Wednesday, September 30, 2015

வாசிப்பின் பேரின்பம்

 
பொதுவாக வெண்முரசு வரிசை நாவல்களின் மையம், வடிவம் இரண்டும் நாவல் முடியும் தருவாயிலேயே நமக்குத் தெரியத் தரப்படும். நாவல் துவங்கி பல அத்தியாயங்கள் கழித்தே வாசகரின் உள்ளத்தில் நிகழும் தொகுப்பின் விளைவாக அந்த வடிவம் உருவாகி வரும். விதிவிலக்காக காண்டீபம் அதன் ஆறாவது அத்தியாயத்திலேயே அதைத் தந்திருக்கிறது. 


நாவலின் துவக்கத்திலேயே நமக்கு இரு கதாபாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டனர். ஒருவன் சுஜயன். பெயரிலேயே அர்ஜுனனின் முக்கால் பெயரைக் கொண்டிருக்கும் குழந்தை இளவரசன். குணங்களும் அர்ஜுனன் போன்றே தான். சதா கனவுலகில் இருக்கிறான். அவன் அறிமுகமாகும் போர்க்களத்தில் யானைகளைக் கவ்விச்செல்லும் பெருங்கழுகளுடன் தான் போர் செய்கிறான். வண்ணக்கடலில் அர்ச்சுனனின் பாதை பறவைகளால் ஆனதாக இருந்ததாக வரும். அவன் ஒரு கழுகின் கண்களை நேருக்கு நேராக சந்திப்பான். பறவையின் கண்களைக் கண்ட முதல் மானுடன் என்று இன்னொரு பறவை சொல்லும். அனைத்துக்கும் மேலாக அர்ச்சுனனைப் போலவே அம்மாவுக்காக ஏங்குகிறான். 


சுஜயனின் பிரச்சனை அவனுக்கு ஒரு நிலையான தளம் இல்லாமை. அவனால் கனவையும், நிஜத்தையும் பிரித்துக் கொள்ளத் தெரியவில்லை. கனவில் வீரனாக இருப்பவன் நிஜத்தில் அச்சமும், ஐயமும் கொண்டவனாக இருக்கிறான்.  அவனை விட இளையவர்கள் எல்லாம் எழுத, ஆயுதமேந்த துவங்கிய பின்னரும் இவன் அப்பாதையில் அடியெடுத்துக் கூட வைக்க இயலாமல் இருக்கிறான். அர்ஜுனனின் சாகசங்களைக் கேட்பதால் இவன் அடையப்போவது என்ன? அடைதல் என்பதே அறிதல் தானே!!!

 மாலினி அம்மை கந்தர்வர்களில் இருந்து ஆரம்பிக்கிறாள். அக்கதைகளின் ஊடாக அவன் அடையும் முதல் அறிதல் என்பது "காற்றும் ஒளியும் ஒரே இடத்தில் இருந்தாலும் காற்றின் மீது ஒளி படவில்லை". மிக நேரடியான வர்ணனை, நேரடியான உண்மை. ஆனால் இவ்வுண்மை அவன் வளர வளர அவனுடனே வளரவும் கூடியது. ஒவ்வோர் பருவத்திலும் ஒவ்வோர் மெய்மையை நல்க வல்லது. அந்த அறிதல் தந்த எழுச்சியால் அவன் உறங்கச் செல்கிறான். நாம் அனைவரும் கந்தர்வர்களையும், அவர்களின் வாயிலாக நமக்கு அறியத் தரப்படும் தத்துவங்களையும் விவாதிக்கையில் குழந்தை அந்த விழியைப் பற்றி, அவ்விழியால் காணபவற்றைப் பற்றி அவற்றிற்கிடையேயான போராட்டத்தைப் பற்றி கேள்வி கேட்கிறது. 


சாகசங்களின் ஊடே வருபவை தத்துவங்கள், யோக சாதைனகள். ஒரு வகையில் அவை தெளிவாகவே அக்கதைகளில் நமக்கு அறியத்தரப்படுகின்றன.  நமது புராணங்களில் வரும் குழந்தைக் கதைகள் அனைத்துமே எவ்வளவுக்கெவ்வளவு குழந்தைத் தன்மையைக் கொண்டிருக்கின்றனவோ அதே அளவுக்கு சிக்கலான அனுபவங்களை, உணர்வுகளை, தத்துவங்களை மறைபொருளாக குறிப்பவையாகவும் அமைந்திருக்கின்றன. அதேத் தன்மையை மீளுருவாக்கம் செய்வதாகவே சுஜயனுக்குச் சொல்லப்படும் கதைகள் அமைகின்றன, அமையப்போகின்றன. இதில் வாசகர்களாக நாம் செய்யக்கூடுவது ஒரு குழந்தையாக மாறி அக்கதைகளை அனுபவிப்பதும், அதன் பிறகு அதில் நமக்குத் தோன்றும் கேள்விகளைக் கேட்பதும், அவற்றுக்கான பதில்களை விவாதித்து அறிவதுமே! 


இரண்டாவது கதாபாத்திரம் சுபகை. நல்ல அழகி என்று பொருள். இங்கே பருமனான உடல் வாகு கொண்ட ஒருத்தி அப்பெயரைத் தாங்கி இருக்கிறாள். இளமையில் சிறிய உதடுகளும், சிரிக்கையில் தெரியும் தெற்றுப்பல்லும், அப்பற்களைப் போன்ற கூர்மையுடன் சிரிக்கும் கண்களும் கொண்டவளாக இருந்திருக்கலாம் என்பதை காண்டீபத்தில் இருந்து ஊகிக்க இயல்கிறது. கண்டவுடன் கவர்ந்திழுக்கும் இவற்றாலேயே பார்த்தன் அவளைக் கூடியிருக்கிறான். அவளை எயினி என்று செல்லப்பெயரிட்டு அழைத்திருக்கிறான். அவ்வொரு இரவு வாழ்வே போதும் என்று நிறைந்து விட்டதாக அவள் கூறுகிறாள். தன் எஞ்சிய வாழ்வை ஒரு நீராட்டிச் செவிலியாக, அந்தப்புரத்தில் கழித்துக் கொண்டிருக்கிறாள். அவளளவில் அவளுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் மாலினி அவளுக்கும் கதை சொல்கிறாள். ஏன்? அக்கதைகளூடாக அவள் அடையப் போவது தான் என்ன?


உண்மையில் சுஜயனை விட மனதளவில் சோர்வும், தனிமையும் கொண்டு நிலையில்லாமல் அலைபாய்பவள் சுபகை தான். அவளைப் பொறுத்த வரை அவளது வாழ்வு அந்த ஒரு இரவுடன் முடிந்து விட்டது. அவளது காலம் அங்கேயே நின்று விட்டது. அதன் பிறகு அவள் வயதாகவே இல்லை. அவள் மனது அந்த இளமையிலேயே உறைந்து விட்டது, கடல் திரைப்படத்தின் பியாட்ரிஸ் போல. எனவே அவள் மனத்தால் முதிரவில்லை. முதிரா மனம் போல் மிகவும் அனுபவம் கொண்ட, முதிர்ச்சியுடன் செயல்படுவதாக நடிக்கும் மனம் வேறு எதுவும் இல்லை. முதிர்ச்சியை வெளிப்படுத்த இயலாத போது அது மகிழ்ச்சியாக, நகையாடுவதாக நடிக்கும். அது ஒரு முகத்திரை. ஆனால் உண்மையை அறிந்த உள்ளம் தனிமையில், சோர்வில், தன்னிரக்கத்தில் வாடும். வாழ்வு என்பதில் பிடிப்பில்லாமல் இருக்கும். இத்தகைய மனம் உடையவர்களின், அதை வெளிபடுத்த இயலாதவர்களின் உடல் அந்த எண்ணங்களாலேயே வண்ணமாகும்(பருமனாகும்). வாழப் பிடிக்கவில்லை என்பதாலேயே அப்பருமனை அவர்கள் கண்டுகொள்வதில்லை. நகைச்சுவையுணர்வு என்ற முகத்திரை அணிந்திருப்பதால் தன்னைத்தானே பகடி செய்து மற்றவரின் கேலிகளில் இருந்து தப்புவார்கள். இங்கே சுபகை அந்த நிலையில் தான் இருக்கிறாள். 


முஷ்ணை அவளைப் பற்றி மாலினியிடம் சொல்லும் போது அவள் நிறைவாக உணர்வதால் பருமனாக இருக்கிறாள் என்கிறாள். மாலினி அதற்கு எத்தனை குழந்தைகள் உனக்கு என்கிறாள். மிகச்சரியான கேள்வி. மாலினி திருமணமே செய்யாமல் பார்த்தனுக்காகவே, அவனின் அன்னையாக மட்டுமே இருப்பதற்காக வாழ்கிறாள். அவள் தன் வாழ்வில் நிறைவாக இருக்கிறாள். அந்த நிறைவே அவளிடம் அழகாக பொலிகிறது. பெண் என்பவளின் நிறைவு மக்களைப் பெற்று நிறைவதே என்ற அடிப்படையிலேயே அவள் அக்கேள்வியைக் கேட்கிறாள். ஆனால் சுபகை போலி நிறைவை அல்லவா கொண்டிருக்கிறாள். அந்த ஒரு கேள்வியிலேயே மாலினி சுபகையின் பிரச்சனையைப் புரிந்து கொள்கிறாள். ஆகவே அவளுக்கும் பார்த்தன் கடந்து சென்ற பெண்களைப் பற்றியும், அவர்களின் உணர்வுகள், ஊடல்கள், கூடல்கள் பற்றியும் கதைகளாகக் கூறுகிறாள். இக்கதைகளில் இருந்து உறவைப் பற்றிய ஓர் அறிதலை, ஆண் என்றும் பெண் என்றும் ஆகி ஆடும் நிகழ்த்துக் கலையில் அவரவர் பாத்திரங்களின் தேவையையும், முழுமையையும் உணர்ந்து கொள்தலை அவள் அடைய வேண்டும். அவ்வடைதலூடாக அவள் மறுபிறப்பெடுக்க வேண்டும். மெய்யாகவே முதிர வேண்டும். வாசகர்களாகிய நமக்கு இப்பகுதியில் வரும் கதைகள் தான் உண்மையான சவாலை வைக்கின்றன. இக்கதைகளில் வரும் பெண்களின் இரு நிலை உணர்வுகளை சமநிலையோடு புரிந்து கொள்ள முயல்கையில் சுபகை மீள்வாள். அப்புரிதலை நாமும் அடைவது தான் நம் வாசிப்புக்கு வைக்கப்படும் சவால். 
ஆக நாவல் இரண்டு திரிகளாக செல்கிறது. இரண்டு திரிகளிலும் அர்ஜுனனை நாயகனாகக் கொண்ட கதைகள் மட்டுமே. ஒரு திரி சுஜயனுக்காக. 

மற்றொன்று சுபகைக்காக. ஒரு திரியில் மிகு கற்பனையும், அதிசய நிலப்பரப்புகளும் கொண்ட குழந்தைக் கதைகள். மற்றொன்றில் பெண்களும், அவர்களின் உணர்வுகளும், காமமும், காதலும், அடைதலும், விலகலும், நிறைவும், குறைவும் மட்டுமேயான ஆண், பெண் உணர்வு சிக்கல்களைப் பேசும் கதைகள். ஒன்றில் சாகசம், மற்றொன்றில் சரசம். இரண்டிலுமே அவற்றைச் செய்பவன் அர்ச்சுனன். அக்கதைகள் அனைத்தும் அவ்வளவு மட்டும் தானா? சாகசம் என்பது புறத்தே நடப்பது, அதைச் செய்வதின் வழியாக அகத்தில் அமைதி, உவகை, நிறைவு எனப் பல உணர்வுகள் வழியாக அறிதலைத் தருவது. சரசம் என்பது அகத்தில் துவங்கி, அதன் எச்சங்கள் தரும் எண்ணங்கள் புறத்தேயும் விளைவுகளைத் தருவது.  இரண்டின் வழியாகவும் இதுவரை நாமறியாத அர்ச்சுனனைத் தெரிந்து கொள்வது வாசகரின் மனதுள்ளே செல்லும் மூன்றாவது திரி. இம்மூன்று திரிகளில் இருந்தும் ஒவ்வொருவரும் தனக்கான காண்டீபத்தை உருவாக்கித் தொகுத்துக் கொள்வது என்பதே இந்நாவலுக்கு நாம் செய்யக்கூடிய மரியாதை. 


அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்

நெளியும் உலகம்


அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

அர்ஜுனன் நாகலோகப்பயணத்தை பெரும் கனவில் நடத்துவீர்கள் என்று  நினைத்து இருந்தேன். மெய்விழி வழியாகவே கொண்டு செல்கின்றீர்கள். உங்கள் பார்வையின் நுணுக்கங்களே யாதார்த்தங்களாக, யாதார்த்தங்களே நுணுக்கங்களாக பூக்கின்றது வெண்முரசு.

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து-என்பான் வள்ளுவன்.

ஒவ்வொரு உலகமும் எங்கோ இருக்கிறது என்பதை இன்று அழிக்கின்றேன். ஒவ்வொரு உலகமும் இங்குதான், இதோ நம் அருகில், நம் கண்முன்னால்தான் இருக்கிறது. எண்ணங்கள் அவற்றை உருவாக்கி, எண்ணங்களே கால்களாகி நம்மை அங்கு உலாவர வைக்கின்றன.
ஐராவதகாட்டில் நதிநீரில் நீந்தி விளையாடும் உலூபி, நீரில் இறங்கிவரும் அர்ஜுனன் கால்நகத்தை மின்னும் நாகவிழியெனக்கண்டு இழுத்துச்செல்கிறாள். நதியைக்கடந்து வேறு இடம் சென்றால் அது நாகலோகம்தான்.

மனிதன் நதியில் இறங்கும் முன்பு மண்ணில் ஒரு உலகில் இருக்கிறான். நதியில் இருந்து கரையேறி மண்ணுக்கு செல்லும்போது மற்றொரு உலகில் இருக்கிறான். அவன் எண்ணங்கள் இடையில் உள்ள நதியை மறந்து முன்னால் இருந்த உலகும் இந்த உலகும் ஒன்று என்று எண்ணுகின்றது. காரணம் அந்த உலகும், இந்த உலகும் ஒரே பூமியில் இருக்கிறது என்ற தர்க்கப்புத்தியின் விழிப்’புதான் காரணம். இலக்கியங்கள் இப்படி முன்னையும் பின்னையும் இணைக்கும் தர்க்கத்தில் நிற்பதில்லை. அந்த கணத்தில் வாழ்க்கை என்ன என்ற யாதார்த்தத்தை நம் முன் வைக்கிறது. அந்த கணம், அந்த உலகம், அந்த வாழ்க்கை. அதை வேறு ஒரு கணத்தில் வைக்கும்போது பொருள் அற்றதாகபோகலாம். அல்லது இன்னும் ஒரு புதுப்பொருள் தரலாம்.  

நீரில் கால்வைத்த கணத்தில் இருந்து அர்ஜுனன் நாகலோகம் தொடங்கிவிடுகிறது. அங்கிருந்து அவன் காண்பது எல்லாம் நாகங்களின் உலகம்தான். அந்த உலகத்தில் அவன் புதியவன், அந்த உலகத்தில் அவன் வாழ தகுதியானவனா என்று வெண்முரசு விளக்கிப்போவது அழகு. 

பழமையான அஸ்தினபுரியின் வாரிசு, புதிய இந்திரப்பிரதஸ்தத்தின் இளவரசு என்று இருந்த அர்ஜுனன் ஒவ்வொரு கணத்திலும் தான் உணரும் நாகங்களின் நுட்பத்தை தனதாக்கிக்கொள்ளும் வல்லமையால் நாகராகின்றான். ’கூர்மையான எண்ணங்களால் தன்னை பகுக்கும் அர்ஜுனன், அந்த எண்ணங்கள் மூலமாகவே ஒவ்வொரு எல்லையும் கடந்துப்போகின்றான். தனது எண்ணங்களை காணவும் கைக்கொள்ளவும் தெரிந்த அர்ஜுனனுக்கு பயம் விட்டுப்போவதுகூட அவன் நாகர்குலத்தவனாக ஆக செய்கிறது.

ஜெ சொன்ன இந்த உதாரணம் இங்கு நினைவில் எழுகிறது. சுவாமி சித்பவானந்தர் “மின்சாரத்தைப்பற்றி அறியும்தோறும், மின்சாரம் பற்றியப்பயம் போகின்றது”

பூலோக வாசிகள் பாதையில் நடக்கிறார்கள் அல்லது பாதையை உருவாக்கி நடக்கிறார்கள். நாகலோகவாசிகள் பாதையில்லாப்பாதையில் நடக்கிறாகள். //புதர் வகுந்து வளைந்து சென்ற பாதை வேர்ப்பின்னல்களுக்குள் நுழைந்தது. உருளைப் பாறைகளை கவ்விப் பிடித்திருந்த வேர்களின் ஊடாக நோக்கி விழிகூர்ந்து காலெடுத்து வைத்து இறங்கிச் சென்றனர்-காண்டவம்-14 // இந்த இடத்தைப்படிக்கும்போது உலூபி, அர்ஜுனன் இருவரும் பாம்பாகிவிட்டதுபோல் உள்ளது. நாகர்களின் இமையாவிழிகளைப்பற்றிச்சொல்லும் இடத்தில், நாகர்குலத்தவர்கள் அனைவரும் நாகங்காளாகிவிடுகிறார்கள். புற்றுகள் போன்ற குடில்கள் அவற்றில் இருந்து பசுவின் நாவென  வெளிவரும் நாகர்குலத்தலைவன.  மூச்சுச்சின் ஒலியுடன் அவர்கள் பேசும் சொற்கள்.   மூதன்னைகள் உடல்மொழியல் நாகநடனம் செய்து சாமியாடுதல், மண்ணைக்கொத்தி சத்தியம் செய்தல் என்று அவர்கள் ஒவ்வொரு அசைவிலும், செயலிலும் நாகங்கள் வந்து நெளிந்துச்செல்லும்போது, மண்ணில் எழும் நாகலோகத்தை காணமுடிந்தது. இதைவிடவும் அந்த உலகத்தின் மணம் நாகலோகம் என்பதன் உச்சம்.  மணத்தின் மூலம் உருவாக்கும் ஒரு உலகத்தை இரண்டு என பிரிக்கமுடியாது. வேதாந்த வாக்கியம் தத்துவமசிபோல் மணம் எப்போதும் நம்மை அதுவாக்கிறது. 

கை, காலை வச்சிகிட்டு சும்மா உட்காரமாட்டியா என்று குழந்தைகளை தாய்மார்கள் திட்டுவது உண்டு. இங்கு மூன்று நாககுஞ்சுகள் அர்ஜுனன் உள்ளங்கைகையில், கால் கட்டவிரலில், தொடை இடுக்கில் நுழையும்போது அஞ்சாமல் இருக்கிறான். அந்த பயம் இன்மையில் அல்லது அவைகளை தானாக (அவனாக) உணர்வதால்,  மூதன்னையர்கள் கண்டுக்கொண்டார்களா? அர்ஜுனன் காலும், கையும் நாகமாகிய நாகன் என்று.

துயிலில் இருந்து விழித்தெழும் அர்ஜுனன் அக்கையின் இடையில் இருக்கும் நாகக்குழந்தை ஒன்றை “அருகே வா” என்று அழைக்க, அதை காணும் அக்கை தாங்கள் நாகம் என்பதை மறந்து அர்ஜுனன் இடத்தில் எந்த தடையும் இல்லாமல் குழந்தையை அக்கை கொடுக்கப்போகிறாள். இரண்டு முதியவர்கள் அர்ஜுனனை எச்சரிக்கிறார்கள். முதியவர்களின் அறிவுக்கு எட்டாத அர்ஜுனன் அகம் ஒன்று அக்கையின் உணர்வுக்கு எட்டியதா? அந்த கருணையை, அன்பை மூதன்னையர்கள் அறிந்ததால் அவனை நாகர்குலம் என்று சத்தியம் செய்கிறார்களா?

அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும் 
செல்வச் செவிலியால் உண்டு.

வெகுதொலைவு வந்துவிட்டேன் என்று எண்ணும் அர்ஜுனன் அந்த எண்ணம் அளித்த ஆறுதலில் வியக்கிறான். உலூபி மீது எழும் காதல் அன்பாகி அங்கு அருளென்று நிற்கிறது. 
எப்பொழுதுமே அறிவுக்கு அப்பால் இருக்கிறது உணர்வு நிறைந்த அகம். அதை சாமியாடித்தான் கண்டுபிடிக்கவேண்டி உள்ளது அப்பொழுதுதான் தெரிகிறது பொருளுக்குள் உள்ள பொருள். 

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.

நாகருலகம்


கோவை அருகில் வாழைதோட்டத்து அய்யன் கோவில் என்றொரு நாகவழிபாட்டு ஆலயம் மிகப்புகழுடன் உள்ளது .
பாம்பை பார்த்து பயந்தாலோ,கடித்துவிட்டாலோ 

,கனவில் வந்தாலோ மக்கள் போகும் இடம் ,
பிரசாதம் புற்றுமண் . 


இன்றைய காண்டீபத்தின் நீட்சி

அரங்கசாமி

மணங்கள்

இனிய ஜெயம்,


இன்றைய நாளின் ஊன்னத வர்ணனை இந்த பகுதி 

//மின்னல் ஒளியில் சுற்றிலும் அலையடித்த நாணல் பூக்களைக் கண்டான் அவற்றின் அடியில் பாம்பு முட்டைகள் விரிந்து கொண்டிருந்தன. கற்றாழைச் சோறு மணம், தேமல் விழுந்த உடல் வியர்க்கும் வாடை ,பூசனம் பிடித்த அப்பங்களின் நாற்றம், உளுந்து வறுக்கும் மணம்… எண்ண எண்ண சித்தம் சேர்த்து வைத்திருந்த நினைவுகள் அனைத்தும் மணங்களாக எழுந்தன. ஊறி மட்கிய மரவுரி, பிறந்த குழந்தையின் கருநீர், குட்டிகளுக்கு பாலூட்டிக் கிடக்கும் அன்னை நாயின் சிறுநீர், தழைமட்கிய இளஞ்சேறு ,புளித்த கோதுமை மாவு ….பிறிதொரு மின்னலில் மும்முகப்பெருமலை மிக அண்மையில் வந்து நின்று அதிர்ந்தது.//

ஒரு காட்சியை சொல் சொல்லாக செதுக்கி, முற்றிலும் நம்முன் நிகழ்வது போல காட்டிவிடலாம். ஆனால் அப்போதும் அவற்றை முப்பரிமாணம் கொள்ளச் செய்யும் ஒன்று குறையவே செய்யும். அதுதான் வாசனை.  பொழுது,சீதோஷணம், சூழல், வாசனை அனைத்தும் கச்ச்தமான முயங்கிய வர்ணனை இது, அநேகமாக  இன்று இரவு இது என் கனவில் வரக் கூடும்.

இங்கே சில சுவையான செய்திகள். நண்பர்களிடம் உரையாடுகையில் கேட்பேன். அவர்கள் கனவில் வாசனை எதையும் அனுபவித்ததில்லை என்றே சொல்கிறார்கள். அதே போல மிக குறைவான நண்பர்களே இலக்கியத் தருணங்களை கனவாகக் கண்டிருக்கிரார்ர்கள்,  இலக்கியம் நிகர்வாழ்வு எனப் பதியும் என்றால் அது நிச்சயம் நம் கனவில் வரும்தானே?

நான் இறுதியாகக் கண்ட கனவில்,  படகின் அமர முனையில் த்ரிஸ்ட்யுத்தும்ணன் நிற்கிறான். அவன் பின்னால் சாத்யகி. அவனுக்குப் பின்னால் நான். எதிரே வரும் படகின் பாய்மரத்தை கட்டும் மைய முடிச்சை சாத்யகி குறி வைக்கிறான். விண்ணில் மிலிட்டரி ஹெலிக்காப்டர்கள் தோன்றி எங்கள் படகை நோக்கி குண்டு மழை பொழிகிறது. நான் படகின் அடித்தளம் நோக்கி கத்திக் கொண்டே ஓடுகிறேன். அடித்தளம் முழுக்க நீர். பீதியில் விழித்துவிட்டேன்.

காலையில் எழுந்ததும் நிகழ்ந்த கனவை நினைத்து நினைத்து சிரித்தேன். இப்படித்தான் வெண் முரசு எனக்கும் சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் படிந்து, வித விதமாக வெளிவந்து கொண்டிருக்கிறது.

அந்த யாகத்துக்கு இன்றைய அத்யாயம் மேலும் ஒரு ஆகுதி.  அர்ஜுனனை நாகர் உலக மூதன்னை ஏன் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதில் உள்ள ஆழ் பிரதி மிக அழகு. முதலில் அர்ஜுனன் ஏழு உலகங்களை வெல்கிறான். வென்றபிறகு அன்றைய காலை விழித்த கணம் முதல் அந்த உலகே அவனுக்கு சொந்தமான ஒன்றாகத்தான் இருக்கிறது. அர்ஜுனன் காலை அரவ நதியில் நீராடும்போதே அந்த சொந்தம் துவங்கி விடுகிறது. கர்க்கர் அதை உடனடியாக கண்டுகொள்கிறார். அப்படி சொந்தம் கொண்டாடுவது அர்ஜுனனின் பாவனை அல்ல, அவனது இயல்பே அதுதான் என்று அர்ஜுனன் நாகர் குழந்தை ஒன்றினை ஏந்தக் கரம் நீட்டுகையில் தெரிந்துவிடுகிறது.

வெறியாட்டின் இறுதியில் அர்ஜுனன் மடியில் தவழும் அந்த அரவக் குட்டிகள், அவன் கொஞ்சக் கை உயர்த்திய குழந்தைகள் தானே? நஞ்சு கெழுமிய குழந்தைகள். அவனை எப்படி மூதன்னை ஏற்றுக் கொள்ளாமல் போவாள்?

இங்கே இப்போது எந்த சம்பந்தமும் இன்றி பீமனின் நினைவு எழுகிறது.  எங்களில் ஒருவன் நீ என்றுரைத்த நாக அன்னை அர்ஜுனனுக்கு நஞ்சளிக்க மறுக்கிறாள்.

நாக அன்னையிலும் உறையும் கருணையை குந்தி எங்கே கை விட்டால்? நஞ்சுக் கோப்பையுடன் நிற்கும் பீமனை இப்போது மனக்கண்ணில் கண்டுகொண்டிருக்கிறேன்.

பாவம்தான் பீமன்.
 
கடலூர் சீனு 

Tuesday, September 29, 2015

உலகம் கடந்த காதல்


அன்புள்ள திரு,ஜெ வணக்கம்.

காதல் உணர்வுப்பூர்வமானது, அதை அறிவுப்பூர்வமாக விளக்கமுடியாது என்று இதுநாள் வரை நினைத்து இருந்தேன். காதலை இத்தனை அற்புதமாக அறிவுபூர்வமாக  யாராவது விளக்கி இருக்கிறார்களா? வெண்முரசு அதை செய்கிறது. எத்தனை எத்தனை காதல் கதைகள் வாழ்க்கையில், நூல்களில். பொங்கி வந்து மூழ்கடிக்கின்றன. அர்ஜுனனும், உலூபியும் கொள்ளும் காதல், எல்லாக்காதலும்போல உணர்வுப்பூர்வமானதுதான். திரௌபதி அர்ஜுனன்மேல் கொள்ளும்காதல்போல, சுபகை அர்ஜுனன்மேல் கொள்ளும் காதல்போல உணர்வுப்பூர்வமானதுதான். அந்த உணர்வு எண்ணங்களை ஏழுபடிகளாக்கி, ஏழு உலகங்களாக்கி அறிவுப்பூர்வமாக பார்க்கவைத்ததில் உலூபின் காதல் அற்புதம்.

முக்தியை நோக்கி பயணிக்கும் ஒரு யோகியும், காதலை நோக்கி பயணிக்கும் ஒரு காதலனும் வேறு வேறா? இல்லை, இருவரும் ஒன்றே என்கிறது வெண்முரசு. யோகி மெய்மையில் ஒளியாகிறான். காதலன் மெய்காதலில் ஒளியாகிறான். யோகி அகத்தில் காணும் அனைத்து உலகத்தையும், காதலன் புறத்தில் காண்கின்றான். இரண்டுக்கும் காரணமாகுவது ஒரே சக்திதான். அகத்தில் நாகக்கன்னியாக, புறத்தில் நாகர்களின் கன்னியாக.

உலகம் என்பது என்ன? மண்ணும், கல்லும், மலையும், தாவர சங்கமமும், உடல்கூட்டமுமா? உலகம் எண்ணங்களால் ஆனது, எண்ணங்களின் வண்ணத்தால் ஆனது.

அகத்தில் உலூபியாகிய நாகக்கன்னியை மணக்க அர்ஜுனன் ஏழு உலகங்களில் பயணிக்கின்றான். அந்த ஏழு உலகங்களும் எப்படிப்பட்டது?. ஏழாம் உலகம் குரோதத்தால் ஆனது. ஆறாம் உலகம் காமத்தால் ஆனது, ஐந்தாம் உலகம் பேராசையால் ஆனது, நான்காம் உலகம் தாமசத்தால் ஆனது. மூன்றாம் உலகம் அன்பால் ஆனது, இரண்டாம் உலகம் மெய்யறிதலால் ஆனது, முதல் உலகம் அறிதல் கடந்த மெய்மையால் ஆனது.
அக உலகத்தை வெல்ல நான் நான் என்ற விழைவுக்கொண்டு வென்றேன் வென்றேன் என்று சொல்லிச்செல்லும் அர்ஜுனன் “வெற்றி என்று ஒன்றில்லை எங்கும்” என்பதை மெய்யறிதல் மூலம் அறியும் தருணத்தில் வெண்ணிறப்பேருடல் பெறுகின்றான். இந்த மெய் அறிதலைத்தாண்டி, அறிதலுக்கும் அப்பால் உள்ள மெய்மை உணரும் தருத்தில் “ஆவது என்று ஒன்றுமில்லை” என்பதையும் அறிகின்றான். அப்போது ஒளியுடல் பெருகின்றான். அவனுக்கான முக்தி கிடைக்கிறது.

புற உலகத்தில் உலூபியாகிய நாகர்களின் கன்னியை நாடிச்செல்லும் அர்ஜுனன் இந்த ஏழு உலகங்களையும் கடந்துதான் செல்கிறான். ஒவ்வொரு உலகமும் ஒவ்வொரு எண்ணத்தால் ஆகி உள்ளது. ஒவ்வொரு எண்ணமும் ஒவ்வொரு உலகம் என்பதை மிக நுணுக்கமாக இன்று உணர்ந்தேன். ஜெ இந்த இடத்திற்கு அழைத்து வந்ததற்கு மிக்க நன்றி. 

நீரில் இறங்கிய அர்ஜுனனை நீரில் மூழ்கடித்து இழுத்துவந்து கரைசேர்க்கும் உலூபி தன்னை வென்றதாக நினைத்து அவள்மீது முதல் எண்ணத்தால் குரோதம் கொள்கிறான் அர்ஜுனன். உலூபி தன்னை கவர்ந்து வந்ததால், பெண்ணால் சிறைப்பிடிக்கப்படுவதை தன் ஆண்மைக்கு தோல்வி என்ற எண்ணுகின்றான். சினம் கொள்கிறான். இப்பொழுது அவனுக்குள் இருக்கும் எண்ணங்கள் அனைத்தும் குரோதத்தால் ஆனது. குரோதத்தால் அர்ஜுனன் ஏழாம் உலகம் உருவாகின்றது. அந்த குரோதத்தாலேயே அந்த உலகத்தை தாண்டி, உலூபியை நீங்கிச்செல்கிறான்.
தன்னை வென்ற உலூபியை குரோதத்தோடு நினைக்கும்போதே, இன்று திரௌபதியின் தோழி மாயையின் மூலம் திரௌபதியை வென்ற இடத்திற்கு சென்று அவள்மீது பெருகிய பெரும்காமத்தில் விழுகின்றான். அவள் தனக்கு ஐந்தில் ஒரு பங்கெனபடைக்கப்படும் இடத்தில் இருக்கிறாள் என்பதை அறியும் தருணத்தில் சினம்கொள்கிறான், வெதும்புகிறான். காமத்தால் குரோதமும், குரோதத்தால் காமமும் இங்கு போட்டிப்போடுகின்றன. இங்கு காமம் என்னும் ஆறாம் உலகத்தில் அர்ஜுனன் இருக்கிறான். பாஞ்சாலி மீது உள்ள காமத்தாலேயே ஆறாம் உலகத்தை கடந்து செல்கிறான்.

காமம் என்னும் ஆறாம் உலகத்தை கடந்து செல்லும் அர்ஜுனன், செவிலித்தாயாகிய மாலினி இடத்தில் “இனிவேறு யாருக்கும் செவிலியாக இருக்கக்கூடாது” என்னும் இடத்தில் அவள் இடத்தில் பேராசை என்னும் ஐந்தாம் உலகத்தை அடைகிறான்.   

நான்காவது எண்ணத்தால் மாலினியை பெண் என்ற இடத்தில் வைப்பதா? அன்னை என்ற இடத்தில் வைப்பதா?. பெண் என்ற இடத்தில் வைத்தால் அவனுக்குள்  உள்ள காமம் என்னும் ஆலகாலம் எழுந்துவரும். அன்னை என்னம் இடத்தில் வைத்தால் அவனுக்குள் உள்ள அன்பு என்னும் அமுதம் பெருகிவரும். அர்ஜுனனின் நான்காவது எண்ணம் படைக்கும் நான்காவது உலகம், ஆலகாலமும், அமுதமும் நிறைந்த தமோகுண உலகம். அன்னை எல்லாம் உடலால் பெண்கள். பெண்கள் எல்லாம் உள்ளத்தால் அன்னைகள். இங்கு அர்ஜுனன் உடல் குளிர்ந்து உறைகிறது. கண்கள் கண்ணீர்விடுகிறது. மாலினி அவள் விழிகளால் அவன் உடலை உள்ளத்தை அறிந்து அவனுக்காக தன்னை பலியிடுகிறாள். மாலினியின் பலி அல்லது தோல்வி அர்ஜுனன் வெற்றியாகி, வெற்றேன்  வென்றேன் என்று  என்று தாவி மூன்றாம் உலகம் செல்கிறான். மாலினியை வென்றது மூலமே அர்ஜுனன் மூன்றாம் உலகத்திற்கு செல்லமுடிந்தது. அங்கு அர்ஜுனன் மாலினியால் தோற்கடிக்கப்பட்டு இருந்தால் அவன் நான்காம் உலகத்தின் நஞ்சால்நிறைந்து கீழிறங்கி, நிரந்தரமாக ஏழாம் உலகவாசியாக குரோதத்திலேயே வாழ்ந்து புழுவென நெளிந்து இருப்பான்.

தனது ஐந்தாவது எண்ணத்தால் அர்ஜுனன் மூன்றாம் உலகத்தில் நுழைகிறான். இங்கு அன்பு மட்டுமே உள்ளது. அன்னையின் புனிதம் தெரிகின்றது.  மூன்றாம் உலகத்தில் முழுக்க முழுக்க அன்புதான் உள்ளது. அங்கு அன்னையை காதலிக்கிறான். காதலியை அன்னை வடிவத்தில் காண்கிறான். எங்கும் அன்பு எதிலும் அன்பு, அன்பின் பேரொளி. இந்த அன்பின் பேரொளியில் அவன் உடல் பொன்னென மின்னுகின்றது. உடம்புக்குள்ளே உருபொருள் காண்கிறான். காமஉடலழிந்து, காதல்பொன்னுடல் பெறுகின்றான்.

தனது ஆறாவது எண்ணத்தால் அர்ஜுனன் தனது இரண்டாம் உலத்தை அடைகிறான்.  அங்குதான் அவனுக்கு உலூபியைப்பற்றி மெய்யறிதல் ஏற்படுகிறது. அந்த மெய்யறிதல் மூலம் பிறிதொன்றிலா நிலையின் கொடுமையை உணர்கின்றான். அது விடம் சென்று தெரிந்துக்கொள்கிறான். விடம் எதிரியை மட்டும் இல்லை தன்னையும் கொள்ளும் என்பதை அறிகின்றான். அதன் மூலமாக உண்யான காதலின் நிலை அறிகிறான். உண்மையான காதல் துயிலவிடாது, காத்திருக்க வைக்கும், பிறிதொன்று இல்லாமல் அவளும் ஆகிவிடக்கூடும் என்று உணர்கின்றான். அங்கு இடியே ஒரு தீபமாகி, இந்திரனே ஒரு தெய்வமாகி தன்னை காத்ததாக நினைக்கிறான். இறைதரிசனம் பெற்ற பக்தனாக உணர்கிறான். அங்கு வான்பொழியும் மழையில் தானது பொன்னுடலும் வெண்ணிறபேருடலாக ஆக நிற்கின்றான்.

தனது ஏழாம் எண்ணத்தால் முதல் உலகத்தை அர்ஜுனன் அடைகிறான். அறிதலுக்கு அப்பால் உள்ள மெய்மையை அங்கு கண்டுக்கொள்கிறான். அர்ஜுனன் நினைப்பதுபோல் உலூபி அந்த இடத்தைவிட்டு நகர்ந்துக்கூட செல்லவில்லை. அங்கேயே அவனுக்காக அந்த மழையில் அசையால் நிற்கின்றாள். அவன் நினைவுக்கும் கற்பனைக்கும் எட்டாத காதலி.மெய்மையின் வடிவம் அவள். மெய்மை அறிதலுக்கு அப்பால் பட்டது, எந்த எண்ணத்தாலும் அது வடிவமைக்கப்படுவதில்லை. அது உண்மை, உண்மை மட்டும். அதற்கு எந்த விளக்கமும் யாரும் தரவேண்டியது இல்லை. அங்கு எண்ணங்கள் அற்றுப்போகின்றன, உண்மை மட்டும் அசையாமல் இரு்ககிறது. உலூபிக்கூட அங்கு உண்மையாக, அறிதலுக்கு அப்பால் உள்ள மெய்மையாக இருக்கிறாள். அர்ஜுனன் இடம் வார்த்தை ஏது?  பெரும்மழையில் வெண்ணொளி நாகமென அவள் ஆயிரம் மடங்கு வளர்ந்து நிற்கின்றாள். உலூபி நிரந்தரமாக முதல் உலகத்தின் காதல் ஒளியில் நிற்கிறாள். அர்ஜுனன் ஏழாம் உலகத்தில் இருந்து மேல் வருகின்றான். ஏழுாம் உலகத்தைவிட முதல் உலகம் பல்லாயிரம் மடங்குபெரியது. உலூபியை நோக்கி திரும்பும் அர்ஜுனன் பெரியவனாகத்தெரிந்தான் ஆனால் உலூபியின் முன்  அர்ஜுனன் ஒரு பொன்கொன்றை மலரென அணுவாகிநிற்கின்றான்.  அந்த அடர் காட்டிலும், மழையே ஒரு காடாகி நிற்கும் அடர்மழையிலும் உலூபி ஒளியாகி மின்னுகின்றாள். அங்கு இரண்டு காடுகள் உள்ளன. அந்த இருக்காட்டிலும் மறைக்கப்பாடாத ஒளியாக உலூபி நிற்கின்றாள். அவளை அடையும் இடத்தில் அர்ஜுனனும் ஒளி உடல்பெறுகின்றான்.

இனி என்னச்சொல்ல? இந்த முத்திக்கு பின்னும் அர்ஜுனன் கடந்து செல்வான்.உண்மையிலேயே அர்ஜுனன் தன் உடம்பை சிறு அம்பென ஆக்கி இருள் மையத்தில் பாய்ந்ததன் பயன் மட்டும் பெறுவான்.

விழிதிறந்தபோது தன் உடல் ஒளி வடிவாகி அங்கிருந்த பிற உடல்களின் ஒளி எதிரொளித்துக் கொண்டிருப்பதை கண்டான். “அரவு ஏகும் முழுமை இது மானுடனே. எய்தற்கரிய உச்சமொன்றை அடைந்தாய், இங்கிருப்பாய்” என்றது ஒளிப்பெரு நாகமான ஸ்ருதன். “கடந்து செல்வதற்கே இங்கு வந்தேன்” என்றான் அர்ஜுனன். “எங்கும் அமர்வதற்கு எனக்கு ஊழ் அமையவில்லை.”-காண்டீபம்-12.
 

உணர்வு என்பது அறிதலுக்கும் அப்பால் உள்ள மெய்மை, அதை அறிவால் அணுகமுடியாது என்றுதான் எண்ணுகின்றோம் அதனால் உணர்வு அறிவற்றது என்று நினைத்துவிடுகின்றோம். உணர்வு என்பது அறிவின் ஏழுபடிகளைத்தாண்டி தூய்மையில் நிற்கின்றது என்பதை இன்று அறிகின்றேன். அறிவைவிடவும் தூய்மையான மெய்யறிவுதான் உணர்வு. 

காதலில் மூழ்குபனும், கடவுளில் மூழ்குபனும் ஏன் ஒரு இடத்திற்கு செல்கின்றார்கள் என்று இன்று தெரிகிறது ஜெ. உலூபியின் கதைவழியாக ஒரு தெய்வீக காதலைப்படைத்துவிட்டீர். தெய்வீக காதல், தெய்வீகக்காதல் என்பது இதுதான்.

லைலா மஜுனு கதையில், ஒருநாள் பள்ளியில் தொழுதுக்கொண்டு இருந்த மஜுனு, ”லைலா,.. லைலா..” என்று தொழுகையில் இருந்து எழுந்து, தொழுபவர்களை மிதித்துக்கொண்டு ஓடினானாம். அவனை பிடித்துவந்து ஏன் இப்படி எல்லோரையும் மிதித்தாய் என்று கேட்டதற்கு. “நான் எங்கு ஓடினேன், தொழுது கொண்டுதான் இருந்தேன். நீங்கள் யாரும் தொழுகையில் இல்லை அதனால்தான் நான் மிதித்துக்கொண்டு ஓடினேன் என்கறீர்கள்” என்றானாம்.

முத்தியும், காதலும் மனிதனை ஒளியாக்கிவிடுகிறது. எண்ணங்களால் ஆன ஏழு உலகங்களையும் அது அடித்து நொறுக்கிவிடுகிறது.

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.

வெண்முரசு சென்னை விவாதக்கூடலுக்காக ஒரு தளம்

வெண்முரசு வாசகர்களின் சென்னை சந்திப்புக்காக ஒரு தளம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கே அரங்கில் பேசப்பட்டவை தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன

https://epicvenmurasu.wordpress.com/https://epicvenmurasu.wordpress.com/

Monday, September 28, 2015

காதலை பரப்பும் காதல்     தத்துவச் சுழலிலிருந்து வெளிவந்தால் காதல் சுழல். தன்னை ஏற்றுக்கொள்ளும்வரை காத்திருப்பேன் என்ற பிடிவாதம் நாம் கதைகளில் திரைப்படங்களில் சில சமயம் நம் கண்ணெதிரில் நிகழ்கிறது. இதில் அபத்தம் ஒன்று இருக்கிறது இல்லையா? நான் ஒருவரை நேசிக்கிறேன் என்ற ஒரு காரணத்திற்காக அவர் திரும்ப என்னை நேசிக்கவேண்டும் என்பது எந்த வகையில் சரியானது?  ஒருவகையில் அது ஒரு வறட்டு பிடிவாதம் மற்றும் உளவியல் வன்முறை அல்லவா? இதை எப்படி நாம் ஏற்றுக்கொள்ள முடியும்?
 
 
   ஒருவர் உள்ளத்தில் உண்டாகும் காதல் அவருடைய புத்தியினால் மட்டும் வந்த  விழைவல்ல. உயிர்களை ஆண் பெண் என இரு பிரிவாக்கிய ஆதி இயற்கை நம் இரத்தத்தின் அணுக்களில் எழுதிவைத்திருப்பது அது. அதுவே காம நிறைவோடு முடிந்துவிடாமல் காலமெல்லாம் தொடர மனிதர்களில் அணுக்களில் சற்று கூடுதலாக எழுதிவைத்திருக்கிறது. காதலில் நம் உடல், அறிவு, மனம் எல்லாம் அந்த ஆதி இயற்கையின் கைப்பாவைகளென செயல் படுகின்றன, தன் துணையினை கண்டு கொள்ளும் அறிவை அதுவே வழங்குகிறது.ஒருவர்   கொள்ளும் காதல் ஒரு தீ போல அவர் விரும்பும்  எதிர்பாலரின் உள்ளத்தை தீண்டுகிறது, அத்தீயின் ஆற்றல் குறிப்பிட்ட அளவிற்கு மேல் தீவிரமானவுடன் எதிர் பாலரின் உள்ளத்திலும் பற்றி எரியத் தொடங்குகிறது.  இவ்வாறாக இருவர் உள்ளத்தில் இணைந்து எரியும்  காதல் தீ அவ்விருவர் இணைந்து புரியும் யாகத்தின் தீயாக எழுகிறது. அதில் அவிற் பாகமாக தம் சுயத்தில் ஒரு பகுதியை அவ்விருவரும்  அளிக்கின்றனர். இப்படி இணை இணையாக ஆண்பெண்  சேர்ந்து செய்யும் யாகங்களின் பலனாகக்  கிடைத்ததே இந்த மனித சமுதாயம் தன் பண்பாடு, கலைகள் அறிவாற்றல் போன்றவற்றின் வளர்ச்சி, 
 
 
    காதலில் அபத்தங்களை நம் அறிவு காணலாம். ஆனால் அந்த அபத்தம் நம் புத்தியின் மனதின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டு ஆதி இயற்கையின் கண்களில் வழி பார்த்தால் மிகவும் அர்த்தமுள்ளது. பார்த்தன் பாதையில் பல பெண்கள் வருகிறார்கள்.  அவர்கள் அவனுக்கு வெறும் காமப் பாவைகளாக மட்டுமே இருக்கின்றனர். அவன் உடல் மட்டுமே அவர்களை அறிகிறது. அவர்களின் உடல்களின் வனப்பே அவனை கவர்கிறது. அவர்கள் உள்ளத்தின் காதல் தீ அவன் உள்ளத்தை பற்ற வைக்க முடியவில்லை.
    
 
    பிறிதொன்றில்லாமை என ஆகும் பெருந்தீ காதலில் ஒருவர் அடையும் உச்சம்.  அந்த உச்ச நேசிப்பை, ஐவரை மகனாகக் கொண்ட தன் தாயிடம் அவன் காணத் தவித்து ஏமாற்றமடைந்தவன். பாஞ்சாலி தன்னில் ஐந்தில் ஒரு பாகத்தை மட்டுமே அவனுக்கு அளிக்க சம்மதித்தவள். அதிலும் அவன் ஏமாற்றம் அடைந்தவன், அதன் காரணமாக தான் எதை தேடுகிறோம் எனத் தெரியாமலேயே கண்ணில் படும் பெண்களிடம்  தேடிய வண்ணம் இருக்கிறான்.  ஆனால் அவன் தேடுவது எதுவென அவன் அறியாதிருந்ததினால் தேடப்படுவது கண்ணெதிரே காணும் போதும் அதை அறியத் தவறிவிடுகிறான். சிறுவனாக இருக்கையில் மாலினி பிறிதொருவன் இல்லாத நேசத்தை கொண்டிருப்பதை அவன் உள்ளம் உள்வாங்கவில்லை.  சுபகை போன்ற பெண்கள் அவன் கூடலுக்கு பின் பிறிதொருவர் கொள்ளாத பெருந்தவத்தை கொண்டதை அவன் அறியாதவனாக இருந்துவிடுகிறான்.
     
 
 ஆனால் இன்று உலூபி அவன் கண்முன்னால் பிறிதொன்றுமில்லாமை என்ற பெரு நெருப்பாக கொழுந்துவிட்டு எரிகிறாள்.  அந்த தீயை இம்முறை அவன் கண்டுவிடுகிறான். அந்த தீ அவன் குளிர்ந்த  உள்ளத்தை வெப்பமாக்கி பற்றவைக்கிறது. 

--
ஜெயமோகன்

வெண்முரசின் துரியோதனன்

நிறைவுற்றது என்னவோ கிருஷ்ண காதை என்றாலும், நான் இக்கணம் எழுத விளைவது இது வரை வந்த துரியோதனன் பற்றியே. இப்போது எழுதுவது சரியானதாகவும் இருக்கும் ஏனென்றால் இன்னும் இந்திரப் பிரஸ்தம் எழவில்லை. எழுந்த பின் வஞ்சமும் சூதும் வந்த பின் இதே பதிவை திரும்பப் படிக்க சுவையாக இருக்கலாம்.


பாண்டியன் ராமையா எழுதிய விமர்சனக்குறிப்பு

வேட்கை

இனிய ஜெயம்,


திரௌபதியின் வேட்கை வழியே, பெண்களின் அக ஆழம் குறித்து மாலினியும் சுபாகையும் பேசும்போது  சுஜயன் தோளில் தூங்கிவிடும் காட்சி அழகு.  குழந்தைக் கதை முடியும் எல்லையில் நதியில் ஒழுகிச் செல்லும் சருகு போல சுஜயன் தூங்கி விடும் சித்திரம் அழகாக காட்சிப்படுத்தப் பட்டிருக்கிறது. 

கதவு திறக்கும் திரௌபதி அக் கணங்களுக்கு முன்னால் என்ன நிலையில் இருந்தாள் என்பதை இத்தனை துல்லியமாக சொல்லாமல் சொல்லியது  ''சாவடிக்கிறார்'' என்று உள்ளுக்குள் பொங்கியது. [அந்த நிலையை எழுதிப் பார்த்தால் எத்தனை ஆபாசம்? அரங்காவுக்கே வெட்கம் வந்துவிடும்] .

சுஜயனை அடிக்கடி உறங்கவையுங்கள் என்பதை வாசகர் விருப்பமாக தெரிவித்துக்கொள்கிறேன்.
 
கடலூர் சீனு

Sunday, September 27, 2015

யோகம்

கந்தர்வனின் கதை ஆகட்டும், திரிசிரசின் கதை ஆகட்டும், இன்று அர்ஜுனன் வென்று மீளும் ஏழு நாகலோகம் ஆகட்டும் அனைத்துமே [குழந்தைக் கதையாக சொல்லப்பட்ட] ஆத்மீகத்தில் ஒரு சாதகன் சிக்கிக் கொள்ளும் இடங்களும், ஒரு சாதகன் வென்று மீளும் இடங்களும் ஆகும்.

குறிப்பாக இன்றைய அத்யாயம்  குண்டலனி, சக்கரங்கள் வழியே உயர்ந்து சகசரத்தை அடையும் ஆத்மீக குறியீட்டின் கதையே.

ஒரு எல்லைக்க்கு மேல் இதை விளக்க இயலாது.  கதைக்குள் ஒரு வரி வருகிறது ''இது வரையாடும் கால் பிழைக்கும் பாதை'' . ஆம் பிழை திரிசிரஸ். வென்ற சாதகன் அர்ஜுனன்.

அர்ஜுனன் செல்வது வெல்லவே இயலாது என்பதை நோக்கிய பயணம்.  ஆத்மீகமும் அதுதான்.  வெண் சுழியின் மைய இருள் புள்ளி  நோக்கி அர்ஜுனன் பறக்கையில் [உண்மையில் பாம்புகளில் சில மரம் விட்டு மரம் தன்னை அம்பாகி பாயும்]  அந்த மையத்திலிருந்து எழும் பெண்ணின் சிரிப்பொலி...

இந்தக் கதையை சொல்லிக் கொண்டிருப்பவள்  ஆணால் தீண்டப்படாத பரிசுத்தமான ஒரு பெண்.

இதற்க்கு மேல் இதை சொல்ல முடியாது என்ற எல்லை வரை சொல்லப்பட்ட கதை.

காண்டவத்தில் ஜெயம் இந்த தத்துவார்த்த சிக்கலில் சிக்கி நின்றுவிட்டார். காண்டீபத்தில் நாண் பூட்டி, அம்பு செலுத்தி, மைய பிந்துவை கச்சிதமாக அடித்துவிட்டார்
 
கடலூர் சீனு

தத்துவத்தின் கனவு

அன்புள்ள ஜெயமோகன்

நாக உலகின் சித்திரம் பிரமிக்கவைத்தது. இரண்டுமுறை வாசிக்காமல் உள்வாங்கவே முடியாத அடர்த்தி. ஒரு கனவு போல. தியானம் போல என்றும் சொல்லலாம்

குண்டலினிப்பாம்பில் இருந்து சகஸ்ரமாக விரியும் பாம்புவரை ஏழு படிநிலைகள். இறுதியில் எஞ்சும் ஒளிவடிவம். அதன் நடுவே கருஞ்சுழி

ஒவ்வொரு வர்ணனையையும் நுணுக்கமாக வாசித்தாகவேண்டியிருக்கிறது. வென்றேன் என்று ஒருபடியில் சொல்பவன் வெற்றி என்றில்லை என்று எந்தப்படியில் சொல்கிறான். சென்றுகொண்டே இருப்பவன் என எந்தப்படியில் உணர்கிறான்

தத்துவத்தை கனவாக ஆக்கிய அத்தியாயம்

சுவாமி

கருஞ்சுழி

Dear Mr.Jeyamohan,

 Just now I read kaandeevam today. I see the whole chapter as the revelation of Hawking's Brief history of time. when I read his book the first time , I had trouble imagining certain concepts like arrow of time in the black hole. But today's line 
 தன் உடலை ஒரு சிறு அம்பென ஆக்கி அவ்விருள் மையம் நோக்கி பாய்ந்தான்.
This sealed it. 
Even I could imagine further concepts like event horizon, schwarzchild radius from today's writing
வளைத்து இறுகப்பற்றிக்கொண்டு தலைகீழாக ஆடியப விழுந்து ஆழத்தின் தொலைவில் மறைந்த பிறிதொரு நாகத்தின் "இறுதிக் கண சுருங்கலை"
I am not sure whether you can interpret a pure literacy work like venmurasu in this manner. But this is how I visualise today's article. it helps bring alive very complex concepts for children and adults alike.
thanks for giving this.

Warm regards,
Meenakshi
 
அன்புள்ள மீனாட்சி நாராயணன்,
 
அந்த மொத்தச்சித்திரமும் யோகப்பயிற்சியில் பெரும்பாலும் தென்படுவது. முடிவற்ற சுழல். மைய இருள். நெளிவுகளின் வெளி
 
பிரபஞ்சமே அப்போது உள்ளே தெரியும்போலும்
 
ஜெ

சுழல் உலகம்அன்புள்ள திரு.ஜெ வணக்கம். அர்ஜுனனின் நாகலோகப்பயணம் குழந்தைகளுக்கான  உலகமாக படைக்கப்பட்டாலும், அது ஞானிகளுக்கான தோரணவாயிலைக் கொண்டு உள்ளது

மூலாதாரம், சுவாதிஸ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞா, துரியம் என்னும் ஏழு சக்கரங்கள் ஏழு லோகங்களாக உள்ளன. இந்த ஏழு லோகங்களும் அக உலகங்கள். அந்த அகலோகங்களில் ஏழாம் உலகம் கீழே இருக்கிறது. ஆறாம் உலகம் அதற்குமேல் உள்ளது. ஐந்தாம் உலகம் அதற்குமேல் உள்ளது, நான்காம் உலகம் அதற்குமேல் உள்ளது, மூன்றாம் உலகம் அதற்குமேல் உள்ளது, இரண்டாம் உலகம் அதற்குமேல் உள்ளது. முதல் உலகம் அதற்குமேல் உள்ளது.நாகலோகம் என்பதல் ஏழாம் உலகத்தை கீழே வைத்து, ஏழில் இருந்து ஒன்றுக்கு வரும் கதை அம்சம் அற்புதம்.

தொங்கும்தோட்டம்போல் இது தொங்கும் உலகம். பத்மாசனத்தில் உட்காரும் ஒருவனுக்கு மூலாதாரம் என்பது ஏழாம் உலகம்தான். இப்படி என்னையே தலைகீழாகப்பார்க்கவைத்த ஜெவின் பார்வைக்கு வணக்கம்.

எண்ணிக்கையால் ஒரு உண்மை பெரியதில்லை என்பதையும் உணரவைத்தது இந்த தலைகீழ் ஏழுலோகம். நாகலோகத்தில் ஏழாம் உலகத்தில் இருந்துதான் முதல் உலகத்திற்கு செல்லவேண்டும். அப்ப மானிடன் எட்டாம் உலகத்தில் இருக்கிறானா? எட்டா லோகத்தில் இருக்கிறான். 

காலத்தையும் பாசத்தையும் வெல்லும் அர்ஜுனன் ஏழாம் உலகத்தில் நுழைகிறான். அங்கு தன்னை குரோதத்தால் நிலைநிறுத்துகின்றான். இது முதல் சக்கரமாகிய மூலாதாரம். முயற்சி செய்பவனின் ஆடுகளம்.  

ஏழாம் உலகத்தில் நுழைந்ததாலேயே ஆறாம் உலகத்திற்கு எளிதில் நழுவி சென்றுவிடுகின். ஆறாம் உலகத்திற்கு செல்ல எந்த கடின உழைப்பும் தேவை இல்லை. அது காமத்தால் ஆனது, குரோதமே ஒருவனை காமத்தில் மூழ்க அடிக்கிறது. காமம் நிறையும்தோறும் குரோதம் இல்லாமல் ஆகிறது. ஆனால் அந்த உலகத்தில் உறவுகளால் சிக்கிக்கொள்ளும் கூட்டம் உள்ளது. உறவுகளால் சிக்கிக்கொள்ளாமல், உறவுகள் அனைத்தும் மாயை என்று உணர்ந்து பிறன் என்று எதுவும் அற்றவானாக முன்னேறுகின்றான் அர்ஜுனன்.அங்கு எல்லாம் அவனே. இது இரண்டாவது சக்கரமாகிய சுவாதிஸ்டானம். உறவு பந்தலை உருவாக்கும் உயிர்சக்தி துடிக்கும் இடம்.

ஐந்தாம் உலகமான காளகத்தில் அதிக உழைப்பை கொடுக்கின்றான். ஒருவனுக்குள் பெருகும் பேராசையால் ஆனது அந்த உலகம். பேராசை வளர்வதற்கு உழைப்பை வேண்டுகிறது. வெற்றித்தோல்வி இங்கு நிர்மாணிக்கப்படுகிறது. இங்கு அர்ஜுனன் பதினோறு தோல்விகளுக்கு பிறகு பன்னிரண்டாவது தாவலில் வெற்றிப்பெறுகின்றான்  .வெற்றித்தோல்வியால் இங்கு எதிரிகள் முளைக்கிறார்கள். தோற்பதற்கும் வெல்வதற்கும் எதிரியே காரணமாகின்றான் என்பதை அறிந்து அந்த உலகத்தை கடக்கிறான். எதிரியும் தானும் வேறு அல்ல தானே என்றும், தன்னின் சமபலம் என்றும் இந்த உலகத்தில் உணர்கின்றான் அர்ஜுன்ன். இது மூன்றாவது சக்கரமாகிய மணிபூரகம். மனம் இங்கு இயங்கும்போது செயல்வீரன் எழுகிறான்.

ஏழாம் உலகம், ஆறாம் உலகம், ஐந்தாம் உலகம் என்று செல்லும் மனம் நான்காம் உலகம் செல்லமுடியாமல் கணத்தில் சோர்வுற்றுவிழுந்துவிடும். நான்காம் உலகம் ஒரு மையம். நான்காம் உலகத்திற்கு கீழே மூன்று உலகம் உள்ளது. நான்காம் உலகத்திற்குமேலே நான்கு உலகம் உள்ளது. மையத்தை அடைவது என்பது வெற்றியின் முதல்படி. இருநிலைகளை சமத்தில் உணரும் தருணம். அதை வாயில் படி என்றும் சொல்லலாம், அதற்கு அப்பால் அகம் உள்ளது, அதற்கு இப்பால் புறம். அங்கு நின்று அகத்தையும் புறத்தையும் அறியமுடியும். கீழ் உலக நிலையும், மேல் உலக நிலையும் அங்கு நிலவும். குளிச்சியும் வெப்பமும் அங்கு இருக்கும், இருளும் ஒளியும் அங்கு இருக்கும். எனவே இருமையின் பிளவை அங்கு மனம் உணர்ந்து சோர்வு கொள்கிறது. இந்த உலகம் தமசத்தால் ஆனது. தாமசத்தை வெல்பவன் அங்கு வெல்கிறான். அங்கு செல்ல ஜலஜன் சோர்வுரும் கணம்தான் அங்கு செல்ல அர்ஜுனன் ஊக்கம் கொள்ளும் கணமும். அங்கு உள்ள அனைவரும் தங்களை உடலென்று என்று எண்ணி உடலாகி உறைய, அவர்களின் விழியின் விளக்கால் ஒளிப்பெற்று அர்ஜுனன் வெல்கிறான். உடல் நினைவினை மறக்கிறான். நான்காவது ஆதாரம் அனாகதம். உடலும் உள்ளமும் சம எடை கொண்டு கனக்கிறது. உடல் உணர்வை இழப்பவருக்கு உள்ளுணர்வு ஒளியும்ஒலியும் காட்டி உயர்த்துகிறது.

மூன்றாவது உலகம் பொன்னுலகம் இங்கு செல்பவர்கள் உடல் பொன்னென்று ஆகின்றது. கீழ் உள்ள மூன்று உலகமும் உடம்பைப்பற்றி பெரிதாக பேசவில்லை ஆனால் மேல் உள்ள மூன்று உலகத்தில் தொடக்கஉலகமே உடம்பைப்பற்றித்தான் பேசுகிறது. உடம்பின் மாற்றத்தைப்பற்றிப்பேசுகிறது. இதுவரை இருந்த உடலை புத்துடல் ஆக்கச்சொல்கிறது. அங்கு பொன் உடல் பெறாதவன் வாழமுடியாது. அது சித்தர்கள் உலகம், இந்த உலகத்தில் சித்தர்கள் சித்துக்கல்செய்து உடலை பொன்னாக்கி நிலைநிற்கின்றார்கள். சித்துக்களில் மாட்டிக்கொண்டவர்கள் அந்த உலகத்தை தாண்டமுடியாமல்போகலாம். அர்ஜுனன் அந்த உலகத்தின் சித்துக்களில் மாட்டாமல், பார்வையாளனாக இருப்பதாலேயே அந்த உலகத்தையும் தாண்டுகின்றான். அந்த உலகத்தை தாண்டுவதாலேயே அவனுக்கு நந்தியின் தரிசனம் கிடைக்கிறது. கால்(காற்று) நடையாகிய நந்தி அவனை மேல் ஏற்றுகிறது. குருவாகி வழிகாட்டுகிறது. சித்தால் பெறும் பொன்னுடலை எண்ணத்தால் பெற்றுக்கொள்ள சொல்கிறது. காதலாகிய அன்பு என்னும் எண்ணத்தால் அர்ஜுனன் பொன்னாகின்றான். அன்பு என்னும் எண்ணம் ஆணவமாகிய ஆலகாலத்தை பிரித்து எடுத்துவிடுகிறது. ஆலகாலமாகிய களிம்பு பிரிந்தபின்பு தாம்ரம் தங்கமாகிவிடுகிறது. இந்த உடலுக்கு ஆணவம் களிம்பு, அதை பிரித்தால் உடம்பு அன்பென்னும் தங்கமாகின்றது. அந்த தங்கத்தை அறிதல் அறிதல் என்ற விழைவின் ஒளிக்கொண்டு சுடர்மின்ன வைக்கின்றான்.

 மூன்றாம் உலகமாகிய விசுத்தி சக்கரத்தில் மனிதன் தனது களிம்புகள் முழுவதும் பிரிக்கப்பட்டு, அல்லது கண்டத்தில் அடக்கப்பட்டு சுத்திக்கறிக்கப்படுகிறான். இது விசுத்தி சக்கரம். விசுத்தி என்பது சுத்தத்தின் சுத்தம்.  

இராண்டாம் உலகமாகிய ஆக்ஞா சக்கரத்தில் அர்ஜுனன் வந்து சேரும்போதுதான் தன்னை அணுவென்று உணர்கின்றான். ஒரு பொன்கொன்றைப்பூ எனறு அவன் அவனை உணர்வது அழகு. அங்கு எழுப்பப்படும் ஒவ்வொரு சொல்லும் இடி என்று ஒலிக்கிறது அவனுக்கு, நாகங்களின் எளிய மூச்சுக்காற்றுகூட பெரும் புயல்என அவனை பறக்க வைக்கிறது. இதுவரை சொல்புத்தி வேலை செய்கிறது. இனி சுயபுத்தி அன்றி வேலைக்கு ஆகாது. தன்னைத் தான் அறிந்து தன்னில் மூழ்குபவன் உலகம் அது. இதுவரை நான் வெல்வேன், வென்றேன், நான் எதிலும் முதல்வன் என்று நினைத்த அர்ஜுனன் இங்கு மெய்மையை அறிகிறான். வெற்றி என ஒன்றில்லை எங்கும் என்றான்.  மெய்மையை அறியும் தருணம், மெய்யுடல் பெற்று மால்யவானுக்கு நிகரான உடல்கொண்டு நிற்கிறான்.  ஆக்ஞா சக்கரத்தில் புருஷோத்தமன் நாகக்குடையென ஆகின்றான். இறைதரிசனமும் பெருகின்றான் இங்கு.


இரண்டாம் உலகம் தாண்டி முதல் உலகத்தில் செல்லும்போது பொன்னுடலும் பயன்படாது, ஒளியுடல் வேண்டும், மெய்ஞானமும் பயன்படாது அனுபவஞானம் கனியவேண்டும். எத்தனை எத்தனைப்பாடுகள் பட்டு தொட்ட முதல் உலகத்தில் ஆயிரம் இதழ்தாமரை உலகமாகிய துரியத்தில் அனுவம் வாய்க்கிறது. ”ஆவது என்றுஒன்றில்லை” என்ற அனுபவஞானம். இதற்காகவா இத்தனைப்பாடு. சும்மாவே இருந்திருக்கலாமே என்றுதான் தோன்றுகின்றது.


இப்படி சும்மாவே இருந்து இறந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் சுவாமி விவேகானந்தர்   “துறுபிடித்து அழிந்துப்போவதைவிட தேய்ந்து அழிந்துப்போ” என்றுசொல்கிறார்.இதைத்தான் பகவான் கண்ணனும் “கடமையை செய் பலனை எதிர்ப்பார்க்காதே” என்றும் சொல்கின்றான்.

மெய்மை ஞானம் என்றும் ஞானம் உணர்வு என்றும் உணர்வு விழைவு என்றும் விழைவு செயல் என்றும் செயல் ஆணவம் என்றும் ஆகி உதிர்ந்து கொண்டிருப்பதை கண்டான்-காண்டீபம்-12 என்பதை வெறும் சொற்களாக வைத்துக்கொள்ளமுடியாது, வெறும் சொற்களாக வைத்துக்கொண்டால் என்ன பயன்? சொற்களின் பயனை அனுபவமாக உணர்வதற்காகத்தான் அர்ஜுனன் இத்தனைபை்பாடு படுகின்றான், இந்தப்பாடுபடுகின்றான். மானிடவாழ்க்கை எண்ணங்களால் ஆனது. ஒவ்வொரு உலகமும் ஒவ்வொரு எண்ணங்களில் கட்டமைப்பு. அந்த எண்ணங்கள் அந்த உலகத்தைத்தான் நமக்கு கொடுக்கும். அந்த எண்ணங்களை தாண்டுவதன் மூலம்தான் அந்த உலகத்தையும் தாண்டமுடியும். அனுபவம்தான் வாழ்க்கை.

இவ்வேழு உலகங்களும் எண்ணங்களால் ஆனவை என்றுணர்க! ஏழாம் உலகம் குரோதத்தால் ஆனது. காமத்தாலானது ஆறாம் உலகம். பேராசையால் ஆனது ஐந்தாம் உலகம். நான்காவது உலகம் தமோகுணத்தால் ஆனது. அன்பெனும் பொன்னொளி கொண்டது மூன்றாம் லகம். ஞானம் கனிந்த எண்ணங்களால் ஆனது இவ்வுலகம்.”-காண்டீாம்-12. அர்ஜுனன் ஏழுலோகத்திலும் பயணித்து கடைசியில் அறியும் ஆவதென்று ஒன்றில்லை என்பதை அதன் வண்ணங்களால், சுவையால் அறிந்தபின்பே அனுபவமாக்கமுடியும் இல்லை என்றால் அவைகள் வெறும் சொற்கள். சொற்கள் அனுபவத்தின் தேர். தெய்வம் இல்லாத தேர் வெறும் அலங்காரம் மட்டும்தான். அலங்காரத்திற்குள் உள்ள தெய்வத்தை அறியவே இந்த ஏழு உலகங்களையும் அறிகின்றான் அர்ஜுனன். அறிந்த பின்பு அந்த தேரையும், தெய்வத்தையும் அங்காங்கே விட்டு பயணிக்கின்றான் அர்ஜுனன். அவன் ஒரு பயணிமட்டும்.  


ஓளியுலகத்தில் சென்று மீண்டும் இருள் உலகத்தில் பாய்ந்தான் அர்ஜுனன் என்பதை அறியும்போதுதான் மனதை என்னமோ செய்கிறது. . மாயை எத்தனை வலிமையானது. இறைவன் தனக்கு நிகராக தனது மாயையை வகுத்து வைத்து உள்ளான். தனது ஒளிக்கு நிகரென இருட்டை தனது அருகிலேயே வைத்து உள்ளான்.   அதை வெளியேறும் வழி என்று அர்ஜுனனே மயங்கும்போது மற்றோர் எம்மாத்திரம். எதற்கும் அம்புவிடும் அர்ஜுனன் அதற்கு தன்னையே அம்பாக்கிக்கொள்கிறான் என்றால் அதன் சக்திதான் என்னே?  அது வெல்லமுடியாத உலகம். ஏழுலகம் வென்றவனும் வெல்லமுடியாத உலகம்.


ககனமும் வானும் புவனமும் காணவிற் காமன் அங்கம்
தகனம்முன் செய்த பெருமாற்குத் தடக்கையும் செம்
முகனும்முந் நான்கு இருமூன்று எனத்தோன்றிய மூதறிவின்
மகனும் உண்டாயதன்றோ வல்லி நீசெய்த வல்லபமே! –அபிராமி அந்தாதி
 
நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல். --

Saturday, September 26, 2015

வேறுபாடே இல்லாதவரும் துய்மையானவரும்


யாவற்றையும் வெற்றிக்கண்டிடும் பரமாத்தாவான விஷ்ணுவுக்கு வணக்கம்-என்று விஷ்ணு சகஸ்ரநாமம் விஷ்ணுவை விவரிக்கிறது. பன்னிரு ஆதித்தியர்களில் ஒருவனான சூரியன் ஒருவன் மட்டும் நமது கண்களுக்கு தெரியும் வண்ணம் உள்ளான்.  மற்ற ஆதித்தியர்கள் அனைவரும் அவர்களின் குணங்களால் இங்கு படிமங்களாக நிறைந்து உள்ளனர். எடுக்க எடுக்க குறையாத அட்சயப்பாத்திரங்களாக அவர்களின் படிமங்கள் உள்ளது. விஷ்ணுவைப்பற்றி ஆயிரம் திருநாமங்களால் அவன் குணங்களைப்பற்றி ஓதினாலும் அது ஏதோ துளி என்றே உருவம் காட்டுகின்றது.

விஷ்ணு வேறுபாடு இல்லாதவனாக இருக்கிறான். வேறுபாடு இல்லாதவனாகையால் குணமற்றவானாக இருக்கிறான். உருவமற்று இருக்கிறான். இசையாகி நிற்கிறான். எங்கும் எதிலும் உருவம் என்றே ஆகி நிற்கும் காதலர்களின் அன்பாகி இருக்கிறான். எங்கும் எதிலும் உருவத்தை இழந்து விரியும் பேரன்பாளர்களின் காதலாகி இருக்கிறான். தான் என்ற அகங்தை அவனிடம் இல்லை.குணம் இல்லை. தனக்கென்று ஒரு உருவம் இல்லை. வண்ணம். சுவையில்லை. அதனால் அவன் முப்பட்டகத்தால் பிரிக்கப்படாத வெள்ளொளியாக நிற்கிறான். விஷ்ணு உருவம் இல்லாதவன். விஷ்ணு சச்சுதானந்தன்.

விஷ்ணுவேறுபாடு இல்லாதவனாக இருக்கமுடியும் என்றால் வேறுபாடு உள்ள ஒன்று இருக்கத்தானே வேண்டும். அவன் த்வஷ்டா. வேறுபாடு இல்லாமல் அவனால் இருக்கமுடியவில்லை. அந்த வேறுப்பாட்டை வெறுப்பின் மூலாமாகவே உருவாக்கிக்கொள்கின்றான். வெறுப்பு தோன்றும்தோறும் வேறுபாடு உருவாகிறது, வேறுபாடு தோன்றும்தோறும் உருவம் உருவாகிறது. வண்ணம் உருவாகிறது. உருவம் என்பது படைத்தல், படைத்தல் என்பது பிரம்மாவின் தொழில். த்வஷ்டா பிரம்மாவாக வந்து நம்முன் நிற்கிறான். படைப்பதாலேயே அவன் படைக்கும் உலகத்தை தாண்டி உள்ள உலகத்தை அவனால் காணமுடியில்லை அங்கு வந்து அவன் முன் நிற்கிறது ஆணவம். த்வஷ்டாவின் ஆணவம், தான் படைத்த சிற்பங்கள்போதாது என்று தன்னைப்போல் படைக்கும் திரிசிரசைப்படைக்கிறது. அதாவது விஸ்வரூபன்.
விஷ்ணு உருவம் இல்லாமல் விரிந்தவன். விஸ்வரூபன் உருவத்தால் விரிந்தவன். உருவத்தில் உள்ள உண்மையை அறியும்தோறும் விஷ்ணுவருகிறான். உண்மைக்கு  உருவத்தை உருவாக்கும்தோறும் விஸ்வரூபன் உருவாகின்றான்.

இறைவன் உருவம் உடையவனா? இறைவன் உருவம் அற்றவான என்ற வினா எழுதா நாள் உண்டா? அந்த வினைாவை வெண்முரசு எழுப்பி விஷ்ணு, விஸ்வரூபவன் வழியாக விடைச்சொல்கிறது.

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் 
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே-கந்தர் அநுபூதி

இங்குள்ள ஒவ்வொன்றும் தங்கள் உண்மையின்மேல் பொருண்மையை ஏற்றிவைத்து மூடிக்கொண்டிருக்கின்றன. பொருண்மையை விலக்கினால் இன்மையையே அறியமுடியும். பொருண்மையை அறிந்தால் உண்மை மறைந்துவிடும். சலிக்காத பெரும்பகடையாட்டத்தில் புன்னகைத்து அமர்ந்திருக்கிறது பிரம்மம். அவனோ பகடையின் மூன்று களமுகங்களிலும் தானே அமர்ந்தான். நான்காவதாக பிரம்மத்தை அமரச்செய்தான். பொருண்மையை அறிந்தது கள். பொருளை அறிந்தது வேதம். அறிந்ததை ஆண்டது விழைவு-காண்டீபம்-10

மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தன பார்முதல் பூதம்
பரத்தில் மறைந்தன பார்முதல் பூதமே –திருமூலர்.தவத்தில் நின்று அறிவும் உணர்வும் கொண்டு படைக்கப்படுகிறது விஸ்வரூப உலகம்.  விஸ்வரூப உலகம் மூடர்களால் நொடியில் அழிக்கப்படுவது  கொடுமை. பாரததிருநாட்டின் கலையை, சிற்பங்களை அழித்த அந்நிய படையெடுப்பாளர்கள் கண்முன் வந்து மூடனத்தோடு நிற்கிறார்கள். வேதத்தை அழித்து, சுவையை அழித்து, கலையை அழித்து அவர்கள் இந்த மண்ணில் நிலை நிறுத்துவது என்ன? பலிக்கொள்ளும் பசுவின் தலை மட்டுமா?     கண்டஹார் புத்தர் சிலைகளை உடைத்த தாலிபன்களை நினைக்கும்போது காம்யகன் என்பவன் வெறும் கதை மாந்தர்தானா என்ற கேள்வி எழுகிறது.   

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.

அலையுலகு

http://www.jeyamohan.in/78979

ஜெயமோகன் அவர்களுக்கு

இன்றய பதிவு ஒவ்வொரு வென்முரசு புத்தகத்தில் வரும் உச்ச பட்ச பதிவில் ஒன்று. தொடர்ந்து படிப்பதால் இப்படி என்னமா என்று தெரியவில்லை ஒரு உச்சத்தை அடுத்து வருவது தாண்டி தாவி செல்கிறது.

அப்பா இந்த பதிவு என்ன அர்ஜுனனையே சொல்லி முடித்ததை போல.

ஒரு கணம், அதனால் அல்லவா வில் ஏந்தியவர் எல்லாம் எதிர்க்க முடியாமல் வீழ்ந்தார்கள்.
விழுபவர்களை எல்லாம் நண்பர்கள் அல்லாது பற்றுபவர்கள் யார்.

தழுவி மல்யுத்தம் செய்வதை அண்ணனிடம் அறிந்தானோ. அங்கும் ஒரே கணம்.

கண்களின் ஒளியினால் அடைந்த வெப்பம், இது என்ன அக்பர் பீர்பல் கதையின், அரண்மனை விளக்கின் வெம்மையில் இரவை யமுனை கழுத்தளவு பாய கடந்ததாய் இருக்கின்றது.

பளிங்கில் ஒற்றை கொன்றை - ரொம்ப காலம் நினைவை இது தப்பாது

தன்னுள் தடைகளே இல்லாது ஒளியின் உலகிலும் விழைவே உருவாக செல்கிறான்.

இந்த அத்தியாயத்தில் எத்தனை உவமை.
நாக உடல்கள், ஒற்றை இலக்கு.. ஒரே ஒருவன் சென்றடையும் இலக்கு. 
தாமரை இதழ்கள் மலர அம்பென செல்பவனை உள்வாங்கும் இலக்கு.
'அதை அணுகி “இங்குளேன்” என்றான்'  ' - இந்த வரி என்ன அழகான உவமை

இன்று பொழுது போகும் இடம் எல்லாம் இந்த ஏழு உலக நாகங்கள் தான்... 

மிதித்து ஏறி செல்பவை, எத்தனை சேர்ந்து சுற்றி சுற்றி தள்ளுபவை, எத்தனை பின்னி பிணைந்து நுல் இடை விடாதவை, எத்தனையை நெருப்பு கண்களுடன், எத்தனை பொன் உடலோடு, வெள்ளை பெரிய உடல்லோடு.. என்றேனும் சில ஒளியான உடலோடு 

அர்ஜுனனின் வைர விழிகள் - அதை கேட்க ஒரு கணம் தயக்கமாக இருக்கிறது.

நன்றி
வெ. ராகவ்