Sunday, January 31, 2016

நிலைவில்சார் ,

த்ரௌபதி சுயம்பரத்தில் பயன்படுத்தப்படும் வில் 'நிலை'வில் வகையை சேர்ந்தது தானே ( கீழ்பாகத்தை தரையில் ஊன்றி அம்பை எய்வது போன்று ) . தலைக்குமேல் இருக்கும் கிளிகளை அந்த வில் கொண்டு அடிக்க முடியுமா , எவ்வளவு சாய்த்தாலும் நேர் உச்சிக்கு அடிக்கமுடியும் அளவிற்கு சாய்க்க முடியாதே , காலையில் இருந்து குழம்புகிறேன் சார் :)
 
ராதாகிருஷ்ணன் 

அன்புள்ள ராதா

வில்லின் நடுவேதான் அம்பு பொருத்தும் முனை இருக்கவேண்டும் என்றோ வில் நடுவேதான் வளையும் மையம் இருக்கவேண்டும் என்றோ நெறி உண்டா? இல்லையே?
 
மேல்வளைவில் தலைக்கு மேலே பொருத்தி விட்டிருக்கலாமே

ஜெ

பிருஹத்காயர்அன்புள்ள ஜெ,

      சூரியனின் மைந்தன் இரு விழியற்றவர்களைக் காண்பது மிக நுட்பமான இடம். பிருஹத்காயரும் திருதராஷ்டிரனும் ஒளியற்றவர்களும் கூட. இருவரும் தங்களுக்கு இவ்வுலகில் தன் மகனைத் தவிர வேறு எதுவும் முக்கியமல்ல என நினைப்பவர்கள். அந்த சாய்வினால் எப்பொழுதும் ஐயமும் துக்கமும் கொள்பவர்கள். 

கங்கையே சென்றாலும் நாய் நாய்க்குழியாலேயெ அள்ள முடியும் என்ற சொற்றொடர் மிக அருமை.

ஆனால் ஜெ , ஜயத்ரதனின் தந்தை விருத்தக்ஷத்ரன் என படித்ததாக நினைவு. பிருகத்காயர் என்பது அவருடைய இன்னொரு பெயரா>
 
லிங்கராஜ்

அன்புள்ள லிங்கராஜ்

அவரது பெயர் பிருஹத்காயர் என்றே தென்னிந்தியபாடத்தில் உள்ளது.
அவர் பிருஹத்ஷத்ர மரபைச் சேர்ந்தவர்
 
பிருஹத்ஷத்ரர் - ஹஸ்தி- அஜமீடன் -பிருஹதிஷு- பிருஹத்தனு- பிருஹத்காயன் - ஜயத்ரதன்--- என்பதே குலவரிசை

ஜெ

சண்டைக்கு பின்னான இரு சமாதானங்கள்.


 கர்ணன் ஜெயத்ரதன் இடையிலான சமாதானம் மனதிற்கு நிறைவளிக்கிறது. இதைவிட பெரிய பிணக்குகொண்டிருந்த துரியோதனனும் பீமனும் சமாதானம் கொண்டு கட்டித்தழுவிக்கொள்ளுதலையும் முன்னர் பார்த்தோம். இரண்டும் ஒரே மாளிகையில் ஒரே மாமனிதரின் முன்னிலையில் நடந்தன. இரண்டு சமாதானங்களும் பெரும் உணர்ச்சிப் பிரவாகத்துடன் உருவாகின. இருந்தாலும்  இரண்டும் ஒன்றுபோல உறுதியுடையவையா எனக் காணவேண்டும்.
  

  கர்ணனனுக்கு எப்போதும்  ஜெயத்ரதன் மேல் பெரிய வெறுப்பு இல்லை. மேலும் அவன் பாசத் தங்கை துச்சளையின் கணவன். அதனால் தன்னிடம் அவன் என்ன தவறு செய்தாலும் பொறுத்துக்கொள்ளும் மனநிலையில் கர்ணன் இருக்கிறான்.  மேலும் போரின் காரணமாக அவனை அவமானப்படுத்தியதன் குற்ற உணர்வு கர்ணனிடம் உள்ளது. அப்படியே ஜெயத்ரத்ன்  மனமுதிர்ச்சியின்மையின் காரணமாக தான் தவறு செய்ததை உணர்கிறான். கர்ணனின் சிறப்பை நேரில் கண்டடையும்போதும், மற்றவர்கள் அவன் மேல் காட்டும் மதிப்பை அறிவதன் மூலம்  தன் வஞ்சத்தை விடுகிறான். அனைத்துக்கும் மேலாக ஜெயத்ரதன் தன்னை கர்ணனிடம் தன் மனதை திறந்து காட்டுகிறான். ஒருவர் அகத்தை ஒருவர் அறிந்துகொள்கின்றனர்.   இந்த சமாதனத்தை  அவர்களை சுற்றி இருக்கும் அனைவரும் இவர்களிடம் எதிர்பார்க்கின்றனர்.  இது ஒரு நிரந்தர சமாதானமாக உறுதிப்படுத்தப்படுகிறது.
  

 ஆனால் கௌரவர் பாண்டவர் சமாதானத்தின் பின்புலத்தில் இத்தகைய புரிதல்கள் இல்லை. அக்கணத்திய உணர்ச்சிப்பெருக்கில் அவர்கள் தழுவிக்கொள்கிறார்கள்.  ஆனால் ஒருவருக்கொருவர் செய்துகொண்ட விரோத நடவடிக்கைகள் எதுவும் பேசித் தீர்த்துக்கொள்ளப்படவில்லை. நடந்தது போகட்டும் என இறந்த காலத்தை மண்போட்டு மூடி அதன்மேல் அவர்கள் சமாதானம் நடக்கிறது.  அப்படி மூடப்பட்ட பகைகள் மீண்டு எப்போது வேண்டுமானாலும் சிறு தூண்டலில்   முளைத்து மேலெழும்பும் சாத்தியங்கள் உள்ளதாக இருக்கின்றன. துரியோதனன் தரப்பில் சகுனி போன்றவரும், பாண்டவர் தரப்பில் குந்திக்கும் இந்த சமாதானத்தில் ஐயங்களும் விருப்பின்மையும் இருக்கலாம். திரௌபதி,  பாண்டவர் தொடர்ச்சியாக அடையும் வெற்றிகள் போன்ற முள்பொதிந்த அங்கிகளை  பாண்டவர் அணிந்திருக்க, பீமனுக்கு நஞ்சூட்டலில் தொடங்கி வாரனாவத எரியூட்டல், என பல்வேறு கூரிய முட்களாலான அங்கியுடன் கௌரவர்கள் இருக்கிறார்கள்.   இந்த உறுத்தும் அங்கிகள் களையப்பட்டாமலேயே அவர்கள்  அணைத்துக்கொண்டது அவ்வளவு சௌகரியமானது அல்ல. அந்த அணைப்பு நீடிக்க முடியாமல் போவதற்கே சாத்தியங்கள் உள்ளன.  அந்த மெலிந்த சமாதானம் என்ற மான் மேல் பாய்ந்து தாக்கி கொன்றிட ஊழெனும்  வரிப்புலி பதுங்கி காத்திருப்பதாகவே நமக்கு புலப்படுகிறது

தண்டபாணி துரைவேல்

சாபமும் வரமும்

 
 
பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,
வணக்கம்.

ஜயத்ரதனின் கதையை பலர் கூற கேட்டு இருக்கிறேன்,நமது 'வெண்முரசில்' அது வடிவம் கொள்ளும் அழகை படித்து வருகிறேன்.இன்று அதன் உச்சகட்டமாக சிவனின் சிரிப்புடன் கூடிய வரம்?(சாபம்)- "ஆம், கங்கை பெருகிச் சென்றாலும் நாய் நாக்குழியாலேயே அள்ள முடியும். அவ்வண்ணமே ஆகுக!’'.எத்தனை பொருள் பொதிந்த வார்த்தை!.
அன்புடன்,
அ .சேஷகிரி.

புல்வாயும் மழுவும்

புல்வாயும் மழுவும் புலித்தோல் ஆடையும் முப்பிரிவேலும் முடிசடையும் துடிபறையும் திசைக்கனலும்

என்னும் வரியை பலமுறை வாசித்தேன். சிவனைப்பற்றிய வர்ணனைதான். ஆனால் அதிலிருக்கும் துடியிந்தாளம் அபாரமானது

புல்வாய் என்பதுதான் புரியவில்லை. அகராதியைப் பார்த்துத்தான் அது மான் என புரிந்துகொண்டேன். அடாடா ஏன் புரியாமல் போயிற்று என்று ஆச்சரியமாக நினைத்தேன்

சுவாமி

Saturday, January 30, 2016

மகாரதர்கள்


ஜெ,

மகாபாரதத்தின் மகாரதர்கள் அனைவரும் ஒவ்வொருவராக காட்சிக்குவருகிறார்கள். போருக்கு முன்னரே அவர்கள் அப்படித்தோற்றம் அளிப்பது மகாபாரதத்தின் கனத்தைக்கூட்டுகிறது. ஜெயத்ரதன் சிசுபாலன் சல்யன் பூரிசிரவஸ் சாத்யகி கிருதவர்மன் அஸ்வத்தாமன் எல்லார் முகமும் தெளிவாக வந்துவிட்டன. அனைவரும் ஒன்றாகப்போரைநோக்கிச் சென்றுகொண்டிருக்கிறார்கள்

மனோகர்

வெண்முரசின் சொற்கள்
அன்பின் ஜெ எம்.,
வெண்முரசும் தனித்தமிழும் பதிவுபற்றி திரு ஆர். மாணிக்கவாசகம் எழுதியுள்ள கடிதத்தை நானும் வழிமொழிகிறேன்.

பழந் தமிழை தொல் தமிழை அதன் அத்தனை வளமான சொல்லாட்சிகளுடனும் மீட்டுக்கொண்டு வந்து நம் முன் படையலாக்கிக்கொண்டிருக்கும் காரணத்தினாலேயே வெண்முரசை நான் என் சென்னியில் சூடிக்கொள்கிறேன். அதன் கதை ஓட்டம் பாத்திர மனநுட்பங்கள் உள்மடிப்புக்கள் இவற்றிலெல்லாமும் பாவி மனம் பறி போனாலும் வெண்முரசின் தமிழே என்னைப் பரவசச்சிலிர்ப்புக்கு ஆளாக்கி ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது.

கொற்றவைக்காப்பியத்தில்  பதச்சோறாக இருந்த அந்தப்போக்கு இங்கே திகட்டத் திகட்ட உண்டாட்டாக நம்மை முழுக்காட்டி வருகிறது. தொல் தமிழை அதன் வளமைகளோடு இன்றைய தலைமுறைக்குக் கடத்துவதன் வழி என்றோ நம்மில் தொலைந்தும் கலைந்தும் போன மொழி என்ற அடையாளத்தை,மந்திரம் போல் சொல்வன்மையால்  மீட்டெடுத்துக்கொண்டுவருகிறது வெண்முரசு.

அண்மையில் மதுரை காமராசர் பல்கலையின் ஓய்வு பெற்ற பேராசிரியர் திரு சு வேங்கடராமனுடன் [ அவர்,உங்களுக்கும் நன்கு தெரிந்தவரே,அவரைப்பற்றித் தளத்தில் நீங்கள் குறிப்பிட்டதும் உண்டு ]  கைபேசியில் உரையாடிக்கொண்டிருந்தபோது நாங்கள் இருவரும் இதையேதான் பகிர்ந்து கொண்டோம்.,’’எப்படிப்பட்ட அருமையான பழந்தமிழ்ச்சொல்வளம்’’ என்றார் அவர்.

இன்றைய நவீன இலக்கிய களத்தில் -அதிலும் தமிழ்நிலத்தில் நிகழாத ஒருகதைப்புலத்தில்- பழந்தமிழை மீட்டெடுத்து அதன் நுட்பங்களை , எழிலார்ந்த சொல்லாட்சிகளை - அவற்றின் அடிப்படையில் உங்கள் படைப்புத் திறனால் கட்டமைக்கப்படும் புதிய சொல்லாட்சிகளையும் [தன்னேற்பு மணம் என்பது போல] சேர்த்து இன்றைய தலைமுறை இளைஞர்களிடம் கொண்டு  சேர்க்கும் காலம் கரைக்காத மகோன்னதப்பணியை வெண்முரசு  செய்து வருகிறது.

சங்கத்துக்குப்பின் காலம் காணாமல் அடித்து விட்ட ஒன்றை நீங்கள்  தேடித் தேடி அளித்துக்கொண்டிருக்கிறீர்கள்...நான் மட்டும் இப்போது பணியில் இருந்திருந்தால் ஆர்வமுள்ள மாணவக்குழுவையோ ஆய்வாளர்களையோ[ காசுக்கு ஆய்வேடு எழுதி வாங்கும் கூட்டத்தை நான் இங்கே குறிப்பிடவில்லை] ஒருங்கிணைத்து வெண்முரசின் அரிய சொற்களை LEXICON ஆக்கப் பணித்திருப்பேன்,அதற்கு வழிகாட்டி அதன் அடிப்படையில் ஆய்வு செய்ய உதவியும் இருப்பேன்.

நானாக மட்டுமே  அதில் ஈடுபட முடியாமல் என் வயதின் தளர்ச்சியும் பிற பணிச்சுமைகளும் என்னைத் தடுக்கின்றன.எனினும் வருங்காலத்தில் எவரேனும் அதைச்செய்யக்கூடும் என்ற ஆழ்ந்த உள்ளார்ந்த நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்.--
எம்.ஏ.சுசீலா

உளவியல் தோற்றங்கள்

ஜெ

பொதுவாக dilabolical ஆன தோற்றங்கள் தென்படுவதென்பது செவ்வியல்நூல்களின் ஒரு அழகு. ஷேக்ஸ்பியரில் நிறையவே காணலாம். மாக்பெத் காணும் பேய்கள் உதாரணம். செவ்வியலில் அவை தெளிவான சித்திரங்களாக வரும். பின்னர் உளவியல் தொடங்கியபோது அவை ஏன் உருவாகின்றன என்பதை ஆராய்ந்தார்கள்.  அவை குற்றவுணர்வு, மனக்குழப்பம், பயம் ஆகியவற்றின் வெளிப்பாடுகள் என அறிந்தார்கள்

அதன்பின் அவற்றை ‘சரியாக’ச் சொல்வதற்கான இலக்கியமுறை தொடங்கியது. பலர் உண்மையுருவமாக எழுத முயன்றனர். மனதை அப்படியே சொல்லும் முறை என்று அந்த stream of consciousness எழுத்தைச் சொல்லலாம். ஆனால் உளவியல் அதை பல கோணங்களில் நேரடியாகவே பதிவு செய்தபின்னர் அதை அப்படியே சொல்வதில் புதுமை இல்லை என்றாகியது. அவற்றை icon ஆக்குவதே கலை என்று தெரிந்தது. மீண்டும் கிளாஸிசம் திரும்பியது

இந்நாவலில் வரும் இந்தவகையான உளவியல் தோற்றங்களைப்பற்றி தனியாக எழுதவேண்டும். ஒரே ஆளுமை மூவராகத்தெரிவதென்பது ஒரு பெரிய புதுமைதான்

சிவசங்கர்

ஒரே முகம்

 
 
ஒரே கார்க்கோடகன் என்ற உருவம் குந்தி மனதிலும் துரியோதனன் மனதிலும் தோன்றவில்லையா ? கர்ணன் பிருஹத்காயரை பற்றி அதிகம் கேள்விப்பட்டது போல் இல்லை, அதனால் அவனுக்கு அந்த உருவம் சூதன் சொல்லிய தீர்க்கதமஸாகவே தெரிந்திருக்கலாம். ஜெயத்ரதனுக்கு தந்தையாக தெரிந்திருக்கலாம்.

எனக்கு இந்த உருவம் தந்தை என்ற பாத்திரத்தின் இன்னொரு முகத்தை காட்டுகிறது. தன் சந்ததியினரின்  உயிரை, வாழ்வை பற்றிய அச்சம். திருதராஷ்டிரன்-துரியோதனன், துரோணர்-அஸ்வத்தாமா, பிருஹத்காயர்-ஜெயத்ரதன் என்று அச்சத்தால் கோர்க்கப்படும் ஒரு தரப்பு.
 
மது

தந்தைஅரண்மனையில் தென்படும் விழியற்ற முதியவர்,   தன் வாழ்நாளில் ஒன்றுக்காக வேறு எவற்றையும் பார்க்கத் தவறியவரின் குறியீடாக இருக்கிறார்.  கர்ணன் தன் கேட்டிருந்த தீர்க்கத்தமஸின் கதையினால் அந்த உருவை அங்கு காண்கிறான். தீர்க்கதமஸ் தம் காமத்தில் தன்னைத்தவிர வேறு எதையும் கண்டவர் இல்லை.  அது நூற்றுக்ககணக்கான பிள்ளைகள் கொண்ட விழியிழந்தவரின் அரண்மனை என்பதால் அவனுக்கு அந்த மனவுரு தோன்றூகிறது. பின்னர் தீர்க்கத்தமஸ் போலில்லாமல்  பிள்ளைகள்பால் கொண்டிருக்கும் பேரன்பில் திருதராஷ்டிரர் வேறுபட்டிஎருப்பதை நேரில் காணும்போது  கர்ணனின் மனதின் வழிவந்த அந்த பிம்பம் மறைந்துவிடுகிறது.

அங்கு தந்தைமையின் பேரன்பைக் காணும் ஜெயத்ரதன் தன் தந்தை தன் மீது கொண்ட பேரன்பை நினைவு கூறுதலின் வழியாக தன் தந்தையின் பிம்பத்தை அங்கு காண்கிறான். இந்த பிம்பமெல்லாம், இழந்தவர்களின் கண்களுக்குத்தான் தென்படுகிறது. கர்ணன் ஒருவகையில் இழந்தவன் என்றால், ஜெயத்ரதனும் ஒருவகையில் இழந்தவன். ஆனால் இழப்பு என்பதை இதுவரை அறியாதவர்களான துரியோதனன் முதலான கௌரவர்கள் கண்களுக்கு இத்தகைய பிம்பங்கள் தெரிவதில்லை

தண்டபாணி துரைவேல்

Friday, January 29, 2016

கைகள்
ஜெமோ,

ஜெயத்ரதனின் தந்தை அவனைத் தொடமறுக்கிறார். அவனை தன் கைகளில் ஏந்த மறுத்து கைகளை பின்னுக்கு இழுக்கிறார்

அவர் அவனைத் தொடும் முதல் இடம் அவர் கையில் ஜயத்ரதனின் தலை வந்து விழும் இடம்தான் என நினைக்கிறேன்.

அற்புதமான முடிச்சு

சாமிநாதன்

ஜயத்ரதனின் சொர்க்கம்


ஜெ

பிருஹத்காயர் ஜயத்ரதனை தொடவே மாட்டேன் என்கிறார். காரணம் அவரது கையில் பாவக்கறை என அவர் நினைக்கிறார். குழந்தையை முதலில் காணும்போதுகூட அவர் கைகளை பின்னுக்கு மறைத்துக்கொள்கிறார்

மறுபக்கம் திருதராஷ்டிரர் கைகளை கொண்டு அத்தனை பிள்ளைகளையும் வருடி வருடி மகிழ்ச்சி அடைகிறார். அந்தக்காட்சியை அவன் பார்க்கிறான். அவர் அவனை அணைத்து வருடும்போது சொக்கிப்போய் அழுகிறான்.

ஜயத்ரதன் இழந்தது என்ன என்பதையும் அவன் ஏன் கௌரவர்களுக்கு அடிமையாகக்கிடந்தான் என்பதையும் காட்டும் அரிய காட்சி

மனோகர்