Sunday, November 30, 2014

இது ஒரு தரிசனமா?
மழைப்பாடலில் குந்தி அர்ஜுனனை கருவில் சுமக்கும் போது அவர்கள் சரத்வான் முனிவரின் குகையில் இருப்பார்கள். அந்த அத்தியாயங்களில் ஒரு வரியை படித்தேன். சரியாக இப்போது தேடி கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் அது உருவாக்கிய கற்பனைகள் நான் சிந்தித்திடாத கோனத்தை எனக்கு திறந்துவிட்டது.

அந்த வரி கிட்டதட்ட இப்படி இருக்கும். 'குளிருக்காக அனகை விரகுகளில் தீ மூட்டினால். நெருப்பு குஞ்சு அதில் முளைத்து எழுந்து படர்ந்தது.' இந்த வரி தீ என்பது ஒரு உயிர் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.

தீ ஒரு உயிரா? தீ தகிக்கிறது, அசைகிறது, வண்ணங்களை காட்டுகிறது, ஓசை எழுப்புகிறது. அதன் உணவை தேடி பிடித்து பற்றி எரிகிறது. வேறேன்ன வேண்டும் ஒன்றை உயிரென சொல்ல? அந்த உயிர் எப்படி பிறக்கிறது. காட்டு தீ எப்படி முளைக்கிறது? யார் மூட்டுகிறார்கள் காட்டு தீயை. இரு மரங்கள் உராய்ந்து தீ பிறக்கிறது. அப்போது அங்கு பிறந்த முதல் நெருப்பு துளி இருமரங்களின் உராய்வினால் விளைந்த விளைவு.

பிறந்த அந்த துளி தீ படர்வது மரமும் தீயும் சேர்ந்தால் நடக்கும் விளைவு. விளைவுகளாலேயே ஒரு உயிர் பிறந்து இயங்குகிறது. அந்த விளைவுகள் நடக்காமல் போனால் அந்த உயிர் மறைகிறது. இறந்த அந்த தீ எங்கு செல்கிறது? எங்கு செல்ல வேண்டும்? அது விளைவின் வெளிப்பாடே. விளைவுகள் முடிந்தால் மறைகிறது. 

ஏன் உயிர் ஒரு விளைவாய் இருக்க கூடாது. ஏன் அது குறிப்பிட்ட இரு பொருள்கள் சேரும் போது எழும் வெளிப்பாடாக இருக்ககூடாது. அதை வெளிப்படுத்தும் மூலம் இருக்கும் வரை அது வாழ்கிறது அதன் பின் அது இறக்கிறது. அதற்கு மறுப்பிறப்பு என்று ஏன் ஒன்று இருக்கவேண்டும்.

இப்படியாக கற்பனை ஓடியது. பின் வண்ணக்கடல் படிக்கும் போது அதன் 48வது அத்தியாயத்தில் வைசேடிக மெய்யியல் பற்றிய விவாதத்தில் இப்படி வருகிறது,

“ஆனால் உயிர்?” என்று இருளுக்குள் எவரோ கேட்டனர். “உயிரென்பது ஒரு அறிதலே. வெற்றிலையும் சுண்ணமும் பாக்கும் கலந்து செந்நிறம் பிறப்பதுபோல இப்பருப்பொருட்களின் கூட்டால் உயிர் பிறக்கிறது. வெற்றிலைச்சாற்றை உமிழ்ந்து அது வெயிலில் காய்ந்தால் அச்செந்நிறம் எங்கே செல்கிறது? அது பிறிதொன்றாக மாறிவிடுகிறது. உயிரென்பது உடலின் ஒரு நிலை. இன்னொரு உடலின் அறிதல். உயிர் என்றால் என்ன என்று நான் கேட்டேனென்றால் நீங்கள் சொல்லும் அனைத்து விடைகளும் உயிரை இன்னொரு உயிரான நாம் அறியும் முறைகளைப்பற்றியதாகவே இருக்கும்.”

வைசேடிக மெய்யியலின் இந்த சிறு பகுதியை கற்பனையால் எட்ட முடிந்தது உவகை அளித்தது.

அப்படி என்றால் எனது கற்பனையின் மூலம் நான் அடைந்தது ஒரு தரிசனமா? தரிசனத்தின் சிறு பகுதியா? கதைக்கும் இந்த கற்பனைக்கும் சம்பந்தமே இல்லையே? ஒரு கவித்துவத்துக்காக சொல்லப்பட்ட வரிதானே இது.

ஹரீஷ் கூகுல் குரூப்ஸ் விவாதக்குழுமத்தில் 

கிருஷ்ணனின் தேர்வுபெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,

வணக்கம்.

' நீலத்தில்' பாலகனாக வந்து அவனது எண்ணிறந்த செயல்களால் நம்மை  கிறங்கடித்தானால் என்றால் இதில் இப்பொழுதே அவன்  சேட்டைகளை ஆரம்பித்து விட்டான்.ஐயோ பாவம் விதுரர் மெல்லவும் முடியாமல்,விழுங்கவும் முடியாமல் படும் அவஸ்தை.

 “விதுரரே, இவ்வரசில் சூதரான நீங்கள் இருக்கும் இந்த இடமே உங்களுக்கு எதிரானது. அதை எண்ணிப்புழுங்கும் ஷத்ரியர்களின் அகத்தின் ஆழத்தை உங்களுக்கு எதிராகத் திரட்டுவது என்னைப்போன்ற ஒருவனுக்கு ஓரிரு சொற்களின் பணி மட்டுமே” என்றான் கிருஷ்ணன். “அப்படி உங்களை அழித்தால் உங்கள் மைந்தர்களையும் விட்டுவைக்க மாட்டேன். உங்கள் ஒருதுளிக் குருதிகூட இப்புவியில் எஞ்சவிட மாட்டேன்.”
நடுங்கும் கைகளைக் கூப்பி “ஆம், உன்னால் அதைச் செய்யமுடியும். ஏனென்றால் நீ கம்சனின் மருகனும்கூட” என்றபடி விதுரர் மெல்ல உடல் தளர்ந்தார். “இனி நீ கொண்டுசெல்லப்போகிறாய் அனைத்தையும். என் காலம் முடிந்துவிட்டது. நான் நம்பிய அறமும் நீதியும் முறைமையும் எல்லாம் வெறும் சொற்களாக ஆகிவிட்டன….” என்று தழுதழுத்த குரலில் சொன்னார்."

ஒரு சந்தேகம்,துரியோதனன் தனது குருவான பலராமரின் பொருட்டு எப்படியாவது அஸ்தினபுரி  யின் படைகளைப் பெற்று  ஏகலவ்யனை வெல்ல துடித்து கொண்டு இருக்கும் போது,அதை நன்கு அறிந்த கிருஷ்ணன் ஏன்அவனை விலக்கி,அர்ச்சுனன் தலைமையில் படைகளை கேட்டுப்  பெற்றான்?.அவன் யாதவ குருதியை சேர்ந்தவன் என்பதாலா?.

அன்புடன்,

அ .சேஷகிரி.


அன்புள்ள சேஷகிரி
,

நாவலில் அது தெளிவாகவே உள்ளது. அவன் நாடுவது தன் சொந்த அத்தையின் உதவியை. அதௌ. அவள் மறுக்கமுடியாது என்பதர்காக

மகாபாரதம் முழுக்க கிருஷ்ணன் துரியோதனன் முதல் தேர்வாக இருக்க அர்ஜுனனைத் தேர்வுசெய்வது உள்ளது. அதற்கு தத்துவார்த்தமாக பல விளக்கங்கள் உள்ளன. மாணவனை ஆசிரியன் தேடிவருகிறான், தெய்வம் மனிதனைத் தேடிவருகிறது என்றெல்லாம்

ஜெ

கிருஷ்ணன் எனும் மர்மம்
அன்புள்ள ஜெ

கிருஷ்ணனின் கதாபாத்திரத்தை நாவலிலேயே வரும் சில உவமைகள் வழியாகச் சொல்லிக்கொண்டே செல்கிறீர்கள்

1. ஒருவனல்ல ஒரு கூட்டம்

2. வண்ணாத்தியின் மூட்டையிலிருந்து பலவகையான துணிகளை எடுத்து அணிந்துகொண்ட  பித்தன் போல

3 சீனர்களின் பெட்டி போல ஒன்றுக்குள் இருந்து ஒன்றாக வந்துகொண்டே இருப்பவன்

4  நடுவே எது வந்தாலும் வெட்டிச்செல்லும் வாள்

5  படகில் ஏறிக்கொள்ளும் குரங்கு

6 இருப்பக்கமும் பிடியும் கூர்மையாக இருக்கும் வாள்

7  கருவறைக்குள் இருக்கும் புராதனமான கற்சிலை

முதலில் சாதாரணத் தூதன். பிறகுவேதாந்தி. பிறகு  ராஜதந்திரி, பிறகு சின்னப்பையன். பிறகு மகத்தான போர்வீரன். பிறகுஒடுக்கப்பட்ட மக்களின் தளபதி. பிறகு அனைத்தையும் விலகி நின்று ஆற்றுபவன்..

இத்தனையையும் ஒன்றாகச்சேர்த்தால்தான் கிருஷ்ணன் என்ற enigma வை புரிந்துகொள்ளமுடியும்.

உண்மையில் கிருஷ்ணனின் முரண்பாடுகள் வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு கவிஞர்களால் எழுதிச்சேர்க்கப்பட்டு ஒன்றானவை என்றும் அதனால் அது ஒரே பர்சனலிடி அல்ல என்றும் சொல்வார்கள்

நீங்கள் எப்படி ஒன்றாக ஆக்குகிறீர்கள் என்று பார்க்க ஆவலகா இருக்கிறேன்

பாஸ்கர் 

சுருதைஅன்புள்ள ஜெ,

வெண்முரசில், பாரதத்தின் அனைவருக்கும் தெரிந்த சுருக்கமான கதைவடிவில் இல்லாத பாத்திரங்கள் கொள்ளும் விரிவையும், கதையோட்டத்தில் அவற்றின் பங்களிப்பையும் நாம் முதற்கனலிலிருந்தே கண்டு வருகிறோம். அத்தகைய பாத்திரங்களைப் பற்றி தனியாகவே எழுதலாம். விதுரனின் தாய் சிவையின் பெயரையறிந்தவர்களே மிகக் குறைவு. அவரின் மனைவியைப் பற்றி தெரிந்தவர்கள் எத்தனை பேர் என்று தெரியவில்லை. ஆனால் மழைப்பாடலின் தனிப்புரவி நூலின் மூன்று அத்தியாயங்களும் அவரகளைப் பற்றிய துல்லியமான சித்தரிப்பை நல்கின.

அந்த அத்தியாயங்களில் வரும் இளவிதுரன் தன் மனதிற்கிணைந்த துணைவி அல்ல தனக்கு வாய்த்திருப்பது என்ற எண்ணம் கொண்டவன். அவன் விழைந்தது காவியங்கள் சொல்லும் ஓர் சக்கரவர்த்தினியை. அவன் விரும்பியது போலவே அமைந்தவள் குந்தி. குந்திக்கும் விதுரனுக்கும் உள்ள உறவென்பது காதல் என்றே பல முறை நினைத்திருந்தேன். இதுவரை நடந்த நிகழ்வுகளும் அவ்வண்ணமே காட்டியிருந்தன. ஒருவகையில் அவன் சுருதை என்ற பெயரை மனதில் ஏற்றுவதே அப்பெயர் 'பிருதை' என குந்தியின் பெயரை நினைவுபடுத்துவதால் தான். அதை சத்தியவதி அறிந்துவிடலாகாது என்றும் பதட்டமடைகிறான்.

அவன் சுருதையை ஓர் அடைக்கலம் வந்த ஒரு பெண்ணாக, அவளுக்காக இரங்கி வரும் பாவனையில் தான் அணுகுகிறான். அவர்கள் மண நாள் இரவில் சிவையின் அந்த அழுகை தான் அவனை உலுக்கியிருக்கும். மீண்டும் தான் யாரென்பதையும், தன் இடம் என்ன என்பதையும் அவனுக்கு உணர்த்தியிருக்கும். உண்மையில் அன்று சிவை அழுதது யாருக்காக? அவள் இழந்து விட்டதாகக் கூறுவது எதை?

சுருதையும் சிவையைப் போல ஆகியிருக்க வேண்டியவள் தான். விதுரன் நிச்சயமாக சிவையை எந்த இடத்தில் வைத்திருந்தானோ, அதே இடத்தில் தான் சுருதையையும் வைத்திருப்பான். அதைத் தான் சிவை சொல்லி அரற்றுகிறாள். ஆனால் சுருதை சிவையை அள்ளியெடுத்துச் சென்று உறங்க வைக்கிறாள். சிவை வருவதற்கு முன்பு வரை நாணமும், அச்சமுமாக இருந்தவள் அந்த தருணத்தில் விதுரனின் குடும்பத்தில் விதுரனை விட ஒரு பெரிய ஆளுமையாக உயர்கிறாள். விதுரன் மனதிலிருந்த அந்த காவியப் பெண்ணை ஓர் உலுக்கு உலுக்குகிறாள்.

இந்த இடத்தில் ஜெ, பாண்டு விதுரனுக்குக் கொடுத்த அஸ்வ தத்தம் என்ற வைரத்தைப் பற்றி எழுதுகிறார். சுருதை வரும் நாள் வரையிலும் அவ்வைரத்தை எடுத்துப் பார்க்கும் விதுரன், அதன் பிறகு அவ்வைரம் அங்கு இருக்கிறது என்ற நினைப்பிலேயே மகிழ்கிறான் என்கிறார். அந்த நிகழ்ச்சி வரை அவன் மனதிலிருந்த குந்தி தான் அவ்வைரம். ஆனால் அதன் பிறகு... விதுரன் சுருதையிடம் அவள் மனம் வருந்தும் படி எதுவும் செய்ய மாட்டேன் என வாக்களிப்பதுடன் தனிப்புரவி பகுதி முடிகிறது.

அதன் பிறகு விதுரனின் தனி வாழ்க்கை எங்குமே வரவில்லை. பூநாகத்தின் முதல் அத்தியாயம் வரையிலும் கூட விதுரன் தன் சுய வாழ்வில் ஓர் ஆர்வமற்ற, கடனே என இல்லறத்தில் இருக்கும் ஒருவனாகத் தான் பார்க்கிறோம். ஆனால் விதுரனும் சுருதையும் மனமொத்தவர்களாக வாழ்ந்து வருவதைப் பார்க்கையில் மனது இன்னதென்று அறியாத ஓர் உவகை கொண்டது.

விதுரன் சுருதையைப் பார்த்த உடன் அவளின் நரையை வெட்டி விடச் சொல்கிறான். அவளின் சிரிப்பில் அவளின் இளவயது சுருதையைப் பார்க்கிறான். அவளிடம் அனைத்து அரசியல் சிக்கல்களையும் சொல்லி வழி கேட்கிறான். பேதைப் பெண்ணாக வந்த சுருதை அரசு சூழ்தலில் விதுரனுக்கே யோசனை சொல்லும் விவேகியாக பரிணமித்திருக்கிறாள். அங்கே ராணிக்குரிய விவேகத்துடன் வந்த குந்தி எளிய பேதையாக மாறிவிட்டிருக்கிறாள். முரண்நகை தான்.


விதுரனை அணு அணுவாகப் புரிந்து வைத்திருக்கிறாள் சுருதை. அவனின் குந்தி மீதான தனி பிரியத்தைக் கூட தெரிந்து வைத்திருக்கிறாள். குந்தியின் உத்தரவு ஒன்றை செல்லாக் காசாக மாற்றச் சொல்லும் இடத்தில் விதுரனின் ஓர் அரைக்கண பார்வையிலேயே தான் குந்தியின் மீதுள்ள பொறாமையால் அந்த உபாயத்தைச் சொல்லவில்லை என்கிறாள். அவளுக்குத் தெரிந்தே அந்த நாடகம் நடக்கட்டும் என்று விதுனையும் மலர்ச்சி கொள்ளச் செய்கிறாள்.


ஒரு காவியம் என்று வரும் போது அதில் வரும் பாத்திரங்கள் முழுமை பெற்றிருக்க வேண்டும், சிறிய, மிகச் சிறிய பாத்திரங்கள் கூட. அவ்வகையில் வெண்முரசில் அனைத்து சிறு பாத்திரங்களுக்கும் தெளிவான வருகையும், தெளிவான விடைபெறுதலும் என சரியான முழுமையை அளிக்க ஜெ தவறவில்லை. படகோட்டி நிருதனில் துவங்கி சுருதை வரை ஒவ்வொரு பாத்திரமும் முழுமையானவை. அவற்றை நாயக, நாயகியராக வைது தனிக் கதைகளே எழுதலாம். சுருதை பல வகையிலும் ஓர் சிறந்த பாத்திரம்.

அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம், நெதர்லாந்து

முள்மாலைஅன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

காவியங்களில் பெரும் உருவங்களை நிலைநிறுத்துவதற்கு யானைகளை மாலையாக அணிந்துக்கொண்டு இருக்கும் உருவம் என்று வர்ணிப்பார்கள். இந்த பகுதி பிரயாகை-33 எனக்கு இப்படி தோன்றுகின்றது. யானை அளவுள்ள முள்ளம் பன்றிகளை மாலையாக கோர்த்து அணிந்துக்கொண்டால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது. இந்த பகுதியில் தோன்றும் அனைவரும் எண்ணமுட்கள் சிலிர்த்துக்கொள்ள முட்கள் மட்டும் நீட்டிக்கொண்டு நிற்க அவர்கள் அங்கம் அதில் மறைந்துவிடுகிறது. எண்ணங்கள் எல்லா திசையிலும் கூர் நீட்டிக்காட்டி என்னை திகைக்க வைக்கிறது.

தருமன் மீது விதுரருக்கு எத்தனை கோபம் வந்ததோ அதே அளவு கோபம் உங்கள்மீது எனக்கு வந்தது நேற்று. ஏன்? நேற்று தருமனை நீங்கள் வேண்டும் என்றே சிறுபிள்ளையாக்கி விட்டீர்கள் என்ற கோபம். எனக்கு வந்தகோபம்தான் உங்கள்மீதே உங்களுக்கும் வந்திருக்கும் இல்லை என்றால் அந்த கோபத்தை பதிவு செய்து அதற்கு விடையும் சொல்லி இருக்க மாட்டீர்கள்.

ஒரு பாத்திரத்தை சிறுமையாக்கி பெருமை படுத்தும் அந்த வித்தைதான் கதையாசிரியன் கதைமட்டும் சொல்லவில்லை ஞானத்தையும் சொல்கிறான், நீதியை விளைவிக்க கதை களத்தை பயன்படுத்துகிறான்  என்பதை அறிய வைக்கின்றீர்கள்.  அறிஞனாகவும் இருக்கும் கதையாசிரியன். பாத்திரங்கள் உள்ளத்தில் மட்டும் அல்ல வாசகனின் மனதிலும் நடந்துக்கொண்டு தனக்குள்ளும் நடக்கிறான். 

//“நீ என்ன மூடனாஅரசவையின் முறைமைகளை அறியாதவனா? // என்று விதுரர் ஆரம்பிக்கும் இடத்திலேயே வாசகன் இதயத்தை நடக்க ஆரம்பித்து விட்டீர்கள். காட்டு நாய்க்கு கூட இந்நெறியே உள்ளது என்ற இடத்தில் மலை சரிவில் இறங்கி ஓடும் வண்டியை இழுத்து நிறுத்தியதுபோல் இருந்தது. விதுரனின் பெரும் ஞானமும், பாண்டவரின் சிறுபிள்ளைத்தனமும். கூட மாடுமேய்ப்பவளுக்கு காட்டில் பிறந்த கூட்டம் என்று காட்டி, விதுரனின்  வேதனையும், பரிவும், கலந்து வெளிப்படும் கோபத்தை வாசகர்கள் மனத்தடத்தில் தடவி சுடவைக்கின்றீர்கள். காட்டுநாய் என்ற இந்த இடத்தில் குந்தியின் மீது எழும் வெறுப்பை தன்மீதே தானே துப்பிக்கொள்வதுபோல் வெளிப்படுத்தி உள்ளீர்கள்.   

//அமைச்சரேநான் எந்தையின் அகவிரிவை நம்புகிறேன்சிறுமைகளுக்கு அங்கே இடமில்லை” என்றான் தருமன்.பின்னர் சற்று குரல்தாழ்த்தி “சிறுமைக்கு இடமுள்ள ஒரு நெஞ்சு என் அன்னையுடையதுஅவர் உள்ளம்கோருவதுதான் என்ன என்று நான் எண்ணியிருக்கிறேன்//  இந்த இடத்தில் தருமனின் அகம் நிமிர்ந்து நிற்பதையும், விதுரன் உயரத்திற்கும் அதற்குமேலாக குருகுலத்தின் இளவரசன் என்ற உயரத்திற்கும் அவன் உயர்ந்து நிற்பதையும் அறிய முடிகின்றது. //இந்த அஸ்தினபுரிக்கு அவர்கள் அரசியாக வந்தது அவரது தகுதியால்அல்லஎன் தந்தை பாண்டுவின் தகுதியின்மையால்தான். இந்த மாநகரை முதலில் கண்டதுமே அவருக்குள்சிறுமையும் பெருவிழைவும் ஒருங்கே தோன்றியிருக்கும்.”// இந்த இடத்தில் தருமன் பாத்திரம் எத்தனை பெரிய அகநுட்பம். நேற்று நடந்தது எல்லாம் சிறுபிள்ளைத்தனம் இல்லை, அன்னையின் உள்ளம் என்று காட்டும் இந்த இடத்தில்தான் வாசகனை, பாத்திரங்களை,  உங்களை நீங்களே வென்று செல்கின்றீர்கள் ஜெ.

ஒரு எண்ணம் எத்தனை பெரிய அறிவுரையாக இருந்தாலும் அந்த அறிவுரை நமது அகத்தின் எண்ணமாக ஆகும்வரை அது பயன் விளைவிப்பது இல்லை மாறாக அந்த எண்ணம் வெறும் சொற்களாக காற்றில் மிதந்து கரைந்துப்போகின்றது  என்பதை காட்டுகின்றது விதுரனின் அறிவுரையும், தருமனின் செயலும். மகாபாரதம் முழுவதும் விதுரனின் அறிவுரை வெறும் சொற்களாக ஏன் அகின்றன என்பதை இன்று அறிந்தேன். 
சென்றதுமே அரசரின் கால்களைத் தொடுஅவரைத் தொட்டுக்கொண்டே இருங்கள் மூவரும்… உங்களைத்தொட்டபடி அவரால் உங்களை வெறுக்க இயலாது” என்றார் விதுரர். இங்கு ஒரு உதாரணம் காட்டுகின்றார்.வேழம் மிக எளிதில் சினம் அடங்குவது” என்றார் விதுரர். ஆனால் தருமன் அந்த அறிவுரையை வெறும் சொற்களாகத்தான் வைத்திருந்தான். அந்த சொற்கள் அவன் அகமாகவில்லை. அதன் விளைவு. தருமா,அந்தக்கையைப்பிடி… அவரை நீயே அழைத்துச்செல்” என்று விதுரர் முணுமுணுத்தார்ஆனால் திருதராஷ்டிரர்சினந்த யானையைப்போல உறுமியதைக்கேட்டு தருமன் மீண்டும் பின்னடைந்தான்//
அறிவுரைகள் எளிதில் கிடைக்ககூடியது என்று மனிதன் ஏன் நம்புகின்றான். அதை சொற்களாக மட்டும் வைத்திருப்பதால். அறிவுரைகளை சொற்களாக மாற்றக்கூடியவனுக்கு அறிவுரைகள் எளிதில் கிடைக்க கூடியவை அல்ல மாறாக புதையல்கள்.

சுருதையின் அகநுட்பம் அற்புதம்.  விதுரர் வடதுருவக்காந்தம் என்றால் சுருதை தென்துருவகாந்தம். எப்படி விலக்கினாலும் ஓடி ஒட்டிக்கொள்கிறாள். அன்னை சிவையை விதுரர் அன்னையாக மட்டும் பார்க்க, முதல் இரவு அன்று சுருவை சிவையை குழந்தையாகப்பார்த்து விதுரரை வெல்கிறாள் இல்லை விதுரரின் பாதி என்று காட்டுகிறாள். விதுரன் கற்ற நூல் எல்லாம் அறிவு எப்படி வெளியேறி வெல்கிறது என்பதைக்காட்டுகின்றது. சுருதை கற்ற  சமையல் எல்லாம் அறிவு எப்படி ஒன்றுகூடி சுவையாகிறது என்பதை காட்டுகின்றது.
//“என்ன சிரிப்புகுந்தியை அவமதிக்கும் எதையும் நான் செய்யமாட்டேன் என நினைக்கிறாயா?” என்றார் விதுரர். “அவமதிப்பு என ஏன் எண்ணவேண்டும்அது அவர்கள் அறிந்தே நிகழும் நாடகமாகக் கூட இருக்கலாமே?” என்றாள்சுருதைஅறியாமல் விதுரர் முகம் மலர்ந்தார்அதைக்கண்டு அவள் நகைத்தபடி “இப்போது தயக்கமில்லைஅல்லவா?” என்றாள்//
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். இன்னாருக்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று என்ற வார்த்தைகள் எல்லாம் உண்மையின் கூட்டில் இருந்து வடிக்கப்பட்ட தேன்.

என்னதான் அன்பு, ஒன்றுக்குள் ஒன்று, வலம் இடம் , உயிர் உடல் என்றாலும் ஒன்றை ஒன்று தாங்கள் அணிந்த இருக்கும் எண்ண முள்மாலையால் குத்திக்கொள்வதும், அந்த குத்துக்கு மருந்து தடவுவதும், அந்த குத்திலும் ஒரு சுகம் இருப்பதையும் வாழ்க்கை காட்டிக்கொண்டே இருக்கிறது.

நன்றி
அன்புடன்
ராமராஜன்மாணிக்கவேல்.  

குணச்சித்திரங்கள்அன்பு ஆசிரியருக்கு,
இதுநாள் வரை தங்கள் கருத்துக்களை, கதை மாந்தர்களின் இயல்புகளை படிக்க படிக்க அப்படியே ஏற்று கொண்டு வந்த மனம், தற்பொழுது சிறிது குழம்பி உள்ளது.
தருமன், விதுரர், கண்ணன், பீமன், அர்ஜுனன், முதலான கதாபாத்திரங்களின் மனநிலைகளும், அவர்களின் உணர்ச்சி வெளிப்பாடுகளும் நான் இதுநாள் வரை அறிந்து வந்ததற்கு அப்படியே எதிர்மறையாக இருப்பதை மனம் சற்று உள்வாங்கிக்கொள்ள அச்சப்படுகிறது!
தருமன் என்றுமே அர்ஜுனன் மற்றும் பீமசெனருக்கு தெய்வத்தின் நிலையில் என்றே அறிந்துவந்த மனம், இன்று தருமனின் ஒவ்வொரு கருத்தையும் மறுத்தும் கேலி செய்தும் பேசும் அர்ஜுனன், பீமனின் உருவகம் ஏற்க்கனவே எனது மனதில்   இருக்கும் உருவங்களை தள்ளிவிட சற்று சிரமப்படுகிறது. குந்தி குறித்து கூட பீமன் விமர்சிக்கும் கணமும், அர்ஜுனன் உள்ளிட்ட ஐவருமே என்றுமே குந்திக்கு அருகாமையில் இல்லை என்பதையும் அறிந்து கொள்ளவே மனம் சற்று கவலையுறுகிறது!
உச்சம் என்னவெனில், விதுரரை கண்ணன் தாக்கி பேசுவது! அவ்விதம் பேசாவிடில், விதுரர் வாதம் செய்து கொண்டே இருப்பார் என்று அறிந்தாலும், அவ்விதம் விதுரரை அவமதிக்க கண்ணன் துணிவான் என்று அறிய மனம் ஒப்ப சற்று சிரமப்படுகிறது.
இது, மகாபாரத கதைமாந்தர்கள் குறித்து நாங்கள் அறிந்து வைத்திருக்கும் அளவு மிகக்குறைவு என்பதால், என்று தெளிவாக தெரிந்தாலும், இதுவரை நாங்கள் எங்கள் மனதில் உருவாக்கி வைத்திருக்கும் மகாபாரத கதாபாத்திரங்களை அப்படியே மாற்ற வேண்டி இருப்பதால் என்னை போன்ற சற்று சாதாரண வாசகர்கள் சற்று சிரமப்படுகிறோம்!

ஆனால் செய்து கொண்டிருக்கின்றோம்! மனதில் ஏற்க்கனவே இருக்கும் அத்துணை கதாபாதிரங்களையும் அழித்து விட்டு புதிதாக பதிந்து கொண்டிருக்கின்றோம் தங்கள் எழுத்தின், உருவகத்தின் வாயிலாக! நன்றிகள்!
தாழ்மையுடன்,
சரவணகுமார்.


அன்புள்ள சரவணக்குமார்,

பொதுவாக நாம் மகாபாரதத்தை பக்திச்சொற்பொழிவின் ஒருவகையாக அறிந்திருப்ப்ம்ம். இளமையில் குழந்தைக்கதையாக கேட்டிருப்போம். அந்த மகாபாரதச் சித்தரிப்புக்கும் வியாசனின் சித்தரிப்புக்கும் நிறையவேறுபாடு உண்டு. 

பக்திக்கதைகளிலும் குழந்தைக்கதைகளிலும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நிலையாக இன்னார் இன்னகுணச்சித்திரம் உடையவர் என்ற சித்தரிப்புடன் காட்டியிருப்பார்கள். அது அந்தவகை கூறுமுறைக்கு அவசியமும் கூட. கதாபாத்திரங்களின் பரிணாமத்தை குழந்தைகள் புரிந்துகொள்ள முடியாது. பக்தியின் ஒற்றைப்படையான உணர்ச்சியே சாத்தியம்

வெண்முரசின் மகாபாரதம் அத்தகைய எளிய சித்தரிப்புகளால் ஆனது அல்ல. பெரும்பாலும் வியாசனின் குணச்சித்தரிப்பை அடிப்படையாகக் கொண்டது. இடைச்செருகல்களின் மேலோட்டமான உணர்ச்சிகள், பக்திப்பெருக்கு ஆகியவற்றை தவிர்த்து மூலக்கதையை விரித்தெடுக்கிறது

வியாச மகாபாரதத்தில் பாண்டவர்கள் நடுவே தெளிவான குணச்சித்திர வேறுபாடும் மோதலும் இருந்துகொண்டே இருக்கிறது. பீமனும் அர்ஜுனனும் தர்மனை கொல்வதற்காக வாளுடன் செல்லும் இடங்களும் மிகக்கடுமையான சொற்களால் பேசிக்கொள்வதும் இருக்கிறது. 

அவர்களின் கதாபாத்திரங்கள் பல்வேறு வாழ்க்கை நிகழ்ச்சிகள் வழியாக மெதுவாக பரிணாமம் கொண்டு செல்வனவாகவே வியாசபாரதத்தில் உள்ளன. அந்தப்பரிணாமத்தைச் சித்தரிக்கவே வெண்முரசு முயல்கிறது. அது நாமறிந்த எளிய மகாபாரதச் சித்தரிப்புக்கு மாறாகவே இருக்கும். அந்த மகாபாரதத்தில் இருந்து இங்கே வந்துதான் ஆகவேண்டும்

கிருஷ்ணனின் கதாபாத்திரம் மகாபாரதத்தில் பலமுகங்கள் கொண்டது. வேதாந்தி, ராஜதந்திரி, விளையாட்டு நிறைந்தவன், சூதாடி அத்துடன் குரூரமானவனும் கூட. பல தருணங்கள் மகாபாரதத்தில் உள்ளன. கடும் சொற்கள் பேசுமிடங்கள். கொல்லும் இடங்கள். கொல்வதற்குத் திட்டமிடும் இடங்கள். 

அப்படி அவன் இருப்பதற்கான அரசியல்- உளவியல் பின்னணியை நோக்கித்தான் வெண்முரசு செல்கிறது. அதை நீலத்திலேயே பார்த்திருக்கலாம்.

இத்தனைச் சிக்கலான கதாபாத்திரத்தை கூர்ந்து கவனித்து அதன் முரண்பாடுகளின் ஒருமை வழியாக புரிந்துகொள்வதே நல்ல வாசகனின் வழி. நாமறிந்த எளிய பக்தி - குழந்தைக்கதை சார்ந்த சித்திரத்தைக் கொண்டு ஒப்பிடுவது அல்ல. 

ஜெ

பாண்டவர்களின் மனமாற்றம்அன்புள்ள ஜெமோ,

சகுனியின் மனமாற்றம் குறித்து கிட்டதட்ட மூன்று அத்தியாயங்களில் சொன்னீர்கள்.
ஆனால் நகர் புகும் பாண்டவர்கள் சட்டென்று முறைமை மீறுபவர்களானது பற்றி அதிகம் சொல்லப்படாதது குழப்பம் விளைவிக்கிறது. 
நான் தான் படிக்கும் போது எதாவது விட்டுவிட்டேனா என்று குழப்பம் அடைகிறேன்.

அன்புடன்,
ஜெய்கணேஷ். 

அன்புள்ள ஜெய்கணேஷ்

சகுனி , துரோணர், துருபதன், சிகண்டி, துரியோதனன் போன்றவர்கள் ஓர் ஆளுமையில் இருந்து இறந்து இன்னொன்றாக பிறக்கிறார்கள். அதற்கு உச்சகட்ட trauma தேவையாகிறது

பாண்டவர்கள் அப்படி எந்த பெரிய தலைகீழ் மாறுதல்களையும் அடையவில்லை. அவர்கள் இளைஞர்களாக படிப்படியாக உருவாகி வருகிறார்கள். அக்காலத்தில் இயல்பாக போரில் கடைப்பிடிக்கப்படும் மீறல்களே அவர்களிடம் இருக்கின்றன.

சகுனிக்கு நிகரான மாற்றம் பாண்டவர்களில் இருப்பதாக நீங்கள் நினைக்க நாவலில் முகாந்திரம் இல்லை என்றே நினைக்கிறேன். அர்ஜுனன், தருமன் ஆகியோரில் இருப்பது தங்கள் ஆளுமையை வடிவமைக்கும்பொருட்டு அவர்கள் அடையும் தத்தளிப்பும், சஞ்சலங்களும் , தேடலும் மட்டுமே

அதில் அர்ஜுனனுடைய தத்தளிப்பு மிக விரிவாக பல படிகளாக வந்துகொண்டே இருக்கிறது
ஜெ

மாயக்கறுப்பன்
"ஆனதை செய்வோம்" எனும் போது மூடியிருந்த வாய், யானை கண்ட குழந்தை என நேற்று திறந்து விட்டது - அவன் சொல் கொண்டு உருக்கிய வித்தையை கண்டு. இன்று அந்த வாய் திகைத்து மிரண்டு  மூடி கொண்டது. இது மட்டுமே சாத்தியமாகி இருக்க கூடும் வாழ்ந்தாக வேண்டியே உச்ச வெம்மை தரும் வெடிப்பு. தழல் என பொங்கும் வெறியை சுடர் என காத்து எடுத்து செல்லும் கூர்மை. 

எப்போதும் ஒரு புதிய போர் முறை அல்லது ஒரு கருவியின் கண்டுபிடிப்பு அல்லது strategy தான் வெற்றிகளின் திசைகளை திருப்பி வைத்து காலத்தை கணக்கிடும் மனித புத்தியை திகைக்க வைக்கும் போல. எல்லாம் முதல் வேகத்தில் நடந்து விட வேண்டும். ஒரு அடியில் திருப்பி விட வேண்டும் என்கிற அவனின் வேகம் இன்றைய பகுதியில் தெறித்து வந்தது. ஒவ்வொரு ஆளாக அவனின் முடிவு நோக்கி நகர்த்தி கொண்டு செல்வதை கச்சிதமாக முடித்தீர்கள். அவனுக்கு இந்த மூவர் ஒரு பொருட்டாகவே இருந்து இருக்க வாய்ப்பில்லை என்று தோன்றியது. ஆனால் குருவி வலி புரிந்து கொண்ட மனம் தருமனுக்கு அர்ஜுனனின் உயிர் குறித்து தந்த வாக்கில் நெகிழ்ந்து மிளிர்ந்தது. 

நேற்று, தன் கூட பிறந்தவனின் மகன் என்கிற வாஞ்சையை குந்தியிடம் நிரப்பி காண்பித்த அதே சமயம்,  இந்த வெற்றி தரும் வண்ணங்களில்  தோய வைத்தும் அவள் அமிழ்ந்து போகுமாறு காட்டினீர்கள். அவளுக்கு அவசியம் கூட இந்த "தன்னிறுவதல் ". எவ்வளவு யோசித்து அமர்ந்தவள் இவனின் சொல்லில் இருந்த பாச தேனுக்கு மட்டும் விழுந்து இருக்க மாட்டாள் என தோன்றுகிறது. 

குந்தி அறையை விட்டு வெளியே வந்து மலர்ந்து உட்காரும் போதே பாண்டவர்கள் எனும் குதிரை மேல் அவன் அமர்ந்து விட்டான் bucephalus க்கு கிடைத்த அலெக்சாண்டர் என. குதிரைக்கு கிடைத்த வீரன். வீரனுக்கு கிடைத்த குதிரை. தேரை ஓட்டினாலும் ஆளை ஓட்டினாலும் இனி மேல் ஓட்ட போகும் சாரதி அவன் என தெளிவாகிவிட்டது. இந்த logical பார்வை தாண்டி யோசித்தால், கண்டிப்பாக உள் இருக்கும் ஒரு தன்மை தான் பிணைத்து இருக்கும். அந்த மகரந்தம் தந்த அண்மை தான் குந்தி, தர்மன், பீமன் என எல்லோரில்லும் பரவியது என்று யோசித்து கொள்கிறேன்.  தந்தையிடம் கிடைக்காத ஒரு பாதுகாப்பு உணர்வை இவன் தந்து இருப்பான். கூடவே அதே தந்தை காட்டிய விளையாடல் உலகையும் இவர்களுக்கு காண்பித்து களித்தபடி செல்லும் ஒரு mentor போலவும் இருந்து இருப்பான். அனைவரையும் ஒரு உயர்ந்த இடத்தில வைத்து விட்டு, இயற்கை விதி என அனைவரும் சாயும் போது சோர்ந்து போகும் அலைபாயும் மனம் கொண்ட அர்ஜுனன் இடைவிடாமல் இலக்கு தேடும் அஸ்திர வில் போன்று சற்று கழித்து தான் இவனிடம் சென்று சேர்வான்.சேர்ந்து பிரிந்தும் சேர்வான் எனவும் தோன்றியது. மிக துல்லியமாக personal மற்றும் professional balance செய்தபடி செல்லும் leader முகத்தை இன்று கண்டேன்.

இதுவும் ஒரு நடை தான் உங்களக்கு. அலமலந்து சொல்லி மாளாது கூடும் வானவில் போன்று மெதுவாக சித்திரம் அமைத்து வர்ணிப்பது ஒரு வகை போல [ திரௌபதி ]. கல் சிலை ஆகும் வரை ஒரு கண் கட்டு மயக்கம் என செல்வது வேறு நடை [ கிருஷ்ணன் ]. நாளை என்ன செய்வானோ.... இந்த சூது எனும் கருப்பு நிறைந்த காந்தாரி சாபம் வரை யாதவ குலத்தை இழுத்து செல்லும் மந்திர மாயன். 

லிங்கராஜ் 

Saturday, November 29, 2014

கதாபாத்திரங்கள் - எதிர்வினைஅன்புள்ள ஜெ,

உங்கள் வருகை மகிழ்ச்சியும் நம்பிக்கையும் அளிக்கிறது.

புரிந்து கொள்கிறேன். இதை முன்னரே சொல்லியிருக்கிறீர்கள். முதற்கனலின் பீஷ்மரும் சிகண்டியும் ஒப்பிட்டு கேட்கப்பட்ட கேள்விக்கு. உன்மையில் பீஷ்மரெல்லாம் சிறிதளவே காட்டப்பட்டிருக்கிறது - அம்பையை தூக்கி வரும் போதும், சாந்தனு காட்டில் பீஷ்மரை முதலில் பார்க்கும் போது. அவரின் திறன் பற்றிய பேச்சுக்கள் தான் ஓடி கொண்டிருக்கிறது. 'பாரதவர்ஷத்திலேயே.. அக்னிவேசர், பரசுராமர், சரத்வான், பீஷ்மர்...' என்று. அப்படி என்றால் அவரது பராக்ரமம் எல்லாம் இனிமே தான் காட்டப்படும் என்று புரிந்து கொண்டேன்.

ஒப்பு நோக்க பீஷ்மருக்கு நிகரான துரோணரின் பாத்திரம் முழு திறனையும் காட்டிவிட்டது. இனி அங்கங்கே சிறு சிறு சித்தரிப்புகளை காட்டினாலே போதும். நீர் துளியை சுன்டி உடைத்து அதில் தெறிக்கும் ஒரு சிறு துளியை மீண்டும் உடைப்பது போல.

ஆனால் நான் சொல்லவந்தது அது மட்டுமல்ல. தருமனின் நிலைதடுமாறுகிறது என்றால் அவன் நிலைதடுமாற அவன் அறத்திற்கு என்ன அறைகூவல் விடுக்கப்பட்டது என்று தான் யோசித்து கொண்டிருக்கிறேன். துரியோதன்னுக்கு பீமன் அறைகூவல் விடுக்கிறான். அர்ஜுனனுக்கு கர்ணன். தர்மனுக்கு ஒரு பயம் இருப்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. ஆனால் அந்த பயம் ஏன்? கெளரவர்களிடமா? அதை காட்டுகிறதா வண்ணக்கடல்?

ஓரிடம் உண்டு. பீமனுக்கு விஷம் கொடுக்கப்பட்ட போது. ஆனால் அப்போது கூட தருமனுக்கு பீமன் எங்கே என்று தேடுவதற்கு மேல் தருமனின் மனம் வேறு எந்த எதிர்மறை விஷயங்களையும் எண்ண மறுக்கிறது என்று தான் சொல்லப்பட்டிருந்தது. இல்லை என்றால் இப்படி சொல்லலாம். தருமன் அமைச்சர்களுடனேயே இருக்கிறான் அவனுக்கு பாரதவர்ஷத்தின் பதட்ட நிலை தெரிய வருகிறது. அது அவனில் ஒரு அச்சத்தை உருவாக்குகிறது. ஆனால் தருமனின் அறத்துடன் மோதும் விஷயங்களை அவன் இன்னும் எதிர் கொள்ளவில்லை என்று தான் படுகிறது.

ஒன்று புரிகிறது, பீமன், அர்ஜுனன், துரியோதனன் எல்லாம் அதிரடி திரைப்படங்கள். தருமன், பாண்டு, விசித்திரவீரியன் போன்ற பாத்திரங்கள் கலை படங்கள். கர்ணன் இவை இரண்டும் கலந்தது என்று நினைக்கிறேன். அதிரடி நாயகர்களுக்கான களம் இது. தருமனின் களம் இதுவல்ல.

ஒருவரின் இளமை பருவம் மிக முக்கியமானது. அவனை வடிவமைப்பது. அந்த வகையில் தருமனின் பாத்திரம் விடுபட்டுவிட்டதோ என்று தோன்றியது. ஆனால் பிரச்சனயில்லை, உங்களின் கதை கூறு முறையில் எந்த காலத்தில் இருந்தும் ஒரு ஃப்ளாஷ் பேக் போட்டு எதையும் சொல்லிவிடுவீர்கள். Hyperlink கொடுப்பது போல.

விளக்கதிற்கு நன்றி.
ஹரீஷ்

வெண்முரசு விவாதக்குழுமத்திலிருந்து

ஜெங்கிஸ்கானும் கிருஷ்ணனும்இனிய ஜெயம்,

நான் கேட்டு, வாசித்து அறிந்த பாரதக் கதைகளில்  கிருஷ்ணருக்கும், விதுரருக்குமான உறவு  ஏரிக்கரை மென்காற்று போன்றான ஒன்றாகவே உணர்ந்து வைத்திருந்தேன்.

ஆனால்விடாக் கண்டன் கொடாக் கண்டனாக  இன்றைய கிருஷ்ணர் விதுரர் சந்திப்பு  நேர் எதிராக அமைந்து என்னை கலைத்து அடுக்கி விட்டது.  தீர்க்க சியாமர்  மரணத்தின் போது வரும்  சார்வாகனிடம் கூட  இப்படி  'தன்னிலை; அழியும்  அதிர்ச்சியை  விதுரர் அனுபவிக்கவில்லை. அவ்வகையில்  சார்வாகனிடம் கூட கிருஷ்ணனைக் காட்டிலும் கொஞ்சம் கருணை ஒட்டி இருக்கிறது போல.

கிருஷ்ணன் தான் எதற்க்காக வாழ்கிறோம்  என்பதில் எவ்வளவு தெளிவாக இருக்கிறாரோ அவ்வளவு தெளிவாக தனது எதிராளி எதற்க்காக வாழ்ந்துகொண்டிருக்கிறான்  என்பதிலும் தெளிவாக இருக்கிறார்.

தான் அவமானப் பட்டு , தனது இடம் அழிந்து தனது வம்சமே பூண்டோடு அற்றுப் போனாலும்  அச்தினாபுரியின்  வீழ்ச்சிக்கு எதிராகவே நிற்ப்பேன்  என விதுரர் சொல்லி இருந்தால்?  அப்படி விதுறரால் சொல்ல  முடியாத போதே  அவர் ஒரு 'எளிய மானுட' சட்டகத்திற்குள் விழுந்துவிட்டார்.

இதை எழுதும் இக் கணம் விதுரருக்காக என் அகம் கலங்குகிறது.

திருதுராஸ்த்ரர் ''அரசியின் ஆணை எனில் இது ஹச்தினாபுரியின்  ஆணைதான்'' என்பது  எத்தகு பெருந்தன்மை. அதை கொண்டு விதுரர்  சூழலை ஆசுவாசம் கொள்ள வைக்க முயல்வதும், கிருஷ்ணன் அதையே பீமார்ஜுனர்களுக்கு ம், தனக்குமான  செயல் ஆற்றலாக மாற்றிக் கொள்வதும்  முக்கிய தருணம்.

இரவில் ஒரு போருக்கு தயாராகும் சித்தரம் மிக்க உத்வேகம் அளிக்கும் கற்பனை உலகை ஒன்றை உள்ளுக்குள் உருவாகியது. நதி அலைகளின் சாரலில் அர்ஜுனன் பின்னிருந்து நாமும் நனைவது போல ஒரு வாசிப்பு அனுபவம்.
சிலந்தி வலையில் சிக்கிய வண்ணத்துப் பூச்சி, நீருக்குள் இறங்கும் ஆநிரைகள்போல  என ஒரே சொல்லில்  மொத்த காட்சியையும் மனதிற்குள் தைத்துவிடும் வர்ணனைகள்.

காங்கேயன்  நாணல் கட்டுகளால் படகு செய்து, நதியின் ஆற்றலை வென்று போர் செய்யும் காட்சியைக் காட்டிலும் பல மடங்கு தீவிரம் கூடிய  காட்சி அமைப்பு இது.

அங்குசம் சிறியதுதான் யானை பெரியத்துதான்  ஆனால் அங்குசம் எங்கு தைக்கிறது என்பதே முக்கியம்  என்பது எத்தகு நுட்பமான விஷயம்.

செங்கிஸ் கான் குறித்து அவனது படைகள் குறித்து வாசிக்கையில்  மிக ஆச்சர்யமான தகவல்கள் கிடைத்தன. சீனப் படை வீரர்கள்  கவசம் அணிந்தவர்கள். வலிமையான அம்பும் வில்லும் கொண்டவர்கள் . அவர்களை கானின் படை முறியடித்த விதம் அற்ப்புதம். ஆம் எதிரிகளின் பலத்தையே அவர்களின் பலவீனமாக மாற்றி அமைத்தது கானின் போர்த் தந்திரம்.

கானின் வீரர்கள், ஓடும் குதிரையில் அமர்ந்து  தூரத்தில் துள்ளி செல்லும் சிறிய இலக்கான மர்மட்கள் மீது அம்பு எய்து பயிற்சி செய்கின்றனர்.  சம வெளியின் மாடுகளின் கொம்புகளே வில். சம வெளி மானின் பின்னங்கால் நரம்பே வில்லுக்கான நாண்.  கூர் தீட்டி  சுட்டு வலுவாக்கப்பட்ட எடை குறைந்த  மூங்கில் புல்லே அம்பு.

சீனர்களின் எடை கூடிய அம்பு பயணிக்கும் இலக்கைக் காட்டிலும்  மும்மடங்கு இந்த அம்பு பயணிக்கும். சீனர்களின் வில்லைக் காட்டிலும் மும்மடங்கு எடை குறைந்தது இந்த அம்பு.

சீனர்களின் கவசம் ஒரு தடையே இல்லை. மர்மட் விட பெரிய இலக்கு  கவசம் மறைக்காத அவர்களின் முகம்.
கான் துவம்சம் செய்தார்.

கிருஷ்ணன் படகு அமைப்பது முதல் தாக்கும் இடம் வரை  அத்தனயும்  அற்ப்புதமான திட்டமிடல். மேலும் போரில் புதிய ஆயுதம். இரவில் துல்லியமாக அம்பு எய்யும் அர்ஜுனனின் துணை. கோட்டைக் கதவு திறந்துவிடும் ஸ்வர்ண பாகுவின் சகாயம் என  உள்ளங்கை வேர்வை பூக்கும் பரபரப்பு அத்யாயம். அத்தனைக்கும் மேல் அது கிருஷ்ணன் தனது  உள்ளங்கை போல தெரிந்து வைத்த்ருக்கும் நிலம்.  

உலகப் போர் குறித்து  ரமணரின் பதில் நாமனைவரும் அறிந்ததே  முதன் முதலாக அதை வாசிக்கையில்  உலகின் ஈவு இரக்கம் ஏதுமற்ற ஒரே மானுட உயிர் இவர் தான் என்று எண்ணினேன். ஆனால் நீண்ட நெடிய வாழ்வு வாசிப்பு அனுபவங்களுக்குப் பிறகு  புகை மூட்டத்திர்க்குப் பின் இலங்கும் காட்சிபோல சில விஷயங்கள் புரிகிறது.

மாற்றம் யாவும் வளர் சிதை மாற்றமே.  இயற்கையின் பேராற்றலின் முகங்களில் ஒன்று  வளர்ச்சியின் பக்கமும், ஒன்று சிதைவின் பக்கமும் நிற்கிறது, 

நாடற்ற அகதிகளின் ஆண்டாண்டுகால அலைக்கழிப்பின், துயரத்தின் கண்ணீர்த்துளிகளில் இருந்து பிறந்து வந்தவன் நான் என்கிறார் கிருஷ்ணன்.

இந்த செடி துளிர்க்க வேண்டும் எனில், முந்தய வனம் மொத்தமாக எரிந்து அவிந்து அடங்கினாலும் சரிதான் என்று தோன்றுகிறது.

கடலூர் சீனு