றியமையாதவன்தானா? வெண்முரசு அப்படித்தான் சொல்கிறது என்ற எண்ணம் வந்தது

செல்வக்குமார்

Sunday, September 8, 2019

இரும்பு
அன்புள்ள ஜெ

வெண்முரசில் வரும் கவிதைமொழியை கதையோட்டம் காரணமாக நாம் பலசமயம் வாசிப்பதில்லை. ஆகவே அதை தனியாக வாசிக்கையில் ஒரு திகைப்பு உருவாகிறது. இந்நாவல் இது முடிவடைந்தபின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தான் வாசிக்கப்படும் என்று தோன்றுகிறது

தாரகனின் நெஞ்சின் குருதியை உண்டு தங்கம் குளிர்ந்தது. அவன் மூச்சின் குருதியை உண்டு வெள்ளி அணைந்தது. அவன் விழைவின் குருதியை உண்டு செம்பு அடங்கியது. ஆன்றோரே, அவன் வஞ்சத்தின் குருதியை உண்ணப்பெற்றது இரும்பு. அது அணையவேயில்லை.

இரும்பைப்பற்ரி இந்நாவல் சொல்லும் பல்வேறு கவிதைவரிகளுடன் இந்த வரியை இணைத்து பொருள்கொள்ளவேண்டும். அத்தகைய வாசிப்புக்கள் இனிமேல் வரலாம்

ஆனால் எந்நிலையிலும் முழுசாக வாசித்துமுடிக்கப்படாத நூலாகவே இது இருக்குமென நினைக்கிறேன்

செல்வக்குமார்

விலக்கம்


அன்புள்ள ஜெ

ராதை கர்ணனை தன்னுடைய கள்ளமின்மையால் விலக்கிவிடுகிறாள் என்று ஒருவரியை இக்கடிதங்களில் வாசித்தேன். கூர்மையான வரி. குந்தி தன் கள்ளத்தால் அவனை இழக்கிறாள் என்றவரியையும் கூடவே சேர்த்துக்கொள்லலாம் என நினைக்கிறேன்

ஆச்சரியம் என்னவென்றால் விருஷாலி தன்னுடைய பணிவால் கர்ணனை விலக்குகிறாள். கலிங்க அரசி தன்னுடைய நிமிர்வால் அவனை விலக்குகிறாள்

எப்படியானாலும் அவனுக்கு மிஞ்சுவது அந்த விலக்குதல்தான்

ராஜசேகர்

பகடி
ஜெ

ராதையும் கர்ணனும் விலகும் இடத்தைப்பற்றி ஒரு வாசகர் எழுதியிருந்தார். அந்த அத்தியாயத்தில் ஒரு வரி எனக்குப் பிடித்திருந்தது. அதைக்குறித்து வைத்திருந்தேன்

“தத்துவத்தை குதிரைகள் இளவயதில் விரும்புவதில்லை. ஆகவேதான் நாம் அவற்றுக்குக் கடிவாளம் போட்டுவிடுகிறோம்” 

பொதுவாக வெண்முரசில் வெடித்துச்சிரிக்கவைக்கும் இடங்கள் இல்லை. ஏனென்றால் அவை இந்த அமைப்புக்குள் அமையாது. ஆனால் இத்தகைய நுண்பகடிகள் பல உண்டு. இந்தவரியை ஒரு சாதாரண வாசகர் இதில் என்ன நகைச்சுவை இருக்கிறது என்றுதான் நினைப்பார். ஆனால் கடிவாளம்போட்டபின் குதிரைகள் தத்துவத்தை விரும்புகின்றன என்று மாற்றிக்கொள்ளும்போது ஒரு வருத்தமான புன்னகை வருகிறது. அதுதான் வெண்முரசின் வேடிக்கையான வரிகளின் இயல்பு

அதோடு தத்துவமாகப் பொழியும் அதிரதன்மீதான பகடியும்கூட இது

பாஸ்கர்

கவிஞன் 3
ஜெ

ஆச்சரியமான ஒற்றுமை. இமைக்கணம் அறிவித்ததுமே நான் அதைத்தான் வாசித்துக்கொண்டிருந்தேன். அதில் இந்த அத்தியாயத்தை மாயத்தால் கட்டுப்பட்டவன்போல வாசித்துக்கொண்டிருக்கையில் இந்தக் கடிதம் வந்திருக்கிறது . எனக்குப்பிடித்த வரிகளை மேற்கோள் காட்டிக்கொள்கிறேன்


வியாசனைப்பற்றிய மகத்தான வரி. அதில் காலந்தோறும் கோடிமுறை கண்டடையப்படும். விரும்பவும் வெறுக்கவும் படுவாய். வசையும் வாழ்த்தும் உன் செவிகளில் அலையடிக்கும் என்றவரி முக்கியமானது. இன்றைக்கும் வியாசன் வசைபாடப்படுபவனும்கூட

ஜெயராமன்

Saturday, September 7, 2019

ராதையும் கர்ணனும்ஜெ

வெண்முரசில் உச்சகட்ட காட்சிகள் பல உள்ளன. ஆனால் மிகநுட்பமான சிலகாட்சிகளால்தான் நான் அதை புரிந்துகொள்கிறேன். அதிலொன்று கர்ணனுக்கும் ராதைக்குமான உறவு முறியும் இடம். கர்ணன் ராதையையே அன்னை என நினைக்கிறான். ஆனால் அவள் முதன்மையாக அன்னை அல்ல மனைவிதான். சூதப்பெண்தான். தன்னை அவள் உள்ளூர மகனாக ஏற்கவில்லை. ஆகவே தான் சூதப்பெண்ணை மணக்கவேண்டும் என்கிறாள். அது தெரிந்ததும் அவனுக்குள் ஏதோ ஒன்று உடைந்துவிடுகிறது. அதன்பின் அவளை அவனால் எண்ணிப்பார்க்கவே முடியவில்லை

ஆனால் அவன் அதை அவளிடம் காட்டவே இல்லை. உல்லாசமாகப்பேசுகிறான். வாழைப்பூக்கூட்டை பற்றி நகைச்சுவை சொல்கிறான். அவளிடம் முன்பெனவே கொண்டாடி கொஞ்சிவிட்டு விடைபெறுகிறான். ஒவ்வொருவராக அவனைக் கைவிடுகிறார்கள். முதலில் அதிரதர். அதன்பின் ராதை. காதலி ஆசிரியர் அரசு என எல்லாரும் கைவிடுகிறார்கள். முதலில் கைவிடுபவள் அன்னை

ஆனால் எந்தநிலையிலும் அவன் பெரிய உள்ளத்துடன் தான் இருக்கிரான்,.ராதை தன் கள்ளமில்லாத தன்மையால் அவனைக் கைவிடுகிறாள். ஆனால் அவன் அதை அவளிடம் காட்டிக்கொள்ளவே இல்லை. கர்ணனின் குணச்சித்திரம் ஓங்கி நின்றிருக்கும் இடம் அது. அந்த இடத்தை இந்த இடைவெளியில் மீண்டும் சென்று வாசித்தேன்

ராஜ்குமார்

வாசகர்
அன்புள்ள ஜெ

முதற்கனல் முதல் வெண்முரசை வாசிப்பவர்கள் எத்தனைபேர் என்ற ஆச்சரியம் எனக்கு உண்டு. நான் சிலகாலம் முன்பு ஒருமுறை ரயிலில் பயணம்செய்யும்போது ஒரு நண்பரைப் பார்த்தேன். விஸ்வநாதன் என்று பெயர். உங்க்ள் வாசகர் அல்ல. வெண்முரசு மட்டுமே வாசிக்கிறார். மெடிக்கல்துறையில் இருக்கிறார். அவரைக் கண்டது ஆச்சரியமாக இருந்தது. இன்னொருவர் வாசிக்கிறர் என்பது அல்ல, அவாறு ஒருவரை சந்திக்கமுடிவதே அவ்வாறு பலர் இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது என்பதனால்தான்

நேற்று மீண்டும் ரயிலில் இன்னொருவரைக் கண்டேன். நம்பவே முடியாத இடத்தில். ஷிர்டியில். அவரும் வெண்முரசைமுழுக்கவே வாசிப்பதாகச் சொன்னார். நிறையப் பேசிக்கொண்டோ. ஸ்ரீரங்கன் என்று அவருடைய பெயர். ஆச்சரியமாக இருந்தது. அவரிடம் பேசப்பேச வெண்முரசின் பல அறியாநுட்பங்கள் எழுந்தெழுந்து வந்தன

வாழ்த்துக்கள்

ஆர். ஸ்ரீனிவாஸ் 

பீஷ்மரின் உள்ளம்2
அன்புள்ள ஜெ

பீஷ்மரின் ஆளுமை பற்றிய கடிதமொன்றை வாசித்தேன்

அந்தக் கடைசிக்காட்சியில் பீஷ்மர் பீமனை மட்டுமே முழுமனசுடன் ஏற்கிறார். அவருக்கு அதிர்ச்சியே இல்லை. அவன் குலாந்தகன் என அறிந்திருக்கிறார் என்று தோன்றியது. அவனை அவர் வாழ்த்துகிறார். மற்றவர்களைச் சலிப்புடன் பார்க்கிறார்

இதேகாட்சி வந்திருக்கிறதா என்று பார்த்தேன். அல்லது இதற்கான க்ளூ. வெண்முரசில் எல்லா காட்சிகளுக்கும் முன்னர் தெளிவான க்ளூ இருக்கிறது. பெரிய தொடர்ச்சி இருக்கிறது

கடைசியில் கண்டுபிடித்தேன். பீஷ்மர் காட்டிலிருந்து திரும்பும்போது இளைஞர்களாகிய பாண்டவர்களையும் கௌரவர்களையும் பார்க்கிறார். அவர் சலிப்புற்றிருக்கிரார். அவர்களை ஒப்புக்கு வாழ்த்துகிறார். ஆர்வமே இல்லை

ஆனால் பீமனை மட்டும் மனம் உவந்து வாழ்த்துகிறார். அவன் மடியில் ஒரு பாம்பை வைத்து கட்டியிருக்கிறான். அது கீழே விழுந்து செல்வதைக் கண்டு புன்னகைபுரிகிறார். அங்கேயே அவருடைய மனம் தெரிந்துவிடுகிறது

சரவணன் கார்த்திகேயன்

கவிஞன்2
ஜெ

மகத்தான வரிகள் என ஒருவர் சுட்டியிருந்தார். நானும் மீண்டும் மீண்டும் வாசிப்பது இமைக்கணத்தின் அந்தப்பகுதியைத்தான். என்ன ஒரு உச்சம். இங்குள்ள அனைத்தையும் கைவிட்டுவிட்டே நீ வான்புகமுடியும் என்று சரஸ்வதி சொல்லும்போது அப்படி ஒரு முக்தி வேண்டாம் என்கிறார் வியாசர். அப்போது தேவி சொல்கிறாள்


ஏதோ ஒருவகையில் இங்குள்ள எல்லா கவிஞர்களையும் குறிக்கிறது இந்த வரி. வெண்முரசு எழுதும் காவியகர்த்தனையும் குறிக்கிறது

சாரங்கன்

அர்ப்பணம்
மானுடர் இயல்பு போலும் அது, தாங்கள் எய்துவதெல்லாம் தங்களால்தான் என்பவர்கள் தாங்கள் இழந்தவற்றுக்கு தெய்வங்களை பொறுப்பாக்குவார்கள்

என்ற வரியை வாசித்தபோது ஆமாம் என்று தோன்றியது. அது ஒரு பெரிய தப்பு நாமே நமக்குச் செய்துகொள்ளும் மோசடி என்று தோன்றியது. ஆனால் அடுத்தவரி

எல்லாப் பழியையும் தெய்வங்கள் மீது போடுவதும் ஒரு உளவிரிவே. இப்புவியில் நிகழும் ஒவ்வொன்றுக்கும் தெய்வங்கள் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். அறத்திற்கும் மறத்திற்கும், அழிவிற்கும் ஆக்கத்திற்கும்

என்பதை வாசித்தபோது ஒருகணம் ஒன்றும் புரியவில்லை. புரிந்ததும் கண்ணீர் வருமளவுக்கு ஒரு நெகிழ்வை அடைந்தேன். அது கள்ளமில்லாமையால் வரும் ஒரு முதிர்ச்சிதான் என்று புரிந்துகொண்டேன். கிருஷ்ணார்ப்பணம் என என் தாத்தா சொல்வார். அந்த சொல்லின் தாத்பரியம் புரிந்தது

ஸ்ரீனிவாசன்

Friday, September 6, 2019

பொறிஅன்புள்ள ஜெ

அபிமன்யூவின் சக்ரவியூகப்போர் பற்றிய பகுதிகளை இப்போதுதான் வாசித்தேன். அந்த போர்ச்சூழ்கையை ஆச்சரியமாகத்தான் பார்த்தேன். அதற்கு இவ்வளவு குறியீட்டு அர்த்த இருக்குமென நினைக்கவே இல்லை. தாமரையாகவும் சக்கரமாகவும் மாறி மாறி அதை வர்ணிக்கிரீர்கள். மனிதர்கள் அனைவருமே சிக்கிக்கொண்டிருக்கும் சக்கரவியூகம் அது என்று நினைக்கையில் ஆச்சரியம்தான் ஏற்படுகிறது

அவன் பிறப்பு முதல் எத்தனை வியூகங்களில் சிக்கியிருக்கிறான் என்று பார்த்தேன். அர்ஜுனனுக்கு மகனாகவும் கிருஷ்ணனுக்கு மருமகனாகவும் பிறந்ததேகூட பெரிய பொறிதான். ஒவ்வொரு பொறியாக விளக்கியபடியே வந்து கடைசியில் அவன் மீளவே முடியாது என்று காட்டுகிறது வெண்முரசு. அந்த ஒவ்வொரு பொரியும் தாமரையின் ஓர் இதழ்

அர்விந்த்

பீஷ்மரின் ஆளுமைஅன்புள்ள ஜெ

முதற்கனல்முதல் ஒவ்வொரு கதாபாத்திரமாகத் தொட்டு அவற்றின் வளர்ச்சியை மனதில் மேப் போட்டு பார்த்துக்கொள்வதற்கான சந்தர்ப்பம் இது என்று தோன்றுகிறது. முதலில் என் மனதில் வருபவர் பீஷ்மர்தான். ஆரம்பத்தில் அவரை தேவவிரதன் என்றுதான் நினைத்தேன். ஆனால் துறந்தவர்கள் இனித்துக்கொண்டே செல்லவேண்டும் என்று குன்றக்குடி அடிகளார் ஒரு உரையிலே சொல்கிறார். ஆனால் பீஷ்மர் கசந்துகொண்டே செல்கிறார்/ அதற்கான காரணம் என்ன என்று வெவ்வேறு பார்வைகள் வந்துகொண்டே இருந்தாலும் கடைசியில் தெரிகிறது, அவர் துறந்தவை எச்சமில்லாமல் துறக்கப்படவில்லை என்பது. குருக்ஷேத்திரத்தில் அவர் பீமனிடம் பேசும் இடமே உதாரணம். அதிலிருந்து வரும் தெளிவுடன் பழைய நிகழ்ச்சிகளை வாசிக்கையில் முற்றிலும் புதிய கோணம் திறக்கிறது. பல மர்மங்கள் தெளிவடைகின்றன

ஆனந்த்

கவிஞன்


அன்புள்ள ஜெ

கவிதையைப்பற்றிய மகத்தான வரி இது. பல ஆண்டுகளாக சுழன்றுவருகிறது. கவிஞனுக்கு வீடுபேறில்லை என்று சொல்லும் இளைய யாதவர் சொல்கிறார்.

தன் கவிதையிலிருந்து கவிஞனுக்கு விடுதலை இல்லை, ஆசிரியரே. அவ்வாறு விடுவிக்கப்படுவானென்றால் அதுவே அவன் அடையும் துயரப்பாழ். தாங்கள் மட்டுமல்ல, பெருங்கவிஞர்கள் அனைவருமே நீடுவாழிகளே. அவர்களின் நற்கொடையும் தீயூழும் கவிதையே

கண்ணீருடன் அதை ஏற்று ஆம் என்று ஒப்புக்கொள்கிறார் வியாசர். இந்த அத்தியாயம்தான் வெண்முரசின் உச்சம் என்று சொல்வே

அருள்


எச்சம்அன்புள்ள ஜெ

பீஷ்மர் சொல்லும் இந்த வரிகளை இணையத்திலிருந்துதான் நானே கண்டுபிடித்தேன். இத்தனைக்கும் வெண்முரசை நான் ஒவ்வொருநாளும் இரண்டுமுறை வாசித்துவிடுவேன்

மண்ணையும் பெண்ணையும் அளிப்பதென்றால் எச்சமின்றி அளிக்கவேண்டும். உன்னில் ஒரு துளி விழைவோ ஏக்கமோ எஞ்சலாகாது. அளித்தேன் என்னும் எண்ணமும் மிஞ்சியிருக்கலாகாது. எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் அது உருவாகவும்கூடாது. அது எளிதல்ல. ஷத்ரியர்களுக்கு இயல்வதே அல்ல!

பீஷ்மரின் வாழ்க்கை அந்த முள்படுக்கையில் ஏன் முடிகிறது என்பதற்கான காரணம் இந்த வரிகளில் இருக்கிறது.

சந்திரகுமார்

அம்பையும் முருகனும்அன்புள்ள ஜெ

இங்கே அம்பை பற்றிய கடிதங்களைக் கண்டேன். அம்பை அஸ்தினபுரியின்மேல் கடுமையான கோபத்துடன் எரிந்தபடிச் சென்றாலும் அவளுக்குள் ஒரு சிறிய கனிவு பிறக்கிறது

உடலே சிதையாக ஆன்மா எரிய அம்பை அங்கிருந்த மலைமீதேறிச் சென்றாள். அங்கே சிறுகடம்பவனமொன்றுக்குள் கைவேலுடன் நின்றிருந்த குழந்தைமுருகனின் சிலையைக் கண்டதும் அவள் முகம் கனிந்தது. உடலெங்கும் நாணேறியிருந்த நரம்புகள் அவிழ்ந்தன. முழந்தாளிட்டு அந்த முருகனின் கரியசிலையை மார்போடணைத்துக்கொண்டதும் அவள் முலைகள் கனிந்து ஊறின.

இந்த கனிவினால்தான் அம்பையால் அஸ்தினபுரி காப்பாற்றப்படுகிறது. அதில் ஒரு உயிரின் துளி எஞ்சுகிறது. அது முருகனின் அருள். மீன்டும் அஸ்தினபுரி பிறந்து எழுவதற்கு முருகனின் அருள் உதவுவதாக வரும் என நினைக்கிறேன்

ராஜசேகர்

Thursday, September 5, 2019

புழுக்கள்ஜெ

குருக்ஷேத்திரப்போரை வெண்முரசு சித்தரிப்பதை இப்படிச் சுருக்கமாகப் புரிந்துகொள்ளமுடியும். மனிதர்களாக களத்துக்கு வந்தார்கள். புழுக்களாகச் செத்தார்கள். ஆனால் வெண்முரசு புழுக்களை ப்போல மனிதர்கள் இருப்பதைச் சொல்லிக்கொண்டே இருக்கிறது.

பெருந்திரளென இருக்கையிலும், பெருந்திரளென்றிருக்கையில் மட்டுமே பொருள் கொள்ளும் உடல் கொண்டிருக்கையிலும், திரளிலிருக்கிறோம் என்று அறியாத உயிர்த்துளியே புழு

என்றவரி மேலும் ஆழமானது. புழுக்களை ஒருவகை கூட்டான உயிர்களாக வெண்முரசு காட்டுகிறது. கடைசியில் போர்க்களத்தில் நிகழ்வது புழுக்களின் அலை மட்டும்தான்

ராம்குமார்

விலைஜெ

வெண்முரசில் வரும் இந்த வரியை மிகவும் ஆழ்ந்து வாசித்தேன். ஒரு ஒழுக்கில் இந்த வரி வந்துசெல்கிறது. தனியாக வாடித்தால்தான் அர்த்தமே தெரிகிறது

செல்வம் கொண்டவன் தனிமையை அடைவான். குடிப்பிறப்பு கொண்டவன் இணையான எதிரியை அடைவான். வீரம் ஆணவத்தை அளிக்கும். சூழ்ச்சி ஐயத்தையும், அச்சம் சினத்தையும், காமம் சலிப்பையும் அளிக்கும். வஞ்சம் துயிலின்மையை. அதைத் தெரிவுசெய்தபின் நீ ஒருகணமும் உளமுறங்க இயலாது!

ஒவ்வொன்றுக்கும் ஒருவிலை உண்டு. இங்கே அந்த விலை என்ன என்பதைச் சொல்கிறது வெண்முரசு. அஸ்வத்தாமன் அந்த விலையைத்தான் இனிமேல் வாழ்க்கை முழுக்க அளிக்கப்போகிறான் இல்லையா?

சிவக்குமார்


காளி
ஜெ

இந்தக் கடிதப்பகுதியில் ஒரு உரையாடல் உருவாகி வருவது சிறப்பாக இருக்கிறது. வெண்முரசைப்பற்றிப் பேச உண்மையில் தளமே இல்லை என்பதே நிலைமை. நான் முதற்கனல் வாசித்தேன். அதிலுள்ள பல வரிகள் நேராக தீயின் எடையில் வந்து பொருந்திக் கொள்வதைக் கண்டேன்.


இந்த இடம்தான் முக்கியமானது. மூதன்னை அவள் காலில் விழுந்து கேட்கிறாள். ஆனால் அவள் ஓர் உறுமலோசையை மட்டுமே எழுப்புகிறாள். ஒன்றுமே சொல்லவில்லை. அப்படியே கடந்துசென்றுவிடுகிறாள். அதன்பொருள் இப்போதுதான் தெரியவருகிறது

அருண்குமார்

குடித்தலைவி

அன்புள்ள ஜெ,

மயானருத்ரர்களின் கொடிய நடனம் என்று ஒரு கடிதம் வந்தது [இந்தக் கடிதப்பகுதியில் பல விஷயங்களை வாசிக்கையில்தான் உண்மையில் இவ்வளவு வாசிப்பதற்கு இருக்கிறது வெண்முரசிலே என்ற எண்ணம் ஏற்படுகிறது] அந்த இடம் குரூரமானது. ஆனால் அந்தப் பின்புலமும் முக்கியமானது என நினைக்கிறேன். அங்கே காந்தாரியின் குடியே மிச்சமில்லாமல் அழிந்துகொண்டிருக்கிறது. அப்போதுதான் அவளுடைய குடியை அழித்தவர்களின் குடியின் அழிவுச்செய்தி வருகிறது. அவள் என் குடி என்றே அக்குழந்தைகளையும் சொல்கிறாள். அவர்களையும் சேர்த்தே நினைத்து அலறி அழுகிறாள். எல்லாக்குழந்தையையும் தன் குழந்தையாகவே நினைக்கிறாள்

சங்கர்

பேரன்னை3
அன்புள்ள ஜெ,

காந்தாரியைப் பேரன்னை என்று சொல்லும் கடிதங்களை வாசித்தேன். தீயின் எடை வந்து காந்தாரியில் முடிவதை நானும் ஆச்சரியமாகவே வாசித்தேன். ஆனால் அதுவே உகந்த அழகான முடிவு. காந்தாரிவிலாபம் என்னும் ஸ்திரீபர்வத்தைப்பற்றி பேசும்போது முன்பு பௌராணிகர் ஒருவர் சொன்னார். அது குருசேத்திர மண்ணே வந்து புலம்புவதுபோல என்று. எனக்கு அதை நினைவுகூரும்போது பாரதவர்ஷமே அழுதுபுலம்புவதுபோல என்று தோன்றியிருக்கிறது. அது ஒரு மிகப்பெரிய ஒப்பாரிப்பாட்டு. பாரத அன்னையாகவே அங்கே இருப்பவள் காந்தாரிதான்

ஜெயக்குமார்

Wednesday, September 4, 2019

குமிழி


அன்புள்ள ஜெ

நலம்தானே?

தீயின் எடை முடிந்தபின் எழுதவேண்டும் என்று நினைத்தேன். கிட்டத்தட்ட வெண்முரசு நாவலே முடிந்ததுபோலத்தான் இனி பெரிய ஒரு வைண்டிங் அப் மட்டும்தானே?

துரியோதனன் சாவு முன்னரே மனசில் நிகழ்ந்துவிட்டது. ஆனால் நகர்மேல் விழும் அழிவை எப்படி எண்ணுவதென்று தெரியவில்லை. ஹிரோஷிமா நாகசாகி மேல் அணுகுண்டு விழுந்தபோது இப்படி இருந்திருக்கும், நஞ்சும் மண்ணும் தீயும் ரத்தமும் மழையாகப்பொழிந்து அதை மூடியிருக்கும் என நினைக்கிறேன். அந்த பயங்கரமான அழிவு. அதை பலவகையில் சொல்லியிருக்கிறீர்கள். மூழ்கி அப்படியே மறைவதுபோல தோன்றியது. குமிழிகள் வெடித்து நுரை அழிவதுபோலத் தோன்றியது என்று சொல்லப்படுகிறது

சரித்திரத்தில் அப்படி பல நகரங்கள் இல்லாமலாகியிருக்கின்றன. எதுவுமே செய்ய முடியாது. ஏனென்றால் அது வரலறு. எல்லா நகரங்களும் வரலாற்றுப்பெருக்கில் சிறிய நுரைக்குமிழிகள் மட்டும்தானே?

ஆனந்த்

குழந்தை திரௌபதிசொல்லுக்குச் சொல் வைக்கும் குழந்தையைப்போல கொடிய எதிரி வேறில்லை. நம்மிடமிருந்து ஒரு துளியையும் அவள் பெற்றுக்கொள்வதில்லை. அவளிடமிருந்து நாம் பதற்றத்தையும் துயரையும் மட்டுமே பெற்றுக்கொள்கிறோம்-

வெண்முரசில் இருந்து எடுத்த இந்த வரியை நான் பலமுறை வாசித்திருக்கிறேன். இது ஒரு சூத்திரம் போல தோன்றுகிறது. அபிமன்யூவோ பாஞ்சாலியோ ஒரு அசாதாரணமான ஆளுமை குழந்தையாக இருக்கும்போது டிஃபிகல்ட் சைல்ட் ஆகத்தான் இருக்கமுடியும் என நினைக்கிறேன். ஒன்றுமே செய்யமுடியாது. பலசமயம் நம் பொறுமையே இல்லாமலாகிவிடும். ஆனாலும் நாம் காத்திருந்தாகவேண்டும். பொறுமையாக கடந்துசெல்லவேண்டும். எனக்கே நான் சொல்லிக்கொள்ளவேண்டியது இது

எஸ்

பலியாடுஅன்புள்ள ஜெ

துரோணரை திருஷ்டதுய்ம்னன் கொன்றதைப்பற்றிய கடிதம் வாசித்தேன். ஒருவகையில் திருஷ்டதுய்ம்னன் ஒரு பலியாடு. அவன் ஒரே காரணத்துக்காக வளர்க்கப்படுகிறான். அவனால் நியாய அனியாயங்களைப் பார்க்கவே முடியாது.அவன் பிறந்து வந்ததே ஒரே காரணத்துக்காகத்தான். அதைச் செய்கிறான். அவன் வாழ்க்கை முழுக்கக் காத்திருந்த நிகழ்வு. ஆகவே கொண்டாடுகிரான். ஆகவேதான் அவ்வளவு கொடூரமாக கொல்லப்படுகிறான்

அவனை நினைத்துப் பரிதாபம்தான் படவேண்டும். மகாபாரதத்தில் பல கதாபாத்திரங்கள் வெறும் பலியாடுகள்தான். விதியால் ஆட்டுவிக்கப்படுகிறவர்கள். அவர்களே எதையும் சொந்தமாகச் செய்துவிடமுடியாது. அவர்களின் நிலை ஏற்கனவே எழுதப்பட்டுவிட்ட ஸ்கிரிப்டில் நடிப்பது மட்டும்தான்

செந்தில்குமார்

பேரன்னை2
அன்புள்ள ஜெ,

காந்தாரி என்னும் பேரன்னை பற்றிய கடிதம் வாசித்தேன். அந்தக் குணச்சித்திரம் மகாபாரதத்தில் இல்லை என சாரதா எழுதியிருந்தார். மகாபாரதத்தில் அந்த குணச்சித்திரம்தான் உண்மையில் இருக்கிறது. ஆரம்பகாலக் கதையோட்டத்தை வாசித்தால் அப்படித் தோன்றாது. நாடகங்களில் காந்தாரி பொறாமைபிடித்தவளாகக் காட்டப்பட்டிருப்பாள். ஆனால் ஸ்திரீபர்வம் காந்தாரிக்காகவே எழுதப்பட்டுள்ளது. அது ஏன் எழுதப்பட்டது என்று யோசித்தாலே காந்தாரி ஏன் முக்கியமான கதாபாத்திரம் என்று தெரியும். காந்தாரியை  பேரன்னையாகத்தான் மகாபாரதம் பார்த்திருக்கிரது என்று தெரியும்.

சாந்தகுமார்

பெருந்தந்தை-5
அன்புள்ள ஜெ,

வெண்முரசிலுள்ள துரியோதனனின் கதாபாத்திரத்திற்கும் கம்பராமாயணத்திலுள்ள ராவணனின் கதாபாத்திரத்திற்கும் இடையே ஒற்றுமை இருப்பதை நானும் கவனித்தேன். ஆச்சரியமான பல விஷயங்கள். குறிப்பாகத் தம்பியருடனான உறவைச் சொல்லலாம். மகாபாரத மூலத்தில் அப்படியொரு உறவு சொல்லப்படவில்லை. ராமாயண மூலத்திலும் கிடையாது. ஒரு பெருந்தந்தையாக அவனை ஆக்குவது நூறு தம்பிக்கு அண்ணன் என்பதுதான். அவன் போருக்குச் செல்வது நூறு கைகளுடன்தான். அவனை கடைசியில் தனிமையாக சாவதாக காட்டியிருப்பீர்கள். அதுவும் ராவணன் செத்ததுடன் இணைந்துபோகிறது. இந்த ஒற்றுமையைக்கொண்டுதான் நாம் வெண்முரசு முன்வைக்கும் துரியோதனனைப் புரிந்துகொள்ளமுடியும் என நினைக்கிறேன்

ஆர்.ஆறுமுகம்

Tuesday, September 3, 2019

சாமுண்டி
அன்புள்ள ஜெ

தீயின் எடை முடிந்ததும் நான் திரும்பிச்சென்று முதற்கனலை வாசித்தேன். முதற்கனலில் வரும் அம்பை நகர்நீங்கும் இடம் இப்போது மொத்த அஸ்தினபுரியும் மூளியாகி நின்றிருக்கும் இடத்துடன் எப்படியெல்லாம் பொருந்துகிறது என்று பார்த்தேன்.


மயான சாமுண்டியின் முகம் என்ற வரியை அன்றே ஞாபகத்தில் வைத்திருந்தேன். இப்போது அவள் அஸ்தினபுரியில் மண்டையோட்டுமாலை அணிந்துகொண்டு வந்து நின்றிருக்கிறாள்

சாரங்கன்

ருத்ரம்
ஒரு பேரன்னை அமர்ந்திருக்கிறாள். அவளுடைய பார்வைக்குமுன்னால் ஒவ்வொரு கருவாகக் கலைந்துகொண்டிருக்கிறது. அவருடைய குடியில் ஒரு கருகூட மிஞ்சுவதில்லை. கொடூரமான ஒரு முடிவு. நினைக்கவே அந்தக் காட்சி பெரிதாகிக்கொண்டிருக்கிறது. அந்த நாடகத்தருணம் மிகச்சுருக்கமாகவே முடிந்துவிட்டது. பலநினைவுகள் பலநிகழ்வுகள். ஆகவே இந்த கொடிய முடிச்சை வாசகர்கள் கொஞ்சம் பிந்தித்தான் புரிந்துகொள்ளமுடியும். காந்தாரியின் கண்முன் கௌரவக்குடி முழுமையாக அழிகிறது. போரில் அனைவரும் செத்துவிட்டார்கள். எஞ்சியிருப்பவர்கள் மைந்தர்களின் பெண்களின் வயிற்றிலிருக்கும் கருக்கள். அவையும் அழிகின்றன. மணலில் நுரை மறைவதுபோல என்று சொல்வார்கள். அதே போல. கொடுமையான ஒரு இடம். ஆனால் மிக மிக சுருக்கமாக, அமைதியாகச் சொல்லப்பட்டு முடிந்துவிட்டது மயான ருத்ரர்களின் கொடிய நடனம் அது

செந்தில்குமார்

பேரன்னை
அன்புள்ள ஜெ,

காந்தாரி ராணித்தேனீ மாதிரி இருக்கிறார்கள். அதை முன்னரே எவரோ இந்தக் கடிதப்பகுதியில் எழுதிவிட்டார்கள். எல்லா வரிகளும் இந்த உவமைக்கே உதாரணமாக உள்ளன.அவர்களின் மிகப்பெரிய உடல். கண்ணில்லாத தன்மை. எங்கேயும் போகாமல் அரண்மனையிலேயே வாழ்வது [ராணித்தேனீக்கு கண் இல்லை. பறக்கவும் முடியாது. அளவிலும் பெரியது] அவர்களிடமிருந்தே அத்தனை பிள்ளைகளும் பிறக்கின்றன. அவர் ஒரு மூதன்னை மட்டும்தான். அந்தக்குணச்சித்திரம் ஆரம்பம் முதல் அப்படியேதான் வந்துகொண்டிருக்கிறது. இது மகாபாரதத்தில் இருக்கும் காந்தாரி கதாபாத்திரத்திலிருந்து வேறுபட்டது. ஆனால் இந்தியாவிலுள்ள பல ஃபோக் மகாபாரதக் கதைகளில் இது உள்ளது. இந்த வடிவம்தான் இன்னமும் பொருத்தமானதாக உள்ளது

சாரதா

எஞ்சியவர்கள்


அன்புள்ள ஜெ,

கோழைகளைப் பற்றிய கடிதங்களை வாசித்தேன். எனக்கு உடனடியாக ஞபாகம் வந்தது தக்கிகள்தான். தக்கர்கள் என்றும் சொல்லப்படுகிறது. இவர்களெல்லாம் பழைய முகலாயர் படைகளிலும் ராஜபுத் படைகளிலும் இருந்த படைவீரர்கள். சத்ரியர்கள். ஆனால் பிரிட்டிஷார் அவர்களின் அரசர்களைத் தோற்கடித்தபின் இவர்கள் உதிரிப்படைவீரர்களாக ஆனார்கள். அனைவரும் கொடூரமான கொள்ளைக்காரர்களாக ஆகிவிட்டார்கள். அவர்களை சுல்லிவன் என்னும் பிரிட்டிஷ் அதிகாரி கண்டடைந்து அழித்தகதையை வாசித்திருக்கிறேன். இவர்களைக் கொன்றே ஆகவேண்டும். வேறுவழி இல்லை. ஏனென்றால் போரில் மிஞ்சியவர்கள் ஒருவகையான கசடுகள்போல. அவர்கள் கீழானவர்கள். அவர்கள் எஞ்சியதே கோழைத்தனத்தால்தான். நான் தக்கிகளைப்பற்றி வாசிக்கையில் எப்படி போர்வீரர்கள் இப்படி ஆனார்கள் என எண்ணியிருக்கிறேன். வெண்முரசு அதற்கான விடையை அளித்தது

செல்வக்குமார்

பெருந்தந்தை-4
அன்புள்ள ஜெ,

துரியோதனன் ஏன் வெண்முரசிலே இப்படி காட்டப்பட்டிருக்கிறான் என்ற விவாதத்தைப் பார்த்தேன். மகாபாரதத்தை பிரிமிடிவ் கிளாஸிக் என்றுதான் சொல்லவேண்டும். மனிதகுலம் உருவானபோதே உருவான கிளாஸிக். ஆகவே அதில் ஒரு ஃபோக் அம்சம் உண்டு. கதாபாத்திரங்கள் எல்லாம் மிகப்பெரியவையாகவும் கடுமையான குணச்சித்திரமும் ஒற்றைப்படைத்தன்மைகொண்டதாகவும் இருக்கும்.

அதன்பின் அதில் பலவகையான கதைகள் சேர்ந்துகொண்டே இருந்தன. அதிலுள்ள எல்லாக் கதாபாத்திரங்களும் குழப்பமானவையாகவே இருக்கும். எனென்றால் ஒவ்வொருவரைப்பற்றியும் வெவ்வேறு கோணங்களில் நிகழ்ச்சிகளும் விவரிப்புக்களும் சொல்லப்பட்டிருக்கும். எந்த ஒரு கதாபாத்திரத்தை எடுத்தாலும் நல்லதும் கெட்டதும் மாறிமாறி வரும். சரியாக வகைபாடு செய்துகொள்ள முடியாது.

பின்னர் வந்த கிளாஸிக்குகளில் நாம் ஆகமொத்தமான ஒரு யூனிட்டியை காண்கிறோம். வெண்முரசு அப்படி ஒரு யூனிட்டியை உருவாக்க முயல்கிறது. ஆகவே அது கம்பராமாயணத்தின் அழகியலையே பின்தொடர்கிறது. கம்பனின் ராவணனுக்கும் வான்மீகியின் ராவணனுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைத்தான் நாம் வெண்முரசில் காண்கிறோம். இதற்குத்தேவையான விஷயங்களை மகாபாரதத்திலேயே வியாசன் துரியோதனனைப்பற்றிச் சொல்வதில் இருந்தும் ஃபோக் மரபிலிருந்தும் எடுத்துக்கொண்டு இந்தச் சித்திரம் உருவாக்கப்பட்டுள்ளது

ராமச்சந்திரன்

Monday, September 2, 2019

தொல்காப்பியம்


ஜெ

கீழ்க்கண்ட வரியை நான் முதலில் எளிமையாகக் கடந்துசென்றேன். பின்னர் அதை நண்பருடன் பேசிக்கொண்டிருக்கையில் அவர்தான் அது தொல்காப்பிய வரியைச் சுட்டுகிறது என்று சொன்னார்

சொற்கள் பொருள்கொண்டவை. எல்லா சொல்லும் பொருள்குறித்தனவே என்று சொன்ன மூதாதை மானுடனுக்கு அளித்த ஆறுதலையும் நம்பிக்கையையும் தெய்வங்களும் அருளியதில்லை

இப்போதுகூட இதன் அர்த்தம் முழுசாகத் தெரியவில்லை. ஆனால் எல்லா சொல்லும் பொருளுடன் இருப்பதனால்தான் நாம் வாழ்கிறோம். நாம் பேசுகிறோம் என்று புரிகிறது. கடவுள்கள் மனிதனுக்கு அளித்த நம்பிக்கை அது என்பதை உள்வாங்கிக்கொள்கிறேன்

மாதவ்

கெடுமதி


அன்புள்ள ஜெ,

ஓடிப்போனவர்களைப்பற்றிய கடிதம் வாசித்தேன். அதை வாசிக்கும்வரை நான் அந்தக்கோணத்தில் யோசிக்கவே இல்லை. அந்தப்படைவீரர்களை வாசித்தபோது ஆச்சரியமாக இருந்தது. அவர்கள் ஒரு கெடுமதி காட்டுகிறார்கள். ஆகவே ஓடிப்போகிறார்கள். அவர்கள் தங்களுக்குள் உள்ள கோழைத்தனத்தை அடையாளம் கண்டுகொண்டதுமே மேலும் கொடியவர்களாக ஆகிவிடுகிறார்கள். உடைகளை கழற்றுவதுபோல values அனைத்தையும் கழற்றிவீசிவிட்டு கொடிய அரக்கர்களாக ஆகிவிடுகிறார்கள். அஸ்தினபுரியின்மீதே படைகொண்டுசெல்கிறார்கள். ஆச்சரியமான ஒரு திருப்பம் இது. உண்மையில் இப்படித்தான் யதார்த்தம் இருக்கிறது. அவர்கள் அடிப்படையில் தங்கள்மேல் தங்களுக்கே மரியாதை இல்லாமலாகிவிட்டார்கள். ஆகவே அதன்பின் அவர்களுக்கு எதன்மேலும் மரியாதை இல்லை. இப்படி ஆனவர்கள் அஸ்தினபுரிக்கும் பெரிய சுமைகள். அவர்களின் பிள்ளைகள் அங்கே பிறக்கக்கூடாது. அதைத்தான் சத்யவதி என்ற மூதன்னை வந்து அழிக்கிறாள்

சரவணன்