Thursday, March 31, 2016

பெண்ணின் கரவு (பன்னிரு படைக்களம் - 5)      சிறுவர்கள் மற்றவர் பொருளை ஒளித்து வைத்து விளையாடுவது வழக்கம். ஒளித்துவைக்கப்பட்டபொருள் அப்படி ஒளித்துவைக்கப்பட்டதாலேயே அது முக்கியமானதாகிவிடும். அதை எப்படியாவது  கண்டு பிடித்துவிட மற்றவர் முயல்வர்.  அந்த விளையாடலை பெண்கள் வளர்ந்த பின்னரும் விளையாடிக்கொண்டிருக்கின்றனர். வளர்ந்த பெண்கள் இனி பொருட்களை ஒளித்துவைத்து விளையாடுவது இல்லை. அவர்கள் தன் உள்ளத்தை ஒளித்துவைத்து விளையாடுகிறார்கள். ஆண்களும் தம் உள்ளத்தை மறைக்கிறார்கள். ஆனால் அது பெரும்பாலும் அயலார்களிடம். நெருங்கிய உறவினரிடம்  நட்பினிடம், காதலியிடம் அவர்கள் தம் உள்ளத்தை மறைப்பதில்லை. அப்படி மறைக்க முயன்றாலும் பரிதாபமாக தோற்றுவிடுவார்கள். ஆனால் ஒரு பெண் ஒன்றை மறைக்க வேண்டும் என நினைத்தால் முற்றிலுமாக மறைத்துக்கொள்கிறாள். அவள் அப்படி தன் எண்ணங்களை கரவு கொள்வதற்கு காரணங்கள்கூட தேவைப்படுவதில்லை.


   அவள் பலசமயம் தனக்கு இதில் விருப்பம் என்ற எண்ணத்தைக் கூட மறைத்துக்கொள்வாள்.  அவள் குழந்தை முகமும் மென்மையான உடலும் நயமான பேச்சும் அவள் எண்ணங்களை முற்றிலுமாக நம்மிடமிருந்து மறைத்துவிடுகின்றன. முக்கியமாக அவள் தன் அறியாமையை என்றும் வெளிக்காட்டிக்கொள்வதில்லை.  ஒன்றை அறியாத போது அதை தனக்கு பிடித்தமில்லாதது என தெரிவிக்கிறாள். ஒன்றின்மேலான வெறுப்பை பயமென காட்டிக்கொள்வாள். அருவருப்பை வெறுப்பு என காட்டுவாள். நன்கு தெரிந்த ஒன்றை  தெரியாது என நடிப்பாள்.


  எவ்வளவு நெருங்கிப் பழகிய காதலினடமும் அவள் தன்  முழுக் காதலை திறந்து காட்டுவதில்லை. அப்படியே முழுமையாக காதலிப்பதாக சொல்லும் காதலியிடம் ஒரு விலகல் மிச்சமிருப்பதை காதலன் அறிந்து திகைத்து நிற்பான்.  எப்போதும் காதலனுக்கு மெலிதாக ஒரு ஐயம் இருக்கும்படி நடந்துகொள்வாள். ஒருவரிடம் தான் காதல்கொண்டிருப்பதைப்பொல் ஒரு உடல் மொழியிலும் மற்றொரு  உடல்மொழியில் அவனை அவள் அலட்சியம் செய்வதாகவும் காட்டி அவனை குழம்பவைப்பாள். அவள் உள்ளத்தில்  என்னதான் மறைந்திருக்கிறது என ஆண் தவித்துப்போவான்.  


   காமத்தில் ஒரு பெண் கொள்ளும் கரவு போல ஆணைக் குழப்புவது எதுவும் இல்லை. அவள் காம நுகர்வுக்கான மன நிலையில் இருக்கிறாளா என்பதை ஒருபோது முழுமையாக வெளிப்படுத்துவதில்லை. ஆண் அருகில் செல்லும் போது விருப்பில்லாததுபோல் விலகுவதும்,  விலகிச் செல்லும் போது சீண்டி அழைப்பதும்  என ஒரு கண்ணாமூச்சி ஆட்டம். அவள் அந்த நுகர்வில் நிறைவுற்றாளா, இல்லையா, அப்படி காட்டிக்கொள்கிறாளா என எதையும் ஒரு ஆண்மகன் அறிய முடிவதில்லை. இயற்கையாகவே ஆண் இதில் ஒரு பெண்ணிடம் எதையும் ஒளித்துவைக்க முடியாது. தன் துணைவன்  வேறொரு பெண்ணை காண்பதில் இருக்கும் காமத்தை ஒரு பெண் எளிதில் அறிந்துகொள்கிறாள்.  வெகுசில பெண்கள் வெளியுறவில் ஈடுபடுவதை,  யார்சொல்லியோ அல்லது நேருக்கு நேராக பார்த்தாலன்றி, அவர்கள் நடத்தையிலிருந்து அந்த கணவன்களால் கண்டுபிடிக்கவே முடிவதில்லை.


  உறவுகளிடம் தான் கொண்டிருக்கும் கோபத்தை வஞ்சத்தை, வெளியில் காட்டிக்கொள்ளாமல் இருக்கும் திறன் பெண்களுக்கிருப்பதைப்போல் எவருக்கும் இல்லை. சிறு விஷயங்களுக்கான் பகைகளைக்கூட பொறுத்திருந்து வஞ்சம் தீர்ப்பதில் அவர்கள் வல்லவர்கள். மாறாக ஒரு ஆண் தான் கொண்டிருக்கும் சிறு பகைளை மறைப்பதில்லை. அப்போதே வெகுண்டெழுந்து தன் கோபத்தை வெளிக்காட்டிக்கொள்வான்.


   ஒரு ஆண் தன்னை வலிமையனவனாக காட்டிக்கொள்வான். ஆனால் அவன் மனம் சீக்கிரம் தடுமாறும். மாறாக பெண் தன் மனத் திண்மையை வெளிக்காட்டிக்கொள்வதில்லை. அது அவள் சிக்கலான தருணங்களில் இருக்கையில் வெளிப்படும் போது நாம் பிரமித்து நிற்போம்.  இத்தகைய துணிவு, உறுதி, அச்சமின்மை,  போராடும் உத்வேகம் அவள் பெற்றிருப்பதை நாம் அறிந்திருப்பது இல்லை.  துணையிழந்த ஆண்தான் துவண்டுவிடுகிறான். ஆனால் ஒரு பெண் அந்தக் குடும்பத்தை தூக்கி நிறுத்துகிறாள். ஆண் இல்லாத குறையை அக்குடும்பம் உணராவண்ணம் போராடி வெல்லும் பல பெண்களை பார்த்திருக்கிறோம். ஆனால் சிறு  கரப்பான் பூச்சிக்கு பயப்படுவதாக வெளிக்காட்டி தன் மனத்திண்மையை தன் பூவுடலுக்குள் ஒளித்து வைத்திருக்கிறாள். 


  இப்படி தன் விருப்பை வெறுப்பை, அறிவை, அறியாமையை, காதலை, காமத்தை, மனத்திண்மையை வெளிக்காட்டாது இருப்பதால் அவள ஒரு மர்மமானவளாக ஆண்களின் கண்களுக்கு தெரிகிறாள். அவ்வப்போது மின்னலென வெளிப்படும் அவள் கரவுகொண்டிருக்கும் குணங்கள் ஒரு ஆணை அச்சத்திற்கு உள்ளாக்குகிறது. அந்த அச்சம் ரம்பனின் உள்ளத்தில் எழுகிறது. அதுவும் முழுமை என்பது பூவுலகில் இல்லாத ஒன்று. அவளின்   முழுதளித்தல் என்பது அவனுக்கு கடும் ஐயத்தை கிளப்புகிறது, அவள் உண்மையில் கரவு கொண்டிருப்பது  எதுவென அறிய துடிக்கிறான்.  அந்தக் கரவுகொண்டிருந்த உண்மை மகிஷி என எழுந்து அவனை அழிக்கிறது. 


   பெண்ணில் ஒளிந்திருந்து எழும் இந்த பேராற்றலை உணர்ந்த நம் பெரியவர்கள் போர்க்கடவுளை, மனிதர்களை காவு வாங்கும் பெருநோய்களுக்கான இறையுருவை, தவறுகளுக்கு தண்டிக்கும் ஊர்தெய்வத்தை பெண்வடிவில் உருவாக்கி வழிபடுகிறார்கள். உண்மையில் யோசித்துப் பார்த்தால் பெண்தானே உலகின் உண்மைத் தேவை அவளே கருக்கொண்டு உயிர்களை படைப்பிக்கிறாள். உயிர்களுக்கு உணவளித்து ஊட்டி வளர்க்கிறாள். ஆண் அந்த வேலைக்கு உதவும் ஒரு சிறு உதவியாளன் மட்டும் என்று தோன்றுகிறது. ஆனால் அவனோ ஒரு எஜமானன்போல் நடந்துகொள்கிறான்.   இந்த உண்மையை அறிந்திருக்கும் பெண் ஒரு புன்னகையுடன் இந்த உண்மையை தனக்குள் ஒளித்துவைத்துக்கொள்கிறாள். அவனின் பணிப்பெண்போல் தன்னைக் காட்டிக்கொள்கிறாள். இராணித்தேனிக்காக உணவு சேகரித்துக்கொடுக்க. பாதுகாப்புக்கு தன் உயிர் கொடுத்து போரிட என்றே படைக்கப்பட்டுள்ள வெறும் வேலைக்காரத் தேனீக்கள் அல்லவா ஆண்கள். 

தண்டபாணி துரைவேல்

காளியின் களம்ஜெயமோகன் அவர்களுக்கு,

பன்னிரு படைக்களம் திரௌபதி துகிலுரிதலைப்பற்றிய கதை. அதை காளியிலிருந்து தொடங்கியிருப்பதை க்கண்டு மகிழ்கிறேன். நீங்கள் உங்கள் நாவல்களை எத்தனை நுணுக்கமாக அமைக்கிறீர்கள் என்பதையே இது காட்டுகிறது

மகிஷாசுரனும் ரக்தபீஜனும் பிறக்கிறார்கள். ஆனால் அந்த அசுரர்களை எல்லாம் உளவியல் சார்ந்து காட்டுகிறீர்கள். அதுதான் புதுமை. ரம்பகரம்பர்களின் மனநிலை ஸ்கிஸோபிர்னியாவாக உள்ளது

ஜெயராமன்

ராசிக்களம்ஜெ

வெண்முரசின் புதியநாவலான பன்னிருபடைகக்ளம் முற்றிலும் புதியமொழியில் புதியவடிவில் உள்ளது

சோதிடத்தின் 12 ராசி சக்கரங்களின் அடிப்படையில் இந்நவலின் அடித்தளம் அமைந்துள்ளது என நினைக்கிறேன்

முதல்பகுதியிலேயே பன்னிரு ராசிகளும் அதற்குரிய குறியீடுகளும் அதற்குரிய வண்ணங்களும் சொல்லப்பட்டு ஒரு ப்ளூபிரின்ட் வந்துவிட்டது

இப்போது சித்திரை. மேஷராசி. சித்தப்பிரமை இதன் விஷயமாக உள்ளது. அற்புதமான செறிவு

வாழ்த்துக்கள்

சுவாமி

பெறுதல் என்னும் பேரனுபவம்:இன்றைய பன்னிரு படைக்களத்தின் அத்தியாயம் மொழியின் அசுர பாய்ச்சல் என்பேன். குறிப்பாக மகிஷி தன் மூன்று புதல்வர்களையும் பெற்றெடுக்கும் இடம். அதற்கு முன் அவள் உணரும் கனவுகள், அவள் கொள்ளும் பயணம் பற்றிய விவரணம் ஜெ வின் கற்பனையும், மொழியும் போட்டி போட்டு வென்ற இடம். 

 "இருளலைகளின் பெருக்குக்கு மேல் எழுந்த குருதியொளியை இடியோசையுடன் கண்டாள். ஆயிரம் சுருள்கொண்ட கன்னங்கரிய நாகமென அவள் சுருண்டு கிடப்பதாகவும் அச்சுருள்களுக்குள் இருந்து மூன்று மரங்கள் முளைத்தெழுவதாகவும் உணர்ந்தாள். " என்று துவங்கி "சூடான குருதி அவள் உடலில் இருந்து வழிந்தது. அது தன்னுடலில் இருந்து எழுவதென உணர்ந்ததும் வாள் போழ்ந்த வலியை அறிந்தாள்." என்று முடியும் இடம் கருப்பையில் இருந்து காலிடைக்குழி வழியாக வெளிப்படும் ஒரு குழந்தை கொள்ளும் பயணத்தைப் பற்றிய அபாரமான கற்பனை. சுகப்பிரசவம் அனுபவமாகிய நமது வாசகிகள் அவ்வனுபவத்தை மீண்டும் வாழ்ந்திருக்கக்கூடும்.

உண்மையில் அந்த பயணமும், அதில் பலி கொடுக்கப்பட்டு கிடக்கும் எருமைகளும் எனக்கு புறப்பாடு பகுதியில் வந்த காலரூபம் அத்தியாயத்தை நினைவூட்டியது. ஒரு வேளை அந்த எருமைப் பலியை கண்டுகொண்ட மூதாதை இப்பயணத்தைத் தான் உருவகித்திருப்பாளோ?


அருணாச்சலம் மகராஜன்

Wednesday, March 30, 2016

மகிஷன்
ரம்பன் கரியவன், விழியற்றவன், வெல்பவன்

குரம்பன் வெண்ணிற, வலிமையற்ற உடல் கொண்டவன்

ரம்பனுக்கு மகிஷன் பிறப்பதாக புராணம் கூறுகிறது. மகிஷன் அறமில்லாததைச் செய்தான். எனவே, கொற்றவையான துர்கை என்ற பெண் தெய்வத்தின் மூலமாக அவனுக்கு இறப்பு நிகிழ்ந்தது.

ஓரளவுக்கு மையக்கதையோடு பொருந்தி வருகிறது இக்கதை என்று நினைக்கிறேன். சட்டென்று மனதில் வந்தது. தவறாக கூட இருக்கலாம்.

அரசன்

பதில்Dear Jeyamohan

I always enjoy your humorous articles and satirical writings. Today you made me burst into laughter with your reply to one of the readers on Tamil tradition, "Adutha Avaniyul irundu" ! ☺☺
I was on a flight to Vancouver and I tried hard to control my laughter.  Very nice short reply. You deserve the title "Sollin Selvar".

Warm regards,
Sobana Iyengar

விழைவென்னும் ஊக்கசக்தி (பன்னிரு படைக்களம் -4)


  புத்தர் ஆசையே துன்பத்திற்கு காரணம். ஆசைகளற்றவனுக்கு துன்பமென் ஏதுமில்லை என்று கூறினார். மனிதன் ஆசைவயப் படுவதனால் மற்றவர்களுடன் போட்டி போடுகின்றான். பொறாமை கொள்கின்றான், அவன் ஆசை நிறைவேறாதபோது பெருங்கோபம் கொள்கிறான், அதன் காரணமாக மற்றவர்களுக்கு தீங்கிழைக்க துணிகிறான். உண்மையில்  பார்த்தால்  உலகின் அனைத்து அறமீறல்களுக்கும் தீய நடத்தைகளுக்கும் ஆசை ஒன்றே காரணம் என்றாகிறது.


     அப்படியென்றால் கடவுள் அல்லது இயற்கையால்  ஏன் உயிர்களுக்கு ஆசைவயப்படுதல் கொடுக்கப்பட்டுள்ளது. கற்பனை செய்து பார்ப்போம். கடவுள் உயிர்களைப் படைத்திருக்கிறார். அனைத்தும் சும்மா உட்கர்ந்திருக்கும். கடவுளே சென்று ஒவ்வொன்றுக்கும் உணவிட்டுக்கொண்டிருக்க வேண்டும். கடவுள் மேலும் மேலும் உயிர்களை உருவாக்கி உலகில் விடவேண்டியிருக்கும். அவரே அவற்றுக்கென உறைவிடங்களை உருவாக்கவும்,  அவற்றை மழை பனி வெய்யில் போன்றவற்றிலிருந்து காப்பாற்றவும் செய்ய வேண்டியிருக்கும்.  உயிர்களின் சேவகன் போல இடைவிடாத பணி இருந்துகொண்டே இருந்திருக்கும். சலித்துப்போன கடவுள் சிந்தித்து ஒரு வழி கண்டு பிடித்தார். அவர் அனைத்து உயிர்களுக்கும் உயிர் வாழ்வதற்கான  விழைவை அளித்தார். வாழும் இச்சை உயிர்கள் வாழ்வதற்கு உணவு தேட வைத்தது.  அந்த வாழும் இச்சை  உணவு தேடுவதற்காக  உணவாசையாக ஆனது. தாம் பாதுகாப்பாக இருப்பதற்கு இருப்பிடம் தேடவைத்தது. அப்படி உருவானதுதான்  மண்ணாசை.  எப்படியாயினும் தமக்கு இறப்பு உறுதி என்பதால் தன் இறப்பிற்கப்புறமும் தன் நினைவுவாழ இனப்பெருக்கம் செய்ய வேண்டியிருந்தது. அதனால் காமம் உருவானது. இந்த அடிப்படை ஆசைகள் காரணமாக பல்வேறு ஆசைகள் தோன்றிய வண்ணம் இருக்கின்றன. ஒன்று மூன்றாகி, மூன்று முப்பது முக்கோடி ஆசைகளாக உயிர்களிடம் பல்கிப்  பெருகி வளர்கிறது. இன்பம் என்பது ஆசைகளை பூர்த்தி செய்துகொள்வதே.  இன்பங்களை அடைவதற்காக தன் வல்லமையை உயிர்கள் பெருக்கிக்கொள்கின்றன. அவை பரிணாம வளர்ச்சியாக நிகழ்கிறது.   மனித உயிர்கள் தம் சிந்தனைத்திறன் காரணமாக ஆசைகளை பலமடங்கு  பெருக்கிக்கொண்டே போகிறன.   இன்பங்கள் தடையின்றி கிடைக்க பல்வேறு செயல்களில் ஈடுபடுகின்றன.   கோட்டைகள் கட்டப்படுகின்றன, கொண்டாட்டங்கள் நிகழ்கின்றன. அடிப்படை இச்சைகள் மேல் அலங்காரம் செய்து கலைகளாக ஆக்கப்படுகின்றன. உலகில் கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன. அதன் பொருட்டு அறிவியல் வளர்கிறது. அதனால் இன்னும் இன்னும் என ஆசைகள் பெருகி வளர்கின்றன. விண்ணைமுட்டும் கட்டிடங்கள், விண்ணில் செல்லும் வாகனங்கள், என  ஆக்கங்கள்  பலவும் ஆசையின் காரணமாகவே விளைகின்றன.


   ஒரு தனிப்பட்ட மனிதனின் வாழ்வும் உயர்வும் அவன் ஆசைகளின் காரணமாகவே ஏற்படுகிறது. மனிதன் தன் விழைவுகளை அகற்றிவிட்டால் வெறும் மண்ணென செயலற்று போகின்றான். அவன் ஏற்கெனவே பெற்ற வல்லமைகள் பொருளற்றுப்போகின்றன.  விழைவுகளற்றவினடமிருந்து வல்லமைகள் தேய்ந்து மறைகின்றன.  ஒருவன் தன் அடிப்படையான வாழ்விச்சையையும் விடும்போது அவன் உடலும் பொருளற்றுப்போய், அது  அழிவை நோக்கிப்போகிறது. ரம்பனும் குரம்பனும் தன் வாழ்விச்சைகளை தம் உளச்சிக்கல் காரணமாக இழந்துவிடுகிறார்கள். அதனால் அவர்கள் அழிவுப்பாதையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு வாழ்விச்சையை அளிக்க வேண்டும். வாழ்வதற்கு ஏதாவது காரணம் காட்டவேண்டும்.


“அரசரிடம் விழைவை மூட்டுக! செயலுக்கு அனல் விழைவே. அதன்பின் அருஞ்செயல் ஒன்றை அவருள் கூட்டுக! அதில் தன்னைச் செலுத்துகையில் அவர்கள் ஆற்றலுறுவர்.”
அவர்களுக்கு காம இன்பம் உணர்த்தப்படுகிறது.

காமம் அவர்கள்  ஐம்புலன்களையும் விழித்தெழச் செய்தது. ஏழுசக்கரங்களையும் உயிர்கொள்ளச்செய்தது. உண்டு பயின்று உடல்தேறினர். அணிசூடினர். கலையும் இசையும் கவியும் தேர்ந்தனர். மணமும் சுவையும் நாடினர். அவர்களின் மூச்சு வலுப்பெற்றது. சொல் கூர்மைகொண்டது. விழிகளில் நகைப்பு நின்றது.
 
      அதன் மூலம் அவர்கள் வாழ்விச்சையை  மீண்டும் அடைகிறார்கள். அந்த வாழ்விச்சை அவர்களுக்கு மற்ற ஆசைகளை உருவாக்கி அவர்களை ஊக்கம் பெறவைக்கும்.
    ஆனால் சித்தர்கள் ஞானிகள் இச்சைகளை துறந்தவர்கள் அல்லவா? அவர்கள் எப்படி மகிழ்வுடனும் ஊக்கத்துடனும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு இருப்பது அனைத்து விழைவுகளுக்கும் மேலான பெரு விழைவு. அந்த இறைவனிடமே ஒன்றிவிடும்  பெரிய இச்சை. வாழும் இச்சை,  இறை இச்சையென ஆகியவர்கள் அவர்கள். தன்னை அந்த பேரியற்கையுடன் கரைத்துக்கொள்ளும் பேராவல் அவர்களை இயக்குகிறது. அதன்மூலம் அவர்கள் அடைவது  ஆன்மீக பேரின்பம். புத்தன் மற்ற ஆசிகளை விடச்சொல்வது இந்தப் பெரும் இன்பத்தை அனுபவிக்க அவை தடிஅகளாக இருக்கின்றன என்பதற்காகவே.   சிறந்த இலக்கியங்கள் சில  அந்த பேரின்பத்தை நம்மைப்போன்ற சாதாரண மக்களுக்கு அறிமுகப்படுத்துகின்றன. அந்த பேரின்பத்தின் சிறுதுளிகளை நாம் சுவைக்கத் தருகின்றன. வெண்முரசு அத்தகைய நூல்வரிசையில் ஒரு முக்கிய இடத்தை இப்போதே பெற்றுத்திகழ்வதை யாரும் மறுக்க முடியாது.

தண்டபாணி துரைவேல்

வாழ்த்தப்பட்டவனும், காக்கப்பட்டவனும்:தெய்வங்களுக்கும் அரிதான ஈருயிர் ஓருடலாகும் விந்தையை வெற்றிகரமாக ரம்பகுரம்பன் நிகழ்த்தியமைக்கு முக்கியமான காரணம் அவர்கள் ஒருவரை ஒருவர் நிரப்பிக்கொண்டனர் என்பதே. விழியிழந்த ரம்பனுக்கு ஒளியாக குரம்பனின் பிறர் கேளாச்சொல் இருந்தது. குரம்பனின் பாதையில் ரம்பனின் கால்கள் நடந்தன. இதை வெண்முரசு “ஒளியென்பது  குரல் என ரம்பன் நம்பினான்.  காலென்பது ஓர் எண்ணம் என்று குரம்பன் நினைத்தான்.”, என்று சொல்கிறது. ஆணைகளை ரம்பனும், நூலாய்ந்து எடுக்கப்படவேண்டிய முடிவுகளைக் குரம்பனும் மொழிந்தனர். உணவை எடுத்து இருவருக்கும் ஊட்டியவனாக ரம்பனின் வலக்கை இருந்தது. மொத்த உடலின் இடப்பகுதியின் செயலாற்றும் கையாக குரம்பனின் இடக்கை இருந்தது. ரம்பனின் இடப்புறத்தில் அமைந்தவனாக குரம்பன் இருந்தான்.

உடல்கள் ஒன்றானாலும் உள்ளங்கள் ஒன்றானதா என்றால் இல்லை. இருவரின் உள்ளங்களும் தங்கள் தனித்தனி அடையாளத்திற்காக ஏங்கின. அடையாளம் என்பது அவரவர் ஆளுமைகளின்  தேவையால் உருவாவது தானே. இரு ஆளுமைகளும் இரு பெண்களைத் துணைக் கொண்டன. இரு உடலாக இருந்தாலும் செயலாற்றும் ஒருவன் என்ற வகையில் ரம்பனின் ஆளுமையே அவர்களிருவருக்கும் கிடைத்த அனைத்து பெருமைகளையும் (அர்ஹிதை) ஏற்றுக் கொண்டது. எனவே இயல்பாக அர்ஹிதையை ரம்பனின் ஆளுமையே காமம் கொண்டாடியது. என்றென்றும் ரம்பனால் பாதுகாக்கப்படுபவனாக, ரக்ஷிக்கப்படுபவனாக இருந்த குரம்பனின் ஆளுமை ரக்ஷிதையைக் கலந்தமைந்தது.

இந்த ஆளுமைகளுக்கு இடையேயான பிளவே அவை வெளிப்படையாகத் தெரிந்த வேள்வியின் போது நிகழ்கிறது. அவர்கள் பிரியும் முன் அவர்கள் இருவரும் அடையும் குழப்பங்கள் இன்னும் நுட்பமானவை – ரம்பனுக்கு உலகம் இருண்டு விடுகிறது, அதுவரை ஒளியாக இருந்துவந்த குரம்பனின் கேளாச் சொல் இப்போது கேட்கும் குரலாக சுருங்கிவிடுகிறது. குரம்பனின் உள்ளத்தெழுந்த நடத்தல் என்ற எண்ணம் ரம்பனின் கால்களை அடையாததால் செயலிழந்த உடலாக மாறிவிடுகிறது.

உள்ளத்தின் நிலையழிதல் ரம்பனின் உடலின் நிகர் நிலையையும் சிதைக்கிறது. தன் இடப்புறத்தில் இருந்த ஒரு பாதி இல்லாமையால் அவன் இடக்கை இயல்பாக அவன் இடத்தொடையைத் தடவிக் கொண்டே இருக்கிறது. அந்த இடத்தில் தான் குரம்பன் அமர்ந்திருந்தான். இருவரும் ஓருடலாக இருக்கையில் செய்த செயல்களில் பெரும்பகுதியை எண்ணி இயற்றியவன் என்ற வகையில் ரம்பனின் உள்ளம் இயல்பாகவே ‘நான்’ என்ற அடையாளமாக இரு உடல்களையும் எண்ணிக் கொண்டிருக்கிறது. இப்போது அதில் பாதி இல்லை என்பதால் நான், நான் என்று அரற்றிக் கொண்டிருக்கிறது.
குரம்பனைப் பொறுத்தவரை உடலில் எந்த மாற்றமும் இல்லை. அவன் உள்ளத்தால் என்றுமே ரம்பனை அண்டி இருந்தவன். ஆயினும் அவன் உள்ளம் உதிக்கும் எண்ணங்கள் அனைத்தையுமே ரம்பன் இயற்றவில்லை அல்லது ரம்பனின் உடலுக்கு எட்டவில்லை. அதனாலேயே அவன் உள்ளம் கொஞ்சம் கொஞ்சமாக ரம்பனை அன்னியமாகப் பார்க்கத் துவங்கியிருந்திருக்கிறது. அதன் வெளிப்பாடே ‘நீ’ என ரம்பனைப் பிரித்துப் பார்த்த அந்த சொல். அவன் உள்ளத்தின் கொந்தளிப்பை நிமித்திகர் சூரரின் கனவில் அவர் மைந்தனைத் திட்டுவதாக வரும் “நீ என் மகனே அல்ல. மகன் என்றால் நான் சொல்வன உனக்கு ஆணையென்றிருக்கும். நீ எனக்கு யாருமில்லை. நீ என் குருதியுமில்லை” என்ற சொற்கள் உணர்த்துகின்றன.

வலமிடமாக இணைந்தவர்கள்:

பிரிந்தவர்கள் மீண்டும் இணைகையில் குரம்பன் ரம்பனின் வலப்புறத்தில் வந்து அமைகிறான். ஏனென்றால் இந்த பிரிவில் மிக மிக வருந்தியவன் ரம்பனே. ஏனென்றால் அவன் உடலின் பாதியை இழந்ததாக உணர்கிறான். அந்த இழப்பே அவனை குரம்பனின் ஆளுமைத் தேவைக்காக விட்டுக் கொடுக்கச் செய்கிறது. இப்போது உணவுண்ணும் கரமும், இடப்பகுதியின் செயலாற்றும் கரமும் இடம் மாறுகின்றன. (இதை யாருமே கவனிக்கவில்லை என்பதில் இருந்து சாமானியர்கள் இயற்கையின் விதியிலிருந்து விலகியவற்றை எதிர்கொள்ளும் விதம், உதாசீனம் என்று விளங்கிக்கொள்ளலாம். இந்த விலகல் அவர்களுக்கு முதலில் அச்சத்தைத் தான் தருகிறது. பிறகு அந்த அச்சத்தை உதற அவர்கள் அதை உதாசீனப் படுத்துகிறார்கள். மிக இயல்பாக அதைக் கடந்து செல்கிறார்கள். அதன் மாற்றங்கள் அவர்களை வந்து அடைவதே இல்லை. அதைக் கடந்து செல்வது மட்டுமே ஒரே பணி.)

இணைந்த மகிழ்வின் உச்சங்களைக் கொண்டாடும் அவர்கள் சற்று சமநிலையடையும் போது அவர்களின் பிரிந்த ஆளுமைகள் மீண்டும் தலையெடுக்கின்றன. கேளாச்சொல்லாக தன் எண்ணங்களை ரம்பனால் செயல்படுத்திக் கொண்டிருந்த குரம்பனின் ஆளுமை ரம்பனின் வலக்காதில் கேட்கும் படியாக ‘நீ எனக்கு யாருமில்லை. நீ என் குருதியுமில்லை’ என்று உரைத்திருக்கும். அப்படி குரம்பனால் உரைக்க முடியும் என்பதை நம்ப இயலாததாலேயே அவன் மீண்டும் மீண்டும் வலதுகாதின் மேல் அடித்துக் கொண்டே இருக்கிறான்.

அச்சொல்லால் தூண்டப்பட்டே ரம்பன் குரம்பனை கொல்லத் துடிக்கிறான். இருப்பினும் செயலாற்றல் குன்றிய வலக்கையால் குரம்பனின் கழுத்தை உடனடியாக நெரிக்க இயலவில்லை. அதனாலேயே குரம்பன் தப்பிக்கிறான். எவலர்களிடம் ரம்பனைக் கொல்லும் படி குரம்பனே ஆணையிடுகிறான். ஏனென்றால் குறைபட்ட ஆளுமை அவனுடையது. குரம்பனைத் தன்னிடம் தரும்படி தான் ரம்பன் கேட்கிறான். இன்னும் நிறைவுடன் இருந்து புண்பட்ட ஆளுமை தானே அவனுடையது. வலக்கை எடுத்து உண்டதெல்லாம் குரம்பனின் வயிற்றுக்குத் தானே. ரம்பனுக்கு கொஞ்சமே சேர்ந்திருக்கும். எனவே தான் அவன் உணவை வேண்டாம் என்கிறான். மாறாக குரம்பனுக்கு பசி அதிகரித்துக் கொண்டே வருகிறது. இருவரும் மற்றவரின்றி முழுமையாக இயலாது என்பதை அறிந்திருக்கிறார்கள். மற்றவரை முழுமையாக ஏற்கவும் இயலாது என்பதையும் அறிந்திருக்கிறார்கள். அதனால் முடிவை நோக்கி பொறுமையிழந்து காத்திருக்கின்றனர்.

பொதுவாக நமது மூளையின் இடப்பகுதி உடலின் வலப்பகுதியையும், வலப்பகுதி இடப்பகுதியையும் கட்டுப்படுத்துகின்றது. இந்த இடமும் வலமும் மாறினால் என்ன ஆகும்? இயல்பாக சித்தமழிந்து இறப்பு தானே நிகழும். பன்னிருபடைக்களத்தின் துவக்கமே அட்டகாசம். ஜெ வின் கற்பனைத் திறன் ஆச்சரியமூட்டுகிறது. பின்னிவிட்டீர்கள் ஜெ.

அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்.

Tuesday, March 29, 2016

பிளவுநிலை


 
அன்புள்ள ஜெ

பன்னிருபகடை வேறு ஒரு மொழிநடையுடன் உள்ளது. சுருக்கமான அடர்த்தியான உளவியல் சித்திரிப்பு இருக்கிறது. வர்ணனைகள் இல்லை. காட்சிகள் சொல்லப்படுவதில்லை. உருவகமாக மனம் மட்டுமே சொல்லப்படுகிறது

எனக்கு schizophrenic நிலையின் சித்திரிப்பாகவே இந்த கதை படுகிறது. மிகக்கூர்மையான அவதானிப்புகள்

சண்முகம்

இருமுகம்

 
 
நேற்றைய பகுதியை வாசிக்கும் போது இரு விஷயங்கள் தோன்றியது..
நியாய சத்திரத்தில் பங்கு அந்த நியாயம் என்று ஒன்றுண்டு. புருஷ - பிரகிருதி தொடர்பை சொல்வதற்கு பயன்படுத்துவார்கள். சார்ந்திருத்தமையை பறைசாற்ற பயன்படுத்துவார்கள். பிணைப்பு கொண்ட உயிரும் உணர்வும் உள்ள பாத்திரங்களாக அற்புதமாக உருவாகிறார்கள் இக்கதையில். 


ஆதி சங்கரரின் அன்னை தந்தையர் கனவில் கடவுள் தோன்றி அற்பாயுளில் மரணிக்கும் ஞானவான் வேண்டுமா..நீளாயுள் கொண்ட சாமானியன் வேண்டுமா என கேட்பதாக ஒரு கதையுண்டு.  எனன் ஒரு human crisis. 
நூற்றுக்கு தொண்ணுற்றி ஒன்பது பேர் நீளாயுள் கொண்ட நூறு மூடர்களுக்கு தான் சரி என்று சொல்வார்கள் என எண்ணுகிறேன். 
சுனில்கிருஷ்ணன்

கிருஷ்ண தாண்டவம்

 
 
ஜெயமோகன் சார், 

இந்திர நீலம் வாசித்து வருகிறேன்.கம்சனை கொல்ல குலத்தாரிடம் உறுதி பூணும் இடம், இந்த அளவுக்கு heroic entry யை இதுவரை மட்டும் இனிமேலும் வாசிக்க போவதில்லை. தாறுமாறான இடம் , செம செம, இதுக்கு முந்திய பக்கங்களில் வந்த  பாமை ஆமை எல்லாம் அடியோடு மறந்து போச்சுது, இந்த பகுதியையே மட்டுமே நினைந்து சில நாள் ஒத்திப் போட்டு தொடர எண்ணுகிறேன். 
வெண்முரசு முழுக்க கிருஷ்ண தாண்டவம் ஒங்கட்டும் .
மேலும் வெண் முரசு வரவுக்கு பிறகு அதன் உச்சங்கள் பற்றி  உங்களிடம் பேசுவதோ, கடிதம் எழுதுவதோ ஆயாசமாக உள்ளது.  ஆசிரியரை தொடுதல், கட்டி பிடித்தல் , முத்தம் அல்லது தூரத்தில் இருந்து அவரின் உடல் மொழியை ரசித்தல் இது தான் என்னைப் போன்ற பாமர வாசகனுக்கு சரியானதாக இருக்கும்

அன்புடன்
தினேஷ் நல்லசிவம்

தமிழ்மரபு

Dear Sir,

I appreciate you for writing interesting novels in Tamil in an enticing style.

However, I do not understand why you chose to rewrite the North Indian story of Mahabharata in Tamil. Mahabharata heroes share one wife between the five of them. This runs counter to Tamil tradition. None of the heroes were born to their mothers' wedded father. This a shameful aspect according to Tamil tradition which values chastity above all virtues.

Please uphold good Tamil traditions.
 

R. Kit Kittappa

 

அன்புள்ள கிட்டப்பா

 

அடுத்த ஆவணியிலிருந்து முயற்சி செய்கிறேன்

 

நன்றி

ஜெ 

காளிDear Jeyamohan

Great start with an invocation to Kangali Mata and her entourage. I could hear the worshippers chanting in praise of Mataji, conches and drums beating. The next episode begins with her blessings under your literary prowess. After reading, I felt as though I have chanted and worshipped the "Devi". The best is the following:
ஐந்து ஆறுமுகம் கொண்ட அன்னை நீ.  நீ துர்க்கை. நீ லட்சுமி. நீ சரஸ்வதி. நீ  சாவித்ரி. நீ ராதை. இன்மையென்றிருந்து இருப்பென்றாகி இவையனைத்துமென இங்கெழுந்து  ஆறாகப்பிளந்து எழுந்த அலகிலி நீ. கங்கையே,  துளசியே, மானசையே, தேவசேனையே, மங்களசண்டிகையே, பூமியே! நீ அணுகருமை. நீ அப்பாலப்பாலப்பாலென்று அகலும் அண்மை.  அன்னையே, உடைந்து உடைந்து பெருகும் உருப்பெருவெளி நீ.
These words gave me an emotional surge that a deep meditation alone could give. Awesome.

 Pagadai followed by "Kalam (Por Kalam) = Pagadaikalam! Very apt title.
12 is a very unique and significant number not only in Mathematics but also in all major religions of the World. The title itself kindles one's anticipation of the upcoming incidents. The child in me is jumping with joy to read the rest. Thanks again for your tireless dedication and love for writing.

Warm regards
சோபனா அய்யங்கார்

இணைந்து வாழ்தல்: ( பன்னிரு படைக்களம் -3 )


         ஒரு தம்பதியர் இணைந்து வாழும்போது இருவரும் காலப்போக்கில் ஒரே மாதிரியாக சிந்திக்க ஆரம்பிக்கிறார்கள் எனச் சொல்ல முடியாது. குடும்ப பொருளாதாரத்தைப் பேணலில், உறவுகளை அனுசரித்துப் போதலில், குழந்தைக்கு உணவளித்து வளர்ப்பதில் அவர்களை படிக்க வைப்பதில், என பல காரியங்களில் ஒருவர் சிந்தனையைப்போல் ஒருவர் சிந்தனை அமைவதில்லை. ஆனாலும் இந்தியாவின்  பெரும்பான்மையான குடும்பங்கள் சிக்கலின்றி வெற்றிகரமாக நடந்துவருகின்றன. அது எப்படி என்று பார்த்தால் ஒவ்வொரு விஷயத்திற்கேற்ப சிந்திப்பதையும் அதில் முடிவெடுப்பதையும் யாராவது ஒருவர் பார்த்துக்கொள்வார். ஒரு விஷயத்தில் இருவரும் சேர்ந்து முடிவெடுப்பதுபோலிருந்தாலும் உண்மையில் ஒருவர்தான் முடிவெடுப்பதில் முக்கியப் பங்கு ஆற்றுவார். மற்றவர் ஏதாவது சில ஆலோசனைகளைச் சொல்வதுடன் நிறுத்திக்கொள்வார்.   நாட்பட நாட்பட இந்த நடைமுறையை தம்பதிகள் அவ்ர்கள் அறியாமலேயே மேற்கொள்ள ஆரம்பித்துவிடுவார்கள். அதை இருவர் மனமும் ஒரே மாதிரி சிந்திக்கிறது எனச் சொல்ல முடியாது. சிந்தித்து முடிவெடுக்க வேண்டிய விஷயங்களை இருவரும் பகிர்ந்துகொள்கிறார்கள். இது அவர்கள் தம் மனம் அறிந்தும் அறியாமலும் நடந்துகொள்கிறார்கள். எப்போதாவது ஒருவர் பிரிந்து பல நாட்கள் வெளியூர் செல்லும்போது சில விஷயங்களுக்காக முடிவெடுக்க வேண்டிவரும்போது அதைப்பற்றி எத்தகைய அறியாமையில் தாம் இருக்கிறோம் என்பதை மற்றொருவர் உணர்கிறார். அப்போதுதான் இதற்கான சிந்தனையை முன்னெடுத்து முடிவெடுத்து செய்லபடுத்தியதில் தான் அதிகம் பங்குகொள்ளவில்லை  என்பதை உணர்கிறார். ஆனால் இதில் ஒன்றும் தவறில்லை. இப்படி சிந்தனையை பகிர்ந்துகொள்வதால் வாழ்வு இருவருக்கும் இலகுவாகிறது. இருவரும் குடும்பத்திற்கென அதிகம் பயனளிக்கும்படி பங்காற்ற முடிகிறது.  தம்பதியர் மனங்கள் இப்படி ஒட்டி வாழ்தல் கூட்டாக அவர்களை மிகவும் திறனுடையவர்களாக ஆக்குகிறது.


   விதிவசத்தால் அவர்கள் ஒற்றையாளாக பிரிந்துவிட நேரிடும்போது(பெரும்பாலும் அது ஒருவர் இறப்பினால் இருக்கும்)  அவர்கள் தன் சிந்தனைத்திறனில் ஒரு பாதியை இழந்தவர்களாக கையறு நிலையை அடைகிறார்கள்.  அந்த இழப்பு குடும்ப பொறுப்புகள் அதிகம் இருக்கும்போது நேர்ந்தால்  குடும்பத்தை நடத்திக்கொண்டு செல்வது பாதிக்கப்படுகிறது. வயதான காலத்தில் பிரிவது குடும்பத்தை அதிகம் பாதிக்காது என்றாலும் தாம் உடலளவில் ஊனமுற்றதைப்போல் தவித்துப்போகிறார்கள்.


     இப்படி இருஉள்ளங்கள் இணைந்திருப்பதையும் பின்னர் அவை துண்டிக்கப்படுவதின் உளவியல் சிக்கல்களையும் உருப்பெருக்கி காட்டுகிறது ரம்பன் குரம்பன் கதை. அவர்கள் இணைந்தே வளர்கிறார்கள், இணைந்தே அறிகிறார்கள், இணைந்தே சிந்திக்கிறார்கள்,  இணைந்தே இவ்வுலகை உணர்கிறார்கள்.  அவர்கள் சிந்தனையில் முரண் என்பதே இல்லாத காரணத்தால் இருவரும் தம்மை ஒருவரெனக் கொண்டிருகின்றனர்.   ஆனால் அவர்கள் இணைந்து சிந்திக்கிறார்கள் என்பது இருவரும் ஒரே சிந்தனை கொண்டிருக்கிறார்கள் எனப் பொருளாகாது. ஒருவர்  சிந்திக்கும் ஒரு விஷயத்தை இன்னொருவர் மேற்கொண்டு சிந்திக்காமல் அதை அப்படியே ஏற்றுக்கொள்ளுதல் என எண்ணங்களை அவர்கள் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களை வலுக்கட்டாயமாக பிரித்துவிடும்போது ஒவ்வொருவரிடமும் எண்ணங்களில் வெற்றிடம் ஏற்படுகிறது. அதனால்  தன்னை குறையுள்ளவர்களாக உணர்கிறார்கள். தன்னை முழுமையாக்க இன்னொருவன் தேவைப்படுவதை அறிகிறார்கள். அவனின் சிந்தனையோட்டம் சேராமல் தன்னுடைய சிந்தனையோட்டம் முழுமை பெருவதில்லையாதலால் இருவரும் பிரிந்த பின்னர் பெரிய அளவில் உளச்சிக்கலுக்கு உள்ளாகிறார்கள்.  தன் வாழ்வில் மற்றொருவனின் இன்றியமையாமையை அறிவது,  முதலில்  மற்றொருவன்பால் நேசத்தையும், பின்னர் கடும் எரிச்சலையும் ஏற்படுத்துகிறது. அவர்களின் ஒருவரையொருவர் நேசித்துக்கொள்ளுதலும் விரோதித்துக்கொள்ளுமான  முரண்பட்ட இந்த நடவடிக்கைகளை  இவ்வாறு நாம் புரிந்துகொள்ள முயற்சிக்கலாம் என நினைக்கிறேன்.

தண்டபாணி துரைவேல்

Monday, March 28, 2016

எதைத் தேர்ந்தெடுப்பது. (பன்னிரு படைக்களம் - 2)  எதைத் தேர்ந்தெடுப்பது என்ற சிக்கலை எதிர்கொள்ளாத ஒரு நாளையாவது நாம் கண்டிருக்கிறோமா?  ஒரு செயலை செய்வதற்கு எத்தனை வாய்ப்புகள் உள்ளனவோ அந்த அளவுக்கு அதில் ஒன்றை தேர்ந்தெடுப்பதற்கான சிக்கல் அதிகரிக்கிறது.  எது எளிதானது, எது அதிக நன்மை தருவது,  எது  நீண்ட கால நன்மை பயப்பது, எது இப்போதைக்கு மிகத் தேவையானது, எதில் பிரச்சினைகள் குறைவாக வரும். எதில் அதிக இன்பம் வரும்,  எது அதிக வசதியை கொடுக்கும் எது அதிக நற்பெயரை உண்டாக்கும், எது அறத்தால் அதிகம் உயர்ந்தது. எதில் அற மீறல் குறைவு, எது குறைவான செல்வக் குறைவை தரும், எதில் செல்வம் அதிகம் பெருகும், எதில்  பிறர் நம்மை அதிகம் விரும்ப வைக்கும், எதில்  பிறர் நம்மை வெறுப்பது குறைவாக இருக்கும்.   எதில் நம்  வஞ்சம் தீர்க்கப்படும், எதில் நாம் அடையும் பகை குறைவாக இருக்கும் என பரிசீலிக்கப்படவேண்டிய பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.
           

இப்படியாக பற்பல காரணிகளை  எதையும் விட்டுவிடாமல், தவறின்றி கணக்கிட்டு,  பரிசீலித்து,  ஒன்றை தேர்ந்தெடுப்பது என்பது மிகக் கடினமானது. இந்தச் சிக்கலை, காலியாக இருக்கும் பேருந்தில் இருக்கையை தேர்ந்தெடுக்கும் மிக எளிய முடிவுகள் எடுப்பதிலிருந்து எந்தத் தொழிலை நாம் தேர்ந்தெடுப்பது என்பதைப்போன்ற வாழ்வில் மிகப்பெரிய முடிவுகளைஎடுப்பதுவரை நாம் காண்கிறோம்.   அப்படி முடிவெடுத்தபின்னும் இது சரியான முடிவா என குழம்பிக் கொண்டிருக்கிறோம். திரும்பவும் ஆரம்பத்திற்கு சென்று  முடிவை மாற்றிக்கொள்ளலாமா என ஊசலாடுகிறோம். இந்த ஊசலாட்டத்தில் நேரம், பொருள், புகழ், வெற்றி,  மனநிம்மதி போன்ற  பலவற்றை இழக்கிறோம்.


      இந்த சிக்கலை முடிவெடுப்பதில் நாம் காணும் மன ஊசலை இன்று வெண்முரசில் ஒரு காட்சியாக விவரிக்கப்படுகிறது.  தவமிருக்கும் தனுவின் முன் அன்னை தோன்றுகிறாள். அவனுக்கு தான் நினைத்ததை தர நினைக்கிறாள். அவனோ போதாது என்கிறான். அவனுக்கு இரு வாய்ப்புகளை அளிக்கிறாள் அன்னை.  முடிவெடுப்பதற்கான அந்தக் கண நேரம் அவனுக்கு அவன் வாழ்க்கையிலேயே பெரும் சிக்கலான நேரமாக அமைகிறது.  அவன் ஏதாவது முடிவெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு அவன் இறுதியில் மேற்கொள்வது  உண்மையில் சிறந்த முடிவா எனத் தெரியாமல் விழிக்கிறான்.


   இத்தகைய நிலையில் ஒருவன் என்னதான் செய்வது? ஒன்றும் செய்வதற்கில்லை. இதில் நம் அனுபவம், அறிவு, உள்ளுணர்வு எல்லாம் கொண்டு ஏதாவது ஒரு முடிவை எடுக்கவேண்டியிருக்கிறது. ஆனால் இதைப்போன்ற சிக்கலான தருணம் ஒன்றில் என் சிறுமகன் மிகச் சிறந்த முடிவெடுத்ததைப் பார்த்திருக்கிறேன். அப்போது அவனுக்கு மூன்று வயதுக்கும் குறைவு. அப்போதுதான் பேச ஆரம்பித்திருந்தான். அவனை சுசி என்று கூப்பிடுவோம். திருச்செந்தூர் கோயில் பிரகாரத்தில் ஒரு பொம்மைக்கடைக்கு சென்றோம். பலவண்ணம் கொண்ட பலவிதமான பொம்மைகளைப் பார்த்து வியந்து நின்றான்.  நான் எதைக் கேட்டாலும் வாங்கித் தருவேன் என அவனுக்கு தெரியும். எந்தப் பொம்மையை தேர்தெடுப்பது என அவன் முடிவெடுக்காமல் திகைத்தது தெரிந்தது. அவன் சட்டென்று திரும்பி என்னைப்பார்த்து 'அப்பா சுசிக்கு என்ன வேண்டும்'  என தன் மழலைக்குரலில் கேட்டான். என்ன அருமையான முடிவு. கொடுப்பவனிடமே முடிவெடுப்பதை விட்டுவிடுதல்.
  


தனுவும் முடிவெடுப்பதை  அன்னையிடமே விட்டுவிட்டிருக்கலாம். அவள் வரத்தை இறை பிரசாதமாக எடுத்துக் கொண்டிருக்கலாம்  எனத் தோன்றுகிறது. வரும் அனைத்துப் பிரச்சினைக்கும் அவளே காரணம் என ஆக்கியிருக்கலாம்.  உண்மையான துறவிகள் தம் வாழ்வில் முடிவெடுப்பதையும் துறக்கிறார்கள்.  அவர்கள் வாழ்வு எனும் ஆற்றில் மரத்தில் இருந்து விழுந்த மலர் மிதந்து செல்வதைபோல மிதந்து செல்கிறார்கள். அவர்களுக்கு இத்தகைய சிக்கல் என்பதே இல்லை அல்லவா?

தண்டபாணி துரைவேல்

Sunday, March 27, 2016

பெண்ணின் பேருரு
பன்னிரு படைக்களம் பெண்ணின் விஸ்வரூப தரிசனத்தோடு தொடங்கியிருக்கிறது. "பெண்ணின் அவையில் ஆண் விழுந்ததிலிருந்து ஆணின் அவையில் பெண் எழுவதுவரை" என்று நூல்குறித்த அறிவிப்பில் சொல்லியிருந்ததுபோல் பெண் எழுந்தாடும் சித்திரத்திலிருந்து நூல் தொடங்கியிருக்கிறது. அதிலும் தேவி பன்னிரு ஆதித்யர்களின் விடியலும் அந்தியும் இரவுமாக வர்ணிக்கப்படுகிறாள். வெய்யோனின் இறுதியில் கர்ணன் பூண்ட வஞ்சத்தின் காரணமாக இனிமேல் கதை கதிரவனும் கொற்றவையும் ஆடும் களமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். அக்களம் குறித்த தொடக்கம் வருணன், சூரியன், சகஸ்ராம்சு, தாதா, தபனன், சவிதா, கபஸ்தி, ரவி, பர்ஜன்யன், திருஷ்டா, விஷ்ணு, என்ற பன்னிரு ஆதித்யர்களைச் சூடிநிற்கும் அன்னையாக அமைந்திருப்பது சிறப்பு. களம் விரியக் காத்திருக்கிறேன்.

திருமூலநாதன்

அன்னைப் பெருந்தெய்வத்தை ஆவாஹனம் செய்தல். (பன்னிரு படைக்களம்-1)
    இந்து மதத்தில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் உருவ வழிபாடு.  பல்வேறு உருவங்களில் வாயிலாகவே கடவுளை உருவங்களுக்கு அப்பாற்பட்ட பெருந்தத்துவம் என இந்துமதம் காட்டுகிறது.   ஒவ்வொரு இறை திருவுருவும்-   கடவுள் மேல் பாடப்பட்ட ஒரு கவிதை, ஆன்மீக ஆனந்தப் பெருவெள்ளத்திலிருந்து சிறிது அள்ளி எடுக்க உதவும் கரண்டி,   பெரும் பரப்பிரம்மத்தை காண திறந்துவைக்கப்பட்டிருக்கும் சிறு சாளரம்,  பிரபஞ்சம் முழுக்க வியாபித்திருக்கும் ஈஸ்வர ஸ்வரூபத்தை அறிய உதவும் கருவி,  பக்தனின் உள்ளத்தில் உறையும்  கடவுளை அவன் காண உதவும் ஆடி,    ஆன்மீகத்தில் பக்தனை மேலேற்றிவிடும் படிக்கட்டு, யோக சாதகனுக்கு ஆழ்மனம் அறிந்துகொள்ள உதவிடும் குறிப்பேடு,  பெரும் ஞானிகளும்  உலக வாழ்வின் வெறுமையில் தடுமாறாமல் காக்கும்  ஊன்றுகோல்.   இதைப்போன்ற தேவைகளுக்கேற்ப உருவுகளை இறைவனுக்கு அளித்து வணங்குகிறது இந்து மதம்.


    ஒரு விவசாயி வயலோரத்தில் மாட்டுச் சாணத்தைப் பிடித்துவைத்து அதன் மேல் கொஞ்சம் அருகம்புல்லைப் போட்டு பிள்ளையாரப்பா என கும்பிட்டால் பிள்ளையார் தன் தும்பிக்கை தொப்பையோடு வந்து அமர்ந்துவிடுகிறார். ஒரு சொம்பில் சிறிது தண்ணீர் விட்டு அதன் மேல் மாவிலைக்கொத்து மற்றும் ஒரு தேங்காயை வைத்து பூச்சுற்றி வைத்து உடுக்கை பம்பை அடித்து வாடியம்மா தாயே என அழைத்தாள் மாரியம்மன், மதுரைவீரன் போன்ற தன் பரிவாரங்களோடு வந்து அதில் அமர்ந்துகொள்கிறாள். வேத பண்டிதர்கள் பல்வேறு மந்திரங்களை உச்சாடனம்செய்து வேள்விப்பொருட்களை நெருப்பில் இடும்போது தேவர்கள் எழுந்தருளி தம் நாவை நெருப்பாக நீட்டி  உண்கிறார்கள்.  ஒரு நெல் அளக்கும் மரக்காலை கவிழ்த்துப்போட்டு திருநீறு பூசி பூமாலை சாற்றி வணங்கி நிற்க அதில் சிவன் வந்திறங்கி  இரவுமுழுதும் தங்கி அவ்விரவை சிவராத்திரியாக்குகிறார்.  ஒரு வேப்ப மரத்திற்கு மஞ்சள் பூசி ஒரு சிவப்பு புடவையை சுற்றினால் அம்மரம் அம்மனாகிறது, பசு மாட்டின் பின் பாகத்தில் திருமகள் வந்தமர்ந்து அருள்கிறார். யாரும் அழைக்காமலேயே  விநாயகர் எச்சில் இலைகளில் உச்சிஷ்ட்ட கணபதியாக கொலுவிருக்கிறார். எங்கும் நிறைந்திருக்கும் காற்றை மாணவர்களுக்கு அறிய வைக்க ஒரு பலூனில் நிரப்பி காட்டுவதைப்போல் தெய்வத்தை இப்படி பல்வேறு உருக்களில் ஆவாஹனம் செய்து வழிபடுகிறார்கள் மக்கள்.


    ஆனாலும் இப்படி ஆவாஹனம் செய்கையில் அதில் கடவுளை உணர்வது அவரவர் அனுபவம் அறிவு, ஆன்மீக ஞானத்தைப் பொறுத்ததாய் இருக்கிறது.  அதற்கு ஆவாஹனம் செய்பவரின் பக்தி, சிரத்தை, ஞானம், நியமம் செய்யும் சடங்குகள் போன்றவையும் கடவுள் சான்னியத்தை உணர்ந்துகொள்ள உதவுகின்றன.  இதில் உண்மை இருக்கிறதா இல்லையா என்று ஆராய்வதைவிட  ஒருவர் அதில் ஆன்மீக உணர்வை அடைகிறாரா என்பதையே நாம் பொருள்கொள்ள வேண்டும்.


   ஆசான் இன்று பேரன்னையை மாகாளியை கொற்றவைத் தெய்வத்தை சொற்களால் உருக்கொடுத்து பன்னிரு படைக்கள முகப்பில்   எழுந்தருள வைத்திருக்கிறார்.  நாம் வாசிக்கையில் நம் சிந்தையுள்  ஆவாஹனம் கொள்கிறாள் நம் அன்னை.  அவளை எட்டு அங்கங்களும் மண்ணில்பட தரையில் விழுந்து  வணங்கி பாதம் பணிகிறேன்.  நம் ஞானத்தை ஆக்குவாளாக, நம் பக்தியை காப்பாளாக,  நம்முள்ளிருக்கும்  இருண்மையை அழிப்பாளாக.  ஓம் ஓம் ஓம் என முழங்கி ஐம்பூதங்களும்  ஆமோதிக்க அன்னை நம்மேல் கடைக்கண்பார்வை செலுத்தி அருள்வாளாக.

தண்டபாணி துரைவேல்

Wednesday, March 23, 2016

சிறுவர்களிடம்ஜெ

வெண்முரசின் சாகசக்காட்சிகளை நான் எப்போதுமே கொஞ்சம் தவிர்ப்பதுண்டு. அவை புராணகாலத்தைச் சேர்ந்தவையாக இருக்கும். சமகாலத்தன்மை கொண்ட மனோநிலை சித்தரிப்புகளுடன் ஒட்டுவதில்லை என நினைப்பேன்

இந்த இடைவெளியில் அந்தப்போர்களை எல்லாம் வாசித்தேன். முதற்கனல் முதலே போர்க்களக்காட்சிகளை ஒருவகையில் உற்சாகமான ‘காமிக்’ தன்மையுடன் படைத்திருக்கிறீர்கல். அதில் ஒரு தொடர்ச்சி இருக்கிறது.

யதார்த்தமான உணர்ச்சிகள் கொண்ட பகுதிகளுக்கு சமானமாக இந்த மிகையான போர்க்காட்சிகளும் கலக்கப்பட்டிருக்கின்றன. அந்த கலவைதான் நாவலுக்கு ஒரு கனவுத்தன்மையை அளிக்கிறது என நினைக்கிறேன்

மனொ


அன்புள்ள மனோகர்

என் மனதில் இளமையில் விழுந்த ஒரு வரிதான் அது. என் வி கிருஷ்ணவாரியருடையது

கிளாஸிக் என்பது ஏதோ ஒரு வகையில் ஒரு குழந்தைக்கதையும்கூட. குழந்தைகளிடம் சொல்லக்கூடிய வடிவம், குழந்தைகளுக்குரிய கதையுலகம் அதற்குள் எங்கோ இருக்கும்

வெண்முரசு அடிப்படையில் ஒரு குழந்தைக்கதையாக இருக்கவேண்டும் என்பது என் எண்ணம். விரிவாக்கம் அதன் மேலே தான்

ஆகவே போர்க்களக் காட்சிகள், மோதல்காட்சிகள் எல்லாம் முழுக்கமுழுக்க சிறுவர் சாகசக்கதைகளே. மேலும் அன்றைய யதார்த்தமான போரை நம்மால் இன்றைக்கு விவரிக்கவும் முடியாது.


நீலம் விதிவிலக்கு
ஜெ

பூரிசிரவஸின் பயணங்கள்ஜெ

வெண்முரசின் பழைய நாவல்கள் மிகமிகப்பின்னால் எங்கோ சென்றுவிட்டன. நான் எனக்குப்பிடித்த பழைய சில பகுதிகளை வாசிப்பதுண்டு. ஆகவே இம்முறை பூரிசிரவஸின் பயணங்களைப்பற்றி வாசித்தேன்

அவனை ஒரு பகடைக்காய் என்று நினைத்தேன். அவன் பெண்கள் என்னும் களத்திலே ஓடியாடுகிறான். அவனால் முடிவெடுக்கமுடியவில்லை. அந்தந்தக் களத்தில் யாரோ அவனை தூக்கித்தூக்கி வைக்கிறார்கள் என்று தோன்றியது

அவனுடைய அந்தக் காதல் நிறைந்த இளமையான மனம் மிகமிக அழகானது. வெண்முரசின் மிகவும் இனிமையான கதாபாத்திரம் அவன்

ராஜ்மோகன்

நீலம் எனும் இடைவெளி


ஜெ

நீலம் ஒரு கனவு போல துரத்தித் துரத்தி வருகிறது. ஒவ்வொரு நாவல் முடிந்ததும் நீலத்திற்குள் சென்று வாசித்துவிட்டுத் திரும்புகிறேன். நீலத்தின் உணர்வுநிலை எல்லா நாவல்களிலும் கொஞ்சம் கொஞ்சமாக நீடிக்கிறது என நினைக்கிறேன். வெய்யோனில்கூட அது இருக்கிறது. திரௌபதியைப்பற்றி கர்ணன் நினைக்கும் இடங்களில் உள்ள மொழியின் பிரவாகம் அதைக் காட்டுகிறது

நீலம் கட்டற்ற மொழியக உள்ளது என முதலில் தோன்றியது. ஆனால் வாசிக்க வாசிக்க அது எண்ணி எண்ணி எழுதப்பட்டது என்ற எண்ணமும் வந்தது. அதன் சுருக்கம்தான் அதன் அழகு என்று இப்போது தோன்றுகிறது

செல்வராஜ்

வெய்யோன் குழந்தைகள் வழியாகஜெ,

வெய்யோன் நாவலில் குழந்தைகளின் கதை தொடர்ச்சியாக வந்தபோது அது ஒரு பெரிய சிதறல் என்று எனக்குப்பட்டது. கர்ணனின் கதைக்குப்பதிலாக கௌரவர்களின் கதையாக அது ஆகிவிட்டது என்று தோன்றியது. ஆனால் இப்போது ஒட்டுமொத்தமாக வாசிக்கையில் அதன் பிரப்போர்ஷனும் அமைப்பும் மிகவும் நிறைவூட்டுவதாகவே இருக்கிறது. கர்ணனையே அந்தக்குழந்தைகளை வைத்துத்தான் புரிந்துகொள்ளமுடிகிறது

கிஷோர்


அன்புள்ள கிஷோர்

நண்பர் கடலூர் சீனு வெய்யோன் நாவலை குழந்தைகளைக்கொண்டே ஒரு வாசிப்பாக நிகழ்த்தினார் எனக்கே ஆச்சரியமாக இருந்தது

கர்ணனுக்குக் குழந்தை உருவாவதில் நாவல் தொடங்குகிறது. ஆனால் அது அவனை எவ்வகையிலும் பாதிப்பதில்லை

கௌரவர்குழந்தைகளுடன் அவன் கொள்ளும் நெருக்கம் நாவல் முழுக்க வருகிறது

கடைசியாக நாகர் குழந்தையை கையில் எடுத்து  ‘இவன் என் மகன்’ என அவன் சொல்லும் இடத்தில் நாவல் உச்சம் கொள்கிறது

ஜெ

இந்திரநீலம் - ஞானத்தின் பாதைஜெ

வெண்முரசின் நாவல்களில் இந்திரநீலத்தைத்தான் நான் கொஞ்சம் கஷ்டப்பட்டு வாசித்தேன். அதன் பலபகுதிகள் எனக்குப்புரியாமலோ வெளியிலோ இருந்தன. அதாவது என்ன செய்தி என்று புரிந்தது. ஆனால் உள்ளடக்கத்துக்கு அப்பாலுள்ள ஒன்று புரியவில்லை

சமீபத்தில் அஷ்டலட்சுமிகளைப்பற்றி ஒரு பெரியவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது கர்நாடக வைஷ்ணவத்தில் வைகானச ஆகமத்தில் உள்ள சில சம்பிரதாயங்களைப்பற்றிப் பேசினார். அவை வைஷ்ணவ தாந்த்ரீகம் என்று சொன்னார்.

அந்த விஷயங்கள் பல இந்திரநீலத்தைப்புரிந்துகொள்ள உதவின. உதாரணமாக சியமந்தக மணி கிருச்ஷ்ணன் என்னும் மாயாஸ்வரூபத்தின் பயணம் என்றால் அது எங்கெங்கே சென்று கடைசியில் கடலாழத்தில் மறைகிறது என்று பார்த்தபோது திடீரென்று ஒட்டுமொத்த இந்திரநீலத்தையே தொகுத்துப்பார்த்ததுபோல் இருந்தது

இன்னும் நிறைய வாசிக்கவேண்டும்

ஜெயகிருஷ்ணன்

 

Tuesday, March 22, 2016

நீலம் எனும் சாதனைஜெ சார்

நீலம் நாவலை முதலில் தொடராகவந்தபோது வாசிக்காமல் விட்டுவிட்டேன். அப்போது அதன் மொழிநடை எனக்குக் கஷ்டமாக இருந்தது, அதன் உணர்வுகளும் சரிவரப்பிடிகிடைக்கவில்லை. கொஞ்சம் விட்டுவிட்டு அப்படியே இந்திரநீலம் வாசித்தேன். அது எனக்குப்பிடித்திருந்தது. அதை வாசித்தபோதுதான் நீலம் நாவலையும் என்னால் வாசிக்கமுடியும் என்ற எண்ணம் வந்தது. அதிலுள்ள சத்யபாமை, ருக்மிணி இருவரின் மனநிலைகளை நான் நன்றாகப்புரிந்துகொண்டேன்

ஆனால் தொடர்ந்து வெண்முரசு வந்துகொண்டிருந்தமையால் நான் நீலம் நாவலை வாசிக்கவில்லை. இப்போது ஒரு பதினைந்துநாளாக தொடர்ந்து நீலம் நாவலிலேயே வாழ்கிறேன். படிக்கப்படிக்கத் தீராத ஓர் இலக்கியச்சாதனை என்று இந்த நாவலைச் சொல்வேன். இப்படி ஒரு உணர்வுநிலைக்குள் குடியேறுவது சாதாரண விஷயம் அல்ல. அதை மொழியில் வெளிப்படுத்த ஒரு தவம் தேவை

சாரதா

Saturday, March 19, 2016

வஞ்சம்


ஜெ

அடுத்தநாவலை எழுத ஆரம்பித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். வெண்முரசு நாவல்களை தொடர்ந்து வாசிப்பதனால் ஒருவகையான மனநிலை அமைந்திருக்கிறது. நடுவே வேறு எதையாவது வாசிக்கலாமென்று தொடங்கினேன். சாதாரணமாக வந்தான் போனான் என்று கதைவாசிக்க மனம் ஒப்பவில்லை. அதில் ஏதேனும் ஒரு உளவியல் நுட்பம் இருக்கவேண்டும். அல்லது வர்ணனை நுட்பம் இருக்கவேண்டும். அல்லது ஏதாவது மொழியழகு இருக்கவேண்டும் என்று தோன்றியது. வெறும் கதைவாசிப்பு சலிப்பூட்டியது. ஆகவே மீண்டும் வெண்முரசையே வாசிக்க ஆரம்பித்தேன். இப்போது பிரயாகை போகிறது. துருபதன் வஞ்சம் கொண்டு அழியும் காட்சி மனதை உலுக்குகிறது

சுப்ரமணியம்

கதைகளின் கதை

அன்புள்ள ஜெ

வெண்முகில்நகரம் வாசித்துக்கொண்டிருக்கும்போதுதான் உங்கள் கட்டுரை ஒன்றை இணையதளத்திலே வாசித்தேன். நாவல்களை நாவல்களால் ஊடுருவும் ஒரு கலையாக உங்கள் நாவலைச் சொல்லியிருந்தீர்கள். அதைவாசித்தபோது அந்த ஆச்சரியம் எனக்கு ஏற்பட்டது. வெண்முகில்நகரம் ஒரு மையக்கதையை நேர் குறுக்காக கடக்கும் ஏராளமான குட்டிக்குட்டிக்கதைகளால் ஆனது. அந்தவடிவமே ஆரம்பத்தில் கொஞ்சம் தடையாக இருந்தது. கதைகள் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்து கிடப்பதைப்போலத் தோன்றியது. ஆனால் இப்போது வாசிக்கும்போது கதைகளின் அந்தப்பின்னல்தான் கதைகளை நாவலாக இணைக்கிறது என நினைத்துக்கொண்டேன்

சரவணன்