Monday, June 17, 2019

ராசிகள்அன்புள்ள ஜெ

12 ராசி சக்கரங்களைக்கொண்டு சொல்லப்பட்ட இருட்கனி அழகான ஒரு கட்டமைப்புடன் இருந்தது. மேஷம் என்றால் சித்திரையின் பின்பகுதி. ஏப்ரல் மாதம். சூரியன் உக்கிரமாக இருக்கும் மாதம். அங்கிருந்து தொடங்கி 12 ராசிகள் வழியாகக் கதை செல்கிறது. கடைசியாக சூரியன் மீண்டும் உக்கிரம் அடையத் தொடங்கும் மீனம் ராசியில் சித்திரை பிறப்பில் சென்று முடிகிறது. கேரளத்தில் மீனராசி சூரியனுக்கு உரியது என்பார்கள். சூரியனின் கதிர்கள் உச்சிநோக்கி வளரும் மாசம் அது. மீனபரணி அதை ஒட்டித்தான் அமைக்கப்பட்டிருக்கிறது

சூரியனின் கதை சூரியனின் 12 நிலைகளைக் காட்டும் ராசிகள் வழியாகச் செல்வது அழகான ஒரு கட்டமைப்பை அளித்தது. அதிலும் கடைசியாக மீனராசியில் கண் தெரியாதவர் கதை சொல்கிறார். அது பல அர்த்தங்கள் கொண்டதாக இருந்தது

சிவராஜ்

சூரியனின் கண்கள்
ஜெ

நேற்று நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தோம். கர்ணன் போரில் விழும் கடைசிக்காட்சியை சொல்பவர் கண் இல்லாத சூதர். அப்படி ஏன் வந்தது என்று கேட்டேன். சூரியனின் மகன். எல்லாவற்றையும் சூரியனுடன் இணைத்தே கற்பனைசெய்திருக்கிறது. சூரியனின் உக்கிரமான உச்சகட்டத்தை கண்ணால் பார்க்கமுடியாது. கண்ணால் பார்த்தால் குருடாகிவிடுவோம். கருத்தால்தான் உணரமுடியும். ஆகவே கண்ணில்லாதவர் சொல்கிறார் என்றேன். சூரியனின் மகிமையை உணர கண் ஒரு தொடக்கம்தான். ஆதித்யனை நாம் கருத்தால்தான் முழுசாக உணரமுடியும் என்று சொன்னேன். அதோடு அந்தச் சூதர் கற்பனையில் சொன்னதனால்தான் அந்தப்போர்களக் காட்சி அத்தனைப் பிரம்மாண்டமாக இருக்கிறது. அவ்வளவு மேஜிக்கலாக அமையமுடிகிறது

ராமச்சந்திரன்

நட்பு


அன்புள்ள ஜெ

கர்ணனின் எரியூட்டலின்போது துரியோதனன் கடைசிவரை உடனிருக்கிறான். அற்புதமான ஒரு இடம் அது. அதற்கு முன்னோடியான காட்சி என்பது துரியோதனன் உடல்நலம் குன்றி துயரில் தூங்கிக்கொண்டிருந்தபோது ராத்திரி முழுக்க உடனிருக்கும் கர்ணனின் காட்சி. அவர்கள் நடுவே இருக்கும் அந்த நட்பை நினைக்க நினைக்க நெஞ்சம் விம்முகிறது.


வெண்முரசு மகாபாரதத்தின் அடிப்படை உனர்ச்சிகளை பொய்யாக்கவில்லை. அதையெல்லாம் இன்றைய வாழ்க்கையில் வைத்து மறுகண்டுபிடிப்பு செய்கிறது. இது ஒருமுக்கியமான விஷயம் என நினைக்கிரேன். நவீன இலக்கியங்கள் எப்போதுமே மகாபாரதம்போன்ற கிளாஸிக்குகளை தலைகீழாகவே காட்டுகின்றன. வெண்முரசு அதிலிருந்து மேலே எழமுயல்கிறது. இது நவீனத்துவப்படைப்பு அல்ல அடுத்தகட்ட படைப்பு


எஸ்.சரவணன்

Sunday, June 16, 2019

சிதையருகே நின்றெரியும் தனியன்...
இனிய ஜெயம் 

இரவெல்லாம் துயில் மறந்து, மொட்டை மாடியில் மெல்லிய சாரல் மழையில் தனித்துக் கிடந்தது விழித்திருந்தேன். கதிரவனின் முதல் ஒளியைக் கண்ட பின்பே,  கர்ணனின் பிரிவு அளித்த கரிப்பே அற்ற துயர் தாள இயலா உணர்வில் இருந்தது வெளிவந்தேன்.

மொத்தப் போர்நிலமும் மற்றொரு காண்டவ வனமாக எரிந்துகொண்டிருக்க, இதே உணர்வில், நண்பனின் சிதையருகே நின்றெரியும் தனியனாக துரியன். மண்ணில் மானுடர் அடைய இயன்ற ஒரே பெரும் பேரான கர்ணனின் நட்பை அடைந்தவன். அதை இழந்த்தவன். மிச்சமே இன்றி அந்த நட்பின் இறுதித் துளி வரை அனுபவித்த முழுமையில் எழுந்த புன்னகை சூடி நிற்பவன். 

ஒன்றென வெந்து தணிந்து தனது சாம்பல் வழியே தனது மைந்தனை சத்ரியன் ஆக்கி விட்டனர் விடுவித்துவிட்டனர்  கர்ண தம்பதியர்.  தனது ஆசிரியர் பொருட்டு, எடுத்த அம்பினை தழைத்த கர்ணன், அது கொண்டு உயிர் விடும் எல்லை வரை செல்கிறான். இதோ பரசுராமர் அவனுக்கென ஒரு யாகம் நிகழ்த்துகிறார். எந்த மாணவனுக்கு இப்பேறு அமையும்.?

வியாசனுக்கு சொல்லுண்டு கர்ணனின் மாண்பை எழுதிக் காட்டிவிட்டான். துரியன் வசம் என்ன உண்டு? தனியே நின்று எரிந்துகொண்டிருக்கிறான். கர்ணன் இல்லாத இக் களத்தில் தனியே நிற்கும் இன்றைய துரியனின் சித்திரம், வெண்முரசு சித்தரித்த தனிமைகளியே தலையாயது.

கடலூர் சீனு

குருதிஜெ

கர்ணனின் இறப்பில் அவன் குருதிவடித்தபடியே செல்லும் காட்சி கொந்தளிக்கச் செய்துவிட்டது. கடைசிவரை அந்தப்புண் இருந்துகொண்டே இருந்தது. தம்சன் என்னும் அந்த வண்டு அவனுக்குள் இருந்தது. வெய்யோனில் அந்த வண்டின் புண் பற்றி வரும் காட்சிகளை நினைத்துக்கொண்டேன். அந்த வண்டு அவன்கொண்ட ரகசியக்காதலா? எங்குமே பாஞ்சாலி என்ன நினைத்தாள் என்றே வரவில்லை. அவள் அவனுக்குள் அப்படி ஒரு ஆறாத புண்ணாக இருந்தாளா? அந்த ரத்தம் வழிவதை மறக்கவே முடியவில்லை

ஸ்ரீதர் ராம்

கண்டடைதல்
அன்புள்ள ஜெ

விருஷாலி சிதையேறுமிடத்தில் சுப்ரதர் அடையும் மாற்றம் முக்கியமானது. ஆரம்பம் முதலே காட்டப்படுவது அதுதான். அவர் ஒரு அந்தணர். பெரிய கல்வி இல்லாதவர். ஆகவே சிதைவேலை செய்கிறார். ஆனால் அந்தணர் என்பதனாலேயே அவர் மெல்லமெல்ல தன் குடிக்குரிய சிறந்த இயல்பை அடைகிறார். அந்தணன் நீரையும் பின்னர் குருதியையும் இறுதியாகக் கண்ணீரையும் கொண்டு உண்மையை அறியவேண்டும் என்கிறார். ஆகவே அவர் விருஷாலியின் கண்ணீரை அறிந்துகொள்கிறார். சடங்கு சம்பிரதாயம் ஆகியவற்றில் தொடங்குகிறார். ஆனால் மெல்லமெல்ல மானுட உண்மையை உணர்ந்து அதன் பக்கம் நிலைகொள்கிறார். அந்த மாறுதல் ஒரு வகையான உச்சமாக வெளிப்படுகிறது. தொடக்கத்திலிருந்தே அந்தக்கதாபாத்திரம் அப்படி வளர்ந்து வந்துகொண்டிருந்தது

பாஸ்கர்

எரி ஏறுதல்ஜெ

ஒரு வாசகர் எழுதியிருந்தார், சகுனி கர்ணனை அவமதிப்பதற்காக விருஷாலியை சிதை ஏறக்கூடாது என்று சொன்னார் என்று. அது சரி என எனக்குப்படவில்லை. விருஷாலி சூதப்பெண் என சகுனிக்குத்தெரியும். ஆனால் கர்ணன் ஷத்ரியன் என்று நன்றகாவே தெரிந்திருக்கிறார். அது இனி நிறுவப்படும் என்றும் அவருக்குத்தெரியாமல் இல்லை. அதாவது இப்போது ஒரு ஷத்ரியனுடன் ஒரு சூதப்பெண் எப்படிச் சிதையேறலாம் என்றுதான் அவர் கேட்கிறார். அவருடைய அடிப்படையே அந்தச் சாதியுணர்ச்சிதான். அதை அவர் கேட்பது இயல்பானதுதான்


மகேஷ்

Saturday, June 15, 2019

குந்தி வருகை
அன்பார்ந்த ஜெயமோகனுக்கு வணக்கம் .


நலம்தானே? இன்றைக்கு முடிந்த இருட்கனியின் இறுதி அத்தியாயம் மனத்தை மிகவும் கனக்கச் செய்து  விட்டது.வந்த அழுகையை அடக்கிக் கொள்ள மிகவும் சிரமப்பட்டேன். வாழ்வின் இறுத்கிவரை அவன்குலத்தால் கீழ்மைசெய்யப்பட்டு அவன் மனைவிக்கும் நேர்ந்த அதே அவலம் என்றும் மனித குலம் மாறாத சில மோசமான நெறிகளைக் கொண்டுள்ளது என்பதைத் தெளிவாக்குகிறது.

ஓர் ஐயம். மூலபாரதத்தில் களத்திற்கு வந்து குந்தி மகனே என்று ஓலமிட்டு அழுவதும், அப்போதுதான் தங்கள் மூத்தவன் கர்ணன் என அறிந்த பாண்டவர் அதை மறைத்ததற்காகக் கண்ணனை வசைபாடுவதும்  உண்டு. அவற்றைத் தவிர்த்தமைக்கு ஏதும் காரணங்கள் உள்ளனவா?.


இங்குக் கடலூர் துறைமுகம் மாலுமியார் பேட்டை திரௌபதி அம்மன் கோயிலில் 12-06-190 முதல் 21-06-19 முடிய மகாபாரதத் தொடர் சொர்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருக்கிறேன்

நன்றி

வளவதுரையன்

அன்புள்ள வளவதுரையன்

பல மூலவடிவங்கள். குந்தி நீர்க்கடனின்போது யுதிஷ்டிரனிடம் வந்து  “மகனே உன் மூத்தவனுக்கும் அன்னம் அளிப்பாயாக” என்று சொன்னதாக வரும் மூலமே பொருத்தமானது. ஏனென்றால் களத்தில் வெளிப்பட்டிருந்தால் பதினெட்டாம்நாள் போர் புரிந்திருப்பார்களா என்ன?

ஜெ

எரிபுகுதல்அன்புள்ள ஜெ

விருஷாலியின் பிரச்சினை அவளால் கர்ணனுக்குச் ச்மானமாக அரியணையில் அமர முடியவில்லை என்பதுதான். அவனுக்கு சமானமாக தன்னை அவளால் நினைக்கவே முடியவில்லை. சூரியனை நினைக்கும் மலர்போல தொலைவிலிந்து வழிபட்டாள். அணுகவே இல்லை.

ஆனால் சிதையில் இணையாக ஏறிப்படுத்துக்கொள்கிறாள். எந்த தயக்கமும் இல்லை. இந்த அரியணை இன்னும் மகத்தானது. பொன்னுக்குப் பதில் தீ இருக்கும் அரியணை. இதில் அவள் படுத்துக்கொள்கிறாள். இங்கே அவனுக்குச் சமனாமக இருக்கிறாள்.

இதுதான் அவள் அடைந்த விடுதலை. அவள் இங்கே இதுவரை வாழ்க்கையில் இழந்த எல்லாவற்றையும் அடைகிறாள்  இனி கதைகளில் அவன் தேவியாக இருப்பாள்

சூரியனின் கதிர்பட்டு எரிந்து தீயாக மாறும் மலர் சூரியனை அடைந்துவிடுகிறது

சாரங்கன்

சிதைவரைஜெ

விருஷாலி அத்தியாயம் ஒரு பெரிய கொந்தளிப்பை உருவாக்கியது. கர்ணனின் மீது அவனுடைய குலத்தைப்பற்றிய இழிவை ஷத்ரியர்கள் கடைசிவரைக் கைவிடவே இல்லை. சகுனி ஷத்ரியர் குரலாகவே ஒலிக்கிறார். கர்ணன் இறந்துவிட்டதனால் அந்த இழிவை விருஷாலி மீது சுமத்தி அவர்கள் தங்கள் காழ்ப்பைக் காட்டுகிறார்கள்.

அணிகள் நிறைந்து கிடக்கும் கர்ணன் அவர்களுக்குப் பெரிய ஒரு மனக்கொந்தளிப்பைத்தான் அளிக்கிறான். அவனை அவர்கள் ஏற்பதற்குச் சம்மதம் என்று அர்த்தம் அல்ல. அப்போது ஒன்றும் செய்யமுடியாது, ஏற்றுத்தான் ஆகவேண்டும். பின்னர் அவனை சிறுமை செய்வார்கள். அல்லது தங்களவராக ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் அப்போது அந்த வஞ்சத்தைக் காட்டுவது விருஷாலியிடம்தான்.

கடைசிவரை கர்ணனை அந்த இழிவு விடவில்லை. செத்தபின்னரும் சிதை வரை தொடர்ந்து வருகிறது. அத்தனை புகழ்மொழிகள் ஒலித்தபின்னர் கடைசியாக அதுதான் கேட்கிறது

மகாதேவன்.

சிதைஜெ

விருஷாலி உடன்கட்டை ஏறுவதையும் இதற்கு முன் வந்த உடன்கட்டை ஏறும் காட்சியையும் ஒப்பிட்டுப் பார்த்தேன். பாண்டுவுடன் மாத்ரி உடன்கட்டை ஏறுகிறாள். ஆனால் மாத்ரி கொந்தளிப்புடன் இருக்கிறாள். தன் பிள்ளைகளை குந்தியிடம் ஒப்படைக்கிராள். விருஷாலி அமைதியாக இருக்கிறாள். நிதானமாக சிதை ஏறுகிறாள்.

இரண்டுபேருக்கும் பொதுவாக ஒரு விஷயம் இருக்கிறது. இரண்டுபேருக்குமே நிறைவின்மையோ குற்றவுணர்வோ இருக்கிறது. தான் பாண்டுவுக்கு மனைவி ஆகவில்லை என மாத்ரி நினைக்கிறாள். மனைவியாக வாழாதவள் விருஷாலி. சிதையேறுவதன் வழியாக அவர்கள் அதைத் தீர்த்துக்கொள்கிறார்கள்

விருஷாலி அவளுடைய தாழ்வுணர்ச்சியால் கர்ணனை அணுகவே இல்லை. ஆகவே அவள் அந்தச் சிதையேற்றம் வழியாக அந்தக் குற்றவுணர்ச்சியை ஈடுகட்டிக்கொண்டால் எனத் தோன்றுகிறது


அர்விந்த் 

Friday, June 14, 2019

போர்க்களக்காட்சிகள்ஜெ,

கிருதவர்மனின் உருமாற்றம் ஒரு பயங்கரம். ஆனால் அது ஒரு கொடூரமான குறியீடும்கூட. அவனிடம் சிகண்டி சொல்கிறார். வஞ்சம் வேண்டாம் அது உன்னை எரித்துவிடும் என்று. இந்திரநீலத்தில் அவன் ஒரு தீயால் பற்றப்படுகிறான். அது அவனுக்குள் எரிந்துகொண்டே இருந்தது. அந்த நெருப்பு இப்போது வெளியே வந்து அவனையே எரித்துக்கொண்டிருக்கிறது. ஆனாலும் அவன் இன்னமும் அணையவில்லை.

போர்க்களக்காட்சிகள் திகைப்பூட்டும் கொடூரமான கனவுகள் போலிருந்தன.மனித உள்ளத்தின் வஞ்சத்தையும் கசப்பையும் காட்டும் அடையாளங்களாகவே நான் அவற்றைக் கண்டேன்

அர்விந்த்

பொற்தேர்ஜெ

கர்ணனின் பொற்தேர் உருகி பிலம் வழியாக மண்ணுக்குள் ஊறிச்சென்று மறைந்தது அழகான கவிதையுருவகம். தங்கம் பற்றி வெண்முரசில் வந்த ஏராளமான கவிதைப்படிமங்களை நினைத்துக்கொண்டேன். பிருத்வி - மண்ணில் விண்ணின் ஒளி எழுவதுதான் பொன் என்று பலமுறை வெண்முரசு சொல்கிறது. சூரியன் அல்லது மின்னலின் மண்வடிவம் அது. சூரியமைந்தன் ஏற மண்ணிலிருந்து ஒளிகொண்டு வந்தது. சூரியன் மகன் மறைந்ததும் அது மண்ணுக்கே திரும்பிவிட்டது. சூரியனை ஏந்திய பூமாதேவி என்றுதான் கர்ணனின் தேரைச் சொல்லத்தோன்றுகிறது

மகேந்திரன்

முன்னை இட்ட தீஅன்புள்ள ஜெ

குருக்ஷேத்திரமே ஒட்டுமொத்தமாகப் பற்றி எரியும் காட்சி இதற்குமுன் பலவகையில் குறிப்புணர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொன்றாக நினைத்துப்பார்த்துக்கொண்டிருக்கையில்தான் வெண்முரசின் ஒருமை என்னை ஆட்கொண்டது. திரௌபதியை நாம் முதலில் சந்திப்பதே அனலில்தான். அதற்குமுன் தீயை சுற்றி நடனமிடுகிறான் துருபதன். அதன்பின் அவள் காட்டை எரிக்கும் காட்சி. அதன்பின் காண்டவ காட்டின் எரிப்பு.

அங்கிருந்து முன்னால் சென்றால் முதல்நாவலின் பெயரே திகைப்பூட்டியது. முதற்கனல். முன்னை இட்டதீ முப்புரத்திலே என்பதுபோல அதுதான் தொடக்கம். சிதையேறும் அம்பையிலிருந்துதான் எல்லாம் ஆரம்பிக்கிறது. அங்கிருந்து தீ இதுவரை வந்திருக்கிறது

எஸ்.மாதவன்

Thursday, June 13, 2019

இளைய யாதவரின் வேள்விகள்அன்பின் ஜெ,

ஒரு வாசகர் எழுதியிருந்ததைப் போல குருஷேத்திரம் மொத்தமாக ஒரு எரிகுளமாவது இனி மறக்க முடியாத உருவகம். இதுவரை வந்த போர் நிகழ்வுகள் அனைத்தும் இந்த மாபெரும் வேள்வியை நோக்கியே வந்துகொண்டிருந்தது எனலாம். உடல் வெந்த கிருதவர்மனால் வழிகாட்டப்பட்டு அமிர்தன் எனும் வேதியரால் நடத்தப்படும் இவ்வேள்வியின்போது இளைய யாதவர் நேரடியாக காட்டப்படவில்லை. ஆனால் புதிய வேதம் எழும் இவ்வேள்வியைக் கண்டு புன்னகைக்கும் அவர் முகமே மனதில் எழுந்து கொண்டு இருந்தது.

பதினேழாம் நாள் போர் தொடங்கியது வேள்விகளை ஏற்காத இளைய யாதவர் நிகழ்த்திய ஷுத்ரவேள்வியுடன்.  அன்றைய தினம் முடிவுறுவது ஐந்தெரி எழுந்த குருஷேத்திர பெருவேள்வியுடன். இரண்டுமே இளைய யாதவர் நிகழ்த்திய வேள்விகள் என எண்ணிக் கொண்டேன்.

பாரி

அனலில்அன்புள்ள ஜெயமோகன் சார்,                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        சென்னையே அனலில் எரிந்து கொண்டிருக்கும்போது குருஷேத்ரமும் எரிகிறது.இறந்து போன ஒருவரை  பிஸ்லெரி வாட்டரில் குளிப்பாட்டி என்னை அதிர்ச்சி அடைய வைப்பதும் நடந்து கொண்டிருக்கிறது.குருஷேத்ரத்தில் எரியும் நெருப்பில் இருந்து ஜாதவேதன், வஹ்னி, க்ரவ்யாதன், ருத்ரன்,திரிகாலன் [ இந்த பருவத்தில் இந்த பெயர்களை படிக்கும்போது பீதி கிளம்புகிறது] என்று ஐந்து அனலோன்கள் தோன்றி குருஷேத்ரத்தை அழித்து தூய்மை செய்கிறார்கள்.கர்ணனின் பொன்னால் செய்யப்பட்ட தேர் உருகி, அதன் பொன் பிலத்துக்குள் சென்றுவிட்டது. ஆனால் கிருதவர்மன் சிவ நடனம் போல் ஆடி ஆர்ப்பரிக்கிறான்.  முதலில் குருஷேத்திரத்தை எரிக்க மங்கலம் ஓத வேதம் அறிந்தவர்களை தேட  ஒரு வேளாப்பார்ப்பன் [ வேளாப்பார்ப்பன் என்றால் யார் ? என்று இனிதான் தேட வேண்டும் ] அமிர்தன் வந்து நிற்க, அவனை கூர்ந்து நோக்கி “தாங்கள் என்ன வேதம், உத்தமரே?” என சாத்யக கேட்க , . “அதர்வம்” என்று  கூறி,ஆனால் நால்வேதங்களும் எங்களுக்குரியவையே " என்கிறான் அமிர்தன்.                       " அதர்வவேதம் " என்று அமிர்தன் கூறியவுடன் படக்கென திறந்து கொண்டது . அர்ஜுனன் துருபதனை அவமானபடுத்த, துருபதன் அவமானத்தின் வெம்மை தாளாமல்   குரு வம்சத்தை அழிக்க அதர்வ வேதம் அறிந்தவர்களை கொண்டு நடத்திய யாகத்தில் தோன்றியவள் பாஞ்சாலி . இங்கு குருஷேத்ரத்தை எரிக்க அதர்வவேதம் தான் கடைசியாக ஒலிக்கிறது.      
 [ ஆக்கமும் அழிவும் ,முதலும் கடைசியும் அதர்வம் தான் என்றால் மிஞ்சுவது என்ன ?  அதுதான் அடுத்த கட்ட மனித குல மனம் என்று நினைக்கிறேன் ]                                                                                                                                                                                                                                                                                                                                 
பிரயாகை 92ம் அத்தியாத்தில்  பாஞ்சாலி திருமணம் முடிந்து கன்னியாய் உக்கிரசண்டிகை பூஜைக்கு  செல்லும் போது அவளிடம் அமைச்சர்  “தேவி, இப்பூசனைப்பொருட்களை உக்ரசண்டிகைக்குப் படைத்து வழிபடுங்கள். ஐந்து பருக்களும் அன்னையின் அடிப்பொடியே ஆகுக. கொல்வேல் தொல்பாவை வாழ்த்துடன் மீளுங்கள். ஒன்று நினைவுகூர்க. இச்சுடர் இங்கிருந்து அன்னையின் ஆலயம் செல்வது வரை அணையலாகாது. மீண்டும் இதை கொளுத்திக்கொள்ளும் எப்பொருளும் தங்களுக்கோ தோழிக்கோ அளிக்கப்படாது. இச்சுடரைக் கொண்டு அன்னையின் ஆலயவிளக்குகளை ஏற்றுங்கள். அவ்விளக்கிலிருந்து மீண்டும் ஒரு சுடர்பொருத்திக்கொண்டு மீளுங்கள்” என்கிறார். 

ஆனால் பாஞ்சாலி தனது ஆடைகளை கழட்டிவிட்டு அந்த விளக்கின் நெருப்பு மூலம் காட்டுக்கே தீ வைக்கிறாள். காடே பற்றியெரிய,  "நெருப்பு நாய்க்குட்டிகளென வந்து பாஞ்சாலியின் தோழி மாயையின் காலை முத்தமிடுகிறது. மாயை துள்ளி விலகி ஓடி பாறைமேல் ஏறிக்கொள்ள உவகைகொண்ட நாய்க்குட்டிகள்   [ காலபைரவர்கள் தானா? ]துள்ளிக்குதித்து துரத்திவருகின்றன. அவள் ஓடிச்சென்று பாறைப்பரப்பில் ஏறிக்கொள்கிறாள்".  குருஷேத்திரத்தில் கிருதவர்மன் அதர்வ வேதம் முழங்க வைக்கும் தீக்கு முளை அதர்வ வேதம் முழங்க நடந்த யாகத்தில் தோன்றிய பாஞ்சாலி வைத்த தீதான்.                                

பாஞ்சாலி உக்கிரசண்டிகையை வழிபட்டுவிட்டு அந்த ஆலயத்தின் விளக்கில் இருந்து சுடர் பொருத்திக்கொண்டு வந்தாளா ? அந்த சுடர் என்ன ?                            

 ஸ்டீபன் ராஜ் குலசேகரன் .                    

Wednesday, June 12, 2019

வேள்வி
அன்புள்ள ஜெ


குருக்ஷேத்திரம் மொத்தமாக ஒரு சிதையாக ஆகும்காட்சிதான் இதுவரை வந்தவற்றிலேயே உக்கிரமான உருவகம் என்று படுகிறது. நாக்கு சிவந்த வேங்கை என்ற படிமம் முதலில் வந்தது. அதன்பின் ஓராண்டாக நூற்றுக்கணக்கான படிமங்கள் குருக்ஷேத்திரம் பற்றி வந்துவிட்டன. இனி என்ன சொல்லமுடியும் என நினைக்கும்போதே அடுத்த படிமம் வந்துவிடும். ஆனால் இத்தனைக்கும் அப்பால் இந்த மகத்தானபடிமம் வந்திருக்கிறது. இதை இனிமேல் மறக்கவே முடியாது. மாபெரும் வேள்வி. இனி இதைப்போல் ஒருவேள்வி நிகழப்போவதில்லை என்ற வரியை வாசிக்கும்போது உடனே இட்லரின் விஷவாயு அறைகளும் ஹிரோஷிமா நாகசாகியும் ஞாபகம் வந்தன.

செல்வக்குமார்

எரிஅன்புள்ள ஜெ

இன்றைய அத்யாயம் இருட்கனி 63ல் குருக்ஷேத்ரமே மாபெரும் வேள்விக்குளமாக வேதநாதத்துடன் எழுந்துள்ளது.

இதுவரை மனிதர்களை வீரர்களாக, படைத்தலைவர்களாக, அரசர்களாக கட்டி நிறுத்தியவையனைத்தும் அக்னியில் கரைந்தழிகிறது.

ஒவ்வொருவரும் தங்களுள் நிறைத்திருந்தவைகளை ஆகுதியாக்கும் வாய்ப்புடன் மாசற விண்புகுகின்றனர்‌.

அதர்வத்தால் நோன்பு முடிக்கப்பெற்று அவியெனவே மாறி, மூதாதையர் முன்னின்று வேள்வியால் வின்னேற்றம் பெற்றேன் என்று தருக்கும் நல்லூழுடன் அமைந்துள்ளது அந்த வாய்ப்பு.

களவேள்வியில் முப்பத்து முக்கோடி தேவர்களையும் அவி பெற்றுச்செல்ல அமிர்தன்  அழைப்பு விடுக்கிறான் போலும் இறந்தார் போதவில்லை என இருப்போரும் அவியாகுகின்றனர்.

இதுவே தொல்வேதம் முழங்கும் இறுதிவேள்வியென நினைத்து மானுடரில் தேவர்கள் எழுந்து அதர்வத்திற்கு அவியாக விழைந்தார்களோ என்றும் எண்ணமும் உருவாகுகிறது.

தளைகள் அனைத்தும் உருகி ஒன்றனவாகும் பெருநிலையே குருக்ஷேத்திர வேள்வியின் பயனாக, எழும் வேதத்தின் அமரத்தில் அமர்ந்துள்ளது போலும்.

தங்கராஜ்

Karna’s EndDear Jeyamohan 

Maveeran Karna was killed in the battlefield by another great warrior who violated the code of conduct in the war.  This makes both Karna and Arjuna equal. Karna had insulted Panchali who stood as a destitute in Duryodhan’s palace and committed a crime and the payback returned the same way when he was stranded with his chariot stuck on the mud.

Regardless, the poignant and the sad feelings are the same in both scenarios.  The Soodhars as usual captivate the readers hearts by their narration. Your description of the psyche of the Pandavas after the fall of Karna is great. Only thing I could not understand very clearly is the spitting and the insults hurled on at Dharma even referencing Panchali seems to be a little out of the flow. How could a common soldier dare to hurl insults to a King? If so, how come Dharma and Panchali are celebrated through out the centuries. Perhaps you have a reason or used the writer’s freedom and perception.

Overall it is a great episode that has brought tears, smile and introspection. Waiting to see how Karna’s Mother will react to see her first born dead in the battlefield. 

Thanks as always.

Sobana Iyengar


Sobana Iyengar


Tuesday, June 11, 2019

சல்யர்

ஜெ,

சல்யர் கர்ணனின் குருதித்தந்தையாக இருக்கலாமென்ற ஊகம் முன்னரே வந்துவிட்டது. பூடகமாகவே வந்து கொஞ்சம் கொஞ்சமாகத் தெளிவடைந்தது. அப்போது எனக்கு கொஞ்சம் ஒவ்வாமை இருந்தது. ஆனால் இப்போது இதுவே சரியான விளக்கம் என்ற எண்ணம் ஏற்படுகிறது. இல்லாவிட்டால் பல கேள்விகள். சகாதேவனுக்கும் நகுலனுக்கும் மாமனான அவர் ஏன் துரியோதனன் பக்கம் சேர்ந்தார்? மகாபாரதக்கதையின்படி வெறும் விருந்து கொடுத்ததற்காக இந்தப்பக்கம் வந்தார்.

சரி, ஏன் அவர் கர்ணனை நிந்தித்தார்? மகாபாரதக்கதையின்படி அவரிடம் அப்படி நிந்திக்கும்படி யுதிஷ்டிரர் கோரினார். இவ்விரண்டும் அப்படியே எடுத்துக்கொண்டால் அவர் ஓர் அற்பர். சொன்ன சொல்லுக்கு துரோகம் செய்பவர். இரண்டகம்செய்யும் ஆள். அவரை ஏன் அத்தனைபெரிய தளபதியாக ஆக்கினார்கள்? அவர் கர்ணனை போர்க்களத்தில் கைவிட்டார். அப்படிப்பட்டவரை அடுத்தநாள் முழுப்படைக்கும் தலைவராக ஏன் ஆக்கினார்கள்? எந்த விளக்கமும் இல்லை.

இந்தமாதிரி ஒரு உட்கதை மட்டுமே சல்யரை தெளிவாகக் காட்டும். இதைப்போல ஏதோ இருந்து காலத்தில் விட்டுப்போனதாகவே இருக்கும் என நினைக்கிறேன். இப்போது சல்யரின் குணச்சித்திரம் ஓங்கி தெரிகிறது. அவர் அடுத்தநாள் படைத்தலைமை ஏற்று தன் மருமகன்கள் உட்பட அனைவரையும் கொல்வதாகச் சபதம் ஏற்பதும் பொருத்தமாக அமைகிறது

இத்தகைய உறவுகளெல்லாம் சாத்தியமா என்றால் நியோகம், களவொழுக்கம் போன்றவை சாதாரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு சமூகத்தில் இது இயல்பானதுதான் என தோன்றுகிறது. அங்கே அன்னையின் கருப்பை தூய்மையானதாகவே கருதப்பட்டது. அது வெண்முரசிலேயே மிகமிக விரிவாக வந்துவிட்டது..

சாரங்கன்

முளைக்காதவை


ஜெ

வெண்முரசில் சில இடங்கள் முன்னரே உணர்த்தப்பட்டு மிகவும் பிந்தித்தான் முழுவடிவில் வெளிவரும். இந்த வரிகளை வாசிக்கையில் இதன் கவிதை மட்டும்தான் எனக்குப் பிடிகிடைத்தது

ஓங்கி தாழ்த்தப்படும் வாளில் எஞ்சுவதென்ன? பெரும்பாறை உருண்டு வந்து மூடிய விதையில் காத்திருப்பதென்ன? முதிர்ந்த நாகம் தன் நஞ்சை அருமணியாக்கும் விந்தைதான் என்ன? இக்களத்தில் நிகழ்ந்தவை கோடி. நிகழக் காத்திருந்தவை கோடி கோடி. சூதரே, நிகழாது எஞ்சியவை முடிவிலாக் கோடி. எங்குள்ளன அவை? எவ்வண்ணம் எழுந்து வரும் அவை? புவிமேல் முளைக்காத புல்விதைகள் கோடிகளின்கோடி அல்லவா? அவற்றை ஆளும் தெய்வங்கள் எதற்கு பணிக்கப்பட்டிருக்கின்றன?

ஆனால் அதன்பின் வரும் அத்தியாயங்களில் வருவது வேறு. அஸ்வத்தாமன் சிகண்டி இருவருமே சிலரை எஞ்சவிடுகிறார்கள். அந்த நஞ்சு எழுந்து அவர்களை அழிக்கிறது. அவர்கள் அந்த நஞ்சை ஏன் விட்டுவைத்தார்கள்? அதுதான் ஊழா? முளைக்காத புல்விதைகளின் கோடிகோடி தெய்வங்கள் விதியின் விளையாட்டில் வகிக்கும் இடம்தான் என்ன?


ராமச்சந்திரன்

மகன்
அன்புள்ள ஜெ


விருஷசேனனை அப்படியே கர்ணனின் ஆல்டர் ஈகோவாகவே ஆரம்பம் முதல் காட்டிவருகிறீர்கள். அவர்கள் எழுதழலிலேயே வந்துவிட்டார்கள். கர்ணனே பல உடல்களில் பெருகியதுபோல் அவர்கள் இருக்கிறார்கள் என அப்போது வாசித்தேன். இங்கே அவன் அப்படியே கர்ணனைப்போல இருக்கிறான். கர்ணன் அர்ஜுனனின் உயிரை கொடையளித்தான். அது அன்னைக்கு கொடுத்த வாக்குறுதி. விருஷசேனன் எதையும் வாக்களிக்கவில்லை. ஆனால் தன் தந்தைக்குப் பிடிக்காது என நினைத்து அவன் சுருதகீர்த்தியைக் கொல்லாமல் விட்டுவிடுகிறான். அந்தப்பெருந்தன்மைதான் அவனை கர்ணனுக்கு பெருமைசேர்க்கும் மகனாக ஆக்குகிறது


மகாதேவன்

துரிய அம்பு

அன்புள்ள ஜெ,

அர்ஜுனனும் கர்ணனும் செய்யும்போர் ஒரு பெரிய உருவகமாகவே வந்தது. வெண்முரசு முழுக்க எப்படியெல்லாம் போர் மாறிமாறி வந்திருக்கிறது என்பதை தனியாகத்தான் ஆராயவேண்டும். ஆரம்பநாவல்களில் மிகவும் யதார்த்தமாக போர் காட்டப்பட்டது. இப்போது உருவகமாக ஆகிவிட்டது. அதற்காகவே இந்த நாவல்கள் வெவெவெறு கதைசொல்லிகளால் சொல்லப்பட்டவை போல் உள்ளன என நினைக்கிறேன். கதைசொல்லிகள் வந்ததுமே அஸ்திரங்களின் இயல்புகள் மாறிவிட்டன. அவை வெடிகுண்டுகளாக முதலில் இருந்தன. இப்போது கதிரியக்கம் போலவே தோன்றுகின்றன. விளைவுகளும் அணுகுண்டு வெடிப்பதைப்போல் தெரிகின்றன.

இந்த அஸ்திரப்போரில் கர்ணன் ஜாக்ரத் ஸ்வப்னம் சுசுப்தி துரியம் ஆகிய நான்கிலிருந்தும் அம்பை எடுத்து அர்ஜுனனை தாக்குகிறான். நான்கையும் எப்படி எதிர்கொள்வது என்று கிருஷ்ணன் சொல்லிக்காட்டுகிறார். துரிய அம்பில் அர்ஜுனன் தன்னை கர்ணனாக கர்ணனின் துரியத்தின் உள்ளே காண்கிறான். கர்ணனாக நின்று அர்ஜுனனின் மகன்களைக் கொல்கிறான். அது அர்ஜுனனாக நின்று அவன் கர்ணனின் மகன்களைக்கொல்வதாக மாறிவிடுகிறது.  இந்த சிக்கலான தலைகீழ்மாற்றத்தை கூர்ந்து வாசிக்கவேண்டியிருக்கிறது. அதோடு ஆழ்மனசில் இவர்க்ள் எப்படி ஒருவரொடு ஒருவர் தொடர்புகொண்டிருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. ஓர் உருவகமாக ஆழமாக வாசிக்கவேண்டிய பகுதி அது

ஜெயராமன்

Monday, June 10, 2019

சல்யகீதை
ஜெ


சல்யகீதை அற்புதமானது. ஒரு அழகிய கற்பனை. கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு தேர் ஓட்டுகிறான். சல்யன் கர்ணனுக்குத் தேரோட்டுகிறான். அப்படியென்றால் சல்யனும் ஒரு கீதையைச் சொல்லக்கூடும்தானே? சல்யன் சொல்லும் உபதேசத்திலும் கீதையின் வரிகளை அழகாக கலந்துவிட்டிருக்கிறீர்கள். அதுவும் கீதையே என காட்டுகிறது அந்த வரிகள். சல்யர் எந்தத் தத்துவமும் சொல்லவில்லை. அனுபவத்தைச் சொல்கிறார்.எ ந்த அப்பாவுக்கும் மகனிடம் சொல்ல சொந்த அனுபவம் சார்ந்த ஒரு வரியாவது இருக்கும். அதை தன் நெஞ்சின் குருதியிலே முக்கித்தான் அவர் சொல்வார்.

ஆனால் அத்தனை உபதேசங்களுக்கும் இறுதியில்தான் நான் உன் தந்தை என அவரால் கூவ முடிகிறது, அதை அவன் நிராகரித்தபின் அந்தத்தேரில் அமரவும் முடியவில்லை. கண்ணெதிரே மகன் சாவதைப் பார்க்கவும் முடியவில்லை. ஆகவே அவர் அவனைக் கைவிட்டுவிட்டுச் செல்கிறார். அந்த இடம் உணர்ச்சிகரமானதாக இருந்தது

ராம்

குருதிமகள்கள்


ஜெ

போர்க்களத்தில் பெண்கள் எவருமில்லை. இதுவரை பெண்ணாக வந்தவள் மூதேவி மட்டுமே. ஆனால் பெண் ஒருத்தி இருந்துகொண்டிருக்கிறாள். அவள்தான் அத்தனை ரத்தத்தையும் குடிக்கிறாள்

ஆயிரம் தலைகொண்டவள். பல்லாயிரம் கைகொண்டவள். உடலெங்கும் முலைகள் கனிந்து செறிந்தவள். அவள் புவிமகள். அவளை இங்ஙனம் கண்டதில்லை. அளிபெருகும் இன்விழிகொண்டவள் அல்லவா? குருதிவிடாய்கொண்ட நாவு அவளுக்கும் உண்டா? இங்கு அனைவருடனும் போரிட்டுக்கொண்டிருந்தவள் அவள்தானா? அனைவரும் போரிட்டது அவளுடன்தானா? அனைவரும் சென்றுவிழுந்தது அவள் மீதா? 

என்றவரி அத்தனை பெண்களையும் துர்க்கைகளாக காட்டுகிறது. எல்லாருமே ரத்தத்தை விரும்பி உண்கிறார்கள். போருக்காக ஆண்களை பெற்று அனுப்பிக்கொண்டே இருக்கிரார்கள்

சாரங்கன்

அலுப்பு
அன்புள்ள ஜெ

பல சிறு நுட்பங்கள் வழியாகச் செல்லும் வெண்முரசை ஒட்டுமொத்தமான கதையாக வேகமாக வாசித்துச் செல்லும்போது சரியாகப் புரிந்து கொள்ள முடிவதில்லை. பெரும்பாலும் கதையின் நாம் கவனிக்காதவற்றை எவரேனும் சொல்லும்போதுதான் கவனிக்கிறோம். ஆகவேதான் நான் இந்த வெண்முரசு கடிதங்கள் தளத்தை கவனிக்கிறேன். இதில் சிலர் தீவிரமாக எழுதுவார்கள். பின்னர் நின்றுவிடுவார்கள். சிலர் அவ்வப்போது எழுதுவார்கள். சிலநாள் கடிதங்களே வருவதில்லை.

உதாரணமாக அஸ்வத்தாமனுக்கும் பீஷ்மருக்குமான ஒற்றுமையை விருஷசேனன் அடையாளம் காணும் இடம். அதே இடம் மீண்டும் அஸ்வத்தாமனின் கோணத்திலும் வருகிறது. அஸ்வத்தாமன் போரின் கடைசியில் அந்த அலுப்பை வந்தடைகிறான். ஆனால் பீஷ்மர் போரின் தொடக்கத்திலேயே அந்த அலுப்பை அடைந்துவிடுகிறார். அவர் கொடூரமாகப் போரிட்டதுகூட அந்த அலுப்பை ஜெயிப்பதற்காகத்தான். விருஷசேனன் அந்த அலுப்பை தானும் அடைவதைத்தான் கடைசியில் காண்கிறோம். ஆகவேதான் அவன் இயல்பாக உயிரை விடுகிறான்

எஸ்.மகாலிங்கம்

எதையும் பெறாதவன்
அன்புள்ள ஜெ

மகாபாரதத்தில் கர்ணன் ஒரு கொடையைப் பெறுகிறான். இரண்டுகொடைகளை கேட்கிறான். ஒன்றைப் பெறுகிறான். ஒன்று மறுக்கப்படுகிறது. துரியோதனன் அவனுக்கு அங்கநாட்டை அளித்ததுபெரிய கொடை. அந்த செஞ்சோற்றுக் கடனுக்காகவே அவன் குந்தியிடம் துரியோதனனை விட்டுக்கொடுக்கவில்லை. அவன் குந்தியிடம் தன்னை அவள் மகன் என சொல்லவேண்டும் என்று கோருகிறான். அவள் அவன் செத்தபின் அதை செய்கிறாள். அர்ஜுனனிடம் அவன் தேர்ச்சக்கரத்தை தூக்கும்வரை பொழுது கோருகிறான். அதை அவன் அளிப்பதில்லை.

வெண்முரசில் அவன் துரியோதனனிடம் பெற்றது கொடை அல்ல என்று வருகிறது, அதைவிடப் பெரிய ஒன்றை அவன் துரியோதனனுக்கு அளித்திருக்கிறான். குந்தியிடமும் அர்ஜுனனிடம் அவன் எதையுமே கோரவில்லை என வென்முரசு சொல்கிறது. அவன் இங்கிருந்து எதையுமே பெற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் வெண்முரசின் கற்பனை. அது அவனை ஒரு தேவன் போல ஆக்கிவிடுகிறது

டி.ஜெயக்குமார்