Sunday, March 31, 2019

கார்கடலின் மையம்அன்புள்ள ஜெ

நலம்தானே? கார்கடல்தான் இதுவரை வந்த நாவல்களில் என்னால் தொகுத்துக்கொள்ள முடியாத நாவலாக இருக்கிறது. இதன் கட்டமைப்பை என்னால் இன்னும் உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை. கதையோட்டம் இருக்கிறது. ஆனால் மற்ற எல்லா நாவல்களிலும் ஒரு மையக்கரு இருக்கும். இந்நாவலில் அது என்ன? தந்தை மகன், ஆசிரியர் மாணவன் என்ற முரண்பாடு இருக்கிறது. ஆனால் அதற்கு அடியில் ஒரு தீம் ஓடிக்கொண்டிருக்கும். அதை தொட்டு அறிய முடியவில்லை. யாராவது எழுதினால் நல்லது என நினைக்கிறேன்

சம்பத்குமார் 

ஹவனை
அன்புள்ள ஜெயமோகன் சார்,

இமைக்கணம் இரண்டாம் அத்தியாத்தை வாசிக்கும்போதுதான் ஹவனை எப்படி ஒரு மனிதனுக்குள் தோன்றுவாள் என்பதை புரிந்துகொண்டேன். உண்மையில்  நன்றாக சரஸ்வதி படத்தை உற்றுபார்த்து "ஊழ்கம், கலை, எண்ணம், எழுத்து" என்று அவள் கைகளின் பொருட்களை பார்த்து  பிரமித்ததும் இன்றுதான். பல ஆயிரம் ஆண்டுகளாக வின்முகில்கள் மேல் அலைந்து " நிகழ்ந்தவற்றின் தடமின்றி எஞ்சுவதே விண் என்று பிரபாவன் உணர்ந்தது. எனவே விண்ணில் எதுவும் நிகழ்வதேயில்லை என்று தெளிந்தது. ஒன்றுபோல் மறுநாள் அமையும் அப்பெருவிரிவின் அலையற்ற காலத்தை அதன் சித்தம் உணர்ந்தது. தன் சிறகுகளால் அக்காலத் தேங்கலை அசைக்கமுடியும் என்று கண்டுகொண்டது. சிறகசைவை எண்ணி காலத்தை கணக்கிடத் தொடங்கியதும் தயங்கியபடி பிரிவின்மையிலிருந்து முக்காலம் சொட்டி வடிந்து அதை வந்தடைந்தது. அதன் ஊசலில் முடிவிலாது ஆடியது பிரபாவன்" என்று வாசிக்கும்போது விண்ணில் என்னதான் நிகழ்கிறது என்று எண்ணி பார்த்தால் என்ன நிகழ்கிறது? முகில்களுக்கு மேலேயே சூனியம் தானா? குறையாது தவம்கொள்ளும் நிலைகொண்டிருந்தது தியானிகன். சலிக்காது செயல்கொள்ளும் விசை கொண்டிருந்தது பிரபாவன். எண்ணங்களை அவியாக்கி வேள்வி இயற்றியது தியானிகன். அதன் காவலன் என்று பிரபாவன் அமைந்தது.எங்கு தவமும் செயலும் முற்றிணைகின்றனவோ அங்கே தெய்வமொன்று எழுகின்றது.....எவ்வளவு தடவை கேட்ட வார்த்தைகள் . ஆனால் தியானிகன் ,பிரபாவன் கதை ஆழமாய் வாசிக்கும்போதுதான் அதன் வீரியம் புரிகிறது. இப்படி எல்லாம் சலிப்பின்றி தவமும் செயலும் செய்ய முடியுமா என மனம் சோர்கிறது. அப்படி இருந்தால் மட்டும்தான் சொல் எழுந்து சரஸ்வதியின் மகள் ஹவனை எழுவாள். அவள் எழுந்து அவர்களுக்காய் இந்திரனிடம் "மண்ணின்பொருட்டு முடிவிலா விண்ணைக் கூவி அழைப்பது என் பணி” என கூறுவாள்.  ஏன் இந்திரனிடம் அவள் செல்கிறாள்.....திரேதா யுகம் "இந்திரவேதம் " மட்டும் கொண்டதா? ...இறப்பு ,பசி அடுத்து இந்திரம் தானா ? கிராதத்தில் அர்ஜுனன் இந்திரனை சந்திப்பதும் .....ஜனங்கள் சேரிகளிலும், ரோட்டின் ஓரங்களிலும் புழுபோல் நெளிய புவியுலக இந்திரர்கள் இன்னொரு உலகில் வாழ்வதும் ஞாபகம் வந்தது. கூடவே இந்திரனின் படத்தை உற்று பார்க்க வேண்டும் என்ற ஆசையும்.

இந்திரனை சந்தித்து நாரதரை அழைத்துவரும் ஹவனை பிரபாவனை சந்திக்க அவனிடம் "பறவையே, நீ விழைவதென்ன?” என்கிறார். “நான் கிளையின் இலை, முனிவரே. என் பொருட்டு தவமியற்றும் வேரை சந்தியுங்கள்” என்னும்போது திக்கென்று இருந்தது. என்ன வேர்? எதின் வேர்? ....சரஸ்வதி அழைப்பா?  தியானிகன் "“காலம் சமைத்து, அதன் கணுக்களென சித்தம் ஒருக்கி, இப்புவிக்குப் பொருள் அளித்த சாவு எனும் பேரருளை எங்களுக்கு மறுத்தால் இங்கு இதுவரை இயற்றப்பட்ட அனைத்தும் அறுபட்டு அழியும். முழுமையடையாத எதுவும் முற்றிலும் பொருளற்றதே என்பது அவர் அறியாதது அல்ல. எதன்பொருட்டு பிரம்மனால் இப்புவி படைக்கப்பட்டதோ அந்நோக்கத்தை முறிக்கவேண்டாம் என்று சொல்லுங்கள். எந்த ஆணையின்படி செயல்கள் வேள்விகளாகி தேவர்கள் எழுந்தனரோ அந்த ஆணையை மறுக்கவேண்டாமென மன்றாடுங்கள். எங்கள் நாவென அங்கு சென்று நில்லுங்கள். உயிர்க்குலங்களின் பொருட்டு உங்களிடம் அடிபணிந்து மன்றாடுகிறேன்” என கூறி நாரதரிடம் இறப்பை கோரும்போது கோபம் வந்தது....."நான் எல்லாம் இப்படியே இன்னும் நூறுவருடம் வாழ்ந்தால் எப்படி இருக்கும்? என்றும் மரணமே இல்லை என்பது போலவும் வாழ்ந்து கொண்டிருப்பவன் "ஆனால் இருப்பைவிட இறப்பின் பயம் ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கு ஒருமுறை நினைவூட்டபட்டு பீதி வரும். அது அடுத்த பத்தியிலே வருகிறது" நோயின் தெய்வமாகிய வியாதிதேவியும் மூப்பின் தெய்வமாகிய ஜரைதேவியும் ஒவ்வொரு உயிருக்கும் அருகே காத்திருக்கிறார்கள். சித்தமயக்கின் தெய்வமாகிய உன்மாதையும் வலியின் தெய்வமாகிய பீடையும் வியாதியன்னையின் மகள்கள். மறதியின் தெய்வமாகிய விஸ்மிருதியும் அச்சத்தின் தெய்வமாகிய பீதியும் அழுகையின் தெய்வமாகிய ரோதனையும் ஜரையன்னையின் குழவிகள். உயிர்க்குலங்களில் துன்பத்தை நிறைப்பவர்கள் அவர்கள். இறப்பின் தெய்வமாகிய மிருத்யூ அவர்கள் எழுவரை புரவிகளெனப் பூட்டிய கரிய தேரிலேறி செந்நிறக் குழல் பறக்க கரிய முகத்தில் கண்கள் கனல உயிர்களை அணுகுகிறாள்.”“அறிக, தன்னுணர்வினூடாகவே அவர்கள் உடல்புகுந்து உள்ளத்தை கைப்பற்ற முடியும். நீர் உம் குடியினருக்கும் உயிர்களுக்கும் இருப்புணர்வை அளித்ததுமே ஏழன்னையரும் பேருருக்கொண்டு கோடி கண்களும் கோடானுகோடி உகிர்விரற்கைகளும் நாக்கொடுக்குகளும் நச்சுப்பற்களும் பூண்டு நகைத்தபடியும் உறுமியபடியும் கனைத்தபடியும் பெருகிச்சூழ்ந்து நிறைவார்கள். ஒவ்வொரு கணமும் பெருந்துன்பமே உயிர்க்குலத்தை ஆளும். அதை ஏற்று உளம்தளராது நின்று சொல்லளித்து இவளை விசைகொள்ளச் செய்யவேண்டும் நீங்கள்.” என தியானிகனிடம் நாரதர் கூறுகிறார். அப்படி என்றால் உண்மையில் சலிப்பாகி வெறுப்பாகி நாமலே சித்தத்திடம் கூறி வியாதியையும் மூப்பையும் மரணத்தையும் நமக்கு நாமே கொண்டு வருகிறோமா?  சித்தம் ஒன்றாகிய செயல் இருந்தால் மரணம் இல்லையா? 

வலியின் அசைவுகளே முத்திரைகளாக, துன்ப ஒலியே வேதச்சொற்களாக, விழிநீரே அவியாக பெருவேள்வி ஒன்று நிகழும் வேள்விச்சாலையாக இருந்தது புவி என இமைக்கணம் மரணம் இல்லா உலகை கூறுகிறது. இப்போதும் உலகம் இப்படித்தானே இருக்கிறது? சரஸ்வதிக்கு  இந்திரனுக்கு அப்படியே எதிர்முகம். ஆனால் அதைக்கொண்டுதான் ஏழு பாதாள உலகங்களையும் கடந்து புவியில் இருந்து   யமபுரிக்கு நாரதர் செல்கிறார். முஞ்சவான் மலையுச்சியில் தவம் செய்து கொண்டிருக்கும் யமனை சென்று அடைய செல்லும்போது "பேய்களும் பூதங்களும் காகங்களும் எருமைகளும் கழுதைகளும் பன்றிகளுமாக கரிய உருப் பெருக்கி அலறியபடி அவரை சூழ்ந்துகொண்டன."“நான்! நான்!” என நுண்சொல் உரைத்து தன்னை ஊழ்கத்தில் நிறுத்தி அவற்றை வென்றார் என வருகிறது. இது என்ன என்றே புரியவில்லை.  பேய்கள், பூதங்கள், காகங்கள் , எருமைகள், கழுதைகள், பன்றிகள் எல்லாம் என்ன ? அவை எப்படி நம்மை சூளும் ? தவம் இருக்கும்போது அல்லது ஒரு  ஒற்றை செயல் செய்ய முயலும் பொது வருமா ? அப்போது தான் முதலில் "நான் ,நான் " என்று கூறி முன்செல்லவேண்டுமா? கறை நல்லது என்பதுபோல் " நான்" என்பதும் பயன் அளிக்ககூடியதா? ...அதற்கு  பிறகுதான் உண்மையிலே "நான் " யார் என்று தெரியும் போல . அப்போதும் தவங்கி நிற்காமல்  " தேவர்கள் .தேவர்கள் " என்று கூறி "நானை " வென்று  தேவர்களை அடைய வேண்டும் ...பிறகு நம்மில் தெரியும் தேவர்களை " தெய்வம் ,தெய்வம் " என கூறி தேவர்களை வெல்ல வேண்டும். பிறகு மூன்று வடிவில் வரும் காலர்களை " பிரம்மம் ,பிரம்மம் என்று கூறி கடந்து,தேவியின் அனைத்து டார்ச்சர்களையும் தாங்கி "அகாலம் ,அகாலம் " என்று கதறி யமனை சந்திப்பவன் உண்மையிலே  யார்? அவனுக்கு என்ன பெயர்? அப்படி இந்த பூமியில் எத்தனை பேர் பிறந்து யமனை சந்தித்து இருப்பார்கள் என்று எண்ணினால் மனசே சூனியத்தில் இருப்பது போல் ஆகிவிட்டது. "ராமன் ,கிருஷ்ணன், கிறிஸ்து, காந்தி " இப்படி சிலர் மட்டும் தானா? இவர்கள் தான் உலகை சமைக்கிறார்களா? 

ஸ்டீபன் ராஜ் குலசேகரன்

Saturday, March 30, 2019

இமைக்கணக்காடு
அன்புள்ள ஜெயமோகன் சார்,

கார்கடல் முடிந்தபின் மீண்டும் "இமைக்கணம்" வாசிக்கலாம் என நினைத்து தொடங்கினேன். வெண்முரசு நாவல்களின் வரிசையில் இப்போது மனதுக்கு நெருக்கமாய்  புதையல்கள்  போல தோன்றும் நாவல்கள் " மாமலர் " சொல்வளர்காடு" இமைக்கணம் " . ஒரு இமைக்கணம் என்பது தேவர்களுக்கு ஒரு யுகம் என்று எங்கோ படித்தது ஞாபகம் வந்தது. எத்தனை தடவை தேவர்கள் கண்சிமிட்டி இருப்பார்கள் ? ஏன் அவர்கள் கண்சிமிட்டாமல் இருக்கிறார்கள்? கண்சிமிட்டாத அளவுக்கு அவர்கள் எதை பார்த்துகொண்டு இருக்கிறார்கள்?  தாங்கள் நிலைகுத்தி பார்த்துகொண்டிருக்கும் போது அவர்களின் மனதுக்குள் என்னதோணும்? சிரிப்பார்களா? கோபப்படுவார்களா இல்லை வெறுப்பில் இருப்பார்களா? என்று பல கேள்விகள் .

இமைக்கணத்தின் தொடக்கம் "இந்த கதை திரேதா யுகத்தில் நடந்தது " என ஆரம்பிக்கிறது. 12,96.000 ஆண்டுகள் கொண்டது திரேதா யுகம் . நான்கில் மூன்றுபகுதி அறமும் ஒருபகுதி இருட்டும் கொண்ட மனித மனதை கொண்டவர்கள் வாழும் யுகம். ராமபிரான் அவதரித்த யுகம். திரேதா  யுகத்தின் தொடக்கம் தான் " அட்சயதிரியை " என்று இன்று கொண்டாடபடுகிறது. ஏன் அதை தங்கம் வாங்கி வீட்டில் பதுக்கினால் நல்லா இருக்கும் என நாம் கொண்டாடுகிறோம்?  ஒரு யுகத்தின் தொடக்கநாளை வருடா வருடம் கொண்டாடுகிறோமே ஏன்? . 

இமைக்கணத்தின் முதல் மூன்று அத்தியாயங்களும் , தான் செய்த ஒரு தவறுக்காய் எமன் தனது அழித்தல் தொழில் செய்யாமல்,சிவபெருமானிடம் தவமியற்ற  சென்றுவிட, உலகின் இயக்கம் நின்று போகிறது. இறப்பு என்னும் அமுது இல்லாமல் பூமியின் உயிர்கள் தவிக்கின்றன. எமனை மீட்டுக் கொண்டுவர நாரதரின் விண்ணிலிருந்து பாதாளத்துக்கு செல்லும் பயணமும் யமனை மீட்டுக்கொண்டு வந்து உயிர்களை கரை சேர்ப்பதும் நடக்கிறது. 

தியானிகன் என்னும் புழுவை கொத்தி திங்க ,பிரபாவன் என்னும்  சிட்டுக்குருவி முயல .....தியானிகன் தலைதாழ்த்தவோ விலகிச்செல்லவோ இல்லை. தலைநிமிர்ந்து நோக்கி அச்சமின்றி நின்றது.அந்தத் துணிவை அதற்குமுன் குருவிகளோ அவற்றின் நினைவிலுறைந்த தொல்மரபினரோ அறிந்திருக்கவேயில்லை என்கிறது. ஏன் என்றால் இனி உலகில் மரணம் இல்லை. ஆதலால் பசி இல்லை. காமம் இல்லை. பிறப்பும் இல்லை. " நானும் என் கணமும் அச்சமொன்றையே மெய்யென்று கொண்டிருந்தோம். எங்கள் எண்ணங்களும் செயல்களும் அச்சத்தாலேயே வடிவமைக்கப்பட்டிருந்தன. அச்சத்தை உதறுவதன் எல்லையில்லா விடுதலையை அடையும் பேறுபெற்ற என் குலத்தான் நான் என பூச்சிகள் ரீங்கரிக்கலாம் . சிலந்தி"பெரிய விடுதலை நாம் பின்னிய வலையில் நாமே மாட்டியிருப்பது. ஒவ்வொரு கணமும் நெய்துகொண்டிருப்பதை நிறுத்தியபின் என் கால்கைகளை தூக்கி பார்த்தேன். இவற்றால் நான் என்னென்ன செய்யமுடியும் என எண்ண எண்ண என் உள்ளம் கிளர்ந்தெழுகிறது .காலைமுதல் வெறுமனே சரடில் தாவிக்கொண்டிருக்கிறேன். நேற்றுவரை என் குலம் செய்துவந்த செயல்கள்தான் இவை. ஆனால் வேட்டைக்கென அன்றி விளையாட்டென செய்கையில் இவற்றிலிருந்து எதிர்பார்ப்பும் பதற்றமும் அச்சமும் அகன்றுவிட்டன என பேருவகை கொள்ளலாம் . தேள்கள் "நஞ்சில்லையேல் என் உடல்வடிவும் பொருளிழந்துவிடுகிறது.ஆகவே இல்லா நஞ்சை நடிக்கிறேன் என கூறி குதூகலிக்கலாம். ஏன் என்றால் இறப்பு இல்லை.  அனைத்து உயிர்களும் ஆர்ப்பரிக்கும் அந்த மரணம் நின்ற காலையில் சோர்வாய் தவிக்கும் பிரபாவன் ஒன்றை அறிந்து கொள்கிறது....."இறப்பே பசியென்றாகி உலகை ஆண்டது ,பசியே விழைவென்று உயிர்களை செயல்கொள்ளச் செய்தது" என்று . முதல் வேதம் . அழியவே அழியாதது. இறப்புக்கு இறைவன் தனது தொழிலை நிறுத்திவிட "காலமும் விழைவும் முடிவில்லாதவையே. அவையிரண்டும் எனக்கு அருளப்பட்டுள்ளன. நான் வென்றுவருகிறேன்” என்று தன்னம்பிக்கையோடு கூறி அவனை சந்திக்க செல்லும் பிரபாவன் யார்? ..குத்தாட்டம் போட்டு குதூகலிக்கும் இந்த உலகில் ஏன் அவனுக்கு அவ்வளவு சோர்வு ?  

ஸ்டீபன் ராஜ் குலசேகரன் 

அம்பு-2அன்புள்ள ஜெ

துரோணருக்கு எதிராக அர்ஜுனன் எடுக்கும் அந்த் இறுதி அம்பு எது? ஸ்வம் என்னும் பெயர் சுட்டுவது அவனுடைய ஆணவம் அல்லது பெர்சனாலிட்டியை. ஆனால் அந்த பெர்சனாலிட்டி என்ன? ஆசிரியர் அளித்த அனைத்தையும் திருப்பி அளித்தபின்னர் எஞ்சுவது என்ன? இங்கே கவனிக்கவேண்டியது ஒன்று உண்டு. அவன் அவரை விட்டுப்பிரிந்தபின்னார் அடைந்த அனைத்தையும் அவன் துரோணரால் அளிக்கப்பட்டவை என்று சொல்லி திரும்பி அளிக்கிறான். கடைசியில் எஞ்சியது என்ன? அதை ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் விளக்கிக்கொள்வதே சரியானதாக இருக்குமென நினைக்கிறேன்.

சாரங்கன்

Friday, March 29, 2019

அந்த அம்பு எது?எழுத்தாளர் அவர்களுக்கு,

அர்ஜுனன் துரோணர் மேல் ஏவிய அந்த கடைசி அம்பை பற்றிய ஒரு கடிதம் வந்தது.

எனக்கு பட்ட பொருளை முன் வைக்கலாம் என்று இந்த கடிதம். எப்போதும் போல நான் முற்றிலும் தவறாக இருக்கலாம்... என்றால் வாசகர்களே சுட்டி காட்டட்டும்.

துரோணர் பரத்வாஜருக்கும் ஒரு வேடர் குல பெண்ணுக்கும் பிறந்தவர். தந்தையால் உபநயனம் அளித்து தன் மகன் என்று சொல்லி ஏற்க படாதவர். அதற்காக ஏங்கியவர். பின் அக்நிவேசரை அடைந்து வில்லில் தேர்ந்து, பரசுராமரை தேடி ஓடியவர். ஷாத்ரியனாகும் பொருட்டு. பின் ஷரத்வானை அடைந்தும் அவர் நிலை பெறவில்லை. துரோணரின் வாழ்கையையே இந்த பிராமணனா ஷாத்ரியனா என்ற அலைகழிப்பு என்று ஒரு வகையில் சுருக்கிக்கொள்ளலாம்.

அர்ஜுனனும் ஒரு வகையில் தந்தை அன்னை என்கிற இரு நேரடி ஆளுமைகள் இல்லாத ஒருவன் தான். ஆனால் அவன் ஒரு சிவயோகி. சரி அவ்வளவு போக வேண்டாம் என்றால் அவன் பெண்களில் கண்டதும் கடக்க வேண்டியவைகளையே. அவன் கடந்து கடந்து வென்று மேல் எழுபவன். ஒரு வகையில் அவனை மொத்தமாக இப்படியே சுருக்கி கொள்ளலாம். அவனில் ஆன் பெண் போன்ற  தன்மைகளின் ஊசாலாட்டம் இருக்கிறது, ஆணால் அவைகளுமே அவனுக்கு கல்வியாகின்றன. ஆண்மை கொண்டு நிற்கவேண்டிய இடங்களையும், தன் பெண்மை கொண்டு பணிய வேண்டிய பாதங்களும் அவனுக்கு தெரிந்தே இருக்கின்றன.

அவன் தன் ஆவநாழியில் எல்லா அம்புகளும் ஒழிந்த பின்பும் துரோனாரிடம் இருந்து பெறாத ஓர் அம்பு, அவன் கண்டடைந்தது - அது தன்னை கண்டடைந்து தான். 

ஸ்வம் - தன்னையே முதன்மை யாக செலுத்த வேண்டும் குருவை வெல்ல.

ஆனால் அர்ஜுனன் அதை கொண்டு துரோணரை தாக்கும் எண்ணத்தை கை விடுகிறான். அர்ஜுனன் கடைசியில், துரோணர் தன் எல்லா ஆயுதங்களையும் கை விட்ட பின்னர்,  அவர் நெஞ்சத்தில் அதை செலுத்துவதும் - ஒரு உருவாகமாகவே வருகிறது.

நன்றி
வெ. ராகவ்

துரோணரின் முடிவுஅன்புள்ள ஜெயமோகன் சார்,
கார்கடலின் 81ம் அத்தியாயம் மிகவும் வேதனை படவைத்தது. வெண்முரசில் துரோணர் கர்ணர் இருவரும் எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரங்கள். உண்மையில் கால குடத்தில் இடப்பட்ட விளக்கு அவர். சிறுவனாக தகப்பனின் அன்புக்கு ஏங்கி , குலம் மறுக்கப்பட்டு . ஷத்ரியனாக ஏங்கி தேடி ஓடி கிருபியை தானம் பெற்று [தானம் பெறுவதற்கு கூட கொஞ்சம் தகுதி வேண்டும் என என் மூஞ்சில் அடித்த சம்பவம் அது] அப்பனிடம் பாதியும் சுயம்புவாய் பாதியுமாய் வளர்ந்தவர்.  ஆனால் இரும்பு ஆதிக்கம் பெரும் காலத்தில் அஸ்வத்தை தொழுதவர். அதற்கு  தன்னை அர்ப்பணித்தவர். [ஆனால் பாரதம் வெள்ளையர் வரும் வரை இரும்பை பெரிதாய் உபயோகிக்கவே இல்லை....ஏன்? ....எனது சிறுவயதில் தாமிர, பித்தளை, மண்பாண்டங்கள் தான் பெரிதாய் எல்லோர் வீட்டில் இருக்கும்.]  .என்றும் ஒலிக்கும் காயத்ரி தான் அவரின் உயிர். ஆனால் அதோடு நின்றுவிட்டவர். அதிலேயே வீங்கி அகங்காரம் கொண்டு இளையயாதவரை கணிக்க முடியாமல் போனவர். ஷத்ரிய வேதம் வரை வந்து ஒரு ஆசிரியராக அதற்குள் மூழ்கி கிடந்தவர். ஆனால் அர்ஜுனன், தர்மர், இளைய யாதவர் எல்லாம் கிராதம், சொல்வளர்காடு ,என பல குழுக்களையும் அப்போது எழுந்து வந்துகொண்டிருந்த வணிகர்கள் தங்களின் மத குருக்களாகிய அருகர்களின் போதனைகளையும் தரிசனங்களையும் கண்டவர்கள். ஏன் துரியோதனன் கூட இருக்கும் யாருக்கும் அருகர்களோடு சந்திப்பு இல்லை?  ....[சமணமதம் தான் பாரதமயமாக்கலின் முன்னோடியா?...தென்கோடி களப்பிரர்கள் பற்றி படித்தது ஞாபகம் வருகிறது]  .ஜெயமோகன் சார் கற்றுகொள்வது போதும் என முடிவெடுக்கிறது அரசாங்க ஊழியர்களுக்கு வேண்டுமானால் சரியாய் இருக்கும், ஆனால் ஒரு ராஜ்யத்தை ஆளும் மகனின் தந்தைக்கு, ஒரு தொன்மையான அரசகுலதிற்கு குருவாய் இருப்பவருக்கு,போரும் குதிரையும் மட்டும் தெரிந்து வியாபார உலகின் மாற்றம் தெரியவில்லை என்றால் குருஷேத்ரம் தான் என்பதற்கு சரியான உதாரணம் துரோணர். அனைவரும் அவரின் மாணவர்கள் இவர் மாறி அனைவரிடமும் அதிகாரமாய் கூறியிருந்தால் குருஷேத்ரமே இல்லை. ஆனால் இப்போது உள்ள சில மத ஆசிரியர்கள், அரசியல்வாதிகள் எல்லாம் பழமையை மட்டும் போதித்துவிட்டு அவர்களின் குடும்பங்களை மிகவும் நவீன படுத்தி பாதுகாப்பாய் இருப்பவர்கள். மேடையோடு போதனை சரி.நேருக்கு நேர் யுத்தம் கிடையாது அல்லவா? ஆனால் ஏன் யானை வருகிறது? அதன் கண் என்ன ? அதை ஏன் அர்ஜுனன் காயப்படுத்தினான்?  பதிலாய் "“ஆம், ஊழால் அனைத்து உயிர்களும் பின்னப்பட்டிருக்கின்றன” என்கிறார் இளைய யாதவர். என்றென்றும் அரக்ககுணமும், நாககுணமும்,மிருக குணமும்,ராஜகுணமும் இருக்கும், அனைத்தும் பின்னபட்டிருக்கும் . இப்போது அரச நாகங்கள் ஜாஸ்தி என நினைக்கிறேன். 

"அர்ஜுனன் துரோணரை நோக்கி முதல் அம்பை நோக்கி தொடுத்த கணமே அவன் உணர்ந்தான், அவனுக்கு அந்நம்பிக்கை ஆற்றலை அளித்தது அவன் ஒன்றை கரந்திருக்கிறான் என்பதுதான்.ஒன்றை கரந்திருப்பவன் பிறர் அறியாத படைக்கலம் ஒன்றை கொண்டவன். ஆகவே பிறரைவிட ஆற்றல் மிக்கவன்.நீங்கள் என்னை முழுதறியவில்லை என்று இவ்வுலகனைத்திடமும் சொல்லும்போது மட்டுமே மானுடன் தன ஆற்றலின் உச்சத்தை அடைகிறான்போலும்"[இதை எழுதி வைத்துக்கொண்டேன் ] என வாசித்தகணமே முதலில் என்ன அது என்றுதான் மீண்டும் தேடினேன்...[கரவு- ஒளிவு,மறைவு.களவு, கபடம், தீய எண்ணம் ]  எனது அறிவுக்கு எட்டியது "அஸ்வத்தாமன் வாழவேண்டும் என்றால் அர்ஜுனன் இருக்க கூடாது .அவன் சக்கரவர்த்தி ஆகவேண்டும் என்றால் குருவம்சமே இருக்க கூடாது..என எண்ணி சத்தியம் வாங்கி அவனுக்கு எல்லை கட்டியது. அர்ஜுனனுக்கு கிடைக்காத தந்தை பாசம்". ஆனால் அர்ஜுனன் எண்ணுகிறான் "அந்தணன் எனப் பிறந்த இவரை மண்விழைவென வந்து பற்றிக்கொண்ட தெய்வம் எது? இங்கு இவ்வாறு ஆட்டிவைப்பதுதான் என்ன? மைந்தன்மேல் கொண்ட பற்றா? ஆனால் மானுடருக்கு மைந்தர் விலங்குகளுக்கு குழவிகள்போல் இயல்பான குருதிநீட்சி அல்ல. பொருளேற்றப்பட்ட சொற்கள் அவர்கள் என வாசித்தபோது நெஞ்சு துணுக்குற்றது. [இப்போது எனது பயம் எல்லாம் இதை ஆர்வகோளாறில் யாரிடமும் கூறி சோதித்து பார்த்துவிடகூடாதே என்றுதான்] 

துரோணரோடு அர்ஜுனன் போரிடும்போது துரோணர் மெதுவாய் தடுமாறி விசை ஏறுவது  கண்டு அர்ஜுனன் எண்ணுவது "எதிர்நிற்பவரின் விசை மிகுவது நன்று.அது அதில் வீழ்ச்சியும் உண்டென்பதற்கான சான்று.எழுதலும் விழுதலுமின்றி நிகழ்ந்துகொண்டிற்கும் வில்திரனே வெல்லற்கரியது.இவர் சினம் கொள்கிறார்.என்னில் எழும் அம்பை கணக்கிடுகிறார், தவறும் அம்பைக்கண்டு உள்ளம் பதைக்கிறார்.நிகழ்வனவற்றில் இல்லை அவருடைய உள்ளம்.அது முன்னால் ஓடிகொண்டிருக்கிறது.நிகழில் நின்றிப்பதே யோகம்.முந்துவதும் பிந்துவது போல பிழைதான் .பிழைகள் ஆற்றலை அழிக்கின்றன. பிழையின்மையே யோகம். வெல்லமுடியாதவன் யோகி மட்டுமே.பிற அனைவரும் வில்லில் இருந்து வானுக்கு எழும் அம்புகள் போல. அவர்கள் எத்தனை விசைகொண்டிருந்தாலும் விழுந்தாகவேண்டும். யோகி ஒளி.அவன் சென்றுகொண்டே இருப்பவன்" என வாசிக்கும்போது நான் எப்போதும் செய்துகொண்டிருப்பதை  நீங்கள் கூறியது போலவே இருந்தது. என் மனம் ஒருக்காலும் நிகழ்காலத்தில் இருந்ததே இல்லை. ஓன்று பின்னோக்கி ஏங்குவது அல்லது சுய இஇரக்கம் கொள்வது அல்லது முன்னால் சென்று தேவை இல்லாமல் தப்பு கணக்கு போட்டு தோற்று திகைப்பது. இதுவே எனது வாழ்க்கையாய் இருந்தது. 

அர்ஜுனன் துரோணரின் மனக்கட்டுகளை,அவனின் தேர் துரோணரின் அம்பினால் உடைக்கப்படும் போது கண்டுகொள்கிறான்..ஐம்பது வருடமாய் புதைக்கபட்டது இவ்வளவு இலகுவாகவா? கண்டுகொள்ளபடுகிறது என ஆச்சரியமானேன்.மனதின் கட்டுகளை எல்லாம் பருப்பொருட்களை வைத்துதானே அளவிடமுடியும்... "இளமையில் எங்கோ, சிறுவன் என வாழ்ந்த தொடக்க நாளில் உள்ளத்தில் பட்ட ஒரு வடுவிலிருந்தே அனைத்தும் முளைத்தெழுந்துள்ளன. அவருடைய ஆற்றல்களுக்கு அதுவே ஊற்று. எனில் அந்த ஆற்றலுக்கு எல்லை வகுப்பதும் அதுவே. விதையிலிருந்து பெற்ற நஞ்சிலிருந்து பெருமரங்களும் விடுதலை கொள்ள இயல்வதில்லை. அதுவே நிலம் மீதான பற்று. அதுவே மைந்தன் மேலான சார்பு. அதுவே இப்புவியில் கட்டி நிறுத்தும் தளை"  அந்த வடு என்ன ?  

குருஷேத்ரத்தில் இளையயாதவரின் ஆலோசனைப்படி இரண்டாவது தடவையாய் பாண்டவர்கள் தங்களின் எல்லைகளை மீறுகிறார்கள்."துரோணரின் கவசம் இரண்டாக உடைந்து விழ அவர் நெஞ்சில் ஆழ இறங்கி நின்று சிறகதிர்ந்தது அர்ஜுனனின் அம்பு. துரோணர் மல்லாந்து தேர்த்தட்டில் விழுந்தார்" ஆனால் "ஆவநாழியை நாடி கையை கொண்டுசென்று அது நிறைந்திருப்பதைக் கண்டு திடுக்கிட்டான். அதன் எடை மிகுந்தபடியே வந்தது. தோள் தாளாமலாக அவன் ஆவநாழியைக் கழற்றி தேர்த்தட்டிலிட்டான். அவன் நோக்கி நிற்க அது பெருகிக்கொண்டிருந்தது. அவன் அவருக்கு திருப்பி அளித்த அம்புகள் அனைத்தும் அதற்கே மீண்டு வந்தன" என வாசிக்கும்போது ஆச்சரியமாய் இருந்தது. ஆசிரியரின் கீழ்மையினால் அவரை கொல்லலாம் ஆனால் இந்த உலகம் இருக்கும் வரை இருக்கும் சொற்களை எப்படி கரைக்கமுடியும். என்றும் இருக்கும் மானுட தரிசனங்கள் அல்லவா? 

ஆனால் திருஷ்டய்துமன் துரோணரின் தலையை கோழி தலையை அரிந்து எடுப்பது போல் எடுப்பது எல்லாம் சரியா ? தவறா?  என்றே சொல்ல தோன்றவில்லை. மகன் மீது மூர்க்கமான பற்றுகொண்ட ஒருவர் தகப்பனின் வஞ்சதிற்காய் ஒரு மகனால் பந்தாடபட்டார் என்றே கொள்கிறேன்.   

ஸ்டீபன் ராஜ் குலசேகரன் 

Thursday, March 28, 2019

போரின் கதி
அன்புள்ள ஜெ

மகாபாரதத்தின் 14 ஆவது நாள் போர்தான் உக்கிரமானது. கார்கடலின் பெரும்பகுதி அந்த ஒருநாள் போர்தான். அதில்தான் அத்தனைபேர் இறந்து போகிறார்கள். அவ்வளவு நிகழ்வுகள். இது நான் வாழ்க்கையிலும் பார்த்ததுதான். எல்லாமே புகைந்து புகைந்து நடந்துகொண்டிருக்கும். பெரிதாக ஒன்றும் நடக்காமல் இப்படியே முடிந்துவிடும் என்று தோன்றும். ஆனால் சரசரவென எல்லாம் நிகழ்ந்து முடிந்துவிடும். அதன்பின்னர் நினைத்துப்பார்க்கவே பிரமிப்பாக இருக்கும் . இப்போது கார்கடலை நான் மீண்டும் வாசிக்க ஆரம்பிக்கிறேன். ஒட்டுமொத்தமாக வாசித்தால்தான் புரிந்துகொள்ள முடியுமென நினைக்கிறேன்

சுரேஷ்குமார்

வெண்முரசும் மார்க்ஸியமும்

பிரியத்துக்குரிய நண்பர்  ஸ்டீபன்ராஜ் குலசேகரன் அவர்கட்கு,

வெண்முரசு விவாதங்கள் தளத்தில் நிறைவு எனும் தலைப்பிலான உங்களின் பதிவில் வெண்முரசு எனும் புனைவுக்  களத்துக்குள் மார்க்சிய தத்துவம்  சார்ந்த வினா ஒன்றை எழுப்பி இருந்தீர்கள்.

மிக விரிவான பதிலைக் கோரும் கேள்வி ஆனால் வெண்முரசு எனும் புனைவுக்குள் அதை நீங்கள் கண்டடைவதே 'புறவயமாக ;அதன் கூறுகளை சுட்டிக் காட்டி அறிவதை விட மேலான அனுபவமாக இருக்கும். 

முதல் கட்டமாக நீங்கள் வாசிக்க வேண்டியது, ஜெயமோகனின் இந்த ஞான மரபில் ஆறு தரிசனங்கள் நூலில்[கிழக்கு பதிப்பகம்] , ஜோதிப் பிரகாசம் அவர்களுடன் ஜெயமோகன் நிகழ்த்திய உரையாடலை. இந்திய ஞான மரபு எனும் ஒட்டு மொத்தம்,அதில் இந்து ஞான மரபு என் இந்த நூல் மையம் கொள்ளுவதன் கூறுகள் மீதான உரையாடல் அது. அது உங்களின் இந்த வினா மீதான பல புதிய திறப்புகளை அளிக்க வல்லது. 

இரண்டாவதாக நீங்கள் வாசிக்க வேண்டியது  தர்மானந் கோசாம்பி. எழுதிய பண்டைய இந்தியா. மற்றும் எஸ் ஏ டாங்கே எழுதிய பண்டைய இந்தியா நூல் [இரண்டு நூலும் என் சி பி ஹச் ] . இந்த இரண்டு நூல்களும் மாகாபாரதம் காலம் வரையிலான இந்திய சமுதாயம்,அதன் இனக் குழுக்களின் இயக்கத்தில் , உற்பத்தி விநியோக உறவுகளின் அடித்தளத்தில், வைத்து ஒரு அரசாங்கமாக எவ்வாறு உருத்திரண்டு எழுந்தது எனும் சித்திரத்தை, மார்க்சிய வரலாற்றுப்  பொருள்முதல்வாத இயக்கத்தின் பார்வையில் விளக்குகிறது.

இன்றளவும் இந்திய வரலாற்றின் பல கூறுகளை இணைத்து பொருள்கொள்ள வழிகோலுவது மார்க்சிய வரலாற்று பார்வையே. இந்தப் பார்வை வெண்முரசில் தொழில்நுட்பமாக அன்றி, புனைவுக் களத்தின் படைப்பியக்கக் கூறுகளில் ஒன்றாக  தொழிற்பட்டிருக்கிறது.  

நேர்காணல் ஒன்றினில் ஆசிரியர் ஜெயகாந்தன், ஒரு யுக புருஷனாக கிருஷ்ணனுக்கு நிகராக மார்க்ஸை சொல்கிறார்.  அவர் சொல்லை அடித்தளமாகக் கொண்டு  வெண்முரசுக்குள் மார்க்சிய நோக்கு எனும் உங்கள் வினாவை விவாதிக்கப் புகுந்தால். முதலில் தென்படும் அடிப்படை ஒற்றுமை  மார்க்ஸுக்கும் கீதாச்சாரியனுக்கும்  இடையிலான ஒற்றுமை, டைலடிக்ஸ் எனும் முரண் இயக்கம் மற்றும் சமத்துவம். 

அதே சமயம் கீதையின் நாயகன் ஒரு விஷயத்தில் மார்க்சியத்தை விட பல படிகள் முன்னால் நிற்கிறார். அது முரண் இயக்கங்கள் இடையே அவர் மெய்ம்மை கொண்டு சுட்டிய சமன்யம்.  மார்க்ஸ்  கையாளும் துலா இரண்டு பக்க தட்டுக்கள் மட்டுமே கொண்டது. கீதையின் ஆசிரியர் கையாளும் துலாவில் பல தட்டுக்கள். அவற்றுக்கிடையே சமன்வயம் கண்டதே நீலனின் சாதனை. 

அதே போல முற்றிலும் புறவயம் கொண்ட நோக்கு என்பதாலே [அது வரலாற்று ஆய்வு என்றாலுமே கூட] மார்க்சியத்தின் பார்வைக்கு சில எல்லைகள் உண்டு. உதாரணமாக ஒரு அரிசி மூட்டையை மார்க்ஸ் சரக்காக பார்கிறார் என்றால் எந்த அடிப்படையில்? முதலில் உண்ணும் பொருளாக அரிசி மூட்டைக்கு ஒரு பயன் மதிப்பு இருக்கிறது. பயன் மதிப்பு கொண்டதாலேயே அதற்க்கு ஒரு பரிவர்த்தனை மதிப்பும் உண்டு. 

இதை அப்படியே ஒரு வைரக் கல்லுக்குப் பொருத்திப் பார்த்தால். மார்க்சியம் இதை லட்சம் மூட்டை அரசி பரிவர்த்தனைக்கான சரக்காக மட்டுமே பார்க்கும். மாறாக ஒரு வைரம் என்பது மனிதனுக்கு அது மட்டும் தானா ? 

கார்கடலின் இறுதி அத்யாயத்தில் எழுந்து வரும் அஸ்வத்தாமன் அணிந்திருக்கும் ருத்ரமணிக்கான தன்மை மீதான விவரணைகளை மட்டும் பாருங்கள்.  விழைவு.மண் விழைவு.  

இந்தக் கூறு மார்க்சிய வரலாற்று அடிப்படை உருவாக்க நோக்கில் இடம்பெறாது. ஆக மார்க்சியம் சுட்டும் வரலாற்று வளர்ச்சி,அதே சமயம் அதை கடந்து நீலன் போன்ற ஒருவர் எதை எதிர்கொண்டு கையாண்டாரோ அது, அதையும் இணைத்து முன்நகர்வதே வெண்முரசின் அழகு.

கடலூர் சீனு

கார்கடலின் அர்ஜுனன்அன்புள்ள ஜெயமோகன் சார்,

கார்கடலின் 82ம் அத்தியாயம் நமக்கு மிகவும் பழகிய ஓன்று என்று ஒரு நாள் கழித்து மீண்டும் வாசிக்கின்றபோது தெரிகிறது. [முதல் தடவை வாசித்து சோர்ந்து தூங்கிவிட்டேன். அவ்வளவு பெரிய தாக்கம் ]ஒரு இருபது வருடங்களுக்கு முன் எனது நண்பனின் குடும்பத்தில் இருவர் சொத்து தகராறில் கொல்லப்பட்டனர். ஒருவர் அவனது அக்காவின் கணவர், இன்னொருவர் அவனது சித்தப்பா. பெரிய நிலபுலம் கொண்ட,அதிகாரம் கொண்ட  குடும்பம். ஒருவரை சாராயம் குடிக்க கூட்டிசென்று நண்பர்கள் போல் பேசி கொன்றனர்.ஒருவரை அவர் வீட்டிற்கு கறி எடுக்க சைக்கிளில் செல்லும்போது கொன்றனர்.அதுவரை அவர்களை நான் பார்த்ததற்கும் அதற்கு பின் அவர்களை பார்த்தற்கும் நிறைய வேறுபாடு. பிறகு அந்த ஏரியாவே மாறியது. எவ்வளவு படுகொலைகள்.  ஆனால் அந்த குடும்ப பெண்கள், எதிரில் நின்றவர்களின் குடும்பபெண்கள் நிலைமை பரிதாபம். அந்த வீட்டு பெண்களை சந்தித்தால் என்னிடம் அவர்கள் புலம்பி அழுவார்கள்.சேலையால் மூக்கை மூக்கை சீந்தியபடி என்னிடம் அழுது புலம்பிய ஒரு பாட்டியின் முகத்தை பார்த்து திகைத்து நின்றது இப்போதும் திகைக்கவைக்கிறது. எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை, அப்போது எனக்கு  " இவர்கள் ஏன் இதை என்னிடம் சொல்கிறார்கள்? " என்றுதான் தோன்றும். எனது மண்டை இப்போதுபோலவே குருவி மண்டையை விட சிறியது. நானே அந்த பெண்களை பிரமிப்பாய் பார்த்துகொண்டு இருப்பேன்.நான் செல்வது ஆஸ்டல் சாப்பாடினால் வெறுத்துபோய் அவர்கள் வீட்டில் சாப்பிட.

துரியோதனன் அவனின் ஆசிரியரும் துரோணரின் மைத்துனனுமாகிய கிருபரிடம் "ஆசிரியரே, இக்களத்தில் யுதிஷ்டிரர் கொன்று வீழ்த்தப்பட்டால் வெல்வது நாம் மட்டுமல்ல, நமது தந்தையர் சொல்லும்தான், ஒன்று கொள்க! யுதிஷ்டிரன் இங்கே வென்றால் பிறிதொரு யுகம் பிறக்கிறது. இருளின் காலம். கீழ்மையின் காலம். எங்கும் எதுவும் நிலைகொள்ளாத பிறிதொரு யுகம்” என கூறுகிறான்.ஜெயமோகன் சார், எனது மனதில் எப்போதும் தோன்றி மின்னும் ஓன்று ஒரு ஏரியாவில் அல்லது ஒரு நாட்டில் படுகொலைகள் விழுந்து கொண்டே இருந்தால் அந்த இடம் மாறுகிறது என்று. காதலில் கொலைகள் விழுந்து கொண்டிருந்தால் அந்த சமுகம் காதலின் அர்த்தத்தை மாற்றுகிறது. குடும்ப உறவுகளில் கொலைகள் விழுந்தால் குடும்ப உறவின் அர்த்தம் மாறுகிறது.மத சண்டைகளில் கொலை விழுந்து கொண்டிருந்தால் மத பிடிப்பில் மாற்றம் வருகிறது. அரசியலில் கொலைகள் விழுந்து கொண்டிருந்தால் அரசியல் மாறுகிறது. "மாற்றம்" என்றால் சிம்பிளாக படுகொலைகளின் ரத்த வெள்ளம் . சிந்திய வெண்மணி கூட சிப்பிக்குள் முத்தாகும்போது  ரத்தம் வீணாகுமா? அதற்கு அஞ்சித்தான் சமூகம் மாற்றம் என்றால் பீதியாகிறதா? ஆனால் மாறித்தான் ஆகவேண்டும். 

ஜெயமோகன் சார், நீங்கள் அடிக்கடி கூறுவீர்கள் வரலாறு என்பது வெற்றி பெற்றவர்களின் வரலாறு என்று [ஆனால் நீங்கள் எப்போதுமே தோல்வி அடைந்தவர்களின் வரலாற்றையும் படிக்கும்படி ஊக்குவிப்பீர்கள்]. உங்களின் கட்டுரை " பாவ மௌன"த்தில் ஹிட்லரின் படுகொலை கண்டிக்காத பாப்பரசர் பனிரெண்டாம் பயசின் மவுனத்தை குறித்து படிக்கும்போது பெரிய அதிர்ச்சியடைந்தது இப்போது ஞாபகம் வருகிறது. [அவர் அமெரிக்கா ஜப்பான் மீது குண்டு போடும்போது என்ன கூறினார் ? என்பதுதான் எனது அடுத்த கேள்வியாக இருந்தது.]   அதை துரியோதனன் “இத்தனை நாள் இங்கு நிமித்திகர் கூறிக்கொண்டிருந்தார்கள் இனி எழுவது கலியுகம் என்று.இருளின் இறைஎழும் காலம் என்று.ஆகவே நான் மகிழ்ந்தேன் என் தெய்வம் எழுகிறது என.என் இறையின் அருளால் நானே வெல்வேன் என்று கற்பனை செய்தேன்.இன்று உணர்கிறேன் மெய்யாகவே கலியுகம் யுதிஷ்ட்ரன் வெல்லும்போதுதான். எழும் கலியுகத்தில் அவனையே அறச்செல்வன் என முன்னிறுத்துவார்கள்.அவனுடைய வெற்றியை அறத்தின் வெற்றி என்று புனைந்துரைப்பார்கள். கலியுகத்தில் அறமின்மை அறத்தின் மாற்றுரு பூண்டுதான் எழும். அறமென தன்னை எதிர்ப்பவர்க்கும் அறம் கடந்த தன்னலமே என தன்னவருக்கும் அது முகம் காட்டும் .ஆசிரியரே ,அதை எவரும் பேசி வெல்லமுடியாது விளக்கி அகற்ற முடியாது. சொல்லுக்கு அடங்காத ஒன்றை வெல்ல தெய்வங்களாலும் இயலாது என வாசித்து பேய் அடித்தது போல் நிற்கிறேன். இப்படி அப்பட்டமான உண்மையை எப்படி ஜீரணிப்பது?. இது புரியாமல் பொத்தி பொத்தி அழுத்திகொண்டு,புரியாமல் தவித்துக்கொண்டு வாழ்வதை நினைத்தால் வெட்கமாய் இருக்கிறது. ஆனால் யுதிஷ்டிரன் போல வாழ என்ன பண்ண? மீண்டும்  வெண்முரசை படிப்பதையும் உக்கிரமாய் செயல் ஆற்றுவதையும்  தவிர வேறுவழி இல்லை. கலியுகத்தில் மட்டும் அல்ல எந்த யுகத்திலும் வெல்ல சூழ்ச்சிகள் தேவைதான் போலும். இருள் என்னும் நீலி. துரியோதனன் ஏன் ஆரம்பத்தில் இருந்தே நல்லவனாக,கொஞ்சம் மங்குனியாக, சொல்நுழையாதவனாக வெண்முரசில் சித்தரிக்கப்பட்டுகொண்டிருந்தான் என இப்போது புரிகிறது.

இன்றைய நிலைமையை நன்றாய் கூறுகிறது வெண்முரசு துரியோதனன் சொல்லாய் "இனி எழவிருக்கும் யுகத்தில் படைவீரர்கள் பீமனைப் போலிருப்பார்கள், வஞ்சத்தால் அடையும் விழியின்மையையே ஆற்றலெனக் கொண்டிருப்பார்கள். அரசர்கள் அர்ஜுனனைப்போல் கொல்லும் கூர்மையை மட்டுமே சென்றடைவார்கள். நெறிகற்றோர் யுதிஷ்டிரனைப்போல அனைத்தையும் சொல்லி நிறுவும் வெறும் நாவலராகவே எஞ்சுவார்கள்.” இப்போது அப்படிதானே இருக்கிறார்கள்.பொதுமக்களாகிய நாம் இயலாமையினாலும் பொறாமையினாலும்  பொங்குபொங்கு என இணையத்திலும் 'பார்வதிபுரம் பாலம்"கட்டுரையில் நீங்கள் கூறியது போல் “நாங்கள் புதைக்கப்படவில்லை, விதைக்கப்பட்டிருக்கிறோம்”என்று கூவி "கூச்சல் என்றால் நினைத்துக்கொள்வதுதான்" என்றும் கடந்து செல்வோம். கலியுகத்திற்கு என்ன ஒரு காம்பினேசன் ?   வேறு என்ன செய்யமுடியும் ? வஞ்சத்தால் விழியின்மை கொண்டிருக்கலாம், கொல்லும் கூர்மை கொண்டிருக்கலாம், சொல்லி நிறுவும் நாக்கு கொண்டிருக்கலாம் ..இது இல்லாமல் வாழவே முடியாதா? .ஒரு ஐந்து வருடம் முன்  என்னை "நீ ஒரு பிள்ளைபூச்சி" என ஒரு ரீசார்ஜ் பண்ணும் கடைக்காரன் கூற மனம் கூச்சல் போட்டது ஞாபகம் வருகிறது.

அந்த சூழ்நிலையிலும் கிருபர் புன்னகைப்பதை நினைத்தால் "இவங்கலாம் யாரு?" என்றே எண்ண தோன்றுகிறது. இப்போது நமது அரசியல்வாதிகள் இறந்தவர்களின் வீட்டில் சிரித்து பேசிகொண்டிருப்பதையும், சவபெட்டிகளின் முன் செல்பி எடுத்து கொண்டிருப்பதையும் கண்டு பொங்குபவர்களுக்கு இந்த ஒரு அத்தியாத்தையாவது படிக்க சொல்லவேண்டும். கிருபர் கூறுகிறார்" ஒவ்வொரு மெய்வழியும் எண்ணித்தொடமுடியாத தொன்மை கொண்டது. ஒன்றுக்குப் பிறிதொன்று இளையது அல்ல. ஒன்றை பிறிதொன்று இணைத்துக்கொள்கையிலேயே பிறிதொன்றைவிட பெரிதாகிறது. அனைத்து ஆறுகளும் கடல்சேர்வதுபோல் அவையனைத்தும் மெய்மைப் பெருவிரிவையே சென்றடைகின்றன என்கிறது உபநிடதம்” என்றார். “தாங்கள் அறிந்த மெய்மையை தொல்முனிவர் அனைத்திலும் கண்டடைந்தனர். அனைத்திலும் வெளிப்படுத்தினர். சொல்லில் அது வேதம். கல்லில் அது சிலை. வில்லில் அது அம்பு. எண்ணிறந்த பொருட்களில் எண்ணிறந்த வடிவில் அது நின்றுள்ளது. ஒன்றில் அதை கண்டடைவது யோகம், எங்குமென அறிந்தமைவது ஞானம்.” இந்து மதத்தின் பண்பு. அதை புரிந்து விரித்து பரப்பி கொண்ட ஞானிகளின் கூறு. எவ்வளவு பெரிய ஞான வெளி. எனக்கான ஓன்று எது? ..

கிருபர் கூறுகிறார்.......இது இனிமேல் எழுயுகத்தில் சற்றேனும் அறம் எஞ்சவேண்டும் என எண்ணுபவர்களுக்கும, எவ்வகையிலேனும் வெல்வதே இலக்கென்று எண்ணுபவர்களுக்கும் இடையேயான போர். நீங்கள் இங்கு என்ன செய்தாலும் தெய்வங்களால் வாழ்த்தப்படுவீர்கள்.” ....திகைத்து திகைத்து மனம் சோர்வுருகிறது.துரியோதனன் கூறுகிறான் "இவர்கள் அறமிலிகள் அல்ல. இவர்கள் வருயுகத்தின் வடிவங்கள். அறமயக்கங்களை உருவாக்குபவர்கள். நூல்துணையும் தெய்வத்துணையும் கொண்டு அழிவை நிகழ்த்துபவர்கள். இவர்களை எதிர்த்து இனி தெய்வமும் எழப்போவதில்லை. கலியுகத்தில் வேதம் காக்க விண்ணளந்தோன் எழமாட்டான் என்கின்றன நூல்கள்.இவர்களை இன்று வென்றாகவேண்டும் என்று....நாராயண அம்பின் பலன் என்னவாய் இருக்கும்? ஸ்டீபன் ராஜ் குலசேகரன் 

Wednesday, March 27, 2019

துரோணர்
அன்புள்ள ஜெ

கார்கடலின் தொடக்கத்தில் கர்ணன் நுழையும்போது துரோணர் இந்நாவலில் சிறிய கதாபாத்திரமாக ஆக்கப்படுவார் என நினைத்தேன். ஆனால் அவருடைய கிரே ஏரியா தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு அவர் மிகச்சிக்கலான பெரிய கதாபாத்திரமாக ஆகிவிட்டார். பொதுவாக கிளாஸிக் உத்தி என்பது கதாபாத்திரத்த்தின் நன்மை அல்லது தீமையை மிகைப்படுத்தி பெரும் வடிவம் கொள்ள வைப்பது. கிரே ஏரியாவால் பெரிய வடிவம் அடைந்த கதாபாத்திரம் என்றால் துரோணர்தான். அவருக்குள் என்னென்ன நிகழ்கிறது என்பதை முழுசாக புரிந்துகொள்ளவே முடியவில்லை


ராஜ்

கார்கடல் வடிவம்
ஜெ

கார்கடல் பற்றி முழுமையாகத் தொகுத்து எவரேனும் எழுதுவார்கள் என நினைத்தேன். நாவலுக்கு ஒரு புற ஒற்றுமை உள்ளது. நான்கு கதைசொல்லிகள் வழியாக வேறுவேறு கோணத்தில் கதை சொல்லப்படுகிறது. துரோணரின் கதை மையமாக அமைந்துள்ளது. கர்ணனின் வருகையில் தொடங்கி அவனிடமே முடிகிறது

ஆனால் கதையின் மைய ஓட்டம் என்ன? தந்தை மகன், ஆசிரியர் மாணவர் முரண்பாடுகள் நாவல் முழுக்க உள்ளன. அபிமன்யூவும் கடோத்கஜனும் லட்சுமணனும் துருமசேனனும் கொல்லப்படுகிறார்கள். ஏராளமான மரணங்கள். ஒன்றோடொன்று அனைத்தையும் இணைத்து ஒரு மொத்தமான சித்திரத்தை உருவாக்கிக்கொள்ள கொஞ்சம் கடினமாகவே உள்ளது

சரவணன்

போரின் வழிகள்அன்புள்ள ஜெயமோகன் சார்,

கார்கடல் 86ம் அத்தியாத்தில் படைபிரிவினர் எப்போதும் போல் தங்களின் தலைவர்கள் தர்மம் தவற இறந்து போனவரை திட்டி தீர்க்கிறார்கள். என்ன பண்ண? அது எல்லாம் அவர்களின் வாழ்க்கைக்குள்ளே இல்லை. அது வேறு யாரோ எடுக்கும் முடிவு. இப்போது துரோணரை திட்டி தீர்க்காவிட்டால் அவர்களின் தரப்பில் இதுவரை இறந்தவர்களின் வாழ்க்கைக்கும் இனி இறக்கபோகும் தங்களின் வாழ்க்கைக்கும் என்ன பயன் என எண்ணினால் நெஞ்சே வெடித்துவிடும் அல்லவா? எனது வாழ்வில் ...நான் கண்ட...ராஜீவ் காந்தியை கொன்றபின் நிகழ்ந்தவைகளும் ஈழத்தமிழர்கள் கொன்று குவிக்கபட்டபின் நிகழ்ந்ததும் தொகுத்தால்  படைப்பிரிவினர் திட்டுவது எல்லாம் ஒன்றும் இல்லை. உங்களின் கட்டுரையாகிய "தன்னை அறியும்கலையில் " கோர்க்கி புறவயமாய் பார்த்து தனக்குள் உள்ளே இருக்கும் ஒளியை மறைத்துக்கொண்டு ஸ்டாலினுக்கு சப்போர்ட் பண்ணிகொண்டிருந்ததை "கோர்க்கிஉண்மையை தனக்குத்தானே ஒப்புக்கொள்ள மறுத்தார். அதை என்னால் நுட்பமாக உணர முடிகிறது. அவரே உருவாக்கிய கனவு. அதன் சரிவை இல்லை என கற்பனைசெய்ய அவர் விரும்பினார். சரியாகிவிடும், இதெல்லாம் சிறு பிசிறுகள் மட்டுமே என சமாதானம் செய்துகொள்ள முயன்றார். உண்மையைக் காண்பதை அவர் கடைசி நிமிடம் வரை ஒத்திப்போட்டார்.காரணம் உண்மை அவ்வளவு கொடூரமானது. என்று எழுதி இருக்கிறீர்கள். கோர்க்கிக்கு மட்டும் அல்ல எல்லாருக்கும் உண்மை கொடூரமானதுதானே?  காந்தியின் மறைவுக்கு பின் ஏன் நேரு தனது  குடும்பத்திடம் கொஞ்சம் சாய்ந்தார் என்பதற்கும் இதுதான் காரணமாய் இருக்கலாம். 

 யுதிஷ்டிரர் “நாம் ஐவரும் ஓரிடத்தில் இருக்கவேண்டும். நம்மை அவன் தனித்தனியாக எதிர்கொள்ளக் கூடாது. நாம் இளைய யாதவன் விழிதொடும் தொலைவில் இருக்கவேண்டும்”  என ஏன் இவ்வளவு பதறுகிறார் என நினைத்தால் ஆச்சரியமாய் இருந்தது. சூதாடி அனைத்தையும் இழந்தவர். அப்போது எல்லாம் அழுது குற்றவுணர்வு கொண்டு அழுததோடு சரி. ஏனென்றால் இது யுதிஷ்டரின் கலியுகம். இங்கு என்ன நடக்கும் என அவருக்கு நன்றாகவே தெரியும். வழக்கம் போல் பீமனுக்கு ஆணை இட அவன் அதை காதிலே வாங்காதது போல் நடித்து கடுபேற்றுகிறான். அது அவனின் இயல்பு. இல்லை என்றால் துரியோதனனே பீமனின் களங்கமின்மை பற்றி புகழ்வானா? 

பாண்டவர்கள் தங்களுக்குள் பூசலிட ஆரம்பித்தாலே நெஞ்சு பதைக்க ஆரம்பிக்கிறது. ஏன் என்றால் எப்போது எல்லாம் வாக்குவாதம் செய்து தங்களுக்குள் அடித்துகொண்டு தர்மரை கடுப்பேற்றி அவரை அழவைக்கிறார்களோ  அதற்கு பிறகு அவர்கள் நான் எண்ணவே முடியாத ஒரு கொடுங்காரியத்தை செய்யபோகிறார்கள் என எனது மனது  எண்ண ஆரம்பித்துவிட்டது. உண்மையில் அவர்கள் செய்த காரியத்திற்கு பூசலிடவில்லை, அடுத்து செய்யவேண்டியதற்கு பூசலிடுகிறார்கள். பீமன் , அர்ஜுன் எல்லாம் பின்னோக்கி திரும்பி பார்க்கிறவர்களா என்ன?  அடுத்துயாரோ ?

ஆனால் எல்லாரும் ஏன் திருஷ்டத்யும்னனை ஆணிலி என கூறுகிறார்கள்? ஏன் சாத்யகி வந்ததும் சண்டைபிடிக்கிறான்?  ஒருவேளை அவன் பூரிசிரவசின் தலையை அறுத்ததற்கு குற்றவுணர்வு கொண்டு தர்மரை அடிக்கபோகிறது போல் செல்கிறானா? இல்லை இளைய யாதவரின் திருவிளையாடலா? ஸ்டீபன் ராஜ் குலசேகரன் 

Tuesday, March 26, 2019

அந்த இறுதி அம்புஅன்புள்ள ஜெயமோகன் சார்,

கார்கடலின் 85ம் அத்தியாயம்  ஒரு மகனிடம் தந்தையின் இறப்பை கூறுவது. அஸ்வத்தாமனுக்கு தந்தை இறந்தது  கிருபர் வந்த உடனே புரிகிறது. திருஷ்டத்யும்னன்  தனது தந்தையை தலையை அறுத்து எடுத்தான் என கேட்டு அவன் உடலில் மெல்லிய அசைவொன்று நிகழ்கிறது. தர்மர் தான் இறந்துவிட்டதாய் துரோணரிடம் கூறினாரா? என அவனே கேட்கிறான். அனைவரும் தர்மரா? தர்மரா? என திகைக்கும்போது அவனுக்கு எப்படி தர்மர் கூறுவார் என தெரியும்?  தனது தந்தையை வீழ்த்திய அம்பின் பெயர் என்ன ? என்று கிருபரிடம் அஸ்வத்தாமன் கேட்க "ஸ்வம் 'என்று அழைக்கப்படுகிறது. மிகச் சிறிய அம்பாக ஒரு வீரனுக்கு கிடைக்கும் என்கிறார்கள். ஒரு சிறு புழு வடிவில், அல்லது ஒரு துரும்பு அளவிற்கு. அதை முதலில் பார்க்கையில் பேரழகு கொண்டிருக்கும். காலையொளியில் வைரம்போல் சுடர்விடும். சுட்டுவிரலால் அதை தொட்டெடுத்தால் நறுமணம் கொண்டிருக்கும். அதை தன் ஆவநாழிக்குள் அவன் வைத்துக்கொள்ள வேண்டும். அது எப்போதும் அங்கிருக்கும்...என கிருபர் கூற எனது ஸ்வம் [இயற்கையானது, தன்னுடையது , மாயை கலப்பிலாத தான், சொத்து என்றெல்லாம் அர்த்தம் இருக்கிறது. ஒருவேளை சொத்தை மட்டும் தானாக கொண்டிருக்கும் துரோணரின் இயற்கையா?  என்ன ? என மனது ஏங்கியது. அது நமக்கு தெரிந்தால் போராட ஈஸியாக இருக்கும் இல்லையா? ..ஆனால் அது எதிரிக்குத்தான் அல்லது நம்மோடு இடைவிடாது புழக்கத்தில் இருப்பவர்களுக்குதான் தெரியுமா?  நமக்கு தெரிந்தால் பிரச்சனையே இல்லை ...இல்லை தெரிந்தும் அதை மூடி வைத்து இருக்கிறோமா?  

கிருபர் "அம்பறாத்தூணிக்குள் அறியாது வளர்கிறது. ஆவநாழியிலிருந்து எழும் ஒவ்வொரு அம்பையும் அது நோக்கிக்கொண்டிருக்கிறது. வெல்லும் அம்புகளில் துள்ளுகிறது. வீழும் அம்புகளில் துவள்கிறது. ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னரும் இருமடங்கு வளர்கிறது. ஒவ்வொரு தோல்விக்குப் பின்னரும் மும்மடங்கு வளர்கிறது. தொடும்போது நூறு மடங்காகிறது. எடுக்கையில் ஆயிரம் மடங்கு. ஏவுகையில் பல்லாயிரம் மடங்கு. அது வெற்புகளை உடைத்தழிக்கும் ஆற்றல் கொண்டது. பெருங்கடல்களை அனலாக்கும் நஞ்சு கொண்டது. அத்தனை தெய்வங்களும் அஞ்சும் பேராற்றல் கொண்டது.” என விரித்துகூற.. என்னது ? என்னது என்றே மனம் தேடுகிறது. ஒவ்வொரு தகப்பனும் தனது மகனுக்கு அவன் இயல்புக்கு தக்கபடியோ இல்லை தனது இயல்புக்கு தக்கபடியோ ஒரு ரகசிய அஸ்திரத்தை கொடுப்பார்கள் என்றே நினைக்கிறேன். இல்லை என்றால் இந்த சிறிய பூமியில் புழு போல் நாம் முட்டி மோதுவது ஏன்?

பழிவாங்க துடிக்கும் அஸ்வத்தாமனிடம் "பெரும்பழி ஈட்டி அதற்கு ஈடுசெய்ய ஒண்ணாமல் புவியில் நீடுவாழியாவது… வேண்டாம், மைந்தா என தனது மருமகனை பார்த்து கிருபர் கூற "எந்தைக்கு நான் ஆற்றும் கடன் அதுவென்றால் அது எனக்கு உகந்ததே… மாதுலரே, இங்கு வாழ்ந்த மைந்தர்களில் தந்தைக்கு எண்ணித்தொடமுடியா பெருங்கொடை அளித்தவன் நான் என்றே ஆகுக!”   என்கிறான். திகைக்க வைக்கும் தருணம். இந்த பூமியில் கோடிக்கணக்கான உயிர்கள் எப்படி ? ஏன்? பிறந்து உதிர்கின்றது என்பதற்கு தத்துவமான ஒரு விடை. 

ஸ்டீபன் ராஜ் குலசேகரன் 

கார்கடல் முடிவுஅன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

கார்க்கடல் வேகமாக சென்றது, ஆனால் என்னால் வேகமாக வாசித்துச் செல்ல முடியவில்லை.  அவ்வளவு இருக்கிறது நின்று நோக்கி பல கோணங்கள் கண்டு ரசித்து உய்த்து உணர்ந்து செல்ல.  ஒரு கலைவடிவில் மற்றொரு கலையின் விளைவைக்  கொண்டு வர முடியுமா? இங்கு எழுத்தில் நடனம் இருந்தது இசை விளைந்தது இருட்குகைகளின் அற்புத ஓவியங்கள் விண்ணில் எழுந்தன.  விழி நோக்காது விலகுக என்று தோன்றச் செய்யும் மதுரை அக்கினி வீரபத்திரன் போல் விழிகொண்ட சிற்பங்கள் எழுந்தன.  கொலை வெறி, பேரன்பு, ஒருவர் மற்றவர் ஆதல், பெருவிசையுடன் ஊழிமுதல்வன் நடனம் ஒட்டுமொத்த பொருளின்மையை பேரருள் என்று காட்டிய கூத்து.  இரவு பைட் சீன் தொடங்கியவுடன் என் வாசிப்பு வேகத்தைக் குறைத்துக் கொண்டேன்.  சாப்பிடுவதை ரசித்து ருசித்து சாப்பிட வேண்டும்.  அவசரமாக தின்று செல்ல விருப்பம் இல்லை. 

போர் என்றால் எல்லோருக்குமே தோல்விதான் என்ற பொதுக்கருத்து இங்கு இல்லை.  இந்த போரில் ஒருவகையில் எல்லோருக்குமே வெற்றிதான்.  நம் பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை என்பதில்...இல்லை என் இறப்பு என் கையில்தான் இருக்கிறது என்றே இங்கு இறந்த ஒவ்வொருவனும் எடுத்துக் கொண்டவன்.  வேற்றுகிரகவாசி போல நடுவே இளையயாதவன்.  இங்குதான் இருக்கிறான் ஆனால் அவன் வேறு.  அகங்காரம் எங்கே செல்லவே செல்லாதோ அங்கு முழுவீச்சுடன் அதையே கொண்டு அதன் உச்சத்தில் ...வீசித்தான் எறிந்து கொள்வோமே? இந்த புத்தன்கள் ஊழ்க சாமிகள் ஏதேனும் சொல்வார்கள் ..எவ்வாறோ தவிக்கும் உள்ளங்கள் அறிந்துதானே இந்த மாடு மேய்க்கும் பையன் அவர்களை இங்கு ஒட்டி வந்தான்?  "உன்னிடம் இருப்பதைக் கொண்டே வா.  மற்றவை நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று ரகசியத் தகவல் ஒவ்வொருவருக்கும் தந்திருப்பான் இல்லயா திருடன் ! 

துச்சாதனன் மகனின் சாவில் புத்திர சோகத்தில் அழ .....மற்றவர்கள் கடோதத்கஜன் சாவில் கொஞ்சம் சந்தோஷம் கொண்டு ரிலாக்ஸ் செய்கிறோம்.  உங்கள் துக்கம் உங்களுக்கே என்று தந்துவிடுகிறார்கள்.  பொது உணர்வில் தனிப்பட்ட ஒன்றின் மதிப்பின்மை.   அந்த முரண்.  ரொம்ப  ஆர்ப்பாட்டம் செய்தால்... நீ மட்டுமா இழந்தாய் நாங்களும்தான் ..சுயநலவாதி ...அப்பாடா உனக்கும் ஆகிவிட்டதா மகிழ்ச்சி ...ஆ அது நியாயம் என்று ஆகும் ....எத்தனை மடிப்புகள்?

எல்லோரும் உறக்கத்தில் விழுகிறார்கள்.  பிணங்களுக்கு இடையே படுத்துக் கொள்கிறார்கள்.  "சரி சரி .....எந்திரிச்சப்புறம் பாத்துக்கலாம்" ஆணவத்தின் ப்ளக்கைப் பிடுங்கி உறங்கப் போடும் உடல்.  

.....எதிரில் இளைய யாதவனைக் காண்பது பின் தன்னை இளைய யாதவனாக உணர்வது.  பேருருக் கொண்ட இளைய யாதவன் அவனே அவனுடன் போரிடுவது.

இழை பின்னல் ...நீலம் ...குழல் இசை.  அசுரர், நாகர், ஷத்ரியர் கொண்ட வேதங்களை இணைத்து ஒன்றாக்கி நெய்தல் ..........இந்த இசை அரிது ....இங்கு அவன் காட்டப்படுவது ....இங்கு அவன் இசை என உருக்கொள்வது...என் உணர்வை சொல்லாக்க முடியாதுதான்........விலங்குகளின், இயற்கையின் சப்தங்களை.....சப்தங்களை அவன் இசை ஆக்குகிறானே? மானுடப் பொதுமை என்று ...உயிர்ப் பொதுமை என்று  இழுக்கிறானே !    கீதை! ....வேதங்களை, வழிமுறைகளை, சடங்குகளை, பயிற்சிகளை, தத்துவங்களை .பாடலாக்குவது ஒரு கடைஞ்செடுத்த உத்தமனால் மட்டுமே இயல்வது.       

வெண்முரசு தமிழ் மொழிக்கு அருளப்பட்ட வரம்.   இனிவரும் நூறாண்டுகள் தமிழ் பண்பாட்டை, அதன் திசையை தீர்மானிக்கும் விதைகள் இதில் உள்ளது.  அவை பெரும் விருட்சங்களை உருவாக்கப் போகின்றன.  அதன் பொருட்டே வெண்முரசு தொழுவோரால் தொழப்படவும் அஞ்சுவோரால் அஞ்சப்படவும் செய்படுகிறது.
   
வெண்முரசு எழுதும் கலைமகளின் முன் சொல்லடுப்பது  கடிதங்கள் எழுதுவது என்பதெல்லாம் ஏற்கனவே மழலையாக குழறலாக உளறலாக தெளிவாக நேர்த்தியாக எவ்வகையிலும் வெளிப்படும் உரிமை கொண்ட குழந்தைகள் என்று கொண்ட துணிவினால் மட்டுமே.      

அன்புடன்,
விக்ரம்,
கோவை.

Monday, March 25, 2019

வண்ணக்கடல்இனிய ஜெயம் 

இருபத்தி நான்காவது புதுவை வெண் முரசு கூடுகை சிறப்பாக நிகழ்ந்தேறியது. நிகழ்வுக்கு வரும் வழி முழுதும் இந்த கூடுகை சார்ந்த நினைவே சுற்றி வந்தது. இரண்டு வருடம். இடையறாத இரண்டு வருடம்.  புதுவை நண்பர் ஹரிக்ரிஷ்ணன் வீட்டில் பெரும்பாலானோர் வெண் முரசின் வாசகர். நாம் கூடி வெண்முரசின் அத்யாயங்களை இன்னும் ஆழமாக அறிந்து கொள்ள ஒரு கூடுகை ஒன்றை மாதமொருமுறை நிகழ்த்துவோம் என்ற அவரது விருப்பமே, இந்த கூடுகையாக வளர்ந்து நிற்கிறது. 

முதல் அமர்வில் கண்ட அவரது உறவுகள் இந்த அமர்வு வரை இடைவெட்டின்றி வந்து கொண்டிருக்கிறார்கள். பண்ருட்டி ராதாக்ருஷ்ணன், திருமாவளவன் தொலைவில் இருந்து தவறாமல் வந்து கலந்து கொள்கிறார்கள். மயிலாடுதறை பிரபு இரண்டு மணி நேரம் மட்டும் நிகழும் இந்த உரையாடலுக்காக அவர் அங்கே மதியம் இரண்டு மணிக்கு கிளம்பி, நள்ளிரவு இரண்டு மணிக்கு மீண்டும் வீடு திரும்புபவராக இருக்கிறார். [எதிர் மாறாககூப்பிடு தூரத்திலிருக்கும்  இந்த கூடுகையின் முதல்வரான சிவத்மாவோ எப்போதேனும் தென்படுபவராக இருக்கிறார் :) ]. அவ்வப்போது வந்து செல்லும் புதிய வாசகர்கள், சென்னை வெண்முரசு நண்பர்கள், எழுத்தாளர்கள் வருகை  என உற்சாகமாக முன் சென்றுகொண்டிருக்கிறது கூடுகை.

இந்தக் கூடுகையின் பேசுபொருளான வெற்றித் திருநகர் குறித்து தான் ரசித்தவற்றை பகிர்ந்து உரையாடலை துவங்கி வைத்தார் திருமாவளவன். இறுதியாக இந்த அத்யாயத்தில் வரும் உணவிடும் பண்பாடு வழியே சமணத்துக்கு சென்று சுழன்றது உரையாடல். 

மணிமாறன் இந்த அத்யாயங்களின் சில தருணங்கள் வழியே வள்ளுவர் குறள்,பாரதியார் கவிதை வரிகள் சில எவ்வாறு தனக்கு புதிய பொருள் அளிக்கத் துவங்குகிறது என்று பகிர்ந்து கொண்டார்.

ஒவ்வொரு அத்யாயத்திலும் வரும் வர்ணனை அழகுகளை வளவ துரையன் அவர்களும் விஜயன் அவர்களும் பகிர்ந்து கொண்டார்கள்.

கங்கையில் வீசப்பட்ட பீமன், அதல ,விதல, சுதல,பாதாள, என லோகங்களாக நிகழ்த்தும் பயணங்களை மரணத் தருவாயில் பீமனின் மன அடுக்குகள் வழியே அவன் நிகழ்த்தும் பயணமாகவும்,பயணத்தின் இறுதியில் எஞ்சும் புள்ளி எதுவோ அதில் நஞ்சை சுமப்பவனாகவும் அவன் மாறிப்போவதை, புதிய கோணம் ஒன்றை திறந்து உரையாடினார் ராதாக்ருஷ்ணன். ராதா கிருஷ்ணன் மணிமாறன் இருவருக்குமே தனிப்பட்ட முறையில் பிடித்த புள்ளியான,குந்தி விதுரன் ஈர்ப்பின் நாடகம் இந்த அத்யாயத்தில் எவ்வாறு துலங்கி நிற்கிறது என்பதை இருவரும் பகிர்ந்து கொண்டார்கள். 

தாமரைக் கண்ணன் மையம் கொண்ட தருணம் மிக முக்கியமானது, பீமன் நஞ்சு கொண்டு மயங்குமுன் அக ஆழத்தால் அங்கே தன்னை தேடிக்கொண்டிருக்கும் தர்மனை அறிபவனாக இருக்கிறான். இதோ இன்றைய நாராயண அஸ்திரம் முன்பு பீமன் நிற்கும் தருணம், தர்மன் என் மைந்தா என்று கூவும் இக்கணம் வரை தர்மன் அவ்வாறுதான் இருக்கிறான். 

மற்றொரு முக்கியமான தருணம் அரவுக்கரசி பீமனுக்கு அவன் எந்த வஞ்சத்திலும் வீழாதிருக்கும் பொருட்டு  தனது சிறந்த நஞ்சினை உபசரிப்பாக அளிக்கும் இடம். உபசரிப்பு எனில் அதனை  தவிர்க்க முடியாது,மேலும் அம்மாவை கேட்டு விட்டு கூட அருந்து,என வாய்ப்பளிக்கிறாள்.[ குந்தி என்ன சொல்வாள் என முன்னுனர்ந்தவளாக இருக்கிறாள் :) ] அதற்க்கு முன்பாக பீமனுக்கு அவள் அளிப்பது சர்வ வல்லமை கொண்ட நாகாஸ்திரம் . 

அதை பீமன் மறுக்க அவன் சொல்லும் சொல் முக்கியமானது. ''சத்ரியன் தனக்குத் தேவையானதை வென்றடைந்து கொள்வான்.அவன் தானம் பெறமாட்டான்''.  கர்ணன் தானமாக பெற்ற அம்பு. கடோத்கஜனை கொன்ற அம்பு. 

மேலும் சென்னம்மை கை பழைய சோற்றை அது வர்ணிக்கப்படும் விதத்தை ரசித்துப் பகிர்ந்து கொண்டார்.  அடுத்து நெற்குவை நகர்.இதோ இந்த வெற்றித் திருநகரில் ஒரு துப்புரவு தொழிலாளி இல்லத்தில் சோறு கிடைக்கிறது. 

இறுதியாக நான் பிரித்து அடுக்கப்பட்ட அனைத்தயும் தொகுத்து அடுக்கினேன். அன்று கீகடர் காணும் குரோதம், இருள் முக மார்க்கி சொல்லும் வஞ்சத்தின் குணம், இன்று கார்கடலில் என்னவாக வளர்ந்து நிற்கிறது எனும் சித்திரம் ஒன்றை அளித்தேன்.  தூக்கத்தில் புரண்டு படுக்கும் சூதர் ஒருவர், உறக்கத்தில் ''படை பலம் கொண்டோர் வஞ்சம் கொள்ளலாகாது'' என உளறுகிறார். 

ஒரு பாற்கடல் கடையப்படுகிறது அதில் எழும் நஞ்சு அரவன்னையால் பீமனுக்கும், அமுது சென்னம்மை கையால் உண்ணும் சூதர்களுக்கும் செல்லும் சித்திரமே இந்த வெற்றித்திருநகர் அத்யாயத்தின் மையம் என்றேன். 

இளநாகன் தமிழ் நிலத்தில் அறிவற்ற மன்னனால் துரத்தப்பட்டவன் அங்கிருந்து இந்த வெற்றித்திருநகருக்கு வந்து அவன் காணும் மன்னன், சூதர்களின் காலடியில் தனது  மணி முடியை  சமர்ப்பிப்பவனாக இருக்கிறான். 

இறுதியாக கிரீன் கலர் தமிழனை தாழ்த்தி, வந்தேறி தெலுங்கனை விதந்தோதும், ஜெயமோகனின் ஆழ்மன வெளிப்பாடான  தமிழ் விரோத தெலுங்குப் பாச அரசியலை இந்த தருணத்திலிருந்து கட்டுடைத்து வாசகர்களுக்கு வெளிகாட்டி, மும்முறை இந்த அரசியலை வன்மையாக கண்டித்து, கூடுகை உரையாடலை நிறைவு செய்தேன் 

கடலூர்சீனு

நிறைவுஅன்புள்ள ஜெயமோகன் சார்,

கார்கடலின் நிறைவு அத்தியாயம்  படித்துமுடித்ததும் " இவ்வளவு சீக்கிரமாக முடிந்துவிட்டதா?" என்ற எண்ணமே எழுந்தது.  பதினைத்து யுகங்களின் வரலாறு. பதினைத்து நாடகங்கள். சஞ்சயன் கூற்றின் படி படைவீரர்கள் இறந்த உடலின் மீது நடப்பதை எண்ணினால் தலை சுற்றுகிறது.. எனக்கு  இறந்த உடலை அது எவ்வளவு மனதுக்கு நெருக்கமானவராக இருந்தாலும்  தொடுவதற்கு ஒரு மாதிரி இருக்கும். அது என்னவகை உணர்ச்சி என்று ஓரோர் துஷ்டி வீட்டிலும் நின்று எனக்குள் ஆராய்ந்து கொண்டிருப்பேன். படைவீரர்கள் அப்படி நடனம் ஆடுவது ஏனோ எனக்கு ரஷ்யாவில் ஜார் மன்னரின் ஆட்சி வீழ்த்தபட்டதும் பிறகு ஜனங்கள், புரட்சியாளர்கள் அவர்களின் நாய்களை கூட விட்டுவைக்காமல் வெறிபிடித்து ஆடியதுபோல் இருக்கிறது. வேட்டைக்கு போகும் ஆயிரமாயிரம் சுடலைமாடன்கள் போல.

ஏகாக்க்ஷர் கூற்றாய் ....கர்ணன் படைத்தலைமை கொள்ள சகுனியும் துரியோதனனும் முடிவெடுக்க கர்ணனும் ஒத்துகொள்கிறான். ஆனால் மற்ற யாரின் சப்தமும் இல்லையே ஏன்? கம்னியூஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ கூட்டம் போலவே இருக்கிறது. 

பார்பாரிகன் கூற்றாய் ......பீஷ்மரிடம் கர்ணன் ஆசீர்வாதம் வாங்குகிறார். ஆனால் அவர் " துரோணர்" என ஏன் கூறுகிறார்?


அரவானின் கூற்றாய்.......கர்ணனுக்குள் வாழும்  அவனை வழிநடத்தும் நாகங்கள் கூறப்படுகிறது. ....கர்ணன் படைத்தலைமை நடத்த தயாராகி விட்டான்.  ஜெயமோகன் சார், வெண்முரசு நவீன நாவல் என்பதினால் கேட்கிறேன் .... மார்க்ஸிசம்  ஒரு வேதம்போல் உலகை ஆட்டிப்படைத்த காலம் இந்த பூமியில் இருந்திருக்கிறது. கண்டிப்பாய் அதன் விதை மகாபாரதம் எழுதபட்டகாலத்தில் இருந்திருக்கும். வணிகம் பற்றி வெண்முரசில் விரிவாய் இருக்கிறது. உற்பத்தி, சுங்கம், வணிகம் என்று நிறைய இடங்களில் வருகிறது. மார்க்ஸிசம் பற்றி வெண்முரசில் இருக்கிறதா? இல்லை என்றால் இனி வருமா

ஸ்டிபன்ராஜ் குலசேகரன்

Sunday, March 24, 2019

கார்கடல் புரிதல்அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,

இரவுப்போரின் சில அத்தியாயங்களில் பின் தங்கிவிட்டேன். காரணமின்றி நள்ளிரவு தாண்டி விழித்த ஒரு பொழுதில் மீண்டும் தூக்கம் பிடிக்காமல்வெண்முரசு வாசிக்கத்தொடங்கினேன். கார்கடல் மேலும் கருமை கொண்டஇரவுப்போரின் விரிவில் வெகுநேரம் ஆழ்ந்திருந்தேன். துருமசேனன்துச்சாதனனிடம் தான் களம் பட்ட செய்தியை கேட்பதன் மூலமே அறத்தின்
வழியை அடைய வேண்டுமென உணர்த்துமிடத்தில் நின்றுவிட்டேன்.


களம்படுவதென்பது போரில் எதிர்பார்த்துச் செல்வதென்றாலும், தன் மகன்தனக்கு முன்னே களம்படுவானென்று தெரிந்திருந்தாலும், துருமசேனன்துச்சாதனனிடம் அவன் இழைத்த கீழ்மையைச் சொல்லி தன்னறத்தைநிறுவிச்செல்லுமிடம் துச்சாதனனின் அகம் இறந்துபோகுமிடம்.இதைப்போல் அன்பு வெளிப்படும் அதே ஆழத்திலிருந்துதான் கசப்பும்வெளிப்படுகிறதென்பது எனக்கு முதலில் புரிபடவில்லை. ஆனால் பலஇடங்களில் வெண்முரசில் நீங்கள் அதை விவரித்து எழுதியிருக்கிறீர்கள்.


வாழ்க்கையில் அதை எதிர்கொண்ட தருணங்களில் முதலில் எனக்குவந்தது ‘எப்படி?’ என்ற ஆச்சரியமும் ‘ஏனென்ற’ தன்னிரக்கமும் தான்.படிக்கப்படிக்க அதன் நுட்பம் புரிந்தது. ஆம். அது அப்படியாகத்தான்இருக்கமுடியும்போலும். வானின் இருளன்றி ஒளிரும் நட்சத்திரங்களைக்காண்பது எவ்வாறு?


உள்ளாழத்திலிருந்து அந்த கசப்பையும் நீக்கிச்செல்பவன் பேரன்பு கொண்டவனாகிறான். ஒருதடவையேனும்முயன்றவன் பின்னோக்கிச் செல்வதில்லை. கண்டடையாவிடினும்
பயணத்தை முன்னோக்கித் தொடரும் மனநிலை வாய்க்கிறது.
மஹாபாரதம் முழுவதுமே ஒன்றை ஒன்று எங்கோ சமன் செய்தபடியேஇருக்கிறதென்று தோன்றியது. பல இடங்கள் மனதில் வந்தபடி இருந்தது.


யுகம் தாண்டிய தொடர்ச்சியாக நிகழ் வாழ்விலும் மனிதர்களின்
தருணங்கள் அப்படியே தொடர்வது அந்த பெருங்காவியத்தின்
அமரத்தன்மை போலும். வெண்முரசின் பிரதிபலிப்புதான் வாழ்க்கையோஎன்றே பல சமயங்களில் தோன்றுகிறது. அந்தப் புள்ளிகளைஇணைக்கும்போது கிடைக்கும் மன எழுச்சி வேறொரு உணர்வு.ஒவ்வொரு முறை அத்தகைய சூழலை திர்கொள்ளும்போதும் அதற்குஇணையாக மகாபாரதத்தின் நிகழ்வுகள் மனதில் வந்துகொண்டேஇருக்கின்றன.


சூதும் போரும் கொண்டு நிறுத்தும் பேரழிவென்பது நேரடி அறமாக
சொல்லப்பட்டாலும் மைய விசையாக அகங்காரமும் விழைவும்
செயல்பட்டு அதை மேலும் மேலும் வளர்ப்பதை போர்க்காட்சிகள்
அற்புதமாக விவரிக்கின்றன. "வேண்டற்க வென்றிடினும் சூது" என்றாலும்நெய்யூற்றி தீ வளர்க்கும் தன்மை சக மானுடரிடையே அகல்வதரிதுபோலும்.

பத்ரிநாத் கோவிலுக்குப் பின்புறம் மானா கிராமத்தில் வியாசர் குகையின்மேற்பரப்பில் அடுக்குப் பாறைகள் செறிந்த ஒரு படிமம் இருக்கும். அவர்எழுதிய ஏடுகள் பாறை அடுக்குகளாகிவிட்டன என்று அங்கிருந்த ஒருவர்சொன்னது ஒரு சுவாரஸ்யமான தொன்மம்.


சென்னை கட்டண உரையின் அரங்கில் வெண்முரசின் பல புத்தகங்களைஅடுக்காகப் பார்த்தபோது மனதில் வந்துபோனது அந்தப் பாறைப் படிமம்.வாழ்க்கையை மேலும் புரிந்துகொள்ள, நுண்ணுணர்வுகளைவளர்த்துக்கொள்ள, அகப் பயணங்களை பெருக்கிக்கொள்ள வெண்முரசின்வரிகள் தூண்டிக்கொண்டே இருக்கின்றன. அந்த வரிகளை எழுதிய கரங்களை
சென்னை கட்டண உரையின்போது பற்றமுடிந்தது மிகப்பெரும் நிறைவைஅளித்தது. அந்த நிறைவைச் சுமந்த இந்த அதிகாலையில் நன்றியுடன்

நா. சந்திரசேகரன்
சென்னை.