Wednesday, September 27, 2017

இறுதி எல்லையையும் கடந்த பின்னால்


           

 ஒரு ஆறு ஓடிக்கொண்டு இருக்கிறது.   அது சிறிது தூரத்தில்   ஒரு பெரும் பள்ளத்தாக்கை நோக்கி பெரும் உயரத்திலிருந்து  விழுகிறது. கற்பாறைகளை பொடிபொடியாக்கும் உயரம் கொண்டது.   அதை மக்கள்  அறிந்திருக்கிறார்கள். அதனால் மக்கள்  அந்த ஆற்றில் இறங்கிக்குளிக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர். ஆனாலும்  சிலர் கரையோரம் இறங்கி குளிக்கின்றனர் சிலர் துணிந்து ஆற்றில் சிறிது தொலைவு வரை  நீந்தி குளிக்கின்றனர். ஆனாலும்  ஒரு எல்லைக்கப்புரம் சென்றால் நாம் திரும்பிவருவதற்குள் நீர்வீழ்ச்சியில் விழுந்துவிடுவோம் என்பதை உணர்ந்திருக்கிறார்கள்.   ஒவ்வொருவர் திறனுக்கேற்ப ஒரு எல்லையை அவர்கள் குறித்து வைத்துக்கொண்டிருக்கின்றனர்.    அவர்கள் அந்த எல்லையை மனதில் இருத்தி அதை கடக்காமல் இருந்துவிடுகின்றனர். ஆனாலும் யாரோ ஒருவர்  கவனக் குறைவாக அந்த இறுதி எல்லையக் கடந்து விடுகின்றார். அவரை ஆறு நீர் வீழ்ச்சி நோக்கி கொண்டு போகிறது. இனி அவரால் கரை திரும்ப  முடியாது. மற்றவர்களாலும் காப்பாற்ற முடியாது. அப்போது தான்  இனி வீழ்வது உறுதி என்பதை அறிகிறார்.  தன் முயற்சியெல்லாம் கைவிட்டு  ஆற்றின் போக்குக்கு தன்னை ஒப்புகொடுத்துவிடுகிறார். வினோதமாக ஒருவர்   அந்த வீழ்ச்சியை நோக்கி  வேகமாக நீந்துவதுகூட  சில சமயம் நிகழ்கிறது. அதற்கு  தான் இறுதி எல்லையைக்  கடந்துவிட்டதையும் இனி தன் வீழ்ச்சியைத் தடுக்கமுடியாது  என அவர் அறிந்தது   மட்டுமே  அல்லவா காரணமாக இருக்க முடியும்?

    மனித  சமூகம் ஆயிரம் நெறிகளை வகுத்து வைத்திருக்கிறது.  அனைத்து  மக்களின் நல்வாழ்வுக்கு, தனக்கும் மற்றவருக்கும்  இடையூறற்ற வாழ்வுக்கு,  ஒருவருக்கொருவர் பூசல் வராமல் இருப்பதற்கு, இயற்கையை பாழ் படுத்தாமல் இருப்பதற்கு, மற்ற உயிருக்கு தீங்கு இழைக்காமல் இருப்பதற்கு என ஆயிரம் ஆயிரம் நெறிகளை நாம் கொண்டிருக்கிறோம்.   அதே நேரத்தில் ஒவ்வொரு மனிதனும் நெறிகளை மீறிச்செல்வதற்கான விழைவையும் கொண்டிருக்கிறான்.  நெறிகளுக்குள் இருப்பது என்பது ஒரு பாதுகாப்பு வளையம் . ஆனால் புதிய கண்டு பிடிப்புகள் புதிய தத்துவங்கள் புதிய மேம்பாடுகள எல்லாம் இந்த நெறிகள் சிலவற்றை மீறுவதன் மூலமே அடையப்படுகின்றன.   ஆனால் பெரும்பாலான நெறி மீறல்கள் சுய நலம் சார்ந்தவை.   இன்னும் இன்பம்,  இன்னும் வெற்றி,  இன்னும் புகழ், இன்னும் செல்வம், இன்னும் அதிகாரம்  என ஒருவன் நாடிச்செல்கையில் நெறி மீறல்கள் நடை பெறுகின்றன.  மற்றவர்களின் நலன்களை மிதித்து  பாழ்படுத்தி தன் சுயநல  நோக்கை அடையச்  செல்லும் குணம் மனிதர்களுக்கு இருக்கிறது. அப்படி ஒருவன் நெறிகளை மீறிச் செல்வதை சமூகம் தடுக்கப்பார்க்கிறது.  அதைவிட ஒருவன் உள்ளத்தில் இருக்கும் அற உணர்வு அவனை அப்படிச் செல்வதற்கு  எதிராக செயல்படுகிறது.  அந்த மனத் தடையை தாண்டியே ஒருவன் ஒரு குற்றத்தைச் செய்கிறான்.  அவனுள் வாழும் அந்த அறத் தேவதையை ஏமாற்றி அதை பல காரணங்களை கற்பித்துக்கூறி அதன் கண்களைக் கட்டிவிட்டே தன் தவறுகளைச்  செய்கிறான்.  தவறு செய்யும் ஒவ்வொருவனும் தான் செய்த தவறுக்கு ஒரு நியாயத்தைக் கூறுகிறான்.  அந்த நியாயம் பிறருக்காக மட்டுமில்லை. தன்னுள் வாழும் அறத் தேவதையை  ஏமாற்றிச்  சமாளிக்கவும்தான்.  தன்னைக் காத்துக்கொள்ளஎன்று,  மற்றவர்கள் செய்வதுதானேஎன்று,  இது அவ்வளவு பெரிய தவறில்லைஎன்று,  நாடு, மதம் மொழி, சாதியின் பொருட்டென்று,   வேறு வழியில்லைஎன்று, இப்படி செய்வது இயல்பானதென்று,  தனக்கு  இழைக்கப்பட்ட குற்றத்துக்கு  பதிலாக  பழி தீர்த்துக்கொள்வதற்கென்று,    ஏதேதோ விளக்கங்களை சொல்லி அந்த அறத் தேவதையை குழப்பி தன் தவறுகளுக்கு நியாயம் கற்பித்துக்கொள்கிறான். 

              இப்படி மனிதர்கள்  தவறுகளைச் செய்தாலும் அவற்றுக்கு என ஒரு எல்லை ஒவ்வொருவர் மனதிலும் இருக்கிறது.  இந்த இறுதி  எல்லையைத் தாண்டினால் அவன் மனதில் வாழும்  அறத்தேவதையை  அவன் இழந்துவிடுகிறான். தன் வாழ்வதற்கு ஆதாரமான பெருமிதத்தை இழந்துவிடுகிறான். அதற்கப்புரம் அவன் தன்னையே மிகக் கீழானவன் என்று உணரத் தொடங்குகிறான்.     இனி அவன் செய்யும் தவறுகளுக்கு எவ்வித விளக்கங்களையும் சொல்லத் தேவையில்லை என  ஆகிவிடுகிறது.  தவறு  செய்வதற்கான அனைத்து மனத் தடைகளும் அகன்றுபோன அந்நிலை, அவனை அவனே வெறுத்து கைவிட்டுவிட்ட நிலை.  அந்த இறுதி எல்லையை ஒருவன் கடக்க உண்மையில்  விரும்புவதில்லை. ஆனால் ஏதோ ஒரு கணத்தில், ஏதோ ஒரு வஞ்சம், கோபம், காமம்  அல்லது  இச்சை  காரணமாக பெருங்குற்றமிழைத்து அந்த நிலையை  அவனறியாமல் கடந்துவிட்ட பிறகு  தனக்கு இனி மீட்பில்லை என்று அறிகிறான்.  அதற்கப்புரம் அவன்  ஒருவகை தற்கொலை போல   மேலும் மேலும் ஒருவித வெறியுடன் குற்றங்களைச் செய்கிறான். சமூகத்திற்கு அவன் ஒரு பகை என ஆகிறான். அவனை அழித்தொதுக்குவது ஒன்றே இனி சமூகம் செய்ய முடியும் என்ற நிலையை அவன் தோற்றுவித்துக்கொள்கிறான். முடிவாக சமூகம் அவனை  கொன்றொழிக்கும்போதுதான்  அவன் அந்த நிலையிலிருந்து விடுபட முடிகிறது.  அதன்படி  தன்னை அடக்கி சிறைபிடிப்பவனை அல்லது தன்னைக்  கொல்பவனை  அவன் மனதிற்குள் நன்றி சொல்லிக்கொள்வான் என நினக்கிறேன்.
    
            நாம் படிக்கும்புராணங்களில் இந்த எல்லைக்கோட்டைக் கடந்தவர்கள்  அசுரர் என வர்ணிக்கப்படுகின்றனர்.  அந்த எல்லைக்கோட்டை கடப்பதின் உளப் போராட்டங்களை  அவை பெரும்பாலும் சித்தரிப்பதில்லை. இன்றைய கதைகளிலும் நாயகனைப்பற்றிதான் அதிகம் எழுதப்படுகிறது. ஆனால் ஒருவன் நல்லவனாக இருப்பதைப்பற்றி எழுதுவதற்கு ஒன்றுமில்லை.  உண்மையில்  அதிகம் எழுதப்படவேண்டியது எதிர் நாயகனைப்பற்றி, அவன் அந்த இறுதி எல்லையை கடப்பது என்பது மிகச்சிக்கலான உளவியல்.     மேலை மதங்கள் ஒருவன் இப்படி இறுதி எல்லையக் நோக்கி செலுத்துவது அந்த எல்லையை கடக்க வைப்பது சாத்தானின் வேலை என எளிமைப்படுத்திவிடுகின்றன.  ஆனால் இந்திய மதங்கள் செயல்களைவிட இப்படி உள்ளம் போவதற்கான காரணங்களைப்பற்றி அதிகம் பேசுகின்றன.  புராணக் கதைகளில் இப்படி இறுதி எல்லையை  கடந்து நின்றவர்களை இறைவனே அவதரித்து அழிப்பதாக எழுதப்பட்டிருக்கின்றன.   
               
            தான் இந்த இறுதி எல்லையை கடக்காமல் ஒருவன் எப்படி தன்னைக்  காப்பாற்றிக்கொள்கிறான் என்பதையும், அப்படியல்லாமல் ஒருவன்  இறுதி எல்லையை  கடந்துபோகும் உளவியல்சூழல்களையும், அப்படி இறுதி எல்லையக் கடந்தவனின் அதீதச்  செயல்பாடுகளையும் வெண்முரசு பல்வேறு கதாபாத்திரங்கள் வழியாக நமக்கு விவரித்து வருகிறது.  புஷ்கரன் இப்படி தன் உள்ளத்தை இறுதி எல்லையைக் கடக்க வைத்து தன்னுள் இருந்த  அறத்த்தேவதையை முற்றாக இழந்தவன்.  அவன் கடந்த அந்த இறுதி எல்லை எதுவாக  இருக்கும் என நினைத்துப்பார்க்கிறேன்.  அவன் தன் அண்ணனுக்காக உயிர் கொடுப்பதைப்பற்றி சிந்தித்தவன். அவன் உள்ளம் சிறிது சிறிதாக அந்த எல்லைக்கோட்டை நோக்கி நகர்வதை வெண்முரசு விவரித்தது.  ஆனால்  அதற்கு அவன் குலத் தலைவர்களின் ஆலோசனை,  மனைவ்யின் தந்திரம் என்று கூறிக்கொள்ளலாம்.  அவன் நட்புறவு நாடி ஒரு அண்ணன் என்ற நேசத்தோடு வந்த நளனை சூதாட்டத்தில்  தோற்கடித்து   நளனையும் அவன் மனைவியையும் நாடு கடத்தும்செயலில் அவன்  தன் இறுதி எல்லையை கடந்துவிடுகிறான்.  இதற்கப்புரம் அவன் செய்யும் அடாத செயல்களுக்கு  எல்லாம் இதுவே காரணமென ஆகிறது.  ஒருவகையில் புஷ்கரனின் ஒரு முக்கிய கூறு அந்தச் சூதாட்டத்தின்போதே இறந்துவிட்டது  என்றுதான் கூறவேண்டும். 
   
        துரியோதனன் மற்றும் கர்ணனும் தங்கள் இறுதி எல்லையக் கடந்தவர்களகவே எனக்குத் தோன்றூகின்றனர்.  துரியோதனன் இளம் வயதிலேயே பாண்டவர்களிடம் வஞ்சம் கொண்டுதான் இருக்கிறான். பீமனுக்கு  நஞ்சூட்டீக்கொல்ல முயன்றதை அவன் எற்றுக்கொண்டான். பின்னர் பாண்டவர்கள் வாரணாவத  எரிப்பு நிகழ்வு எல்லாம்  பெருங்குற்றங்களே.   ஆனாலும் அப்போது அவன் உள்ளம் எல்லை கடந்து போகாமல் அவன் தந்தை தாய் மனைவி போன்றோர் காப்பாற்றிவிடுகின்றனர். இந்தச் செயல்களுக்காக  அவன் மனம் வருந்தியதை நாம் கண்டிருக்கிறோம்.  அவனை மீட்டெடுக்க தருமனின் மன்னிப்பும் பயன்பட்டிருக்கிறது.  ஆனால் தருமனை சூதாட்டக்களத்தில் தோற்கடித்து அவன் நாட்டை வெல்வது ஒரு வீரன் என்ற வகையில் துரியோதனனை  எல்லைதாண்டியவனாக உணரச் செய்கிறது. அதன் கார்ணமாகவே பாண்டவர்களை அடிமைகளாக்குவது திரௌபதி துகில் களைய முற்படுவது போன்ற செயல்களில் அவனை இறங்க வைக்கிறது, அப்போது வெகுண்டெழுந்து எதிர்க்கும்  அஸ்தினாபுர பெண்களின்   செயல்கூட அவனை மீட்க முடியவில்லை.  துரியோதனன் இப்படி ஆவான் என எதிர்பார்க்கும் கர்ணனும் தன் நண்பனை  இந்நிலையில் இருந்து  மீட்க முடியாது என்றறிந்து தன் தோழனுடன் கைகோர்த்து அவனும்  அந்த இறுதி எல்லையைக்  கடந்துவிடுகின்றான்.  அவர்கள் அதற்கப்புரம் நிகழ்த்திய,  இனி நிகழ்த்தப்போகும்,  அத்தனை செயல்களுக்கும்  நாம் வேறு பொருள்  கானவேண்டியதில்லை. திருதராஷ்டிரர் தன் மகனின்  அடாத செயலுக்காக அவனைக் கொன்றிருக்கவேண்டும்.  ஆனால் பிள்ளைப்பாசத்தின் காரணமாக அவர் துரியோதனனை ஏற்றுக்கொள்ளும் செயல் அவரையும் தன்  இறுதி எல்லையை கடக்கவைத்துவிடுகிறது.  இனி அவர்கள்  எடுக்கப்போகும் முடிவுகளைவைத்து  முன்னர் அவர்கள்  இருந்த நிலையுடன் நாம் ஒப்பிட்டுப் பார்க்கமுடியாது. ஏனென்றால் இப்போது இருக்கும் திருதராஷ்டிரன், துரியோதனன், கர்ணன் தன் இறுதி எல்லையைக் கடந்தவர்கள். அவர்கள் வீழ்வது ஒன்றே அவர்களின் மீட்புஎன ஆகும். அவர்களும் அதற்காகவே காத்திருக்கின்றனர் என்று தோன்றுகிறது.

தண்ட்பாணி துரைவேல்
ட்ர்ஹ 

Monday, September 25, 2017

எழுகவே ஞானப் பெருந்தழல்! ( எழுதழல் 1)        
 தழல் உருக்கொள்வதகு முன் எங்கிருந்தது?  எரிந்து முடிந்த தழல் எங்கு சென்றமைகிறது?  தன்னை வெப்பமென்று ஒளியென்று உருக்காட்டிக்கொள்ளும் அதன் ஆதி எது?  இரு பொருட்களின் உரசல்களில்தான் அது உயிர்கொண்டதா? உரச வைத்த கரங்களில்  உறைந்திருந்ததா? அந்த உரசலை சிந்தித்த உள்ளத்தை மூலமாகக் கொண்டதா?   அந்த உள்ளத்தை அணிந்திருக்கும் ஆன்மாவில் இருந்திருந்ததா?  அல்லது ஆன்மாவை தன்னுளிருந்து ஒரு அலையென தோற்றுவித்த பேரான்மாவிலிருந்த வித்தா?

          
சிறு பொறியென பிறந்தெழும் அதில்  இருப்பது அடங்காப்பசி ஒன்றே.  அருகிலிருக்கும் எதையும் அள்ளித்தின்ன முயல்கிறது.  நாவொன்றே உடலென்று எழுந்த யட்சி.  எப்பொருளையும் நக்கி நக்கி கரைந்தருந்தத்  துடிக்கிறது. உண்ணும்தோறும் பெருகி வளர்கிறது. பெருகும்தோறும் பசிகொள்கிறது.  அது  தொடும் பொருட்கள் எல்லாம் அதனால்  உண்ணப்படுகிறது, ஒரு வீட்டையே உண்பதுண்டு, ஒரு ஊர் முழுமையும் உண்டமைவதுண்டு, ஒரு  வனத்தையே சுழற்றி தன் வாயிலிட்டுக்கொள்வதுண்டு. பூமியை அகலாக்கி, மலையை திரியெனக்கொண்டு பெருந்தீபமென எழுவதுண்டு.
       விசும்பில்   எழுந்த தழற்பொறிகளே ஞாயிறென்றும் விண்மீன்களென்றும்  சிதறிக்கிடக்கின்றன. அல்லது இந்த விசும்பே ஒரு தழல்வெளியோ?  விசும்பில் இருக்கும் ஒவ்வொன்றும் அப்பெருந்தழலில் எழும் தழல்நாவுகளின் தோற்றங்களோ? தழலால் ஆனதுதானோ இந்த பிரபஞ்சம்?
        
ஒருவரின் சிந்தையில் அகங்காரமென கருக்கொண்டிருக்கிறது  தழல்.    எண்ணங்களின் உரசல்களில் பொறியென தன்னை உருக்கொண்டு விழித்தெழுகிறது.  எண்ணங்களை உண்டு பெருத்து வளர்கிறது,   வஞ்சமென்றும், சினமென்றும்,  துயரமென்றும், களிவெறியென்றும் சோம்பலென்றும், காமமென்றும் வளர்ந்தெழுந்து சடசடத்து எரிகிறது அது. ஒருவரிலிருந்து சொற்களாக செயல்களாக  தழல் நாக்குகள் எழுகின்றன. அது எதிரிலிருப்பவரை  எரிக்க முயல்கிறது.  தோன்றிய உள்ளத்தையும் சேர்த்து எரிக்கிறது. அழிப்பதொன்றே அதன் நோக்கம் எனக் கொண்டிருக்கிறது.
         
ஆனாலும்  ஒருவர் தன் உள்ளத்தில் எழும் தனலை  உணவு சமைப்பதற்கான் அடுமணை நெருப்பென ஆக்க முடியும்.  அனைவரையும் நேசிக்கும் அன்பென, அனைவரின் துயர் போக்க நினைக்கும்  கருணையென,  மற்றவர் தவறுகளை பொறுத்துக்கொள்ளும் தயையென,  தன்நலனுக்கான பலனை மற்றவருக்காக கைவிடும் தியாகமென,   மாய இருள் நீக்கும் ஞானத்தீபமென தன் உள்ளத்தில் தழலை காத்து  வருபவர்களின் பொருட்டே இவ்வுலகு  இன்னும் எரிந்து நீறென ஆகாமல் இன்னும் குளிர்ந்திருக்கிறது. 
         
இலக்கிய வெளியில் நிகழும் பெரும் ஞான வேள்வியில் எழுந்தமைந்து சுடர்விட்டுக்கொண்டிருக்கிறது வெண்முரசு என்ற ஞானப்பெருந்தழல்.   அதன் இன்னொரு தழல்நாவென எழுகிறது எழுதழல்.  பெருகி வளரும் அந்த வேள்வித்தீ  படிப்பவர்  உள்ளத்தில் ஒளி நிறைத்து வருகிறது. அந்த வேள்வித்தழலை போற்றுகிறேன். அந்த வேள்வியை தனியொருவராக  தன் அறிவு, நேரம்,  அனுபவம் என அனைத்தையும்  ஆகுதியாக்கி  நடத்தும் ஆசானை வணங்குகிறேன்

தண்டபாணி துரைவேல்

Sunday, September 24, 2017

உறவுக் கோர்வை.  (நீர்க்கோலம்- 89)

உறவுக் கோர்வை.  (நீர்க்கோலம்- 89)
     உத்தரையை  அர்ச்சுனனுக்கு மணமுடித்துவைக்க அவனைத் தவிர அனைவரும் விரும்புகின்றனர். உத்தரைக்கு அதில் பெரும் விருப்பம் இருப்பது நமக்கு உணர்த்தப்படுகிறது. உத்தரையின் விருப்பத்தை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.  ஒரு பெண் தன் துணையிடம் விரும்பும் அத்தனை குண நலன்களையும் அமையப்பெற்றவன் அர்ச்சுனன். அவளை சீர்படுத்தி,  ஆளுமையை வளர்த்து கலைகளில் அவளை வல்லவளாகச் செய்திருக்கிறான் அவன்.  மேலும் அவன் பெண்ணுருவில் இருப்பதால்  அவனிடம் அவள் நெருங்கி பழகியிருக்கிறாள். அவள் பெண்மை அவனுள் உறையும் ஆண்மையை கண்டுவிட்டிருக்கும். ஆதலால் அவள் அவன் மேல் விருப்பப்படுவது மிக இயல்பானது.  ஆனால் அர்ச்சுனன் ஏன் அதற்கு சம்மதிக்கவில்லை?  அர்ச்சுனன் பல பெண்களை மணம்கொள்ள தயங்காதவன். ஆனால் இந்தத் திருமணத்திற்கு  ஏன் அவன் மறுக்கிறான் என்பதை நாம் சிந்திக்கவேண்டியதாக இருக்கிறது. 
      மனிதர்கள் இரு பொருள்களை ஒன்றாக கோர்க்கையில் கவனத்துடன் இருக்கிறார்கள். எந்த வண்ண கீழாடைக்கு எந்த வண்ண மேலாடை,  எந்த விழாவுக்கு எந்த  அணிகலன், எந்த உணவு உண்கையில் எந்த கறியைச் சேர்த்துக்கொள்வது, எந்த திரைப்படத்திற்கு யாருடன் போவது, எந்தக் கூட்டத்தில் எதைப் பேசுவது, என எல்லாவற்றிலும் நாம் கவனத்துடன் இருக்கிறோம். அப்படி நாம் தவறுதலாக பொருத்தமில்லாத இரண்டை ஒன்றாக கோர்த்துவிட்டால் அது ஒருவேளை அலங்கோலமாகிவிடலாம். அவற்றின் பயன் தவறி பாழாகிவிடலாம். நமக்கோ மற்றவருக்கோ இடையூறாகிவிடலாம். அல்லது சமூகத்தின் பார்வையில் நம்மை இளிவரலுக்கு உள்ளாக்கிவிடலாம். இப்படி பொருத்தம் பார்த்து இணைப்பதென்பது எல்லா விஷயங்களிலும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது.
   ஒரு இல்லறம் அமைப்பதற்காக  ஒரு ஆணையும் பெண்ணையும் தம்பதியர் என  இணைப்பதில் நம் மரபு மிகவும் கவனத்துடன் இருக்கிறது. குணத்தின் காரணமாக பொருத்தம் பார்ப்பதைவிட பொருளாதாரம், மதம், இனம் போன்றவற்றில் பொருத்தம் பார்ப்பதில் அதிக முக்கியத்துவம் காட்டப்படுகிறது. அதைவிட முக்கியமாக,  உறவுமுறை பொருத்தம் இல்லையென்றால அது கண்டிப்பாக தவிர்க்கப்படுகிறது.           மனிதர்களை உறவாக கோர்ப்பதிலும் சமூகம் பல விதங்களில் பொருத்தம் பார்க்கிறது.  பாலுறவுகொள்வதை தவிர்க்கும் உறவுமுறைகளை நெறிகளென இச்சமூகம் கொண்டிருக்கிறது.  பல நெறி மீறல்களை சகித்துக்கொள்ளும் சமூகம் இந்த விஷயத்தை சற்றும் சகித்துக்கொள்வதில்லை. இதில் நெறிமீறலை சமூகம் மிகக் கடுமையாக எதிர்க்கிறது.  பாலுறவில் கட்டுக்களை மிகவும் தளர்த்தியுள்ள மேலைச் சமூகத்தில்கூட உறவுக்  கோர்வையில் இந்த நெறி மிகக் கடுமையாக பேணப்படுகிறது.  சமூகத்திற்கு சமூகம் சில வேறுபாடுகள் இருக்கின்றன. என்றாலும் அடிப்படையாக சில உறவுகளுக்கிடையே பாலுறவு தவிர்க்கப்படுதல் அனைத்து சமூகங்களிலும் பொதுவாக  இருக்கிறது.  விலங்கிலிருந்து மனிதன் வேறுபட்டிருப்பதகான் ஒரு முக்கிய குறியீடாக இது இருக்கிறது. பெற்றோர் பிள்ளகளுக்கிடையில், உடன் பிறந்தார்க்கிடையில்  முற்றிலும்  நீக்கப்பட்டதாக இவ்வுறவு இருக்கிறது.    
      இவ்வுறவுகளின் நீட்சியாக அமையும் மற்ற உறவுகளும் இதில்  இயல்பாக சேர்ந்துகொள்கின்றன. தந்தையின் சகோதரர்கள், தந்தை உறவின் நீட்சியாகவும்  தாயின் சகோதரிகள்  தாய் உறவின் நீட்சியாகவும் ஆகின்றனர்.  ஆகவே அவர்களின் பிள்ளைகள் ஒருவருக்கு சகோதரர் உறவின் நீட்சியாக கொள்ளப்படுகிறது.  ஆகவே இவர்களுக்கிடையே பாலுறவு தவிர்க்கப்படுகிறது.  ஒரு தந்தை மகளுக்கிடையேயான நேசம் மிக உயரியது.   அந்த நேசத்தில் அணுவளவும்  காமம் கலப்பதில்லை. அது மனித குலத்தின் அடிப்படைப் பண்பாடு.  உறவுகளுக்கு வெளியில்  பெற்றோர் உறவின் நீட்சியாக அமைவது ஆசிரியர் மாணவரிடம் கொள்ளும் உறவாகும்.   ஒரு ஆசிரியர் தன் மாணவனை தன் பிள்ளைக்கு நிகராக கொள்ளவேண்டியவராவார்.      ஒரு உண்மையான ஆசிரியர்  ஒரு தந்தையைப்போன்றவர்.  தன் மகனென மகளென தன் மாணவர்களை கருதாத ஒருவரால் சிறந்த ஆசிரியராக ஆக முடியாது.
   உத்தரை அர்ச்சுனனை முதலில் ஒரு தோழியாகவும் ஆடல் கலையை கற்பிக்கும் ஆசிரியையாகவும் பின்னர் அவனை ஆணென அறிகையில் துணைவனாகவும் கருதிவருகிறாள். ஆகவே  அவன் மேல் இயல்பாக காதல் கொள்கிறாள். ஆனால் அர்ச்சுனன் உத்தரைக்கு ஒரு முழுமையான ஆசிரியனாக இருந்து அவளுக்கு கலைகளை கற்பிக்கிறான்.  ஆகவே அவன் அவளைத் தன்  மகளெனக் கருதுபவனாக இருக்கிறான்.   முழுமையான ஆசிரியனாக விளங்கிய அர்ச்சுனன் அவளை தன் மகள் என்ற உறவின் நீட்சியாக மட்டுமே எடுத்துக்கொள்ள முடியும்.  ஆசிரியனாக இருந்த அவன்  காதலனாக ஆக முடியாது என்பதை அர்ச்சுனன் உணர்த்துகிறான்.  
       அர்ஜுனன் அவையை வணங்கியபின் விராடரிடம் “அரசே, தங்கள் மகளுக்கு நான் ஆசிரியனாகவே இருந்தேன். பிறிதொன்றுமாக அல்ல” என்றான்.
     
       

கரவுக்காட்டின் சித்திரங்கள் நமக்கு மாறான செய்தியை தந்ததாகச் சொல்லலாம். ஆனால் கரவுக்காட்டின் நிகழ்வுகள் மதி மயக்கத்தில் இருந்தவர்களால சொல்லப்பட்டது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.  அவர்கள் கரவுக்காட்டில் கண்டதும்,   கண்டதாக நினைத்த நிகழ்வுகள் அனைத்திலும் அவர்கள் உண்மையாகக்   கண்டவையும்  கற்பனை செய்தவையும்,  எதிர் பார்த்தவையும்,   எதிர்பார்க்காதவையும்,  ஆழ் மன இச்சைகள் வடிதெடுத்த கனவுகளையும் கலந்து உருவான புனைவு என்று கருதுகிறேன்.  ஆகவே அங்கு நிகழ்ந்ததாக கருதப்படும்  நிகழ்வுகள் தர்க்கத்தின் எல்லைக்குள் வராது என நான் புரிந்துகொள்கிறேன். 

Saturday, September 23, 2017

எழுதழல் - அபிமன்யுவெண்முரசு நாவல்கள் பொதுவாக ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பார்வையில் சொல்லப்படுவது வழக்கம் தான், முதற்கனல்,பிரயாகை, பன்னிருபடைக்களம் -  தவிர்த்து. மழைப்பாடல் - விதுரர், வண்ணக்கடல் - இளநாகன், வெண்முகில்நகரம் - பூரிசிரவஸ் மற்றும் சாத்யகி, இந்திரநீலம் - திருஷ்டதுய்மன் மற்றும் சாத்யகி, காண்டீபம் - சுஜயன் மற்றும் மாலினி, சொல்வளர்காடு - தருமன், கிராதம் -சண்டன் மற்றும் வியாசரின் மாணவர்கள், மாமலர் - முண்டன் மற்றும் பீமன், நீர்க்கோலம்பாண்டவர்கள், முக்தன், சம்பவன், கஜன் மற்றும் சுபாஷினி

அவ்வாறு பார்க்கையில் இந்த நாவல் அபிமன்யு பார்வையில் விரிவதாக வரக்கூடும்அபிமன்யுவின் சித்தரிப்பு முக்கியமான ஒன்று. இளமை கொப்பளிக்கும் ஒருவனாக வருகிறான். முக்கியமாக அவன் 'இன்றில்' இருக்கிறான்.நேற்றோ, நாளையோ அவனுக்கு ஒரு பொருட்டு அல்ல. அவன் செய்யப்போவதை அக்கணமே முடிவெடுக்கிறது. அதன் விசையோ, தேவையோ, காரணமோ அவன் கையில் இல்லை, அவை அவனுக்கு ஒரு பொருட்டும் அல்ல. அபிமன்யுவின் நகர் நுழைவு அத்தியாயத்தில் வரும் ஒரு கூற்று அவனை முழுமையாக வரையறுக்கிறது - 'அறிவும் அறியாமையும் இணையாக இருக்கக் கூடியவன்' - வழமை போலவே இதை திருதா தான் உரைக்கிறார்

அவன் ஏன் இவ்வாறு இளமை பொங்க இருக்க வேண்டும்? ஏனென்றால் அவன் தான் மூத்தவளான ஜேஷ்டா தேவியின் பிடியில் இருக்கும் இளைய யாதவரை மீட்கப் போகிறான். மூத்தவளை இளமையைக் கொண்டு, காலமென்றில்லாத ஒன்றில் இருப்பவரை கணத்தில் வாழ்பவனைக் கொண்டு தானே மீட்டாக வேண்டும்!! 

அபிமன்யுவின் இந்த சித்திரம் புதிதல்ல.இது நீர்க்கோலத்தின் இறுதியிலேயே வந்து விட்டது. நீர்க்கோலத்தின் முக்கியமான கரவுகளில் ஒன்று அர்ச்சுனன் உத்தரையை தன் மைந்தனுக்கு என ஏற்றுக் கொண்டது. மற்றொரு பெண்ணை மனைவியாக ஏற்க அர்ச்சுனனுக்கு எந்த தடையும் இருக்கவில்லை. இருப்பினும் அவன் அவளை ஏற்றுக் கொள்ளவில்லை. சரி அவளை ஏன் அபிமன்யுவுக்காகத் தேர்ந்தெடுக்க வேண்டும்? இதை நீர்க்கோலத்தின் இறுதி அத்தியாயத்தில் அவன் உத்தரையிடம் பேசுவதில் இருந்து ஒருவாறாக ஊகிக்கலாம். "தெய்வங்கள் வனைந்து வனைந்து மேம்படுத்திக்கொள்கின்றன என்பார்கள். அவன் பணிக்குறை தீர்ந்த பழுதற்ற அர்ஜுனன். இளையவன், நானே அஞ்சும் வில்திறலோன்". ஆம், அவள் பிரஹன்னளை ஊடாகத் தேடியது முற்றிலும் இளைய அர்ச்சுனன்கரவுக்காட்டில் இருவரும் உறவு கொள்ளும் விவரணையில் அவர்கள் வானில் சிறகுடன் பறப்பாதாக வரும். பறவைகளால் ஆன உலகைக் கொண்ட இளம் பார்த்தனின் உணர்வு அது. அந்த உறவின் இறுதியில் அவள் உத்தரனாக மாறி பிரஹன்னளையுடன் காமம் ஆடுவாள். இது தான் அர்ச்சுனனுக்கு அவளின் தேடல் என்ன என்பதை உணர்த்திய இடம். எனவே தான் அவளின் தேடலுக்கு உரியவனாகிய, இளையவனாகிய அபிமன்யுவைத் தேர்ந்தெடுத்தான்

அது மட்டுமல்ல, அபிமன்யுவில் அர்ச்சுனனில் அவ்வப்போது வெளிப்படும் பெண்மை கலந்த ஆண்மை நிரந்தரமாக இருக்கிறது. இது நாவலில் வெளிப்படையாக வரவில்லை. ஒரு இடத்தில் திருதாவிடம் தன் மற்ற பெயர்கள் என அபிமன்யு கூறும் 'சௌபத்ரன் அர்ஜுனி கார்ஷ்ணி ஃபால்குனி' பெயர்களில் சுபத்ரையின் மைந்தன் என்பதைத் தவிர வருபவை எல்லாம் அர்ச்சுனனின் பெயர்களின் மென்நீட்சிகளே. அதையே அவன் விளையாட்டாக 'வெண்ணை உருகினால் நெய் - அர்ச்சுனனின் நெகிழ்வான வடிவம்' என்கிறான். இதை மிகச் சரியாக ஷண்முகவேல் பிடித்துள்ளார்குந்தியின் முன் வாளை கூர் பார்க்கும் அபிமன்யுவின் உடலில் ஒரு பெண்மைக்குரிய நெகிழ்வு இருப்பதைக் காணலாம். இந்த நெகிழ்வு அநேகமாக அனைத்து அபிமன்யு படங்களிலும் வந்துள்ளது. எழுதழல் சர சரவென பற்றுகிறது

அன்புடன்,

அருணாச்சலம் மகராஜன்