Tuesday, July 31, 2018

குலாடபுரியின் இளவரசர்கள் - ஏகலைவன்அன்புள்ள எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு
   
வணக்கம் .குலாடபுரியின் இளவரசர்கள் ஸ்வேதன் ,சங்கன்  கதாபாத்திரங்கள் , மற்றும் இளைய பாண்டவர் அர்ஜுனரின்குருதியில் நாகர்குலத்து அரசி உலூபியின் வயிற்றில் பிறந்த மைந்தன் அரவான் வழியாக குருஷேத்திர யுத்த களத்திற்குகௌரவ சேனைகளும் ,பாண்டவ சேனைகளும் மேற்கொண்ட படை நகர்வுக்கான  வழிமுறைகள் ,உணவு முறைகள்விரிவாக விளக்கப்பட்டன .இது போருக்கு முன்பு மூத்தோரிடம் சொல்லாசிகள் பெற்று நகர் நீங்கிய படைகளை அடுத்தஅத்தியாயத்தில் போர் முனையில் கண்ட எங்களுக்கு ஒரு புதிய அனுபவங்கள் தான் . பதினெட்டு காளைகளால்இழுக்கப்பட்டு நாற்பத்தெட்டு சகடங்களின் மேல் மெல்லிய அதிர்வுடன் ஒழுகிக்கொண்டிருந்த மாளிகைகள் ,பொடித்தவஜ்ரதானியமும் உலர் ஊனும் உப்புடன் சேர்த்து உருட்டப்பட்ட ஊன்துண்டுகள்,கவசங்களிலும் உடலிலும் எண்களையும்குறிகளையும் எழுதும் பணி என மிக விரிவாக எழுதியுள்ளிர்கள் . 


அது மட்டும் அல்ல ஸ்வேதன் ,சங்கன் ஆகிய இருவருமேவிராட அரசரால் பதினேழாண்டுகளாக மைந்தர் என்ற உரிமையை துறந்து/இழந்து  வாழ்ந்தவர்கள் .ஆம் அரச வம்சத்தில்பிறந்தும் தந்தையின் பாரா முகம் குல முறைமைகளை மேற்கொள்ள முடியாதபடி அவர்களின் எதிர் காலத்தை இடர்செய்யும் அம்சமாக அவர்களை சங்கிலியால் கட்டப்பட்ட யானையென மாற்றியது .ஆயினும் அந்த இக்கட்டில் இருந்துஅவர்கள் மேலெழும்பி பிரகாசிக்க ,அவர்களின் தன்னிறைவிற்கான செயலாக அவர்கள் கருதியது குருஷேத்ர யுத்தத்தில்கலந்து கொள்ள முடிவுகள் எடுத்ததே .உண்மையிலே தந்தையால் பன்னெடுங்காலம்  தள்ளி வைக்கப்பட்ட குலாடபுரியின்இளவரசர்கள் ஸ்வேதன் மற்றும் சங்கன் தங்களின் தந்தை விராட அரசரை பழிவாங்க சேர்ந்திருக்க வேண்டிய இடம்கௌரவ மூத்தோன் துரியோதனன் படையில் தான் .அப்போது தான் போரில் எதிர் முகம் நிற்கும் தந்தையை பழிவாங்கமுடியும் .

ஆனால் அதனை அவர்கள் விரும்பவில்லை .அவர்கள் அரசமுடிக்காகவோ ,செல்வத்துக்காகவோ,குடிபெருமையை நிலை நிறுத்தவோ அல்லது அன்னையின் ஆணைக்காகவோ யுத்தத்தில் பாண்டவ யுதிஷ்டிரர் படையில்அணி வகுத்து நிற்க வரவில்லை .ஆம் எப்படி துரோணாச்சாரியாரை மானசீக /ஆத்ம குருவாக ஏற்று ஏகலைவன் தனுர்வேதம் பயின்றானோ ,அது போல தான் இவ்விரு இளவரசர்களும் இளைய பாண்டவர் அர்ஜுனன் மற்றும் பீமன் அவர்களைமனதில் துதித்து வில் மற்றும் கதை பயின்றனர்

 . "நான் வில்பயின்றது இளைய பாண்டவரின் நினைவை நெஞ்சில் நிறுத்தி.அவன் பீமசேனரின் மாணவரென்று கதை பயிண்றான்இங்கு வந்து எங்கள் முழுதளிப்பை அவர்களுக்கு காணிக்கையாக்கவிழைந்தோம் என்றான் ஸ்வேதன் .ஆம் போருக்கான முறைமை அழைப்புகள் எதுவும் இல்லாமலும் ,குடியவை ஒப்புதல்இல்லாமலும் ,தங்களின் போருக்கான ஆசையை சொல்லி அன்னையின் ஆசியை மட்டும் பெற்று குருஷேத்ர போரில்அர்ஜுனன் மற்றும் பீமனுடன் சேர்ந்து களம் நிற்க யுதிஷ்டிரர் அவையில் இளைய யாதவர் சொல்லால் ஒப்புதல் பெற்றுவிட்டனர் .ஆம் இன்றைய வெண்முரசு – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை – 

61 மூத்தோர் சொல்லும்தந்தையரின்அச்சமும்குலத்தோரின் விலக்கும்துணைவியின் விழிநீரும் படைக்குச் செல்பவனுக்கு குறுக்கே நிற்கலாகாது என்பதுதொல்வழக்குஇவ்விளையோர் படைகொண்டு இத்துணை தொலைவு வந்ததே இவர்களின் ஊழ் செலுத்துவதனால் தான்அது அவ்வாறே ஆகுக!” என்றார் இளைய யாதவர்.எண்ணி துணிக கருமம் ,ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்தாழாது உஞற்று பவர் என்ற குறளுக்கு இலக்கணமாக திகழ்ந்தது ஸ்வேதன் மற்றும் சங்கன் செயல்கள் .
நன்றி ஜெயமோகன் அவர்களே !
தி .செந்தில்
ஸ்ரீவில்லிபுத்தூர் .

நஞ்சுஅன்புள்ள ஜெ 

<"...எஞ்சவிட்ட நஞ்சு என்று நாகர்களை எண்ணுகிறேன். மீண்டுமொரு நஞ்சு எஞ்சும்படிவிட எண்ணமில்லை" என்று சொன்னான் (அர்ஜுனன்)>

ஒருவிதத்தில் இந்தக் கதை மொத்தமே நாகர்களை முற்றழிப்பதும் அவர்கள் மிஞ்சுவதைப் பற்றியதும் தான் எனலாம்.  ஜனமேஜயன் வரை முயல்கிறார்கள், நாமும் செய்துகொண்டிருப்போம்.

கௌரவர்கள் அரவானை கொண்டாடுவதும் பாண்டவப்படையின் ஒவ்வாமையும் மேலோட்டாமாக inconsistency-ஆக தோன்றலாம், ஆனால் அது தான் அவர்களை ஆக்குவது. 

மதுசூதனன் சம்பத் 

மானசாமடியில் ஆஸ்திகனுடன் மானசா தேவி.

இணையத்தில் கண்டது :)

கடலூர் சீனு

அரவானின் வருகைஅன்பு ஜெ ,
            

சுருதகீர்த்தி ,ஸ்வேதன் இவர்களுடனான "அரவானின்" காட்சி சித்தரிப்பும் , எழுச்சி வாதங்களும் தங்களுக்கே உரித்தான நடையில் மிளிர்வுடனே வந்துள்ளது. அவனுக்கு பீடம் மறுத்து சுருதகீர்த்தி எழுப்பிய ஆணவ வினாவிற்கு ஸ்வேதனின் பதிலடிகள் அபாரம்.ஆனால் சிறிது முன்பு , உதடு மடிந்தும் ,கைகோர்த்து பணிவிச் சித்திரமாக காட்சியளித்த அரவானைப் பார்த்து தவறான மதிப்பூனூடே ,இறுதியில் அவனின் தருக்கியபுன்னகை யைப் பார்த்து , அவனடைந்த  மெல் அதிர்வே சிறப்பானதாகும்.அவன் இவர்களையெல்லாம் மதித்து நடந்ததே கொடையென்று குறித்ததும் நன்றே!
            

படிக்கும்போது ஓர் ஒவ்வாமை தோன்றிக்கொண்டேயிருந்தது.பெரும் போருக்கு தன் மகனை ஓர் தாய் அனுப்பி வைக்கிளாளென்றால் ,சாதாரண விஷயமா? அதுவும் உலூபி போன்றோளுக்கு.ஸ்வேதனின் அணுக்க பேச்சால் அதிராமல் புன்னகையுடன் அவனை நோக்கியதும் , களம் நிற்க தகுதியானவனே என்று ஸ்வேதனும் நிச்சயித்து , எழுந்து நின்றதே  அபாரம்! தாயனதான ஷத்திரிய வளர்ப்பிற்கு ஓர் நல்லுதாரணம்" அரவான்."
                     

அன்புடன் ,
                              

  செல்வி  அ.

Monday, July 30, 2018

இந்து மெய்மைஅன்புள்ள ஜெ

வெண்முரசு வாசிக்கையில் பல்வேறு கொள்கைகள் நம்பிக்கைகள் பற்றிய ஐயங்கள் எழுந்துகொண்டே இருக்கின்றன. இணையத்தில் அவற்றைத் தேடி வாசிப்பவர்களுக்கு உதவியான ஒரு இணையதளம் இது சுருக்கமாக அனைத்தையும் தொகுத்து அளித்துள்ளது

ராகவன்

http://shakiraja.blogspot.com/2009/02/

தந்தையும் மகனும்ஜெ

அரவானிடம் சுருதகீர்த்தி கடுமையாக நடந்துகொள்ளும் இடத்தை வாசித்தபோது மனம் கஷ்டப்பட்டது. இது அர்ஜுனனின் குணமில்லையே. அவன் மக்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று நினைத்தேன். இளையவன் மீதான பேரன்பினால்தான் இப்படி அவன் நடந்துகொண்டான் என்று இன்றைக்கு பார்த்தபோது மனம் நெகிழ்ந்தது. இப்படித்தான் அர்ஜுனனின் மகன் இருக்கமுடியும். விதையிலிருந்தே மரம் முளைக்கிறது. மரமே விதையும் ஆகிறது

எஸ் 

சாமானியர்ஜெ


ஒரு படையிலுள்ள சாமானியப் படைவீரர்கள் எப்படி இருப்பார்கள்? என்ன பேசிக்கொண்டிருப்பார்கள்?

ஒவ்வொருவருக்கும் சொல்ல ஒவ்வொன்று இருக்கும். அணுகிக்கேட்டால் விந்தையானவற்றை எல்லாம் அறியமுடியும். இப்படைப் பிரிவை எப்படி வழிநடத்தவேண்டுமென்றும், இப்போரை எவ்வாறு நடத்தி முடிக்கவேண்டும் என்றும் ஒவ்வொரு படைவீரனுக்கும் முழுமையான திட்டங்களிருக்கும். அவற்றை உளக்கொந்தளிப்புடன் உரத்த குரலில் மாறி மாறி சொல்லிக்கொள்வார்கள். மறுப்பார்கள், எள்ளி நகையாடுவார்கள். நுணுக்கமாக விளக்குவார்கள். 

என்ற வரியை வாசித்ததும் வாய்விட்டுச் சிரித்துவிட்டேன். இன்றைய முகநூல் காலகட்டம் போலவே அன்றைக்கும் இருந்திருக்கிறார்கள். இது உண்மை. என் சின்ன வயசில் டீக்கடையில் நின்று சச்சின் எப்படி எல்லாம் ஆடியிருக்கவேண்டும் சொதப்பிட்டான் என்று பேசிக்கொண்டிருப்பவர்களை நிறையவே பார்த்திருக்கிறேன். 

சாதாரண மானுடர்களுக்கு எதையாவது சொல்லவேண்டும். அப்படித்தான் அவர்கள் சாதாரணமானவர்கள் என்பதை மறக்கமுடியும்

சத்யா

படைநகர்வின் பெருந்தோற்றம்ஜெ

ஒரு படைநகர்வின் பெருந்தோற்றம் இதைப்போல எங்கும் வாசித்ததில்லை. தொழில்நுட்பத் தகவல்களின் பெருக்கு. இது ஏன் என்றும் தெரிகிறது. போரின் தோற்றத்தை இது நம் மனதில் ஏற்கனவே உருவாக்கிவிடுகிறது. இதைமீறி போரின் காட்சிகள் அமையவேண்டும். எப்படி அமைகிறது என்று பார்ப்போம். போர் படைகள் இப்படி பல சாலைகளால் பிரிக்கப்பட்டிருக்கும் என்பது எனக்குப் பிதிய செய்தி. ஆனால் வாசித்ததும் நூற்றுக்கணக்கான நவீன ரானுவ அனிவகுப்புகளில் இதைத்தானே பார்த்தோம் எப்படித்தவறவிட்டோம் என்ற சந்தேகம் எழுந்தது. மண்டையில் குட்டிக்கொண்டேன்.

ராகேஷ்

சோழர்குலம்ஜெ ,


வித்யுத்தன் வரும் பகுதி மிக பிடித்தது , புத்திசாலித்தனமான  நகைச்சுவை , ஆனால் அதை கள்ளமில்லாமல்  வெளிப்படுத்துகிறார்  . இது போலவே முன்பு பீஷ்மரிடம் அவரது கதையையே நகைசுவையாக்கி அவரிடமே சொல்லும் குடிகார சூதன் ஞாபகத்திற்கு வருகிறார் . நகைச்சுவை (  அங்கதம் )  எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சரியான பிரதிகள்  இவ்விருவரும்  .

ஜெ , இப்பகுதியில்  காந்தார  வம்சம்  பற்றிய குறிப்பு வருகிறது , அதில்  சேர சோழ வம்சங்கள்  இவர்களில் இருந்து உருவானவர்கள்  என்று வருகிறது , அதாவது காந்தாரத்திலிருந்து  தமிழ் நிலத்திற்கு  வந்து அரசை உருவாக்கியவர்கள் என்று , பீஷ்மரும் அதை ஆமோதித்து  அதற்கு  சான்றாக  ஒரு வேத குறிப்பு பற்றி சொல்கிறார் .

ஆச்சிரியமாக இருந்தது . பாண்டிய  வம்சம் மீனவர்களில்  இருந்து வந்தவர்கள் என கொற்றவை நாவல் மூலமாக அறிந்திருந்தேன் , சேர சோழர்களை பற்றி இப்போதுதான் அறிகிறேன் , இது பற்றி தேடி படிக்க ஆர்வமாக உள்ளேன் 

ராதாகிருஷ்ணன்


ரோகிணிஅன்புள்ள ஜெ,

உண்மையில் ரோகிணியின் அறிமுகம் எனக்குள் தான் படபடப்பை ஏற்படுத்தியது. அவள் வந்தவுடனேயே இதுகாறும் எதிர்பார்த்திருந்த அரவானின் சந்திப்பை மனம் நாடத் துவங்கி விட்டது. கௌரவர்கள் புருஷ மேதம் என ஒரு அந்தணனை பலி கொடுத்து போர் துவங்குகிறார்கள். (அதையும் இரு நாகினிகள் கலைத்து விட்டது தனிக்கதை. அது சற்று விரிவாக அலச வேண்டிய ஒன்று) மாறாக பாண்டவர்கள் அதற்கும் பழைய தொல்குடிகளான அசுர குல நெறிகளின் படி போர்த்தலைவன் தனது மகன்களில் அனைத்து லட்சணங்களும் பொருந்திய ஒருவனை பலியாகக் கொடுத்து போரைத் துவங்கும் புத்ர மேதத்தைச் செய்கிறார்கள். (இது தெற்கத்தி பாடம். வடமொழி அரவானை எட்டாம் நாள் போரில் ஆலம்புஷன் என்னும் அரக்கனால் கொல்லப்பட்டதாகச் சொல்கிறது. அவனை கடோத்கஜன் பழிதீர்த்தான்)  அரவானை கிருஷ்ணரே ஆணிலியாக மாறி மணந்து கொண்டதாகத் தொன்மம். அதை வெண்முரசு எப்படிச் சொல்லப் போகிறது என எண்ணிக் கொண்டிருந்தேன். அபாரமாக ரோகிணியின் மூலமாகச் சொல்லிவிட்டீர்கள்.

வெண்முரசில் வெண்முகில் நகரத்தில் இருந்து வரும் உத்தி சிறு பாத்திரங்களின் பார்வையின் ஊடாக முதன்மை பாத்திரங்களின் செயல்களை, அவர்களின் ஆகிருதியை விவரிப்பது. இது பெரும்பாத்திரங்களான கிருஷ்ணன், தருமன், பீமன், துரியன், பார்த்தன், கர்ணன் ஆகியோருக்கே அமைந்தது. இப்போது அதையே அரவானுக்கும், கடோத்கஜனுக்கும் நீட்டித்திருப்பது ஒரு இனம் புரியாத மலர்வைத் தந்திருக்கிறது. ஸ்வேதனும், சங்கனும் இதற்காகவே வருகிறார்கள். இளையவர்கள் யாருக்கும் அளிக்கப்படாத பெருமை அல்லவா இது. உண்மையில் இவர்கள் இருவரும், முறையே கடோத்கஜன் மற்றும் அரவான், தான் உப பாண்டவர்களில் மூத்தவர்கள் இல்லையா? 

அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்

Sunday, July 29, 2018

அரவானும் தமிழ் மரபும்அன்புள்ள ஜெ

அரவான் களப்பலி மகாபாரதத்தில் உள்ள கதை அல்ல. தமிழக நாட்டார் மரபில் அந்தக்கதை உள்ளதா?

சிவக்குமார்

அன்புள்ள சிவக்குமார்

அல்ல. தமிழ்ச் செவ்வியல் மகாபாரதக் கதைகளில் எட்டாம் நூற்றாண்டுமுதலே இக்கதை உள்ளது

விபரங்களுக்கு இக்கட்டுரை

http://rajshan1208.blogspot.com/2012/10/blog-post_2701.html

பறம்புஇனிய ஜெயம் 

பறம்பு நீரொலி செய்தது .

கிளி சொன்ன கதைகள் முதல் அத்யாயம் மூன்றாவது பத்தியில் வரும் வரி இது .

பறத்தலை என்றால் இடுகாடு 
பறம்பு என்றால் கொங்கை 
பறம்பு என்றால் சங்க இலக்கிய மலை ஒன்றின் பெயர் .

தேடினால் இந்த மூன்று பொருள் மட்டுமே கிடைக்கிறது .


நீங்கள் சுட்டிய பறம்பு , வீட்டு பறம்பு இவற்றை தோட்டம் என்று கொள்ள வேண்டுமாகடலூர் சீனு

அன்புள்ள சீனு

பறம்பு என்றால் சோலை அல்லாத  விளைநிலம், தோட்டம் என்று பொருள். மலையாளத்தில் இன்றும் அப்பொருள்தான். தமிழிலும் அதேபொருள்தான்

ஜெ   
பாச முகமும், போர் முகமும்அன்பின் ஜெ,

வணக்கம்!

இன்றைய அத்தியாய(செந்நாவேங்கை-58)
தொடக்கத்தில் அரவான் கௌரவ படைநகர்வினூடே துர்மதனை சந்திக்கையிலும்,பின்னர் துரியோதனனை சந்திக்கையிலும் இருவருமே பாசாங்கில்லா
மிகையன்பு செலுத்தி அரவானை கட்டித்தழுவுவதும், அர்ஜூனனின் இளைய உருவத்தை  நினைவில்மீட்டெடுத்த மகிழ்ச்சியில் உவகை கொள்வதையும் படிக்கையில் மீண்டும் மீண்டும் மனதில் முட்டித்தவிக்கும் அந்த கேள்வி மற்றொருமுறை நினைவிலெழுந்தது,

இம்முறை கண்ட விடை சற்றே சாந்தம் கொள்ளும் வகையில் அமைந்தது.

//
“பிறகு ஏன் இந்தப் போர் நிகழ்கிறது?” என்றான் அரவான். “இதற்கு அவரோ வேறெவருமோ மறுமொழி சொல்லிவிடமுடியாது. இப்போரை முன்நின்று நிகழ்த்தும் இளைய யாதவரேகூட”
//

நட்புடன்,
யோகேஸ்வரன் ராமநாதன்.

ஆடிமதிப்பிற்குரிய ஐயா ஜெயமோகன் அவர்களுக்கு,

என்னுடைய பெயர் தாமரைச் செல்வன். மின்னணுவியல் பொறியியல் படித்த நான்
தற்பொழுது பெங்களூரில் வசித்து வருகிறேன்.
http://www.jeyamohan.in/ என்கிற இணையதளத்தில் தாங்கள் பகிர்ந்து வரும் வெண்முரசு  ஆக்கத்தின் ரசிகன் நான்.
அதன் எழுத்து நடைக்கும்அங்கே பொதிந்திருக்கும் அற்புதமான கதைக் களத்திற்கும், நீங்கள் அளிக்கும் விவரங்களுக்கும் உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
அதேபோல் திரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட "The Mahabharata" ஆங்கில நூலின் தமிழாக்கத்தில் ஈடுபட்டுள்ள அன்பு நண்பர் அருட்செல்வ பேரரசன் அவர்களும் மகாபாரதத்தின் மூலமே எனக்கு நண்பர் ஆனார்.
மகாபாரதத்தின் அவரது மொழிபெயர்ப்பை நான் தொடர்ச்சியாக படிக்கும் பொழுது,  உண்டானது மகாபாரதம் யுத்தம் மார்கழி மாதம் நடந்தது என்று பண்டிதர்கள் சொன்னது தவறாக இருக்குமோ என்ற சந்தேகம். அருட்செல்வ பேரரசர் மகாபாரதத்தின் மூல ஸ்லோகங்கள் மற்றும் கங்கூலியின் மொழி பெயர்ப்பு ஆகியவற்றின் இணையதள தோடர்புகளை அளிக்கஅவற்றின் மூலம் எனது ஆய்வுகளைத் தொடங்கினேன்.
நான் ஜோதிடத்தை 12 ஆம் வகுப்பு விடுமுறையில் என் தந்தையிடம் இருந்த புத்தகங்கள் மூலம் கற்றவன். வானியலில் தீராத ஆர்வம் உள்ளவன். சமஸ்கிருதத்தை ஆர்வத்தின் மூலம் சற்றே கற்றவன். மேலும் பொறியியல் துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றியதால் ரூட் காஸ் அனலிஸிஸ் எனப்படும்மூல காரண ஆய்வின் நுணுக்கங்கள் அறிந்தவன்.
மகாபாரதத்தின் வியாசரின் ஸ்லோகங்களை மட்டுமே எனது ஆய்வின் மூலமாக கொண்டுசமஸ்கிருதம்வானியல்ஜோதிடம்,தர்க்கம் ஆகிய அறிவியல்களின் துணையோடு மகாபாரதப் போர் நடந்தது ஆடியாமார்கழியா என்ற இந்த ஆய்வுக் கட்டுரையை வடித்துள்ளேன்.
தாங்கள் புதிய எழுத்தாளர்களை ஊக்குவிப்பவர் என்பதை நான் அறிவேன். என்னுடைய இந்தக் கட்டுரையை வாசித்துஇதில் உள்ள குறை, நிறைகளை சுட்டிக் காட்டிஇந்தப் படைப்பை முழுமையாக்கிஒரு மதிப்புரையும் அளித்தால் நான் மகிழ்வேன்.
இந்த நூலைப் படித்த சேலம் பகுதியில் வாழும் “வைணவக் கடல்” எனப் பட்டம் பெற்றசமஸ்கிருத வல்லுனர், 50 ஆண்டுகளுக்கும் மேல் வைணவ சேவை செய்து வருபவர்ஜோதிட வல்லுனர்தருமபுர ஆதினத்தில் பயின்றவர் ரா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள்இதில் உள்ள ஜோதிட ஆய்வுகள் மற்றும் விவாதங்கள் மிகச்சரியானவை என மனமுவந்து வாழ்த்தி இருக்கிறார்.  இவர் மார்கழி மாதம் பாரதப்போர் நடந்தது என மிகத் தீவிரமாக நம்புபவர் ஆவார்.

தமிழ்நாட்டில் ஆடி மாதம் மகாபாரதப் போர்களம் என்பது மிகவும் நீடித்து நிற்கும் நம்பிக்கையாகும். பாமரர்களின் நம்பிக்கை,பண்டிதர்களின் முன் மௌனித்து விடுகிறது.
இந்த மௌனங்களின் முதல்குரலாய் இந்த நூல் இருக்க வேண்டும் என்பது எனது ஆசை.
கடையெழு வள்ளல்களில் அனைத்தும் சங்கத்தமிழர் பெயராய் இருக்க இடையேழு வள்ளல்கள் எனப்படும் இடைச்சங்க காலத்து வள்ளல்களில் மகாபாரத கதாபாத்திரங்களே உள்ளனர்இடைச்சங்க காலத்தில் மகாபாரதம் ஒரு சங்க நூலாக இருந்திருக்க வேண்டும் என்பதும், அதன் எச்சமே தமிழரிடையே உலாவி வரும் மகாபாரத கதைகளின் வேறுவேறு வடிவங்களுக்கு அடிப்படை என்பதும் என் நம்பிக்கை ஆகும்.

அந்த நீண்ட ஆய்வின் முதற்கட்டமே தமிழரின் அடிப்படை நம்பிக்கையான ஆடி மாதப் போர் என்பதை நிறுவுவது ஆகும்.

நான் எழுத்துலகில் பரிச்சயம் இல்லாதவன்
பதிப்பகங்கள்வினியோகம் என்ற எந்த அறிவும் தொடர்பும் இல்லாதவன். குடும்ப சூழ்னிலைகள் காரணமாக செய்யும் தொழிலையும் விடமுடியாமல்அறிவுத்தாகம் காரணமாக எழுத்தையும்படிப்பையும் கொண்டவன்.

உங்களைப் போன்றவர்களின் ஆதரவு எங்களைப் போன்ற காட்டுக் கொடிகளுக்கு ஆதாரமான உயர்ந்த மரங்களைப் போல் இருக்கும் என நம்புகிறேன்.

எனவே மனம் கனிந்து இந்த நூலைப் படித்து
உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துஇந்த நூல் வெளியாக உதவுமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

இப்படிக்கு

தாமரைச் செல்வன்.

அன்புள்ள தாமரைச்செல்வன்

தென்னக மகாபாரத தொன்மங்களில் ஆடிமாதம் என்றே சொல்லப்பட்டுள்ளது

உங்கள் ஆய்வு கணிசமான பகுதி புரியவில்லை என்றாலும் புரிந்தவரை ஏற்றுக்கொள்ளப்படவேண்டியதாகவே உள்ளது

ஜெ

Saturday, July 28, 2018

மைந்தர் துயர்அன்புள்ள ஆசிரியருக்கு...

இன்று காலையில் கூட நினைத்தேன். இன்னும் அரவான் வரவேயில்லையே என்று. ஒருவேளை அது பிற்காலத்தில் சேர்க்கப்பட்ட கதையாக இருக்கலாமோ என்று ஓர் எண்ணமும் வந்தது. ஆனால் எங்கேனும் ஒரு துளி இல்லாமல் புத்தம் புதிதாகச் சேர்க்கப்பட்டிருக்காது என்றும் தோன்றியது.

இதோ, இன்று அழகிய இளைஞனாக வந்து நின்று விட்டான். கடைசியில் அவனது புன்னகையைப் படித்ததும், கண்ணீர். இதற்கு காரணம் நீங்கள் தான்.

இத்தனை நாட்களாகப் படித்து வருகையில் தொடக்கத்தில் அறிமுகமான பீஷ்மனும், விதுரனும், திருதராஷ்டிரனும் பீஷ்மராகவும் விதுரராகவும் திருதராஷ்டிரராகவும் மூத்துப் போய் விட்டனர். எளிதாக அவர்களை விட்டு அடுத்த தலைமுறைக்கு மனம் நகர்ந்து விட்டது. ஆனால் இத்தனை வயதான பின்பும் பீமன் அடுமனைக்குப் போனான், அர்ஜூனன் அம்பு எய்தான், கர்ணன் மதுவருந்தினான் என்றே எழுதுகிறீர்கள். பீமர், அர்ஜூனர், கர்ணர் என்றே இல்லை.

எனவே மனம் இவர்களுடனேயே ஒப்பி ஒட்டிக் கொண்டு விட்டது. இன்று அவர்களுடைய மகன்களைக் காண்கையில், அவர்கள் என் வயதே ஆயினும் அவர்களை என் மகன்களாகவே, வேந்தன் கோல் நீட்டித் தேர்ந்தெடுத்த சிறுபையன்களாகவே உணர முடிகின்றது. இந்தக் குழந்தைகள் எந்த வஞ்சமும் இல்லாமல் சாகப் போகிறார்கள் என்பதை எத்தனை எண்ணினாலும் ஆற்ற முடியவில்லை. 

மைந்தர் துயர் பாண்டவர்களுக்கு மட்டும் என்று இல்லை.

நன்றிகள்,
இரா.வசந்த குமார்.


பிரிவுகள்
அன்புள்ள ஜெ

வெண்முரசு நாவல்களில் தொடர்ச்சியாக நாடகச்சந்தர்ப்பங்கள் வந்துகொண்டே இருப்பது இந்நாவலில்தான் என்று தோன்றுகிறது. விகர்ணன் குண்டாசி துச்சாதனன் துரியோதனன் காந்தாரி என வரிசையாக விடைபெறும் சந்தர்ப்பங்கள். அனைத்துமே உணர்ச்சிகரமானவை. ஆனால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையானவையும்கூட. விதுரர் பித்துப்பிடித்திருக்கிறார். காந்தாரி மிகத்தெளிவானவளாக இருக்கிறார். துச்சாதனன் எளிமையாக இருக்கிறான். விகர்ணன் கொந்தளிக்கிறான் ஒவ்வொருவரும் ஒவ்வொருவகையானவர்களாக இருக்கிறார்கள்

மகேஷ்

பானுமதி
ஜெ

பானுமதி எவ்வளவு நிதானமாக நுட்பமாக நாட்டை ஆட்சி செய்கிறாள் என்பதை நாலைந்து அத்தியாயங்கள் தொட்டுக்காட்டிக்கொண்டே செல்கின்றன. மிக இயல்பான அத்தியாயங்கள் அவை. அவற்றின் வழியாக ஒரு போரில் படைகள்  போனபின்னர் ஊருக்கு என்ன ஆகும் என்று காட்டுகிறீர்கள். எப்படியெல்லாம் போரில் படைகளை ஒருங்கு செய்கிறார்கள் என்பது தெரியவருகிறது. அதில் எழும் நிர்வாகச் சிக்கல்களும் தெரிகின்றன. பானுமதி திரௌபதிக்கு ஒருபடியும் குறைவானவள் அல்ல என்பதும் சொல்லப்போனால் ஆணவம் கொண்டவள் என்பதனால் திரௌபதி ஒருபடி குறைவானவள் என்பதும் தெரிகிறது


மனைவி என்றால் சகதர்மிணி. அதற்குச் சரியான உதாரணம் பானுமதிதான்

ஆர்.நாகராஜ்

குலம்ஆசிரியருக்கு, 

Lord of the rings திரைப்படம் வந்தபோது எனக்கு ஒரு பெரும் ஆவல் இருந்தது. மகாபாரதத்தை இப்படி யாரவது எடுத்தால் நன்றாக இருக்கும் என்று ஆனால் அதற்கான கச்சாப்பொருளான கதை அன்று வரையருக்கமுடியவில்லை ஆனால் இன்று வென்முரசு படிக்கும்போது அந்த குறைகள் மறைந்து விட்டது. 
குலாடகுரி வம்சம் பற்றி படிக்கும்போது ஒரு திரைப்படத்தின் editing இல் வந்து செல்லும் காட்சிபோல அத்தனை அருமையாக இருந்தது. எதிர்காலத்தில் யாரவது இதை திரைபடமாக எடுத்தால் அதிகமான வேலை இருக்காது

திருமலை

கேசவ்கார்ட்டூனிஸ்ட்  கேசவ்  வரைந்தது  , fb யில் , உங்களுக்கு இதை அனுப்ப தோணிச்சு

ராதாகிருஷ்ணன்

Friday, July 27, 2018

அரவான்


அன்புநிறை ஜெ,

 

//நாகங்கள் பிறக்கையில் ஆணென்றும் பெண்ணென்றும் இல்லை என்பார்கள். நாகமகவு வளர்ந்து தன்னை ஆணென்றோ பெண்ணென்றோ ஆக்கிக் கொள்கின்றது. ஆண் பெண்ணாவதோ பெண் ஆணாவதோ நாகங்களில் இயல்பே.//
காண்டீபம் 17 - உலூபியிடம் அர்ஜுனன் கூறுகிறான்.

அன்று தற்பலி கொடுத்த இளைஞனை மீண்டும் கனவில் கண்டு திடுக்கிட்டு எழுகிறான். அவனும் தன் தலையறுத்த இறுதிக்கணத்தில் தன்னை அடையாளம் கண்டுகொண்டதாகவோ விடைபெற்றுக் கொண்டது போன்றோ உணர்கிறான்.  

“அவன் விழிகளை மிக அருகே என இப்போது கண்டேன். அவனை நான் முன்பே அறிவேன். முன்பெங்கோ கண்டிருக்கிறேன்” என்றான்

“ஆனால் அதில் ஐயமில்லை, அவன் என்னை அடையாளம் கண்டு கொண்டான். நான் இன்னமும் அவனை அறியவில்லை. எங்கோ… காலமடிப்புகளில் எங்கோ, எனக்காக அவன் காத்திருக்கிறான் போலும்.”

 “ஆம், இத்தருணம் என்னுள் மைந்தனென முளைக்கும்”  என்று உலூபி சொல்கிறாள்.

ரோகிணி இன்று அனைத்தையும் கிளர்த்திவிட்டாள்.

மிக்க அன்புடன்,
சுபா

தளம்அன்பு ஜெமோ சார்,
     
                
தளம் நேற்று இரவிலிருந்துதிறக்கவில்லை. வெறுமையாக உள்ளது. நீங்கள் இமையம் சென்ற போது,  இந்தத் தனிமை கூட தங்களுக்கு வேண்டவில்லையெனில், வெண்முரசிற்கு என்னதான் மதிப்பென்றே கருதினேன். ஆனால் அப்பொழுது தளம் எங்களுடன் இருந்தது.மீள்வாசிப்பிற்கு திட்டமிட்டனவற்றையும், வாசிக்காமல்(அது கடல்) விட்டனவற்றையும் தேடித்தேடி வாசிக்கவே நேரம் சரியாக இருந்தது.
                  
ஆனால் தளம் திறக்காத ஓர் நாள்...  சகாதேவனை பிரிந்த நீர்க்கோல நகுலனை நினைத்துக் கொண்டேன்.
                 
இக்கடிதத்தை நேற்று எழுதத் தொடங்கினேன்.இன்று தளம் திறந்து விட்டது.
             நன்றி சார்.

குலங்கள்அன்பு ஜெமோ சார்,
             
குலங்கள் எவ்வாறு படிப்படியாக நாடாக மாறுகிறதென்ற சித்திரத்தை
   இன்றைய அத்தியாயம் தெளிவுறுத்துகிறது.ஸ்வேதன் மற்றும் சங்கனின் பார்வையில் இனி போர்க்காட்சிகள் ஆர்வமாயிருக்கிறது சார்.

இரா.சிவமீனாட்சிசெல்லையா.

பானுமதியின் மனநிலைஅன்புள்ள ஜெ

வெண்முரசி அத்தியாயங்களைக் காலையில் ஒருமுறை வாசிப்பேன். பிறகு மறுநாள் ஒருமுறை இன்னொரு முறை வாசிப்பேன். அப்போது புதிய வரிகள் கிடைக்கும்

நேற்று அப்படி வாசித்தபோது இந்த வரி கிடைத்தது பானுமதி எழுந்து கைகளை நீட்டி சோம்பல் முறித்தாள். உடலை உணர்ந்ததுமே சிறு திடுக்கிடலுடன் அசலையின் விழிகளை சந்தித்தாள். இளமகள்போல் அவள் உள்ளம் சிறுநாணம் கொண்டது.  முந்தையநாள் இரவு பானுமதி துரியோதனனிடம் நெடுநாட்களுக்குப்பின் உறவு கொண்டிருந்தாள். அதை இந்த ஒரே வரிதான் காட்டுகிறது. வேறு எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் அழகான வரி

ஆனால் அவள் அசலையின் கணகளைச் சந்திக்கவே முடிவதில்லை. அவள் அக்கண்களைச் சந்திக்கும்பேதே நாணம் கொள்கிறாள்.ஏனென்றால் அசலை துச்சாதனுடன் உறவுகொள்ளவில்லை என அவளுக்குத்தெரியும்


சாரங்கன் 

பலர்
அன்புள்ள ஜெ

வெண்முரசின் கதைகளுக்குள் சென்றுகொண்டே இருக்கும் அனுபவம்தான் இதுவரை இருந்த்து. பின்னிப்பின்னிச் செல்லும் கதை அமைப்பு. இப்போது கதை நேரடியாகச் செல்கிறது. ஆனால் அது ஒரு தோற்றம்தான். கதைசொல்லி அல்லது கதையை நிகழ்த்துபவன் என ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கிக்கொள்கிறீர்கள். ஆகவே கதை ஒரே ஒழுக்காகச் செல்கிறது என நினைக்கிறோம். ஆனால் கதை கலைடாஸ்கோப் போல திரும்பி வெவ்வேறு கதைமாந்தர்களைத்தான் காட்டிக்கொண்டிருக்கிறது. பானுமதியின் கதைதான் விதுர்ர் விகர்ணன் குண்டாசி தாரை அசலை என அத்தனைபேருடைய கதையாகவும் இருக்கிறது. அவர்கள் தங்களுக்கு நிகழ்ந்ததைச் சொல்கிறார்கள். அதன் வழியாக கதையின் பின்னல் உருவாகி வளர்ந்து செல்கிறது. ஒவ்வொரு கதையும் வழக்கம்போல ஒவ்வொரு மாதிரியில் உள்ளன. அசலையிடம் இருக்கும் எளிமையான அன்பும் பானுமதியிடம் இருக்கும் அரசிக்குரிய கம்பீரமும் தாரையிடம் இருக்கும் நேர்மையான தீவிரமும் அவ்வளவு வேறுபாட்டுடன் காட்டப்பட்டுள்ளன

மகாதேவன்