Thursday, May 31, 2018

இமைக்கணம்




அன்புள்ள ஜெயமோகன்,
         
எழுத உங்களுக்கு மட்டும் இமைக்கணம் அதிக நேரம் 
எடுத்துக் கொள்ளவில்லை;வாசிக்க எங்களுக்கும்தான்.
தெரியாமல் ஒரு முடிவெடுத்து விட்டேன் வெண்முரசு 
பயிலும் போது மிகவும் முக்கியமான வாக்கியங்களை 
ஒரு குறிப்பேட்டில் எழுதிக் கொள்வதென்று.இளைய யாதவரின் 
சொற்களில் ஒவ்வொன்றுமே அற்புதமாக உள்ளபோது எதை 
விடுவது?எப்படியும் பாதிக்கு மேல் எழுத வேண்டியுள்ளது.
         

வெண்முரசில் எனக்கு மிகவும் பிடித்தது இமைக்கணம்தான்.
அடுத்து சொல் வளர் காடு. மகாபாரதத்தில் மரியாதைக்குரிய 
கேரக்டர் தர்மர்.ஆனால் அவரை பீமன் மூலம் நீங்கள் மிகவும் 
கேலி செய்வது போல் தோன்றும்.இப்போது அவருக்கு மிக 
அணுக்கமான சகதேவனும்.அவருடைய சோர்வும்,அறம் பிழைத்து 
விட்டதோ என்ற கையறு நிலையும் என்னை மிகவும் பாதித்தது.
ஆனால்,ஒரு அறத்தான் ஏன் பிறரால் விரும்பப் படுவதில்லை 
என்பது மிக தெளிவாக விளக்கப் பட்டுள்ளது. 
ஒவ்வொரு முக்கிய பாத்திரத்தையும் இளைய யாதவர் மூலம் 
புதிய கோணங்களில் அலசியிருக்கிறீர்கள்.
          

 கடந்த ஒரு மாத காலத்தில் புல்  வெளி தேசம்,முன் சுவடுகள்,
இன்று பெற்றவை,தெய்வங்கள்,பேய்கள்,தேவர்கள் நான்கும் 
படித்தேன்.படிக்கும் ஒவ்வொன்றைப் பற்றியும் கடிதம் எழுதாததால் 
படிக்கவில்லை என்றோ,எழுத எதுவுமில்லை என்றோ அர்த்தமில்லை 
என்று நீங்கள் அறிவீர்கள்.தஞ்சைக்காரர்கள் அதிகம் கடிதம் 
எழுதுவதில்லை என்பது உண்மைதான்.
          

பல்வேறு அழுத்தங்களால் சமகால செய்திகளை ஓராண்டு 
துறத்தல் என்பது நல்ல முடிவே.ஓராண்டுக்குப் பிறகு பெரிதாக 
ஒன்றும் மாறியிருக்காது என்றே நினைக்கிறேன்.நன்றி.

சாந்தமூர்த்தி,
மன்னார்குடி. 

ரக்தபீஜன்




ஜெ

பன்னிருபடைக்களத்தில் ரக்தபீஜனின் கதையை மகனுக்குச் சொல்வதற்காக மீண்டும் வாசித்தேன். முதல் வாசிப்பில் அந்தக்கதையையும் அதை நீங்கள் இண்டெர்பிரெட் செய்திருக்கும் விதத்தையும்தான் கவனித்து வாசித்தேன். இப்போது வாசிக்கும்போதுதான் வரிவரியாக எழுதப்பட்டது அந்தக்கதை என உணர்ந்தேன். இவ்வளவு கூடுதலாக பக்கங்கள் இப்படி வரிவரியாக எழுதப்படும்போது அதற்குரிய வாசிப்பு அதன் தீவிரவாசகர்களிடமிருந்தே கிடைக்க வாய்ப்பில்லை. ரக்தபீஜன் பிளந்து பிளந்து வளர்கிறான். அவனுடைய குருதியின் துளியில் இருந்தே பெருகுகிறான். ஆனால் அவன் உண்மையில் பெருகுவது அவனுடைய எதிரிகளின் எண்ணத்தில்தான் என்பதை  இப்போது வாசிக்கும்போதுதான் உணர்ந்தேன். அவனை அஞ்சி அவனைக்கொல்லமுயல்பவர்களின் அச்சம்தான் அவனை வளர்க்கிறது. . “எண்ணியதுமே அவன் எழுகிறான், எண்ணத்தை வெல்ல முயல்கையில் அவ்வெண்ணம் தொட்டு மேலும் பெருகுகிறான்” என்றனர் இளையோர். “போரிடப் பெருகுபவனிடம் பொருதுவதெப்படி?” என குமைந்தனர். என்ற வரி அவனைப்பற்றிய அற்புதமான ஒரு சித்திரத்தை அளித்துவிடுகிறது. இன்று எத்தனை ரக்தபீஜன்கள். ஹிட்லர் ஸ்டாலின் என எல்லாருமே அவர்கள் மீதான அச்சத்தால் வளர்க்கப்பட்டவர்கள்தானே? இன்றைக்கு ஐஎஸ்ஐஎஸ் கூட அப்படித்தானே? அந்தக்கதையையே ஒரு மிகப்பெரிய சைக்காலஜிக்கல் நேரேஷனாக வாசிக்கமுடிந்தது . ஒரு அரசியல் கோணத்தில் புரிந்துகொள்ளமுடிந்தது

அருண்குமார்

இசைத்தாளம்




ஜெ,

வெய்யோனில் வரும் வரி இது. யானைகளின் உடலசைவுகளில் அந்த இசைத்தாளம் எதிர்நிகழ்வதை கர்ணன் வியப்புடன் நோக்கினான். அவற்றின் உடலுக்குள் கரியதோலைப்போர்த்தி இன்னொரு இசைக்குழு துள்ளி நடனமிடுவதைப்போல. நான் சமீபத்தில் சென்னையில் திருவிழாவில் யானையைப்பார்த்தேன். தற்செயலாக இந்த வரி கண்ணுக்குப்பட்டது. நீங்கள் நிறைய யானை வர்ணனை செய்திருக்கிறீர்கள். இனி ஒன்றுமே சொல்வதற்கு இல்லை என்ற அளவுக்கு. இருந்தாலும் இப்படி ஒரு வரி புதிசாக வருகிறது. வெய்யோனை மேலோட்டமாக வாசித்துக்கொண்டிருந்தபோது இது கண்ணுக்குப்பட்டது. நான் அந்நாவலைத்தான் சரியாக வாசிக்கவில்லை என நினைக்கிறேன். வெண்முரசின் ஏராளமான பகுதிகள் அதில்தான் வருகின்றன. ஆனால் அதில் கதை அங்குமிங்கும் ஓடிக்கொண்டே இருந்ததுபோலிருந்தது. நாவலாக ஒட்டுமொத்தமாக வாசித்தால்தான் சரியான வடிவம் பிடிகிடைக்குமென நினைக்கிறேன்

அரவிந்த்

Wednesday, May 30, 2018

அழிவற்ற பேரொளி



அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
சித்திரை வந்தனங்கள்விஷு ஆஷம்சகள்இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். ''ஊட்டியில் ஒருநாள்'' படித்துவிட்டு பரவசத்தில்பறக்க துவங்கியவன் இன்னும் கீழிறங்கவில்லைகொன்றை பற்றிய செய்திகளும்ரயில் தண்டவாள புகைப்படங்களும்கொள்ளையின்பம்ஏராளமான பொருட்செலவில்அதி நவீன டிஜிட்டல் கேமராவில் , கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் கிடைக்காதபரவசம் , தங்களின் எழுத்தில் கிடைத்துவிடுகிறதுமழைச்சட்டை அணிந்து பச்சைக்கனவுமஞ்சள் கொன்றை வர்ணனைகள் , சிவப்பு எரிமருள்வேங்கைஅந்திப்பொன் உருகி வழிந்தோடும் மாலைபொழுதுகள் - இப்படி பல வர்ணஜாலங்கள்மாயாஜாலங்கள்சௌந்தர்யலஹரி அனுபவங்கள் எங்களுக்குநம்மால் தொட இயலாதமுத்தமிட்டு தலையில் சூட முடியாத சூரியனைகொன்றைமிக அருகில் காண்பிக்கிறது ; ஆசைகளை நிறைவேற்றுகிறது.
மழலைகளுக்கு தொட்டால்சிணுங்கி செடியை ஸ்மார்ட்போனில் அறிமுகம் செய்யும்பொழுதுகுழந்தை தொடுதிரையில்இலைகளை தொட்டு பார்த்துவிட்டு சுருங்கவில்லையே என நம்பிக்கை இழக்கிறதுதும்பையின் அழகை கண்டு ரசிக்க முதலில்தும்பையின் முன் மண்டியிட்டு சரணடையவேண்டும்நண்பர்களோ விருந்தினர்களோ வீட்டுக்கு வருகிறார்களோ இல்லையோஅந்தி நேரத்தில் வாசலில் வரவேற்றபடி அந்திமல்லி பூத்துவிடுகிறதுபுகுந்த வீட்டுக்கு சென்றவள் பிறந்த வீட்டுக்குவரும்பொழுதெல்லாம் செம்பருத்தி சற்று அதிகமாகவே மலர்கிறது.
சுந்தர ராமசாமியின் ஜே ஜே சில குறிப்புகள் நாவலில் வரும் வரிகள் - '' காரை ஓரங்கட்டி நிறுத்திவிட்டுகீழே இறங்கி பாதைவிளிம்பில் நின்றுகொண்டு சூரியோதயத்தை பார்த்தேன்.உள்ளங்கால் கூசும்படி விளிம்புக்குச் சென்றேன்முன்னால் அதலபாதாளம்அற்புதத்திலும் அற்புதமான அந்தக் காட்சியைப் பின்னகராமல் பார்த்துக்கொண்டிருந்தேன்மனித ஜென்மங்களுக்குக்கிடைத்திருக்கும் வரப்பிரசாதம் இதுஅதிகாலையிலும் , ஒவ்வொரு நாளும்ஒரே மாதிரியாகவும்அதே சமயம் வெவ்வேறுவிதமாகவும்கணங்கள் தோறும் மாற்றிக்கொண்டும்முடிவற்ற அழகுகளை அள்ளி இறைத்துக் கொண்டு  கடவுள் மனிதன் முன்வருகிறார்தனது விஸ்வரூபத்தை மனிதனுக்கு காட்டக் கடவுள் வருகிறார்இருந்தும் மனிதன் பார்ப்பது இல்லைபழக்கத்தில்அறிவையும் அற்புதங்களையும் அதிசயங்களையும் முற்றாக இழந்துதரித்தரத்திலும் பரம தரித்தரனாக நிற்கிறான்.''
''ஒளி எதில் ஒளிந்து கொள்ள முடியும்?''  எனும் போகன் சங்கரின் கேள்விக்கு  ''ஒளி கொண்டவன் தன் ஒளியால்மறையவேண்டியவன்'' என்று வெண்முரசில் விடை கிடைக்கிறது.
இப்பொழுதெல்லாம் உதயங்களையும் அஸ்தமனங்களையும் காணும் பொழுதெல்லாம் வெண்முரசின் நீர்க்கோலம் முதல்அத்தியாயமே நெஞ்சினில் நிறைகிறது.
கதிரவனே,
அழிவற்ற பேரொளியே,
நீரிலாடும் கோலங்கள் நீ.
விண்ணிலாடுவதும்
மண்ணிலாடுவதும்
சொல்லிலாடுவதும்
பொருளில் நின்றாடுவதும்
பிறிதொன்றல்ல.
உன்னை வணங்குகிறேன்.
இச்சிறு பனித்துளியில் வந்தமர்க!
இந்தச் சிறுபூச்சியின் சிறகில் சுடர்க!
இப்பெருங்கடலை ஒளியாக்குக!
அவ்வான்பெருக்கை சுடராக்குக!
ஆம்அவ்வாறே ஆகுக!
தங்களுடன்தங்களுடைய பயணங்களில் தொற்றிக்கொள்ள வாய்ப்பு கிடைக்காவிட்டாலும்சூரியனுடன் தொற்றிக்கொள்ளஇயலாவிட்டாலும்கொன்றையுடன் தொற்றிக்கொள்கிறோம்தங்களிடமிருந்து கொன்றை பூவொன்றை தங்க நாணயமாகவும்கொன்றை பூவையும்அதிலுள்ள ஒரு துளி தேனையும் ''கைநீட்டமாக'' பெற்றுக்கொள்கிறோம்.
நன்றி.
அன்புடன்,


ராஜா.

விழா




ஜெ

சென்ற சித்திரை விழாவுக்கு மதுரைக்குச் சென்றிருந்தேன். நான் சென்று நீண்டநாட்களாகின்றன. இப்போது வயதும் நாற்பத்தாறு. ஆனால் விழா எனக்கு பெரிய களியாட்டமாக இருந்தது . மிகப்பெரிய சலிப்பையே தரும் என நினைத்திருந்தேன். போகவே கூடாது என்று நினைப்பேன். நாலைந்து ஆண்டுகளுக்கு முன்புகூட குடும்பத்தில் எல்லாரும் போனபோது நான் போகவேண்டாம் என நினைத்தேன். ஆனால் இன்றைக்கு அவ்வளவு கொண்டாட்டம். அது ஏன் என்று நினைத்துக்கொண்டே இருந்தேன். இன்றைக்கு வெண்முரசில் இந்த வரியை வாசித்தேன்.


ஆச்சரியமென்ன என்றால் நான் பன்னிருபடைக்களத்தை இருதடவை வாசித்தவன். இந்தவரியை இப்போதுதான் காண்கிறேன். இப்படி வெண்முரசில் இருந்து கண்டுபிடித்துக்கொண்டே இருக்க ஏராளமாக உள்ளது. இந்த வரி அப்படியே என் உள்ளத்தைச் சொல்வதுபோல உள்ளது


ஜே .எஸ். கிருஷ்ணன்

Tuesday, May 29, 2018

இறைப்பாடல்




அன்புநிறை ஜெ,
 இமைக்கணம் 47 தலைப்பு இறைப்பாடல் என்றதுமே சிகரத்தின் உச்சியில் பொன் சுடர் ஏற்றும் தருணம் எனப் புரிந்தது.
 இமைக்கணம் காலத்தை சுழியென வளைத்து முன்பின்னற்ற வடிவில் ஒவ்வொருவராய் வந்து தத்தமது அறக்குழப்பங்களை கடக்க வாய்ப்பளித்துக் கொண்டிருந்தது. அவ்வரிசையில் பார்த்தன் கனவின் வழி விஷாத யோகத்தில் நுழைந்து, கிருஷ்ணார்ஜுன இணை கனவொன்றின் வழி ரதத்தை குருஷேத்திரத்தில் நிறுத்தி கீதை துவக்கிய கணம் -
ஒவ்வொரு சடங்காய் முடிந்து, திரை விலகி, இறைமுன் லட்ச தீபம் காட்டும் நிமிடம் போல பெரு அரங்கில் ஒவ்வொரு  திரையாய் விலகி, துணை பாத்திரங்கள் களம் அமைக்க, உரிய தருணத்தில் இசை முழங்கி நிற்க, திரை மாறி எழும் உச்சதருணத்துக் கதைத் தலைவன் போல ஒரு நுழைவு பகவத் கீதையெனும் இறைப்பாடலுக்கு. கீதைக்குரிய சொல்லாட்சி, வேறெந்த சொற்களாலும் சொல்லிவிட இயலாதெனும் வண்ணம் வந்து அமைந்து கொள்ளும் வாசகங்கள், உங்கள் வாயிலாக எங்களை வந்தடைகிறது. இன்றைய இமைக்கணத்தில் வரும் ஞான-விஞ்ஞான யோகம்,  "ஸாதிபூதாதிதைவம் மாம் ஸாதியஜ்ஞம் " -"Existential, Hypostatic and sacrificial aspects "என்று குரு நித்யாவின் உரையில் நேற்று வாசித்தேன்.
புடவிமெய்மை, தெய்வமெய்மை, வேள்விமெய்மை என்றெழுதி விட்டீர்கள். வார்த்தைகள் இறைப்பாடலுக்கென வந்தமர்கின்றன.சத்வ, ரஜோ, தமோ நிலைகளுக்கு நன்னிலை, வெல்நிலை, உறைநிலை; நிறையியல்பு, வெல்லுமியல்பு, நில்லுமியல்புக்கு இன்னுமொரு செறிவான மாற்று.
 மிக்க அன்புடன்,
சுபா இதே தருணத்தில் குரு வியாச பிரசாத் அவர்கள் பகிர்ந்து கொண்ட ஒலிப்பதிவுகள் மற்றும் குறிப்புகளின் துணையோடு குரு நித்ய சைதன்ய யதியின் கீதையை வாசிக்கக் கிடைத்திருப்பது பெரும் பேறு.
 

உரையாடல்




ஜெ

சம்பாபுரியில் அவையில் அவர்களும் உறங்குகிறார்கள். ஆணைகள் முடிந்து அலுவல்நிறைவை அறிவிக்கும் அமைச்சரிடம் கர்ணன்  மலைப்பாறைக் கூட்டங்கள் நடுவே காற்று செல்வது போல் உள்ளது இவ்வுரையாடல் அமைச்சரேஎன்கிறான். அவர் பதிலுக்கு ஆம். ஆனால் மலைப்பாறைகளைப் போல் காலத்தில் மாறாத சான்றுநிலைகள் பிறிதில்லைஎன்றார். கர்ணன் அதற்கு ஆகவேதான் நமது தெய்வங்களை பாறைகளிலிருந்து செதுக்குகிறார்கள் போலும்என்றான். அமைச்சர் உடனே  அவையை நோக்கி ”இன்னும் வெளிப்படாத தெய்வங்கள் உறங்கும் கற்பாறைகளுக்கு வணக்கம்என்றார்.

கர்ணன் எப்படி சம்பாபுரியின் அமைச்சர்களையும் குடிகளையும் கவர்ந்தான் என்று பொதுவாகச் சொல்லிக்கொண்டுசெல்லும் அத்தியாயத்தில் இந்த நகைச்சுவை உரையாடல் வருகிறது. மென்மையான நகைச்சுவை. கவனித்தால் மட்டுமே புன்னகை வருவது. நான் ரேண்டமாக வெய்யோனை எடுத்துப்புராட்டியபோது இந்த வரிகளை வாசித்தேன். அத்தனைபேரும் தூங்கும் சபையில் இரண்டுபேர் மட்டும் இப்படி ஒருவருக்கொருவர் மெல்லிய புன்னகையுடன் சீண்டிப்பேசிக்கொள்வது பிடித்திருந்தது

ஜெயராமன்

எளியவர்களின் சுழி




 ஜெ

மாமலரில் வரும் இந்த வரிகளை வெட்டி ஒட்டியிருந்தேன். அதை இன்றைக்கு வாசித்தேன். புரூரவஸின் நாடுகடத்தலில் ஊர்மக்கள் பேசுவது. பெரும்பாலும் முதியவர்கள்


“எண்ணுகையில் எளியோனாக வாழ்ந்து எளியோனாக இறப்பதே உகந்ததென்று தோன்றுகிறது

யானைக்கு புண் வந்து சீழ் கட்டுவதை பார்த்திருக்கிறீர்களா? படிகக் கோடரியால் வெட்டி முழங்கைவரை உள்ளேவிட்டு மருந்திடுவார்கள். பெருவலி கொண்டு அக்கரிய உடல் துடிப்பதை நெடுந்தொலைவிலேயே நின்று பார்க்கமுடியும்.”

எறும்புக்கும் யானைக்கும் இறப்பு ஒன்றேதான் போலும்

”ஆற்றல்மிக்க விலங்குகள் நொந்து நாட்பட்டு சாகின்றன. எறும்புகள் நொடியில் பல்லாயிரமென மறைகின்றன. ஊழுக்கும் கருணையுண்டு

எவர் துயரும் அதற்கு ஒரு பொருட்டல்ல. எல்லாமே குமிழிகள்தான் நதிக்கு. அதில் பெரிதென்ன சிறிதென்ன?”  

இந்த வரிகள் வழியாக அவர்கள் புரூரவஸின் வீழ்ச்சியை புரிந்துகொள்ள முயல்கிறார்கள். எவருக்கும் கொஞ்சம்கூட கருணையோ அனுதாபமோ இல்லை. மிகப்பெரிய மனிதர்களின் வாழ்க்கையை மக்கள் ஒருமாதிரியான கசப்புடன் பார்க்கிறார்கள். அவர்கள் வீழ்ச்சி அடையும்போது நிறைவடைகிறார்கள். நாமெல்லாம் சாமானியர்களாக இருப்பதே மிகப்பெரிய விஷயம் என நினைக்கிறார்கள். அல்லது அப்படிச் சொல்லிக்கொள்கிறார்கள். அதைக்கொண்டு மனதை ஆறுதலடையச்செய்கிறார்கள். அந்த பரிதாபத்தையே இவ்வாறு தத்துவமாக ஆக்கிக்கொள்கிறார்கள்

ஆனால் அதில் கடைசியாகப்பேசுபவர் பெரிதுக்கும் அப்பாலுள்ள பெரிய ஒன்றை உணர்ந்தவர் என நினைத்தேன்

சங்கரநாராயணன்