Wednesday, February 28, 2018

கர்ணன்
ஜெ, 

வேள்விச்சாலையில் கர்ணன் எழுந்து நின்றபோது மீண்டும் ஒரு பெரிய துயரத்தை அடைந்தேன். எத்தனை மேடைகளில் மீண்டும் மீண்டும் அப்படிச் சென்று நின்று இரந்து மன்றாடிக்கொண்டிருக்கிறான். ஓர் அடையாளத்துக்காக மட்டும். மகாபாரதத்திலேயே மிகப்பெரிய பரிதாபம் கர்ணனின் இந்தநிலைதான். அவனுடைய பெரிய உருவமும் கம்பீரமும்கூட இந்நிலையைச் சுட்டிக்காட்டவே என்று தோன்றுகிறது

ராஜ்

வெய்யோன்ஜெ

என்பிலதனை வெயில்போலக் காயுமே
அன்பிலதனை அறம்

என்ற குறளை ஒருவர் எடுத்து சொல்லியிருந்தார். அதை வாசித்தபோதுதான் கர்ணன் சூரியன் மகன், அவனை புழுவாகத் துடிக்கவைப்பது அந்த ஞாபகம்தான் என நினைத்தேன். கர்ணனை அவ்வாறு எரிப்பது சூரியவெயில்தான்


சுகுமார்

கர்ணனின் மீட்புஜெ

வெண்முரசின் இப்பகுதிகளிலெல்லாம் கர்ணன் மிகமிகப் பலவீனமானவனாகத்தான் இருக்கிறான். அவனுக்குச் சமத்காரமாகப் பேசத்தெரியாது. அவன் வீரனே ஒழிய பெரிய ராஜதந்திரி அல்ல. உண்மையிலே மகாபாரதத்தில் வடக்கே உள்ள பிரதிகளில்தான் கர்ணனைப்பற்றிய பாராட்டுக்கள் உள்ளன,. தெற்கே உள்லவற்றில் கர்ணன் கெட்டவன் என்றுதான் இருக்கிறது. நிந்தைக்குரியவனாகிய கர்ணன், தீய உள்ளம் கொண்டவனாகிய கர்ணன் போன்ற அடைமொழிகள் ஏராளமாக வருகின்றன. 


இந்நாவலே கூட வஞ்சம் வந்தால்தான் அவனிடம் நிமிர்வும் வீரமும் வெளிப்படுகிறது என்று சொல்கிறது. அவன் எங்கே நிமிர்ந்து எப்படி பெரும்புகழுக்குரியவனாக மடிகிறான் என்பதை மகாபாரதம் பெரிதாகச் சொல்லவில்லை. பிற்காலத்து வந்த கதைகளில் அவன் கொடையாளி என்பது நிறைய ஏற்றப்பட்டு அவனை தூக்கியிருக்கிறார்கள். மகாபாரத மூலங்களில் கர்ணன் பெரிய கொடையாளி என்று எங்கும் சொல்லப்படவில்லை. கர்ணனின் மீட்சி எப்படி நடக்கும் என ஆவலாகக் காத்திருக்கிறேன்


சாரங்கன்

மனம் செல்லும் திசைஜெ

சுப்ரியையின் மனம் செல்லும் திசைகளை கூர்மையாக பின்தொடர்ந்து புரிந்துகொள்ள முடிகிறது. குழப்பமான சிக்கலான பாதை. எப்போதும் கர்ணன் அருகே அமரும்போது தன்னை குள்ளமாக உணர்ந்து எரிச்சல் அடைபவள் அவள். ஆனால் இப்போது அவன் அருகே அப்படி சின்ன வடிவமாக அமர்வதில் ஆனந்தம் கொள்பவளாக அவள் ஆகிவிட்டாள். அவனை நெருங்க விரும்புகிறாள். ஆனால் அவனை அணுகும்போது அவள் நாவில் இருக்கும் பாம்புதான் பேசுகிறது. அது என்னைப்பார், என்னிடம் இன்னும் கூர்ந்துபார் என்ற வீம்புதான். ஆனால் அந்தச்சொல் தான் வெளியே வருகிறது. அதுதான் அவளுடைய இயல்பாக இருக்கிறது. அதை எவரும் எதுவும் செய்துவிடமுடியாது என அவளுக்கே தெரிந்திருக்கிறது


மகேஷ்  

துரியோதன தர்க்கம் (குருதிச்சாரல் -69)


    

ஒருவர் நம்மிடம் வந்து அதோ பார் ஒரு கொடிய விலங்கு என்று ஒரு கைவிளக்கொளியை பாய்ச்சிக்  காட்டுகிறார்.   குருதி தோய்ந்த  கூரிய உறுதி மிக்க இரு தந்தங்கள் போன்றவை நம் கண்ணில் படுகிறது. உடனே கொன்றுவிடு என்கிறார். ஈட்டி ஒன்றை எறிந்து கொல்கிறோம். ஆனல் அதிக  வெளிச்சம்வந்து முழுமையாக பார்க்கும்போது அது சிறு குழந்தைகளுக்கெல்லாம் அன்னையென பால் சுரந்தளிக்கும் பசுவென்று தெரிகிறது. சிவப்புவண்ணம் பூசப்பட்ட அதன் கொம்புகளைத்தான் நாம் அந்த குறை ஒளியில்  பார்த்தது.  எப்படி இந்தத் தவறு நேர்ந்தது. நாம் பார்த்தது  ஆபத்தான இரு கொம்புகளை.  நமக்கு காட்டியது  பொய்யான காட்சியல்ல. ஆனால் அது முழுமையான காட்சியும் அல்ல.  பகுதி காட்சியின் மூலம் சாதுவான அன்னைப்பசுவை கொடிய விலங்கென அறியும் தவறு நிகழ்கிறது.   இப்படி உண்மையின் ஒரு சிறு பகுதியைக்காட்டுவதன் மூலம் அந்த முழு உண்மைக்கு மாறான ஒன்றை நிறுவும்  தர்க்கத்தை இனி துரியோதன தர்க்கம் என்று  கூறலாம் என நினைக்கிறேன்.   
  
துரியோதனன் கர்ணனிடம் தான் ஷத்திரியப் பேரவையில் குந்தியைப்பற்றி உரைத்த தர்க்கத்தை  மீண்டும் முன் வைக்கிறான். அவன் கூற்றாக வருவது  


“அன்னை என அவர் நடந்துகொள்ளவில்லை. மூன்றாம்குடியில் பிறந்தவர், ஊழ்வழியால் அரசியென்றானதும் அரசநிலைமேல் பெருவிருப்பு கொண்டு அறம் மறந்தார். பெரும்பிழை செய்து பழிகொண்டார். நான் அதை அவையில் சொன்னேன்.” கர்ணன் நடுங்கும் விரல்களை கோத்தான். அவன் உதடுகள் அதிர்ந்துகொண்டிருந்தன. “அங்கரே, நான் கோரியது பாண்டவர்களுக்காகவும்தான். தங்கள் மெய்தந்தை எவரென்று அறிந்துகொள்ளும் உரிமை அவர்களுக்குண்டு. நாளை அவர்கள் அரசர்களென அவையமர்கையில் ஓர் அந்தணர் எழுந்து அவர்களின் குருதி என்ன என்று உசாவினால் எம்மொழி சொல்ல இயலும்?” 
    
அவனுடைய இந்த தர்க்கத்திற்கான பதிலை  இரு விதங்களில் கூறலாம். ஒன்று எல்லாம் அறிந்த வெண்முரசின் வாசகனாக மற்றொன்று ஒரு எளிய அஸ்தினாபுர குடிமகனாக.
  
வாசகனாக நாம் அறிந்தது, பாண்டு குந்தியை வற்புறுத்தி தன் பிள்ளைகளை பெற்றெடுக்கவைத்தான் என்பது. பாண்டு குந்தியின் பாதத்தில் விழுந்து கதறி அழ,  தாய்மை என்ற தெய்வமாக குந்தி உயர்ந்து நின்று அவனுக்கு வரமென அளித்த பிள்ளைகளே பாண்டவர்கள். (கடைசி இரு குழந்தைகளை அவள் மாத்ரியை தாயாக்கி அளிக்கிறாள். )


“பிருதை, நான் உன்னிடம் கேட்கும் அன்பு என்பது ஒரு மைந்தனாக மட்டுமே என்னிடம் வரமுடியும்… என் துணைவியாக வேறெதையும் நீ எனக்கு அளிக்கமுடியாது” என்றான் பாண்டு. குந்தி மாட்டேன் என்பதுபோல தலையை ஆட்டி “அரசே” என ஏதோ சொல்ல வர பாண்டு சட்டென்று குனிந்து அவள் பாதங்களைத் தொட்டான். “கணவனாக நான் ஆணையிடவில்லை பிருதை… வாழ்க்கையில் எதையும் அடையாதவனாக இரக்கிறேன்… இது ஒன்றை எனக்குக்கொடு!” உடைந்து அழுதவளாக குந்தி நிலத்திலமர்ந்து அவன் தலையை தன்மார்பில் அணைத்துக்கொண்டாள்.
    

ஆகையால் ஒரு வெண்முரசின் வாசகனாக நமக்கு  அனைத்து தர்க்கங்களின்படியும் பாண்டவர்கள் பாண்டுவின்   புதல்வர்கள் என்பது உறுதியாகிறது.  இதை ஏற்றுக்கொள்ளவில்லையென்றால் திருதராஷ்டிரன் பாண்டு மற்றும் விதுரனை,  விசித்திரவீரியனின் புதல்வர்கள் என்று சொல்ல முடியாது. மேலும் அதிகமாக,  இவர்கள் பிறப்பதே விசித்திரவீரியனின் இறப்புக்கு பிறகுதான். ஆகவே, விசித்திரவீரியனின் அங்கீகாரம் இல்லாமல் பிறக்கும் இவர்கள் அவனுக்கு புதல்வர்கள் என ஆவதில் உள்ள தர்க்கநியாயம் பாண்டுவின் புதல்வர்கள்தான் பாண்டவர்கள் என்பதைவிட மிக மிகக்  குறைவானதே.  அப்படியானால் துரியோதனன் தன்னை சத்திர்யன் என்று செறுக்குடன் சொல்லித்திரிவது எல்லாம் பொய்யென ஆகிறது. ஆனால் இவ்வாறு திருதராஷ்டிரன் முதலானோர் பிறந்தது யாரும் அறியாத அரச மறைபொருளாக இருந்திருக்கலாம்.  எனவே இது ஒரு சாதாரண அஸ்தினாபுரி குடிமகனுக்கு தெரியாத உண்மையாக இருக்கலாம். 
   

ஆகையால் இப்போது ஒரு அஸ்தினாபுர குடிமகனாக துரியோதனனின் தர்க்கத்தைப் பார்க்கலாம்.  பாண்டு குருதிவழியில் தந்தையாக இயலாதவன் என்பது அனைவரும் அறிந்ததாக இருந்திருக்குமா?  ஏனென்றால் அரச குமாரர்களின் பலவீனங்கள் வெளியில் அப்படி வெளிப்படையாக சொல்லப்பட்டிருக்காது.  ஒருவேளை அப்படியே அனைவரும்  தெரிந்த உண்மை என்றே வைத்துக்கொள்வோம்.   ஒரு நாள் குந்தி தன் கணவன் பாண்டு வனத்தில் மாண்டுவிட்டான். இதோ அவனுடைய ஐந்து பிள்ளைகள் என அஸ்தினாபுரம் நுழைகிறாள்.  அது பாண்டுவின் பிள்ளைகள் என்று அப்போதைய  அஸ்தினாபுரம் மறுசொல் ஏதும் உறைக்காமல் ஏற்றுக்கொள்கிறது.  சத்தியவதி, பீஷ்மர், ஏற்றுக்கொள்கிறார்கள். திருதராஷ்டிரன் பாண்டுவின் மைந்தர்கள் என்று வாரி அனைத்துக்கொகிறான்.  குந்தியின் மீது எப்போதும் ஒவ்வாமையோடு சினம் கொண்டிருக்கும் காந்தார அரசிகள் அவள் கூறுவதை மறுத்து ஒரு சொல் உரைக்கவில்லை. தன் தமக்கை மகன் துரியோதனனின் அரசப் பதவிக்கு  போட்டியாளர்களாக பாண்டவர்கள் மாறுவதற்கான வாய்ப்பிருந்தும் அவனும் ஒரு சொல் ஐயத்தோடு சொல்லவில்லை. அதற்கப்புரம் குடியவை ஒப்புதலோடு  தருமனுக்கு இளவரசுப் பட்டம் வழங்கப்படுகிறது. பின்னர் அவன் இந்திரப்பிரஸ்தத்தில் மன்னாக முடிசூட்டிக்கொள்கிறான்.  அவன் மும்முடிசூடி சத்திராஜித் என்று அமர்ந்து அஸ்வமேத யாகம் செய்கையில் பாரதத்தின் எந்த மன்னர்களும் அவன் பாண்டுவின் உண்மையான புதல்வனா, ஷத்திரியனா என்று கேள்வி எழுப்பவில்லை.  ஆகவே இப்போது துரியோதனன் பாண்டு ஏற்றுக்கொண்டான் என்பதற்கான சாட்சியை அவன் குந்தியிடம் கேட்பதில் என்ன தர்க்கம் இருக்கிறது. அந்தக் கேள்வியை கேட்கையில்  அவன் பீஷ்மர், அவன் தந்தை, தாய், அஸ்தினாபுர குடியவை பாரதத்தின் அனைத்து அரசர்களையும் பொய்யர்களென ஆக்குகிறான். அவன் குந்தியை பழிப்பதோடு அல்லாமல் இவர்கள் அனைவரையும் பழிக்கிறான் என்றுதான் பொருள்.  
  

மற்றொன்று நியோக முறையில் பிறந்த குழந்தையாக இருந்தாலும் அதை தன் பிள்ளை என ஏற்றுக்கொண்ட பிறகு அது எந்த தந்தைக்கு  பிறந்தது என்ற கேள்வி மிகவும் அபத்தமானது. தற்காலத்திலேயே விந்து தானத்தின் வழி பெறப்படும் குழந்தைகளின் உயிரியல் தந்தை யார் என்பது வெளியில் சொல்வது சட்டப்படி தவறென இருக்கிறது. பாண்டு தன் பிள்ளைகள் என ஏற்றுக்கொண்டதை அறிவிக்கும் சாட்சியாக அந்தணர்கள் இருக்கிறார்கள். அவர்கள் சொல்லை அன்றைய அஸ்தினாபுரம் ஏற்றுக்கொண்டிருக்கிறது.   அது ஒற்றர்கள் வழியாக மேலும் உறுதிப்படுத்திக்கொண்டிருக்கும்.  ஆனால் துரியோதனன் அதையெல்லாம் விடுத்து அவர்களின் உயிரியல் தந்தையின் பெயர்களை இப்போது கூறுக எனச் சொல்வது அஸ்தினாபுரத்தை இழிவு செய்வது  அறத்தை இழிவுசெய்வது, இப்படி கீழ்மையாக நடந்துகொள்வதன் மூலமாக அவனையே இழிவுசெய்துகொள்வதாகும்.
    

இப்போது அவன் பூடகமாக் சொல்லவருவது என்னவென்றால் கர்ணன் குந்தியின் மகன், குந்தி அதை வெளிபடையாக ஒத்துக்கொள்ளட்டும் அப்படி ஒத்துக்கொண்டால் கர்ணன் பாண்டவர்களுக்கு மூத்தவன் என ஆகிவிடுவான். அத்தகைய நிலையில் நான் கர்ணனுக்கு முடிசூட்டி அவனை மன்னனாக்குவேன் என்பதுதான். ஆனால் இதில் உள்ள தர்க்கப்பிழை என்னவென்றால் தருமனுக்கு முடியுரிமை குந்தியின் மகன் என்பதால் வருவதல்ல. பாண்டு அவனை மகனென ஏற்றுக்கொண்டதால் வருவது. ஆகவே கர்ணன்,  குந்தியின் தருமன் முதலான ஐந்து புதல்வர்களுக்கு அண்ணன் ஆவானே தவிர பாண்டுவின் மூத்த புதல்வன் என ஆகமாட்டான். ஆகவே அஸ்தினாபுர முடியுரிமையை அப்படி கர்ணனிடம் கொடுத்துவிட முடியாது.   
    

துரியோதனன் பாண்டவர்கள் பாண்டுவின் குருதி வழி பிறக்கவில்ல. அதை  பாண்டு வந்து நேரில் சொல்லவில்லை எனக் கூறுவது ஒரு சிறு பகுதி உண்மையை  கூறி முழு உண்மையை பொய்யென ஆக்குவதாகும். 


தண்டபாணி துரைவேல்

Tuesday, February 27, 2018

ஜீவபாலாயனம்ஜெ,

இன்றைய அத்தியாயத்தில் வந்த ஒரு வரி என்னை மீண்டும் வெளியே கொண்டுசென்றது. ஒரு கதையிலிருந்து வெளியே கொண்டுசெல்லும் வரி அந்தக்கதையின் வெவ்வேறு தளங்களை நமக்கு கொஞ்சம் கடந்தால் சுட்டிக்காட்டுகிறது. பாறை உப்பையும் அனலையும் உள்ளே கொண்டிருப்பதுபோல உடல் உயிரையும் உள்ளத்தையும் தன்னிடம் பிடித்து வைத்திருக்கும் ஆற்றல்கொண்டிருக்கிறது. அத்திறனை உடல் கைவிடுகையில் உயிரும் உள்ளமும் எழுந்து அலையத் தொடங்குகின்றன. அவற்றுக்கு காலமும் இடமும் இல்லை. இந்தவரி இனிமேல் மனம்சிதறிப்போய் அமர்ந்திருப்பவர்களைப் பார்க்கும்போதெல்லாம் ஞாபகம் வரும் என நினைக்கிறேன்.


அருண்.ஆர் 

இரட்டைநிலைஜெ

சுதர்சனை சுப்ரியை இருவரின் மனநிலையையும் புரிந்துகொள்ள சிக்கலாக உள்ளது. உள்ளே சென்று பார்க்கவேண்டியிருக்கிறது. சுதர்சனைக்கு துரியோதனனை மேல்மனதிலே பிடித்திருக்கிறது. உள்ளூர வெறுக்கிறாள். சுதர்சனைக்கு கர்ணனை மேல்மனதிலே கொஞ்சமும் பிடிக்கவில்லை.ஆழ்மனதிலே விரும்புகிறாள். காதலே இருக்கிறது. இந்த இரட்டைநிலையால் இரண்டுபேருமே மனம் சிதறி இருக்கிறர்கள்.


மகேஷ் 

கலியின் வடிவம்ஜெ

முயங்கும்போது துரியோதனனின் நிழலாக சுதர்சனை கண்டது கலியின் வடிவம்தானே? புஷ்கரன் தன்னை அந்தக்காளையுருவிடம்தான் ஒப்படைக்கிறான். செத்துப்போன காளைவடிவம் எழுந்து வந்ததுபோல வந்து அந்தத் தெய்வம் அவனை ஆட்கொள்கிறது.

சுதர்சனை துரியோதனனை ஆழமாக அறிந்துவிட்டாள் என்ற எண்ணம் ஏற்பட்டது. நிழல் என்பது உண்மை அல்ல. ஆனால் உண்மையின் ஒரு தோற்றம் அது. அவன் கலிவடிவம் கொண்டவன்தான். அவனிடமிருந்து தப்பி அவள் மாளவம் போன்ற நகர்களிலெல்லாம் அலைந்துகொண்டிருக்கிறாள்


மனோகரன்

வெயில்ஜெ

என்பிலனதை வெயில்போலக் காயுமே
அன்பிலதனை அறம்

என்ற வள்ளுவர் வரியைத்தான் குண்டாசி, கர்ணன் இருவரின் நிலையையும் எண்ணும்போதும் நினைத்துக்கொண்டேன். புழுப்போலத் துடிக்கிறார்கள். அறம்பிறழ்ந்தவர்களை அது துடிக்கவைக்கும். கர்ணன் இப்போது துடிக்கிறான். குண்டாசி முன்னரே துடித்துவிட்டான். துரியோதனன் துடிக்கப்போகிறான்

குண்டாசிக்கும் கர்ணனுக்கும் நிகழும் பழைய உரையாடல்களை பிரயாகை நாவலில் எடுத்துப்பார்த்தேன். ஆரம்பம் முதலே அவர்களின் உறவின் இந்த நுட்பம் சொல்லப்பட்டிருக்கிறது, நாம்தான் கவனிக்கவில்லை என நினைத்துக்கொண்டேன்


எம்.சந்தானகிருஷ்ணன்

பிரேமை


ஜெ

மெல்லமெல்ல சுப்ரியையில் உருவாகி வரும் பிரேமபாவம் மனநிறைவை அளிக்கிறது. அவள் அந்தச்சிறிய அறைக்குள் முடங்கிக்கிடக்கும் வரை வெறுப்பும் அகந்தையும் கொண்டிருக்கிறாள். அங்கிருந்து அவள் மெல்லமெல்ல பறந்து எழுகிறாள். அதுதான் படகில் அவள் அடைந்த அந்தத் தியானநிலை என நினைக்கிறேன். அவள் மெதுவாக வளர்ந்து வளர்ந்துசெல்வதைக்காண நிறைவாக இருக்கிறது. அவள் எப்படியாவது கர்ணனைச் சென்று அடைந்துவிடவேண்டுமே என ஆர்வமாக இருக்கிறது. ஒவ்வொன்றையும் அவள் எப்படிப்புரிந்துகொள்கிறாள் என்பதை வைத்து அவளுடைய மோகம் கூடிக்கூடி வருவதைக்காணமுடிகிறது. அவள் மீட்பு கொள்ளவேண்டும் என ஆசைப்படுகிறேன்


எம்

Monday, February 26, 2018

புல்லின் வஞ்சம்ஜெ

இன்றுதான் நீலம் வாசித்து முடித்தேன். இந்நாவலை வாங்கி ஓராண்டாகிறது. வாசிக்க ஆரம்பித்து ஆறுமாதம். பலதடவைகளிலாக வாசித்துக்கொண்டே இருக்கிறேன். திரும்பத்திரும்பச் சில இடங்களை வாசிக்கிறேன். இந்த நாவலின் பெரிய சவால் இதன் மொழி. மயக்கி கொண்டுசெல்கிறது.செய்யுள்போல இசைபோல ஒலிக்கிறது. ஆனால் அதை நீக்கி சென்றால்தான் அடுத்தகட்டக் குறியீடுகளைச் சென்றடையமுடியும். உதாரணமாக திருணவிரதனின் கதை. அதைப்புரிந்துகொள்ள முடியவில்லை. ஏதோ ஒரு பொருந்தாக் கதை என நினைத்தேன். ஆனால் ஒருமுறை திருணம் என்றால்புல். யாதவரின் வாழ்க்கையே புல்தான். அந்த புல் ஏன் கிருஷ்ணனுக்கு எதிரியாக வந்தது? ஏன் கிருஷ்ணன் அதை அடக்கினான்? என்று சிந்தித்தபோது எல்லாமே புரிவதுபோலிருந்தது. நீலத்தை வாசிக்க ஓராண்டாவது ஆகும். நானெல்லாம் வெண்முரசை முடிக்க இன்னும் பத்து ஆண்டுகளாகும்


லக்ஷ்மிநாராயணன்

முதற்கணம்
என்று சுப்ரியையிடம் சொல்லும் சூக்‌ஷ்மை அதன்பின்னர் இயல்பாக உங்கள் உடன்பிறந்தவரை சந்தித்தீர்களா, அரசி?” என்று கேட்கிறாள். இந்த இரண்டு வரிகளுக்கும் இடையே உள்ள இடைவெளி, அவள் என்ன உத்தேசிக்கிறாள் என்பது இன்றைக்கு அவள் தன் ச்கோதரியைச் சந்திக்கும் இடத்தை வாசிக்கையில்தான் புரிந்தது. 

வெண்முரசை நூலாக வாசித்தால் சட்டென்று அதற்குள் சென்றுவிடுவோம். நாள்தோறும் வாசித்தால் அவ்வப்போது இந்த குறிப்புகள் ஞாபகம் வரவில்லை என்றால் தவறிவிடுகிறது


ராஜசேகர்

வெண்முரசின் உவமைவெண்முரசின் உவமைகளைத் தவறவிடக்கூடாது என எப்போதுமே நினைப்பேன். வாசித்தபின் உவமைகள், அரிய வரிகளை தனியாக எடுத்துவைப்பேன். கிளாஸிக் பாணி நாவல் என்பதனால் இவை அழகியல்ரீதியாக அதற்குள் பொருந்துகின்றன. அவை ஆசிரியர்கூற்றாக எங்குமே வருவதில்லை. பெரும்பாலும் அந்தந்தக் கதாபாத்திரங்களின் மனமாக வருகின்றன. அல்லது அந்தக்கதாபாத்திரங்கள் நினைவுகூரும் சூதர்களின் வரிகள். ஒரு பெருங்காவியம் உருவான வாழ்க்கைச்சூழல் என்றால் கண்டிப்பாக இந்தவகையான கவித்துவம் அங்கே இருந்திருக்கும் என ஊகிக்கலாம்

ஆனால் இந்த வரிகள் எதுவும் பொதுவான மேற்கோள்களாக இல்லை. மேற்கோள்களாக அவற்றை காட்டமுடியும். ஆனால் அந்தச்சந்தர்ப்பத்தில் பொருத்தி அங்கே மேலும் மேலும் வாசிப்பதற்காகவே அந்த வரிகள் உதவிசெய்கின்றன. அனல்கொண்டு பழுத்த இரும்பு காரிரும்பிலிருந்து ஒளியால், நெகிழ்வால், வெம்மையால் வேறுபடுகிறது. அது உருமாற விழைகிறது. ஏனெனில் கலத்தில் நீர் என அதில் அனல் நிறைந்துள்ளது.அஸ்தினபுரியில் வேதம் வந்து நிரைவதைச் சொல்லும் வரி இது. இந்த ஒரு வரி அஸ்தினபுரி எப்படி இருந்தது என்பதைக் காட்டிவிடுகிறது. நீரில் தீ வெப்பமாக நிறைவதுபோல அஸ்தினபுரிக்குள் வேதம் நிறைந்திருந்தது என்பதை எண்ணிக்கொண்டே இருந்தேன்

அந்த வரியையும் வைரத்தில் ஒளிபுகுவதுபோல என்ற வரியையும் இணைத்துக்கொண்டபோது வேறு ஒரு பார்வை உருவாகி வந்தது


சாந்தகுமார்

சுதர்சனையின் பாதைஜெ

சுதர்சனையும் சுப்ரியையைப்போலவே ஆழமான ஒரு பயணத்தில் இருக்கிறாள். அவள் சென்ற வழியில்தான் இவளும் சென்றுகொண்டிருக்கிறாள். அவள் ‘மனம் கலங்கி’ இருக்கிறாள். இவள் வேறுவகையிலே இருக்கிறாள். இருவரும் ஒரே இடத்தில் மாளவத்தில் கருகுமணி காதணிகள் போடுவதில் சென்று தொட்டுக்கொள்கிறார்கள். அந்த மர்மத்தை நம்மால் புரிந்துகொள்ளமுடியாது. ஆனால் நான் கௌன்சிலிங் வேலையை இருபது வருடம் செய்துவந்தவள். இதை நான் உணர்ந்திருக்கிறேன். நம்மைப்போலவே அவர்களின் மனமும் செல்வதை நாம் எங்கேயாவது உனரும் போது ஒரு பெரிய மன அதிர்ச்சி ஏற்பட்டு திகைப்பு அடைவோம். சுதர்சனை சுதரசனையின் இன்னொரு வடிவம் என நினைக்கிறேன்


எஸ் 

யவனிகைஜெ

யவனபாணி மாளிகைகளைப்பற்றி வரும் வர்ணனை சுப்ரியையின் பராக்குபார்க்கும் மனநிலை, அவளுடைய சுதந்திர விருப்பம், அவள் நிறைய தெரிந்துவைத்திருப்பது என்பதுபோல பல விஷயங்களைச் சுட்டிக்காட்டியது. ஆனாலும் அந்தப்பகுதியை தனியாக வாசிக்கமுடிந்தது. பண்டையகிரேக்கக் கட்டிடக்கலை சிற்பிகள் வழியாக இந்தியாவுக்கு வந்திருக்கலாம் என்னும் ஊகம் ஆழமானது. அதை இங்கே இவர்கள் மரத்திலே செய்கிரார்கள். அதிலும் யவனிகை என்பது யவனர்களிடமிருந்து வந்ததனால் அந்தப்பெயர் பெற்றது என்ற இடம் ஒரு திறப்பை ஏர்படுத்தியது


செல்வராஜ்

Sunday, February 25, 2018

அணியோசை

தன் உடலில் இருந்து எழுந்த அணியோசையை வேறு எவரோ தன்னைத் தொடரும் ஓசை என அவள் உணர்ந்தாள்சுப்ரியையின் உள்ளத்தை சொல்லும் அரிய வரி இது என நினைத்தேன். பெண்களுக்கு இது தெரியும். கனவில் இந்த நகைகுலுங்கும் ஓசை கேட்கும். நம் நகைகள்தான். ஆனால் வேறு எவருடைய நகையோ போல ஒலிக்கும். அது ஒரு பெரிய பதற்றம். நாம் இன்னொருவராக மாறியிருப்பதுபோல. சுப்ரியையைத் தொடர்வது அந்த அரசி என்ற கோலம்தான். அவள் வெளியே வந்துவிட்டாலும் அது அவளுக்குப்பின்னால் வந்தபடியே இருக்கிறது. ஆடியை நோக்கும்படி அணிச்சேடியர் சொல்கிறார்கள். அவள் பார்க்கிராள். ஆனால் மனம் அதில் லயிக்கவே இல்லை. அவள் வெளியே செல்ல விரும்புவது அவள் இருந்துகொண்டிருக்கும் இந்தத் தோற்றத்திலிருந்துதான்


மல்லி

சுப்ரியை மீண்டு எழுவதுசபரி இறப்பதும் சுப்ரியை மீண்டு எழுவதும் ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்பட்டுள்ளது. சபரி கனவில் ஒர் ஆழத்திற்குள் இருக்கிறாள். அங்கே அவள் சுப்ரியையை அழைத்துக்கொண்டே இருக்கிறாள். அதேபோல நங்கூரம் பற்றிய உவமை. நீருக்கு நிலையில்லை. திடமான வடிவமும் இல்லை. ஆனால் அதைப்பற்றிக்கொண்டு பெரிய கப்பல்கள் நின்றுவிடுகின்றன. அதிலிருந்து விடுபடுவது மிகமிக எளியது. சற்றுத்திருப்பினாலே போதும். அப்படி நங்கூரத்தை சுப்ரியை எடுத்துவிட்டிருக்கிறாள். அவள் விடுதலையை அடைந்துவிட்டாள். அதன்பின்னர்தான் அவள் கர்ணனைப் புதிய கண்களுடன் பார்க்க ஆரம்பிக்கிறாள் என நினைக்கிறேன்


மகாதேவன்

உருகுபவன்ஓசையின்றி ஒருவர் அழக்காண்பதைப்போல நெஞ்சுருக்குவது பிறிதில்லை. ஓசை பிறருக்கான அழைப்பு, பகிர்வு. ஓசையின்றி அழுபவர் தன்னைச் சூழ்ந்திருக்கும் காற்றுவெளியை திரையென்றாக்கி ஒளிந்துகொள்பவர். அனல் எரிய உருகும் அரக்குப்பாவை எனத் தோன்றினான் கர்ண – என்றவரி அளித்த மனச்சோர்வு மிகுதி. என்னால் அதற்குமேல் படிக்கவே முடியவில்லை. மனசாட்சியுள்ள ஒருவனின் துக்கம். அவனால் பாஞ்சாலியை அவமதித்ததை ஏற்கமுடியவில்லை. மலம் தின்றவன்போல உணர்கிறான். அதேபோல துரியோதனனை எதிர்க்கமுடியவில்லை. அவன் முன் மனம் கனிந்துவிடுகிறான். ஆகவே குடிக்கிறான். தன்னைத்தானே அழித்துக்கொள்கிறான்.


அந்த அழுகையை நான் பலமுறை பர்த்திருக்கிரேன் மிகமுக்கியமான திறமைகள் உடையவர்கல் இப்படி தன்னைத்தானே அழித்துக்கொள்வதும் கதறியழுவதும் மிகவும் மனம்கலங்க வைப்பவை. என் அப்பா அழுவதைக் கண்ட ஞாபகம் இருக்கிறது. அப்பா அழ அக்காவும் அம்மாவும் அழ வீடே அழுதுமுடிக்கும். அம்மா ஜெபம் செய்வார்கள். எல்லாமே சரியாகிவிடும் என்று அன்றைக்குத்தோன்றும். மறுநாள் அப்பாவால் அப்படிக்குடிக்காமலிருக்கமுடியாது. அந்தக்காட்சிகளெல்லாமே அந்த அழுகையில் இருந்துமனதிலே நிழலாடின

ஜெ

ஊழெனும் பகடை
புதுவை வெண்முரசு கூடுகையில் தண்டபாணி துரைவேல் உரைபெருவெளி நடனம்


             
அணுவிலும் அண்டத்திலும் அனைவர் அகத்திலும் நிகழ்கிறது அவன் ஓயாப்பெரு நடனம்.

அவன் என்றும் அவள் என்றும் அல்லதென்றும் உள்ளதென்றும் ஆதி அந்தமின்றி ஆடும் அரைப்பெண் அவன்.

வன் ஆட்டத்தால் விரிகின்றது அண்டம், சுடர்கின்றன விண்மீன்கள், உருள்கின்றன கோள்கள், இணைகின்றன அணுக்கள்,  உருக்கொண்டன தனிமங்கள்,  நிலமென்றும் நீரென்றும்   


பிறப்பெடுத்தன ஐம்பூதங்கள்.அவர் முயற்சியினால் திருதராஷ்டிரன் சிறுமை சற்றும் அண்டாத பெரு மனிதராக வளர்ந்திப்பதை பின் வந்த வெண்முரசு  நூல்களில் நாம் காண்கிறோம்.   அவன் எண்ணத்துளிகள் புவியெங்கும் சிதறி உயிர்த்தொகைகளாக பிறந்து வளர்கின்றன. 


தன்னை நாயக நாயகனாக பிரித்து நடுவில் அந்த உயிர்களை காய்களாக்கி பகடையாடுகிறான் பரமன்.     வெல்வதும் வெட்டுப்பட்டு வீழ்வதுமாக தோன்றுவது எல்லாம் உயிர்களுக்கு மட்டுமே.   அவன் கைவழி  பகடைகள் உருள்வதே ஊழென ஆகிறது.  விழைவு, இலக்கு, பாசம், கோபம், பரிவு, வஞ்சம், செருக்கு, அழுக்காறு, சலிப்பு, களிப்பு என்று விழும் பகடை எண்களின் வழி  நிகழ்த்தப்படுகிறது ஆட்டம்.   அந்தப் பரமனின் சிந்தையினால் நகர்த்தப்படும் சிறு காய்மட்டுமே நானென  உணர்பவனாக என்றும்  இருக்க,  ஈசன் அருள்வானாக.


                                                      *******
வெண்முரசின் அடுத்த  நூலான மழைப்பாடல்  நம் முன்னே ஆயிரம் இதழ் தாமரையாக மலர்ந்து ஒளிவீசி நிற்கிறது. அதன் பேரழகின் முன் பித்தாகி சுழலும் வண்டாக நான் இருக்கிறேன்.  அதில் பெருகி ததும்பி நிற்கும்  தேனை எடுத்து  என்னால் முடிந்தவரை  என் சிறிய சிந்தையில்  தேக்கிக்கொள்ள எனக்கு உதவும்படி உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

பரமனின் பகடையாட்டம்


          பரமன் தன் துணைவியோடு ஆடும்  பகடையாட்டம் ஏன் முதலில் இந்நூலுக்கு பாயிரமாக வந்தது என்பதை நான் சிந்தித்துப்பார்க்கிறேன்.  பகடையாட்டத்தில் யாருக்கு எந்தெந்த எண்கள் விழும் என்பது யாராலும் கணிக்க முடியாது.   ஆனால் அப்படி விழும் எண்களே ஆட்டத்தின் போக்கை நிர்ணயிக்கின்றன.  எண் விழுவது ஊழ்,  அதை பயன்படுத்தி காய்களை தேர்ந்தெடுத்து அவற்றை செலுத்தவேண்டிய திசைகளை முடிவு செய்து நகர்த்துவது மதி. இது ஊழும் மதியும் நிகழ்த்தும் முரணியக்கம்.  பகடையில் வரும் எண் பாதிப்பை உண்டாக்கும்போது மதிநுட்பத்தால் அதை சரி செய்ய பார்க்கப்படுகிறது. மதிநுட்பத்தின் ஆதிக்கத்தை ஊழ் கட்டுப்படுத்துகிறது.   


             மழைப்பாடலில் சத்தியவதி பீஷ்மர் விதுரர் சகுனி குந்தி போன்றவர்களின் கூரிய  மதி நுட்பங்களைத்தாண்டி  அவர்கள் நோக்கங்களை எல்லாம ஊழ் என்னும் பகடையால் சிதறடிக்கப்படுவதைக் காணப்போகிறோம்.   அந்தப் பகடையின் எண்களாக விழப்போவது அம்பிகை அம்பாலிகை ஆகியோர் பிள்ளைப்பாசத்தில் கொள்ளும் தன்னலம், குந்தி,  சகுனி ஆகியோரின் அரசியல் பேராவல்கள்.
                       

பரசுராமரும் ஒரு  பகடைக்காயே


          பரசுராமர் ஊழின் இந்த இடைவிடாத விளையாட்டை நிறுத்தப் பார்க்கிறார். ஆனால் அவரே ஊழ் என்ற வலைப்பின்னலில்  ஒரு  கண்ணியாக ஆகும் முரண் ஏற்படுகிறது.   அவர் ஷத்திரியர்களினால் கொல்லப்பட்டவர்களின்  அழுகுரலை கேட்கிறார்.


‘நாங்களெல்லாம் அழியாத கண்ணீர்த்துளிகள்…. மண்ணில் ஷத்ரியர்களின் அநீதியால் வதைக்கப்பட்டவர்களால் உதிர்க்கப்பட்டவர்கள். அவர்களின் அகம் அணையாமல் எங்களுக்கு மீட்பில்லை’ என்றன.  


    
அவர்களின் துயர் துடைக்க சீற்றம்கொண்டு எழுகிறார் பரசுராமர்
குருதிவெறி கொண்ட மழுவுடன் மலையிறங்கி ஊர்புகுந்த பரசுராமன் இருபத்தொரு முறை பாரதவர்ஷம் முழுக்கச் சுற்றி ஷத்ரிய குலங்களை கொன்றழித்தான். அவர்களின் கோட்டைகளை எரித்தான், அவர்களின் சிரங்களைக் குவித்தான். அவர்களின் குலங்களை கருவறுத்தான். அவர்களின் ஒவ்வொருதலைக்கும் ஒரு கண்ணீர்மணி விண்ணகம் சென்று ஒரு விண்மீனாகி மண்ணைப்பார்த்து புன்னகைசெய்தது. 


அனைத்து வஞ்சத்தையும் முடித்து வந்து பரசுரமர் நிற்கும்போது அவர் முன் இப்போது ஷத்திரியர்களின் அவலம் ஐந்துகுளங்களில் நிறைந்து நிற்கிறது.
இடியோசைபோல வானில் மெய்யிலிக் குரல் எழுந்தது. ‘நீ கொன்ற ஷத்ரியர்களின் குருதி முதல் குளம். அவர்களின் பெண்களின் கண்ணீரே இரண்டாவது குளம். அவர்தம் குழந்தைகளின் அழுகை மூன்றாவது குளம். அவர் மூதாதையரின் தீச்சொல் நான்காவது குளம். பரசுராமனே, ஐந்தாவது குளம் அவர்களின் உருவாகாத கருக்களின் ஏக்கமேயாகும்.’


  பரசுராமர் செய்தது ஒரு முடிவான தீர்வல்ல. உண்மையில் பரசுராமர் பரமனின் பகடையாட்டத்தை நிறுத்த முயல்கிறார். மாறாக அவர் செயல் இன்னொரு ஆட்டத்தை ஆரம்பித்துவைக்கிறது.    பகடைஆட்டத்தில் இருக்கும் காய்களில் ஒன்று மட்டுமே தான்  என அறியும் அவர் செயல் துறந்து செல்கிறார்.

அஸ்தினாபுரத்தை சுமக்கும் பீஷ்மர்:


          முதற்கனலில் பீஷ்மர் கைவிடப்பட்டவராக பழி சுமப்பவராகக் கண்டோம். அஸ்தினாபுரம் அவரை மறுதலித்து வெளியேற்றியிருந்தது.   இப்போது ஒரு நாடோடியாக, ஒரு  காவல் வீரனாக   தன் ஆளுமையை மறைத்து  வாழ்ந்து வருகிறார். அவர் அதை இயல்பாக ஏற்றுக்கொண்டு  இருந்தாலும் நம் மனம் பதைக்கும்படி இருக்கிறது.  மேலுலகில் சந்தனுவின்  கண்களில் நீர் வற்றாது வழிந்துகொண்டிருக்கும் என நினைக்கிறேன்.  ஊழ் சிதறடித்த முதற்காய் என அவர் இருக்கிறார்.   ஆனால் அவருக்கு அஸ்தினாபுரத்திற்கு சிக்கல் என அழைப்பு வந்த டுத்த கணம்   அவர் அஸ்தினாபுரம் விரைகிறார். அஸ்தினாபுரத்தின் சிக்கல்களை எப்படி தீர்ப்பது என்று யோசிக்கிறார். அதன் வளத்தை எப்படி  வாணிபத்தின் மூலம் பெருக்கலாம்  என்று பேரரசி சத்தியவதிக்கு ஆலோசனை கூறுகிறார்.  தான் காவல் வீரனாக அலைந்து திரிந்த அனுபவம் எல்லாம் தன் நாட்டு வளத்தை பெருக்குவதற்கான பயிலரங்குகளாக கொண்டிருந்திருக்கிறார் என்பது நமக்கு தெரிய வருகிறது.

 சிறுமையால் சிறப்புறும் நகரம் 


       உலகில் எண்ணிறந்த மக்கள் வாழ்ந்தாலும் அவர்கள் வாழ விழைவது நகரங்களில்தான்.  மனிதர் வாழும் புவிப் பரப்பில் மொத்த நகரங்களின் பரப்பை சேர்த்தாலும்  மிகச் சிறிதுதான்.  நகரத்தில் வாழ இயலாதவர்களே கிராமத்தில் வாழ்கிறார்கள் என்று தோன்றுகிறது. ஆனால் நகரம் ஒன்றும் அப்படி சிறந்த வாழ்விடம் என்று கூற முடியாது.   வெண்முரசு நகரத்தை அப்படி ஒன்றும் போற்றிச் சொல்லவில்லை. 


இப்புவியில் எத்தனையோ நகரங்கள். வண்ண ஒளிவிடும் காலக்குமிழிகள். வரலாறு விரல்தொட்டு மீட்டும் சிறுபறைகள். எதிர்காலப்பறவை இட்டு அடைகாக்கும் சிறுமுட்டைகள். நகரம் மானுட இழிமைகளை அள்ளிவைத்த சிறு கிண்ணம். அழுக்கு ஒழுகும் நரம்புகளோடும் உடல்கொண்ட குருட்டு மிருகம். ஏணிகளின் திறப்பில் நாகங்கள் வாய்திறந்து நிற்கும் பரமபதக்களம். தூயதென எந்நகராவது மண்ணிலுண்டா என்ன? நகரங்களை அழகுறச்செய்வதே அவற்றில் நுரைக்கும் கீழ்மைகள் தானோ? அதனால்தான் அத்தனை நகரங்களும் இரவில் உயிர்த்துடிப்பு கொள்கின்றனவா? ஒருவரை இன்னொருவர் மறைக்க எதையும் எவரும் செய்யலாகும் ஒரு சிறுவெளியன்றி நகரங்கள் வேறென்ன?


       ஆம் சிற்றூர்களில் ஒருவன் தவறு செய்தால அவன் தனித்து தெரிவான். ஆனால் நகரத்தின் நெருக்கம் ஒருவன் தவறுகளை, கீழ்மைகளை கூட்டத்தில் மறைத்துக்கொள்கிறது. ஆகவே மக்கள் நெருக்கம் குறைந்த சிற்றூர்களில் காண முடியாத விடுதலையுணர்வை நகரங்களில் மக்கள் பெறுகிறார்கள். சிற்றூரில் பெருந்தவறு என இருப்பது நகரத்தில் ஒரு வணிக அல்லது அரசியல்  நுட்பம் என்று ஆகிறது.  சிற்றூரில் உழைத்தால்  பொருள் ஈட்டலாம்  என இருக்க நகரத்தில் வாய்ப்பிருந்தால் பொருளீட்டலாம் என இருக்கிறது. பெருகி நிற்கும் மக்கள் கூட்டத்தின் காரணமாக சற்றே விழிதிறந்து வைத்திருப்பவனுக்கு வாய்ப்புகள் கிடக்கின்றன.  ஆனால் இவை பெரும்பாலும் மனித அறத்திற்கு ஒவ்வாதவை. ஆனால் நகரவாழ்க்கையில் இவையெல்லாம் தவறில்லையென நம்மை ஆற்றுப்படுத்திக்கொள்ல முடிகிறது. மேலும் நம்மைச் சுற்றி இதைப் போன்று  'சாதுர்யமான'  செயல்களை செய்பவர்கள் சூழ்ந்திருப்பதால்  நாமும் அவ்வாறு செய்யும்போது அதை அறமீறல் என  உணராதிருக்கிறோம். இத்தகைய கீழ்மைகள் நகர வாழ்வை இலகுவானவையாக மாற்றுகின்றன.  ஆகவே மக்கள் நகரங்கள் நோக்கி செல்லத் துடிக்கின்றனர்.

  வனத்தை வளர்க்கும் வனதீ


    வனத்தில் வளர்ந்த பெருமரங்கள்  முதிர்ந்து விழத் தொடங்கியபின் வனம்  தன் அடர்வை செழிப்பை இழக்கத்தொடங்குகிறது.  புதிய மரங்கள் எழவிடாமல் நிலத்தில் நிழல் பரப்பி நிற்கின்றன முதிய மரங்கள். விழுந்த மரக்கிளைகள் புவியை மூடி விதை முளைப்பதை தடுக்கின்றன.  எழும் வனத்தீயினால் இந்த முதிய மரங்களெல்லாம் சாம்பலாகி மண்ணில் எருவென ஆகின்றன. பின்னர் மண்ணில் புதைந்து உயிர்காத்து நிற்கும் விதைகள் பெரு மரங்களாக முளைத்தெழுந்து வனம் நிறைக்கின்றன.  இது வனத்தில் பற்பல ஆண்டுகளாக நடக்கும் சுழற்சி. மனித சமூகம் என்ற  வனத்தில் அரசுகள் என்ற பெருமரங்கள் இவ்வாறு வீழ்வதும் எழுவதும் நடந்துவருகின்றன.   அதற்கான ஒரு பெரும்போரை விதுரன் எதிர்நோக்குகிறான். அதை பீஷ்மரும் உணர்ந்திருக்கிறார். ஆனால் அந்தப் பெரும்போர் எனும் பெரு நெருப்பு அஸ்தினாபுர அரசியல் உராய்வுகளால் கிளம்பும் தீப்பொறியே உருவாக்கப்போகிறது என்பதை அவர்கள் அறிந்திருப்பார்களா    எனத் தெரியவில்லை.

 வேழாம்பல் பறவை


    மழை நீருக்காகவென காத்து நிற்கும் வேழாம்பல் பறவை என அஸ்தினாபுர நகரை வெண்முரசு நேரிடையாகக் கூறினாலும் எனக்கு சத்தியவதி அவள் கனவுகளை பீஷ்மரிடம் விரிக்கும்போது   தன் அரசியல் விழைவுகளின் நிறைவேற்றத்திற்காக தாகம்கொண்டு காத்திருக்கும் வேழாம்பல் பறவையெனஅவள்  தெரிகிறாள். அந்த மழையை எந்த வேள்வியை நிகழ்த்தியாவது கொண்டுவர அவள் பீஷ்மரை பணிக்கிறாள். அவள் அதற்காக பீஷ்மரை நடத்தச்சொல்லும் வேள்விதான் திருதராஷ்டிரனுக்கு காந்தாரியை மணமுடித்துவைப்பது.  அவளின் தீர்க்கதரிசனம் உண்மையாவதை நாம் காண்கிறோம் காந்தார நாட்டுடன் உறவு ஏற்பட்ட பிறகு அஸ்தினாபுரத்திற்கு பாரதத்தின் மற்ற அரசுகளிடமிருந்து எவ்வித அச்சுறுத்தலும் எழவில்லை என்பதை நாம் கண்டிருக்கிறோம். தன் பிள்ளைகளுக்கு அரசபதவி என்ற காத்திருக்கும் அம்பிகையுஇம் அம்பாலிகையும்கூட வேழாம்பல் பறவைகளே.

ரதிவிஹாரி


காமத்தில் விளையாடுபவன். ஆம், காமத்தை ஆடுபவன் அல்ல. காமத்தில் மூழ்கியவன் அல்ல. காமத்தின் அடிமையும் அல்ல. காமத்துடன் விளையாடுபவன். தீயுடன் விளையாடும் ரசவாதிபோல. சர்ப்பத்துடன் விளையாடும் விடகாரி போல. யானையுடன் விளையாடும் மாதங்கிகன் போல. ரஸவிஹாரி. மோஹவிஹாரி. மிருத்யுவிஹாரி…


அப்படி ஒருவனால் காமத்தில் விளையாடித் திளைக்கமுடிந்தால் அவனறியும் காமம் எத்தனை மகத்தானதாக இருக்கும்? அது எல்லையற்ற மதுரக்கடல். முடிவற்ற எழில்வெளி. அது பிரம்மமேதான். அறுசுவையில் ஐந்தையும் களைந்து இனிமை மட்டுமாகத் தோற்றமளிக்கும் பிரம்மம். பிரம்மத்தை நோக்கி ஆன்மா செல்லும் நிலை அல்ல, பிரம்மம் ஆன்மாவில் வந்து நிறையும் நிலை. அதை அறியும் மனிதப்பிறப்பு ஒன்று மண்ணில் நிகழமுடியுமா என்ன?       

             ஆனால் விதுரனின் காலத்திலேயே அப்படி ஒரு பிறப்பு நிகழ்கிறது.  அந்த பிறப்பெடுப்பவன் எழுப்பப்போகும்   குழலோசை இப்பொதே ஒலிக்கத் தொடங்கிவிட்டது.  அவன் விளையாடப்போகும்  களன்கள் இப்போதே சீரமைக்கப்படுகிறது. அவன் வஞ்சங்களோடு விளையாடப்போகிறவன், ஆனால் அவனிடம் ஒரு துளி வஞ்சமுமிருக்கப்போவதில்லை. அவன் அகங்காரங்களோடு பொருதப் போகிறவன்,   ஆனால் அவனுக்குள் ஒரு துளியும் அகங்காரமுமில்லாதிருக்கப்போகிறவன். பெரும்  விழைவுகளோடு மோதிவிளையாடப் போகிறவன், ஆனால் அவனுக்கென  விழைவுகள்  ஏதுமற்றவனாக இருப்பான்.  மனிதர்களில் ஒருவனாக வாழ்வெனும் ஆட்டத்தை ஆடப்போகிறவன்,  ஆனால் அவன் மனிதர் அடையும் இழிவுகள் எதுவும் அண்டமுடியாதவன். அவன் ஏறிவரும் காலயானையின் மணியோசை இப்போதே வெண்முரசில் ஒலிக்கிறது.

தாய்மையின் பேதமை


                 அம்பிகை அம்பாலிகை தன் பிள்ளைகள் சார்பாக விதுரனிடம் வாதிடுவது பேதமையின் உச்சம்.  அவர்கள் அறிவுக்கண்ணை தாய்மை மறைக்கிறது. தான் உரைப்பது பேதமை என்று அவர்களுக்கே தெரியும்.  ஆனாலும் தம் பிள்ளைகள் நலன்பற்றிய சிந்தனை  அவர்களின் தர்க்க அறிவை குலைத்துவிடுகிறது என நினக்கிறேன்.  மேலும் அவர்கள் தம் வாழ்வின் பொருளை,  குறைகளோடு பிறந்துவிட்ட தம் ஒரே மகன்களில்  காண்கின்றனர். ஆகவே அதற்காக மட்டுமே அவர்கள் உள்ளம் சிந்திக்கின்றது. அவர்களின் பிள்ளைகளின் நலனைத்தவிர மற்றவற்றைப்பற்றி சிறிதும் சிந்தியாது உரைக்கும் சொற்கள் பேதைமை நிறைந்தவையாக இருப்பதில் வியப்பொன்றுமில்லை.

திருதராஷ்டிரன் அடையும் தெளிவு


              திருதராஷ்டிரன் தன் விழித்திறன் இல்லாமை அவன் அறிவுக்கண்ணையும் குருடாக்கிவைத்திருக்கிறது.   அவனுக்கு உலகியலை எடுத்ததுச் சொல்லி திருத்தி வழி காட்டுவதற்கென தந்தமைகொண்ட ஒரு ஆண் அவனுக்கு இதுவரை அமையவில்லை. தாய் அவனுக்கு அளவற்ற உணவூட்டி வளர்ப்பதைப்போல் அவனுக்கு நாடாள்வதற்கான அளவற்ற விழைவையும் ஊட்டி வளர்த்திருக்கிறாள்.   சூரிய வெளிச்சம் சரியான முறையில் விழுகையில் மட்டுமே மரம் நேர் கொண்டு வளர்கிறது. ஞாயிறொளி சரியாக கிடைக்காத மரங்கள் வளைந்து திருகி  கோணல்கொண்டு வளர்வதைப்பொல வளர்ந்திருக்கிறான்.  அவனின் நற்காலம்,  சிறந்த தோட்டக்காரனைப்போல் பீஷ்மர் வருகிறார்.  அவன் சிறுமைகளை துண்டித்து அவனை நேராக நிமிர்ந்து நிற்கும்  பேரரசமரமென வளர்க்கும் பொறுப்பை அவர் எடுத்துக்கொள்கிறார். அன்னையின் நிழலில் இருந்து ஆதவனின் ஒளிக்கு அவனை திரும்பவைக்கிறார்.  

பாலூறும் பட்டமரம்.  


               
திருதராஷ்டிரன் தன்னை முற்றிலுமாக பீஷ்மரிடம் ஒப்புகொடுத்து சரணடையும் காட்சி மிக உருக்கமானது.   பார்வையற்ற  அவன் நீயே கதி என்று பீஷ்மர் காலில் விழும்போது அவருள் தந்தைமை பேருருக்கொள்கிறது. ஊழ் அவருக்கு பிள்ளைகளை பெற்றெடுக்கும் வாய்ப்பைத் தராமல் அவரின்  தந்தைமையை பட்டுப்போக வைத்திருக்கிறது. ஆனால் கண்ணற்ற திருதராஷ்டிரனின் கதறல் அந்த பட்டமரத்தினுள் பாலூற வைக்கிறது.  பீஷ்மர் தந்தைமையின் சுவையை திருதராஷ்டிரனின் மூலமாக அனுபவிக்கிறார்.   விதுரன் அவருக்கு பிடித்தவன்தான் தன் சகோதரன் வியாசனனின் உருக்கொண்டவனாக அவருக்கு தெரிபவன். ஆனால  தந்தையெனக் கொண்டு அவனை வளர்ப்பதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. ஆனால் திருதராஷ்டிரன் அவர் தோளளவுக்கு  வளர்ந்துவிட்டாலும் கையில் பிடித்து தூக்கினால் திமிறி அழும் குழந்தையைப்போல் இன்னும் உள்ளம் வளராமல் இருக்கிறான்.  பீஷ்மரே  திருதராஷ்டிரனின்  ஆளுமையை அருகிருந்து உருவாக்கி அவனை பேருள்ளம் கொண்டவனாக வளர்த்தெடுக்கிறார்.  ஒரு தந்தையென பீஷ்மர்  உணர்ந்து மகிழ திருதராஷ்டிரன் அவருக்கு உதவுகிறான் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த தந்தைப் பாசத்தினாலேயே அவர் திருதராஷ்டிரனை என்றும் கைவிடாதவராக இருக்கிறார் என்று தோன்றுகிறது.  


          என்னுரையை பொறுமையாக  செவிகொடுத்து கேட்ட அனைவருக்கும் நன்றி.

Saturday, February 24, 2018

சுதர்சனையை விடhttp://www.jeyamohan.in/107001

எழுத்தாளர் அவர்களுக்கு,

மிக தீவிரமான நாள் இன்று.. அத்தியாயம் துடங்கியது முதல் முடிவு வரை.

துரியன் அசைக்கப்படவே முடியாதவன்.. குருதிசாரலில் அசலையின் பாத்திரம்  வர தொடங்கியது முதலே எனோ என் உள்ளம் துரியனின் இரெண்டாவது மனைவி வருவாள் என்றே சொல்லி வந்தது. அசலை செய்தது எல்லாம் அவள் செய்ய கூடியதாக முதலில் எண்ணினேன், ஆணால் அசலையின் பாத்திரம் முழு வடிவில் சுதர்சனையை விட பெரியது.. பானுமதியை யும் பலந்தரையும் அசலையும் ஒரு நேர் கொட்டில் புரிந்து கொள்ளலாம்..   

பானுமதி துரியனை விலகாத போது எனக்கு உறுதியாக இவள், சுதர்சனை, வருவாள் என்று தெரியும். 

இவளை இட்டு வர சொன்னவள் பானுமதி. துரியனின் உறுவத்தை வைத்தே காதல் கொண்டவள்.. அவன் கலியின்  முழு உருவாகவே உள்ளான் இப்போது.

உண்மையாக மேலும் வரப்போகும் அத்தியாயங்களை படிக்க வேண்டுமா அதை தாங்கும் இடத்தில் நான் உள்ளேனா என்று தினம் என்னிடம் கேட்டு கொள்கின்றேன். முன்பு பன்னிரு படைகளம் அப்படி ஒரு தாக்கம் ஏற்படுத்தியது.. படித்து தாண்டியே ஆக வேண்டும்..

இனி உறங்குவேணா என்பது கேள்வி தான்.

உங்களை, கைகள் கூப்பி தினம் வணங்குகின்றேன்.
நன்றி

ராகவ்

வேழாம்பல் தவம் , கானல் வெள்ளி
நண்பர்களே வணக்கம்.


எந்த இயக்கமும்  நிகழ்வின் உச்சத்தை அடையும் போது , ஒரு நிறைவினை கொடுத்துவிடுகிறது . அது ஒரு வெற்றி மனநிலை . ஆனால் காரியத்தை தொடர்ந்துநிகழ்த்த வேண்டிய ஊக்கத்தைதான் நாம் அங்கிருந்துதான் பெறவேண்டி இருக்கிறது . கடந்த மாதம் நிகழ்ந்த வெண்முரசின் முதல் நூல் கலந்துரையாடல்நிறைவிற்கு திருஜெயமோகன் அவர்கள் வந்து சிறப்பித்த மகத்தான கூடுகைக்கு  பிறகு இன்று இங்கு கூடியிருக்கிறோம் . 

வாரணம் பொருத மார்பும்வரையினை எடுத்த தோளும் , நயம் பட உரைத்த நாவும் கொண்டவர்” வரவேற்புரையாளர் திருநாகராஜ் அவர்கள் , களம் பலகண்டவர்அவர் சற்றே திகைக்க , முனேரை ஒட்டி நாங்கள் எல்லோருமே பின்னகர , ஆவலோடு எதிர்நோக்கிய நண்பர் ராதாகிருஷ்ணன் பேசவே மறுத்துவிட்டார் .காரணம் அச்சிறு கூடுகைக்கு வந்து அமர்ந்திருந்த ஆளுமை அப்படிப்பட்டதுஅனைத்திற்குமாக சேர்த்து  ஆச்சர்யமாக உரைநிகழ்த்திய திருராஜகோபால்இன்றுவெண்முரசின் வாசிப்பதற்கு வழிகாட்டியது புதுவை கூடுகையின் போது என்கிற பெருமையை எங்களுக்கு தந்து சென்றிருக்கிறார் . இன்று அடிக்குறிப்பாக அதுதினம்தொரும் வெண்முரசு பக்கங்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டே இருக்கிறது.

தமிழில் புனைவுகள் பல ஆண்டுகளாகவே வந்துகொண்டிருக்கின்றன , அதன் காலகட்டத்தை நவீனத்தும்பின் நவீனத்துவம்முற்போக்கு போன்ற  வகைமைகளுள்அவை அமைந்து விடுகின்றன  

 ஆனால் அவற்றில் அடங்காத சில ஆக்கங்கள் வெளிவந்து , தனக்கென ஒரு வகையைமைக்கு அது அறைகூவுகிறது . வெண்முரசைஅதில் கொண்டு இணைக்க முடியமா என்றால் “ஆம்” என்றுதான் சொல்வேன்அது தொன்மத்தை நவீன மனங்களிடம் கொண்டு சேர்க்கிறது . புராணங்களின்நிகழ்வை குறியீடாக பொதிகிறது , மரபை இப்படி இருக்கலாம் என்கிற புதிய கோணத்திற்கு நவீன உலகை அழைத்துச் செல்கிறது .

நவீனத்துவம் உலகளாவியதுஅது நவீன அறிவியலின் சிருஷ்டிநவீன தத்துவம்தர்க்கவியலின் நீட்சிஅது எத்தனை எழுந்தாலும் புறவயவாதம்,யதார்த்தவாதம் விட்டு எழமுடியாதுஅதற்கு அப்பால் ஒவ்வொரு நாட்டுக்கும் அதற்கான இலக்கிய அடையாளம் உண்டுகையுறைக்கு அடியிலிருக்கும்கைரேகை போலஅதுதான் அந்தப் பண்பாட்டின் ஆழம்நனவிலிஅதைநோக்கியே அந்நாட்டு இலக்கியங்கள் செல்லமுடியும்கடன்வாங்கியபடிமங்களினூடாக அங்கே செல்லமுடியாது” எனகிறார்  ஜெயமோகன் பிறிதொரு பதிவில் . அப்படி கடன் வாங்கவேண்டிய நிலையிலிருந்து விடுவித்ததாலேயேஇது நிகழ்காவியமாக நிலைபெறுகிறது.

நண்பர்களே , மனிதன் சுதந்திரனல்ல , எதற்கோ அதீனப்பட்டவன்தான் என்பதற்கு அவனது அகச்சான்றே பிரமாணம் . அவன்  விண்ணகத்து தெய்வங்களுக்குஅதீனமானவன் என்கின்றன புராணஇதிகாசங்கள் . ஒருவனுக்கு அவன் நினைத்தது நினைத்தபடி நிகழ்வதில்லை , நிகழினும் அதில் அவன் நிறைவுறுவதில்லை.  ,என்பதிலிருந்து பிரபஞ்ச இயக்கம் பிறிதெவருக்கோபிறிதவராலோ நிகழ்தப்படுவதாக அனுமானிக்க முடிகிறதுபுராண , இதிகாசங்கள் அதிலிருந்து நம்மைஆற்றுப்படுத்த உருவாகிவந்தவை.

கேயாஸ் தியரி போல எங்கோ நிகழும் ஒரு வண்ணத்துப்பூச்சியின் சிறு அசைவு வேறு எங்கோ ஒரு சுனாமியாக பரிணமிக்கிறது என்தைப் போல . ஒரு நிகழ்வுவேறொன்றின் விளைவு அல்லது பிறிதொன்றின் தொடர்ச்சி என்பதை சொல்லவந்தது நம் தொன்மங்கள் . தற்செயல் வாதம் அல்லது பெருந்திட்ட வாதம் என்பதைபோல.

விண்ணகத்து தெய்வத்தின் ஆடல்கள் யுகம் யுகமாக தொடங்குகிறது . “விண்ணில் ஓடிய பெருந்தேர்களின் சக்கரங்களுக்குள் புகுந்து அவற்றை திசைமாற்றியும்மோதவிட்டும் துவாபரன் தன் ஆடலை நிகழ்த்திக்கொண்டிருந்தான்வெற்றியும் தோல்வியும் தன் விளையாட்டே என அவன் சிரித்துக்கொண்டான்.” என துவாபரயுகம் துவங்குகிறது . வெற்றியும் , தோல்வியும் ஒன்றா? .ஆம்வெற்றியில் நிகழ்கால மகிழ்வையும் , தோல்வியில் எதிர்கால மகிழ்விற்காகவும் சிரிக்க தெரிந்தஒருவனுக்கு துக்கம் செய்துவிட யாராலும்  முடியாது.

உலகின் எல்லாவற்றிற்கும் ஆதாரம் நீர் . அதை மழையாக எங்கும் வருஷித்து அனைத்தையும் வாழவைக்கிறான் இந்திரன் . உலகெங்கிலும் பூமியின் இயக்கத்திற்குவிண்ணுலக தெய்வங்கள் காரணமென்கிற தொன்மையான மரபு நமக்கு மட்டுமே சொந்தமானதல்ல அவை உலகெங்கிலும் காணப்படுகின்றது என்பதிலிருந்துஏதோ பாரத வருஷ்தத்தில் காணப்படுகிற புராண , இதிகாசங்கள் பழங்குடி கோட்பாடுகளில் இருந்து மடமையால் எழுந்ததல்ல என்பதையும்அதற்கு உளவியல்,சூழியல் ,நவீன கலாச்சாரம் பண்டைய வழிமுறைகளின் நீட்சி என்கிற தர்க்கத்தை முன்வைக்கிறது வெண்முரசு . 

இதை போன்ற கூடுகைகளுக்கு புதிதாக வருபவர்களின் திகைப்பை நாம் பலமுறை கண்டிருக்கிறோம் . அவர்களுக்கு இது என்ன இப்படி ? என்கிற மலைப்பேமிஞ்சுகிறது . காரணம் இதற்கு முன்மாதிரிகள் இல்லை , என்பதால் வியக்கின்றனர் . ஒரு ஆக்கத்தை கொண்டாடுவதின் வழியாக ஒரு படைப்பாளிகொண்டாடப்படுகிறார்அதுவும்  அவர் வாழும் காலத்தில் என்கிறபோது , அது ஒரு அரிய நிகழ்வாக மாறி புதிதென பார்க்கும்  அனைவரையும் மலைக்க வைக்கிறது . 

இத்தகைய கூடுகைகள் ஒரு தொடக்கம் மட்டுமே . அறிவார்ந்த இலக்கிய உலகம் நம்பிக்கையை மட்டுமே முன்வைக்கும் ஒரு பெரும் சமுதாயத்தின் ஒரு மரபைஎடுத்துக்கொண்டு,  அங்கிருந்து இன்றைய யதார்த்த உலகை நோக்கிய பயணத்தைதிரும்பி வரும்பாதையை அது வகுத்துக் கொடுக்கும் போது , நவீன மனமுள்ளஅதே சமயம் நம்பிகை என்கிற ஆழமனப்படிமத்தில் வேர் உள்ளவர்களுக்கு அது சிறு நீர் வார்க்கிறதுஅதில் உறங்கும் ஆலம் விதைகள் நிமிடத்தில் பேருரு கொண்டுஎழுகின்றன , இன்று இது இங்கும்ஒரு காலத்தில் எங்கும் கொண்டாடப்படும் என நம்புகிறேன்  .

பாரத வர்ஷத்தின் தொன்மம் மூவுலகிற்கும் தலைவனான இந்திரனை புறந்தள்ளியே அந்த ஆடல் எப்போதும் நிகழ்கிறது என குறிப்புணர்த்துகிறது . அது உலகைஆளும் நிலை சக்திகள் இந்திரன் சூரியன் பிரதானமானவர்களாகவும்  வாயு , வருணன் அடுத்த நிலையில் உள்ளவர்களாகவும் . இவர்களை அதன் மேலுள்ளவிண்ணகத்து கடவுளர்கள்  தங்களின் ஆடலில் தருணங்களில்   நால்வரையும்  ஓரே அணியில் நிற்க விடுவதில்லை . ராமாயணத்தில் இந்திர அம்சமான வாலி , சூரியஅம்சமான சுக்ரீவனுடனும் , மகாபாரதத்தில் இந்திர அம்சமான அர்ஜூனன் , சூரிய அம்சமான கர்ணனுடனும் முரண்படுகிறார்கள் . அவர்களில் ராமகிருஷ்ணதொடர்புள்ளவர்களே வெற்றி பெறுவதாக இதிகாசங்களில் உரைக்கப்படுகிறது.

மழைப்டாலில் விண்ணிலுருளும் மூன்றாவது பகடையின் பெயர் துவாபரன். “முக்கண்ணனின் சுட்டுவிரலில் இருந்து தெறித்து அவன் விண்விரிவில் விரைந்தான்.ஒளிசிதறும் நீல விண்மீனாக உருண்டோடி சூரியனின் தேர்ப்பாதைக்குக் குறுக்கே பாய்ந்தது” .சூரியனும் இந்திரனும் முரண் கொள்ள இவர்களின் தத்துவ  சிக்கலில்இருந்து மகாபாரத புராணமாக பரிணமிக்கிறது அந்த பூசலுக்கு இடமாக பூமி தேர்ந்தெடுக்கப்படுகிறது எனத் துவங்குகிறது வெண்முரசின் மழைப்பாடல். .

முதற்கனலின் வெம்மைத்தாளாது தம்மை குளிரூட்டும் மழையை ஏங்கும் அனைவரின் பொருட்டு தவளையின் ஒயாது இறைஞ்சுதலினால் அது மழைப்பாடலாகிறது. இந்திரன் அதன் பொருட்டு இரங்கி மழையை பெய்விக்கிறான்.  மழை பெய்யும் முன்பாக உயர வேண்டியது வரப்பு பின்னர் அதிலிருந்துநீர்..,நெல்...நெல்குடி..., கோல்..என உயர்ந்து  கோன் உயர்வான் என்னும் ஔவை கிழவி  அதன் தொடர்ச்சியை சத்திரியனின் கடமையை ரிஷிகள் தாங்கள்  கண்டடைந்தவேதத்திலிருந்து அவர்களுக்கு அதிகாரமளிப்பதாக இம்மழைபாடல் விளைகிறது  

வேழாம்பல் தவம் சாதகப்பட்சியின் மழைநீருக்கான தவம்அது பூமி ஸ்பரித்த நீரை தொடாது . இப்படித்தான் இருப்பேன் என்கிற இயற்கையின் வைராக்கியமாகஅது சொல்லப்படுவது பாரத வருஷம் இப்படித்தான் இருக்க வேண்டுமென்பதை சத்தியரிய குலம் முடிவெடுக்க அதற்கு வேதத்தை கையளித்து ரிஷிகள்ஒருங்குவதை பற்றியது .

கானல் வெள்ளி அதன் நிர்வாக அமைப்பை அதில் உள்ள இடர்பாடுகளைஅதை கடக்க விரும்பும் மனிதர்கள் அதில் தன்னலத்தை அல்லது நாட்டின் நலத்தைஇணைத்து புரிந்து கொள்ளும் போது அவை சிக்கல் மிகுந்ததாக மாறிவிடுவதை அதிலிருந்து நமக்கான ஒரு தொன்மம் எழுந்து வருவதை சிறு சிறு குறிப்பாகநிகழ்வாக , சூதர்படலாக  விரிவாக பேசுகிறதுசத்தியவதி பீஷ்மர் , விதுரன் தவிர தன்னை கானல் நீரில் பார்ப்பது மற்ற கதா பாத்திரங்கள் தங்களை பற்றிய பிழைபுரிதலை சொல்லுகிறது . அரசன் தன்நிலை வழியாக அதை அடைந்துவிட முடியாது . அதற்கு அமைச்சன் என ஒருவன் தேவைபடுவதையும் . அரசனுக்கு தான் யார்என புரியவைக்க அவன் எந்த எல்லைக்கும் செல்வதை பீஷ்ம தார்த்தராஷ்டிர துவந்த யுத்தம் சொல்லுகிறது.

காவிய லட்சணங்களுக்காக  சிருஷ்டி , ராஜபரம்பரை,  மனு போன்றவை சொல்லப்பட வேண்டும் என்பதால் அது பற்றி பற்றி பேசுகிறது வென்முரசின் மழைப்படால்சுக்ரசம்ஹிதையின்படி கிருதயுகத்தில் பாரத வர்ஷத்தில் ஒருலட்சத்து நாற்பத்தி ஒன்றாயிரம் குலங்கள் இருந்தனஅக்குலங்களில் ஷத்ரியர்களைஉருவாக்கிக்கொண்ட வலிமையான குலங்கள் பிறகுலங்களை வென்று தங்களுக்குள் இணைத்துக்கொண்டனஅவ்வாறு கிருதயுகத்தின் முடிவில் அக்குலங்களில்இருந்து ஏழாயிரம் அரசுகள் உருவாகிவந்தனஅவற்றிலிருந்து ஆயிரத்து எட்டு ஷத்ரிய அரசுகள் உருவாயினஅவற்றிலிருந்து இன்றுள்ள அரசுகள் உருவாகிவந்திருக்கின்றனஎன்றும் .

ஒவ்வொரு அரசுக்கும் ஒரு குலவரலாறு உள்ளதுஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு சுருதி உருவாகி அன்றிருக்கும் வல்லமைவாய்ந்த அரசர்களை ஷத்ரியர்கள் எனஅடையாளப்படுத்துகிறதுஅந்த சுருதியை அந்த ஷத்ரியர்கள் மாற்றக்கூடாத நெறிநூலாக நினைக்கிறார்கள்வேறு அரசர்கள் உருவாகி வருவதை அவர்கள்விரும்புவதில்லைஒன்றுகூடி அவ்வரசை அவர்கள் அழிக்கிறார்கள்அந்த ஜனபதத்தை தங்களுக்குள் அவர்கள் பங்கிட்டுக்கொள்கிறார்கள்” என்றும்.

ஷத்ரியர்கள் இல்லாமல் பாரதவர்ஷம் என்னும் இந்த விராட ஜனபதம் வாழமுடியாதுகுலங்களுக்கிடையே ஒற்றுமையை உருவாக்கி நிலைநாட்ட ஷத்ரியர்களின்வாள்வல்லமையால்தான் முடியும்பாரதவர்ஷத்தின் வளர்ச்சி ரிஷிகளின் சொல்வல்லமையை வாள் வல்லமையால் நிலைநாட்டிய ஷத்ரியர்களினால்தான்.அவர்களின்றி வேள்வியும் ஞானமும் இல்லைவேளாண்மையும் வணிகமும் இல்லைநீதியும் உடைமையும் இல்லைஅவர்களின் குருதியால் முளைத்ததேபாரதவர்ஷத்தின் தர்மங்களனைத்தும்.” என்றும் சொல்லி அனைவரிடமும் உள்ள வேரிலிருந்து அது எழுந்து வருகிறது.

ஒவ்வொருநாளும் நெடுநேரத்தை எடுத்துக்கொள்ளும் இந்த எளிய மேலாண்மைச்செயல்பாடுகளை ஏன் செய்கிறோம் என விதுரன் அப்போதும் வியந்துகொண்டான்.அவற்றில் கொள்கைமுடிவுகள் இல்லைஅரசியலாடல்கள் இல்லைஅறிதலும் அறைதலும் இல்லை என்றாலும் “வேங்கைமரத்தை வேருடன் சாய்த்து உண்ணும்துதிக்கை கொண்டதுஇளவெயிலில் சுடர்ந்து நின்ற சிறிய மலர்களை துதிக்கை நுனியால் கொய்து சுருட்டி வாய்க்குள் போட்டுக்கொண்டிருப்பது . அந்தவீண்செயலை நிறுத்தமுடியாதென்று எண்ணினான்நிறுத்த எண்ணும்தோறும் அவ்வெண்ணத்தின் விசையே அச்செயலை அழுத்தம் மிக்கதாக ஆக்கிவிடும்.” எனவிதுரன் கண்டு புன்னகைசெய்கிறான் என அமைச்சரின் மனநிலையை தொட்டு விலகுகிறது .

பகல்கள் தழலுருவான சூரியனால் எரிக்கப்பட்டன.” என்கிற சொல்லாட்சி காலம் நமக்கு அனத்தையும் சமைக்கபட்டே கொடுக்கிறது என்கிற குறியீட்டை கொடுக்கவல்லதுஅதிலிருந்து பெறப்படுபவை உண்ணப்பட்டு இரவில் 
நிலவின் நிழலிலே அது ஜீரணிக்கப்பட்டு அனுபவமான சக்தியாக மாற்ற முடியதவனுகில்லை இவ்வுலகு என்கிறது இலக்கியம்அது வாழ்க .

படகோட்டியான விகூணிகன் "மழைக்காலம் நெருங்குகிறது வீரரேஎன்றான். "காற்றில் நீர்த்துளியே இல்லையேஎன்றார் பீஷ்மர். "இப்போது நீர்த்துளிகள்இருக்காதுஇன்னும் சற்றுநாட்கள் தாண்டவேண்டும்இப்போது கடலின் உள்ளே கருவுக்குள் மழை பிறந்திருக்கிறதுநாம் அறிவது கடலின் பெருமூச்சைத்தான்மூச்சுஏறிக்கொண்டே செல்லும்குழந்தை பிறக்கத் தொடங்கும்போது பெருமூச்சு சிந்துவின் நீரையே திரும்பவும் இமயத்துக்குத் தள்ளிவிடுமென்று தோன்றும்.கூர்ஜரத்தின் மணல்மலைகள் இடம்பெயரும்காவியம் துவங்க இருப்பதும் ஒரு பேறுகாலத்தின் நோய் போல எவருக்கும் வலி மிகுந்தது.

உலகின் இலக்கணம் மாறிக்கொண்டிருப்பது . அதன் நுட்பம் தெரிந்தவன் மாற்றத்தின் திசையை அறிய விரும்புகிறான் . அதற்கு பயணம் இன்றியமையாததுதான்உருவகப்படுத்தும் மாற்றத்தை  உறுதிசெய்துகொள்ளவே பதினேழுவருடங்கள் பாரதவர்ஷத்தின் விளிம்புகளிலும் எல்லைகளிலும் பயணம் செய்தேன் என்கிறார்பீஷ்மர் . திரேதாயுகம் முடிந்து புதிய யுகம் ஒன்று பிறந்து வருவதை நான் என் கண்களால் கண்டேன்அதன் மொழி செல்வம்அதன் அறம் வணிகம்அதன் இலக்குபோகம்.” என்றார் பீஷ்மர்அவரது தீர்க்க தர்சணம் இன்றுவரையில் செல்லுபடியாகிறது.

போரில் பொருளாதரம் உயர்த்த நினைக்கும் நிலை இன்று இல்லை என்று சொல்லும்  பீஷ்மர் “விதுரன் தோளில் கைவைத்து சொன்னார் "ஆனால் இவர்களெல்லாம்என் மைந்தர்கள்என் குலத்தோன்றல்கள்இவர்கள் என் கண்ணெதிரே அழிய நான் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லைநீ சொன்ன உண்மையை உணர்ந்த நாள்முதல் என் வாழ்க்கையின் நோன்பென நான் கொண்டிருப்பது ஒன்றேபோரைத்தவிர்த்தல்அதன்பொருட்டு நெறிகளையும் மீறுவேன்அதன்பலிபீடத்தில் கள்ளமற்றசிலரை பலிகொடுக்கவேண்டுமென்றால் அதையும் செய்வேன்வரப்போகும் பேரழிவை தடுத்தேயாக வேண்டுமென்பதையே ஒவ்வொரு செயலிலும்எண்ணிக்கொள்கிறேன்.”

மாமனிதர்களின் கனவு அதுஎன்றான் விதுரன். "விராடவடிவம் கொண்ட வரலாற்று வெள்ளத்துக்குக் குறுக்காக தங்களையே அணைகளாகஅமைத்துக்கொள்கிறார்கள்அதன் வழியாக அவர்களும் பேருருவம் கொள்கிறார்கள்.” அந்த செயலுக்காகவே சரித்திரத்தில் அவர்கள் அறியப்படுகிறார்கள் . அந்தசெயல்களினால் விளைவதறகு தன்னையே விலையாகவும் தருகிறார்கள் .

ஆம்நீ சென்று வந்த தேவபாலத்தைப்பற்றி ஒற்றன் சொன்னான்என்றாள் சத்யவதிபீஷ்மர் அந்தச் சொல்லைக்கேட்டதுமே முகம் மலர்ந்தார். "தேவபாலம்கூர்ஜரர்களின் ஒரு துறைமுகம்தான்ஆனால் அது பூனையின் காதுபோல உலகமெங்கும் எழும் ஒலிகளை நுண்மையாக கேட்டுக்கொண்டிருக்கிறதுஅந்தத்துறைமுகத்தில் நின்றபோது என்னென்ன வகையான மனிதர்களைக் கண்டேன்பாறைபோன்ற கருப்பர்கள் சுண்ணம்போன்ற வெண்ணிறம் கொண்டவர்கள்நெருப்பைப்போலச் சிவந்தவர்கள்பீதமலர்களைப்போல மஞ்சள்நிறமானவர்கள்எவ்வளவு மொழிகள்என்னென்ன பொருட்கள்அன்னையேஐநூறு வருடம் முன்புமண்ணுக்குள் இருந்து இரும்பு பேருருவம் கொண்டு எழுந்துவந்ததுஅது உலகை வென்றதுஇரும்பை வெல்லாத குலங்களெல்லாம் அழிந்தனஇன்று அவ்வாறு பொன்எழுந்து வந்திருக்கிறதுபொன்னால் உலகை வாங்கமுடியும்.” என்கிற புரிதலைத்தான் தனது பார்வையாக இங்கு வரிவாக சொல்லுகிறார் . 

நதிகள் ஜனபதங்களை இணைத்த காலம் முடிந்துவிட்டதுஇனி கடலை ஆள்பவர்களே மண்ணை ஆளமுடியும்." பீஷ்மர் "அன்னையேநாம் கடலையும் ஆள்வோம்"என்றார். "அதற்கு நாம் அஸ்தினபுரி என்ற இந்த சிறு முட்டைக்குள் குடியிருக்கலாகாதுநமக்குச் சிறகுகள் முளைக்கவேண்டும்நாம் இந்த வெள்ளோட்டை உடைத்துப்பறந்தெழவேண்டும்.” என சொல்லி அன்று மாறிவரும் உலகை அடைகாக்கும் பறவையான சத்தியவதிக்கு விளக்க முயற்சிக்கிறார் .
காந்தாரத்தோடு உறவு தேவையற்றது என்பதற்கும் சத்தியவதியின் எண்ணங்களுக்கு சகுனியே தடையாக இருப்பான் என்கிற வாதம் சத்தியவதியிடம் எடுபடாதுபோகிறது . மாறி வருகிற உலக சூழலுக்கு மாற்றாக தனக்கு தெரிந்த எளிய அரசுசூழதலையே  அவள் முன்வைக்கிறாள் “அவன் மூடனாக இருக்க வாய்ப்பில்லை"என்றார் பீஷ்மர். "ஆம்ஆனால் ஆசைகொண்டவன் மூடனாக ஆவது மிக எளிதுஎன்றாள் சத்யவதி. "அவனுடைய கண்களால் பார்இந்த அஸ்தினபுரி இன்றுவிழியிழந்த ஓர் இளவரசனையும் வெயில்படாத ஓர் இளவரசனையும் வழித்தோன்றல்களாகக் கொண்டுள்ளதுஅந்தப்புரத்தில் இருந்து அரசாளும் முதுமகளாகியநான் இதன் அரியணையை வைத்திருக்கிறேன்ஆட்சியில் ஆர்வமில்லாத நீ இதன் பிதாமகனாக இருக்கிறாய்இந்த அரியணையை மரத்தில் கனிந்த பழம்போலகையிலெடுத்துவிடலாமென சுபலனும்

அந்த விவாதத்தில் தனக்கான வெற்றி கிடைக்காது என்கிற முடிவை எட்டியதும் தனது வழக்கமான குல சிக்கல்களின் வழியாக பீஷ்மரை நிர்பந்திக்க “தேவவிரதா,இந்த அரியணையுடன் தெய்வங்கள் சதுரங்கமாடுகின்றனபெருந்தோள்கொண்ட பால்ஹிகனையும் வெயிலுகக்காத தேவாபியையும் மீண்டும் இங்கேஅனுப்பிவிட்டு அவை காத்திருக்கின்றனநாம் என்ன செய்வோமென எண்ணி புன்னகைக்கின்றனநாம் நம் வல்லமையைக் காட்டி அந்த தெய்வங்களின் அருளைப்பெறும் தருணம் இது.” என்கிறாள் . ஆனால் பீஷ்மர் காத்தாரத்திற்கு செல்ல மறுத்துவிடுகிறார்.

ஆனால் காலம் ரதிவிஹாரி என்கிற சொல்லை ஒரு குறியீட்டைப்போலே விதுரனுக்கு எடுத்துக் கொடுக்கிறதுஅந்த மாயையினால் சிக்குண்டு “தீயுடன்விளையாடும் ரசவாதிபோலசர்ப்பத்துடன் விளையாடும் விடகாரி போலயானையுடன் விளையாடும் மாதங்கிகன் போலரஸவிஹாரிமோஹவிஹாரி.மிருத்யுவிஹாரி.. போல அரசுசூழ்தலில் விளையாடும் எளிய அரசியலவதிப்போல தனது முதல் முயற்சியில் வெற்றி பெற வேண்டும் என்கிற ஓரே சிந்தனையில் காலத்தின் நோக்கு தெரியாது விதுரன் விளக்கு விட்டில்பூச்சி போல பீஷ்மரை சந்திக்க கிளம்புகிறார்”.

தார்தராஷ்டிரனின் மலருதலை மிக நுட்பமாக இரு பகுதிகளாக சொல்லுகிறது மழைப்பாடல் .அதில் நவீன “அக்வஸ்டிக் பாணி” அமைப்பு இருப்பதாக ஜெயமோகனின்கற்பனையில் நவீன ரஸவாதம் சிறகடிப்பது எங்கும் பிசிறடிக்கவில்லை என்பதுதான் விந்தை . “இசைமண்டபம் கலிங்கத்துச் சிற்பியால் அமைக்கப்பட்டது.மரத்தாலான வட்டவடிவமான கூடம்அனைத்துப்பக்கங்களிலும் நூற்றுக்கணக்கான சின்னஞ்சிறிய பொய்ச்சாளரங்கள்அவை எதிரொலிகளை மட்டும் உண்டுகரைத்தழித்தன.” என்று.

இசை பற்றிய குறியீடு போலமன்னனுக்கும் நடுவே அவர்கள் பரிமாறிக்கொள்ளும் ஏதோ ஒன்று உள்ளதுநாக்கின் நெளிவு மொழியாகி சிந்தையாகி கண்ணீராகிசிரிப்பாகி நிறைவதுபோலத்தான் அதிரும் கம்பிகளில் நெருடிச்செல்லும் விரல்களும்அறையமுடியாத ஓர் ஆடல்.” இறுதியில் “திருதராஷ்டிரன் இருகைகளையும்விரித்து "நீர் பார்வையற்றவரா?" என்றான்” பின் “திருதராஷ்டிரன் அவரைத் தூக்கி தன் மார்போடு அணைத்துக்கொண்டான்

பெரிய தேக்குமரத்தில் பொந்தில் முளைத்த சிறிய மரம்போலத் தெரிந்தார் அவலிப்தன் அப்போது” அவனது பெரும் கருணையை வெளிப்படுத்துகிறதுஅதே சமயம்பீஷ்மரின் ஒருகரத்தில் அடங்கிய மூன்று மழலைகளில் ஒன்று  , தன்னை பீஷ்மர் வந்து பார்க்கவேண்டும் என்று வெளிப்படும் சிறுமையையும்,  பார்வையற்றவனுக்குநிஜம் , பாரம்பரியம் கலச்சாரம் பண்பாடு போன்றவை சொற்களினால் விளக்கி  பயனில்லை என முடிவு செய்யும் விதுரன் . தரதராஷ்டிரனை பீஷ்மர் நோக்கி தள்ளிவிடுகிறான் . அந்த தள்ளல் தார்தராஷ்டிரனுக்கு தன்னை புரியவைப்பதுடன் , விதுரன் அரசில் தன்னிலை பேணவெக்கிறது  . அதன் மதப்பில்  “பலாஹாஸ்வர்.  "முட்டாள்இவன் தோற்பான் என நான் முன்னரே அறிவேன்உடல் அறிவின் ஆயுதம் மட்டுமே." விதுரன் மிகமெல்ல "அதை அவர் இந்தப்போர் வழியாகவேஅறியமுடியும் முனிவரேஎன்றான். "உன் திட்டமா இது?" என்றார் பலாஹாஸ்வர்.”

பீஷ்மரால் மறுக்கப்பட்ட சத்தியவதியின் திட்டத்தை , சரிசெய்து தனது கணக்கை வெற்றிகரமாக துவக்க நினைத்து விதரன் பீஷ்மரை சந்திக்கிறான்முடியாது போகஅவரை சீண்டுகிறான் . “கங்கர்கள் இந்தத் தலைமுறையில் தங்கள் உயரத்தை இழந்துவிட்டார்கள்என்றான் விதுரன். "அது ஏன் என நினைக்கிறாய்?" என்றார் பீஷ்மர். "அவர்கள் முன்பு இமயத்தை அண்ணாந்து நோக்கி வாழ்ந்தனர்இப்போது கீழே உள்ள சந்தைகளை நோக்கி வாழ்கிறார்கள்என்றான் விதுரன்பீஷ்மர் "ஆம்,சரியாகவே சொன்னாய்என்று சொல்லி சிரித்தார்.” அனைத்திலும் விதுரன் தோற்கும் அந்த  இடத்தில்  காலத்தின் கை தாரத்தராஷ்டிரனை கொண்டு வந்து பீஷ்மரின்முன் முற்றுப்பணிதாலாக வைக்கிறது . பீஷ்மர் மனம் மாறுகிறார்

இந்த இடத்தில் விதுரன் தனது முதல் வெற்றிக்கணக்கை துவங்க  "பிதாமகரேபேரரசியை நான் இன்றிரவு சந்திப்பேன்தாங்கள் காந்தாரத்துக்குச் செல்லும்செய்தியை அறிவிக்கிறேன்என்றான்பீஷ்மர் கவனித்து ஆனால் இயல்பாகச் சொல்வதுபோல "ஆம்அறிவித்துவிடுஎன்றார்திருதராஷ்டிரனிடம் "ஆகவேஒருபோதும் நம் கணுக்கால் எதிரியின் எந்த ஆயுதத்துக்கும் திறந்திருக்கலாகாதுஎன்றபடி தனது பாசம் என்கிற கணுக்காலை விதுரனிடம் காட்டிவிடுகிறார் .

வெளியே சென்று தன் ரதத்தில் ஏறி மாலை மயங்கிவிட்டிருந்த நகரத்தெரு வழியாகச் செல்லும்போது விதுரன் புன்னகை புரிந்துகொண்டிருந்தான்அந்திபூசைக்காகநகரத்தின் அனைத்து ஆலயங்களிலும் மணிகள் முழங்க நகரமே நகைப்பது போலிருந்தது.”

விதுரனின் அன்றைய அத்ம வாக்கிய மயக்கமாக “ரதிவிஹாரியாக அது ஒலிக்கிறது . ஆம்அப்படி ஒருவன் மண்ணில் நிகழவேமுடியாதுமுடிந்தால் அவன்மனிதனாக இருக்கவும் முடியாதுஆனால் அவனை ஒரு கனவாக சொல்லில் தேக்கி வைத்துக்கொள்ளலாம்கல்லில் தேக்கிவைக்கப்பட்ட கடவுள்களைப்போல.”காலத்தில் தேக்கிய கடவுளாக கண்ணனின் களத்தை திறந்து வைப்பதாக முடிவுகிறது.

துவாபரன் மீளவும் இங்கு தன் ஆடலை நிகழ்த்திக்கொண்டிருந்தான்வெற்றியும் தோல்வியும் தன் விளையாட்டே என அவன் சிரித்துக்கொண்டான்.” 

கிருபாநிதி அரிகிருஷ்ணன்.