Friday, November 30, 2018

சிறுத்தல்


அன்புள்ள ஜெ


சுஜயனைப்பற்றி சுபாகு அர்ஜுனனிடம் சொல்லும் வரிகள் வந்தபோது உணர்ச்சிவசப்பட்டேன். என்ன ஒரு இக்கட்டான சந்தர்ப்பம். கொலைகாரனின் கண்களைப்பார்த்து கொல்லப்பட்டவனின் அப்பா பேசுகிறார். நீதான் அவனுடைய மானசீகமான தந்தை என்கிறான். மனம் கொந்தளித்தது. ஒரு யதார்த்தக்கதையில் அது வரமுடியாது. ஒரு கிளாஸிக் கதையில்தான் அது வரமுடியும்.

ஆனால் அந்த இடம் அங்கே ஏன் வருகிறது என பின்னர்தான் புரிந்தது. கிருஷ்ணன் அணுவளவுக்குச் சிறுத்து அந்த உண்மையையும் தெரிந்துகொண்டு வா என்றுதான் சொல்லி அனுப்புகிறான். ஏனென்றால் அவன் நான் அர்ஜுனன் என்ற ஆணவத்துடன் வானளாவ நிமிர்ந்தவன். ஆனால் அவனை பீஷ்மர் சாபம் போட்டு அழிக்கவில்லை. அவனை வாழ்த்துகிறார்.

அவன் அணுவளவாகக் குறுகிச்சிறுக்கும் இடம் சுஜயனைப்பற்றி சுபாகு அவனிடம் சொல்லும் அந்த சந்தர்ப்பம்தான்

எஸ்.பிரபு

கோணங்கள்
ஜெ

பீஷ்மர் போன்ற ஒரு ஆர்க்கிடைப்பல் கேரக்டரை கடைசியாகக் காட்டும்போது அதை ஒற்றை அர்த்தம் கொடுத்துக் காட்டாமல் பல்வேறு கோணங்களில் காட்டுவதே வாசகர்களுக்கு பலவகையான வாசிப்புகளுக்கு இடமளிக்கிறது. இந்நாவலில் பீஷ்மர் ஒரு ஐக்கான் ஆகவே வருகிறார். அவருடைய இயல்பெல்லாம் மாறிக்கொண்டே இருக்கிறது. கடைசியில் அவருடைய வீழ்ச்சி ஆறேழு கோணங்களில் சொல்லப்படுகிறது. துண்டிகன், சுபாகு, துரியோதனன், சகுனி, யுதிஷ்டிரன் என பல கோணங்கள். கூடவே சூதரின் அங்கதம் நிறைந்த கோணம். அவ்வாறுதான் அவரை மதிப்பிடவேண்டியிருக்கிறது. அவர் வானத்தையும் வில்லால் கட்டிவிடமுயல்வார் என்ற சூதனின் வரி அவர் மேல் வைக்கப்படும் மிகக்கூரிய விமர்சனம்

ராஜேஷ்

வீரகதைகள்

அன்புள்ள ஜெ

சூதர் சொல்லும் ஒரு வரியில் பீஷ்மரின் படுகள வர்ணனை முடிவடைகிறது. நாங்கள் வீரகதைகளைப் பாடவிரும்புகிறோம். அதன்பொருட்டு தலைமுறை தலைமுறையாக வீரர்களைப் போர்க்களத்திற்கு அனுப்பிக்கொண்டே இருக்கிறோம் என்கிறார்

இது இன்றைக்குவரை இப்படித்தான் நடந்துகொண்டிருக்கிறது. ஏராளமான இளைஞர்கள் இன்று வெவ்வேரு வன்முறை அமைப்புக்களில் சேந்து உயிர்விடுவதற்குக் காரணம் வீரத்தைப்போற்றும் பொய்யான புகழுரைகள்தான்.

எங்கள் நாட்டில் வீரகதைப்பாட்டுக்களை எழுதிய கவிஞர்கள் நலமாக உள்ளார்கள். சிலர் இந்தியாவில் எல்லாவற்றையும் மறந்து சௌகரியமாக வாழ்கிறார்கள். அதைக்கேட்டு களத்துக்குப் போய் உயிர்விட்ட இளைஞர்களின் அம்மாக்கள்தான் நடைபிணங்களாக வாழ்கிறார்கள்

உமாபதி

பீஷ்மரின் படுகளம்
அன்புள்ள ஜெ

பீஷ்மரின் படுகளம் மனதை என்னவோ செய்கிறது. இரண்டுநாட்களாகியும் அதிலிருந்து வெளியே வரவேமுடியவில்லை. இந்த போர் ஆரம்பித்தபின் பலர் இறந்திருக்கிறர்கள். ஆனால் ஆரம்பம் முதலே வந்துகொண்டிருக்கும் பெரிய கதாபாத்திரம் என்பது பீஷ்மர்தான். ஆகவே அவருடைய இறப்பு மிகவும் சங்கடப்படுத்துகிறது.

அதிலும் அவ்வளவு பெரியவர். அவ்வளவு ஞானம் கொண்டவரை கொஞ்சம் மரியாதையாகக் கொன்றிருக்கலாமோ. அவரை அம்புகள் புரட்டிப்புரட்டி அடிக்கின்றன. அதுதான் நிகழ்ந்திருக்கும். ஏனென்றால் அவர் உடலெங்கும் அம்புகள் படுவதென்றால் வேறுவழியே இல்லை. அந்தக்காட்சி கண்ணீரை வரவழைத்தது

ஆர்.சத்யா

அம்புப்படுக்கை
அன்புள்ள ஜெ

பீஷ்மரின் அம்புப்படுக்கை ஆச்சரியமான ஒரு கற்பனை. இத்தனை நாள் கதைகேட்டுவந்தபோதும்கூட இப்படி இருக்கக்கூடுமோ என்று எண்ணியே பார்க்கவில்லை. உடலெங்கும் புண்பட்டவரை படுக்கவைப்பதற்கான ஒரு முறை அது. ஒருவகையான அக்குபஞ்சர் போல. அதில் அவர் படுத்திருக்கிறார். அதன் மேல்பகுதி அவர் உடலின் அமைப்புக்கு ஏற்ப அமைக்கப்பட்டு எடைதாங்குவதாக இருக்கிறது. ஆகவே அவர் மிதப்பதுபோல அதன்மேல் கிடக்கிறார். உடம்பில் எந்த படுக்கைப்புண்ணும் வராமலிருக்கும். நடைமுறையில் எந்தளவுக்குச் சாத்தியம் என ஏதாவது அக்குபஞ்சர்காரர்கள்தான் சொல்லவேண்டும். ஆனால் அழகான கற்பனை

செல்வக்குமார்

Thursday, November 29, 2018

சிறிய கதாபாத்திரங்கள்
அன்புள்ள ஜெ

வெண்முரசின் திசைதேர்வெள்ளம் தொடங்கியபோது ஒரு பெரிய சந்தேகம் இருந்தது. வெறும்போரையே எத்தனை பக்கங்கள் எழுதமுடியும் என்று. ஒருநாவலிலேயே போரை எழுதிமுடித்துவிடுவீர்கள் என்றுதான் நினைத்தேன். மகாபாரதத்திலேயே துணைக்கதைகள் மற்றும் உபதேசங்களைத் தவிர்த்தால் போரின் அளவு கம்மிதான். ஆனால் நீங்கள் ஒவ்வொரு அணுவையும் விரிவாக்கி நாவலை முழுமைசெய்துவிட்டீர்கள். இந்நாவலின் அழகே இதிலுள்ள சின்னச்சின்னக் கதாபாத்திரங்கள்தான். நாவல் சின்னக் கதாபாத்திரம் ஒன்றின் கனவு – சாவுக்குப்பின்னால் உள்ள காட்சிகளில் தொடங்கி இன்னொரு சின்னக் கதாபாத்திரத்தின் சாவுக்குப்பின்னாலுள்ள கனவில் நிறைவெய்துகிறது. அற்புதமான ஒரு முடிவு. தன் பிணத்தருகே தானே சிதை எரியும் முறை வருவதற்காகக் காத்து நிற்பதென்பது ஒரு பெரிய காட்சிதான். அப்படி அங்கே பல்லாயிரம்பேர் காத்துநின்றிருக்கிறார்கள் என தோன்றுகிறது

ஆர்.எஸ்.சுரேஷ்குமார்

சூதர்களின் சொல்
அன்புள்ள ஜெ

சூதரின் சூச்சுமமான நையாண்டியை ஒருமுறை வாசித்தபின்னர்தான் புரிந்துகொள்ளமுடிந்தது. பீஷ்மரை கொல்லாமல் குறிதவறிய அம்புகளால் ஆனது அந்த அம்புப்படுக்கை என்பது. அவர் கங்கையை அம்பால் அணைகட்டியதுபோலத்தான் இப்போது அவருடைய உயிரை அம்புகளால் அணைகட்டியிருக்கிறார்கள் என்பது

ஆனால் உச்சம் என்பது அர்ஜுனனை பேடி என்பது. அவருடைய அம்புக்கும் சிகண்டி அம்புக்கும் வேறுபாடே இல்லை என்பது. பீஷ்மர் ஆணிலியாகிய சிகண்டியின் முன் நிற்கமாட்டேன் என்றார். ஆனால் அர்ஜுனனே ஆணிலியாக இருந்தவன் தானே என்பது

அவருடைய வரிகள் எல்லாமே நகைக்கச்செய்தன. ஆண்கள் கல்வியறிவு பெறுவது பெண்களை அழகாக ஆக்குகிறது என்ற வரியை நினைத்து நினைத்துப்புன்னகைசெய்தேன்

சரவணன்

அங்கதம்
அன்புள்ள ஜெ

வெண்முரசில் இருவகைச் சூதர்கள் வருகிறார்கள். கதைசொல்லிகள். இளிவரலுரைப்பவர்கள். அங்கதச்சூதர்களின் பேச்சுக்கள் நேரடியாக அங்கதமாகவும் இருப்பதில்லை. அவர்கள் என்ன சொன்னார்கள் என்று சரியாகப்புரியாமல் , இதில் அப்படியொன்றும் தவறில்லையே என்று சொல்லும்படியாக உள்ளன. கேலிக்கூத்தாக இல்லை. கிளாஸிக்கலான ஒர் ஒருமை அவற்றில் உள்ளது

தானே உருவாக்கிய பிரச்சினைகளிலிருந்து பிறரைக் காப்பவர் என்று முதற்கனலில் வரும் சூதர் பீஷ்மரை வர்ணிக்கிறார். அவருடைய பேரர் அவரை பெரியவிஷயங்களைச் செய்யத் தொடங்கியதாலேயே பெரியவராக ஆனவர் என்கிறார். இரண்டும் நஞ்சு தோய்ந்த விமர்சனங்கள். ஆனால் மென்மையாகச் சொல்லப்படுகின்றன

அந்தக்காலத்தில் அரசர்களிடம் அங்கதமாகப் பேசும்போது இப்படித்தான் மென்மையான பூச்சாகச் சொல்லவேண்டும்போலிருக்கிறது

ஜெயராமன்

அன்புள்ள ஜெயராமன்

இன்றும் கேரளத்தின் அங்கதகலையான சாக்கியார் கூத்தின் சாக்கியாரின் நகைச்சுவை மிகப்பூடகமானதாகவே இருக்கும்

ஜெ

மழைவேதம்
     
 வெண்முரசின் தீவிர வாசகர்களான உங்களுடன் உரையாடுவதில் எப்போதும் போல் நான் இன்றும்   பரவசத்தில் இருக்கிறேன். இந்தக் குழுவைப்போன்ற அறிவு சார்ந்த நண்பர்களை நான் வெளியில் கொண்டிருக்கவில்லை என்பதால் உங்களுடைய இத்தொடர்பை நான் எப்போதும் உயர்வாகவும் முக்கியமாகவும்  கருதுகிறேன்.  
   
  
வெண்முரசின் இரண்டாவது நூலான மழைப்பாடலில்  மழை வேதம் முடிவுப் பகுதியாக இருக்கிறது. ஆனால் அது இப்பெருங்கதையின் திருப்பு முனையாக இருக்கிறது. இராமாயணத்தில் சூர்ப்பனகை இராமனை பார்க்க நேர்வது அக்கதையின் ஒரு முக்கிய திருப்பு முனை, அதாவது கதையை அதன் நோக்கமான இராவண வதத்தை  நோக்கி செலுத்தும் நிகழ்வு. அதைப் போன்றே மழைவேதத்தில் வரும் பாண்டுவின் இறப்பும் மகாபாரதக் கதையை அதன் பாதையில் செலுத்தும் ஒரு திருப்பமாகும்.
  

உண்மையில் பார்த்தால் பாண்டுவின் இறப்பு என்பது எவரும் எதிர்பார்க்கவியலாத ஒன்றல்ல. குரு வம்ச பரம்பரையில் ஒரு குறைபட்ட  மரபணுக்கூறுவாக இருக்கும் பலகீனத்தை பாண்டுகொண்டிருக்கிறான்ஆகவே அவன் எப்போது வேண்டுமானாலும் இறந்துபோவதற்கான சாத்தியம் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றாக இருக்கிறதுஅவன் இறந்த விதமும் ஒன்றூம் அதிர்ச்சியளிப்பதல்ல. முன்னரே ஒரு முறை   இப்படி உறவாட  முயன்றதில் அவன் உடல் நலம் மிகவும் சீர்கெட்டு இறப்பு வரை சென்று வந்தவன். அவன் இப்படி சீக்கிரத்தில் இறப்பது வியப்புக்குரிய ஒன்றல்ல என இருந்தாலும், ஏன் அது  ஒரு திருப்பு முனைஎன  நான் கருதுகிறேன் என்று இங்கு சொல்ல விழைகிறேன்
  

பாண்டுவின் இறப்பு அஸ்தினாபுர அரசியலை முழுவதுமாக மாற்றி விடுகிறதுஉண்மையில் பாண்டு வனம் சென்றதை சத்தியவதி,விதுரன் உட்பட அனைவருக்கும் ஓரளவுக்கு நிம்மதிப்பெருமூச்சைத்தான் தந்திருக்கும்அவர்கள் அனைவரும் அஸ்தினாபுரத்தின் மணிமுடி பாண்டுவிற்குப்போனதை எதிர்பார்க்காதவர்கள்மீண்டும் அது திருதராஷ்ட்டிரருக்கு தற்காலிகமாக  திரும்ப பாண்டுவின் வனவாசம் உதவியது. ஆனால் அவர்கள் அனைவரும் எதிர்பார்க்காத ஒன்றுல்பாண்டு ஐந்து பிள்ளைகளுக்கு தந்தையென ஆனது. அதுவும் அவன் மூத்த மகன் திருதராஷ்டிரனின் மூத்த மகனைவிட வயதில் மூத்தவனாக இருப்பது. மணிமுடியை  மீண்டும் திருதராஷ்டிரனின்  மகனிடம் அளிக்க வேண்டும் என்ற முடிவு அரச குடும்பத்திற்குள் எடுக்கப்பட்ட முடிவுஅது அவை ஒப்புதல் பெற்ற அரசியல் முடிவல்லஆகவே பின்னர் சிக்கல் எழாமல்  தவிர்ப்பதற்கு பாண்டுவின் ஒப்புதல் வேண்டும். பாண்டு இறக்காமல் இருந்திருந்தால் இந்தச் சிக்கல் தோன்றவே வாய்ப்பிள்ளை. அவன் வனத்திலேயே அவன் பிள்ளைகளுடன் இருந்திருப்பான். அதற்குள் துரியோதனன் பட்டத்து இளவரசன் என அஸ்தினாபுரத்தில் நிறுவப்பட்டிருக்கும்பாண்டு பீஷ்மர் சொல்லைத் தட்டியிருக்க மாட்டான்ஆனால் இப்போது பாண்டுவின் இறப்பினால்  மணிமுடி குந்தியின் ஆளுகைக்குச் சென்றுவிட்டதுபாண்டுவின் பிள்ளைகள் உடன் நாடு திரும்புவார்கள். இப்போது  அவர்கள் அஸ்தினாபுரி மணிமுடிக்கு உரியவனின் பிள்ளைகள்குந்தியின் அரசியல்  கனவை மெய்ப்படுத்த விதி எடுத்த முடிவுதான் பாண்டுவின் இறப்புபோலும். ஆகவே மகாபாரதக் கதை குருஷேத்திரப் போரை நோக்கி திரும்புவதற்கான ஒரு பெரிய நிகழ்வாக  பாண்டுவின் மரணத்தை நான் பார்க்கிறேன்.    

 

தருமன் பாண்டுவினால் வளர்க்கப்பட்டவன்பாண்டு தன் இயலாமையை தன் குறைகளை  எல்லாம் தருமனை வைத்து நிறைத்துக்கொள்ள நினைத்திருக்கிறான்பாண்டு தான் அடைந்த அறிவு ஞானம் முழுதும் தருமனுக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக  புகட்டியிருக்கிறான். தருமன் அந்த ஞானத்தை சரியாக உள்வாங்கிக்கொண்டிருக்கிறான் என்பது நமக்கு தெரிகிறது. அதனால் பிள்ளைப்பருவத்தை   தாண்டிய முதிர்ச்சியை தருமன் அடைந்திருக்கிறான்குந்தி தருமனில்  ஒரு பேரரசனைக் கண்டு வியக்கும் தருணத்தை மழைவேதத்தில் காண்கிறோம்.    அவனை அந்த நிலைக்கு கொண்டுசெல்வதை தன் கடமையென குந்தி  உறுதி பூணுகிறாள்.   அதே நேரத்தில் துரியோதனன்  தன் மாமன் சகுனியால் வளர்க்கப்படுகிறான் என்பது ஒரு வரியில் மழைவேதத்தில் சொல்லப்படுகிறதுஅவன் தன் அரசியல் பெருங்கனவை அந்த சிறுவனின் உள்ளத்தில் புகட்டிவிடுகிறான்அது துரியோதனின் ஆளுமை உருவாக்கத்தில்  பெரும் பாதிப்பைச் செலுத்துகிறதுதுரியோதனன் மண் மீது கொண்ட பெரும்பற்றுக்கு காரணமாக அமைகிறது.     இரு வளர்ப்புகள் எப்படி ஒரு நாயகனாக ஒரு எதிர் நாயகனாக  உலகம் கருதக்கூடியவர்களை உருவாக்குகிறது என்பதை இப்பகுதி கோடிட்டுக்காட்டுகிறது

 

மாத்ரியை பாண்டு மணமுடிக்கும் நிகழ்வு ஒருவகையில்  குந்தியை அவமானப்படுத்துவது என்றே கொள்ளலாம். அவள் யாதவ குடியினள் என்று சிறுமைப்படுத்துவதுதான் அது. ஆகவே குந்தி மாத்ரியை வெறுப்பதற்கு பகை கொள்வதற்கு காரணம் இருக்கிறதுஆனால் அவள் அந்த உளநிலையை மாத்ரியை தன் மகளெனக் கொள்வதன் மூலம் சமன் செய்துகொள்கிறாள்விந்தனும் அனுவிந்தனும் எப்படி நட்பானார்கள் என்பதைப்பற்றி வெண்முரசு திசைதேர்வெள்ளத்தில் ஒரு குறிப்பு வரும். அவர்களுக்கு எதிரே அணைத்துக்கொள்ளுதல் அல்லது பகை கொள்ளுதல் என்ற இருவழிகளே இருக்கும். அவர்கள் அணைத்துக்கொள்வதை தேர்ந்தெடுத்துக்கொள்வதன் மூலம். நெருக்கம் நிறைந்த உறவு அமைந்து வலிமையடைவார்கள். குந்தி மாத்ரியை இப்படி அணைத்துக்கொள்வதன் மூலம்  அவர்களுக்கிடையே உறவில் நெருக்கமும் இணக்கமும் அமைகிறது. ராமகிருஷ்ணனின் உப பாண்டவத்தில் குந்தியின் சுட்டெரிக்கும் பார்வையைத் தாங்காமல் மாத்ரி கணவனுடன் எரிபுகுவாள் என இருக்கும். ஆனால் குந்தியின் வேண்டுகோளைத்தாண்டி மாத்ரி எரிபுகுவதாக வெண்முரசு கூறுவதே பொருத்தமாக இருக்கிறது
   

 இறந்த கணவன் உடலை கிடத்தி வைத்து காத்திருக்கும் இரவில் குந்தியின் மனம் ஓடும் விவரணை மிகுந்த உளவியல் நுட்பம் வாய்ந்தது. எப்படிச் சிந்திப்பது எதைச் சிந்திப்பது எனத் தெரியாமல் மனம் சிறு விஷயங்களில் அலைந்து திரிவதுஎதிர்பாராது அடைந்திருக்கும் பாதிப்பை மனம் உள்வாங்க முடியாமல் தத்தளிப்பதுஇனி எதிர்காலத்தை எதிர்கொள்வது எப்படி என்ற திகைப்பு, அதை எண்ணாமல்  தள்ளிப்போடப்பார்ப்பது என மனம் செல்லும் வழிகள் இங்கே காட்டப்படுகின்றனஇதற்கிடையில்  குந்தி தான் வலிந்து தவிர்த்துவிட்ட விதுரனின் மீதான தன் இயல்பான காதலை ஒரு சிறுவரியில் வெண்முரசு நினைவுபடுத்திச்செல்கிறது
  

எந்த ஒரு இறப்பும் மனிதனுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டுவது வாழ்க்கையின் அர்த்தமின்மையைத்தான்.   அம்பிகை அம்பாலிகை இதுவரை தாங்கள் ஒருவர்மேல் ஒருவர் கொண்டிருந்த வஞ்சத்தின்  காரணங்களை  பாண்டுவின் இறப்பு அர்த்தமிழக்க வைக்கிறது. அஸ்தினாபுரம் வந்த நாள் முதல் அவர்கள் பகை கொண்டு  வாழ்ந்த வாழ்க்கை அவர்கள் மனதிலிருந்து துடைத்தகற்றப்படுகிறது. தான் போடும் கணக்குகளையெல்லாம் கலைத்துப்போட்டு விளையாடும் காலத்திடம் முழுதும் தோற்றுப்போனவளாக  சத்தியவதியும் ஆகிறாள். அஸ்தினாபுரத்தை கட்டிப்பிடித்திருந்த தம் இலக்குகள் பொருளிழந்துபோனதை அறிந்து அவர்கள் மூவரும் அந்த நகர்விட்டு நீங்குகிறார்கள். ஆனால் அவர்கள் பாதியில் விட்டுப்போன  சதுரங்க  ஆட்டத்தைத் தொடர  சகுனியும் குந்தியும் எதிரெதிர் பக்கங்களில் அமரவிருக்கிறார்கள் என்ற குறிப்போடு மழைப்பாடல் நிறைவடைந்திருக்கிறது. பாண்டவர்களின் மற்றும் துரியோதனன் முதலான கௌரவர்களிலன் பிறப்பைப்பற்றி கூறி வந்த இந்த நூல் பாண்டுவின் இறப்பு என்ற நிகழ்வோடு முடிந்திருப்பது ஒரு முழுமையை அளிப்பதாக இருக்கிறது.  .


.துரைவேல்