Tuesday, September 30, 2014

அகநிகழவு




ஐயா,

உங்கள் நீலம் மலர்ந்த நாட்களை மீண்டும் மீண்டும் படித்து மகிழ்கிறேன்.
அத்தனையும் பகிர்தலுக்கு நன்றி.

"எழுத எழுத உடம்பு சிலிர்த்தது. நறுமணங்களை என்னால் உணரமுடிந்தது. நெஞ்சு
விம்மி உதடுகள் துடித்தன.கடைசியில் கண்ணீர் வழிய தொடங்கியது"

"காதலாகிக் கண்ணீர் மல்கி" எனப் பாடியவர்களும் நீரும் ஒரே அனுபவம் பெற்றீர் போலும்.

யோகம் செய்தீரய்யா. யோகத்தின் பலனை எமக்குத் தருகின்றீர் ஐயா.

பின் குறிப்பு:

நான் கலிஃபோர்னியாவில் இருந்து எழுதிகிறேன். என் மடல்களுக்கு நீர் பதிலளிக்கத் தேவையில்லை. உம் நேரம் பொன்ன்னானது.என் மடல்கள் உம் சிந்தனையக் கலைத்து, நேரத்தை வீணாக்கினால், தெரியப்படுத்தவும். குறைத்து விடுகிறேன்.

உங்கள் நூல்கள் பல வாங்க வேண்டும்.முழுதாய்ப் படிக்க வேண்டும்.எப்போது செய்வேனோ தெரியவில்லை

.நன்றிகள்.
டில்லி துரை



அன்புள்ள டில்லிதுரை

கடிதங்கள் எப்போதுமே உற்சாகமூட்டுபவை

ஜெ



அன்புள்ள ஜெ,

நீலம் இப்போதுதான் வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். ராதை கிருஷ்ணனின் கால்களை முதலில் பார்க்கும் இடம் வந்தபோது சிலிர்த்தது. இந்த உணர்வுகளும் சரி இந்த இடமும் சரி பக்திநூல்களில் உள்ளவைதான் ஆனால் அவற்றை புதியமொழியில் புதிய அனுபவமாக வாசிக்கையில் அந்த நெகிழ்ச்சி ஏற்படுகிறது

ஏனென்று யோசித்தேன். பக்தி என்பது ஓர் உண்மையான விஷயம். godliness  என்பதை மனிதமனம் உணரும்போது வரும் எழுச்சி அது. அது perennial ஆனால் cliche வார்த்தைகளாகப்போட்டு அதை எந்த அர்த்தமும் இல்லாமலாக்கிவிட்டார்கள். அந்த அனுபவத்தை புதியமொழியிலே  வாசிக்ககையில் மீண்டும் அந்த age old அனுபவத்தை அடையமுடிகிறது.

நன்றி

வளர்நீலம்




அன்புள்ள ஜெயமோகன்

நீலம் வாசித்துக்கொண்டிருந்தபோது ஒரு விதமான போதைநிலைதான் இருந்தது. அதன்பிறகு கடிதங்களையும் கூடவே வந்துகொண்டிருந்த படங்களையும் பார்த்துப்பார்த்துதான் என்னுடைய எண்ணங்களை நான் வளர்த்துக்கொண்டேன். நிலம் என் வாசிப்பில் ஒரு மாஸ்டர்பீஸ். நீங்கள் எழுதியதிலும்கூட அதுதான் மாஸ்டர்பீஸ் என்று சொல்வேன். சிறந்தநாவல் என்றால் என்னென்ன இருக்கவேண்டும் என்று சொல்லப்படுகிறதோ அதெல்லாமே இந்த சின்னநாவலில் இருப்பதை பெரிய ஆச்சரியம் என்றுதான் சொல்வேன்.

மூன்று கதாபாத்திரங்கள்தான். ராதை, கிருஷ்ணன், கம்சன். ஆனால் மூன்றுபேருடைய வாழ்க்கையின் ஒட்டுமொத்தமும் இந்த நாவலுக்குள் இருக்கிறது. நல்ல நாவல்களை வாசிக்கும்போது நான் அடையும் எண்ணம் என்னவென்றால் அது நாம் பார்த்துக்கொண்டிருக்கும்போதே நம்மை அறியாமலேயே வளர்ந்துகொண்டு போகும் என்பதுதான் வாசித்துமுடிக்கும்போதுதான் நாவல் வேருஒன்றாக ஆகி நம்மை புதிய இடத்துக்குக்கொண்டுவந்துள்ளது என்பது தெரியும்.

அந்தமாதிரியான நாவலாக மழைபபடலும் வ்ண்ணக்கடலும் இருந்தது. மழைப்பாடலில் சத்யவதியும் குந்தியும் வளர்ச்சி அடைவது பெரிய ஒரு மன எழுச்சியைக் கொடுத்தது. ஆனால் அது நாவல் முடிந்தபோதுதான் நம் கவனத்துக்கே வந்தது. நீலத்திலும் ராதை மாறிக்கொண்டே இருப்பதும் கண்ணன் வளர்ந்துகொண்டே இருப்பதும் நமக்குத்தெரியவேயில்லை. வாசித்துமுடிக்கையில் அந்த வளர்ச்சி நம் மனதை தொட்டு அதிர்ச்சியை அளிக்கிறது.

ராதை முதலில் கண்ணனின் காலைப்பார்க்கிறது ஒரு தொடக்கம். அதன்பின்னர் அவன் அவளை ராதை என்று அழைப்பது. அதன்பின் அவள் அவனுக்கு குழலை எடுத்துக்கொடுப்பது. அதன்பின்  அவன் அவளுடைய நிர்வாணத்தைப்பார்ப்பது. அதன்பின் அவள் அவனுடைய குழலைக்கேட்டு வீட்டைவிட்டுச்செல்வது. இப்படிப் படிப்படியாக அவள் மாறிக்கொண்டே இருக்கிறாள். அந்தமாற்றம் நிகழ்ந்து முடியும்போது நாவல் பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கிறது

பொதுவாக அலங்காரம் அணி எல்லாம் உள்ளநடை என்றால் மிகவும் தளர்வாக இருக்கும். சொல்லவேண்டியதை நடைக்காகப்போட்டு நீட்டியிருப்பார்கள். லா.ச.ராமாமிருதத்தின் பிற்காலக்கதைகளிலே இதைத்தான் காணமுடிகிறது. அந்த வளர்த்தலே இந்தநடையிலே இல்லை. ஒரு ஆவேசமான நிகழ்ச்சியைக்கூட -‘கண்ணீருடன் கைநீட்டி அக்ரூரர் அருகே வந்தார். அவன் நீலமேனி தழுவ வந்தவர் நிலம் நோக்கிk குனிந்து தாள்தொட்டு தலையில் வைத்தார்- .என்று சுருக்கமாகத்தான் நீலம் சொல்கிறது. இந்த அடத்திகாரணமாகத்தான் இதை மீண்டும்மீண்டும் வாசிக்கவைக்கிறது. முழுமையான செறிவான ஒருநாவல் என்று சொல்லலாம்

ராஜாராம்
மரபின் மைந்தன் முத்தையா எழுதும் முதற்கனல் விமர்சனத் தொடர் 

நீலக்கடம்பு



அன்புள்ள ஜெ


ராதை அறிமுகமான இரண்டாவது அத்தியாயத்திலேயே ஒரு முத்தாய்ப்பு வருகிறது.  உண்மையிலே அதுதான் நாவல் தொடங்கும் முதல் அத்தியாயம்.

பருவமடைந்த அவளைக் கூட்டிக்கொண்டு வருகிறார்கள். யமுனை கரைமேல் அவளுக்குப்பிடித்தமான மரக்கிளையை வெட்டிக்கொள்ளச் சொல்கிறார்கள். அவள் தேர்ந்தெடுப்பது நீலக்கடம்பை


உயர்ந்த செம்மண் மேட்டில் இந்த இளங்காலையில் அத்தனை பெரிய பொற்தழல் எப்படி எழுந்தது? அது பூத்துலைந்த நீலக்கடம்பு. அத்தனை மரங்களிலும் அறிந்த நாள்முதல் நான் விரும்பியது இந்த மரத்தைமட்டுமே

கொஞ்சம் கூட யோசிக்காமல் ராதை போய் அந்த மலர்கடம்பின் கிளையைத்தான் ஒடித்துக்கொள்கிறாள். அதைப்பற்றித்தான் நினைத்துக்கொள்கிறாள். அந்தமரம் அவளுக்கு அன்னையாகவும் தோழியாகவும் இருக்கிறது. ஒரு நிரந்தரமான தோழி என்று சொல்லலாம்

ஒவ்வொருநாளும் நான் வந்தமர்ந்து நீர்ப்பெருக்கை நீள்விழிகளால் நோக்கியிருந்தது இதன் அடியில் மட்டுமே. மலர் உதிர்த்தும் குளிர்தென்றல் வீசியும் என்னை பல்லாயிரம் முறை வாழ்த்தியது இந்த முதுமரம். இதன் அழகிய சிறுமலர்களை என் காதுகளில் எத்தனை முறை குண்டலங்களாக அணிந்திருப்பேன்.

அந்த மரத்தின் கீழே நின்றபோதுதான் அவ்வழியாகப்போகும் படகைப் பார்க்கிறாள். அதிலே கண்ணன் அன்று பிறந்த சின்னக்குழந்தையாகப் போகிறான். அவனுடைய கால்களை மட்டும் காண்கிறாள்

அதன்பிறகு அவள் கடைசி அத்தியாயத்தில் அவள் அந்த நீலக்கடம்பின் அடியில் தெய்வமாக நின்றிருக்கிறாள். யமுனைக் கரையில் நின்ற இளநீலக் கடம்பு. அதனடியில் சிறுபீடம் ஒன்றின்மேல் சிற்றாடை கட்டி செந்தாமரை மொட்டேந்தி நின்றிருந்தாள் ராதை. முகிழ்த்த சிறுமுலையும் முறுவலிக்கும் இதழ்களும் விரிந்த மலர்முகமும் விழிநிறைந்த ஒளியுமாய் காத்திருத்தாள்.

இப்போது சின்ன ராதை இருக்கிறாள். அவளும் அந்த நீலக்கடம்பில் ஏறித்தான் விளையாடுகிறாள். அவளும் யமுனையிலே கண்ணனைப்பார்க்கிறாள். படகு விலகிச்செல்லவில்லை. நெருங்கி வருகிறது. சின்னக்குழந்தை இல்லை, முதிய கண்ணன். கால்தெரியவில்லை. பீலி அணிந்த முடி தெரிகிறது

ஒவ்வொரு வரியையும் ஆயிரம் முறை யோசித்து எழுதியதுபோல இருக்கிறது இந்நாவல் ஜெ





சொல்லின்மை



அன்புள்ள எழுத்தாளருக்கு...

பொறாமை, பொறாமையாக வருகின்றது. கண்ணனின் மதுரத்தில் திளைத்து எழுந்தமை கண்டு.

நன்றிகள்.
இரா.வசந்தகுமார்.

அன்புள்ள வசந்தகுமார்

நன்றி

மெல்ல மீண்டுவிட்டேன். அந்நாட்களின் பரவசமும் பரிதவிப்பும் இப்போது அந்த குறிப்புகளாகத்தான் எனக்கும் மிச்சமிருக்கிறது

ஜெ




அன்புள்ள ஜெ சார்

நீலம் வாசித்தபோது உண்மையில் எனக்கு அவ்வப்போது ஒரு பரவச அனுபவமாகக் கிடைத்த சிலவரிகளும்  வார்த்தைகளும் மட்டும்தான் அனுபவமாக இருந்தன. அது ஒட்டுமொத்தமாகப்புரியவில்லை. கிருஷ்ணனை ராதை சின்னக்குழந்தையாகப்பார்க்கிறாள் என்பது புரிந்தது. அதன்பின் அவளுடைய பித்து புரிந்தது.

ஆனால் வாசித்துமுடித்தபிறகு ஒரு சிலிர்ப்பு. அவன் ராதைக்காக புல்லாங்குழல் வாசிக்கிறான். அதற்க்காகவே தேடி வருகிறான். ஆனால் சின்னக்குழந்தையாக இருக்கும்போதே அவளுக்காக அவன் கதறி அழுவதை ஞாபகம் படுத்திக்கொண்டேன். அன்று முதல் அந்த கடைசிநாள் வரை தீராத ஏக்கமாக அது இருந்தது. அதுதான் ராதை என்று நினைத்துக்கொண்டேன்

மீண்டும் வாசிக்கவேண்டும்

சுபா



அன்புள்ள ஜெ

நீலம் வாசித்தபோது நிறையப் பேசணும்போல இருந்தது .அதுதான் போனிலே கூப்பிட்டேன். ஆனால்  பேசியபோது ஒன்றுமே பேசமுடியவில்லை. காரணம் என்னால் என்னபேசுவது என்று சொல்லமுடியவில்லை. ஒருவிதமான உணர்ச்சிவசப்பட்டநிலை மட்டும்தான்

இப்போது வாசித்துமுடித்ததும் அதே மனநிலைதான். கடிதங்களைத்தான் திரும்பத்திரும்ப வாசித்துக்கொண்டே இருக்கிறேன். கடிதங்கள் எனக்கு நான் நினைப்பதைச் சொல்வதுமாதிரி இருக்கின்றன. அந்தக்கடிதங்களை வைத்துத்தான் கடிதங்களை எழுதவேண்டும் என்று நினைத்தேன்

கொஞ்சநாள்கழிந்து எழுதுகிறேன்

எம்




அன்புள்ள ஜெ சார்

நீலம் என்னுடைய உணர்ச்சிகளுக்கு ஒருவடிகால் மாதிரி இருந்தது. நீலம் வாசிக்கும்போது எனக்கு நான் சின்னப்பெண்ணாக இருக்கும்போது வந்த சிலபாட்டுகளைத்தான் நினைவுபடுத்தியது. ரோஜாவிலே உள்ள புதுவெள்ளைமழை பாட்டு எனக்கு ஒருபெரிய கனவுமாதிரி. எப்போதுகேட்டாலும் அழுதுவிடுவேன். வாழ்க்கையே இல்லாமல் போய்விட்டது என்றுகூடத் தோன்றும். நீலம் பலஇடங்களில் அப்படி அழுகையை உணர்ந்தேன்

என்ன இது இவ்வளவு பெரியநாவலை சினிமாவுடன் ஒப்பிடுகிறேனே என்று தோன்றும். நீங்களும் அதேபோல உங்கள் சின்னவயசு பாடல்களை நினைக்கிறீர்கள் என்பது மகிழ்ச்சி அளித்தது

செல்வி. 

பாலையில் அலைதல்




நீலம் எழுதிய மனநிலையைப்பற்றி எழுதியிருந்தீர்கள். [நீலம் மலர்ந்த கதை] என் ஆச்சரியம் என்னவென்றால் ராதை கிருஷ்ணனை விட்டு பிரிந்து தனித்து இருக்கும் அந்த மனநிலை [புரோஷிதபர்த்ருகை] என் மனதிலும் அதே நிலையைத்தான் ஏற்படுத்தியது. அதைவாசித்தது முதல் கைகால்கள் எல்லாம் கனமாகி விட்டதுபோல இருந்தது. எதையுமே செய்யமுடியவில்லை. 

என்னைமீறி அதிலே வரும் சில வரிகளைத்தான் சொல்லிக்கொண்டே இருந்தேன்.காத்திருத்தல் என்பது கணம்தோறும் வாழ்தல். கைவிடப்படுதலோ கணம்தோறும் இறத்தல்  என்பது நான் டைரியில் குறித்துப்போட்ட வரி ஆனால்  கருவண்ணா, அறிவாயா? என்றுதான் நூற்றுக்கணக்கான முறை சொல்லிக்கொண்டிருந்தேன். என்ன இது பைத்தியம் மாதிரி சொல்லிக்கொண்டு நன்றாக இல்லையே என்று நானே சொல்லிக்கொண்டேனே ஒழிய சொல்வ்தை தடுக்கமுடியவில்லை

அந்த அத்தியாயத்தின் சிறந்த வரி  வாராதிருத்தலாகுமோ? என் விழியுதிர்க்கும் வெய்யநீர் பாராதிருக்கலாகுமோ? இதுமுன் இப்புவியில் நேராதிருந்த கதையிதுவோ? யாராயிருந்தேன் அன்றெல்லாம்? என் குரல் தேராதிருக்கும் உன் செவிக்கே சொல்லூற்றி நிறைக்கிறேன். உன் நினைவிலொரு பேராயிருக்கும் பேறடைந்தேன் அல்லேன்.  எத்தனையோ முறை வாசித்த வரி. வாரதிருக்கலாகுமோ என்பதை பல்லவி மாதிரி வைத்துக்கொண்டு பாட்டாகவே பாடுவேன். ஆனால் அந்த வரி கொஞ்சம் கூட நினைவில் நிற்கவே இல்லை. கருவண்ணா அறிவாயா என்ற வரிதான் நினைவிலே ஓடிக்கொண்டே இருந்த்து. ஏன் என்றே தெரியவில்லை

அந்த அத்தியாயத்தை வாசித்த நாட்களில் எப்போதுமே தலைவலி இருந்தது.மூச்சு திணறுவதுபோல இருந்த்து. ஆனால் கொஞ்சநாள் கழித்து வாராதிருக்கலாகுமோ என்ற வரி நினைவில் திரும்பத்திரும்ப வந்த்து. எங்கே வாசித்த்து என்றே நினைவுக்கு வரவில்லை. தேடித்தேடிப்பார்த்துதான் கண்டுபிடித்தேன். அந்த இரண்டு அத்தியாயங்களையும் அப்படியே மறந்துவிட்டேன். கெட்டவிஷயங்களை மறப்பதுபோல. அப்படிப்பட்ட ஒரு மனக்கஷ்ட்ட்த்தை அவை தந்தன. பின்னர் நினைக்கும்போதுகூட பகீரென்றது இவ்வளவுக்கும் அதிலே பெரியதாக ஒரு சம்பவமும் இல்லை. வெறும் உணர்ச்சிகள்தான் இருந்தன. வெறும் வார்த்தைகளே அந்த உணர்ச்சிவேகத்தை அளித்தன. இதை இதற்குமேலாக எப்படிச் சொல்ல என்ற் தெரியவில்லை.


பீலி



அன்புள்ள ஜெ சார்

நீலம் வாசித்து மனம் நெகிழ்ந்துபோன வாசகிகளிலே நானும் ஒருத்தி. அதன் மொழி எனக்கு முதலிலே கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனால் பாராயணம் மாதிரி தினமும் கொஞ்சம் வாயால் சொல்லிக்கொண்டே வாசித்தேன். அதிலே உள்ள எதுகைமோனை செய்யுள் வாசிப்பதுமாதிரிஇருந்தது. கொஞ்சம் கொஞ்சமக அந்த மொழிநடை என்னை உள்ளே இழுத்துக்கொண்டது. நான் அதிலே கரைந்துபோய்விட்டேன்

கண்ணனை ராதை அவளே உண்டுபண்ணிக்கொண்டாள். அவள் அவனுக்கு அமுதூட்டுகிறாள். பெயர் போடுகிறாள். அவனுடைய மயில்பீலி, புல்லாங்குழல் எல்லாமே அவள் கொடுத்தது. அவள் கொடுத்த மயில்பீலியையும் புல்லாங்குழலையும் ஏந்தி அவன் வந்து அவள் முன்னால் நிற்கிறான்

அவர்கள் முதலில் புல்லாங்குழல் கேட்கும் இடம் மிக உக்கிரமானது. மெதுவாக தோட்டத்தில் மூங்கிலிலே கேட்க ஆரம்பிக்கும் அந்த சங்கீதம் அவளை எப்படி கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கொண்டு பைத்தியமாக அடித்து அப்புறம் விடுதலையை அளிக்கிறது என்பதை வாசித்தபோது மனம் விம்மியது. கடைசியில் அந்த இசையே அவளுக்கு நாதோபாசனையாக ஆனது நிறைவூட்டியது

புல்லாங்குழல் கேட்டுக்கொண்டே இருந்தது நாவல் முழுக்க. ஒரு நாவல் வார்த்தையாக எழுதப்படுவது. அது இப்படி சங்கீதமாக மாறி நாள்கள்கணக்காக மனசுக்குள் ரீங்காரம் போடுவது அற்புதமானதாக இருந்தது

என்பெயர் கூட ராதாதான்

ராதா முருகேஷ்



அன்புடன் அண்ணன் அவர்களுக்கு,
நீங்கள் இன்று குறிபிட்டதை போல, நானும் இருமுறை கனவு கண்டேன்.தெளிவானவை, நிஜத்தை போல.

ஒருமுறை திருமணமாகி கணவனுடன் "உன்னுடன் எப்போதும் உண்மையாக இருப்பேன் " என நினைத்து கொண்டே செல்லும் பெண்ணை போலவும் , மறுமுறை, பாலுட்டும் தாயை போலவும். கலங்கி எழுந்துவிட்டேன். என்னுள் உறைந்த பெண்ணை பதற்றத்துடன் உணர்ந்தபடியே இருந்தேன்.

பிறகு நீலத்தை பதிவிறக்கம் செய்து , சோம்பலான விடுப்பு நாட்களின் பின்மதியத்தில் மட்டுமே வாசிக்க ஆரம்பித்தேன்.

ஏனையவர்கள் அடைந்த உணர்வு நிலைகளை படி படியாக உள்வாங்கி கொள்வேன்.

இவ்வினிய அனுபவங்களுக்கு நன்றி ! 

அன்புடன்.

Monday, September 29, 2014

புனைவுடல்




அன்புள்ள ஜெ சார்,

நீலத்தை வாசித்துவாசித்துத் தீரவில்லை. கண்ணனைச் சின்னக்குழந்தையாக உருவகம் பண்ணிய இடத்தில் இருந்து முதியவராக கொண்டு வந்து நிறுத்தியது வரை ஒரே மனமே கற்பனைசெய்திருக்கிறது என்பதே ஆச்சரியமாக இருந்தது. அந்தச்சின்னக்கண்னனை எழுதும்போதுகூட நீங்கள் அவனை பெரியவராக, வினைமுடித்து வானம் போகப்போகக்கூடியவராக நினைத்திருந்தீர்கள் என்பதே வியப்புதான்.

என் மனசிலே இருந்து சின்னக்கண்ணன் தவறவே இல்லை.ஒரு குழந்தையைப்பற்றி எல்லாவற்றையுமே சொல்ல்விட்டீர்கள் அது சின்னப்பிள்ளையாக இருந்தபோது நீங்கள் எழுதியவரிகளை திரும்பப்போய் வாசித்தபோது ஏற்பட்ட பிரமிப்பு அதிகம் அம் என கீழுதடு அழுந்த, மு என்று மேலுதடு வளைந்து மேலே குவிந்திருக்க அத்தனை குழந்தைவாயும் சொல்லும் அச்சொல்லிலா நீயும் வந்தமைந்திருக்கிறாய்? அய்யோ, நீயுமொரு குழந்தையேதானா? அப்போதே ராதைக்குத்தெரியும். அது வெறும் குழந்தை கிடையாது என்று. ஆனால் வெறும் குழந்தைமாதிரி வந்து படுத்து மாயம் காட்டுகிறது.

இங்கிருந்து இவ்வுடல்கொண்டிருக்கும் பெரும்பாவத்தை இறந்திறந்து களைகிறேன். உன்னை அள்ளி உண்டு நானாக்குகிறேன். உன்னைத்தழுவி என்னுள் செலுத்திக்கொள்கிறேன். வாய்திறந்தொரு கருஞ்சுழிப்பெருவெளியாக எழுக. உன் உணவாகி உன்னுள் மறைகிறேன். இருத்தலென்றறியும் இப்பெரும்வதையில் இருந்து இருளில் உதிர்கிறேன். ஆதலென்றாகும் அப்பெருங்களியில் ஏதும் எஞ்சாமலாகிறேன்.

என்றுதான் குழந்தையை முதலில் பார்த்ததுமே ராதை நினைக்கிறாள். அவள் கடைசிவரை ஏங்கியதும் கடைசியிலே வந்து சேர்ந்ததும் அங்கேதான் என்று கடைசி அத்தியாயங்களை வாசிக்கும்போது தெரிந்தது. சொல்வெளி திகைத்து பொருள்வெளி மலைத்து இப்புவியில் திரண்டதோர் பித்துப்பெருவெளியின் விளிம்பில் நின்று கண்ணீர் துளிக்கிறேன் என்ற வரியை வாசிக்கும்போது கடைசி அத்தியாயத்தை முதலில் எழுதிவிட்டு அங்கே சென்றீர்களோ என்ற பிரமிப்புதான் வந்தது

செவ்விதழ்க் கீழ்நுனியில் வழிந்து திரண்டு நின்றிருந்த ஒரு துளி அமுதை ராதை தன் சுட்டுவிரல் நுனியால் தொட்டு மெய்விதிர்த்து கண்பனித்தாள். அந்த இடத்தை ஆரம்பத்திலே வாசித்தபோது ‘கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ பொற்பூர வாய்தான் தித்தித்திருக்குமோ’ என்ற ஆண்டாளின் ஏக்கம் தான் மனதில் இருந்தது. ஆனால் கடைசி அத்தியாயத்தை வாசித்தபோது தெரிந்தது அந்தத் துளிதான் அவளுக்கு வந்த அந்த நாத ஆராதனை என்று

மனுஷ உடல் ஒரு அற்புதம் என்று சொல்வார்கள். அதில் ஒவ்வொன்றும் மற்ற எல்லா உறுப்புகளுக்குமானது. பிரிக்கமுடியாதது. அப்படி நீலம் ஒரே அமைப்பாக இருக்கிறது. தனித்தனியாக எழுதியதுபோல இல்லை. வரிசையாக எழுதியதுமாதிரியும் இல்லை. ஒட்டுமொத்தமாக ஒரு விஸ்வரூபமாக நாவலை ஒரே நிமிஷத்தில் பார்த்து எழுதியதுமாதிரி இருக்கிறது

நன்றி சார்

சாரங்கன்



அழியா இளமை



“எவரையும் நோக்காமல் எங்கோ நெஞ்சிருக்க நடந்து சென்றார்.”

அவர் வேய்குழல் கேட்கக் குழப்பம் அடைகிறார்கள் அமைச்சர் முதலானவர்கள். அனங்கமஞ்சரி மட்டுமே அவருடைய பால்யம் அறிந்திருக்கிறாள். அவள் அந்த ஆடலின் ஒரு silent witness.
.
கீதை உரைத்து, போர் முடித்து,  மணி முடி தந்து திரும்பி வருகிற பெரும் அரசர் அவர். அந்த நீண்ட வாழ்க்கையில் எத்தனை கண்டிருப்பார், எவ்வளவு சலிப்பு இருந்திருக்கும். முதிர்ந்து  தளர்ந்து குழலூதும் அவர் அழைப்பது ராதையை மட்டுமே. அவளைக் கண்டடைந்து கண்ணனாவது அற்புதம். மாமன்னர் கிருஷ்ண தேவர் அன்னை முன் வந்தடைவது  பெரும் தனிமையை மனதில் ஏற்படுத்தி விட்டது.

அது அந்த உயிரின் தனிமையா, அல்லது நீலம் நிறைவுற்று என்னுள் ஏற்படும் வெறுமையா. வெறும் முப்பத்தேட்டே நாட்கள் தானா, இந்த நாட்களை வெறும் கணிதக் கணக்காகப் பார்க்க முடியாதல்லவா? யுகம் யுகமாக சுனையில், நதியில், கடலில், ஆழியில் மலர்களில், விண்ணில் ராதையாக கண்ணனாக ஆடி அலைந்து தரையில் விழுந்தது போலிருக்கிறது.

ரவிச்சந்திரிகா



அன்புள்ள ஜெ

நீலம் நாவலின் உச்சம் முதிய கண்ணன் வருவது. அப்படி ஒரு கதாபாத்திரத்தை நான் கதைகளில்கூட கேட்டதில்லை. கிருஷ்ணன் முதிர்ந்து இறந்தார். யாதவர்களின் குலச்ச்ண்டையில் மனம் உடைந்துபோய் இருந்தார். அப்போது ஒரு வேடனால் கொல்லப்பட்டார். இதெல்லாம் தான் வாசித்தது. அதைச் சுருக்கமாகச் சொல்லி போய்விடுவார்கள். நீலத்தில் வரும் கண்ணனின் தளந்த தோற்றமும், வந்த பணி முடிந்தது என்கிற நிறைவு கலந்த சிரிப்பும் மனதைக் கலங்கவைத்தது.

கண்ணனுக்குத்தான் எல்லாம். ராதைக்கு என்றும் இளமைதான். அதை அவளே கண்னனிடம் கேட்டு வாங்கியிருக்கிறாள்

இப்புவியில் நீ ஆடுவதெல்லாம் அறிந்தவளல்ல நான். எளியவள். ஏதுமறியா பேதை. என் விழியறிந்த மெய்யெல்லாம் வழிந்தோடட்டும். அங்கு அழியாத பொய்வந்து குடியேறட்டும். இளமையெனும் மாயையில் என்றுமிருக்க அருள்செய்க. இளந்தளிராய் நான் உதிர என்னருகே நீ திகழ்க!


ஆகவே அவள் என்றும் அழியாத இளமையுடன் இருக்கிறாள். அவளுக்கு பிரேமைமட்டும்தான். ஞானம் விவேகம் ஒன்றுமே தேவை இல்லை. பிரேமைவழியாகவே முக்தி. ஆகவே முதுமையே இல்லை.

சண்முகநாதன்



முதற்சொல்




நீலம் மலர்ந்த நாட்கள் வாசித்தேன்...ஒரு விதத்தில் பிரசவம்தான் இல்லையா!!

சேக்கிழாருக்கு உலகெலாம், சிவபெருமானிடமிருந்து...தங்களுக்கு கண்ணனிடமிருந்து!
நூற்றாண்டுகள் கழித்து இது ஓர் அழகான உருவகமாகப்போகிறது..

நீங்கள் எழுதியிருப்பது போல்,"எங்கோ ஆழத்தில் உள்ள இருண்ட கருவறை ஒன்றிலிருந்து எப்படியோ எழுந்து வரும் ஒரு சொல்லை வைத்துச் சட்டென்று தொடங்கி விடுபவையாகவே எல்லாப் பெரும் படைப்புகளும் உள்ளன. முதல் வார்த்தை ‘வருவது’ வரைக் கவிஞனால் எதையுமே எழுத முடிவதில்லை. அது வந்த பிறகு காவியம் தன் போக்கில் எழுதப் பட்டபடியே இருக்கிறது."

அந்த முதல் சொல் ‘உலகெலாம்’ என்பது எவ்வளவு அற்புதமான விஷயம்! ஒரு கவிஞனைப் பொறுத்தவரை காவியம் எழுதுவதன் நோக்கம் உலகத்தையே தன் சொல்லால் அள்ளி விட வேண்டுமென்பதே . அந்த முதல் சொல்லை உணர்ந்தபோது சேக்கிழாரின் மனம்தான் எந்த அளவுக்கு பொங்கி எழுந்திருக்கும். ‘உலகம் முழுக்க’ என்ற சொல்லுக்கு பல தளங்கள். இதோ உலகெலாம் கேட்கும் பொருட்டு சொல்கிறேன். உலகில் உள்ள அனைத்தையுமே சொல்லி விடப் போகிறேன்……பெருங்காவியங்களின் முதல் சொல் இவ்வாறு மாபெரும் மன எழுச்சி ஒன்றை அடையாளம் காட்டுவதாகவே அமைகிறது . ‘ ‘மூவா முதலா உலகம்’ ‘ என சீவக சிந்தாமணி ஆரம்பிக்கிறது. ‘ ‘சொல்லும் பொருளும்’ ‘ என மகாகவி காளிதாசனின் ரகுவம்சம்."

வெண்முரசு படைக்கத் தொடங்கிய பிறகு உங்கள் தளம் அதுதான்.சமகாலத்தில் அதனை அவதானிப்பதற்க்கு ஒர்  வாய்ப்பு.


நீலம் ஓர் அழகான கனவனுபவம் (நீலம் 37 வரை).பாலாடி பகடையாடி..காதலாகி கனிந்துரிகி.......நீலம் 38,அதில் ஓர் விழிப்பு, அற்புதமான முடிவு. நிதர்சனம் அவ்வாறு தான் இருக்கும்.


Collective Reading:எத்தனை விதமான பார்வைகள்..அணுகும் பரிமாணங்கள்!!சுவாமி, சண்முகம், அருணாச்சலம், மாணிக்கவேல், ரவிசந்திரிகா, சீனு....கிருஷ்ணன் (Evergreen), அனைவருக்கும் நன்றி...

 துவாரபாலகர் தங்களில் உணர்ந்த சரஸ்வதி கடாக்ஷத்திற்க்கு, தங்கள் தாள் பணிகின்றேன்.

Sunday, September 28, 2014

கோதையின் வரிகள்




ஐயா,

உம் பணி பெரும் பணி.

அப்பெரும்பணிக்கிடையிலும், எனக்கும் பதிலளிக்கும் உம்மை வியக்கிறேன்.
பழந்தமிழை, செந்தமிழைப் புதுப்பித்து வாசகர் நெஞ்சங்களில் புழங்கச்
செய்கின்றீர்கள்.

"அது சேவலின் ஓசை என்று தோன்றியது கொக்கரக்க கொக்கரக்க கொக்க்ரக்கோ கோ
என்ற ஒலி. ஆனால் நான் விரும்பியது குயிலின் ஒலி."

கோதை குயிலைப் பாடும் முன் சேவலைத்தான் பாடினாள்.சேவல் கூவியபின்னும் கரியோனோடுடறங்கும்  நப்பின்னையைப் பாடினாள்.நப்பின்னையே ராதையென்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

கோதை பாடிய சேவலோசையே உமக்குக் கேட்டு,  ராதைக் கதைக்கு வித்திட்டதோ என
வியக்கிறேன்.பெரியாழ்வார் பித்தும், கோதைப் பித்தும் உம்மையும் பித்தராக்கியதோ?
பித்தின் உச்சம்தான் உண்மையான பக்தியோ? உமக்கும் பக்தி வந்ததோ?

கோதை வரிகள்.ராமானுஜரை மயக்கிய வரிகள்.

உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்
நந்தகோபன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல் கால் குயிலினங்கள் கூவின காண்
பந்து ஆர் விரலி உன் மைத்துனன் பேர் பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.


பெரியாழ்வார் சொல்லும், திருமகளின்சொல்லும் உம் சொல்லாய் இன்னும் இன்னும்
விளையாடட்டும்.

நன்றிகள்.
டில்லிதுரை





பெரியாழ்வாரா?




திரு ஜெயமோகனரையா,

அண்மையில்தான் உங்களைப் படிக்க ஆரம்பித்தேன்.நீலத்தில் கரைந்தேன். உங்கள் திறனை வியக்கிறேன்.

படித்தனவும் பயின்றனவும், படைப்பனவும். தமிழும், அழகும், மோகனமும்வெல்லும் ஒளிவண்ணம் தரும் வேலும் கொண்டீர்.

‘உலகறிந்து எழுந்தவர் ஒருங்குணர்ந்து உய்ந்திடும் ஒரு பொருள் நீ’

நீங்கள் மேற்கோடிட்ட பெரியாழ்வார் வரியை 4000 பிரபந்தத்தில் தேடினேன்.
கிடைக்கவில்லை.

அதனையொட்டி வரும் வரிகளையும் அறிய ஆர்வத்தைத் தூண்டினீர்.
மூலத்துக்கு ஏதாவது சுட்டி கொடுப்பீர்களாயின் மிகவும் மகிழ்வேன்.

நன்றி
டில்லிதுரை

அன்புள்ள டில்லித்துரை,

அது பெரியாழ்வாரின் வரி இல்லை. என் கனவில் பெரியழ்வாரின் வரியாக வந்த என்னுடைய சொந்த வரிதான். கனவில் அப்படி ஒரு மாயமாகத் தெரிந்தது அது

ஜெ

வெண்ணைக் கண்ணன்



அன்புள்ள ஜெயமோகன்

நீலத்தை வாசித்த அளவுக்கு நான் வெண்முரசின் எந்த நாவலையும் ஈடுபட்டுப்போய் வாசித்தது கிடையாது. வெண்முரசுதான் நான் மிகவும் கூர்ந்து வாசித்த நாவல். என் வாசிப்பு சிவசங்கரியிலே ஆரம்பித்து அம்பை வரைக்கும் வந்திருக்கிறது. எனக்கு ஜானகிராமன் மேல் பெரிய ஈர்ப்பு இருந்தது. உங்கள் நாவல்களிலே காடு, இரவு மட்டும்தான் வாசித்திருந்தேன். விஷ்ணுபுரம் கொஞ்சம் வாசித்தேன். ஓடவில்லை. வெண்முரசு ஆரம்பத்திலே கொஞ்சம் இழுத்தது. அதன்பின்னர் நடை பழக்கமாகிவிட்டது. பிரச்சினை இல்லை. இப்போது தொடர்ந்து வாசிக்கிறேன்

முதற்கனலில் அம்பை, மழைப்பாடலில் சத்யவதியும் குந்தியும், வண்ணக்கடலில் ஏகலைவனின் அம்மா ஆகிய கதாபாத்திரங்களை மிகவும் விரும்பினேன். வெண்முரசை திரும்பத்திரும்ப வாசித்துக்கொண்டே இருந்தேன். எங்கோ ஒரு உலகிலே இதெல்லாம் உண்மையாகவே நடந்துகொண்டிருக்கிறது என்றெல்லாம் தோன்றும். எனக்குப்பிடித்தமான எழுத்தாளர்கள் நிறையபேர் உண்டு. ரேமண்ட் கார்வர் பிடிக்கும். ஜும்பா லாகிரி பிடிக்கும். இப்போது கொஞ்சநாளாக முரகாமி. நான் ஆங்கில இலக்கியம் படித்தவள். பழைய எழுத்தாளர்களிலே டிக்கன்ஸ் ரொம்பப் பிடிக்கும்.ஆனால் தமிழிலே படிக்கும்போது வரும் இந்த நெருக்கம் அதிலே எல்லாம் இல்லை. வெண்முரசு நான் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த ரொட்டீன் வாழ்க்கையில் பெரிய அர்த்தத்தை அளித்துவிட்டது.

ஆனால் நீலம் அப்படி இல்லை. இதன்நடை ஆரம்பத்திலே கொஞ்சம் கஷ்டப்படுத்தியது. வரிவரியாகத்தான் வெண்முரசையே வாசிக்கவேண்டும். இந்த நாவலை ஒவ்வொருவரியையும் பலதடவை வாசிக்கவேண்டும். வாசிக்க வாசிக்க விரிந்துகொண்டே போயிற்று. என் ஆபீஸில் இரு தோழிகள் வாசித்தார்கள். ஓடவில்லை என்று சொல்லிவிட்டார்கள். இன்னும்கொஞ்சம் கற்பனையும் உழைப்பும் தேவை என்று சொல்லிவிட்டேன். நீலம் எனக்கு ஒரு வாழ்க்கை அனுபவம் - லைஃப்டைம் எக்ஸ்பீரியன்ஸ் என்று சொல்வார்களே அது. அதை எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை

நான் நினைப்பதைச் சொல்ல பயப்படுக்கொண்டுதான் இதுவரைக்கும் ஒன்றிரண்டு வரியாக கடிதம்போட்டுக்கொண்டிருந்தேன். அதை நீங்கள்கூட தப்பாக நினைக்கலாம். ஆனால் வெண்முரசு விவாத்ங்களிலே வரும் கடிதங்களை வாசித்தபோது நானும் அந்த லெவலுக்கு வாசித்திருக்கிறேன் என்ற தன்னம்பிக்கை ரொம்ப வந்தது. அதனால்தான் இதை எழுதுகிறேன்.

நீலம் ஆரம்பத்திலே கண்ணனைக் கைக்குழந்தையாகவே காட்டியது. கவிழ்ந்து குப்புத்துக்கொள்வது, வாயில் எச்சில் விழுவது, தத்தக்காபித்தக்க நடப்பது. பல வரிகளை வாசித்து வாசித்து தீரவில்லை. பொதுக்குக் கை என்று சொல்லிக்கொண்டே இருப்பேன். வெண்ணைதிருடிச்சாப்பிடும் காட்சி மாதிரி ஒரு அற்புதமான காட்சியை இனி நீங்களே எழுதிவிடமுடியாது. ஆழ்வார்களெல்லாம் எழுதிய இடம்தான். ஆனால் இது புதிசு. அதிலும் பலராமன் சொல்லும் அரிய ஆலோசனைகள் இருக்கிரதே. அற்புதம். சான்ஸே இல்லை

அதன்பிறகு ராதையின் பிரேமை வந்து கிருஷ்ணன் பெரியவனாக வளர்ந்தபோதெல்லாம் நானும் மனம் மாறி கூடவே வந்துவிட்டேன். ஆனால் கதைமுடிந்ததும் அதையெல்லாம் அப்படியே அழித்துவிட்டு திரும்பிப்போய் கிருஷ்ணனைக் கைக்குழந்தையாகவும் வெண்ணைக்கண்னனாகவும் நினைக்க ஆரம்பித்துவிட்டேன். எனக்கு குருவாயுர் மிகவும் பிடித்தமான ஊர். நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போதுதான் முதலில் போனேன். குருவாயுரில் கண்ணனைக் கண்ட அனுபவம் மறக்கவே இல்லை. அந்தக்கண்ணன் வளர்ந்து 80 வயசாக வருவதெல்லாம் மனசுக்கு ஒட்டவே இல்லை.

திரும்பத்திரும்பப் போய் அந்த குட்டிக்கிருஷ்ணனுடைய லீலைகளைத்தான் வாசித்துக்கொண்டே இருக்கிறேன். அதிலே உள்ள மோகம் குறையவே இல்லை. அவனுக்கு ராதை பறவைகளையும் வானத்தையும் காட்டிக்கொடுப்பது. அதைவிட அவன் முதல்முதலாக அவளைப் பெயர் சொல்லி கூப்பிடுவது. அதைத்தான் பெயரறிதல் என்று எழுதியிருந்தீர்கள். அதை வாசிக்கும்போதுதான் கடைசிக்காட்சியில் புல்லாங்குழல் ராதை என்று கூப்பிடுவதன் தாத்பர்யம் புரிந்தது

என்னசொல்வது? ஒரு கனவு. கலையாமல் கையிலேயே வைத்திருகக்லாம் இந்தக் கனவை

அகிலா லட்சுமண்



அறத்தான்



அன்பான ஜெயமோகன்

”கருணையுள்ள அறம் என ஒன்றில்லை.”

இந்த வரிகளை மீறிச் செல்லாமல் நின்று விட்டது மனம்.

அன்பு, கருணை, நம்பிக்கை, காதல் என வெறும் பேச்சுப் பேசி வாழ்வதில் இருந்து அறம் கொண்டு வாழ்வதற்கு, அதை நோக்கி நகர்வதற்கான முயற்சிகளில் தோற்றுப் போகிற சிறியதிலும் சிறியதான வாழ்க்கை.

பழி பாவம், முற்பிறப்பு, கர்மவினை என்று செயல்களை நியாயப் படுத்துவது கடந்து அறம் கொண்டு மட்டும் வாழ முடியுமா என்று ஏங்கிப் போகிறது நெஞ்சம்.

ரவிச்சந்திரிகா


அன்புள்ள ஜெ

அறம் கருணை அற்றது என்று எழுதிய வரிகளைத்தான் வாசித்துக்கொண்டே இருந்தேன். அதை புரிந்துகொள்ளவே முடியவில்லை. ஆனால் திடீரென்று நினைத்துக்கொண்டேன். இந்த உலகத்திலே பெரிய அநீதி இழைக்கப்பட்டவர்கள் எல்லாரும் குரூரமாக ஆகிவிடுகிறார்கள். ஆசிட் ஊற்றப்பட்டு செத்துப்போன பெண்ணின் அம்மா அந்த ஆளை தூக்கிலே போடவேண்டும் என்று கூவி அழுததைப்பார்த்தேன். நீதி கொலைவாளுடன் தீராத கோபத்துடன் வரவேண்டும் என்பது எளிமையான சாமானியர்களின் ஆசை அல்லவா? நீதியும் அறமும் கருணை காட்டவேண்டியது பாதிக்கப்பட்டவர்களிடம்தான். அநீதி இழைபப்வர்களிடமும் அறம் மீறக்கூடியவர்களிடமும் அல்ல. அப்படி நீதியும் அறமும் கருணை காட்டினால் அது சமரசம் என்றுதான் அர்த்தம். சமரசம் நீதியாக இருந்தால் அங்கே அநீதிதான் வளரும். வலிமையற்றவர்களுக்கு நீதி கிடைக்காது. நாம் எப்போதுமே ஆசைப்படுவது கருணை இல்லாத நீதிமானைத்தானே? சினிமாவிலேகூட. கிருஷ்ணன் கீதையிலே சொல்வதும் அதைத்தானே?

பிரபாகர்


Saturday, September 27, 2014

வியாசனும் ஔவையும்





அன்புள்ள முத்தையா 

அட்சரம் பிசகாமல் அவ்வை பாடலை மேற்கோள் காட்டியிருப்பதால் பீஷ்மர் அவ்வையை மேற்கோள் காட்டுவதாய் வாசகன் புரிந்துகொள்ள இடமிருக்கிறது. அவ்வைக்கு முன்னரே நீதிநூல்களில் இக்கருத்து இடம்பெற்றிருந்துஅதைத்தான் பீஷ்மர் சொல்வதாய் இருந்தால் கூட அவ்வையின் சொற்களால் அதை சொல்லியிருக்க வேண்டாம். பீஷ்மருக்கும் அவ்வைக்கும் இடையிலான பன்னெடுங்கால இடைவெளியை ஜெயமோகன் நன்கறிவார். 

வியாசமனம் என்றபேரில் நீங்கள் எழுதிவரும் கட்டுரைத்தொடர் முதற்கனலை தமிழ்ச்சூழலில் வைத்துப்புரிந்துகொள்வதற்கான மிகச்சிறப்பான ஒரு வழிகாட்டி. அதற்காக நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்.

அவ்வை மட்டுமல்ல மேலும் பல  பிற்காலத் தமிழ்க்கவிஞர்கள் எடுத்தாளப்பட்டிருக்கின்றன கணியன்பூங்குன்றன் வரை. பிற்காலப் புராணங்களில் இருந்தும் வரிகள் எடுத்தாளப்பட்டுள்ளன

நீங்கள் சொன்னதுபோல யதார்த்தவாத நோக்கிலும்சரி, வரலாற்று நோக்கிலும் சரி இது பிழையானதே. ஆகவேதான் அவர்களின் பெயர்கள் குறிக்கப்படவில்லை. ஔவையார், கணியன்பூங்குன்றன் வரிகளுக்குச் சமானமான வரிகள் முன்னரே இருந்தவைதான். ஆனாலும் அப்படியே எடுத்தாள்வதற்கு அழகியல்ரீதியான ஒரு காரணம் உண்டு. ஏற்கனவே ர.சு.நல்லபெருமாள் அவர்களின் மகளான சிவா சக்திவேல் அமெரிக்காவிலிருந்து அழைத்து இதைப்பற்றிக் கேட்டார்.

சம்ஸ்கிருத காவியமரபில் அப்படி சில மூலநூல்களை, மூலவரிகளை எடுத்தாள்வது ஓர் அழகாக மட்டுமல்லாது அவசியமாகவும் கருதப்படுகிறது. அதாவது நன்கறியப்பட்ட வரிகளை. அது மணிமிடைப்பவளம் என்னும் அழகு கொண்டது. தமிழிலும் கம்பன் அவருக்கு முந்தைய குறள் வரிகளை எடுத்தாண்டிருக்கிறார். குறளின் வரிகள் ராமாயணத்தின் காலத்தைச் சேர்ந்தவையா என்ற வினா அங்கே இல்லை.சடையப்ப வள்ளலின் மூதாதையர் ராமனுக்கு  மணிமுடி எடுத்துக்கொடுத்த்து போன்ற ஒரு காவியசுதந்திரம் அது

முதற்கனல் அதன் கட்டமைப்புக்குள் நவீன நாவலின் யதார்த்த்தையும் கூடவே காவிய அழகியலையும் கொண்டுள்ளது. ஆகவேதான் இந்த அம்சம் உள்ளே நுழைந்துள்ளது


ஜெ

http://marabinmaindanmuthiah.blogspot.in/


அந்தக்குழல்




ஜெ சார்

நீலம் வாசித்துமுடித்ததும் ஒரு பெரிய ஏக்கம். வாசிப்பது ஆரம்பத்திலே கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. நான் வர்த்தமானன் பதிப்பகம் வெளியிட்டிருந்த பாகவதம் இரண்டு வால்யூம் வாசித்ததோடு சரி. ராதை கிருஷ்ணன் விஷயமெல்லாம் கொஞ்சம் சுமாராகத்தான் தெரியும். எங்களூரில் பஜனைமடத்தில் சூரி என்பவர் ராதாகிருஷ்ண கல்யாணம் நடத்துவார். ஜெயதேவர் அஷ்டபதி எல்லாம் பாடிக்கேட்டிருக்கிறேன். ஆனால் அதெல்லாமே சின்னவயசு. பெரியதாக ஏதும் மனதில் ஏரவில்லை,

வட இந்தியா வந்தபின்னாடி ராதா பஜனை இங்கே வெகு விசேஷமாக இருப்பதைக் கண்டிருக்கிறேன். ராதைக்கு திருமணம் ஆகி கணவன் நாத்தி மாமியார் எல்லாம் இருப்பதை இந்த நாவலை வாசித்துத்தான் தெரிந்துகொண்டேன். ராதை கிருஷ்ணனைவிட 9 வயசு மூத்தவள் என்பதும் எனக்கு பெரிய செய்திகள்தான். நான் அதற்குப்பின்னால் போய் தேடிப்பார்த்தேன். 12 வயசு மூத்தவள் என்று போட்டிருந்தது. கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. நான் ராதையை ரொம்பச்சின்னப்பொண்ணாகத்தான் நினைத்திருந்தேன். படங்களெல்லாம்கூட அப்படித்தான் இருக்கும்.

ஆனால் அந்த தயக்கமெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிட்டது. ராதைக்கு புல்லாங்குழலிசை கேட்கும் இடம் வந்ததும் எனக்கே தலைக்குள் சத்தம் கேட்பது மாதிரி ஆகிவிட்டது. இங்கே விசாரித்தபோது மனநோய் கொண்டவர்களுக்கு அப்படி சத்தம் கேட்கும் என்றார்கள். உண்மையிலேயே ராதைக்கு ஒரு மனநோய்கூட இருந்திருக்கலாம் என்று நினைத்துக்கொண்டேன். ஆனால் அந்த இசை அவளுக்கு பித்துப்பிடிக்கவைக்கிறது. அதோடு அந்த பிரேமையினுடைய எல்லா லௌகீக ஞாயங்களும் இல்லாமலாகிவிடுகிறது இல்லையா?

ஆரம்பத்திலே அவளுக்குப் பெரிய தயக்கம் இருந்திருக்கிறது. அவளை கிருஷ்ணன் பார்த்தபார்வை அவளுக்குப்பெரிய அதிர்ச்சி என்றுதான் நான் முதலில் அந்த அத்தியயாத்தைப்பார்த்தபோது நினைத்தேன். பாகவதத்திலே சாதாரணமாக கிருஷ்ணன் கோபியரின் உடைகளை திருடி விளையாடினான் என்று வரும் இடம் இங்கே கதையில் மிக முக்கியமானதாக அமைந்துவிட்டது. ராதை கிருஷ்ணனின் கண்களை பயப்படவில்லை என்று பிறகு புரிந்துகொண்டேன் ஏனென்றால் கண்னன் கண்களிலே காமம் இல்லை. உங்கள் கண்களைத்தான் பார்க்கிறேன் என்று அவரே சொல்லிவிட்டாரே.

ஆனால் ராதை பயபப்டுகிறாள். என்ன காரணமென்றால் அவளுக்கு அவள்மேல்தான் பயம் .அவன் அவளுடைய உடம்பைப்பார்த்ததுமே அவள் நடுங்கிவிட்டாள். ஏனென்றால் அப்போது அவளுடைய மனசு என்ன பதில் செய்தது என்று அவளுக்குத்தானே தெரியும். அதனால்தான் உடனே வீட்டுக்கு ஈர உடம்புடன் ஓடிப்போய் ஒடுங்கிக்கொள்கிறாள். கல்யாணத்துக்குச் சம்மதிக்கிறாள். இன்றைக்கும்கூட பெண்கள் செய்யும் விஷயம்தானே இது.

ஆனால் அத்துடன் அந்த சங்கீதம் மேலே எழுந்து கேட்க ஆரம்பிக்கிறது. அந்த சங்கீதம் அவளே உருவாக்கிக்கொண்டது. புல்லாங்குழலை ஒடித்து அவனுக்குக் கொடுத்தவளே அவள்தானே. அந்த இசையிலே அவள் விழுந்துவிட்டாள். அவளால் கரையேறவே முடியவில்லை. அவள் எட்டு நிலைகளில் இருப்பதை நீங்கல் அளித்திருந்த படங்கள் வழியாகத்தான் தெரிந்துகொண்டேன். அது ஆச்சரியமாக இருந்தது. ஆற்றியிருந்து ஒரு கட்டத்திலே முடியாது என்று அபிசாரிகையாக அவள் ஓடிப்போகும்போது அவளுக்கு உலகத்தில் உள்ள எல்லா கட்டுப்பாடுகளும் ஒரு விஷயமே இலலை என்று தோன்றுகிறது. இது இல்லாமல் வேறு ஒன்றுமே பெரியவிஷயம் இல்லை என்று தோன்றுகிறது. பெண்களுக்கு பலசமயம் அப்படியெல்லாம் தோன்றும். ஆண்களுக்கு அப்படி தோன்றுமா என்று தெரியவில்லை.

அவள் செல்கிறாள். கண்ணனுடன் இருக்கிறாள். அங்கேயும்கூட அவளுக்கு பெண் என்கிற அகங்காரம் அடிபடக்கூடாது என்று தோன்றுகிறது. அதற்கு அவள் தயாராக இல்லை. இசையிலே கரைந்துபோகிறாள். கடைசியில் கிருஷ்ணன் வந்து குழலூதுகிறான். அந்த இடத்திலே நான் நினைத்தேன். அந்த வண்டு மூங்கிலை துளைப்பது. பொன்னிறமான மூங்கில்தான் ராதை. வண்டுதான் கண்ணன். அதேபோல சிவந்த தம்பலப்பூச்சி ராதையின் இதய, கருமையான குழியானை கண்ணன். அப்படி அவளைத் துளைத்து இசையை உருவாக்கினான். அவள் இதயத்தை உடைமையாக்கினான்.

அவனே அந்த புல்லாங்குழலுடன் வந்து நிற்கிறான், அவள் கொடுத்த குழலால் அவளுக்கு இசையை காணிக்கையாக்குகிறான். அற்புதமான முடிவு. அந்த இடத்திலே கண்ணீர்விட்டுவிட்டேன். என் மனம் அப்படி நிறைந்த ஒரு சந்தர்ப்பமே என் வாழ்க்கையிலே இல்லை. நான் மனசுக்குள்ளே தேடியதெல்லாம் இதுதான். இதைத்தான் வேறுவகையாக எல்லாம் மனசுக்குள் ஓட்டிக்கொண்டிருந்தேன். இதைவாசித்ததும்தான் நானும் ராதைதான் என்று தெரிந்துகொண்டேன் [பெயரைப் போடவேண்டாம்]

ஆர்

பிரேமையின் வெற்றி




அன்புள்ள ஜெ

வெண்முரசு ஆரம்பித்தநாள் முதல் தொடர்ந்து வாசித்துவருகிறேன். முதற்கனல் கூர்மை. மழைப்பாடல் பிரம்மாண்டம். வண்ணக்கடல் ஆழம். ஆனால் நீலம் பல படி மேல். இது ஒரு கனவு. கனவிலே எல்லாமே உண்டு. முடிந்துவிட்டதா என்று நினைத்து திரும்ப நினைவிலே ஓட்டிப்பார்த்தேன். எங்கோ பழைய காலம் மாதிரி மனதிலே நிற்கிறது. மனசால் பிடிக்கவே முடியவில்லை. என்ன இது என்று நினைத்துப்பார்த்தேன். ராதையை காற்றுவந்து தொட்டு எழுப்பும் அந்த இடம்.


ஆழிமுதல்வன் விரும்பிய பாற்கடலே  என்று காற்று அவளை அழைக்கிறது. அந்த அழைப்பு கடைசி அத்தியாயத்திலேதான் அர்த்தமுள்ளதாக ஆகிறது. அவனுக்கு அவன் ஜெயித்த ராஜ்ஜியம் மணந்த அரசியர் ஒன்றுமே வேண்டாம். அவளுடைய பிரேமை மட்டுமே போதும் என்றுதானே வந்தான்.


ராதை, அமுதமாகி வந்தவளே, இனி உன் பெயர் பிரேமை என்றும் ஆகக் கடவதாக! என்று காற்று சொல்கிறது. அப்படி பிரேமையின் திருவடிவமாக அன்னை அந்த யமுனைக்கரையிலே நிற்கிறாள். கிருஷ்ண பகவான் வந்து அவளுக்கு நாதோபாசனை செய்தார் என்றால் அது அவளுடைய பிரேமைக்காகத்தானே?


 மூடிய வெண்பட்டை உதைத்து நழுவவிட்டு வெளிவந்து செவ்விரல்குருத்துக்களை நெளித்து காற்றில் துழாவின அன்று பிறந்த சிறுமகவொன்றின் கால்கள். மலர்வெளியை ஒளிகுன்றச்செய்தது மணிநீலம். என்று அவன் கால்களை அவள் பார்த்ததைச் சொல்கிறது கதை


காற்றேற்ற சுனைபோல கரிய திருமேனி நடுங்க கண் கலுழ்ந்து வழிய கைகூப்பினார். நீள்மூச்சு நெஞ்சுலைத்தது. நெடுந்தோள்கள் குறுகின 

என்று அவள் முன்னால் ப்க்தன் மாதிரி கண்ணன் நின்றிருப்பதைப்போல ராதாமாதவ உபாசனைக்கு சிறந்த உதாரணம் வேறு ஏதும் இல்லை.

நீலம் மொத்த நாவலையும் எங்கோ கொண்டுபோய்விட்டது. எப்படி மீண்டும் ஆரம்பிப்பீர்கள் என்றே தெரியவில்லை

சத்யநாராயணன்

தேன்கடல்




இனிய ஜெயம்.

நீலத்தின் இறுதி அத்யாயம்  ஸ்தம்பிக்க வைத்து விட்டது. கண்ணனின் குழலிசைக்காகவே  ராதை இத்தனை வருடம்  கல்லாய் உறைந்திருந்தாளா?

மரண நொடியை முன்னுரைத்தனுக்கும் கொடை செய்கிறான் கண்ணன்.

மீண்டும் கண்ணன் கை வந்து சேர்ந்தது, ராதை வசமே கண்ணன் விட்டு சென்ற குழல்.

இசைக்காத குழல். வைத்திருந்து  காத்திருந்து கல்லென உறைந்த ராதை. கண்ணனற்ற ராதை.

குழலை கண்ணன் வசம் சேர்க்கும் குட்டி ராதை. அவள் அக் குழல் வழி கேட்கும் முதல் இசையிலேயே  முக்தி எய்தி விடுகிறாள். [ குழல் இசைக்க,கல்லாலான ராதை உயிர் கொள்ளும்போது, உயிர் உள்ள ராதை முக்திதானே எய்துவாள்]  

 அந்த ராதை  மதலைக் கண்ணனின் சிறு பாதங்களை முதலில் காண்கிறாள். இந்த ராதை  முதிய கண்ணன் சிரசு சூடிய பீலி முதலில்  காண்கிறாள்.

கண்ணனை  பாதாதி கேசம் காண ராதைக்கு பிறவிகள் தேவைப் படுகிறது.

தேன் கடலில் விழுந்து சாகும் பட்டாம்பூச்சிகள்.

கடலூர் சீனு

ராதாராணி


அன்புள்ள ஜெ

நீலம் முடிவிலே வரும் ஒரு வரியை வாசித்து உணர்ச்சிவசப்பட்டேன்


பீலிவிழி விரிந்த தலையும் புன்னகை பெருகும் இதழுமாக யமுனைப்பெருங்கரையில் யாதவர்தம் அரசியின் முன் குழலூதி நின்றிருந்தான் கண்ணன்.

ராதை ஒரு சாமானியப்பெண். யாதவர்களில் அவள் அப்பா பெரிய அரசர் இல்லை. வீட்டுவேலைசெய்து மாட்டுக்கு தண்ணீர்காட்டி பால்கறந்து வாழ்ந்தவள். அவளை வட இந்தியாவிலே ராதாராணி என்றுதான் சொல்வார்கள். மதுராவில் ராதா ராணி என்ற வார்த்தை மட்டும்தான் காதில் விழும்

நான் பலதடவை போயிருக்கிறேன். ஒருமுறை என் மாமியார் ஏன் ராணி என்று சொல்கிறார்கள், சத்யபாமையும் ருக்மிணியும்தானே ராணிகள் என்று கேட்டார்  அங்குள்ல கைடு ‘கிருஷ்ணனுடைய மானசராணி ராதைதான்’ என்றார். அது ஆசைநாயகி என்ற அர்த்தம் வருவது மாதிரி இருந்தது

நீலம் வாசித்தபோது ராதை வளர்ந்துகொண்டே போனாள். அவள் காலை கண்ணன் எடுத்து மார்பிலே சூடும் இடத்திலே அவள் கடவுள் ஆகிவிட்டாள். அவள் முன் அவளுக்காக கிருஷ்ணன் குழலூதும்போது அதுவரை ராதை என்றும் பிச்சி என்றும் சொல்லிவந்த நீங்களே ராதை அரசி என்று சொல்லிவிட்டீர்கள்

கிருஷ்ணனை ஜெயித்தவளுக்கு வேறு ஒன்றுமே ஜெயிப்பதற்கு இல்லை. அவள் உலகத்தையே ஆளும் அரசிதான் என்று நினைத்துக்கொண்டேன்

நன்றிசார். நீலம் ஒரு பெரிய கனவு. சீக்கிரம் வெளியே வந்துவிடமுடியாது

எழில்

ஒருங்கிணைவு




ஜெ
நீலம் முடிந்தபிறகு முடிந்துவிடக்கூடாதே என்று நான் மீண்டும் பழைய அத்தியாயங்களையே வாசிக்க ஆரம்பித்தேன். ஆறாவது அத்தியாயத்தில் வாசுதேவர் சொல்கிறார்
இத்தனை குருதியில் பிறந்த அவனே இந்த யுகத்தின் அதிபன். அவனாடும் ஆடலென்ன என்று அவனே அறிவான். தன்னை நிகழ்த்தத் தெரிந்த தலைவன் அவன். இதோ, உம் நெஞ்சில் அச்சமாகவும் உம் தம்பியர் படைக்கலங்களில் வஞ்சமாகவும் அங்கே நகருறையும் அன்னையர் கண்களில் கண்ணீராகவும் அவர் தந்தையர் நெஞ்சில் பழியாகவும் விளைபவன் அவனே.”

அந்த வரிகளை அப்போது வாசித்தபோது ஒரு குறிப்புணர்த்துதல் மாதிரித்தான் இருந்தது. அதோடு அப்போது மனசு ராதையில் இருந்தது. ராதையின் பகுதிகளை வாசித்து ஒரு போதை இருந்தது. இந்தப்பகுதிகளிலே வரும் கதையை வாசிக்கும்போது ஒரு மனசு ஒன்றுதலில்லாத நிலைமை கொஞ்சமாக இருந்தது

ஆனால் இன்றைக்கு வாசிக்கும்போது, அதாவது மதுரையில் கிருஷ்ணன் பேசிய பேச்சையும் மதுரையில் ரத்தம் ஓடியதையும் எல்லாம் அறிந்தபிறகு இதை வாசிக்கும்போது மனசு பொங்கி கண்ணீர் வந்துவிட்டது. 

“பொன்முடிகொண்டு பிறக்கவில்லை. பெரும்புகழ்கொண்டு பிறக்கவில்லை. பொல்லாப்பழிகொண்டு பிறந்திருக்கிறான்! பாலாடி பழியாடி பலநூலில் பகடையாடி பசுங்குருதியாடி எழுக என் தெய்வம்! எழுக! எழுக என் தெய்வம்! எழுக!” 

ஆனால் அப்போதே கம்சன் மோட்சமடையும் விதமும் உங்கள் மனசிலே இருந்திருக்கிறது. மிகச்சரியாக அது அப்போதே சொல்லப்பட்டிருக்கிறது.

“வாளேந்திய பேதை! ஆனால் அவன் காலடியில் நெஞ்சுபிளந்து படைக்கும் பெரும்பேறுபெற்றோன்! வாழ்க! உன் பெயர் என்றும் இப்புவியில் வாழும்!”  

இந்த பெர்பெக்‌ஷனை நினைத்தால்தான் ஆச்சரியமாக இருக்கிறது. எவ்வளவு திட்டமிட்டிருந்தால் இதை எழுதியிருக்கமுடியும் என எண்ண எண்ண மலைப்பாக இருக்கிறது

தியாகராஜன்


அன்புள்ள தியாகராஜன்

திட்டமிட்டிருந்தால் எழுதியிருக்கவே முடியாது

ஜெ

பெண் எனும் ராதை




அன்புள்ள ஜெ சார்

நீலம் வாசித்துமுடித்த மனநிலை. உடனே எழுதக்கூடாது என்றுதான் நினைத்தேன் .ஆனால் எழுதியாகவேண்டும் என்று தோன்றியது. நீங்கள் வெளியிடும் கடிதங்களெல்லாமே நன்றாக உள்ளன. அவர்களெல்லாம் உங்கள் படைப்புகளிலே ஊறித்திளைத்தவர்கள் மாதிரி இருக்கிறார்கள். நான் அவ்வளவாக வாசித்தவள் இல்லை. அனால் உங்கள் எல்லா நாவல்கலையும் வாசித்திருக்கிறேன். விஷ்ணுபுரமும் கொற்றவையும் கஷ்டமக இருந்தன. வெண்முரசு ஆரம்பத்திலே கஷ்டமாக இருந்தது. அதன்பிறகு பழகிவிட்டது. ஆனால் நீலம் அப்படியே என்னை மனசுக்குள் புகுந்து கனவுக்குள்ளே வாழச்செய்துவிட்டது. ஒன்றரை மாச்மாக எங்கிருக்கிறேன் என்றே தெரியாமல் இருந்தேன்

நீங்கள் சொல்லியிருந்தீர்கள் .பெண்களுக்கு பிரேமை நிலை கிடையாது என்று. அது கொஞ்சம் கூட உண்மை இல்லை. பெண்களுக்கு அந்தப்பிரேமை நிலையை வெளிக்காட்ட இடம் இல்லை. அது ஒரு ரகசியமாகவே அவர்களுடைய மனசுக்குள் இருக்கும். குழந்தைகள் வளர்க்கவேண்டும். அதோடு எந்த மனைவியும் இந்த பிரேமைநிலையை கணவனிடம் பகிர்ந்துகொள்ள முடியாது. அப்படி இருக்கவேண்டுமென்றால் அவள் பர்சானபுரியின் பிச்சியாக இருக்கவேண்டும்.

என்னைப்பொறுத்தவரை நான் இங்கே சென்னையிலே ஒரு சின்ன அபார்ட்மெண்டிலே வாழ்பவள். எனக்குள்ள உலகமும் வேலை வீடு எலக்டிரிக் ரயில் என்று மிகவும் சின்னதுதான். அனால நான் வாழ்வது இங்கே இல்லை. அங்கே பறவைகளும் மலர்களும் கண்ணனும் குழலோசையும் உண்டு. ஒரு சின்ன மழைபோதும். நான் பரவசத்திலேயே போய்விடுவேன். நீங்கள் வெளியிட்டிருந்த படங்களை பார்த்தபோதெல்லாம் நான் அப்படி கனவுக்குள் போய்விட்டேன்.

நான் ராதை இருக்கும் நிலையிலேயே இருந்துகொண்டிருக்கிறேன். உள்ளுக்குள். அனால் வெளியே கட்டுப்பெட்டியான பெண். கல்யாணமாகியது. குழந்தைகள் [இரண்டு பெண்] பிறந்தார்கள். எல்லாமே சரிதான். ஆனால் மனசுக்குள் ராதையிடம் கண்ணன் மட்டும் தான் பேசமுடியும்

கண்ணனை நான் கண்கூடாகக் கண்டு வாழ்ந்து கொண்டிருந்ததுபோல இருந்தது நீலம் வாசிக்கும்போது. வண்ணம் சார். நன்றிகள்

வி