Tuesday, January 24, 2017

அன்னைக்காடு

பிரபஞ்சம் இருமையால் தன்னை முழுமை செய்துக்கொண்டு தன்னை சமன்செய்துக்கொள்கிறது. இருமைகள் சமன்செய்துக்கொள்ளும்போது ஏற்படும் அசைவின்மை ஞானத்தின் ஜோதியாக பிரகாசிக்கிறது எனவே இருமைகளின் சமன் ஆனந்தமாக மட்டும் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. பிரபஞ்சத்தில் நிறைந்திருக்கும் அனைத்தும் இருமையின்பிடியில் வைக்கப்பட்டு இருப்பதாலேயே அவைகள் ஞானத்திலும் வைக்கப்பட்டு உள்ளன. ஞானத்தை அடையும் வழியில் அவை இன்பம் துன்பம்  இரண்டின் கலவையை அனுபவிக்கின்றன. இரண்டின் கலவையில் எது மிகுந்து இருக்கிறதோ அதன் சுவையை உயிர்கள் அறிகின்றன. எனவே அவை இன்பத்தில் உள்ள துன்பம் அல்லது துன்பத்தில் உள்ள இன்பம் என்ன என்பதை புரிந்துக்கொள்ளகி்ன்றன. அதனால் துன்பம் துன்பமும் இல்லை, இன்பம் இன்பமும் இல்லை என்ற வரண்ட நிலை ஏற்படுகிறது. வரண்டநிலையில் இருந்து உயிர்கள் தன்னை ஈரம் நிறைந்ததாக ஆக்கிக்கொள்ள பரிபூரனானந்தத்தை நாடுகின்றன. 

இருமைகளை தாண்டி இன்பதுன்பநிலைகளைத்தாண்டி பூரணஞானத்தில் நிற்கும் உயிருக்கு பரிபூரனானந்தம் வாய்க்கிறது  பரிபூரானானந்தம் வாய்க்கும் உயிரின் பார்வை மாறிவிடுகின்றது. அது பிரபஞ்சத்தை தனித்துப்பார்க்கவில்லை தனது தாயாகப்பார்க்கிறது அல்லது தான் தாய்மையாகி அதை தன் குழந்தையாகப்பார்க்கிறது. 

பரிபூரனானந்தத்தின் எல்லையைத்தொடுவது என்பது ஒரு உயிர் அப்படியே அந்த இடத்தில் பறந்துச்சென்று அமர்ந்துவிடும் நிலையல்ல அதற்காக அந்த உயிர் உடலால் உள்ளத்தால் காலத்தால் பஞ்சபூதத்தால் அலைகழிக்கப்பட்டு இறுதியில் சென்று அடைகின்றது. பரிபூரனானந்தத்தில் நிற்கும் அந்த கணத்தில் அதற்கு முன்காலம் பின்காலம் அனைத்தும் சுருங்கி நிகழ்காலம் மட்டும் நீண்டு ஒரு புன்னகையாய் மலர்ந்து வாசம் வீசுகிறது.

சண்டனுடன் சேர்ந்த வைசம்பாயணன், ஜைமினி சுமந்து பைலன் கூட்டத்தில் வந்து சேரும் உக்கிரசிரவஸ் தனது தாயிடம் இருந்து பிரிந்து செல்கிறான்.

கல்விக்காக ஞானத்திற்காக உறவுகளை பிரிந்து செல்லவேண்டியது மானிடருக்கு கடமையாக இருப்பதை அறியாத அந்த வயதில் அவனுக்கு அது வாய்க்கிறது. பிரபஞ்சத்தின் இருமையின் ஆடலோ, உயிர்களின்  அகம்புறம் விளையாடலோ அறியாத அந்த வயது அந்த கணத்தின் ஆனந்தமாக அவனுக்குப்படைக்கப்பட்டு இருக்கிறது. அந்த கணத்தில் நின்றுவிளையாடும் உக்ரன் தனக்கான அந்த கணத்து ஆனந்தத்தை துணுக்கு துணுக்காக பெறுகின்றான். அவன் ஆனந்தத்தை  வெட்டும் காலம் என்னும் கோடாரியால் அவன் தாய் முறிக்கப்பட்டு விழும்போது வாழ்க்கை என்னும் எருமை அவளை தின்னும்போது அவன் விதியின்நதியில் கண்ணீரோடு முருங்கைகுட்டியாய் பயணிக்கிறான். எந்தவிதி அவனை நதியில் பாதையில் இழுத்துச்சென்றதோ அதுவே அவனை வாழ்க்கை வயலில் படர்ந்து இருக்கும் அன்னைக்காட்டிற்கு அழைத்துவருகின்றது.

அன்னை என்பது ஒரு  மரம் என்று நினைக்கும்போது கண்ணீர் மிகுகின்றது. அன்னை என்பது ஒரு காடு என்று விளங்கும்போது ஆனந்தம் மட்டும் புன்னகையாய் மலர்ந்து உயிரில் நிலைக்கிறது. அன்னைக்காட்டின் வழியாக உக்ரன் தன்னை பிரபஞ்சத்தின் குழவி என்று உணரும் தருணம் அற்புதம்.

கல்வி ஞானம் ஆனந்தம் என்பது எல்லாம் பிரபஞ்சத்தை நம்மிடம் இருந்து பிரிக்கும் தடைகளை உடைப்பதுதான் என்று இந்த கதை புரியவைக்கிறது.

ராமராஜன் மாணிக்கவேல்.

Monday, January 23, 2017

பீமன்ஜெ

மாமலர் அறிவிப்பு கண்டேன். இதுதான் கதை என ஒருவாறாக ஊகித்திருந்தேன். பீமனுக்கு ஒரு நாவல் கண்டிப்பாக வேண்டும். ஏற்கனவே பிரயாகையில் பீமனுக்கு ஒரு நல்ல பகுதி இருந்தது. ஆனால் பீமனுடனேயே நாம் செல்வதுபோல ஒரு நாவல் இல்லை. கிராதம் வந்ததும் அர்ஜுனன் மேலெழுந்துவிட்டான். சொல்வளர்காடு வந்ததும் தருமன் மேலே சென்றுவிட்டான். பீமனுக்கும் ஒரு பெரிய நல்ல நாவல் தேவை

மாரிமுத்து. எஸ்.

மாமலர்Dear Jeyamohan

Great to hear about the upcoming "Mamalar". Have a wonderful journey to Shri. Mookambika temple. As you have mentioned, travel will fill the temporary void and vacuum with fresh energy. 

Could'nt wait to read about "Saktham"', "soukanthika" and Bhima's adventures!

Have a safe trip to Ma Kangali's abode. Thank you.

Warm regards 
 

Sobana Iyengar

முதற்கனல்மதிப்பிற்கும் போற்றுதலுக்கும் உரிய ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு எனது சிரம் பணிந்த வணக்கம்.

தங்களது வெண்முரசு மகாபாரத நாவல் வரிசையில் அமைந்த முதற்கனல் நாவலை தற்போது படித்து வருகின்றேன். தங்களின் எழுத்துக்களைப் படிக்கும் பொழுது மொழி ஆளுமையின் சொல்லாற்றல் திறம் மனதிலே பல கோணங்களில் சிந்திக்க வைத்துச் செல்கிறது. பிறருடைய படைப்புகளில் காண கிடைக்காத அரிய சொற்கள் அர்த்தமுடையதாகவும் ஆழமுடையதாகவும் கவித்துவம் நிறைந்ததாகவும் அமைக்கப்பட்டுள்ளதை நாவலில் படித்துணர்கிறேன்.


உதாரணமாக முதற்கனல் நாவலில் சத்தியவதியிடம் பீஷ்மர் ‘மனம் திறக்காமல் வயிறு திறந்தால்’ அங்கே முளைவிடும் கருவின் பழி என்னையும் குருகுலத்தையும் விடாது’ என்று கூறுகையில் சொல்லாற்றலின் வலிமை மிகுகிறது.  ‘பிறவியிலிருந்தே விழியற்றவன் என்பதை ‘முடிவிலா இருள்’ எனப் பெயரிடப்பட்ட தீர்க்கசியாமர்’ என்னுமிடத்தில் கவித்துவம் நிறைந்துள்ளது. இதனை போன்று கூறுவதற்குரிய தடங்கள் நாவலில் ஏராளம். உவமை, உருவகம், படிமம், மறுஆக்கம் போன்றன நாவலின் பல இடங்களில் சிந்திப்பதனை செழுமையடையச் செய்கின்றன.
   

நான் தங்களது வெண்முரசு நாவல்களில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டிருக்கின்றேன். ஆகையால் ஆய்வு நிறைபெறும் தருணத்தில் நேர்கானல்காக தங்களை அணுகுவதற்கு ஆசீர்வாதத்தோடு அனுமதி வழங்கி வாய்ப்பு நல்கும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
                                                                                இப்படிக்கு
                            தங்கள் வாசகி
                                    சி.லலிதா.

Sunday, January 22, 2017

சாக்தமலர்ஜெ

ஒவ்வொருநாவல் எழுதுவதற்கு முன்பும் நீங்கள் அடையும் பதற்றம் துயரம் எல்லாவற்றையும் எழுதியிருக்கிறீர்கள். மீண்டும் மீண்டும் பயணம்செய்கிறீர்கள். கோயில்கள் உங்களுக்கு உதவுகின்றன. இத்தனை கஷ்டப்பட்டாலும் காலப்போக்கில் எழுதிமுடித்தபின் எழுதாமலிருக்கும்போது பெரிய சலிப்புதான் வரும் என நினைக்கிறேன். இதையெல்லாம் எழுதும் இந்தக்காலகட்டம்தான் பொற்காலம் இல்லையா?
சாக்தத்தை எழுதும் மாமலர் விரியட்டும்

சாமிநாதன்

விளையாட்டுஅன்புள்ள ஜெ

வெண்முரசு நாவல்களில் இதுவரை வந்தவற்றில் எனக்கு மிகவும் பிடித்தமானது காண்டீபம்தான். அதில் அர்ஜுனனின் யாத்திரைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை. முதலில் ஒரு கனவுநிலமாக நாகர் உலகம். அடுத்து உண்மையுலகம். ஆனால் அதில் வேர்களின் உலகம் இருக்கிறது. அடுத்தது வெறும் யதார்த்த அரசியல்களம். மூன்று உலகங்களிலும் அவன் உலவுகிறான். இவற்றில் முக்கியமானது மணிபுரிதான். அங்கே ஆண் பெண்ணாவது பெண் ஆணாவது என ஏகப்பட்ட உள்ளர்த்தங்கள் கொண்ட ஒரு பெரிய விளையாட்டே நிகழ்ந்திருக்கிறது. அபூர்வமான  ஒரு பகுதி அது

வெண்முரசு நாவல்களை ஒப்பிட்டு வாசிக்கலாம். நன் காண்டீபத்தையும் கிராதத்தையும் ஒப்பிட்டு வாசிக்கவேண்டும் என நினைக்கிறேன்

செல்வராஜன்


ஓநாய்ஜெ

சகுனியை ஓநாய் கடிக்கும் இடத்தைத்தான் நேற்று மீண்டும் வாசித்தேன். அந்த ஓநாய்க்கும் அவனுக்குமான உரையாடலே ஒரு கனவுவெளியில் அற்புதமாக அமைந்துள்ளது. அவன் அந்தநாயை அடையாளம் கண்டுகொண்டதுமே அது கடிக்கிறது. அது தாக்கியது என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். தாக்கவில்லை, அது அவனுக்குள் தன் விஷத்தை செலுத்திவிட்டது என்று இப்போது புரிகிறது

அந்தப்பாலைவன நஞ்சுதான் இவ்வளவு ஆட்டம் காட்டுகிறதென்பது ஆச்சரியமான விஷயம். நான் வாசித்தபோது அந்த ஓநாய்தான் கணிகராக மாறிகூடவே வந்துள்ளது என்று தோன்றியது

மகேஷ்

கிராதம் முழுமைத்தோற்றம்


அன்புள்ள ஜெ

கிராதம் முடிந்துவிட்டது. அடுத்த நாவல் எப்போது வரும் என்று காத்திருக்கிறேன். இப்படி தொடர்ச்சியாக வாசிப்பதிலுள்ள சிக்கல் என்னவென்றால் முறையாக வாசித்தோமா நாவலின் முழுவடிவமும் மனதில் வந்ததா என்ற சந்தேகம் இருந்துகொண்டே இருப்பதுதான்.

வெண்முரசு நாவல்களை வாசிப்பதிலே பலவகையான விஷயங்கள்தேவையாகின்றன ஒவ்வொரு நாவலுக்கும் ஒரு வடிவம் உள்ளது. அந்த வடிவத்தை முழுமையாக வாசித்து மனதிலே அடையவேண்டும். அதேமாதிரி ஒட்டுமொத்தமாக வெண்முரசின் ஓட்டமும் நினைவில் நின்றாகவேண்டும்

உதாரனமக கிராதம் ஒரு தனிநாவலகவே வாசிக்கலாம். அர்ஜுனனின் திசைவெற்றிகளும் சிவனைப்பார்த்தலும் ஒரு சரியான ஒருமையுடன் உள்ளன. ஆனால் வெண்முரசு ஒரு பெரிய சமூக சித்திரத்தை அளிக்கிறது. அதை பின்னாடி ஒரு போராக ஆக்கப்போகிறது. அதில் நால்வேதம் ஒரு தரப்பாகவும் வேதாந்தம் ஒரு தரப்பாகவும் இருக்கப்போகிறது அதில் வைத்து கிராதம் நாவலை வாசிக்கவேண்டியிருக்கிறது.

இரண்டுவாசிப்புகளும் சேர்ந்தே நடந்தால்மட்டுமே அது சிறப்பான வாசிப்பாக அமையும். ஒட்டுமொத்தமாக வாசிப்பதற்கு புத்தகம்தான் சரியான வழி என நினைக்கிறேன்

எஸ்.ஆர். சிவராமன்

வேதமோதல்

அன்புள்ள ஜெ

இப்போதுதான் மீண்டும் முதற்கனலை வாசித்துக்கொண்டிருக்கிறேன். முதற்கனலை நான் வாசிப்பது இரண்டவது தடவை. முதலிலே வாசித்தபோது அதிலுள்ள கதையின் வேகம்தான் என்னைக்கவர்ந்தது. இப்போது வாசிக்கும்போதுதான் இன்றுவரை நீண்டுவந்துகொண்டிருக்கின்ற வேதங்களின் மோதல் அதில் இருப்பதைக் காணமுடிகிறது. ஆஸ்திகன் நாககுலத்திலிருந்து வருகிறான். நால்வேதங்களின் குரலாக வியாசர் வருகிறார். அவர்கள் ஒருவரை ஒருவர் அறிந்துகொள்கிரார்கள். அங்கீகரிக்கிறார்கள். அது எப்படி நடந்தது என்றுதான் வெண்முரசு பேச ஆரம்பிக்கிறது. பன்னிரண்டாயிரம் பக்க அளவிலே பேசிக்கொண்டிருக்கிறது

கிராதம் வாசிக்கும்போது தோன்றியதுவேதமும் பழங்குடிமரபும் சந்திக்கும் இடத்திலே சிவன் இருக்கிறார் என்று

சுந்தரராஜன்

திருணவிரதன்


அன்புள்ள ஜெ

வெண்முரசு நீலம் நாவலை நான்காவது முறையாக இப்போது வாசித்துக்கொண்டிருக்கிறேன். பல தளங்களில் நான் அந்நாவலை வாசித்திருக்கிறேன். ஏனென்றால் நான் வாசிக்க ஆரம்பித்தது மிகவும் பிந்தித்தான். ஆகவே நீலம்பற்றி எழுதப்பட்ட அனைத்தையும் நானே முழுமையாக வாசித்தேன். அந்த வாசிப்புகளுடன் என்னுடைய வாசிப்புகளையும் சேர்த்துக்கொண்டேன். பல அர்த்தங்கள்.

நான் எதையுமே தவறவிடவில்லை என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். இந்தமுறை வாசித்தபோதுதான் ஒரு மின்னல்போலத் தோன்றியது ஒருகருத்து. திருணவிரதன் என்னும் அசுரனின் கதை எதைச்சுட்டுகிறது? கண்ணன் யாதவன், புல்லைச் சார்ந்து வாழ்பவன். திருணம் என்றால் புல். புல் பறவையாகவும் புயலாகவும் வந்து யாதவனை கொல்லமுயல்கிறது. எது அவன் வாழ்வோ அதுவே வருகிறது எதிரியாக. ஆனால் அந்நீலப்பீலியின் ஓரிதழை அசைக்கும் மோகப்பெரும்புயலேதும் இல்லை என்று ஆய்ச்சி கண்டுகொள்கிறாள். இந்த நுட்பத்தையே நினைத்துக்கொண்டிருந்தேன்

லட்சுமணன்

அறுமரபில்..


பாசுபதத்தில் இருந்து  காபாலிகம், காளாமுகம், வாமம், மாவிரதம், பைரவம் என்று ஐந்தாக பிரிந்து அவை மேலும் இருநிலையாலும் ஒருநிலையாலும் பிரிந்து விரிந்துச்செல்கிறது என்பதை சுட்டி முதன்மையான ஆறுசைவத்தை கீழ்கண்டவாறு விளக்குகின்றார் ஆசிரியர் ஜெயமோகன்.

//காலப்பேருருவன் என அச்சொல்லை விரித்தவர் பைரவர். தன்னை ஒறுத்து எஞ்சுவதே அது எனக் கொண்டவர் மாவிரதர். இங்குள அனைத்தும் அன்றி பிறிதே அது என உணர்ந்தவர் வாமர். இருளுருவெனக் கண்டவர் காளாமுகர். இறப்புருவென எண்ணுபவர் காபாலிகர். இப்பசுவை ஆளும் பதி என முன்னுணர்ந்தவர் பாசுபதர். அறுவகை அறிதலாக நின்றுள்ளது அது.//

கிராதம் நாவல் சிவத்தின் இந்த அறுவகை அறிதல்களை வண்ணமாக வடிவாக சித்திரமாக சிற்பமாக உயிரும் உடலும் கொண்ட மானிடரூபமாக செய்துக்காட்டுகின்றது. கிராதம் காட்டும் சிவசொருபங்களைப்பார்க்கும்போது அவர்கள் யாரோ எவரோ அண்டமுடியதவர்கள் அல்ல அவர்கள் இதோ நாம் நிற்கும் மண்ணில் நம்மோடு ஒருவராக நின்று கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலக்கும் உரியவர்களாக நிற்கிறார்கள் என்று காட்டுகின்றது. அவர்களை நம்போன்றவர்கள் என்று எண்ணும் அதே கணத்தில் நம்மைத்தாண்டி பிரபஞ்சமாய் விரிந்தவர்கள் என்றும் கைக்குவிக்க வைக்கிறத கிராதம்.

வேதம்கற்று கற்றவேதத்தின் ஒளிவடிவாய் எரியோம்பி வாழும் அத்ரி மகரிஷி நெஞ்சத்தில் ஒரு இருள் எழுகிறது. விளக்கின் கீழ் இருள் என்பதுபோல் வேதம் விளையும் உள்ளதில் எழும் இருள் ஆணவமாய்  மெய்மையின் எதிர்திசையில் நின்று அவரை அசைத்துப்பார்கிறது. ஆணவ இருளில் மூழ்கி மெய்மையின் ஒளியை தவரவிடும் அத்ரியால் மெய்மைவிளை நெற்வயலாகும் வேதம் இருள்விளையும் முள் காடாகிறது. அந்த காட்டில் உலவும் பிரமன் சொல்லின் வடிவாகிய தன் சக்தி கலைவாணியை விட்டு, மேதாவை கூடி நெறி இழக்கிறான். மெய்மை அழிந்து எங்கும் ஆணவ இருளே நிறைகிறது. அந்த ஆணவஇருளில் தன்னையும் மறந்தநிலையில் நிற்கும் பிரமனை அழிக்க ஆதிசிவனால் உற்பத்தியாகும்  பைரவன் தன் இருவிரலால் பிரமன் தலையைக்கிள்ளி தன்னை ஆணவத்தின் இருளில் மூழ்கடித்துக்கொள்கிறான்.

அத்ரி முனிவரில் இருந்து பிரமனுக்கும், பிரமனில் இருந்து பைரவனுக்கும் அழியாமல் தொடர்ந்துக்கொண்டு இருக்கும் ஆணவம் அழியவில்லை, ஆனால் ஆணவத்தை ஏந்தும் பாதிரங்கள் மாறுகின்றன. கொலைபழியால் ஆணவத்தால் பிடீக்கப்பட்டு நிற்கும் பைரவன்  தான் கொண்ட பழியும் ஆணவமும் அழிவதற்கு அதற்கு அப்பால் நிற்கும் ஆதிசிவத்திடம் சென்று தனது  பழி ஆணவம் விடுபட வழிகேட்கின்றான்.

தன்னைமறந்து தெய்வத்தை இகழ்ந்து பிரம்மத்தின் எல்லையை கடந்து பித்தாகி நிற்கும் நிலை ஒன்று அனைவருக்கும் வாய்க்கிறது. அதை அறிந்து தெளிவதே மேதமை அதை அறியாதநிலையில் இருந்தால் மேதமை  வெறும் பித்து என்பதை பைரவன் உணர்கின்றான். இரந்து அலைந்து தன் குருதியை தானே உண்டு   தன்சுவை அறிகின்றான். தன் மேதமையை தானே உண்டு ருசிக்கவேண்டும் அப்போது மேதமை பித்தாவது இல்லை. தன் ஆணவத்தை தானே உண்டு சுவைக்கவேண்டும் அப்போது ஆணவம் பழியாவது இல்லை என்று காட்டி நிற்கிறது பைரவசிவம்.

கைக்கபாலத்துடன் இரந்துண்டு வாழும் பைரவசிவம் தன் குருதியை தானே உண்டு முடிக்கும் போது தன் கைக்கபாலம் கழன்றுவிழ தூய்மையாகி நிற்கிறது.

தன் குருதியை தானே உண்பதற்கு முன்புவரை பைரவசிவம் மேற்கொள்வது மாவிரதம். தன்குருதியை தானே உண்டு தூய்மையாகி பழியற்று ஆணவம் அற்றுநிற்பது பைரவசிவம்.

தேவதாருக்காட்டுக்குள் நுழையும் பைரவசிவம் அங்குள்ள அனைத்து உயிருக்குள்ளும் இருக்கும் சீவனின் ஒளிவெளிக்குள் மறைந்திருக்கும் இருளை வெளிக்கொண்டு வருகின்றது. ஒளிக்கண்டு ஆனந்தப்பட்ட தாருகாவனத்து சீவன்கள் தங்களுக்குள் உள்ள இருள்கண்டு நோவும்போது அதற்கெல்லாம் அப்பால் என்று பைரவசிவம் நிற்கிறது. அதை அத்திரிமுனிவரின் பத்தினி அன்னை அநசுயா காண்கிறாள்.

பைரவன் காட்டாளனாக காமுகனாக வேதத்திற்கு புறம்பானவனாக தெரியும்போது அன்னை அநசுயா அவனை தன் குழந்தை என்று சொல்கின்றாள். அவன் மான்மழுமதி சூடிய  சிவன் என்கிறாள் அதன் பின்னே அத்ரி அவனை ஆதிசிவன் என்று உணர்ந்து அவன் கால்பட்டு உருண்ட கல்லை கிராதசிவமாக வழிபடுகின்றார். பைரவசிவம் அநசுயாவின் மூலமாக வாமனசிவமாக எழுகின்றது.
தங்களுக்குள் உள்ள இருளை வெளிக்காட்டி அதன் மூலம் தங்களை சிறுமைசெய்து, அந்த இருளை வென்று செல்லும் வாமனசிவமாகி நின்று செல்லும் பைரவசிவத்தை அபிச்சாரவேள்வி செய்து அழிக்க நினைக்கும் தாருகாவனத்து ரிஷிகளின் வேள்வியில் இருந்து எட்டுதிசையானைகள் எழுந்து பைரவனை கொல்லச்செல்கின்றது. திசையானைகளின் தோல் உரித்து ஹஜசம்காரமூர்த்தியாக நிற்கிறான் வாமனசிவமாகி மேல் எழுந்த பைரவசிவம்.

உலகம் முழுவதும் மண்டிக்கிடக்கும் இருள் திசையானைகளாய் தோன்றுகின்றன, அவற்றின் தோல்உரித்துப்போர்த்தும்போதே காளமுகசிவம் தோன்றுகின்றது. காதுக்கு ஒளியாய், கண்ணுக்கு ஒளியாய், வாயிக்கு சுவையாய், நாசிக்கு மணமாய், உடலுக்கு உணர்வாய் இங்கு மானிடன் அறியும் அனைத்து சுவைகளிலும் படர்ந்து கலந்து இருக்கும் இருள். அது கொலைகொள்ளும் கொம்புள்ள யானை அதை கிழித்துபோர்த்தி இருளில் அறியும் மெய்மையென காளமுகசிவம் படைக்கப்படுகிறது.

பிரபஞ்சவடிவாக விளங்கும் ஆதிசிவத்தில் இருந்து எழுந்துவரும் பைரவசிவம், மாவிரதசிவமாகி, மாவிரதசிவம் வாமசிவமாகி, வாமசிவம் காளாமுகசிவமாகி கிளைத்துபரவுவதை கரிபிளந்தெழுதல் என்று காட்டுகின்றார் ஆசிரியர். கரிபிளந்தெழுதல் என்ற தலைப்பின் வழியாகவே மானிடமெய்மையின் உள்ளே உள்ள கறுமையை அல்லது இருளை கண்டு அடைந்து அதற்குள் உள்ள மெய்மை என்ன என்பதை இந்த சிவசொருபங்கள் காட்டுகின்றன.

பைரவசிவம், மாவிரதசிவம்,வாமனசிவம்,காளமுகசிவம் ஆணவத்தின் பிடியில் உள்ள இருளை அறிந்து மேல் எழ வழிகாட்டுகின்றது. கபாலிகசிவம் ஆணவத்திற்கு முன்பு உள்ள அச்சத்தை வெல்வதை காட்டுகின்றது.    தனது குடும்பத்தில் இருந்து பிரிந்து வைசயம்பாயணன் உலகத்தை குடும்பமாக எண்ணி வெளியேறும் நாளில் எந்ததிசையில் செல்வது என்று திக்கற்று நிற்கும் நிலையில் சந்திக்கும் பிச்சாண்டவர் சொல்லும் சத்ருஞ்சயன் கதையில்வரும் பிச்சாண்டவர் கபாலிகசிவமாக எழுகின்றார். விலகல் ஐயம் வெறுப்பு நீங்கி தன் காதைதானே சுட்டு சமைத்து உண்ணும் இடத்திற்கு வந்து நிற்கும் பிச்சாண்டவர் சத்ருஞ்சனையும் விலகல் ஐயம் வெறுப்பு கடந்தநிலைக்கு அழைத்துச்சென்று கபாலிகசிவமாக மாற்றுகின்றார். மனிதனிடம் உள்ள அச்சத்தை வெல்ல சொல்கிறது கபாலிகம். அதனால் அ்து இறப்பை அஞ்சாதே என்கிறது. எதிலிருந்தும் விலகாதே என்கிறது. எதையும் ஐயப்படாதே என்கிறது. எதையும் வெறுக்காதே என்கிறது.  // அச்சத்தை அளவையாக்கி அவன் இப்புவியை அறிகிறான். எனவே அவன் அறிவதெல்லாம் அச்சம் ஒன்றையே.”// கபாலிகம் இப்புவியை அச்சமின்மையால் அறிகின்றது.


விலக்கம் ஐயம் வெறுப்பு இன்றி அச்சம், ஆணவம் இன்றி எல்லோரும் ஓர் நிரை எல்லோரும் ஒர் குடும்பம் எல்லோரும் ஒர் உயிர் எல்லோருக்கும் ஓரானந்தம் என்று கயிலைமலை ஊரும் குடியும் மக்களும் காட்டப்படும் இடத்தில் பாசுபதசிவம் நிற்கிறது.


கிராதம் நாவலில் அர்ஜுனன் அஸ்திரங்கள் பெறுவதைக்காட்டும் நிகழ்வுகளை சதையாகக்கொண்டால் பாசுபதம் பைரவம் மாவிரதம் வாமனம் காளமுகம் கபாலிகம் என்னும் சிவச்சொருபங்களை எலும்பாகக்கட்டிவைத்து  வடிவம் கொடுக்கிறது நாவல்.


காளிகக்காட்டில் காளியும் காளையனும் கொள்ளும் காதல்வழியாக உயிர்களின் உள்ளத்தில் உள்ள இருமைகள் அவர்களை முன்னுக்கு பின்னாக அலையவிட்டு தன்னைத்தான் நோக்கி தெளியவைத்து பிறக்கவைத்து அவர்களை காதலில் மாதொருபாகனாக எழச்செய்து உலகை சிவசக்தி சொருபமாகக்காட்டுகிறது கிராதம்


தேடித்தெளிதல், படைத்துதெளிதல், நோக்கித்தெளிதல், விளையாண்டுதெளிதல் என சீவக்கூட்டத்தை அனல் எழுப்பி மெய்மைகாட்டும் சோதிச்சிவம். சிவத்திற்கு முன்பு ஒரு அச்சம், ஒரு ஆணவம், ஒரு அறியாமை, ஒரு இருள். ஓரு மரணம் தடையாக சுவராக இருக்கிறது அதை கடந்து சிவத்தை அடை என்கிறது கிராதம்.


கிராதம் நாவலில் அர்ஜுனன் மெய்மை அறிகின்றான். வாசகன் சிவத்தின் மெய்மையை அறிகின்றான். 


ராமராஜன் மாணிக்கவேல்.