Sunday, August 31, 2014

பூதனையின் சிற்பம்

பூதனையின் சிற்பம் பற்றிய ஒரு பதிவுhttp://poetryinstone.in/lang/ta/tag/boothanai

Saturday, August 30, 2014

அன்னையும் காதலியும்

நீலம் தொடங்கியதிலிருந்தே உங்கள் எழுத்துக்கு சன்னதம் வந்தது போல களிகொண்டு வருகிறது வார்த்தைகள்.  “தீராத விளையாட்டுப் பிள்ளை...”என்கிற பாரதியின் பாடல்களுக்கு இதுவரை உரை படித்தேன்.இப்போதுதான் அதன் பொருளை மெய்யுணர்கிறேன். ராதையின் வெறிகொண்ட காதலுக்கு முன்னுரை தொடங்கிவிட்டது.எனினும்,ஒன்பது வயது மூத்த ராதையால் எப்படி கருவின் குருதி வாசம் மாறாத குழந்தையின் மீது மையல் கொள்ளமுடியும்?விளங்கவில்லை.முடிந்தவரை தொடர்ந்து உங்களோடு வருகிறேன்.எங்கேயாவது விடைபூக்கும் என்கிற நம்பிக்கையில்!
                                                                                                                                                       எம்.எஸ்.ராஜேந்திரன் - 
திருவண்ணாமலை.

அன்புள்ள ராஜேந்திரன்,

எனக்கும்தான். தர்க்கபூர்வமாக சொல்லத்தெரியவில்லை. ஆனால் நிகழும்

அதை யதார்த்தத் தளத்தில் வைத்து பார்க்கவேண்டாம். ஒரு உருவகமாக காணும்போது பிரச்சினை இல்லை

ஜெ

கனசியாம யோகம்

அன்புள்ள ஜெமோ,

நீலத்தின் வடிவம், அமைப்பு குறித்து எனக்குள்ள சந்தேகம் இது. இது வரையிலும் வந்திருக்கும் வெண்முரசின் நாவல்களிலிருந்து நீலம் முற்றிலும் மாறுபடுகின்றது. இது வரையிலும் நாவலானது ஒரு வரலாற்றுக் கணத்தில் நடந்த ஒன்றாகத் தான் மகாபாரதத்தை சொன்னது. அதன் புராணத் தன்மைகள் ஒன்று யாரோ ஒரு சூதனால் சொல்லப்படும் அல்லது கிட்டத்தட்ட நடக்க சாத்தியமான ஒன்றாக இருக்கும் (பீஷ்மரின் தமயைன்களின் கதை). ஆனால் எவ்விடத்திலும் கதைமாந்தரை கடவுளாக்கியதில்லை. மேலும் பாரதத்தின் பாத்திரங்களே கதையின் ஓட்டத்தில் பேசும்.

ஆனால் நீலத்தின் ஆரம்பமே ராதை தான். அவள் பாரதத்தில் இல்லை என்பதையே நீங்கள் சொல்லி தான் எனக்குத் தெரியும். அப்படியிருக்க ராதையை வைத்து கதையை நகர்த்துவது ஏன்?

ராதை வரும் பகுதிகளெல்லாம் விதவிதமாக தன்னையிழந்து சரணடைவதைப் பார்க்கிறோம். இங்கே கண்ணன் இன்னும் சிறு குழந்தை தான். ஆனால் அவனின் ஒவ்வொரு செயலுக்கும் அவனின் வருங்கால ஞானத்தையெல்லாம் இப்போதே அளிப்பது ஏன்?

கிட்டத்தட்ட கண்ணனை கடவுளாகவே உணரச் செய்துவிட்டீர்கள். இது இதுவரை இந்த நாவல் வரிசை கைக்கொண்டு வந்த அடிப்படை வடிவ ஒருமையை மீறுவதாகாதா? கண்ணனுக்கும் ராதைக்குமான உறவால் பாரதத்தின் மையக் கதைக்கு என்ன பயன்?

நீங்கள் ஏற்கனவே ஒரு கேள்வி பதிலில் சொன்னது போல வெண்முரசின் மூலமாகத்தான் விதவிதமான கதை கூறும் முறைகளை அறிந்து வருகிறேன். அவ்வகையில் என் ஐயத்தைப் போக்கி, நாவலை மேலும் உணர்ந்து அனுபவிக்கவே மேலே உள்ள கேள்விகள்.

அன்புடன்,
அருணாச்சலம், நெதர்லாந்து <img src="http://www.hinduhumanrights.info/wp-content/uploads/2012/09/Radha_Krishna_Wallpaper_ofc8n-1000x500.jpg" width="1000" height="500" class="alignnone" />

அன்புள்ள அருணாச்சலம்

நீலம் வெண்முரசில் திட்டமிடப்பட்ட பகுதி அல்ல. நீலத்தை நான் திட்டமிட்டு எழுதவில்லை. எழுத ஆரம்பித்தபோது இவ்வடிவில் இம்மொழியில் அமையுமென்ற எண்ணமும் இல்லை.

வெண்முரசு தெளிவான வரலாற்று அடித்தளம் கொண்டது. ஆகவே தர்க்கபுர்வமானது. மானுட இயல்பு, வரலாற்றின் சுழிப்பு ஆகிய இரண்டையும் கூர்ந்து அவதானிப்பது. அதன் நுட்பங்கள் வழியாகச் செல்வது

ஆகவே அதில் எளிய புராணக்கற்பனைகளுக்கு இடமில்லை. புராணமும் மிகுகற்பனையும் அதில் வருவது அக்கதையை பிரபஞ்சத்தன்மை நோக்கிக் கொண்டு செல்லவோ கவியுருவகம் மூலம் வலுப்படுத்தவோதான். மகாபலியின் கதை முதல்வகைக்கும் துரோணரின் கையில் இருக்கும் தர்ப்பை இரண்டாம் வகைக்கும் உதாரணம்.

ஆனால் நீலம் அந்த தர்க்கத்துக்குள் அமையாது. அந்த அழகியலுக்குள் அடங்காது. அதன் மொழியே வேறு

மகாபாரதத்தில் கண்ணனின் இளமைப்பருவமே இல்லை. அது பாகவதத்தால் உருவாக்கப்பட்டது, ஆயிரம் வருடம் கழித்து. 

பாகவதத்தில்கூட ராதை இல்லை. அது மேலும் ஆயிரம் வருடம் கழித்து உருவாகி வந்த படிமம்

ஆகவே என் வெண்முரசின் இயல்பான ஒழுக்கிலும் இளம் கண்ணனும் ராதையும் இல்லை. பாரதத்தின் கண்ணன் ஞானியான யாதவ அரசன். அவ்வளவுதான். நெடுங்காலம் பிந்தியே அவனைப்பற்றிய கதைகள் மேலும் விரிந்தன.

ஆயினும் மகாபாரதத்தில் நீலம் நாவலை ஏன் எழுதிச்சேர்த்தேன் என்றால், எழுத நேர்ந்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் எழுதத் தொடங்கியபின் அதில் ஒரு முதன்மையான அம்சம் உள்ளது என படுகிறது

நான் 20 வருடங்களுக்கும் மேலாக யோகநிலைகளில் ஆர்வமும், பயிற்சியும் உள்ளவன். சில குருநாதர்களையும் கொண்டவன். ஆனால் அதைப்பற்றி எதையும் எழுதியதில்லை. அப்படி எழுதுவதும் சாத்தியம் அல்ல. அது வெறும் தர்க்கம் அல்லது உருவகமாகவே முடியும். அந்த உணர்வும் வீச்சும் வெளிப்படுத்தக்கூடியது அல்ல.

நீலம் உணர்வுரீதியானது. சமர்ப்பணம் பற்றியது. பித்துநிலை மொழி கூடி வருவது. ஆனால் கூடவே அது மறைஞானத் தன்மை கொண்டது [ esoteric ] மறைஞானத் தளத்தில் எழுந்த மிகமுக்கியமான நூல்களில் ஒன்று இது என நீங்கள் உறுதியாக நம்பலாம்

ஓர் இலக்கிய வாசகன் இலக்கிய நயம் கோரி மட்டும் அதை வாசிக்கலாம். ஆனால் அடிப்படை யோக அறிதல் கொண்ட ஒருவன் ஒவ்வொரு வரியிலும் தலைப்பிலும் அமைப்பிலும் அதன் யோகவியல் சார்ந்த உள்ளடக்கத்தைக் காணமுடியும். ஒன்றுடன் ஒன்று தொட்டுச் செல்லும் படிமங்களிலும், உணர்வுநிலைகளிலும் அது உள்ளது

கிருஷ்ணன் ராதை என்னும் இரு புள்ளிகளுமே இந்த யோக நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டவைதான். ராஜயோகம் என்றோ ராஸயோகம் என்றோ கனசியாம மார்க்கம் என்றோ சொல்லப்படும்  ஒரு வகை யோகமுறைமையின் உருவகங்களே அவ்விரு கதாபாத்திரங்களும். பிரேமையை அடிப்படையாகக் கொண்டது அது.

பாகவதத்தின் உருவகங்களும் இந்நாவலில் அந்த பொருளிலேயே அமைந்துள்ளன. ஆகவே முழுமையாக ‘அர்த்த’ தளத்தில் அமைந்தது அல்ல இந்நாவல்.

இந்நாவலிலேயே கிருஷ்ணன் என்பது முழுக்கமுழுக்க ராதையினால் உருவாக்கப்படுவதென்பதை காணலாம். ராதையை உருவாக்கியது கிருஷ்ணபாவம். இந்நூல் யோகத்தின் இருண்ட பக்கங்களுக்கும் பிரேமையின் ஒளிமிக்க பக்கங்களுக்கும் மாறிமாறி ஊசலாடும் அமைப்பு கொண்டது.

பூதனை முதற்பூதமான மண். திருணவரதன் அடுத்த பூதமான காற்று. பூதனை அன்னம். திருணவரதன் பிராணன். இந்த குறிப்புகளை மட்டும் அளிக்கிறேன். இது ஒரு யோகநூல் என்பதற்காக.

யோகத் தளத்தில் இந்த நூல் மகாபாரதத்தை ஒட்டுமொத்தமாக விளக்குவதாக அமையும். மகாபாரதத்தின் முழுமையை மேலும் கூர்மைப்படுத்தும். ஆனால் பாரதக்கதைக்குள் இது அமராது. மகாபாரதம் என்னும் ஞானநூலில் இது ஓரு யோகநூலாக அமரும்

ஜெ

Friday, August 29, 2014

கிருஷ்ணதரிசனம்

சென்னையிலும் கொஞ்சம் குளிர் தென்படும் மார்கழி மாதம். வருடம் 1998. மாலை 5 மணி இருக்கும். படபடப்புடன் மருத்துவமனையின் பிள்ளைப் பேறு அறைக்கு வெளியே காத்திருக்கிறோம். குரங்குக் குட்டி அன்னையிடம் ஒட்டி இருப்பது போல், குழந்தை மதுரா, என்னை இறுகக் கட்டி அமர்ந்திருக்கிறாள்..

“அப்பா.. அப்பா.. பாப்பா எப்பப்பா பொறக்கும்” என்னும் கிளிப்பிள்ளைக் கேள்வியைக் கேட்டுக் கொண்டேயிருக்கிறாள்.  திடீரென மழை அடித்துப் பெய்கிறது.. திறந்திருக்கும் ஜன்னல் வழியே குளிர் காற்று உள் நுழைந்து மதுராவை நடுங்க வைக்கிறது.. 

“சரி.. வா கீழே கேண்டீனுக்குப் போய் வந்துரலாம்” - தொண தொணப்புத் தாங்காமல், கீழே செல்கிறோம். “என்ன வேணும்” எனக் கேட்க, சூடாகப் பொறிந்து கொண்டிருந்த பஜ்ஜியைக் காண்பிக்கிறாள் மதுரா.. மழை மேலும் வலுக்கிறது.. கொஞ்சம் பொறுத்துச் செல்லலாம் எனக் காத்திருக்கிறோம். பஜ்ஜி முடிந்து, மழை முடிந்து மேலே செல்ல, வாசலில் பரபரப்பு - உள்ளிருந்து மருத்துவர், ஒரு டவலில் சுற்றி, கருப்பாக ஒரு குழந்தையைக் காண்பிக்கிறார்.. கண்கள் திறக்காத பூங்குட்டி நெளிகிறது.. 

“தம்பிப் பாப்பா.. பாரு பாரு”, என்கிறார்கள். முழுக்கப் பார்த்து முடிப்பதற்குள், உள்ளே கொண்டு செல்கிறார்கள்..  மதுரா என்னை மேலும் இறுகக் கட்டிக் கொள்கிறது. அன்றிரவு அவளுக்குக் கண்ணனின் கதை சொல்கின்றேன். “இப்படித்தான் அன்னைக்கு ஒரு நாள், பயங்கரமா மழை பெஞ்சுகிட்டிருந்தது..”

யாரோ அவன் ஜாதகம் பார்த்து, அவனுக்கான குறுந்தேவதை - சித்திர குப்தன் என்கிறார்கள்.. சில நாட்கள் அவனுக்குச் சித்திரகுப்தன் என்று பெயர்.. “ராஜாதி ராஜ.. ராஜ மார்த்தாண்ட.. ராஜ கம்பீர.. வீர தீர பராக்கிரம சித்திரகுப்தர் மூச்சா போயிட்டார்.. பராக்! பராக்!!” என்று அவர் கீர்த்திகளைப் போற்றுகிறோம்.. அன்று அவரின் முக்கியமான வீர விளையாட்டு அது..

பின்னர், சிறு விழா நடத்தி, எங்களின் ஆதர்சத்தின் பெயரால், அருண் ரமணா எனப் பெயரிடுகிறோம்.. ஆனால், மதுராவுக்குத் தம்பியானதால், அவர் எல்லோருக்கும் தம்பியாகவே ஆகிறார்.

பிறந்த ஒரு மாதத்தில், பொருள் வயின் பிறிவு. தில்லி சென்று ஒரு எட்டு மாதம் கழித்து வருகிறேன். அதற்குள் ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசுதல் என முன்னேற்றம். தொட்டிலில் தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தையை எழுப்பி, யாரிதெனக் கேட்க, விழித்துக் கொண்ட குழந்தை சொல்கிறது “மாமா” -  அதற்குள் கருப்பு நிறம் எப்படி நீங்கியது? தெரியவில்லை.. காந்தி போல் பெரும் காதுகள்..

ஒரு சில வார்த்தைகள் தவிர பேச்சு வரவில்லை. கிட்டத் தட்ட இரண்டாண்டுகள் வரை.. ஊமைச் சாமியாகவே இருந்தது. மெல்ல மெல்ல வீட்டில் வேலை செய்யும் பணியாளுடன் வெளியே செல்லக் கற்றுக் கொண்டது.. சென்னையில் போக் ரோடு ஒரு பாடல் பெற்ற ஸ்தலம். கண்ணம்மா பேட்டை இடுகாடு செல்ல அதுவே வழியென்பதால், தியாகராய நகர் மக்களின் இறுதி யாத்திரை இவ்வழியேதான்.  கள் மாந்தி, லுங்கியை டவுசருக்கு மேல் எடுத்து, வாயில் கவ்வி, மூக்கை விடைத்து மக்கள் ஆடும் செவ்வியல் மயான நடனம் இவருக்கு மிகவும் பிடித்துப் போனது.. தொலைவில், தப்பட்டை சத்தம் கேட்டவுடனேயே, வீட்டுக்குள் இவர் நடனம் துவங்கி விடும்..

பணியாளுடன் டீக்கடைக்குச் சென்று, டீயும் மசால் வடையும் தின்று விட்டு வந்தது.. மசால் வடையை டீயில் தோய்த்து உண்பது இவருக்கு மிகவும் ப்ரீதியானது.. யாருமில்லாத ஒரு நாள் வெளியே தனியே சென்று டீயும் மசால் வடையும் இவரே ஆர்டர் செய்து விட்டார் என்றொரு நாடோடிக் கதையும் உருவாக்கப் பட்டது.. மெல்ல மெல்ல டீக்கடைக் குத்துப் பாட்டுகள் கேட்டு, மழலையாகப் பிதற்றக் கற்றுக் கொண்டார்.. ”வாதி வாதி நாட்டுக் கட்டே”

நின்றிருக்கும் காரை ஸ்டார்ட் செய்தல்.. ஓடும் காரின் கதவைத் திறத்தல் என பல மூட வீர விளையாட்டுக்களில் ஈடுபட்டார். மற்றபடி, பொருட்களை உடைத்தல், எதற்குள்ளும் கையை, தலையை விட்டுக் கொள்ளுதல் போன்றவை சிறு விளையாட்டுகள்.

ஒரு 2-3 வயது வயது வாக்கில், தில்லி அழைத்து வந்தோம்.. “தம்பி” என்றழைத்தால், சட்டென்று திரும்பி, கண்களை மேலே செலுத்தி, கேட்கிறது.. “இன்னா?”  அமுதம் பொழியும் கொங்குத் தமிழ்க், குடிமகனுக்கு இப்படி ஒரு சோதனையா எனக் கண்ணீர் மல்கினேன்.. இன்னும் வார்த்தைகள் சரியாக வரவில்லை -  சீப்பை, பீப்பு என்கிறது.. ஃபேனை, சேன் என்கிறது.. சோப்பை, போப்பு என்கிறது..

ஹரித்துவாருக்கு ஒரு சிற்றுலாச் செல்கிறோம்.  வழியில் போரடிக்காமல் இருக்க, தம்பிக்காக தமக்கையும், தந்தையும் பாடல் புனையத் துவங்குகிறோம். தமக்கையின் பள்ளிப் பாடலான Old mcdonald had a farm பாடலை மாற்றி, “குட்டித் தம்பி குறும்புக்காரன் ஈயா ஈயா ஓ” என்று பாடுகிறோம்.  அருந்தமிழ்ப் பாட்டை மாற்றி, “காந்திக் காது தம்பி வாடா.. நீ ஒரு உம்மா கொடுடா” என்று கொலை செய்கிறோம்..

எப்போது.அந்தக் குழந்தை மறைந்து போனது என்று தெரியவில்லை..   ”நீலம்” படித்ததும், பாலகாண்டம் மனதில் உயிர் கொண்டெழுந்தது.. உலகெங்கும் எத்தனை கோடிக் காவியங்கள்.. அவை தரும் இன்பம்.. அலகிலா விளையாட்டேதான்..

மூவுலகாளும் சாத்தியத்தை, நான்கு நாற்காலிகள் மீது இருத்த வைக்கும் அசாத்திய வன்கொடுமை நிகழ்கிறது அதன் மேல் இப்போது.. முகத்தில் அரும்பத் துவங்கியிருக்கும் பருக்களும், மீசையுமாய், விடலைப் பிடிவாதத்தோடு கண்ணீருடன் போரிடுகிறது அதை எதிர்த்து.  தேவகி / வசுதேவ முட்டாள்தனங்களோடும், மனதில் கவலையோடும் அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். எங்கே போனார் அந்தக் குழந்தைக் கடவுள்?


பாலா


அன்புள்ள பாலா

ஒவ்வொருவருக்கும் ஒரு கிருஷ்ண தரிசனம், ஒரு தேவிதரிசனம் இருக்கிறது. இங்கே இப்படி மட்டுமே அதை அறியமுடியுமென்றிருக்கிறதுபோல

ஆகவேதான் வரியாசி சொல்கிறாள் ‘என் நிறைமூச்சில் ஒலித்தடங்கும் ஒருபெயரென்ன என்றறியும் பெருநாள் இது!’ என

ஜெ

அந்த நீலச்சிறுகுருவி

நல்வழியில் ஒரு பாடல் வரி: "நெட்டிருப்புப் பாரைக்கு நெக்குவிடாப் பாறை,
பசுமரத்தின் வேருக்கு நெக்குவிடும்". பாறையில் ஈரம் மிகமிகக் குறைவு.
ஈரமே இல்லை என்று சொல்லப்பட்டாலும் மிகக்குறைந்த அளவிலான ஈரம் அதனுள்
உண்டு. ஜீரோ வாட் பல்ப் மிகக்குறைவான மின்சாரம் இழுப்பது போல. அந்த
ஈரத்தையே பசுமரத்தின் விதை எடுத்துக்கொள்கிறது. பாறையை உடைத்து
வளர்கிறது.

//மண்கனக்கும் கரும்பாறை மடிப்புகளைப் பிளந்தமைக்கும் கண்விழியா
சிறுவிதைக்குள் வாழும் முளைக்கரு//

அதையேதான் செய்யவிருக்கிறது இல்லையா?
தன்னை வென்று தான்கடந்த, அறத்தாலும் கட்டுண்ணப்படாத கம்சரைக் காலில்விழச் செய்யும் இளநீலம்! ஒளிவிடும் இளநீலம் ஓவியத்தில் கழுகின்மேல்அமர்ந்திருப்பது கற்பனையை எங்கோ கொண்டு செல்கிறது. அற்புதமான பகுதி!

அன்புடன்,
த.திருமூலநாதன்.

அன்புள்ள திருமூலநாதன்

ஒரு சிறு நீலக்குருவியால் தூக்கிச்செல்லப்படுமளவு எடைகொண்டதே இவ்வுலகம்.

ஜெ

கண்ணனின் முகம்

அன்புள்ள ஜெமோ,

நீலம் பகுதி 9, பெயரழிதல் முதல் பத்தியிலேயே ஆகாவென சொல்ல வைத்து விட்டது. வேறு எந்த பகுதியின் படங்களுக்கும் இல்லாத ஒரு சிறப்பு இப்பகுதியின் படத்திற்கு உண்டு. இது வரை வந்த அனைத்து வெண்முரசின் பகுதிகளின் படங்களில் ஒன்றில் கூட எந்த ஒரு கதை மாந்தரின் முகத்தையும் ஷண்முகவேல் வரைந்ததில்லை. எனக்கு தெரிந்த வரையில் கார்க்கோடகனின் முகம் மட்டுமே வந்துள்ளது. ராதையின் கண்கள் அந்த சோலையினூடாக.

ஆனால் கண்ணன் ஷண்முகவேலையும் கிறங்க வைத்து வரைய வைத்து விட்டான். இப்பகுதியில் ராதை கண்ணனுக்கு மயிற்பீலி சூடும் இடத்தை ஒரு கனவு போல என்னுள் இறக்கி விட்டார் ஷண்முகவேல். குழந்தயைின் முன் ஒரு பருவப் பெண்ணால் மையலுடன் இருக்க முடியுமா என்ற கேள்விக்கு வித விதமான பாவத்துடன் ராதை கண்ணனை அணுகுவதன் மூலம் சொன்னீர்கள். இன்று அதை வரைந்தே காட்டி விட்டார். காலாகாலத்திறகும் என்னுடன் இருக்கப்போகும் ஒரு படம். வாழ்த்துக்கள்.

அன்புடன்,
அருணாச்சலம், நெதர்லாந்து

நீலம்- ஒரு வரி

அன்புள்ள ஜெமோ அவர்களுக்கு,

வணக்கம். 

"நீலம்" மனதை நிறைத்து கொண்டிருக்கிறது. போதை தலைக்கேறுகிறது. நன்றி. வாழ்க.

"அச்சத்தால் கட்டுண்டோன் மானுடன். ஐயத்தால் கட்டுண்டோன், அவற்றை வென்றாலும் உணர்வுகளால் கட்டுண்டோன். அனைத்தையும் வென்றாலும் அறத்தால் கட்டுண்டோன்."

அச்சமும், ஐயமும் உணர்வுகள் தானே? கீழ் நிலை அல்லது உலகாயுத உணர்வுகளுக்கும், "அறம்" என்ற மேன்மையான உணர்வுக்கும் உள்ள தொடர்பை சுட்டுவதாக இந்த வரி அமைந்திருக்குமோ என்ற எண்ணத்தில் இதைக் கேட்கிறேன். 

கண்ணனின் ஆயிரம் நாமங்களுள் தங்களுக்கு ஏன் "நீலம்" (மேக வர்ணம்?) மீது ஒரு பிடிப்பு என்று தோன்றியது. நீல நிறத்தின் அலகிலா தன்மையோ? அதனோடு வெண்மை சேர்ந்தாலும், கருமை சேர்ந்தாலும் அதன் நீலம் மாறாது அழகொளி வீசுவதாலோ?

வெண்முரசில்  மிகை புனைவுகளுக்கு இடமில்லை என்றால், கண்ணன் ஏன் கிருஷ்ணனாக மட்டுமே சித்திர்க்கப்படவில்லை? ராமன் பச்சையாகவும், கண்ணன் நீலமாகவும் இருந்தால் தான் வாசகனின் மனக்கண் அதை கண்டுகொள்ளுமோ?

அன்புடன்,
பார்கவி. 

பி. கு.: ஒன்பது வயது சிறுமியை தென்றல் கூட அப்படி நெருக்கமாகப் பார்த்தது  மனதை நெருடிவிட்டது. நீங்கள் இன்றைய காலத்தில் ஒன்றை உருவாக்கியுள்ளீர்கள், வாசகனும் "இன்று" தானே அதை படிக்கிறான்? A classic case of time warp! 
 
அன்புள்ள பார்க்கவி
 
பல வரிகளை நான் எழுதியதே நினைவில் இல்லை. பலசமயம் திரும்பப்படிப்பதும் இல்லை. நீங்கள் சொன்ன வரிகளை வாசித்தேன்
 
"அச்சத்தால் கட்டுண்டோன் மானுடன். ஐயத்தால் கட்டுண்டோன், அவற்றை வென்றாலும் மெல்லுணர்வுகளால் கட்டுண்டோன். அனைத்தையும் வென்றாலும் அறத்தால் கட்டுண்டோன்."
 
என்றிருக்கவேண்டும். மாற்றிக்கொள்கிறேன்.
 
நீலத்துக்கு ஒரு வசீகரம் உள்ளது. நீலத்தை தனிமையில் கூர்ந்து நோக்கும்போது நாம் மனவசியம் செய்யப்படுவோம்.
 
ஏனென்றால் அது இருள். புன்னகைக்கும் இருள். நாம் கையாளக்கூடிய இருள்
 
வெண்முரசின் அழகியலுக்கும், அமைப்புக்கும் நீலத்துக்கும் சம்பந்தம் இல்லை. இது முடிந்ததும் மீண்டும் குதிரை ஏறிவிடுவேந் சிறகுகளை கழற்றிவிட்டு
 
ஜெ
 
 

Thursday, August 28, 2014

கருமை

ஜெ

ஆறவில்லை. ஆகவே மீண்டும்

இல்லையென்ற சொல்லின்மேல் இருப்பதெல்லாம் சுமத்தும் ஞானியரா நீங்கள்? 
எல்லையற்ற இருள்வெளியில் நீங்கள் ஏற்றிவைத்த விண்மீன்களா அவை?

கண்ணனின் உடலில் நகைகளை வர்ணிக்கும் வரிகள். எத்தனை எத்தனை கோணங்களில் சிந்தித்து முடிவின்றி போய் விட்டுவிட்டேன்

சுவாமி

கண்ணனின் குளியல்

குழந்தையை தொட்டு அணைத்து நுகர்ந்து முத்தத்தில் சுவைகொண்டு அதன் விளையாடல், புன்னகையை கண்டு, மழலைமொழி கேட்டு நாம் ஐம்புலன்களால் அடையும் இன்பம் இறைவன் நம்முடைய இந்த மனித பிறவிக்கு கொடுத்துள்ள வரம்.  பேருந்தில் பக்கத்து சீட்டில் இருப்பவரின் மடியில் தவழும் குழந்தையின் கால்கள் என்னை தீண்டுமோ என ஏக்கத்துடன் காத்திருந்த காலம் உண்டு. எனக்கென குழந்தைகள்  வந்தபோது நான் அடைந்த அந்த தொடுதல்  இன்பத்தை இன்னும் நினைவில் வைத்திருக்கிறேன். என் குழந்தைகளை அதிகம் நான் தான் குளிப்பாட்டுவேன்.  குழந்தையின் தொடுதல் இன்பத்தை குளிப்பாட்டுவதன் மூலமே அதிகம் அனுபவிக்க முடியும்.  அப்போதெல்லாம் அந்த இன்பத்திற்கு நான் தகுதியானவன் தானா என கண்ணீர் மல்குவேன். பிள்ளகள் வளர்ந்துவிட்டார்கள் இப்போது  அது வெறும் நினைவாகிவிட்டது. அதற்கான ஏக்கம் எப்போதும் என் மனதில் இருக்கிறது. இதற்கப்புரம் ஒருவேளை என் பேரக்குழந்தைகளைன் வழி எனக்கு அந்த இன்பம் கிடைக்கக்கூடும் என இருந்தேன்.  ஆனால் உங்களால் இன்று கண்ணனையே குளிப்பாட்டும் பேறு பெற்றேன்.   இன்னும்  அந்த குளியல் சாந்தின் மணம் போகவில்லை குளிப்பாட்டி எழுந்த அந்த சிறு அயற்சி தீர வில்லை. என் உடைகளில் தெறித்து விழுந்த ஈரம் காயவில்லை. அவனை தொட்ட கைகள் உணர்ந்த மென்மை அப்படியே உள்ளது. ஒரு முழு அனுபவத்தை தந்திருக்கிறீர்கள். கண்ணனை இடுப்பில் அமர்த்தினால் கூட சிறிது இடைவெளி இருக்கும் என நெஞ்சத்தில் வைத்திருக்கிறேன் நான்.

அன்புடன் 
த.துரைவேல்

அன்புள்ள துரைவேல்,

அது ஒரு தருணம்.

அக்கணம் முழுமைகொண்டு மறுகணத்தில் மீண்டும் பிறந்தெழுதல்.

பெரிதில் சிறிதையும் சிறிதில் பெரிதையும் காண்பதே இரண்டையும் அறியும் வழி

ஜெ

நீலம் -வடிவம்

ஜெ,

மீண்டும் சொல்கிறேன். இது நீங்கள் எழுதுவதே அல்ல. இருளை ஒளியின் பெருங்கனவு என்கிறீர்கள். என்ன அர்த்தம் அதற்கு? உங்களாலேயே சொல்லிவிடமுடியாது. ஆனால் மொத்த அத்தியாயமும் பொருளில்லாத நிலையில் அதைச் சொல்லிக்கொண்டிருக்கிறது.  இருளாகி அனைத்தும் சுழன்றழியும் இன்மையின் இருளே அவனா?

இத்தனை பித்து நிலையில் எழுதினாலும் உங்கள் அடிமனசு ஆரம்பத்திலேயே மொத்த  கட்டிடத்தையும் கண்டு விடுகிறது.கன்னங்கருமைக்குள் எஞ்சும் வண்ணம்தான் ஏது? என்ற வரியில் தொடங்கும் அத்தியாயம் சீராக வந்து கண்ணறியா கருமை யை கனசியாமன் என்று அறியும் இடத்தில் முடிகிறது.

ஆச்சரியம்தான். இந்த ஒரு அத்தியாயத்தை எத்தனை முறை வாசித்திருப்பேன் என்று எனக்கே தெரியாது இன்று பகல் முழுக்க வாசித்துக்கொண்டே இருந்தேன். ஒவ்வொரு வரியாக எடுத்து ஒரு டைரியிலே எழுதி அர்த்தமும் எழுதிக்கொண்டே இருந்தேன். முப்பது நாப்பது பக்கங்களுக்கு அர்த்தம் எழுதிவிட்டேன்.

தேடுகையில் ஆடுபவன் அவன்   மாதிரி நேரடியான தத்துவம்

அவனுக்கு இப்புவியே வேண்டும். விண்வேண்டும் வெளிவேண்டும். எஞ்சாமல் எங்குமிருக்கவேண்டும். காலமாகி காலம் கடந்தும் திகழவேண்டும்?

அதற்கு இவன் ஆயர்குடிச் சிறுவனாக ஏன் வந்தான்? பரம்பொருளாகப் போய் நின்றிருக்கவேண்டியதுதானே?”

போன்ற கவித்துவமான பகடி.

என்ன சொல்ல? வாழ்க

சுவாமி


அன்புள்ள சுவாமி,

அப்படி ஒரு திட்டம் அத்தியாயங்களுக்கு இல்லை. ஓரு வரியை மீளமீளச் சொல்லி தொடங்குவேன். ஓர் இடத்தில் இதோ  முடிந்துவிட்டது என்று தோன்றும். நீங்கள் சொல்வதுபோல பின்னர் வாசிக்கையில் ஓர் வடிவ ஒழுங்கு அமைந்து வந்திருப்பதை காண்கிறேன். அது கையிலா கருத்திலா இருக்கிறது என்று தெரியவில்லை

ஜெ

Wednesday, August 27, 2014

நீலம் இருமொழி

அன்புள்ள ஜெ

நீலம் இரண்டு மொழிநடைகளுக்குள் ஓடுகிறது. ஒருமொழி கதை சொல்கிறது. இன்னொன்று கதையே இல்லாமல் செல்கிறது. கதைசொல்லி மொழியில் வரும் கண்ணன் கதை குரூரமான அழகியலுடன் இருக்கிறது. ராதையின் மொழி பரவசமும் அழகும் மட்டுமே கொண்டிருக்கிறது

இரண்டையும் மாறி மாறி வாசிப்பது ஒரு பெரிய நெருக்கடியை அளிக்கிறது குருதியாடி வருக என் தெய்வம் என்று வசுதேவன் சொல்லும்போது நாம் காணும் கண்ணன் ஒருவன். ராதை இடுப்பிலே தூக்கி வைத்து காக்காவை காட்டி கொஞ்சும் கண்ணன் வேறு ஒருவன்

கண்ணனுக்கு உண்மையிலேயே இரு முகங்கள். ரத்தம் தோய்ந்த கதை அவனுடையது. அதனால்தான் அவனுக்கு கோகுலம் என்ற அழகிய கனவுலகை படைத்துக்கொடுத்தார்கள் இல்லையா. இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடாத இரண்டு கதைகள் இரண்டையும் ஒன்றாக ஆக்க முயல்கிறீர்கள்

இரண்டும் இணைந்து வரும்போது ஒன்றை ஒன்று உக்கிரமாக ஆக்கிவிடுகிறது ஜெ

சுகுமார்

நீலச் சொற்கள்

அன்புள்ள ஜெ

நீலம் எங்கே செல்கிறதென்று தெரியவில்லை. மீண்டும் ஒரு பித்துப்பிடிக்க வைக்கும் அத்தியாயம். கண்ணன் ராதைக்கு மகனாக அமர்ந்திருக்கிறன். அவள்தான் அவனுக்கு பெயரிடுகிறாள். மொழியைச் சொல்லிக்கொடுக்கிறாள். கண்ணன் என்பதே ராதையின் சிருஷ்டிதான் என்று சொல்லவருகிறீர்களா என்ன? பிரமிப்பாக இருக்கிறது. கண்ணன் ராதை பந்தத்தை எத்தனையோ பேர் சொல்லியிருக்கிறார்கள். இந்தக் கோணம் மிகவும் புதியது

ராதையின் இடுப்பில் கண்ணன் அமர்ந்திருக்கும் அந்த படமும் அற்புதம். நான் தேவகி என்று அவள் உணர்கிறாள். அந்த இடத்தை எத்தனையோ முறை வாசித்திருப்பேன். எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை என்று சொல்வோமே அந்த இடங்களை எல்லாம் சொல்லிவிட்டீர்க்ள். நீங்கள் சொல்ல வில்லை. தமிழ் சொல்லிவிட்டது. தமிழுக்கு இத்தனை ஒலியழகும் பொருளழகும் உள்ளது என்பதை நாம் பாரதிக்குப்பிறகு மறந்தே விட்டோம். நெகிழ்ந்து போகும்போது மட்டும்தான் தமிழின் பிரம்மண்டமே புரியவருகிறது

அதை நிறைக்கும் அமுதம் விண் நிறைந்த பாற்கடலில் அலைததும்பி எழுந்து அன்னைப் பசுவின்  அகிடுகளில் துளிவிட்டு ததும்பி நின்றிருக்கிறது.

என்ற வரியில் அர்த்தம் மூலம் கவித்துவம் நிகழ்கிறது என்றால்

மொட்டலர்ந்த வல்லியை, முழுக்குருடர் தொட்டறியும் எல்லியை, தொட்டில் விட்டெடுத்து தன் மொட்டுமுலைகள் மேல் அள்ளி

என்ற வரியில் வெறும் சொல்லடுக்கே கவித்துவமாகிறது

ஊழிப்பெரும்பசியா உனக்கு? உலகேழும் உண்டுதான் அமைவாயா?

என்ற வரி நேராக ஒரு தத்துவம் மூலம் கவிதையாகிறது. மூன்று வகையிலும் மாறி மாறி கவிதையாகிக்கொண்டே செல்கின்ற சொற்கள் மட்டுமே கொண்ட ஒரு அத்தியாயம்.

வாழ்த்துக்கள் ஜெ

சுவாமி


Monday, August 25, 2014

கண்ணனின் பிறப்பு

பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு
,
வணக்கம்.
மாயக்கண்ணனின் பிறப்பை பற்றி எப்படி எல்லாமோ படித்து மகிழ்ந்து இருக்கிறோம்,ஆனால் இது ஒரு வித்தியாசமான புனைவு! மெய் சிலிர்க்கிறது!

 “பொன்முடிகொண்டு பிறக்கவில்லை. பெரும்புகழ்கொண்டு பிறக்கவில்லை. பொல்லாப்பழிகொண்டு பிறந்திருக்கிறான்! பாலாடி பழியாடி பலநூலில் பகடையாடி பசுங்குருதியாடி எழுக என் தெய்வம்! எழுக! எழுக என் தெய்வம்! எழுக!” கைதட்டி நடனமிட்டு கூவிநகைத்து கம்சரைச் சுற்றிவந்தார். "

அன்புடன்,
அ .சேஷகிரி.


அன்புள்ள சேஷகிரி

கண்ணனின் பிறப்பில் வழிந்த குருதியை உணராமல் அவனை புரிந்துகொள்ள முடியாது. அதற்கு எளிமையான புராணவிளக்கங்கள் உதவாது.

ஜெ

நீலம்- கைவிட்டுச் செல்லும் மொழி

அன்புள்ள ஜெ,

நீலம் படித்துக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு வரியையும் குறைந்தது மூன்றுமுறை படிக்காமல் நகரவிடுவதில்லை. இதுவரை உங்கள் எழுத்துக்களில் அடைந்த பரவசத்தைவிட இன்னும் ஒருபடி மேலே போய் படிக்கும் போதே மயிற்கூச்செரிவதும், கண்களில் நீர்த்திரை படர்ந்து படிக்க முடியாமல் ஆவதும் நிகழ்வதை பரவசத்துடனும், வியப்புடனும் கவனித்து, அனுபவிக்கிறேன். வாசிக்கும் போதே இணையாக மனதில் உங்களுக்கு கடிதம் எழுதுகிறேன், 'இந்தவரியைச் சொல்லிக்காட்ட வேண்டும், இந்த வரியைச் சுட்டிக்காட்ட வேண்டும்' என்று மனதில் ஒவ்வொரு வரியாக அடிக்கோடிட்டு கடைசியில் ஆனந்தம் மட்டுமாக எஞ்சி நின்று எல்லாம் மறந்து தவிக்கிறேன். 

சில நாட்களாக தொடர்ந்து அடுத்தடுத்து பிரச்சனைகள். என் கை மீறி தீர்க்கமுடியாமல்.. ஆனால் நீலம் ஆரம்பித்தது முதல் ஒரு துள்ளலும், கனிவும், நெகிழ்ச்சியும் இந்த உலகத்தை விட்டு எங்கோ தூர மிதக்க வைக்கிறது. இதுவரை வெண்முரசு குறித்த எந்த கடிதமும், கட்டுரையும் எனக்குத் திருப்திதரவில்லை. என்னால் அப்படி ஒன்றை எழுதிவிடமுடியுமா என்றும் நிச்சயமில்லை. நான் என்ன யோசித்தாலும் அது உங்கள் மொழியின், படைப்பின் தரத்திற்கு சற்றும் பொருந்தாமல் கீழே கிடக்கிறது. 

எளிமையாக என்னால் செய்யமுடிந்தது இதுதான். மனதார உங்களைக் கட்டியனைத்து கைகளிலும், பாதங்களிலும் முடிவிலா முத்தங்களை வாரியிறைத்து வியந்து வாய்பிளந்து அமைதியாகிறேன் என் அன்பு ஆசானே.

உங்கள்,
பிரகாஷ்.

அன்புள்ள பிரகாஷ்

முற்றிலும் ‘கைவிட்டு’ போன ஒரு நாவல் இது. எது நிகழ்கிறதோ அது என சென்றுகொண்டிருக்கிறேன். ஒட்டுமொத்தமாக ஒன்றாகத் திரண்டுவிடுமென ஒரு நம்பிக்கை இருக்கிறது. ஏனென்றால் என் கையில் திரண்டுள்ள வடிவப்பயிற்சி இதுவரை கைவிட்டதில்லை

ஜெ

வெண்முரசு – மிகுபுனைவு, காலம், இடம்

மகாபாரதத்தையும் வெண்முரசையும் ஒப்பிட்டு கேட்கப்படும் பொதுவான வினாக்களுக்கான விடைகள் இவை.


1. வியாச மகாபாரதத்தில் இருந்து வெண்முரசு வேறுபடும் இடங்கள் எவை? ஏன் அந்த வேறுபாடு?


வியாசமகாபாரதம் என்ற மாபெரும் படைப்பை உண்மையில் முழுக்க வாசித்தவர்களுக்கு தெரியும் அது ஒரு பிரம்மாண்டமான தொகைநூல். பல அடுக்குகள் கொண்டது அது. வியாசரால் இயற்றப்பட்ட ஜய என்னும் காவியத்துக்குமேல் அவரது மாணவர்களால் எழுதப்பட்ட நான்கு நூல்கள் இணைக்கப்பட்டன. அதன்பின் தொடர்ந்து துணைக்கதைகள் உபரிக்கதைகள் மூலம் குறைந்தது ஆயிரம் வருடம் அது விரிவாக்கம் செய்யப்பட்டது.

இக்காரணத்தால் இன்றுள்ள வியாசமகாபாரதம் சரளமான ஓட்டம் அற்றதாகவும், பலவகையான முரண்பாடுகள் கொண்டதாகவும், ஒவ்வொன்றிலும் ஒன்றுக்கு மேற்பட்ட கூற்றுக்கள் கொண்டதாகவும் இருக்கும். இன்று கிடைக்கும் வியாசமகாபாரதத்தில் மிகப்பெரும்பாலான கதைகள் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டிருக்கும். ஒவ்வொரு கூற்றும் ஒன்றுடனொன்று முரண்பாடுகள் கொண்டிருக்கும்.

டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்கள் ஒருவிஷயத்தைச் சொல்கிறார். மகாபாரதத்தில் எங்கேனும் ஒரு கதை வேண்டுமென்றே திரிக்கப்பட்டோ மறைக்கப்பட்டோ போயிருந்தால் சற்றுத் தேடினால் இன்னொரு இடத்தில் அதன் மூலவடிவை கண்டுபிடிக்கமுடியும் என. ஏனென்றால் அதன் அமைப்பு அத்தனை பெரியது.

இன்றைய மகாபாரதம் ஏட்டுச்சுவடிகளில் இருந்து எடுக்கப்பட்டபோது பலவகையான வட்டார மாறுபாடுகள் அதற்கு இருந்தன. பொதுவாக எட்டுவகையான மாறுபாடுகள் என்று சொல்லலாம். வட இந்தியாவில் விரஜ [பிரஜ்] மகாபாரத வடிவமும் காஷ்மீர வடிவமும் பிரபலம். தென்னகத்தின் சிறந்த ஏட்டுவடிவம் கேரளத்தில் கிடைத்தது. அது தட்சிணபாடம் எனப்படுகிறது. ஒவ்வொன்றுக்கும் வேறுபாடுண்டு. மகாபாரதத்தில் ஒரு நூலில் இருந்து இன்னொன்றில் இல்லாத பகுதிகள் பிரக்‌ஷிப்தம் எனப்படுகின்றன.


இதைத்தவிர மகாபாரதத்தின் வட்டாரமொழி வடிவங்கள் உள்ளன. தமிழில் வில்லிபுத்தூரார் பாரதம் போல. அவை மகாபாரதத்தில் இருந்து வேறுபாடுகள் கொண்டுள்ளன. அதைப்போல மகாபாரதத்தின் நூற்றுக்கணக்கான நாட்டார் கலைவடிவங்கள் உள்ளன. நம் தெருக்கூத்து போல. அவையும் மகாபாரதத்தை விரிவாக்கம் செய்துள்ளன.


அக்னிபுராணம், விஷ்ணுபுராணம் போன்ற புராணங்களும் பாகவதம் முதலான பிற்கால நூல்களும் மகாபாரதக் கதைகளையும் கதாபாத்திரங்களையும் எடுத்து விரிவாக்கம் செய்துள்ளன. இவற்றில் உள்ள கதைகள் மூலக்கதைகளில் விரிவாக்கமாக மட்டுமல்லாமல் முரண்பட்டவையாகவும் பலசமயம் உள்ளன.


ஆகவே மகாபாரதத்தின் ஏதேனும் ஒரு சுருக்கப்பட்ட வடிவை வாசித்துவிட்டு மகாபாரதம் என்பது மாற்றமேதும் இல்லாததும், ஒற்றைப்படையான கதையோட்டம் கொண்டதுமான ஒரு நூல் என்று கற்பனைசெய்துகொள்ளலாகாது. நாம் பேசும் மகாபாரதம் என்பது பெரும்பாலும் செவிவழி அறிதல்களால் ஆனது. அது நம் கதைகாலட்சேப மரபால் சொல்லப்பட்டது. அதன் நோக்கம் பக்தி. பக்தியை முன்வைப்பதற்கு உகந்த ஒரு கதைவடிவத்தை நம் காலட்சேப மரபு பல்வேறு மகாபாரத வடிவங்களில் இருந்து எடுத்து தொகுத்துக்கொண்டிருக்கிறது. அதை முழுமையான மகாபாரதம் என நினைத்து விவாதிப்பதில் பொருளில்லை.


இன்று ஓர் ஒற்றைப்பிரதியாக மகாபாரதத்தை மாற்றும்போது நமக்குக் கிடைக்கும் வியாச மகாபாரதத்தில் உள்ள முரண்பாடுகளை தர்க்கபூர்வமாக களையவேண்டியிருக்கிறது. அதற்காக ஒன்று, மகாபாரதத்தில் உள்ள பல்வேறு கூற்றுக்களில் ஒன்றை எடுத்துக்கொள்கிறேன். அல்லது அதை யதார்த்த தளத்தில் வைத்து விளங்கிக்கொள்கிறேன். அல்லது சற்றே விரிவாக்கிக்கொள்கிறேன்.


உதாரணமாக காந்தாரி ஒரு சதைப்பிண்டத்தை பெற்றாள் என்றும் அதை வியாசர் வந்து நூறு துண்டுகளாக வெட்டி நூறு கலங்களில் போட்டு வளர்த்தமையால் நூறு கௌரவர் பிறந்தனர் என்றும் ஒரு மகாபாரத அத்தியாயம் சொல்லும்போது திருதராஷ்டிரர் பத்து காந்தார இளவரசியரை மணந்து நூறு பிள்ளைகளைப் பெற்றார் என்று இன்னொரு அத்தியாயம் சொல்கிறது. நான் இரண்டாம் கூற்றை எடுத்துக்கொண்டேன்.


குந்தி பாண்டவர்களை நியோகமுறைப்படி பெற்றாள் என்பதே யதார்த்த சித்திரம். அப்படி எடுத்துக்கொள்ள மகாபாரதம் அனைத்து ஆதாரங்களையும் அளிக்கிறது. மிகவிரிவான விளக்கங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.


துரோணரின் கதை சிறிய உதிரிக்கதைகளாகவும் எளிமையாகவும்தான் மகாபாரதத்தில் உள்ளது. ஆனால் மாபெரும் போருக்கு காரணமாக அமைந்த அந்த வன்மத்தை விரிவாக்கவேண்டிய தேவை இன்றைய புனைவில் உள்ளது. ஆகவே மகாபாரதத்தின் பிற்பகுதியில் பல இடங்களிலாக வரும் குறிப்புகளை முன்னாலேயே கொண்டுவந்து விரிவாக்கம் செய்தியிருக்கிறேன்.


2. மகாபாரதக் கதாபாத்திரங்களின் வயதுகள் வெண்முரசில் ‘தவறாக’ உள்ளனவே!


இதை முன்னரே பலமுறை விளக்கியிருக்கிறேன். பி.ஆர். சோப்ராவின் மகாபாரதம் தொடரை எழுதிய பேரறிஞரான ராகி மசூம் ராஸா அவர்களும் விளக்கியிருக்கிறார்கள். மகாபாரதத்தில் இடையிடையே கதைகள் சேர்க்கப்பட்டபடியே இருந்தன. ஒவ்வொன்றுக்கும் வருடங்கள் சேர்ந்தன. அவர்கள் சதசிருங்கம் விட்டு வரும்போதே பதினெட்டு தாண்டிவிட்டது. அதன்பின் 12 வருடம் குருகுல வாசம். அதன்பின் பல வருடங்கள் வனவாசம். விளைவாக மகாபாரத நிகழ்ச்சிகளை தொகுத்து நோக்கினால் மகாபாரதப்போர் நிகழ்கையில் அர்ஜுனனுக்கு எண்பதுக்கும் மேல் வயது வரும். பீஷ்மருக்கு இருநூறு தாண்டும்.


பாகவத மரபில் ‘அந்தக்காலத்திலே அவர்களுக்கெல்லாம் வயது நம்மைவிட இருமடங்கு’ என்று சொல்லி சமாளிப்பார்கள். ஆனால் வெண்முரசு அதன் மையக்கதைப்பெருக்கை முற்றிலும் யதார்த்தத்தில், வரலாற்றுவெளியில்தான் நிகழ்த்திச்செல்கிறது. அதற்கு இந்த மாதிரியான சில்லறை மிகைபுனைவுகள் பொருந்தாது. அதில் மிகைபுனைவு வருமென்றால் கவித்துவமாகவோ அல்லது தத்துவக்குறியீடாகவோ விரியும் தன்மைகொண்டதாக மட்டுமே இருக்கும்.

ஆகவே யதார்த்தமான கணிப்பின்படி வயது போடப்படுகிறது.


3. மகாபாரத இடங்கள் சரியாக அமைந்துள்ளனவா? பல இடங்கள் மகாபாரதத்தில் இல்லை என்று சொல்லப்படுகிறதே?


மகாபாரதத்தில் சொல்லப்பட்ட இடங்கள் அல்லது மகாபாரத காலம் முடிந்ததுமே வந்த பௌத்தநூல்களில் சொல்லப்பட்ட இடங்களே இந்நாவலில் சொல்லப்படுகின்றன. பெரும்பாலும் இதுசார்ந்த ஆய்வாளர்களின் நூல்களை அடியொற்றியே அவை வகுக்கப்பட்டுள்ளன.

4. புராணங்கள் இதில் சில இடங்களில் சூதர்கள் சொல்வதாக வருகின்றன. சில இடங்களில் நேரடியாக வருகின்றன. இது குழப்பத்தை உருவாக்குகிறது. உதாரணமாக கார்க்கோடகனை குந்தி சந்திப்பது. பீமனின் கைகள் பாம்புகளாக ஆவது போன்றவை.</p>


இது இலக்கியத்தின் இயங்குவிதிகளை அறிந்த வாசகர்கள், அல்லது அறியமுற்படும் வாசகர்களுக்கான நூல். புராணங்களை சூதர்கூற்றாகச் சொல்லும்போது அவற்றுக்கு ஒரு வரலாற்றுத்தன்மை அல்லது தத்துவத்தன்மை இருக்கும்.

நேரடியாக வரும்போது அவை ஒரு மனமயக்க நிலையில், கனவுநிலையில் இருக்கும் – குந்தி கார்க்கோடகனைக் காண்பதுபோல. அல்லது கவித்துவமான குறியீடாக இருக்கும் – பீமனின் கைகள் போல. அல்லது அவை ஒரேசமயம் மிகைகற்பனையாகவும் நடக்கச் சாத்தியமானவையாகவும் இருக்கும் – பீமன், துரியோதனன் பிறப்பு போல. அல்லது அஸ்தினபுரியில் குருதிமழை பெய்வதுபோல. அவற்றை கற்பனைகொண்ட வாசகர்கள் எளிதில் புரிந்துகொள்வார்கள் என்றே நினைக்கிறேன்.

மரபான இருவகை வாசிப்புக்கு பொதுவாசகர் பழகிவிட்டிருக்கலாம். ஒன்று எல்லாவற்றையும் ஒரேமாதிரியான புராணமாகக் கண்டு நேரடியாக எடுத்துக்கொள்வது. இன்னொன்று நடைமுறைத் தளத்தில் மட்டுமே வைத்து நேரடியாக வாசிப்பது. இரண்டுமே நேரடியான புரிதல்கள். ஒரு புராணம் என்பது பெரும்பொருள் கொள்வதற்குரிய கூறுமுறை என்பதை நினைவில் கொள்வோம். அது அளிக்கும் கவித்துவ எழுச்சியை, தரிசனத்தை நோக்கிச் செல்லும் வழி அது.

பீமன் கங்கையின் ஆழத்திற்குச் சென்று விஷம் அருந்தி ஆற்றல்மிக்கவனாக மீள்வது வெறும் ‘கதை’ அல்ல. நாம் கொள்ளும் அனைத்து பெரும் வஞ்சங்களையும் நம் ஆழத்துக்குச் சென்று அங்குள்ள விஷத்தை அருந்தித்தான அடைகிறோம். அந்த வகையான உணர்தல்கொண்ட வாசிப்பே இந்நாவலால் கோரப்படுகிறது.

*

நான் இந்த விவாதங்களை பெரும்பாலும் தவிர்க்கவே விரும்புகிறேன். ஏனென்றால் இது வியாசமகாபாரதத்தின் மொழிபெயர்ப்போ தழுவலோ அல்ல. மறு ஆக்கம், நவீன நாவல். வியாசமகாபாரதம் பற்றிய விவாதங்கள் முடிவற்றவை. நான் இருபதாண்டுகளாக அவற்றில் இருக்கிறேன். சமானமாக வாசித்தவர்களிடமே அர்த்தபூர்வமாக விவாதிக்கமுடியும். மற்றவர்களின் எளிய ஐயங்களை தீர்த்துவைத்தால் முடிவில்லாமல் பேசவேண்டும். அதன்பின் நான் வெண்முரசு எழுதமுடியாது