Monday, December 10, 2018

எந்தாய்!பல்லாயிரம் சிறுமணிவிழிகளில் இமைகள் கீழிறங்கி பிறக்கவிருக்கும் ஒளியை கண்டுகொண்டன. சிறகசைவில் கிளையசைய மலர்ப்பொடிகள் தளிர்களில் உதிர்ந்தன. ‘இங்குளாய்! அங்குளாய்! எங்குளாய் எந்தாய்?’ என்றுரைத்தது மணிக்கழுத்து மரகதப்புறாத் தொகை...

நீலத்தின் இந்த வரியை இன்றைக்கு வாட்சப்பில் யாரோ அனுப்பியிருந்தார்கள். இதை திரும்பத்திரும்ப வாசித்தேன். இதை நீங்கள் எப்படி எழுதியிருப்பீர்கள்? இதை வரிவரியாக கோத்து எழுதினால் இந்த நாவலை எழுதிமுடிக்க எவ்வளவு நாளாகும்? ஆனால் நேரடியாகஒரே மாசம். நாவல் முடிந்துவிட்டது

இங்குளாய்! அங்குளாய்! எங்குளாய் எந்தாய்- என்று புலம்பிக்கொண்டே இருக்கிறது மனசு. இந்தவரி ஒரு பக்தியுகப்பாடலில் ஆழ்வார் ஒருவரால் எழுதப்பட்டது என்றால் நான் நம்பியிருப்பேன். ஆனால் இந்த வரி ஆழ்வார்களோ நாயன்மார்களோ எழுதிய எந்த வரிகளின் சாயல்கொண்டதும் அல்ல

ஜெ, ஒரு பெரிய பித்துநிலையில் இருந்திருக்கிறீர்கல். நீங்கள் புண்ணியம்செய்தவர்


ராதா சுரேஷ்

ஊழ்அன்புள்ள ஜெ

திசைதேர்வெள்ளம் என்ற பெயர் தன் திசையை தானே தேர்வுசெய்யும் வெள்ளத்தைக் குறிக்கிறது. அது ஊழ். இந்த மகாபாரதப்போரின் மிகப்பெரிய சித்திரம் வாழ்க்கை ஊழின் கைகளில் சருகு போல சென்றுகொண்டிருப்பதையே காட்டுகிறது. ஒவ்வொருவரும் தங்கள் ஊழின் அலைகளில் மிதந்துசென்றுகொண்டிருக்கிறார்கள். வாழ்க்கை எவருடைய கேள்விகளுக்கும் எந்தப்பதிலையும் சொல்லாமல் செல்கிறது

பெரிய கதாபாத்திரங்களும் சின்னக்கதாபாத்திரங்களும் இந்நாவலில் ஒரே போல போரின் பெருக்கில் ஒழுகிச்செல்கிறார்கள். அற்பர்களும் மாவீரர்களும் ஒரே விதமாகவே அலைக்கழிகிறார்கள். எவருக்கும் எந்த இரக்கமும் விதியால் காட்டப்படுவதில்லை. நீர்வழிப்படூம் புணைபோல என்ற வரிதான் நினைவுக்கு வருகிறது. பெரியோரை ஏத்துதலும் சிறியோரை இகழ்தலும் செய்யமாட்டேன் என்று சொல்வது ஊழ்தான்

எஸ்.ஆனந்த்

தீபம்அன்னையின் விரல்கள் யாழ்விறலியர்களுக்குரியவைபோல மிக மெலிதாக நீண்டிருந்தன. விழிகள் நீலமணிகள். அவள் இமைப்பீலிகளும் பெரியவை. அவள் ஆடை குளிர்ந்திருந்தது. மகள் பற்றிஎரிந்துகொண்டிருப்பவள் போலிருந்தாள். அவள் விரல்கள் நாகக்குழவிகள்போல. எரித்துளிகள் போன்ற கண்கள். 

இந்தவரிகளில் கங்கை அன்னைக்கும் மகளாகிய அம்பைக்கும் இடையேயான வேறுபாடு கவித்துவமாகச் சொல்லப்பட்டுள்ளது. அன்னை குளிர்ந்தவள். மெல்லிய விரல்களால் நீரலைகளில் யாழ்மீட்டுபவள். [நீரில் அவள் யாழ் மீட்டுவது அற்புதமான கற்பனை] மகள் தீயாலானவள். நீரில் எழுந்த நெருப்பு அவள்

இந்த வர்ணனை வேறொருவகையில் முன்னரே வந்திருக்கிறது. படகில் அம்பை அமர்ந்திருப்பதை நிருதன் பார்க்கிறான். அவள் அலைகளின்மேல் செல்லும் ஒர் அகல்விளக்கிலிருக்கும் சுடர் போலிருக்கிறாள். அகல் ஆடினாலும் சுடர் நிலைகுலையாமல் இருக்கிறது என நினைக்கிறான்

ஆரம்பம் முதலே அம்பை அனல் என்றே சொல்லப்பட்டிருக்கிறாள். முதற்கனல் அவள்தானே?


ராஜேஷ்

மூவர்
அன்புள்ள ஜெ,


இந்நாவலில் இப்போது மூன்றுபேர் போரை வெளியே நின்று பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஒருவர் சஞ்சயன். அவர் பார்க்கும்போர் தெய்வங்களின்போர். அதன் விரிவை நாம் பார்த்துவிட்டோம். மேலும் இருவர் போரைப்பார்க்கிறார்கள். கடோத்கஜனின் மகன் பார்பாரிகனும் தலைவெட்டப்பட்ட அரவானும். அவர்கள் பார்த்துக்கொண்டிருப்பது என்ன போர் என நமக்குத்தெரியவில்லை. அந்தப்போர் என்ன என்பதை நான் ஒருவாறாக ஊகிக்கிறேன். அடுத்த நாவல் இந்த மூன்றுபேரின் பார்வையில் வரும் மகாபாரதப்போராக இருக்குமென்று தோன்றுகிறது. ஒருவர் ஷத்ரியர்களின் பார்வை. இன்னொருவர் அரக்கர்களின் பார்வை. இன்னொருவர் நாகர்களின் பார்வை. போரின் ஊடாட்டம் சரியாக வந்துவிடும். சரியா?

சாரங்கன்
அன்புள்ள சாரங்கன்
இன்றுவரை எவரும் இவ்வளவு அணுக்கமாக என்னை தொடர்ந்ததில்லை

ஜெ

கருவில் அறிவதுகருபுகும் பார்த்திவப் பரமாணுவில் வந்தமையும் உயிர் ஒரு வினாவை கொண்டுள்ளது. வாழ்வென்பது அவ்வினாவின் வளர்ச்சி.அதன் விடையைக் கண்டடையும் உயிர் நிறைவடைகிறது. அவ்விடை எஞ்சியிருக்குமென்றால் மீண்டும் பிறக்கிறது - மறுபிறப்பு பற்றிய இந்திய ஞானமரபின் நம்பிக்கையை இதில் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறீர்கள். ஏற்கனவே பல ஞானிகள் சொன்ன வரிகள்தான் என்றாலும் அதை நல்ல தமிழில் கூர்மையாக வாசிக்கையில் நெஞ்சில் அறைவதுபோல இருக்கிறது.

இந்த உண்மையை உணர நாம் எதையுமே ஆராயவேண்டியதில்லை. நம் மனதையும் நம் வாழ்க்கையையும் கூர்ந்து நோக்கினாலே போதுமானது. நாம் எதற்காக வாழ்கிரோம்? நமக்கு மொழி தெரிய ஆரம்பிப்பதற்குள்ளாகவே நாம் அந்த அடிப்படைக்கேள்வியை மிகச் சூட்சுமகாககேட்க ஆரம்பித்திருப்போம். சின்னப்பிள்ளைகள்கூட அவர்களுக்குரிய ஒரு அகத்தேடலை, கேள்வியை கொண்டிருப்பதையும் அதற்குரியவகையில் அவர்களின் பெர்சனாலிட்டி உருவாகியிருப்பதையும் காணலாம். அனுபவங்களிலிருந்து அப்படிப்பட்ட கேள்விகள் உருவாகின்றன என்று சொல்லலாம். அப்படி அல்ல. ஒரே அனுபவம் நாலுபேருக்கு வந்தாலும் நாலு கேள்விகள்தான் வருகின்றன

மிச்சவாழ்க்கை முழுக்க நாம் தேடுவது அந்தக்கேள்விக்கான பதிலைத்தான். அறிந்து நிறைந்தவர்களைத்தான் நாம் ஞானிகள் என்று சொல்கிறோம்

சுவாமி

Sunday, December 9, 2018

சிங்கம்ஜெ

பீஷ்மரை முதற்கனலில் விவரித்திருக்கும் ஒரு பகுதியின் பெயர் வேங்கையின் தனிமை. அந்த வரி என்னை ரொம்பநாள் கற்பனையில் ஆழ்த்தியிருக்கிறது. ஆண்வேங்கை மிகமிகத் தனிமையான விலங்கு. அதோடு அதற்கு ஒரு குணாதிசயம் உண்டு. தன் காட்டுக்குள் தனக்கு எதிரிகள் வந்துவிடக்கூடாது என்று தன் குட்டிகளைத்தேடித்தேடிக் கொல்லும். பீஷ்மரின் இயல்பும் அதுதான். அது திசைதேர்வெள்ளத்தின் தொடக்கத்திலேயே வந்துவிட்டது

அவருடைய சிவந்த தாடியைப்பற்றிய சித்திரம் வந்தபடியே இருந்தது. ஆகவே நான் அவரை ஒரு சிங்கமாகவே கற்பனைசெய்துகொண்டேன். சிங்கத்தின் வீழ்ச்சிதான் அவருடைய சாவு.

ஜெயராமன்

தனிமை
ஜெ,

பீஷ்மரின் இறப்புக்கு முன்னால் வரும்போரின் எல்லா காட்சிகளுமே இப்போது வாசிக்கையில் குறியீடுகளாக, வெவ்வேறு அர்த்தங்களை அளிக்கக்கூடியனவாக உள்ளன. அவர் பிறரைக் கொன்று அந்த உடல்களாலேயே அவரை எவரும் தொடமுடியாதபடி அகன்றுவிட்டார். அவரைச்சூழ்ந்து அவர் உருவாக்கிய உடைசல்களாலேயே ஒரு கோட்டை உருவாகியிருந்தது. அவர் தனிமையாக அந்தக்களத்திலே நிற்கிறார். 


அவர் மேல் அம்புகள் தொடாத இடத்துக்குச் சென்றவர் திரும்பிவந்து அத்தனை அம்புகளையும் வாங்கிக்கொள்கிறார், அந்தத்தனிமையை அவரே உடைக்கிறார். அவர் சாவை அவரே தேர்வுசெய்கிறார்

மகாதேவன்

ஊக்கம்


அன்புள்ள ஜெ

இந்த கடிதங்கள் பகுதியில் ஸ்டீபன் என்பவரின் படத்தைப்பார்த்தேன். அவர் இப்போது நிறைய எழுதுகிறார். இப்படி அவ்வப்போது சிலர் உங்களுக்கு ஆவேசமாக கடிதங்கள் எழுதுகிறார்கள். சிலர் அப்படியே எழுத்தாளர்களாக ஆகிவிடுகிறார்கள். சிலர் கொஞ்சம் கொஞ்சமாக அப்படியே மறைந்து போய்விடுகிறார்கள். உதாரனமாக வெண்முரசிலே நிறைய கடிதங்களை எழுதியவர்கள் ராமராஜன் மாணிக்கவேல். தண்டபாணி துரைவேல். இருவரும் படங்கள் வெளியிட்டிருந்தீர்கள். இப்போது அவர்கள் வெண்முரசு வாசிப்பதில்லை என நினைக்கிரேன். எனக்குத்தெரிந்து பலர் நிறுத்திவிட்டார்கள். பலர் வாசிக்க ஆரம்பித்தார்கள். பலர் நிறுத்திவிட்டு மீண்டும் ஆரம்பித்தார்கள். அன்றுமுதல் இன்றைக்குவரை ஒரே ஊக்கத்துடன் வாசிப்பவர்கள் கொஞ்சபேர்தான். அதைப்பார்க்கையில்தான் எழுதும் உங்களின் ஊக்கம் எனக்க்கு பிரமிப்பாக இருக்கிறது

சுதாகர்

வசுக்கள்அன்புள்ள ஜெ

இந்தக் கடிதத்தளத்தில் சுட்டி அளிக்கப்பட்டதனால்தான் நான் முதற்கானல் அத்தியாயத்தை வாசித்தேன். வாசித்து ஆறாண்டுகள் ஆகப்போகின்றன. மறந்தேவிட்டேன். மேலும் அதன்பின் வந்த இந்தக்கதையை வைத்துத்தான் அந்த அத்தியாயத்தில் வரும் கிண்டல்களை ரசிக்கமுடியும். உங்கள் மனதில் அந்த அத்தியாயம் இருந்திருக்கிறது. எங்கல் மனதில் இப்போதுதான் அது வருகிறது


பீஷ்மராகிய வசு நைச்சியமாகக் கேட்கிறது.   “அன்னையே நான் இங்கே பாவங்களைச் செய்தால் நீங்களே என்னை மீண்டும் மைந்தனாகப் பெற்று அப்பாவங்களைத் தீர்க்க அருள் புரியவேண்டும்”

ங்காதேவி அந்தக்கோரிக்கையில் உள்ள இக்கட்டை உடனே புரிந்துகொண்டு சொல்மீட்சி அளித்தாள். நீ செய்யும் தீமைகளை முழுக்க நல்ல நோக்குடனயே செய்வாய். ஆகவே உனக்கு எப்பாவமும் சேராது, நீ பிறவியறுப்பாய்

எவ்வளவு பொருள்பொதிந்த வரிகள். மொத்த குருகுலத்தையே போருக்குக்கொண்டுவந்துவிட்டுவிட்டு பிறவியறுக்க அவர் காத்துக்கிடக்கிறாள்

ராஜசேகர்

பீஷ்மனும் ராமனும்
அன்புள்ள ஜெ

இணைப்புக்கள் வழியாக பீஷ்மரைப்பற்றி விடம்பன் செய்யும் நக்கலைச் சென்று வாசித்தேன். பீஷ்மருக்கும் ராமனுக்கும் இடையே அவன் ஓர் ஒற்றுமையைச் செய்துபார்க்கிறான். ஆச்சரியமாக இருந்தது. இருவருமே ஒருவகையான நோன்புகொள்ளும் உறுதிகொண்டவர்கள். விளையாட்டுத்தனம் இல்லாதவர்கள். ஆகவே பெண்களுக்குப் பெரிய அநீதிகளை இழைத்தார்கள். அதைத்தான் விடம்பன் சொல்கிறான்.
ராமனின் வம்சம்தான் பீஷ்மர் என இன்றைக்கு அவர் மரணப்படுக்கையில் கிடப்பதை வாசித்தபின் வாசித்தபோது ஒரு பெரிய தரிசனம் போல இருந்தது. ராமன் சென்று சரயூவில் மடிந்ததும் பீஷ்மர் அம்புப்படுக்கையில் கிடப்பதும் சமம்தானே என்று நினைத்தேன்

சாரங்கன்

Saturday, December 8, 2018

போரின் மனநிலைஜெ

திசைதேர்வெள்ளத்தில் படைகளின் உணர்ச்சிகளின் மாற்றங்களுக்கு ஒரு தர்க்கமில்லாத தர்க்கத்தை அளித்திருக்கிறீர்கள். சாதாரணமாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் புரிந்துகொள்ளவும் முடிகிறது. ஒரு நுட்பமான கணக்கு அதற்குத்தேவைப்படுகிறது. பீஷ்மரின் சாவுக்கு முன்னால் இனிமேல் வெற்றியே இல்லை சாவுமட்டும்தான் என்று உனரும்போது படைகள் கொண்டாடுகின்றன. கீழ்மையாக சிரிக்கின்றார்கள். கேவலப்படுகிறார்கள். ஏனென்றால் அப்போதுதான் அவர்களால் அந்தச்சோர்வை கடக்கமுடியும். அதோடு மறுநாள் அந்தக்கேவலமான கொலையை நியாயப்படுத்தத்தேவையான மனநிலையை விதி அவர்கலிடம் உருவாக்குகிறது. அதன்பின்னர் பீஷ்மர் கொலைசெய்யப்பட்டபின்னர் அவர்களெல்லாம் கொஞ்சம் அழுகிரார்கள். அதன்பின் கொலைவெறி. அதன்பின் நிம்மதியாகத் தூங்குகிறார்கள். அவர்களைப்புரிந்துகொள்ல இந்த மனநிலை மாற்றங்களை எல்லாம் விதியால் உருவாக்கப்படுவது என்று புரிந்துகொள்வதே உகந்ததாகும்

கே.மாரிமுத்து

ஞானம்ஜெ 

காந்தி- பழியும் ஊழும் என்ற கட்டுரையை வாசித்தேன். அந்தக்கட்டுரையில் இப்படிச் சொல்கிறீர்கள். 

ஒன்று, மறுபிறப்பு உண்டு என்பது. இன்னொன்று, ஆத்மாவின் அழிவின்மை மற்றும் தன்னிலை. மூன்று, பாவபுண்ணியங்களின் தொடரே வாழ்வு என்பது. நான்கு ஊழ் என்னும் மாபெரும்வலையே இவ்வாழ்க்கை, அது தற்செயல்கள் அல்ல என்பது 

அந்தப்புரிதல்களைநீங்கள் வெண்முரசு வழியாகவே வந்தடைந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். மகாபாரதம் எவருக்கு ஞானத்தை அளித்திருக்கிரதோ இல்லையோ ஒரு ஐந்தாண்டுக்கால தியானம் போல உங்களுக்கு ஞானத்தை அலிக்கிறது

ஆர்.ராகவன்

எள்மலை
ஜெ

பீஷ்மரைப்பற்றிய விடம்பனின் எள்ளலை மீண்டும் சென்று வாசித்தேன். பீஷ்மருக்குத் தேவையானது என்ன சான்றோரே? அவர் நம் நாட்டின் பிதாமகர். அவருக்குத் தேவையானது எள்ளும் தண்ணீரும். அவர்செய்த தியாகங்களுக்காக நாம் அவரை எள்ளால் ஆன மலைமீது ஏற்றி கங்கையில் மிதக்கவிடவேண்டும். ஓம் அவ்வாறே ஆகுக என்று அவர் சொல்கிறார். அவர் இன்று அத்தனை கௌரவர்களும் பாண்டவர்களும் குற்றவுனர்ச்சி கொள்ளும்படியாக போர்க்களத்திலேயே சாகாமல் கிடப்பதைப்பார்க்கும்போது அதுதான் தோன்றுகிறது. அவருக்கு என்ன வேண்டும்? எள்ளும் நீரும் அல்ல. எள்ளால் ஆன மலை. அது அவருக்குக் கிடைத்துவிட்டது. இத்தனை பக்கங்களுக்கு நாவலின் இந்த பார்வையின் ஒருமை நீண்டு வந்திருப்பதை நினைத்தால் ஆச்சரியமாகவே உள்ளது

சுப்ரமணியம்,.

வசையின் நஞ்சு


ஜெ

வென்முரசில் ஏளனம் செய்யும் சூதர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். முதற்கனலில் இருந்து வருகிறார்கள். முதற்கனலில் தோன்றும் அந்த முதல் சூதரின் வாரிசு கடைசியிலும் வந்து நிற்கிறார்


யுதிஷ்டிரர் புன்னகைத்து “திறன்மிக்க சொல்லாளர். தென்னகத்து வேடர்கள் அம்புகளில் நஞ்சுபூசும் கலை தேர்ந்தவர்கள் என்பார்கள். வேட்டைவிலங்கு மயங்கிவிழவேண்டும், ஆனால் அதன் ஊனில் நஞ்சு ஏறிவிடக்கூடாது. அந்த அளவு அவர்களுக்கு மட்டுமே தெரியும். இவர் சொல்நஞ்சுக் கலைதேர்ந்தவர்” என்றார்.

என்று வரும் இடம் அவர்களின் கதைக்கலை எவ்வளவு கூர்மையானது என்பதைக் காட்டுகிறது. அவர் இந்த வசைச்சூதர்கள் ஒருவகையில் அக்காலகட்டத்தின் மனசாட்சி. இந்தக்காலகட்டத்திலிருந்து அங்கே செல்லும் விமர்சனக்குரல். அவர்கள் பூடகமாகவே நகைச்சுவை சொல்கிறார்கள். யோசித்தால் மெல்லிய புன்னகை வரும், அவ்வளவுதான். அந்த நஞ்சுதான் ஆழமானது. அதைத்தான் யுதிஷ்டிரர் சொல்கிறார்

சேது

பீஷ்மரும் காமமும்


ஜெ


போர் சாவு என்று கடைசி அத்தியாயங்கள் வேகமாகச் சென்றமையால் சில சூட்சுமமான விஷயங்களைக் கவனிக்காமல் சென்றுவிட்டேன். பொறுமையாக கடைசி பத்து அத்தியாயங்களை வாசித்தேன்


“குருகுலத்து மன்னர்கள் அனைவரும் காமத்தால் அலைக்கழிக்கப்பட்டவர்கள் என்பார்கள். யயாதியிலிருந்து இன்றுவரை அதுவே நிகழ்கிறது. இக்குலத்தில் இப்படி ஒருவர் பிறந்தமை விந்தைதான்” 

என்று யுதிஷ்டிரர் சொல்கிறார். அதற்கு  பீமன் “அவரும் காமத்தால் அலைக்கழிக்கப்பட்டவரே” என்றான். “மந்தா!” என்றார் யுதிஷ்டிரர். 

“எதிர்த்திசையில் அலைக்கழிக்கப்பட்டார்” என்றான் பீமன்.

இந்த இடம் என்னை பாதித்தது. நினைத்துக்கொண்டே இருந்தேன். காமத்தில் ஈடுபடுகிறவனைப்போலவே காமத்தை ஒடுக்குகிறவனும் அதனால் அலைக்கழிக்கப்படுகிரவன் அல்லவா? யோகமோ ஞானப்பயணமோ இல்லாமல் வெறுமே காமத்தை அடக்கிய பீஷ்மரின் மனம் எப்படிப்பட்டது?

அவர் அம்பையை ஏன் இழிவுசெய்தார்? ஏன் அவரால் திரௌபதியின் துக்கத்தை புரிந்துகொள்ளமுடியவில்லை? அதற்கான விடை இங்கே உள்ளது


டி.திருஞானசம்பந்தன்

Friday, December 7, 2018

வரிகள்எந்தத் தேக்கமும் அவ்வாறே முடிவிலாது நீடிக்க இயலாது. ஒழுக்கே புடவியின் இயல்பு. தேக்கம் என்பது ஒழுக்குக்காக ஒவ்வொரு அணுவும் தன் எல்லைகளை முட்டிக்கொண்டிருக்கும் நிலை மட்டுமே. எங்கேனும் ஏதேனும் ஒரு வாயில் உடைந்து திறந்தே ஆகவேண்டும்! - திசைதேர்வெள்ளத்தில் வந்த இந்த வரியை நான் தனியாகக்குறித்துவைத்துக்கொண்டேன்

இத்தகைய வரிகள் ஏன் இந்தவகையான நாவல்களில் வருகின்றன? டால்ஸ்டாய் டாஸ்டாயெவ்ஸ்கி நாவல்களில்தான் இந்த வரிகள். நீலகண்டப்பறவையைத்தேடி, அக்னிநதி நாவல்களிலும் இந்தவகையான வரிகள் உள்ளன. ஆனால் சுஜாதா நாவல்களிலோ ஹெமிங்வே நாவல்களிலோ இந்த வகையான வரிகள் இல்லை.

இந்தவரி இந்நாவலையே ஒட்டுமொத்தமாகச் சொல்வதுபோலவும் இருக்கிறது. இந்நாவலின் கதையோட்டத்திற்கு வெளியிலும் உள்ளது


கார்த்திக்ராஜ்

அன்புள்ள கார்த்திக்ராஜ்

கிளாஸிக்கின் குணம் பற்றி இந்தத்தளத்தில் எழுதப்பட்ட இரு கட்டுரைகளிலும் இவ்விளக்கம் உள்ளது. அதன் ஒட்டுமொத்தம் அதன் ஒவ்வொரு துளியிலும் இருக்கும். அதில் ‘யதார்த்தமான’ உரையாடல்கள் பெரும்பாலும் இருக்காது. ஆனால் நவீனத்துவப் படைப்புகள், பொழுதுபோக்குப்படைப்புகளில் இந்த அம்சம் இருக்காது

ஜெ

தந்தையைக் கொல்லுதல்அன்புள்ள ஜெயமோகன் சார்,

"திசைதேர்வெள்ளம்" திடீர் என முடிந்ததுபோல் மனம் எண்ணினாலும் ஒருவாறு மனம் அதை எதிர்பார்த்திருந்தது.பீஷ்மரின் முடிவைநோக்கி மூன்று அதிகாரம் பீஷ்மரின் படுகளத்திற்கு பின் மூன்று அதிகாரம் என ஒரு உச்சகட்ட நிறைவுகாட்சியுடன் முடிந்ததுபோல் உள்ளது.

சுபாகு மைந்தர் அற்ற மரணத்தை நோக்கியிருக்கும் ஒருவனின் உடல் முன் தனது மைந்தனை நினைத்து கவலை கொள்கிறான்.அவனுக்கு அன்னமும் தண்ணீரும் அளிக்கும்படி அர்ஜுனிடம் கூறுகிறான். சுபாகுவின் மனம் முழுவதும் மைந்தர் அற்ற பீஷ்மர் என்ற எண்ணமும் அதனாலேயே தனது மைந்தன் என்ற எண்ணமும் வந்திருக்கலாம்.

தந்தையை கொடூரமாக வேட்டையாடாவிட்டால் நாம் நம்மையும் அவரையும் கடந்து சென்று இவ்வுலகத்தில் அடைவதற்கு எதுவும் இல்லைதான். 

ஸ்டீபன் ராஜ் குலசேகரன்

வாழ்தல்
ஜெ


அப்படியென்றால் அவன் வாழ்ந்திருக்கிரானா இறந்திருக்கிரானா? அந்தப்போரில் அவன் அப்படி செத்திருக்காவிட்டால் அவனுடைய வாழ்க்கைக்கு ஏதாவது அர்த்தமிருந்திருக்குமா? அது ஒரு தவம்தானே? அந்த நிலைக்கு அவன் உணரும் அச்சொற்கள் கண்டடைதலும் திகழ்தலும் கடந்துசெல்லலும் ஒரே நேரத்தில் நிகழும் கணங்கள். பெருகி எழுந்து ஒரு கணத்தில் நுழைந்து மேலும் பெருகி அதைவிட்டு வெளியேறிக்கொண்டிருந்தான்.  தியானத்துக்கும் யோகத்துக்கும் சொல்லப்படும் வர்ணனைகளாக இருந்தன.  அதாவது அவன் ஒரு ஊழ்கநிலையில்தான் இருந்து செத்திருக்கிறான். அது அத்வைதநிலையாக இருந்திருக்கிறது. அவனும் புரவிகளும் தேர்களும் பீஷ்மரும் ஒன்றேயாக இருந்திருக்கிறார்கள். ஜெ, இதை பல இசைக்கலைஞர்கள், பல விளையாட்டுவீரர்கள் சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் செயலாற்றும்போது அவர்கள் இல்லாமலாகிவிட்டிருப்பதைப்பற்றி. அந்தப்பகுதியே ஆழமானது

எஸ்.நாகராஜ்

எட்டு நிலைகள்

https://www.hayagriva.org.au/wheel-of-life/death-process/


அன்புள்ள ஜெ

பௌத்த கொள்கையில் ஒருவர் சாகும்போது எட்டு நிலைகளாக உயிர் விலகிச் செல்கிறது. முதலில் மண் பிரிந்துசெல்கிறது. அதன்பின் நீர் பிரிந்து செல்கிறது. அதன்பின்னர் தீயும் அதன்பின்னர் காற்றும் பிரிகிறது. அதன்பின்னர் நான்கு நுண்மையான நிலைகள் உள்ளன. ஆகாயம் எண்ணம் ஆழ்நிலை போன்றவை விலகிச்செல்வது. அதைத்தான் எட்டு வசுக்களும் விட்டுவிலகிச்செல்வது குறிக்கிறதா?

பீஷ்மரை விட்டு விலகிச்செல்லும் வசுக்களின் பெயர்களின் அர்த்தம்தான் எட்டு தலைப்புகளாக அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றாக பார்த்தபோது எப்படி அதைக் கோர்த்து அமைத்திருக்கிறீர்கள் என்று புரிந்தது. பிரமிப்பாக இருந்தது

மகேஷ்

அஸ்திரங்களின் கதை
அன்புள்ள ஜெ

இந்தப்போரில் இதுவரை பெரிய அஸ்திரங்கள் எவையும் பயன்படுத்தப்படவில்லை. பிரம்மாஸ்திரம் நாகாஸ்திரம் உட்பட பல அஸ்திரங்களை பலர் பெற்றிருக்கிறார்கள். இதுவரை வந்தபோர் ரியலிஸ்டிக்காக இருந்தமையால் போர் மிக நேரடியாகச் சொல்லப்பட்டது. ஆகவே அஸ்திரங்களின் கதைகளெல்லாம் சொல்லப்படவில்லை. அந்தக்கதைகளை நீங்கள் இனிமேல் சொல்வீர்கள் என நினைக்கிறேன்
மகாதேவன்

அன்புள்ள மகாதேவன்

உண்மை, நான் எண்ணிவைத்திருக்கும் தோராயமான கதை இதுவே
வரவர வாசகர்களே எழுதிக்கொள்ள ஆரம்பித்துவிட்டீர்கள்

ஜெ

Thursday, December 6, 2018

தெய்வகணங்கள்தெய்வ கணங்களனைத்துமே எதிர்பாராதவை. எதிர்பாராத கணங்கள் அனைத்துமே தெய்வங்களால் அமைக்கப்படுபவை- என்றவரியை அப்படியே திசைதேர்வெள்ளத்தின் சுருக்கம் என்று சொல்லிவிடலாம். இந்நாவலில் உள்ளவை எல்லாமே தற்செயல்கள். ஒருவர் ஒருவரை எப்படி சந்திக்கிறார், எப்படி களத்தில்பொருதிக்கொள்கிறார் என்பதற்கு இந்த உலகம்சார்ந்த லாஜிக்கே கிடையாது. ஆனால் நுட்பமாகப்பார்த்தால் அவை தெய்வங்கள். அதைத்தான் சஞ்சயன் கண்களால் பார்க்கிறான். அங்கே என்ன நடக்கிறது என்று. அங்கே நடப்பவை எல்லாமே தெய்வங்களின் விளையாட்டு என்பது. எதிர்பாராத கணங்கள் எல்லாமே மனிதனால் அறியமுடியாத தெய்வங்களின் ஆடலில் இருந்து வாழ்க்கைக்குள் வருபவை. தெய்வங்கள் செயபவற்றை முழுமையாக மனிதனால் அறியவும் முடியவில்லை. குருஷேதிரப்போரை வாழ்க்கையின் குறியீட்டுச்சித்திரமாக ஆக்கிவிட்டது வெண்முரசு

எஸ்.மாதவன்

எட்டு


அன்புள்ள ஜெ


நலம்தானே?

வெண்முரசு திசைதேர்வெள்ளத்தை மிகுந்த உத்வேகத்துடன் வாசித்தேன் திசைதிருப்பங்கள் இல்லாமல் ஒரே வீச்சாக அம்புபோலச் சென்றது கதை. எட்டு வசுக்களும் விலகிச்செல்வார்கள் என்பதுதான் கதை என்பதனால் ஒரு வடிவம் மனதில் வந்தது. அந்த வசுக்கள் எப்படி எதன்பொருட்டு விலகிச்செல்வார்கள் என்ற சஸ்பென்ஸ்தான் அவ்வளவு ஆர்வமாக வாசிக்கச் செய்தது ஏனென்றால் இத்தகைய கதைகளில் எல்லாமே நமக்கு முன்னடியே தெரிந்திருக்கின்றன. இந்தக்கதைகளை நாம் மீண்டும் வாசிக்கும்போது எதிர்பார்க்கவும் காத்திருக்கவும் நமக்கு கொஞ்சம் தேவைப்படுகிறது. அதை இங்கே நம்மால் எடுத்துக்கொள்ள முடிகிறது. நாவல் முடிந்தபோதுதான் எட்டுவசுக்கள் என்ற எட்டு நிலைகளும் நாவலுக்கு ஒரு தத்துவார்த்தமான கட்டமைப்பை அளிப்பதை நான் புரிந்துகொண்டேன். எட்டு தெய்வங்கள். அவை கங்கர்கலின் எட்டு தெய்வங்கள். அவை விலகிச்சென்றபின்னர்தான் காங்கேயனாகிய பீஷ்மர் கொல்லப்படுகிறார்.

நா.மாரப்பன்

பழி


ஜெ

அம்பை தன் பழியை முடித்துவிட்டாள். கண்ணீருடன் பீஷ்மரின் காலடியில் அமர்ந்திருக்கிறாள். ஆனால் அவளிடம் தொடங்கிய அந்தப்பழி வளர்ந்துகொண்டே செல்கிறது. முடிவில்லாமல் வளர்கிறது. இனிமேல்தான் மிகப்பெரிய அழிவை உருவாக்கப்போகிறது. அதைத் தடுக்க அம்பையாலும் முடியாது. அவள் கண்ணீர்விடுவது அந்த உண்மையை உணர்ந்ததனால் என நினைக்கிறேன்

அம்பையிலிருந்து அந்தப்பழி திரௌபதிக்கு வந்திருக்கிறது. அங்கிருந்து மீண்டும் அந்தப்பழி வளர்ந்து செல்கிறது. அந்தப்பழிக்கு முடிவே கிடையாது. பழி தொடங்குவது மனிதரிடம்., முடிவது விதியிடம்

செந்தில்குமார்

குருவும் மாணவனும்அன்புள்ள ஜெ

பீஷ்மரின் இறப்பின்போது கிருஷ்ணன் பேசும் காட்சி எரிச்சலை உருவாக்கியது. பல இடங்களில் நாம் உணர்ச்சிகரமாக இருக்கும்போது கிருஷ்ணன் அதையெல்லாம் கடந்து நின்றுகொண்டு பேசும்போது அது இரக்கமற்றதாகத் தோன்றுகிறது. அதிலும் சுபாகுவின் தூதின்போது மனம் கலங்கி கண்ணீர்விடும் அர்ஜுனனிடம் கிருஷ்ணன் பேசும் இடமெல்லாம் குரூரமானது

நான் என் அப்பாவிடம் ஃபோனில் பேசினேன். அப்போது அவர் அது குருவின் பேச்சு. ஞானத்தை மாணவனுக்கு அளிக்கும் குரு அப்படி இரக்கமில்லாமல்தான் இருப்பார் என்றார். கசப்பு மருந்தை குழந்தைக்கு அளிப்பதுபோலத்தான் அது என்றார். நீ ஆணவம் கொண்டாயல்லவா, நீ சின்னஞ்சிறு மனிதன் என்று போய் நின்று ஞானத்தை வாங்கு என்றுதான் பீஷ்மர் முன் அர்ஜுனனை கிருஷ்ணன் அனுப்பி வைக்கிறார்

கிருஷ்ணன் சாரதி

Wednesday, December 5, 2018

திசைதேர்வெள்ளம்
அன்புள்ள ஜெ

வெண்முரசில் பல நூறு முறைநிறைவடைக’, ‘விண்புகுகஎன்ற சொற்கள் வந்துள்ளன. நம் மரபில் இன்றுவரை குறிப்பிட்ட பொருளில் புழங்கிவருபவை இவை. திசைதேர்வெள்ளம் இறுதிப்பகுதி படிக்கும்வரை அவற்றின் மொத்த import எனக்கு உறைக்கவில்லை. உங்கள் வேறு சில பதிவுகளுடன் சேர்த்து படித்தபோது சில விஷயங்கள் திறந்துகொண்டன. (அவை தவறாக இருக்கலாம், மீதமுள்ள வெண்முரசிலோ அல்லது வாழ்க்கையிலோ உணரலாம்).

அம்பை ஏன் அழுகிறாள்தன் மகனை வைத்து தன் காதலனை வீழ்த்தியதாலா? இல்லை அதனாலும் நிறைவடையாத தன் கையறு நிலையை வைத்தா? அவளுக்கு ஆறுதல் சொல்பவள் விண்ணிலிருந்து மண்ணில் விழுந்த கங்கை. பெண்மை எனும் தத்துவத்தின் அர்த்தமே நிறைவடையாமை தானா? அதன் மேல் பரிதாபமும் பெரும் மரியாதையும் பயமும் ஒரே நேரத்தில் வருகிறதுஏனென்றால் அதுவே இதையெல்லாம் உருவாக்குகிறது.

சிகண்டி வடிவிலிருந்த எமனுக்கு அறம் என்ற சொல்லே விடையாக கிடைத்ததுஅது கிருஷ்ணன் அவனுக்கு அளித்த விளக்கம். நிஜ சிகண்டி இங்கிருந்து எப்படி நகர்கிறார் என்று பார்க்கவேண்டும்

பீஷ்மர் ஒன்றை ஒன்று சமன் செய்யும் வாழ்க்கைப்படுக்கையை அவதானித்துக்கொண்டிருக்கிறார். அதை அவருக்கு அளித்தது தமிழ் நிலத்து மருத்துவம் என்பது அழகான இணைப்பு. தைத்ததும் பிழைத்ததும் என்று ஒவ்வொரு அம்புக்கும் ஒருஆனால்சொல்லி முடிக்கும்போது தன் வாழ்க்கையை புரிந்துகொண்டு நிறைவடைவார் போலும்

துண்டிகன் அற்புதமான சிறு பாத்திரம். அவனும் விசோகனும் தேர்ப்பாகன் என்பதன் நிறைவடிவத்தை அடைகிறார்கள். இப்படி ஒவ்வொரு பாத்திரத்தையும் அவர்கள் குணாதிசயங்களையும் உருவகமாக பார்த்துக்கொண்டே செல்லலாம் என்பதே வெண்முரசின் தீராத இன்பம்.

பொருண்மை நிலையிலும் சூட்சும வடிவிலும் உக்கிரமான போர் நிகழ்ந்துகொண்டே இருக்கிறதுசஞ்சயன் போல அதை அவதானிப்பவர்கள் பெருக்கிகொண்டே இருக்கிறார்கள். அந்த பெருக்கினுள் லக்ஷ்ம்ணன் பார்பாரிகனை வாழவைப்பது போன்ற சிறு செயல்கள் கவனிக்கப்படாமல் நடக்கின்றன.

எனக்கு இந்தக்கதையின் இரண்டாம் நாயகன் லக்ஷ்மணன் தான். அவன் தந்தையை போல அவனும் magnificence, magnanimity இரண்டும் ஒரே வேர்கொண்டவை என்கிறான்.

அன்புடன்
மது