Saturday, April 30, 2016

பீங்கான் ,மேலும்

 
 
அன்புள்ள ஜெ

வெண்முரசு விவாதங்கள் தளத்தில் 'பீங்கான்' சொல் பற்றிய இன்றைய பதிவு - மூர்த்திஜி சொல்லியிருப்பது போல எனக்கும் அந்த உணர்வு இருந்தது.

தற்செயலாக சில வாரங்களுக்கு முன் நம் சொல்புதிது குழுமத்தில் மொழி ஆராய்ச்சியாளர் நா.கணேசன் அவர்கள் இது தொடர்பாக எழுதியிருந்தார். முதல் பகுதி உங்கள் பார்வைக்கு. 

அதாவது, மஞ்ச நிறமுள்ள பீதர்கள் உருவாக்கும் குடுவைகள், கலங்கள் என்ற அர்த்தத்தில் இந்த பெயர் வந்திருக்கலாமா ??

****
பித்தம் ‘yellow', பித்தக்குருவி ‘Indian pitta', பித்தளை ‘brass', பித்திகம் ‘Canunga flower'

இந்தியா முழுதும் பரவியியுள்ளவை பித்த வண்ணக்குருவிகள். தோட்டக்கள்ளன், பொன்னுத்தட்டான், மஞ்சநெஞ்சான், கவி (மலையாளம்), பித்தி (வடமொழிகளில்) என்ற பெயர்கள் உண்டு. இந்தியாவில் இருக்கும் Pitta பறவைகள் அனேகமாக மஞ்சள் அடியுடல் கொண்டவை. எனவே, பித்தக்குருவி எனப் பெயர்.


பீ என்ற அடிப்படையான தாதுவேரின் பொருள் “மஞ்சள்”(நிறம்). எனவே, பீதம்/பீதகம் = மஞ்சள், பொன். கோவை (பழம்) கொவ்வை (கொவ்வைச் செவ்விதழ்) ஆகும். 

அதுபோல், பீத-: பித்தம். பித்தம் = மஞ்சள் (வாதம், பித்தம், கபம்). பித்தக்காமாலை = மஞ்சட்காமாலை.

பீ- பீகு: பிங்கல - பொன்னிறத்தில் உள்ளவனுக்கு பிங்கல எனப் பெயர். பிங்கலந்தை - பிங்கலனை குலத் தலைவனாக/தந்தையாக கொண்ட நிகண்டுகாரர்.   போ- போகு- போங்கு போல, பீ- ‘மஞ்சள்’ பீகு:பீங்கு- பிங்கல.

பீத-பித்த உறவைப் பார்க்க பீதல-:பித்தளை ‘brass'. செண்பக ஜாதிகளில் இருவகைகள் உண்டு, ஒன்று, சங்க இலக்கியத்தில், “பெருந் தண் சண்பகம்”, ஈரப் பசை கொண்ட பூவிதழ்கள், உயர்செண்பக மரம் இது.

இன்னொரு செண்பகம் சிறுசெண்பகம். இதன் பெயர்: பித்திகம்/பித்திகை. மனோரஞ்சிதம் என்று இக்காலத்தில் சங்ககாலப் பித்திகைப் பூ சொல்லப்படுகிறது"
 
மதுசூதன் சம்பத்
 
அன்புள்ள மதுசூதன்
 
உண்மைதான்
 
சொல்லின் வேர் எங்கிருக்கும் எனச் சொல்லமுடியாது. நீங்கள் சொன்னதுபோல அமைய வாய்ப்புள்ளது. பீத என்பது மிகமிகத் தொன்மையான சொல்
 
ஜெ

கன்னி ராசி

 
 
நாவலின் இந்தப் பகுதி கன்னிமாதத்தில் (பூரட்டாதி) நிகழும் தேவியின் ஆடல். கன்யாவனத்தில் நிகழ்வது பொருத்தம். ஒவ்வொரு மாதத்திலும் அதற்கேற்ற களத்தில் ஆடல்கள் நிகழ்வதைக் கவனித்திருக்கலாம். மேடமாதத்தில் இந்திரன் மேடமாக வருதல். இடவமாதத்தில் ஜரை அன்னையால் இடப நன்னாளில் தோன்றிய குழந்தை எருதன் ஜராசந்தனாக ஆதல். மிதுனமாதத்தில் இணையரின் (நரநாரணர்) வெற்றி. கடகமாதத்தில் கணிகரின் எழுச்சி. சிம்மமாதத்தில் இந்திரப்பிரஸ்தத்தின் சிம்மம் ராஜசூயத்திற்காக எழுதல். இப்போது கன்யாவனம்.

மொத்த மகாபாரதக் கதையையும் இந்நாவலின் பன்னிரு படைக்களக் காய்கள் ஒன்றை ஒன்று துணைத்தும் பகைத்தும் வெட்டியும் ஒட்டியும் ஆடும் ஆடலாக மட்டுமே வாசிக்கமுடியும் போலும்...
 
திருமூலநாதன்

சீர்மை என்னும் சீரழிவு: (பன்னிரு படைக்களம் 30)நோய்க்குப் பிந்தைய அஸ்தினபுரி சீர்மையான ஓர் நகராக மாறியிருக்கிறது. ஒவ்வொன்றும் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்கிறது. ஒவ்வொரு சிறிய பிழைகளும் கண்டறியப்பட்டு களையப்படுகின்றன. பிழை செய்பவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள். எங்கும் சட்டத்தின் ஆட்சி. அமைதி தவழும் அழகான நகரம். முதன் முறையாக அஸ்தினபுரிக்குள் நுழையும் ஒருவன் தற்காலத்தின் ஞாயிற்றுக் கிழமையில் ஒரு ஐரோப்பிய நகரில் நுழைந்தால் அடையும் அனுபவத்தை அடைவான். எனக்கு அது உண்டு. நகரின் ஆழ்ந்த அமைதி முதலில் நமக்குள் ஏற்படுத்துவது அச்சத்தையே. நம்மையறியாமலேயே மெதுவாகவே உரையாடுவோம். தொலைகாட்சி சத்தங்கள் குறைக்கப்படும். குழந்தையின் குரல் கூட குறைந்தாக வேண்டுவதற்காகக் கண்டிக்கப்படும். நம்மையறியாமலேயே உள்ளம் விழிப்பு நிலையில் தான் இருக்கும், எப்போதும். சில நாட்களுக்குப் பிறகு நமக்கு அவை பழகிவிடும். இந்த ஒத்திசைவு என்பது நமக்கு நாமே விரும்பி இட்டுக் கொள்ளும் தளைகள்.

துரியனின் மாற்றம் தான் இதில் நமக்கேற்படும் உச்ச கட்ட அதிர்வு. அவனைப் பார்க்கச் செல்லும் அஸ்வத்தாமன், ஜெயத்ரதன் மற்றும் சிசுபாலன் மூவருமே அவ்வச்சத்தை உணர்கின்றனர். முதலில் அவர்கள் அந்த அறைக்குள் நுழையும் போதே அவர்களுக்கு அந்த அச்சம் ஆழ்மனதில் தோன்றியிருக்கும். நண்பர்களைப் பார்த்தவுடன் உச்ச கட்ட உற்சாகக் குரலில் எழுந்து வரும் துரியனையே அவர்கள் அதுவரை அறிந்திருந்தார்கள். முற்றிலும் மாறாக முகமன் கூடச் சொல்லாமல், ஆடாமல் அசையாமல் பார்வையை மட்டுமே அளித்த துரியன் அவர்களுக்குள் மட்டுமல்ல நமக்குள்ளும் தான் ஒரு அதிர்வைத் தருகிறான். துரியன் மொத்தமாகவே பேசுவதைக் குறைத்துவிட்டிருக்கிறான். கர்ணனே பேசுகிறான். அவனே முடிவுகளை அறிவிக்கிறான். அவனே உணர்வுகளையும் காட்டுகிறான்.
துரியன் மிகச் சீரான தாழ்ந்த குரலில் பேசுகிறான். பெரும் அதிகாரம் உள்ளவர்களின் தாழ்ந்த குரல் ஏற்படுத்தும் அச்சமும், அது கடத்தும், உணர்த்தும் பொருளும் உடனடியாக நிறைவேற்றப்படும் ஒரு கட்டளையாகவே அமைவதை என் அனுபவத்திலும் நான் உணர்ந்திருக்கிறேன். அத்தகைய குரலிடம் நாம் பூசலிட முடியாது, அதனுடன் நாம் மறுதலிக்க முடியாது, அதனுடன் நாம் விவாதிக்க முடியாது. நம்மால் முடிந்ததெல்லாம் ‘ஆம், அவ்வண்ணமே’ என்று சொல்வது மட்டும் தான். மீறிச் சொன்னால் ஒரேடியாகச் சென்று விட வேண்டியது தான்.

அந்த குரல் தான் விதுரரை வஞ்சம் கொள்ளச் செய்கிறது. இத்தனைக்கும் அவன் அவரிடம் சொன்னவை நான்கே சொற்கள். “இது என் ஆணை”, “செல்க” – முகத்துக்கு நேராக அமைச்சராக உங்கள் எண்ணம், உங்கள் ஆலோசனை அல்ல, என் சொற்கள், என் எண்ணம், என் விருப்பம் மட்டுமே இனி இங்கு செல்லும். இனி உங்கள் அறிவு தேவையில்லை என்பதே அந்தச் சொற்களின் முழுக் கனமும். விதுரரின் தன்னுணர்வு தோன்றிய நாள் தொட்டு அவருள் இருந்து வந்த அச்சம், அவருள் இருந்து வந்த சூதர் என்ற தாழ்வுணர்ச்சி அத்தருணத்தில் பொங்குகிறது. அதுவே வஞ்சமாகவும் திரிகிறது. இவ்வஞ்சம் நிச்சயம் துரியன் அழிய வேண்டும் என்று விரும்பும் வஞ்சமல்ல. ஆனால் துரியன் ஆணவம் புண்பட வேண்டும் என்று விழையும் வஞ்சம். விதுரனுக்கு இத்தகைய அவமானம் திருதாவின் மரணத்திற்குப் பிறகே நிகழும் என்று திருதா உறுதியுடன் இருந்தார். ஆனால் இப்போது அவர் இருக்கும் போதே அது நிகழ்கிறது. ஒரு வகையில் அவ்வாறு உறுதியுடன் இருந்த திருதா மறைந்து விட்டார் என்று கூட இந்நிகழ்வைப் பார்க்கலாம். இனி துரியனின் செய்கைகளை கேள்வி கேட்பதில் திருதாவின் பழைய அற உணர்வு அதே கூர்மையுடன் இருக்காது.

மீண்டும் வெண்முரசு உவமைகளில் உணர்வுகளைக் கடத்துகிறது. விதுரர் உள்ளே நுழைகையில் திறக்கும் கதவின் ஒலி வலிக்கூச்சல் போல் ஒலிக்கிறதாம். இந்நிகழ்வுகள் அனைத்தையும் ஒரு அந்தணரா, ஷத்ரியரா என்று முடிவாகாத ஒருவரின் மகனின் பார்வையில் சொன்ன விதத்தில் ஜெ ஒரு படைப்பாளியாக முத்திரை பதிக்கிறார்.

அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்

மெய்மையின் அளவு
மனிதன் எத்தனை பெரியவன்? உடல் அளவுக்கு அல்ல ஆணவம் அளவுக்கு பெரியவன். தசரதம் ஓட்டிய தசரன். பத்துதலையுடைய ராவணன், நூறு கைகள் உடைய கார்த்தவீர அர்ஜுனன். இறைவனையே குள்ளனாக்கிய மகாபலி. பெத்துப்போடும் அன்னையிடமே பலநூறாக பிறந்துக்கொண்டே இருந்த இரத்தபீஜன். போய்க்கொண்டே இருக்கிறது மானிட ஆணவத்தின் பட்டியல். 

மெய்மை எத்தனை சிறியது ஒரு சொல் அளவுக்கு, அதையும்விட உள்ளத்தில் ஒரு சொல் விழி்க்கும் இடமளவுக்கு சிறியது.

உண்மையில் மனிதன் அத்தனை பெரியவனா? மெய்மை அத்தனை சிறியதா? கௌசிகன் காணும் கனவு மாற்றிப்போடுகிறது. இன்சோலையின் அக்கறையில் உள்ள வெள்ளைப்பசுவை காணும் கௌசிகன் அதனை அணுகும்தோறும் சிறித்து, அதன் கால்களுக்கு இடையில் சென்று நிற்கையில் கடுகென சிறித்துவிடுகிறான். பசுவை அண்ணாந்துப்பார்க்கிறான். அந்த பசு அவன் தலைக்குமேல் வெண்முகில் குவிலென காட்சியளிக்கிறது. கௌசிகன் காணும் பசு அக்கறையில் இருப்பதுதான் மனிதன் இக்கறையில் எவ்வளவு தூரத்தில் உள்ளான் என்பதன் அடையாளம். இங்கு இவன் உயரமும் அங்கு அதன் உயரமின்மையும் இடமாறு தோற்றப்பிழையாகிவிடுகின்றன. 
 
அந்த பசு மெய்மை அதன்கால்கள் வேதம் அதன்பால் மெய்மை அறிந்தவர் உண்ணும் அமுதம். வேதத்தின் முன்னும் மெய்மையின் முன்னும் மனிதன் ஒன்றுமே இல்லை. வெறும் புல். அந்த புல் பிரமனின் முன்பு பிரமஞானியாக முடியும்.

மனிதன் வாழ்க்கையில் தேடிச்சேர்க்கும் வாங்கிக்குவிக்கும் அனைத்தும் ஒருநாள் ஒன்றுமில்லை வெறும் குப்பை என்று அகம் உணரும். காரணம் மனிதன் ஆணவம் சினம் விழை என்று தேடிச்சென்ற இன்பம் மெய்மை ஒன்றுதான். அது அவனுக்கு தெரிந்தும் புரியாமல் இருக்கிறது. அன்று மனிதனை அது விரக்தியில் தள்ளுகிறது. 

//அடைந்தவையும் ஆள்பவையும் சிறுத்து பொருளற்றவையாக மாறின. ஒவ்வொன்றையும் கடும் சினத்துடனும் அருவருப்புடனும்தான் அவன் எதிர்கொண்டான். மனைவியர் அகன்றனர். மைந்தர் அஞ்சினர். செல்வம் குப்பையென்று தோன்றியது. நாடு வெறும் மண்ணென்றாகியது. முடியும் கோலும் கொடியும் அரியணையும் கேலிநாடகமாக தோன்றின//

செல்வம் மனைவி மக்கள் நாடு சுற்றம் என்று எத்தனையோ திரைகளுக்கு பின்னால் நிற்கும் மனிதன் விழையும் ஒன்று அவன் நினைவுக்கு வந்து நெஞ்சறியாத ஒன்று மெய்மையை அடைதல். அதை அடையவே மனிதன் பிறக்கிறான். அதை அடையாமல் வாழவே உலகம் அவனுக்கு பழக்கப்படுத்தப்படுகிறது. ஆனால் மெய்மை வேதக்கால்கொண்டு அமுதம் நிறைந்த காமதேனுவாய் கனவில் வந்துவிடுகிறது. கனவில் கண்டவர்கள் எல்லாம் அதை அடைந்துவிட முடியுமா? ஆணவமும் சினமும் விழைவும் கொண்ட மனிதனுக்கு அது எளிதல்ல. ஆனால் செய்யமுடியும் என்று கௌசிகன் காட்டுகின்றான்.

// நான் பின் திரும்புபவன் அல்ல. உறுதிகொண்டபின் வெல்வதோ இறப்பதோதான் என் வழிஎன்றான் கௌசிகன்.//

மெய்மையை அடைய இந்த வைராக்கியம் வேண்டும். சாகின்ற அளவுக்கு வைராக்கியம் வேண்டுமா? என்று நினைக்கும் மனிதன் செத்துப்போகின்றான் என்பதுதான் நடைமுறை வாழ்க்கை.

வைராக்கியம் உடையவன் சாவதே இல்லை.

கௌசிகன் தவத்தின் போது அவன் உடம்பில் இருந்து ஐந்து நச்சுநாகங்கள்  இறங்கி ஓடின என்ற இடம் அற்புதம். பஞ்சேந்திரங்கள் என்னும் நச்சுநாகங்கள் பிடியில் வாழும் மனிடன் அறிவதில்லை தனது விடத்தை. அதன் சுவையில் மயங்கி மயங்கி சாகின்றான். சாகநிலைபெற அந்த நச்சுநாகங்களை இறங்கிஓடவைக்கவேண்டும். அந்த நாகங்கள் ஓடியவின்பு கிரகணம் நீங்கிய பௌர்ணமிப்போல அவைகள் அமுத ஒளியல் ஒளிர்கின்றன.  உடலுக்குள் இருக்கம் மண் நீர் தீ காற்று ஆகாயம் பஞ்சபூதங்களும் அற்புதமாற்றம்பெற்று அவரையே வெண்பசுவாக்கி வான்பசுவின் அமுதுண்ண வைக்கிறது. ஜெ தனக்கே உரிய கற்பனையில் தவத்தை கவிதையாக்கி இருக்கிறார்.

//அவர் உடலுருகி மறைய தோல்போர்த்த என்புக்குவை அங்கிருந்தது. மூச்சு துடிக்கும் மட்கிய உடலுக்குள் தவம் மட்டுமே எரிந்து நின்றது. அவர் உடலில் இருந்து ஐந்து நச்சுநாகங்கள் இறங்கிச்சென்று மறைந்தன. கொதிக்கும் நீரூற்று ஒன்று ஒழுகி ஒழிந்தது. அனல் எழுந்து அவரை விறகாக்கி நின்றெரிந்து அணைந்தது. அக்கரிக்குவைக்குள் இருந்து நீள்மூச்சென ஒரு காற்று எழுந்தது. அதன்பின் அது கல்லெனக் குளிர்ந்து காலமின்மையில் அங்கிருந்தது. அவர் புகைமுகிலென்றானார். வெள்ளைப்பசுவின் உருக்கொண்டு விண்ணிலேறினார். அங்கிருந்த வெண்பசு ஒன்றன் அகிடின்கீழ் நின்று அமுதுகுடித்தார். மீண்டெழுந்த முனிவர் விஸ்வாமித்ரர் என்றழைக்கப்பட்டார். அவரது கொட்டிலில் அமுதகலத்துடன் காமதேனு நின்றது என்றனர் கவிஞர்//

கௌசிகனின் தாய் மோதவதி தனது மைந்தனை நீலச்சுனையில் மறையவிட்டு கண்ணீர்விட்டு தவிப்பதும் பின் அவன் ஹிரண்யன் ஆகி வந்ததை எண்ணிக்களிப்பதும் அற்புதம். மைந்தனை ஈன்று தவவாழ்விற்கு அற்பணிக்கும் அன்னையின் முழுவடிவம்.

//“ஏன் சுனையில் நின்றிருக்கிறாய்? மேலே வா!” என்றாள். “என் இடைக்குக்கீழ் நீ நோக்கலாகாதுஎன்று அவன் சொன்னான்//. நிர்வாணத்தையும் நிர்வாணத்தின் வல்லமையையும் அள்ளிவைக்கும் சொற்கள். அன்னையும் பெண்தான்.

//மாரன்வெற்றிகொள் பூமுடிக்குழார் வியப்புற நிடு மெய்த்தவர் வாழ் திருத்தணி மாமலைப்பதி தம்பிரனே//

ராமராஜன் மாணிக்கவேல். 

ஆடை அணிவதன் ஆபாசம் (பன்னிரு படைக்களம் - 32 )


     
பலர் முன்னிலையில் ஆடையின்றி இருத்தலை மிகப்பெரிய அவமானமாக கருதுகிறோம். ஒருவனை கொல்லுவதைவிட அவன் ஆடைகளையகற்றி பலர் முன்னிலையில்  நிற்கவைப்பதை பெரும் தண்டனையெனக் கருதுகிறோம். தன் நிர்வாணத்தையே சகித்துக்கொள்ளாத சிலர் இருக்கின்றனர். அவர்கள் தனித்து குளியலறையில் குளிக்கும்போதுகூட கொஞ்சமாவது ஆடைகளை அணிந்துகொள்வதுண்டு. காமம் சாராத போது மற்றவரின் நிர்வாணம் அருவருப்பைத்தருகிறது. அதைக் கணநேரம்கூட காணாது கண்கூசி முகம் திருப்பிக்கொள்கிறோம்.  ஒரு குழந்தையின் நிர்வாணத்தைக்கூட பொறுத்துகொள்ள முடியாத அளவுக்கு நாம் மனம் திரிந்துபோய் இருக்கிறோம். 
  ஆனால் ஆடை அணிவதுகூட சில சமயம் ஆபாசமென ஆவதுண்டு. ஒரு ஆண் பெண்போல 
உடை அணிந்து வருவதை நாம் ரசிப்பதில்லை. அது ஆபாசமெனத்தெரிகிறது.  ஒரு முறை திருநங்கை ஒருவரிடம் நீங்கள் ஏன் பெண்போல உடையணிந்து மற்றவரின் ஏளனத்திற்கு ஆளாகிறீர்கள், ஆண்களின் உடையை அணியக்கூடாதா எனக் கேட்கப்பட்டது. அதற்கு அவர் ஒரு ஆண்,  பெண்களின் உடையை அணிந்து சாலையில் நடக்கும்போது எப்படி கூசி குறுகிபோவானோ எப்படி ஆபாசமாக உணர்வானோ அதைப்போல நாங்கள் ஆண்களின் உடைகளை அணிந்தால் உணர்கிறோம் எனக் கூறினார். 
   
 ஆடைகள் ஆபாசமாவது அவரவர் கண்ணோட்டத்திற்கேற்ப அமைகிறது.  காந்தியின் உடையை ஆபாசம் என்று சொல்லிய வெளிநாட்டினர் உண்டு. ஆனால் அந்த உடையே அவரின் பெருமைகளில் ஒன்றென ஆகியது. வெறும் கோமணம் மட்டுமே அணிந்த இரமணரின் உருவம் பெரும் ஆன்மீக உந்துதலாக நிறையபேருக்கு இருக்கிறது. ஆடைகளேயற்ற திகம்பரர்கள் பல்லாயிரம் மக்களுக்கு ஆன்மீக வழிகாட்டிகளாக இருக்கிறார்கள். 
  நிர்வாணத்தை துறந்து  ஆடை அணிவது ஒருவரை ஆபாசமாக்குவதை ஒரு திரைப்படத்தில் வழியே நான் கண்டிருக்கிறேன். அது எமரால்டு ஃபாரஸ்டு என்ற ஆங்கிலத் திரைப்படம். அதில் கானகத்தில் ஒரு காட்டுவாசிகள் இனம் ஆடைகளின்றி வாழும். முதலில் சற்று நேரம் நமக்கு அதிர்ச்சியைக் கொடுத்தாலும் அந்த கானக மனிதர்களின் வாழ்வு முறை இனிய குணம், இயற்கையுடன் இணைந்துவாழும் பாங்கு ஆகியவற்றால் கவரப்பட்டு அது இயல்பென ஆகிவிடும். பின்னர் சிலரால் அந்த இனக்குழு தாக்கப்பட்டு பலர் கொல்லப்பட்டு அக்குழுவைச் சார்ந்த இளம்பெண்கள் கடத்தப்பட்டு கானகத்திற்கு வெளியே இருக்கும் நகரம் ஒன்றில் ஒரு பாலியல் விடுதியில் விற்கப்படுவர். அங்கு அவர்களுக்கு வலுக்கட்டாயமாக ஆடைகள் உடுத்தப்பட்டு கேளிக்கைபொருளாக ஆக்கப்படுவார்கள். அப்போது நாம் உணர்வோம் ஆடை எவ்வளவு ஆபாசமானது என்பதை. பின்னர் அந்த பெண்களின் இனத்தைச்சார்ந்த இளைஞன் அந்த விடுதியைத்தாக்கி அந்த பெண்களை காப்பாற்றி திரும்பவும் வனத்திற்கு அழைத்துசெல்வான்.  விடுவிக்கப்பட்ட அடுத்த நொடி அவர்கள் தங்களுக்கு அணிவிக்கப்பட்ட ஆடையை அவிழ்த்து எறிவார்கள். அவிழ்த்தெறிந்த ஆடைகளை அருவருப்பாக நோக்குவார்கள். ஆடை அணிவது ஆபாசமாவதை அன்று நான் கண்டேன்.  
    உண்மையில் ஆடை அணிவது மனித உடலை ஆபாசம் எனக் கருதவைக்கிறது.
ஆடைகளை கூட்டி குறைத்து காமஉணர்வை தேவைக்கு அதிகமாக தூண்ட காரணமாகிறது.   ஆடைகள் சில சமயம் மனிதருக்குள் சாதி மத ஏழை பணக்காரர் வேறு பாடுகளை கண்பிப்பதாக  உயர்வு தாழ்வை கற்பிக்கும் உபகரணங்கள் என  ஆகின்றன.  தன் பலஹீனமான தளர்ந்த வடிவ ஒழுங்கு குறைந்த உடலை மறைத்துக்கொண்டு போலியான  ஆளுமையை உருவாக்க ஆடைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆடைகளின் காரணமாக மனிதன் தன் தோலின் உறுதியை இழந்துவிட்டான். உடல் மேல் ஒரு போர்வையென இருந்த முடிகளை இழந்துவிட்டான். தட்பவெப்பங்களின் தாக்குதலுக்கு எளிய இலக்கென மனிதன் ஆகிவிட்டான்.      விலங்குகளின் ஆடைகளற்ற உடல் எவ்வளவு இயற்கையாக இருக்கிறது. எந்த விலங்கையாவது அது ஆடையற்றிருப்பதற்காக அருவருக்கிறோமா?  ஒரு விலங்குக்கு ஆடைபோட்டால்  அது எப்படி அதை நீக்கிகொள்ளப் போராடுகிறது என்பதைப்பார்க்கலாம். 
    நிர்வாணத்தின் ஆபாசமின்மை இன்று  வெண்முரசில் காட்சிப்படுத்தப்படுகிறது.  வனத்தில் வாழ்ந்த கன்னியர்களின்மேல் நாட்டு மக்கள் தங்கள் ஆடைகளைப்போட்டு மூடுகிறார்கள். அத்துடன் தம்  சமூக விதிகளையும் அவர்கள் மேல் போட்டு அழுத்துகிறார்கள். வனத்தில் மெல்லிய பறவை இறகுகள் என மிதந்து பறந்துகொண்டிருந்த அந்த கன்னியர் குறுகிப்போகின்றனர்.  அக்கன்னியர் உடல் ஆபாசமென தெரிவதைப்போல களங்கமற்ற அவர்களின் திறந்த குணம் நேரடியான எண்ணங்களை வெளிப்படுத்துதல் நாட்டுமக்களுக்கு ஆபாசமென தெரிகிறது.  ஆனால் நாட்டு மக்கள் அவர்களை காமத்தை தூண்டும் வகையில்  நடக்கச்சொல்லி ஆபாசப்படுத்துகிறார்கள். 

“முதலில் தோள்களை குறுக்குங்கள் இளவரசி. தோள்நிமிர்வென்பது ஆண்மை. தோள்வளைதலே பெண்மை” என்று செவிலியர் அவர்களுக்கு கற்பித்தனர். “தோள்கள் வளைகையில் இடை ஒசியும். கை குழையும். விழிகள் சரியும். குரல் தழையும். நகைப்பு மென்மையாகும். ஓரவிழி கூர்கொள்ளும். சொற்கள் கொஞ்சும். ஆண்களின் நிமிர்வை எண்ணுகையில் உடல்தளரும். வியர்வை குளிர்ந்து முலை விம்மும். நேர்நின்று நோக்காது தலைகவிழ்ந்து காலொன்று தளர இடை ஒசிய முலைதழைய நின்றிருப்பீர்கள். மேலுதட்டில் மென்னீர் பூக்கும். விழியோரம் கசியும். அத்தருணத்தில் நீங்கள் பெண்ணென்று உணர்வீர்கள். அதுவே பேரின்பம் என்பது.” 

அவர்களின் களங்கமற்ற உள்ளங்களில் பெண்மை என்ற பெயரில் கள்ளத்தை புகுத்த முற்படுகின்றனர். ஒரு கனமான மூட்டையை  சுமந்திருப்பவன் குனிந்திருப்பதைப்போல்  நாட்டுமக்களின் சமூக நெறிகளின் மற்றும் வழக்கங்களின் சுமை தாங்காமல் அவர்க்ள் கூனி நிற்கின்றனர். மீண்டும் அவர்கள் கானகம் சென்றபின்னர் அந்த ஆடைகளோடு அந்த சமூக நெறிகளையும் அவிழ்த்தெறிந்து சுமைகளை களைந்து மீண்டும் தம் விடுதலையை அடைந்து நிமிர்கிறார்கள். 
நகரெல்லை கடந்து காட்டின் காற்றுபட்டபோதே அக்கன்னியரின் ஆடைகள் பறந்தகன்றன. பச்சைவெளிக்குள் அவர்கள் கூவிச்சிரித்தபடி துள்ளிப்பாய்ந்து மூழ்கிச்சென்றனர். சிலநாட்களில் அவர்களின் உடல்நலிவு முற்றிலும் அகன்றது. புதியவிதைபோல் உடல் ஒளிகொண்டது. காட்டுக்குள் அவர்களின் சிரிப்பு மலையோடை நீரொலியுடனும் கிள்ளைகளின் குரல்களுடனும் வாகைநெற்றுகளின் சிலம்பொலியுடனும் கலந்து நிறைந்தது.

என்ன சொன்னாலும் உடலை மூடும் ஆடைகளை நம்மால் இனி  துறக்கமுடியாது. ஆனால் நம் உள்ளத்தை மூடியிருக்கும் போலி கௌரவம், வீண் அகங்காரம், அசட்டுப்பிடிவாதம், நீடித்த வஞ்சம், தேவையற்ற கவலை,நிறைவேறாத ஆசை  போன்ற  ஆடைகளை களைந்துவிட்டு சிறு பிள்ளைகள் போல சிரித்து மகிழ இப்போதும் நம்மால் முடியும் அல்லவா?
தண்டபாணி துரைவேல்

Friday, April 29, 2016

வியாசபாரதமும் வெண்முரசும்"தந்தையே, அவற்றை நான் ஒரு சொல்லில் சொல்லமுடியாது. கோடி சொற்களால் சொல்லவேண்டியவர் நீங்கள்” என்றான் சுகன். “நீங்கள் சிரஞ்சீவியாக இருந்து உங்கள் உயிர்முளைத்த வனத்தின் வாழ்வனைத்தையும் காணுங்கள்!" - சுகன் டு வியாசர் - முதற்கனல் 34. ஆக வெண்முரசு அதன் கதைப் போக்குகளின் கூடவே வியாச காவியம் வளர்வதைச் சொல்லத் துவங்கிவிட்டது. மேலும் சூதர் பாடல்களுக்காக ஏங்கும் அரசர்களின் சித்திரமும் முதற்கனல் தொட்டு வரத் துவங்கி விட்டது. ஆறெல்லாம் கடலுக்கு என்பதைப் போல சூதர் பாடலெல்லாம் காவியத்திற்கு என்பதை அறியாத அரசர் எவருளர்? பல்லாயிரம் பாடல்களில் பாடிக் கனிந்த ஒரு வரி தானே காவியத்தில் ஏறும்!

அருணாச்சலம் மகராஜன்

வியாசபாரதம் எப்போது வந்தது? ஜராசந்தன் "எனக்கு தென்கடலென அலைதிகழும் வியாசகாவியமே உகந்தது" என்கிறான்.

வியாசர்  மகாபாரதம் எழுதும்போது வயதில் மிகவும் முதியவர்.  அவர் மகாபாரதம் எழுதுவதற்கு முன் பல காவியங்களை எழுதியிருக்கலாம்.  ஆசான் வெண்முரசு எழுதுவதற்கு முன் விஷ்ணுபுரம் எழுதியிருக்கவில்லையா?  அதுபோல வியாசர் மகாபாரதத்திற்கு முன்பாக எழுதிய ஏதாவது ஒரு பெருங் காவியமாக இருக்கலாம்.

   ஒருவேளை வால்மீகி இராமாயணத்தை முன்னரே எழுதிவைத்துவிட்டார். ஆனால் இராமாயணக் கதை அப்புரம்தான் நடந்தது என்று ஒரு கூற்று உண்டு. இதுவும் அப்படி நிகழ்ந்த ஒன்றாக இருக்கலாம்.

    முதல் காரணம்தான் அதிக பொருத்தமாக இருப்பதாக எனக்கு தோன்றுகிறது.

தண்டபாணிதுரைவேல்


அன்புள்ள நண்பர்களுக்கு


வியாசபாரதத்தின்  நிகழ்வுகளினூடாகவே  அக்காவியம் வியாசரால்  இயற்றப்பட்டு அதுவே சூதர்களால் உதிரிப்பாடல்களாக பாரதம் முழுக்கப் பாடவும் படுகிறது என்றே வெண்முரசு சொல்கிறது. நிகழ்வுகளை உடனடியாகவே காவியத்தில் அதன் நாயகர்களே கேட்கவும்செய்கிறார்கள். இது வீரயுக காலகட்டத்தின் வழக்கமும் கூட

போர் முடிந்ததும் அக்காவியம் முடிவு அடைகிறது- இச்செய்தி வெண்முரசில் வந்துகொண்டே இருக்கிறது.ஒவ்வொரு நாயகனுக்கும் அவன் அக்காவியத்தில்தான் வாழ்கிறானா என்னும் திகைப்பும் இருக்கிறது. அதன்பொருட்டுதான் வாழ்கிறானா என்னும் அடிப்படைத்தேடலும் உள்ளது.

வெண்முரசின் meta narration னின்  ஒரு பகுதியாக இந்த விஷயம் வந்தபடியே இருக்கிறது. ஒருவகையில் விஷ்ணுபுரத்திலும் இது உள்ளது
 
ஜெ

பீங்கான்

 
 
அன்புள்ள ஜெயமோகன்

இந்திரநீலம் வாசித்துக் கொண்டிருக்கிறேன். அதில் "பீங்கான்" என்ற ஒரு வார்த்தை வருகிறது. 

"பீதர்கள் குவை வைக்கோல் என தலைக்குடை அணிந்து சிறு குழுக்களாக அமர்ந்து பீங்கான் குவளைகளில் மது அருந்தி மயில் அகவலென ஓசையெடுத்து விரைந்து பேசிக்கொண்டிருந்த சிறுமன்றைக் கடந்து சென்றார்கள். " - ‘இந்திரநீலம்’ – 28, பகுதி ஆறு : மணிமருள் மலர் – 1

அதே அத்தியாயத்தில், "மென்களிமண் கலங்களில்" என்றும் வருகிறது. இதையே நான் பீங்கான் என்று எண்ணியிருந்தேன்.

"சாலையின் இருமருங்கும் பீதர்களின் மென்களிமண் கலங்களில் மது நுரைத்தது."

என் கேள்வி, பீங்கான் என்னும் சொல் பண்டைய சொல்லா? அச்சொல், வெண்முரசு மொழியில் எனக்கு தனித்து தெரிந்தது.

என் அறியாமையாய்க் கூட இருக்கலாம். தயவு செய்து விளக்குங்கள். நன்றி.

என்றென்றும் அன்புடன்,
மூர்த்திஜி
பெங்களூரு
 
அன்புள்ள மூர்த்திஜி
 
வெண்களிமண் தான் பீங்கான்
 
ஆனால் பீங்கான் தமிழ்ச்சொல் அல்ல என எனக்கு ஐயம். ஆகவே அச்சொல்லை பயன்படுத்தவில்லை. தவறுதலாக வந்துவிட்டது. அது பாரசீக மொழிச் சொல்
மாற்றிவிடுகிறேன்
 
 
ஜெ

கோட்டுவாய்

 
பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,

வணக்கம்.

"அவன் கோட்டுவாய் விட்டு கைகளைத் தூக்கி சோம்பல்முறித்தான். “நன்று” என்றபின் திரும்பி படுக்கையருகே பீடத்தில் கிடந்த தன் சால்வையை நோக்கி சென்றான்."
இதில் வரும் "கோட்டுவாய்" என்பது எதைக்குறிக்கிறது? கொட்டாவி  விடுவதையா ?
அன்புடன்,
அ .சேஷகிரி.

அன்புள்ள சேஷகிரி

கோட்டு அவய் என்றால் வளைந்த வாய் என்று பொருள். அதுதான் சரியான சொல்லாட்சி. கொட்டாவி என்பதும் சரி

தொல்தமிழில்கோட்டுவாய்தான். மலையாளத்திலும் கோட்டுவா தான்

ஜெ

வெய்யோன், பன்னிரு படைக்களம் மற்றும் இராமாயணம்அன்புள்ள ஜெ

வெய்யோன் படித்துக் கொண்டிருக்கையிலேயே எழுத வேண்டுமென்று எண்ணி, இப்போதுதான் (பன்னிரு படைக்களம்) எழுதுகிறேன்.

ஒளி வரைவதன் மூலம் இருத்தலுக்கு ஒரு பொருள் கொடுத்து அதற்கான நிழலையும் கொடுக்கும் பெருங்கொடையொன் ஒரு நீண்ட கனவுலகினுள் இழுத்துச் செல்லப் படுகிறான். துரியோதனன், மற்றும் ஜராசந்தன் வரைவுகள் புதிய புரிதல் அளித்தது. துரியோதனனிடம் அன்பு பிறந்தது. 'மயனீர் மாளிகையில்' விழுந்து விடப் போகிறானே என்கிற அச்சம் ஒரு ஆறு தினம் தொடர்ந்தது. சென்னையில் பெரு மழை பொழிந்த பொது - சிறு பாம்புகளும் பூச்சிகளும் மேலேழுந்தன. மீண்டும் மீண்டும் பொழியும் பெரு மழைகளும், சமூக கூட்டங்களை காக்க வேண்டிய பெரு விழைவும் - பூ லோக, பாதாள லோக, தேவ லோக எல்லைகளை வரையறுத்து இருக்குமோ என தோன்றியது. நாகர்களும் அவர்கள் கண்ணில் நுழைந்து காட்சி பெருக்குவதும் படிக்க மிக புதிய அனுபவமாக விரிந்தது. அவர்கள் வஞ்ச சூழலை வளர்ப்பது நாடகத்தின் உச்ச அனுபவமாக மேலிருந்து கீழே திடீரென விழும் ரோலர் கோஸ்டர் பிராயண அனுபவம். 

பன்னிருகளத்தின் ஜராசந்தன் காட்சிகளில் செங்கிஸ்கான் ஞாபகமே வருகிறது. நுண்ணிய அறிவு, பேராற்றல், அச்சமூட்டும் நிகழ்வுகளை நேரடியாக நடத்துவது என்று பல அடுக்குகள். அதே சமயம் தன் வீரத்தைப் பற்றிய செருக்கும் பின்னொரு சமயம் வந்து, அந்த அரசனை மேலும் உயர்த்தத்தான் போகிறது. இரண்டு பாகத்திலும் பல ஆழ் சிந்தனை இடங்கள். நேற்று ஒரு  - பௌண்டரீக வாசுதேவனை கொன்றுவிட்டு இளைய யாதவர் கூறுவது - "இன்று ஒருமுறை இறந்தேன் பார்த்தா”. சிந்திக்க காலமும் இடமும் தருபவை. ஆண் முன் பெண் விழப்போகிறாள் என்ற முன்னுரை பற்றி யோசித்தேன். பெண் விழுந்தால் அதைப் பற்றி கவலைப் படவேண்டியது அவள் அல்லவே எனத் தோன்றியது. அந்த புள்ளிக்கு திரௌபதி நகருவாளோ ?

சற்றே  வேறொரு தலைப்பு - தினமும் தின மலர் கட்டுரை படிக்கிறேன். உங்கள் வேகமும் வீச்சும் மனதில் பொறாமை எழுப்புகிறது . பூமணியின் அஞ்ஞாடி படிக்கிறேன் தினம் 50 பக்கங்களாக -  மனதில் மெதுவாக உட்கலக்கிறது. அந்த நடையும், மொழியும் மொழி மாற்றமும் மிக கவர்ச்சியாக உள்ளது. பின்னொரு சமயம் விரிவாக பகிர ஆசை.

கடைசியாக எங்கள் கம்ப ராமாயணத்தில் ராமன் அனுமனுக்கு சீதையின் அங்க அடையாளங்களை மிக விரிவாக விவரிக்கிறார். வால்மீகி ராமயணத்தில், ராமர் சீதையை பிரிந்த விரகத்தில் லக்ஷ்மணனிடம் விரிவாக புலம்புகிறார்.  கூட்டத்தில் படிக்கும் போது சில பாடல்களின் அர்த்தத்தை 'ஹோம் வொர்க்' ஆக கொடுத்து விட்டோம். அந்தக் காலத்தில், இதை படிப்பது சாதரணமாக இருக்கலாம். இப்போது ஒரு தரும  சங்கடம். எனினும் விஷயம் அது இல்லை. சுந்தர காண்டத்தில், அனுமன் சீதையை பார்க்கும் போது (வால்மீகி)  சீதையின் அங்க அடையாளங்கள் சரியாக இருப்பதை குறித்து கொள்கிறார். ஆனால் ராமன் சீதையின் அடையாளங்கள் கூறியதாக ஒரு பகுதியும் வால்மீகி ராமாயணத்தில் இல்லை. அதைத் தான் கம்பர் தன்  ராமாயணத்தில் விவரித்து கூறியுள்ளார் எனத் தோன்றுவதாக ரஞ்சனி கூறினாள். சரி என்று தோன்றியது.

தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 

அன்புடன் 
முரளி 
அன்புள்ள முரளி

இந்தவகையான வாசிப்பும் இதன் விளைவான ஐயங்களும் நவீன இலக்கியம், யதார்த்தவாத இலக்கியம் உருவானபின்னர் வருபவை. யதார்த்தவாத இலக்கியத்தின் அடிபப்டை என்பது காமன்சென்ஸ். ஆனால் பொதுப்புத்தி அடிப்படையில் காவியத்துக்கு எதிரானது. ஏனென்றால் அது கனவுக்கும் எதிரானது

காவியம் நடைமுறை உலகில் நிகழ்வதல்ல. அது வாழ்க்கையை அள்ளி வேறு ஒரு மேடையில் வைத்து அதன் நுட்பங்களை, உள்ளடுக்குகளை மட்டுமே ஆராய்கிறது. பொதுப்புத்தியை ரத்துசெய்துவிட்டு மேலே செல்லமுயல்கிறது. நளசரிதம் கதகளியில் நளன் அன்னப்பறவையிடம் அந்தரங்கங்களை முழுக்கச் சொல்லிக்கொண்டிருப்பான். இப்படி ஒருவன் சொல்வானா என எண்ணுபவனுக்குரியது அல்ல காவியம்.
கம்பராமாயணம் வருவது சந்தேச காவியங்கள் [ தூது வகை காவியங்கள்] உருவான பின்னர். ஆகவே தூது காவியங்களின் அழகியலை அந்த இடத்தில் கம்பராமாயணம் கைகொள்கிறது. அதை உணர்ந்தபின் அக்கூற்றிலுள்ள கவித்துவங்களை மட்டுமே கருத்தில்கொள்பவனுக்குரியது காவியம்

ஜெ

Thursday, April 28, 2016

கன்னி


ஜெ


அதில் மூழ்கி அழியும் சூதர். அதிலிருந்து கரையேற ஆசைப்படும் பூசகர். கரையேற முடிந்த பீஷ்மர். கடந்துசென்றவர் விஸ்வாமித்திரர்

நான்குபேரும் நான்கு கோணங்களில் அணுகுகிறார்கள் கன்னியை. கன்னிகளாக வந்த அவளை

சாரங்கன்